7. விதியா மதியா! கூடா நட்பில் விளைவது என்ன?

சென்ற வாரத்தில் அலைபேசி எண்ணில் ஏற்பட்ட குழப்பத்தைப் பார்த்துச் சிரித்தோம்.
7. விதியா மதியா! கூடா நட்பில் விளைவது என்ன?

சென்ற வாரத்தில் அலைபேசி எண்ணில் ஏற்பட்ட குழப்பத்தைப் பார்த்துச் சிரித்தோம். அது நம் மேலே வந்து ஒரு வண்ணத்துப்பூச்சி உட்கார்ந்து செல்வது போன்றதொரு அனுபவம். எளிமையான விதியின் விளையாட்டு. ஆனால் இப்படியும் ஒரு விதியின் விளையாட்டு இருக்க முடியுமா? என்ற கேள்வி எழத் தக்க சோதனைகளும் உண்டு!  

'உன் நண்பன் யார் என்று சொல், நீ யார் என்று சொல்கிறேன்' என்ற ஒரு முதுமொழி இருக்கிறது. எனக்கொரு கவலை உண்டு. 

'உன் மனைவி  யார் என்று சொல், நீ யார் என்று சொல்கிறேன்' என்று ஒரு ஆணிடமும், 'உன் கணவன் யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன்' என்று ஒரு பெண்ணிடமும் அல்லவா கேட்டிருக்க வேண்டும்!

அப்படிக் கேட்க முடியாது. காரணம் கணவனும் மனைவி அந்த மாதிரி  இருப்பதில்லை!

நண்பர்கள் போல் இல்லாவிட்டால் அந்த வாழ்க்கையில் என்ன இருக்கிறது?

நண்பர்களாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பகைவர்களாக இல்லாது இருந்தால் போதும்.

வாயில் நுரை தள்ளத் தள்ள வண்டியை இழுத்து இழுத்து நொந்து போகும் இரட்டை மாடுகளைப் போல குடும்பத்தை நடத்தி நடத்தியே களைத்துப் போகும் கணவன் மனைவிகளாகத்தான் இருந்து கொண்டிருக்கிறார்கள்! 

சாட்டையால் இரண்டு மாடுகளையும்தான் அடிப்பான் வண்டிக்காரன். இழுக்காத மாட்டுக்கும் அடி! இழுக்கும் மாட்டுக்கும் அடி! அதுதான் விதி!

கணவனுக்குப் பொறுப்பில்லையா? பாதிப்பு மனைவிக்கும்தான்! 

மனைவிக்குப் பொறுப்பில்லையா? பாதிப்பு கணவனுக்கும்தான்!

கணவனும் மனைவியும்  நண்பர்கள் போல மாறிக் கொள்ள வேண்டும். 

திருமணத்திற்கு முன்னதாக ஏற்படும் 'கூடா நட்பு' திருமணத்துக்கே 'எதிராக' சவால் விடும்!

திருமணத்திற்குப் பின்னதாக ஏற்படும்கடும் 'கூடா நட்பு' குடும்பத்துக்கே 'எதிராக' சவால் விடும்! 

திருமணத்திற்குப் பின்னர் நட்பில் கவனம் தேவை. பழைய நட்பு முண்டும் தொடரும்போது இல்வாழ்வில் இடைவெளி ஏற்படக்கூடும்!

கணவனுக்கு மனைவியையும், மனைவிக்குக் கணவனையும் உற்றத் துணை என்று ஏன் சொன்னார்கள் தெரியுமா?
 
நண்பன் பகிரங்கத் துணை மட்டும்தான்!

கணவனோ மனைவியோ படுக்கையறைத் துணை!

பகிரங்கத் துணை பாதியோடு போய்விடும்.

படுக்கையறைத் துணைதான் பயணத்தின் இறுதி வரைத் தொடரும்.

அந்தப் பயணத்திற்கு அந்தக் கணவனும் மனைவியும் நட்புறவுடன் இருந்திருக்க வேண்டும்.

