11.  ஆசைகளும் தேவைகளும்

“ஆசைப்படப்பட  ஆய்வரும் துன்பம். ஆசை விட விட ஆனந்தம் ஆமே” என்றார் திருமூலர். 
11.  ஆசைகளும் தேவைகளும்

‘ஆசைப்படப்பட  ஆய்வரும் துன்பம். ஆசை விட விட ஆனந்தம் ஆமே’ என்றார் திருமூலர். 

‘யாதனின் யாதனின் நீங்கியான் ஆதலின் நோதன் அதலின் இலன்’ என்றார் திருவள்ளுவர்.

ஒரு நாளைக்கு மட்டும்  ஆசைப்பட்டுக் கொஞ்சமாக மது அருந்துவான். 

கொஞ்சம் கொஞ்சமாகத் தினமும் மதுவருந்தி மதுவுக்கே ஒருநாள் அடிமையாகிவிடுவான்! 

மதுவின் மீது வைத்த ஆசை என்பது சிறுகச் சிறுக வளர்ந்த பேராசை! 

ஆசை ஒரு நோய். அதுவே தீவினை. அதுவே கேடு. அதனால்தான் அது கூடாது என்றனர். 

நோய் ஆரம்பத்தில் சின்ன அரிப்பாகவோ, வலியாகவோதான்  தோன்றும். அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஒருநாள் ‘ஐசியூ’ வார்டுக்குள் கொண்டு போய் வாயிலிருந்து வயிறு வரை வயர்களைக் கோர்த்துப் படுக்க வைத்துவிடும்!

‘நோய் நாடி நோய் முதல் நாடி’ என்றார் வள்ளுவர். நோய் தோன்றும் போதே பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து விட வேண்டும்.

ஆசை தோன்றும் முன்னரே அதற்குத் தடுப்புச் சுவர் போட்டாக வேண்டும், கண்டிப்பாக!  அவ்வளவு ஆபத்தானது ஆசை.

உலகத்திலேயே பயங்கரமானது எது என்றால் ‘சட்’டென்று ஆசைதான் என்று சொல்லி விடுவார்கள், அனுபவப்பட்டவர்கள். 

அனுபவத்துக்குப் பலியாக வேண்டியவர் அதைக் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். 

அனுபவத்தைப் போன்ற ஆசான் யாருமில்லை!

அதற்காக அனைத்தையுமே அனுபவப்பட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கட்டாயமும் இல்லை.

நெருப்பின் சூடு எட்டத்தில் தெரியும் போதே விட்டுவிலகியிருக்க வேண்டும்.

விட்டில் பூச்சிக்கு அறிவில்லாத காரணத்தால் அது போய் நெருப்பில் பட்டு மாய்கிறது. 

விளக்கினில் சிக்கி மாண்டு போகும் விட்டில் பூச்சியைத்தான் ஆசைக்கு அடையாளமாகச் சொன்னார்கள் நம் முன்னோர்கள்.

ஆசை என்பது கட்டாயத் தேவை போல் தோன்றும். ஆனால் அது ஒரு மாயை. 

பேராசை என்பது தேவை என்ற பசுத்தோல் போர்த்திய புலி! எப்படிப்பட்டவர்களையும் ஏமாற வைத்து விடும்.

ஆசைப்பட்டு தொழில் ஆரம்பித்து நஷ்டப்பட்டவர்கள் சரித்திரம் உண்டு. 
ஆசைப்பட்டு கார் பைக் வாங்கி விபத்துக்குள்ளானவர்கள் சரித்திரமும் உண்டு.

ஆசைப்பட்டு வேசிக்குப் பலியாகி வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் சரித்திரம் உண்டு.

ஆசைப்பட்டுச்  சின்னவீடு கட்டிச் சீரழிந்தவர்கள் சரித்திரமும் உண்டு.
 
என்னிடம் ஆசைதான் உண்டு, பேராசை கிடையாது என்று தத்துவம் பேசலாம்.

கடற்கரையின் ஓரத்து அலைகளில் பாதுகாப்பாகக் குளிக்கிறேன் என்பார்கள்.

பேரலை வரும்போது சிற்றலைகள் அதற்குள் தலைமறைவாகிவிடும்!

நடுக்கடலுக்குள் தள்ளித் தத்தளிக்க வைத்துவிடும்!

பேராசை தனிப்பட்டது இல்லை. ஆசைதான் பேராசை. 

ஏனென்றால் யானையின்  குட்டிதான் யானைக் குட்டி. 

