29. பாலிடிக்ஸ்

29. பாலிடிக்ஸ்

“இன்று எனக்கு -நாளை உனக்கு!”

மரணம்  மட்டுமல்ல, இன்று பிறருக்குச் செய்யும் பாவங்கள் அனைத்தும் அப்படியே நாளை நமக்கு!

என்ற அளவில் சென்ற வாரக் கட்டுரையை முடித்திருந்தோம்.

கட்டுரையை “முடித்திருத்திருந்.. ..தேன்” என்று எழுதாமல் “முடித்திருந்.. ..தோம்” என்று ஏன் எழுதுகீறீர்கள் என்று கேட்கலாம்.

“ஞான யோகம்” என்பது சத்தியத் தொடர். “ஏகன் அநேகன்” இறைவன். ஒன்றாகவும் அனைத்துமாகவும் இருக்கும் “அண்டபகிரண்ட”ச் சக்திதான் நம்மை ஆள்கிறது. 

“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற திருமூலரின் திருமந்திரத்தின் அடிப்படையில் தொடரை எழுதிவருகிறேன்.

இதை எழுதும் போது எனக்கு. 
இறைவனுக்கும் எனக்கும்,  அதாவது எமக்கு!

எழுதிய பிறகு  உனக்கு.
இறைவனுக்கும் உனக்கும், அதாவது உமக்கு!

இறப்பு என்பது “இன்று எமக்கும் -நாளை உமக்கும்” எனும்போது பிறப்பும்கூட “இன்று எமக்கும் - நாளை உமக்கும்” என்றுதானே இருக்க முடியும்?

பிறப்பு வேறு - படைப்பு வேறு அல்ல. இரண்டும் பிரம்மாவின் கை “இருப்பு”!

ஒரு படைப்பாளி முதலில், தான் உய்த்து உணர்ந்து, பிறகுதான் மற்றவர்களுக்கு வழங்குகிறான்.

சமையல்காரன் “உப்புப் புளி காரம்” பார்த்துவிட்டுத்தான் பந்திக்கு  அனுப்புகிறான்.

இன்று படைப்பாளிக்குச் சொந்தமான  உபதேசம் நாளை  நுகர்பவனுக்குச் சொந்தம்.

கோயில் சிற்பங்கள் வீட்டுக்குப் போன பிறகும்கூட மனக்கண்ணில் தெரியும் மர்மம் அதுதான்.

“நதி மூலம் ரிஷி மூலம்” பார்க்கக் கூடாது என்பார்கள்.

ஏனென்றால் இரண்டுமே  இறைவனிடமிருந்து வருவன.

அகத்தியர் பன்னீராயிரம், திருமூலர் மூவாயிரம், போகர் ஏழாயிரம் போன்ற சித்தர் பாடல்கள்  படித்துப்பயன் பெறுவோருக்கேச் சொந்தம்.

“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க  அதற்குத்  தக.”

கற்றவற்றைக் கடைப்பிடிக்கும்போது நடைமுறையாகிறது.

நடைமுறைகள் யாவும் அனுபவத்தின் வழிமுறைகள்.

வாசகர்களோடு இரண்டறக் கலந்தே இதனை எழுதுகிறேன். இதில் உங்களுக்கான தேவைகள் அனைத்தும் உள்ளன. 

அதனால் ஞானயோகத்தை  “எனது உனது” என்ற நிலையிலிருந்து “எமது உமது”  என்பதாக்கி , இதையே நாளை “நமதாக்கி”யும் மகிழ்வோம். வாருங்கள்!


                                  சோம்பல் தரும் சொத்து


கவலைதான் மனிதனது பாரம்பரியச் சொத்து.

பெற்றோருக்கு வாரிசுகள், பெற்றோரின் பாவ புண்ணியங்களுக்கும் வாரிசுகள். 

ஒரு தகப்பனார் தன் பிள்ளைகளுக்கு நிறையச் சொத்துகளைச் சேர்த்து வைக்கிறார் என்றால் அவனை  “தெண்டச் சோறாக” மாற்றுகிறார் என்று பொருள்.

தமிழ் ஒரு இறைஞான எழுத்து.

“சொ” என்ற குறில் எழுத்துக்குப் பிறகு “சோ” என்ற நெடில் எழுத்து வருகிறது. 

“சொ” என்பது சொத்தாக இருந்தால், அதன் விளைவாகச் “சோ” என்ற சோம்பல்தான் வரும்.

தமிழே இதனை மறைமுகமாக வலியுறுத்துகிறது. 

சொத்துக்கு விளைவாக வருவது சோம்பல். அதனால் உழைப்புப் பறிபோய்விடும்.