அந்தக் காலத்தில் நண்பர்களுக்குப் பெற்றோர் இன்டர்வியூ வைத்து குலம், கோத்திரம் பார்த்து, திருப்தி என்றால்தான் பிள்ளைகளோடுப் பழக அனுமதி கொடுப்பார்கள். இன்றைக்கு நண்பர்கள் வீடுகளுக்கு வருவதில்லை.

உயிர் காப்பான் தோழன் என்பது அன்றையப்  பழமொழி. உயிரையோ, கைகால்களையோ வாங்காமல் விடமாட்டான் தோழன் என்பது இன்றையப் பழமொழி!

பேராசைகள்  கண்களைப் பூசி மறைத்துவிடுவதால் இன்றைய இளைஞர்கள் வேகத்தின் விளைவுகளை மறந்து விடுகிறார்கள்!

ஒரு பெரியவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று அவரைப் பார்க்கப் போயிருந்தேன்.  

அங்கு வரிசையாகச் சக்கர நாற்காலிகளில் இளைஞர்கள் உட்கார்ந்திருந்தார்கள். எல்லோருமே கை கால்கள் உடைந்து போய் கட்டுப் போடப்பட்டு,  கம்பிகள் வைத்து முடுக்கப்பட்டு இருப்பதைக் கண்டு கண்கள் கூசினேன். 

மாணவர்கள் சம வயதுள்ளவர்களாக இருந்ததால், மாணவர்கள் சென்ற சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்திருக்கூடும் என்று கருதினேன். அதைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ள ஆசை.

சக்கர நாற்காலியில் தன் மகனை வைத்து சோகத்தோடுத் தள்ளிக் கொண்டு போன ஒருவரைக் கூப்பிட்டுக் காரணத்தை வினவினேன்.

அவர் சொன்ன பதில் அதிர்ச்சியில் என்னை உறைய வைத்தது!

ஆம். 

அத்தனை மாணவர்களும் தனித் தனியாகச் சென்று ஏற்படுத்திக் கொண்ட  பைக் விபத்துக்களாம்!

அதில் பாதிக்குப் பாதிப் பேர் வீலிங் எனப்படும் நூதன பைக் விளையாட்டு ஆடி விழுந்தவர்கள் என்றார்.

அத்தகைய மாணவர்கள் தங்கள் முதுகில் பொதி சுமப்பது போல  மாவுக் கட்டுக்களோடு காணப்பட்டார்கள்! 

ஏன், இந்த ஆபத்தான விளையாட்டு? இது பற்றி எல்லாம் இவர்களுக்குத் தெரியாதா? இதைத்தான் விதி விதி என்கிறார்களா? என்று புலம்பினேன்.

அதற்கு அந்தப் பெரியவர் சொன்ன பதிலைக் கேட்டபோது ஆடிப் போய் விட்டேன்!

ஐயா என்  மகன் தானாக வண்டியை  ஓட்டிட்டுப் போய் விழுந்திருந்தான்னா, அதை விதின்னு சொல்லியிருப்பேன். சும்மா வீட்டுல உட்கார்ந்திட்டிருந்தவனை பாழாய்ப் போன நண்பன் வந்து கூட்டிட்டுப் போயி ஆக்ஸிடெண்ட்டு பண்ணிட்டானய்யா. அவன் கூப்பிட்டப்போ நான் வரமாட்டேன்னு இவன் சொல்லியிருந்தா இவனுக்கு இந்த நிலைமை வந்திருக்குமாய்யா? திமிரெடுத்துப் போயிக் கூடப் போனான். இப்ப அனுபவிக்கிறான். அதுக்கு இவனோட மதிதானய்யா காரணம். இனிமேல் இவன் தேறுவானா சொல்லுங்கய்யா? இவனை வச்சிக்கிட்டு எப்படிக் காலத்தை ஓட்டுவேனய்யா.. என்று கண்ணீர் சிந்தினார் அந்தத் தகப்பனார். 

சரி, இவனைக் கூட்டிட்டுப் போன நண்பன் என்னவானான்? என்று கேட்டேன். 