ஆசை வளரக் கூடியது. உணவோ தண்ணீரோ எதுவுமே இல்லாமல் பட்டினி போட்டால் கூட தானே வல்லமையோடு வளரக் கூடிய ஆற்றல் மிக்கத் ‘தளை’ ஆசை!

‘இருக்க இடம்கொடுத்தால் படுக்கப் பாய் கேட்பான். படுக்கப் பாய் கொடுத்துவிட்டால் இருப்பதை எல்லாம் சுருட்டிக் கொண்டு போய்விடுவான்’ என்ற பழமொழி உண்டு. 

ஆசைக்கு இடம் கொடுத்துவிட்டால் அதுவே பேராசையாகி நம்மைச் சுருட்டிக் கொண்டு போய்விடும்!

*

நான் சென்னை வந்த புதிதில் ஓட்டலில் சாப்பிடுவது வழக்கம். அப்போது டேபிள் துடைக்க வந்த சிறுவன் ஒருவன், டேபிளைத் துடைத்துக் கொண்டே ‘என்னன்னே நல்லா இருக்கீங்களா?’ என்று கேட்டான். 

அட என்னடா சின்ராசு? இங்க எங்கேடா வந்தே? எப்படிடா இந்த வயசுலயே சென்னைக்கு விட்டாங்க உங்க அப்பா அம்மா?ன்னு கேட்டேன். 

அப்பா அம்மாவின் அனுமதி ஆசிகளோடுதான் வந்தேன் என்றான். ஆனால் அவன்  சொன்னதெல்லாம் சுத்தப்பொய் என்பது பின்னாட்களில்தான் தெரிந்தது. 

சின்ராசின் அப்பா ஒரு மொடாக் குடிகாரர். குடித்துவிட்டு வந்து தனது மகனை முச்சந்தியில் போட்டு ‘மிதிமிதி’என்று மிதிப்பார். நான் பார்த்திருக்கிறேன்!

பெத்த மகனைப் போட்டு மிதின்னு மிதிக்கறதைவிட ஒரேயடியாக் கொன்னு போட்டுடப்பா என்றனர் வழிப்போக்கர்கள்.

வழிப் போக்கன் சொல்வான், அவனுக்கென்ன.

ஆனால் வயிற்றில் சுமந்த அன்னை அப்படிச் சொல்லிவிடுவாளா?

‘இந்தப் பாழாய்ப் போன மனுஷங்கிட்ட அடி வாங்கிச் சாவறதைவிட எங்காவது கண்காணாத இடத்துக்குப் போய் பொழைச்சுக்கோடா மகனே’ன்னு சொல்லி சுருக்குப் பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து அனுப்பினாள் அன்னை. 

தாயின் வேதனைகளைத் ‘தாரக மந்திர’மாக எடுத்துக்கொண்டு மாவட்டத் தலைநகரம் மதுரைக்குப் போய்விட்டான் மகன் சின்ராசு. ஆரம்பத்தில் ஹோட்டல்களில் டேபிள் துடைக்கும் வேலை பார்த்தான். 

மதுரை, திருச்சி, விழுப்புரம் என்று மாறி மாறிச் சென்னைக்கே வந்து சேர்ந்து, அங்கும் ஹோட்டல் வேலையைத் தொடர்ந்தான்.

வளர்ந்த பணியாளர்களுக்கெல்லாம் பதவி உயர்வும் போனசும் கிடைக்கும் போது  வளரும் சிறுவனுக்குக் கிடைக்காதா?

டேபிள் துடைத்துக் கொண்டிருந்த சின்ராசு வளர்ந்து இளைஞனாகி சர்வரும் ஆனான்.  பின்னர் ‘சபாரி சூட்’அணிந்து கைகளைப் பின்னால் கட்டியபடி நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு  சர்வர்களை விரட்டி வேலை வாங்கும் ‘சூப்பிரண்டண்ட்’டும் ஆகிவிட்டான்!

*

தாய்ப் பாசத்தாலும்,  நெருக்கடிகள் தந்த ஞானோதயத்தாலும் சொந்த ஊருக்கே ஒருநாள் திரும்பிச் சென்றான் சின்ராசு. 

சிறுவனாகச் சென்ற போது பார்த்த அதே குடிசை வீடு. இன்னமும் அப்படியே விருத்தியில்லாமல் கிடந்தது! பிள்ளையே போய்விட்டான். இந்த வீடு ஒரு கேடா என்று பராமரிக்காமல் விட்டுவிட்டனர்.

வீட்டுக்குள் உரிமையோடு நுழைந்தான் சின்ராசு.