எதற்காகப் பாடுபடவேண்டும் என்ற மனச்சோர்வு உண்டாகி, அந்த மனச்சோர்வால் உடல் சோர்வு உண்டாக்கி வேலைக்கேப் போக விடாமல் தடுத்துவிடும்.

சொத்துக்கார வாரிசுகளால் செயல்பட முடியாது.

நமக்கென்று சொத்துபத்துக்கள் இருக்கும்போது எதற்காக  அடுத்தவனிடம் போய்க் கை கட்டி நிற்கவேண்டும் என்ற மனநிலை வந்துவிடும்.

*

மேற்கு மாம்பலத்தில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தேன். அந்த வீட்டு உரிமையாளருக்கு நிறைய வாடகை வருகிறது. அவருக்கு ஒரே செல்ல மகன் இருந்தார்.

மகன் படித்துவிட்டு வேலைக்குப் போனார். 

வேலைக்குப் போகும் இடத்தில் ஆயிரத்தெட்டு சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். எப்போதும் உச்சந் தலைக்கு மேல் ஒரு கத்தி தொங்கிக்கொண்டேயிருக்கும்! அது எப்போது விழுந்து மண்டையைப் பிளக்குமோ என்று யாராலும் சொல்ல முடியாது.

நமது நேர்மையாலும், உண்மையாலும், கடின உழைப்பாலும் அக்கத்தியை அறுந்துவிடாமல் பிடித்துக்கொள்ள வேண்டும்!

வேலைக்குப் போனோமா வந்தோமா என்று இருக்க முடியாது.

வேலையில் ஏற்பட்ட பிக்கல் பிடுங்கலைப் பார்த்துவிட்டு, அந்த வாரிசு வேலையை விட்டுவிட்டார். 

பெற்றோர் அவரை வேறு கம்பெனியில் சேர்த்துவிட்டனர்.

அங்கும் பிடிக்கவில்லை.

எங்கும்  ஒத்துப்போகவில்லை. எதிலும் உடன்பாடு இல்லை.

ஒட்டு மொத்தமாக  வேலையே வேண்டாம் என்ற “அஞ்ஞானத்தோடு” நிம்மதியாக வீட்டிற்கு வந்து உட்கார்ந்துவிட்டார்!

பல ஆயிரக்கணக்கில் வாடகைப் பணம் வருகிறது.

ஒரே பையன் வேறு!

வேலைக்குப் போய்வா மகனே..என்று நெருக்கி நெருக்கி, வேலைக்குப் போன மகன் வீடு  திரும்பாமலே போய்விட்டால்? நினைத்தாலே பயமாக இருக்கிறதே! யாருக்காக இந்தச் சொத்துகள் எல்லாம்? அவன் பாட்டுக்கு வீட்டைப் பார்த்துக்கிட்டு இருந்துட்டுப் போகட்டுமே என்று பெற்றோரும் விட்டுவிட்டனர்.

மகனும் “பரமானந்தம்” பெற்றார்.

                             எதிரிகள் ஜாக்கிதை

சம்பளம் தருபவன் வருமானத்தில் முதலில் தனக்குரிய சம்பளத்தை எடுத்துக்கொள்கிறான். 

பிறதான் வேலைக்காரர்களுக்குச் சம்பளம் போடுகிறான்.

அதற்கான உழைப்பை அவனிடமிருந்து கசக்கிப் பிழிகிறான்.

வேலைக்குப் போகிறவன் வேலை பார்ப்பதோடு, தனது வேலைக்கு ஆபத்து வராத “வேலைகளையும்” பார்த்துக்கொள்ள வேண்டும். 

காரணம், நம் வேலைக்கு “உளை” வைக்கும் வேலைகளையே சுற்றியிருப்போர் செய்து கொண்டிருப்பார்கள்.
*

இது என் அனுபவம்.

காய்த்த மரத்திற்குத்தான் கல்லடி விழுகும்!

திறம்பட வேலை பார்ப்பவனுக்குத்தான் எதிரிகள் தோன்றுவார்கள்.

நான் ஒரு தனியார் நிறுவனத்தில் மிகவும் உண்மையாகவும், நேர்மையாகவும், கடுமையாகவும் பிரதிபலனை எதிர்பாராமல் பாடுபட்டேன்.

ஒருநாள் மற்ற பணியாளர்கள் முன்பாக வைத்து உரிமையாளர் என்னைத் தட்டிக்கொடுத்து இவரைப்போல யாருமே உண்மையாக வேலை பார்ப்பதில்லையே என்று சொல்லிவிட்டார்!

அவ்வளவுதான்.

அடுத்தஒரே வாரத்தில்-

என் சீட்டுக் கிழிந்தது!
 