அவன் புத்திசாலி, பொழைச்சிக்கிட்டான். இவன் பின்னால உட்கார்ந்துட்டு போனவன். திடீர்னு பிரேப் போட்டதுல மேல போய்க் கீழே விழுந்து முட்டைக்கூடு  போல நொறுங்கிப் போயிட்டானய்யா. அவனோ சாமர்த்தியமா வண்டியோடயே பம்மிக்கிட்டான்!

எனக்குச் சங்கடமாகிவிட்டது.
 
இதை விதின்னு சொல்றதா, மதின்னு சொல்றதா என்று முணுமுணுத்தேன். அதற்கு அந்தத் தகப்பனார் சொன்ன பதிலும் அதிர்ச்சியளிப்பதாக இருந்துது. 

எங்க வீட்டுக்கு எதிர் வீட்டுப் பையனும் காலேஜ்லதான் படிக்கறானய்யா. அவனும் ரேஸ் பைக் வேணும், இல்லேன்னா கோவிச்சுக்கிட்டு வீட்டை விட்டுப் போயிடுவேன்னு  அவன் அப்பாவை மிரட்டினான். மகனே பைக்குல போயி நீ கீழே விழுந்து கைகால் போனா எங்களால தாங்கிக்க முடியாதுடா. அதை விட நீ கோவிச்சுக்கிட்டு வீட்டை விட்டுப் போனாக் கூடப் பரவாயில்லை. எங்காவது ஒரு பக்கம் கைகால் சுகத்தோட இருந்தா அதுவே போதும்டான்னு கட் அண்டு ரைட் டாச் சொல்லிட்டாருய்யா. இதை விதிங்கறீங்களா மதிங்கறீங்களா என்று கேட்டார்.

என்னால் எதுவும் பேச முடியவில்லை.

என்னய்யா பேசமாட்டறீங்க? என்றார் அந்த விபத்துக்காரப் பையனின் தகப்பனார்.

பையனுக்கு பைக்கை வாங்கிக் கொடுத்திருந்தா விதி விளையாடியிருக்கும். நல்லவேளை மதியால அவன் பொழைச்சிக்கிட்டான் .. சரியா? என்றேன். 

நாங்கள் பேசுவதைக் கேட்டுத் தலைகுனிந்து கொண்டு மணப்பெண் கோலத்தில் உட்கார்ந்திருந்த மாணவனிடம் என்னப்பா உங்கப்பா சொல்றதைக் கேட்டியா? என்று காதோடு கிசுகிசுத்தேன்.

அந்த மாணவன் பாவம் தனது பத்து விரல்களையும் பின்னிக்கொண்டு கைகளைத் தனது தாடையில் வைத்தபடி அழுதுகொண்டிருந்தான்.

ஏனப்பா அழுகிறாய்.. ? என்று வாஞ்சையுடன் கேட்டபோது அவன் சற்றும் எதிர்பாராத  பதிலைச் சொன்னான்.

அங்கிள், எனக்கு கைகால்கள் போனதைப் பத்திக்கூடக் கவலை இல்லை. என்னோட விதின்னு ஏத்துக்கிட்டேன். ஆனா.. ஆனா..

என்ன ஆனா?

அவன் வாயிலிருந்து வார்த்தைகள் வர மறுத்தன. முகத்தை அப்படியும் இப்படியுமாக ஆற்றாமையால் குமுறினான்.

எதுவாயிருந்தாலும் சொல்லப்பா..

இவனால சொல்ல முடியாதய்யா. அதை நான் சொல்றேன் .. இவனைக் கொண்டு போய்க் கவுத்துன நண்பன் இதுவரைக்கும் இவனை  வந்து எட்டிக்கூடப் பார்க்கலை. இந்தச் சம்பவம் நடந்த அன்னைக்கே  அவனோட பெற்றோர் அவனுக்கு கால்கட்டு ப் போட ஏற்பாடு பண்ணிட்டாங்க. அடுத்த மாசம் கல்யாணம். இவனால வரமுடியாதுன்னு பத்திரிகை கூட இவனுக்கு  வைக்க வரல ஐயா..