தாயாருக்குப் பார்வை மங்கிப் போயிருந்தது. 

யாரப்பா நீ என்ன வேணும் உனக்கு? உன் பாட்டுக்கத் ‘திபுதிபுன்னு வந்து நடு வீட்டுல நிக்கறியே? என்று அதட்டினாள்.

‘சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்.. நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன் ‘ என்ற பாடல் வரிகளுக்கு விளக்கமாக நின்றான் சின்ராசு.

‘என்னடா எதுவுமேப் பேசாம  நிக்கற? என்றபடி வீட்டு மூலையில் கிடந்த விளக்குமாற்றைத் தேடினாள்.

நான்தாம்மா சின்ராசு, என்னைத் தெரியலையா? என்று சொல்லி முடிக்கவில்லை! 

‘ஓ.. ..! என்று  கதறியபடி ஓடோடி வந்து மகனைக் கட்டித் தழுவிக் கொண்டு ‘கண்ணீர் அணையை’த் திறந்துவிட்டாள் அந்தத் தாய்!

நாம் தூக்கி வளர்த்த குழந்தை தோளுக்கு மேல் வளர்ந்த பிறகு பார்த்துப் பார்த்துப் பூரிக்கிறோமே. 

மாடு மாதிரி வளர்ந்துவிட்டியே, கிட்ட வராதே போ என்று விரட்டியடிக்கிறோமா? 

சின்னவனாக வீட்டை விட்டு ஓடிப்போன சின்ராசு, இப்போது வளர்ந்து வீடு திரும்பிய இளைஞன்! அவன் இப்போது அந்த வீட்டின் வாரிசு. பெற்றோருக்குப் பிள்ளை. அவன் அந்த வீட்டுக்கு ஒரு தேவை. ‘தேவைப்பட்டவன்’ என்பதால் அன்னை அரவணைத்து வரவேற்றாள் அன்னை.

மகன் பெயரைச் சொல்லிக் கொண்டு நான்தான் உங்கள் வாரிசு என்று எவனோ ஒருவன் வந்து நின்றால் விட்டுவிடுவாளா, பெற்ற தாய்க்குத் தெரியாதா பிள்ளை யாரென்று?

சின்னவனாக ஓடிப்போன சின்ராசு.  வளர்ந்து விட்டதால்கூடச் சின்ராசு சின்ராசு தானே!

காலைப் பிடித்துக் கொண்டு நம் மேலே ஏறும் ஆசைகள், நம்மை அடிமையாக்கித் தன் காலடியில் தள்ளி மேலே ஏறி நின்று கொண்டு ஆட்சி நடத்தும்!

‘சரி, இப்போது அந்த ஆசையிலிருந்து விடுபடுவது எப்படி அதைச் சொல்லுங்கள் முதலில்’ என்றார் களக்காடு பாலு சார்.

அன்று பிரதோஷம்.  ஆகையால் இருவரும் களக்காடு ‘கரிவலம் வந்த சிவன்’ கோயிலுக்குள் போய்க் கொண்டிருந்தோம்.

சிவனாருக்குச் சிறப்பு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது.

‘கேட்டதற்கு பதிலே இல்லையே’ என்றார் களக்காடு பாலு சார்.

இன்று  பிரதோஷம். சிவன் நம் தோஷங்களை விலக்கும் நேரம், அங்கே பாருங்கள் என்றேன்.

அப்படி என்றால் பதில் இப்போது இல்லையா? என்றார்.

‘தோஷம்’ என்ற சொல்லுக்குள் ஆசை ஒளிந்து இருப்பது தெரியவில்லையா என்ற போது மணி ஒலித்தது. 

பிரதோஷ பூஜைகள் முடிந்தது. 

‘ஆசைகளிலிருந்து விடுபடுவதற்கும் பிரதோஷ வழிபாட்டுக்கும் என்ன இருக்கிறது. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறீர்களே’ என்றார் களக்காடு பாலு.

உடனே என்னால் எதுவும் பேச முடியவில்லை.

கோயிலுக்கு வந்தால் கொஞ்ச நேரமாவது கண்களை மூடி அமர வேண்டும் என்று சொல்லிவிட்டுத் தியானத்தில் ஆழ்ந்தேன். 

அவரும் கண்களை மூடிக்கொண்டார் ஒப்புக்கு.

ஐந்து நிமடங்களுக்குப் பிறகு கண்களைத் திறந்தேன்.