“நீங்கள் வேலையைவிட்டு வெளியேற்றப்படுகிறீர்கள்” என்று அதே உரிமையாளரிடமிருந்து “டிஸ்மிஸ்” ஆர்டர் வந்தது!

காரணம் கேட்க உரிமையாளரைத் தேடி ஓடினேன்.

பார்க்க மறுத்துவிட்டார்.

நான் என்னத் தப்புச் செய்தேன்? நடப்பது கனவா நனவா என்று புரியாமல் நிலை தடுமாறினேன். தலை சுற்றியது. நாக்கும் வறண்டுபோய் ஒட்டிக்கொண்டது.

சோலை வனம் “பாலைவன”மாக மாறி அனல் காற்றை வாரி இறைத்தது.

சோகத்தோடு  வெளியேறியபோது  நடிகர் ஜனகராஜைப் போலத் தோற்றமளித்த செக்யூரிட்டி என்னை அருகில் அழைத்தார்.  அக்கம்பக்கம் பார்த்துவிட்டு அனுதாபத்தோடு பேசினார். 

“.. ..எல்லோரையும் போல “ஏனோ தானோ”ன்னு வேலையப் பார்த்துட்டுப் போகவேண்டியதுதானே தம்பி, எதற்காக உண்மையா உழைக்கறே? என்றார்.

அதுக்குத்தானே உரிமையாளரே என்னைப் பாராட்டினார் சார்? என்று சொன்னேன்.

..ஹி..ஹி.. உலகம் புரியாமல் இருக்கறீங்களே  தம்பி...என்றார்.

உண்மையாத்தானே  இருந்தேன் ஐயா. அதுதானே உலகம்? என்றேன்.

..உலகம் உண்மையாத்தான் இருக்கு. இல்லைன்னு சொல்லலையே. உலகத்தில இருக்கறவனுங்க உண்மையா இல்லையே. எல்லாம் போலிகளா இருக்கானுங்களே தம்பி.

அப்போ நான் உண்மையா இருந்தது தப்பா?

“...தம்பி நல்லவேளை நான் “கிரில் கேட்”டோட  செக்யூரிட்டியா நின்னுட்டேன்.  உள்ளுக்குள்ள போயிருந்தா நானும் தீர்ந்திருப்பேன்.  அதோ பாரு மரத்தடியில, மொதலாளியோட கார் நிக்குது. டிரைவர் பாரு என்ன சுகமாத் தூங்கறான்னு. .. அவன் காரோட உட்கார்ந்துட்டதுனாலத் தப்பிச்சான்.  உன்னைப் போல அவனும் உள் வேலைக்கு போயிருந்தான்னா அவனும் காலி. 

.. ..அவன் படிச்ச படிப்புக்கும் நான் படிச்ச படிப்புக்கும் மரியாதையான வேலை இதுதான் தம்பி. “பாலிடிக்ஸே” இல்லாத வேலை. எவனுக்கும் பயப்படத் தேவையில்லை. எவன் வந்தாலும் எழுந்து நின்னு “சல்யூட்”போட்டுக்க வேண்டியதுதான். இதுல என்ன இருக்கு? பெரிசாப் படிச்சுட்டு செக்கியூரிட்டியாவும் டிரைவராவும் போய் உட்கார்ந்து கெடக்கறானுங்களேன்னு பேசுறானுங்க.  பேசிட்டுப் போறாணுங்க தம்பி என்றார்.

நான் வேதனையோடு தலையைக் குனிந்தேன்.

நீ முதல் நாள் இங்க வர்றப்பவே தெரியும் தம்பி, ரொம்பநாள் தங்க மாட்டேன்னு என்றார்.

எனக்குப் புழுங்கியது.

சார், போன வாரம் என்னைத் தட்டிக் கொடுத்து என்னைப் போல எவனுமே வேலை பாõக்கலைன்னு சொன்னாரே, அவரு கையாலயே எப்படி சார் எனக்கு “டிஸ்மிஸ்” ஆர்டர் தரமுடிஞ்சது? இதுல எதோ சூது இருக்கு சார் என்றேன்.

ஜனகராஜ் தோரணையில் மீண்டும் சிரித்துக்கொண்டே அந்த செக்யூரிட்டிசொன்னார்:

..ஹி..ஹி..முதலாளி வேலைக்காரனாப் போய் நின்றிருந்தா “பாலிடிக்ஸ்”ன்னா என்னன்னு தெரிஞ்சிருக்கும். அவரே  அவங்க அப்பன் சொத்துல “மஞ்சள் குளிக்க”றாரு. அவருக்கே இங்க என்ன நடக்குதுன்னேத் தெரியாது. பேருக்கு “வருவாரு போவாரு”. அவ்வளவுதான். வேலை என்னமோ தானா நடக்குதே அதைப் பாருங்க தம்பி....