விதியால் தண்டிக்கபடுபவனும் மனிதன்தான்!

மதியால் தப்பித்துக்கொள்வோனும் மனிதன்தான்! 

குழப்பத்துடன் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தேன். சுகமான தென்றல் காற்று தீண்டியபோது அந்தக் காற்றைப் போல இதமாகப பேசும் இனிய நண்பர் ராஜ்கண்ணு எதிரே வந்து நின்றார். 

என்ன யோசனையோடு வருகிறீர்கள்? என்று கேட்டார் ராஜ்கண்ணு. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த மாணவனின் சோகத்தைப் பற்றி எடுத்துரைத்தேன்.

அவர் சோகத்தோடு கேட்டுக்கொண்டே நின்றார். 

எது விதியின் விளையாட்டு எது மதியின் விளையாட்டு என்று எதுவும் புரியமாட்டேங்குது நண்பரே.. என்றேன். 

எனக்கும் அதே குழப்பம்தான் என்று கூறினார் ராஜ்கண்ணு. 

எங்கள் மாமா ஒருத்தரை இங்குதான் சேர்த்திருக்காங்களாம். பாவம் சாப்பாட்டுக்கே கஷ்டப்படறவர். கன்னா பின்னான்னு தின்னவும் தெரியாது. அவருக்குப் போயி 'ஹார்ட் அட்டாக்காம், நம்பவே முடியலை. மாட்டுக் கறியாத் தின்னுட்டு மாடு போல அலையறவன் எல்லாம் நல்லா இருக்கான். மனசால யாருக்கும் ஒரு தீங்கு கூட  நினைக்காதவருக்குப் போயி ஹார்ட் அட்டாக்கு, என்ன கொடுமை நண்பரே  இது? என்றார் ராஜ்கண்ணு.

அதைக் கேட்டதும் எனக்கும் அதிர்ச்சியாகிவிட்டது. 

ராஜ்கண்ணுவுடன் சேர்ந்து அவரது மாமாவை நானும் போய்ப் பார்த்தேன். ஐ.சி.யூவில் வைத்திருந்தார்கள். அந்த வார்டைச் சுற்றி நூற்றுக்கணக்கான சொந்த பந்தங்கள் கவலை தோய்ந்த முகத்துடன் நின்றுகொண்டிருந்தார்கள்.

அவரது துணைவியார் கண்களை முந்தானையால் கசக்கிக்கொண்டு வந்து கணவரைப் பற்றி எங்களிடம் புலம்பினார்.

அவருண்டு அவர் வேலையுண்டுன்னு இருந்துட்டு இருந்தாருய்யா. ஒரு வம்பு தும்புக்கும் போகமாட்டாரு. கண்டதைக் கழியதையும் தின்னமாட்டாரு.  ஆனா மத்தியானமா திடீர்னு நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னாரு. இங்க கொண்டு வந்து சேர்த்துட்டோம். உடனே  ஆபரேஷன் பண்ணனும்னு சொல்லிட்டாங்க. பணம் வேற மூணு லட்ச ரூபாய் ஆகுன்னு சொல்றாங்கய்யா.. யாருக்கும் ஒரு பாவமும் பண்ணலையா.. பாழாய்ப் போன விதி எங்களையும் விட்டு வைக்க மாட்டேங்குதே.. என்று தேம்பித் தேம்பி அழுதார்.

எனக்கு விதியின் மீது காட்டமாகிவிட்டது. விதி மட்டும் மனித உருக்கொண்டு வந்திருந்தால் குடுமியைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கியிருப்பேன்..என்று உள்ளுக்குள் கருவிக்கொண்டேன். 

வேறென்ன செய்ய முடியும்?

நண்பர் ராஜ்கண்ணோடு வெளி வராந்தாவுக்கு வந்து நின்ற போது மீண்டும்  அதே தென்றல்  புண்பட்ட மனதைப் பண்படுத்துவதுபோல வீசியது. 