பாலு சார், ‘உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு’ என்ற வள்ளுவரின் வரிகளில் எத்தனை பெரிய தத்துவம் அடங்கியிருக்கிறது பார்த்தீர்களா? என்றேன்.

‘கண்ணு முழிச்சா பெறப்பு. கண்ண மூடினா இறப்பு. இவ்வளவுதானே, இதத்தானே காலம் காலமாச் சொல்லிட்டு வர்றாங்க? ‘என்றார் அவர்.

ஆனால் இதற்குள் உள்ள இன்னொரு அரிய விஷயம் இருப்பதை யாருமே அறியவில்லையே பாலு சார் என்றேன்.

என்ன விஷயம் அது?

பிறப்பும் இறப்பும் இல்லாத நிலை ஒன்றையும்  இதற்குள் மறைத்து வைத்துச் சொல்லியிருக்கிறாரே வள்ளுவர். அந்த ரகசியத்தைத்தான் பரிபாஷையில் இந்தக் குறளாகச் சொல்லியிருக்கிறார் என்பது என் கருத்து என்றேன்.

என்ன சொல்லியிருக்கிறார்? என்றார் மீண்டும் பாலு சார்.

வள்ளல் பெருமான் மரணமிலாப் பெருவாழ்வு பற்றிச் சொல்லியிருக்கிறார் தெரியுமா? தூங்கினால்தானே சாவு? துங்காமலேயே இருந்துவிட்டால்? ‘தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்? என்று பத்தரகிரியார் கேட்கிறாரல்லவா?

ஆபத்தான மேட்டரைச் சொல்றீங்களே? கொசுக் கடியாலத் தூக்கம் கெட்டாலே தாங்க முடியலையே சார்? என்றார் பாலு. 

தியானம் செய்யும் போது நாம் உறங்குவது போலக் கண்களை மூடிவிடுகிறோம். ஆனால் அப்போது உறங்குவதில்லை, அது சரியா? தியானம் செய்துவிட்டு உணர்வோடு கண் திறக்கிறோம். உறக்கத்தோடு அல்ல. கண்களை மூடித் தூங்காமல் மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனைச் சிந்தித்து இருந்தால் பிறப்பும் இறப்பும் இல்லாத பேருலகத்தில் பிரவேசிக்கலாம் என்றேன்.

அதெல்லாம் சரி, நான் கேட்ட கேள்விக்குப் பதில் வரவில்லையே? ஆசைகளை விலக்குவது எப்படி?  என்று மீண்டும் நச்சரித்தார்.

அதைத்தான் சொல்ல வருகிறேன். தேவைகளின் மீது நாட்டம் வைத்தால் ஆசைகள் தானே ஓடிவிடும் பாலு சார். 

அதுதான் எப்படி என்கிறேன்.

தோஷம் என்றால் துன்பம். அதாவது நம்மைப் பீடித்துள்ள நம்முடைய வினைப் பயன்கள்தான் நம்மைப் பல்வேறு துன்பங்களில் சிக்கிச் சீரழிய வைக்கின்றன. அந்தத் தோஷங்கள் யாவும் எதிலிருந்து வந்தவை தெரியுமா?

எதிலிருந்து வந்தவை?

தோஷம் என்ற வார்த்தையில் உள்ள ‘ஷ..’ என்ற எழுத்தின் உச்சரிப்பை உற்றுக் கேளுங்கள். 

ஷா ..என்று நீளும். நாம் நமது ஆஷாபாஷங்களால் செய்த பாவங்கள் அனைத்தும்தான் ‘தோஷங்க’ளாக மாறி நம் தலை மேல் வந்து ஏறிக் கொண்டிருக்கின்றன! 

பிரதோஷ வழிபாட்டை ஏன் மாலையில் வைத்தார்கள் தெரியுமா? மாலை என்பது கழியும் பொழுது. கழிவது எதுவும் மீளாது. நம்மைப் பீடித்துள்ள தோஷங்கள் யாவும் அன்றைய மாலைப் பொழுதோடு பொழுதாகச் சேர்ந்து நம்மை விட்டுக் கழிந்து போகச் செய்பவன் சிவன்.

அப்படியா?;

ஆமாம். காட்டாற்று வெள்ளம் வந்தால் ஊருக்குள் உள்ள குப்பை கூளங்களை எல்லாம் அடித்துக் கொண்டு போவதில்லையா? அது போலத்தான் இதுவும்.                       

பிரதோஷத்துக்கு வந்துவிட்டால் நம் வினைத் துன்பங்கள் யாவும் போய்விடும், அப்படித்தானே! இனிமேல் நான் தொடர்ந்து பிரதோஷ வழிபாடுகளுக்குத் தவறாமல் வந்துவிடப் போகிறேன் என்றார் பாலு சார்.