அப்போதும் எனக்குச் சமாதானம் ஆகவில்லை.
 
அப்போ நல்லவனுக்குக் காலமே இல்லையா சார்? உண்மையாப் பாடுபட்ட என்னைப் போன்றவங்களை வெளியேத்திட்டா கம்பெனி எப்படி சார் உருப்படும்?

நீதி கேட்டு மதுரை வந்த கண்ணகியின் அனல் மூச்சு என்னிடமிருந்து வெளிப்பட்டது.

செக்யூரிட்டி மறுபடியும் சிரித்துவிட்டுச் சொன்னார்:

.. ..இந்த “எக்ஸ்போர்ட்” கம்பெனி காலங்காலமாத் தயாரிச்சு விநியோகம் பண்ணிட்டு இருக்கு. இதுக்குன்னு ரெகுலர் கஸ்டர்கள் இருக்காங்க. சரக்குகள் தயாரிக்க ஆட்களும் கச்சிதமா இருக்காங்க.  தினமும் “எக்ஸ்போர்ட்” ஆயிட்டே இருக்கு. நீ வேலைய விட்டுப் போறதுனால இது நின்னுடப் போகுதா, சொல்லு?  

குத்தாமல் குத்தியதுபோலக் கேட்டார் செக்யூரிட்டி.

என்ன சார் பேசறீங்க. கம்பெனிய இன்னும் நல்லவிதமா முன்னேத்தி உலக அளவுக்கு கொண்டு போகணும்னு வேலைக்காரன் நினைக்கக்கூடாதா?

.. ..ஹி..ஹி..முதலாளிக்கே  இல்லாத கனவு உனக்கு எதுக்குத் தம்பி? இவங்களுக்கு மார்க்கெட்டுல “டிமாண்டு” இருக்கு. உலகம் சுத்தறது நின்னாலும் இந்தப் பிஸினஸ் நிக்காது. இரும்பு அடிக்கற இடத்துல “ஈ”க்கு என்ன வேலை ? நீ.. ஒரு ஈ.. தம்பி, அதுனாலதான் உன்ன வெளிய ஓட்டிட்டானுங்க, கிளம்பு என்றார்.

போறேன் சார்.. ஆனா ஒரு நாளைக்காவது இந்த ஓனர் என் கண்ணுலத் தட்டுப்பட்டா என்னோட “டிஸ்மிஸ்”க்கான காரணத்தைக் கேட்காம  விடமாட்டேன், இது சத்தியம் சார்! 

.. ..நல்லவன்னு சொல்லி உன் ஒருத்தனுக்கு முக்கியத்துவம் கொடுத்தா, மீதமுள்ள அத்தனை அயோக்கியனுங்களும் “எடமடக்கு”ப் பண்ண ஆரம்பிச்சிடுவானுங்க.. அவனுங்களைத் தட்டிக் கேட்டா “வேலை நிறுத்தம்”  பண்ணிடுவானுங்க. சரக்குப் போய்ச் சேராது. கஸ்டமர்ஸ் போயிடுவானுங்க. பிஸினசும் படுத்துடும். ஒன் ஒருத்தனால அத்தனை பேரையும் தண்டிக்கப் போயி அவரு தலையில அவரே மண்ணை அள்ளிப் போட்டுக்குவாரா? இதுதான் உண்மைக்  காரணம். இதுக்குப் பேருதான் “பாலிடிக்ஸ்”!  எங்கு போனாலும் இதே கதைதான் தம்பி, பார்த்து நடந்துக்கோ!

அதைக் கேட்டதும் என் எதிர்காலக் கதவுகள் அனைத்தும் இறுக மூடிக்கொண்டதுபோல  உணர்ந்தேன்.

காலம் கடந்தது-

“பாலிடிக்ஸ்” என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் இருப்பதை உணர்ந்தேன்.

ஒன்று மற்றவர்களுக்குத் தீமை செய்வது.

இன்னொன்று-

மற்றவர்களுக்கு நன்மை செய்வது.

உலகில் தீமைகள்  என்னவோ வாழ்கின்றன.

ஆனால் நன்மைகள் மட்டுமே ஆள்கின்றன, இதுதான் உண்மை.

தீமைகள் தோன்றித் தோன்றி மறையும்.

நன்மைகளோ மறைந்து மறைந்து தோன்றும்.

இறுதியில் நன்மையே வேரூன்றி நிற்கும்!

தர்மத்தின் வாழ்வு தனைச் சூது கவ்வும். அன்று  என்னையும் கவ்வியது.

தர்மம் வெல்லும்.

இன்று தர்மம்தான் என்னை ஆண்டுகொண்டிருக்கிறது!

(ஞானம் பெருகும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com