அத்தியாயம் 43

சரி, விடுங்க, அனாமத்தா வர்ற செல்வத்தையெல்லாம் நம்பி நிக்கக்கூடாது 
அத்தியாயம் 43

‘சரி, விடுங்க, அனாமத்தா வர்ற செல்வத்தையெல்லாம் நம்பி நிக்கக்கூடாது. உழைச்சு வந்த சோறே உடம்புல ஒட்ட மாட்டக்கி.. இதுல ஊரான் பணமெல்லாமா நமக்கு ஒட்டும்’  பெரியப்பா  உரக்கவே புலம்பினார்.

‘வரப்போவுதுன்னு நினைச்சு பொடவ, நகயெல்லாம் எடுத்துட்டமே? கடனட்டைக் கடங்காரன் அடுத்த மாசம் வந்து நிப்பானே? யாரு அடைக்க?’

‘டே, அந்த திசயன்விளை நிலம் இப்ப வாங்க முடியாதுன்னு சொல்லிறு. பத்திரம் இன்னும்  எழுதலேல்லா?’

மாடசாமி ஒரு மூலையில் அசையாது அமர்ந்திருந்தார். முத்துக்குமார் கவலையானான். இவர் எப்படி இதனைத் தாங்கிக்கொள்வார்?

‘மாமா’ தடுமாறினான் அவன். இவரை என்ன உறவென்று சொல்லி அழைப்பது. நேற்று வரை சார். இன்று மாமாவா, அத்தானா அல்லது அண்ணனா?

அவர் எதுவும் சொல்லாமல் எழுந்து போனார்

இருநிமிடங்களில் அங்கிருந்த உற்சாகம் கரைந்து போய், சோகம் அப்பிக்கிடந்தது. மெல்ல ஆட்கள் மாடசாமியின் வீட்டிலிருந்து வெளியேறினர். பக்கத்துவீட்டு ரோசம்மா டீச்சர் உள்ளே மகளிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்     ‘நா அப்பவ நினச்சேண்டி. இந்த வெள்ளக்காரி ஆண்டவருக்கு அடங்கினவளாத் தெரியல. அவ வந்த நேரம்தான்…’

லிண்டாவிடம் அடுத்தடுத்து பல மின்னஞ்சல்கள் வந்தன. போன் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்த்து. மாலை நாலுமணியளவில் அவள் ஒரு கத்தை காகிதங்களுடன் முத்துக்குமாரிடம் வந்தாள் ‘வழக்கறிஞர்கள் தயாரித்திருக்கிற அறிக்கை. ஒரு உடன்படிக்கைன்னு சொல்லலாம்’

‘என்ன இது?’

‘இந்த ப்ராஜெக்ட் முடிவுக்கு வந்துவிட்டது’ இனி, அந்தத் தொகை, ஆனியின் ட்ரஸ்ட்டிடமே சேரும். இதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை; பின்னாளில் இதுபற்றி நாங்கள் கேள்வியெழுப்ப மாட்டோம் என்று உங்கள் குடும்பத்தினர் கையெழுத்திடவேண்டும். லாயர்களின் ஆவணப்படுத்தும் சடங்கு..’

மவுனமாக அவன் அதனை வாங்கிக்கொண்டு பெரியப்பாவின் வீட்டிற்குப் போனான். லிண்டா அவன் போவதை ஒரு நிமிடம் பார்த்துக்கொண்டிருந்தாள். பெருமூச்செறிந்து, தன் வேலையைப் பார்க்கப் போனாள்.

‘விடுறே. பைசா வராட்டிப் போவுது.  மாடசாமி. நீ நம்மாளு கேட்டியா? இப்படி ஒரு சொந்தக்காரன் இருக்கறதே இப்படி இந்த வெள்ளக்காரி வந்துதான தெரியுது? எல்லாத்துலயும் ஒரு நல்லது இருக்கும். நாமதான் அது என்னான்னு பாத்துப் பொளச்சுக்கிடணும்’ பெரியப்பா தன் வீட்டில் தத்துவார்த்தமாகப் பேசிக்கொண்டிருந்தார்.

மாடசாமி சேரில், முன்னே குனிந்து , தரையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
‘அதில்ல பெரீப்பா, மவள நல்லாப் படிக்க வச்சிரலாம். நல்ல எடமாப் பாத்துக் கட்டிக்கொடுத்திரலாம்னு கொஞ்சம் அதிகமா ஆசைப்பட்டுட்டேன். ‘ஆட்டுக்கு வாலு அளந்துதான் வச்சிருக்கேன்னுட்டான் ஆண்டவன்’

‘நானும் மெட்ராஸ்ல பையன்கிட்ட போய் இருக்கப்போறன். எனக்கு எதுக்குக் இந்த ஸ்கூட்டர் எளவெல்லாம்.? கண்ணு வேற சரியா தெரிய மாட்டேக்கி. ஒன் பொண்ணுகிட்ட கொடுத்துரு. அவ, சள்ளுன்னு காலேஜ் போய் வரட்டு.’

‘அது வேணாம் பெரீப்பா. அவளுக்கு காலேஜ் பஸ் வருது.’

‘அப்ப நீ வச்சிக்க’

‘டே மாடா’ என்றாள் பெரியம்மா காப்பியை ஆற்றிக்கொடுத்தபடியே ‘அவள ஏன் ஹாஸ்டல்ல விடுத? சண்முகம் வீட்டுல நிக்கட்டு. எம்மருமவளுக்கு பொம்பளப் பிள்ளேள்னா அம்புட்டு பிரியம் பாத்துக்க. தங்கமாப் பாத்துக்கிடுவா.ஏங்க, சும்மா நிக்கீயளே? சொல்லுங்களேன்’

பெரியப்பா அவசரமாக ‘ஆமாம்ல’ என்றார். ‘ சேலையூர்ல காலேஜ் வண்டி வரும்லா? கேட்டு வையி.  சம்முவம் வீட்டுலேர்ந்து மெயின்ரோடு கொஞ்ச தூரம். நான் போயி பிள்ளய பஸ்ஸ்டாப்புல கொண்டு விட்டுக் கூட்டியாந்துடறேன்.’

‘அதெல்லம் வேணாம் பெரீப்பா’

‘எனக்கு வேறென்ன என்ன சோலி? சும்மா முட்டைக்கி மயிர் பிடுங்கிட்டிருக்கேன் அங்கிட்டு. ஒண்ணு, எதாச்சும் உருப்படியா ஒரு சோலி செய்யணும், இல்ல, இந்தா, இவள மாரி, சீரியல் பாக்கணும். நமக்கு அது ஓடாது’

‘என்னச் சொல்லலேன்னா இந்த மனுசனுக்கு உறக்கமே வராது.’ பெரியம்மா முணுமுணுத்துக்கொண்டே உள்ளே போனாள்.

‘அந்த திசையன்விளை நிலத்தை முடிச்சிருவம் பெரீப்பா. உங்க பூர்வீகச் சொத்து. உங்க்கிட்ட இருக்கட்டு’ மாடசாமி நிலம் பற்றிப் பேசத் தொடங்கினார்.

முத்துக்குமார், அனைவரிடமும் கையெழுத்து வாங்கிக்கொண்டு திரும்பினான்.

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com