எத்தனையோ பிரதோஷங்களுக்கு வந்தும் எந்த வகையிலும் தோஷம் தீராதவர்கள் சரித்திரமும் உண்டு பாலு சார் அதை மறந்துடாதீங்க என்றேன்.

ஐயோ!

அவர் அதிர்ச்சியோடு நிமிர்ந்து உட்கார்ந்து ‘மெதுவாப் பேசுங்க சார் அக்கம்பக்கத்துல இருக்கறவங்க காதுல விழுந்துடப்போகுது.. ..!’என்றார்.

‘விழட்டுமே அப்படியாவது மக்கள் திருந்தட்டுமே என்று பார்க்கிறேன்’ என்றேன்.

சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு என்னன்னு புரியும்படியாத்தான் சொல்லுங்களேன் ..என்றார். 

பிரதோஷங்களுக்கு வருவோர் மட்டுமல்ல, பொதுவாகவே தவறாமல் கோயிலுக்கு வருவோர்களுக்குக்கூடக் கஷ்டங்கள் தீருவதில்லை தெரியுமா?

நீங்கள்  தப்பாகவே பேசுகிறீர்கள் என்றார்.

தப்பானவர்களைப் பேசும்போது தப்பாகத்தானே தெரியும்? கோயிலுக்கு வருவது பெரிதில்லை. பக்தி வைராக்கியம் வைப்பதும் பெரிதில்லை. கோயிலுக்கு வருபவர்கள் தன்னுடைய ஆணவத்தை, அகம்பாவத்தை அடியோடு விட்டுவிட்டுத்தான் வர வேண்டும். அப்படி யார் வருகிறார்கள்?

என்ன சொல்கிறீர்கள்?

ஆம் பாலு சார். ‘நான் எனது’ என்ற இரண்டும் மனிதனுக்குப் பகைப்பொருள். அதுதான் ஆணவம் என்றும் அகம்பாவம் என்றும் சொல்லப்படுகிறது. 

கோயிலுக்கு வருபவர்கள் ‘நான் பெரியவன், அப்படிப்பட்டவன், இப்படிப்பட்டவன், எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்ற ஆணவங்களையும், எதிர்பார்ப்புக்களையும் விட்டு ஒழித்துவிட்டு வரவேண்டும். 

அப்படி வந்துவிட்டால் அனைவருமே ஒன்றாகிவிடுவார்கள். கோயிலுக்குள் ஏற்படுத்தும் இந்த மனநிலையை ஊருக்குள்ளும் கடைப்பிடித்தால் ஊரே கோயிலாகிவிடும். ‘உள்ளப்பெருங்கோயில்கள் யாவும் ஊன் உடம்பு ஆலயங்களாகி ஊரெல்லாம் கோயில்கள் ஆகிவிடும். ஒவ்வொரு மனிதனும் கடவுளாக மாறி விடுவான். நினைக்கும்போதே எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா பாலு சார்..என்றேன்.

அவரும் வியப்போடு ஆகாயத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டு ‘நிஜமாகவா சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார்.

ஆம் பாலு சார். ஒவ்வொரு மனிதனும் இறைவனாக மாறத்தானே பிறந்து வருகிறான். அவனிடம் உள்ள மனிதன் ‘நான் எனது’ என்ற ஆணவம் என்ற பகைப்பொருளை நீக்கிவிட்டால் ‘நாம் நமது என்ற உறவுப் பொருளுக்குத் தாமாகவே மாறிவிடுவானே! மனிதனை அப்படி மாற்றியாக வேண்டும் பாலு சார் என்றேன். 

அவர் உடனே எழுந்து நின்றார்.

எழுந்திருங்கள் போவோம். ஆகாத காரியத்தைப்பேசிப் பயனில்லை  என்று என் கையைப் பிடித்து இழுத்தார்.

நான் அவரது கைகளைப் பிடித்து இழுத்து மீண்டும் அமர்த்தினேன். 

எப்பவுமே ஆகாது என்று எழக் கூடாது. அப்படிப்பட்ட அவநம்பிக்கையோடு எழுந்துவிட்டு கடவுளுக்குக்  கருணையில்லை என்று சொல்லக்கூடாது. ஆகும் நம்பிக்கையோடு  எழுந்து பாருங்களேன், எல்லாம் கைகூடும்! என்றேன்.

(ஞானம் பெருகும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com