விதியின் விளையாட்டுக்களைப் பார்த்தீர்களா? கடவுள் கருணையற்றவன் என்றார் ராஜகண்ணு.

விதியின் விளையாட்டுக்கு மனிதன் பலியாவது உண்மைதான். காரணம் இல்லாமல் காரியம் இல்லை. அவரவர் துன்பங்களுக்கான காரணங்கள் மறைக்கப்படும்போது அவற்றை விதியின் மேல் சுமத்திவிடுகிறோம். விதி உருவாவதற்கு மதியின் செயல்கள்தான் காரணம். குறை மதியோடு செய்யும் காரியங்கள்  பாவங்களைத் தருகின்றன நண்பரே. .. .. ! என்றேன்.

ராஜ்கண்ணு வியப்போடு பார்த்தார்.

ஆராயாமல் செய்யும் தவறுகள்தான் குற்றங்கள் ஆகிவிடுகின்றன.

நிறைமதியோடு செய்யும் காரியங்கள்  புண்ணியங்களைத் தருகின்றன.

ஆம். ஆராய்ந்து செய்யும் காரியங்கள் எதுவுமே தப்பாவதில்லை!

மனிதன் தப்பாக வாழக்கூடாது என்பது மட்டும்தான் எனக்கு இப்போது புரிகிறது என்றேன். 

ஒரு தப்பும் செய்யாத எங்கள் மாமாவுக்கு ஏன் ஹார்ட் அட்டாக் வரவேண்டும்? என்று மீண்டும் கேட்டார் ராஜ்கண்ணு.

எப்படியாவது ஒரு நல்ல பதிலைத் தர மாட்டாயா கடவுளே என்று முழுமனதாகக் கடவுளிடம் அப்போது வேண்டிக் கொண்டேன்.  

அந்த சமயம் திமுதிமு வென்று சுமார் பத்துப் பேர் கையில் பழங்களைச் சுமந்துகொண்டு வந்தார்கள். ராஜ்கண்ணுவிடம்  அவரது மாமாவைப் பற்றி விசாரித்துவிட்டு வார்டுக்கு ஓடினார்கள். 

நான் அவர்கள் சென்ற திசையினையே பார்த்துக் கொண்டிருந்தேன். பெருமூச்சோடு திரும்பி நண்பரோடு நடந்தேன். 

மருத்துவனை வராந்தாக்களை விட்டு விலகிப் புல்வெளிக்கு வந்த போது சளேர் என்று மீண்டும் ஒரு தென்றல் காற்று வலிய வந்து எங்கள் மேல் மோதி இன்ப சுகத்தை வாரி இறைத்தது.

ராஜ்கண்ணு. நாம் விதி விதி என்று புலம்பிக் கொண்டிருப்பது அறியாமைதான். எதற்காக எதற்கெடுத்தாலும் விதியையே நொந்து கொண்டிருக்க வேண்டும்? நம்மிடம் உயிர் உள்ளவரை உடன் துணை இருக்கும் மதியைப் பற்றி ஏன் நாம் ஒரு போதும் எண்ணிப் பார்ப்பதில்லை? விதியை நம்பும் அளவிற்கு மதியை நம்புவதில்லையே.. அங்குதான் தப்பு இருக்கிறது..! என்றேன்.

ராஜ்கண்ணு என்னைப் பார்த்தார்.

உங்கள் மாமாவிற்கு எத்தனை பெரிய செல்வாக்கு இருக்கிறது பார்த்தீர்களா? எத்தனை சொந்தங்கள் எத்தனை பந்தங்கள் ...! இத்தனை பெரிய கூட்டம் இவருக்குப் பின்னால் இருப்பது இத்தனை நாளும் தெரிந்ததா? விதிக்குப் பின்னால் மிகப்பெரிய மதியின் நுட்பம் ஒன்று மறைந்திருக்கிறது ராஜ்கண்ணு, மறந்துவிடாதீர்கள்! மாமாவின் அருமையை மாமாவுக்கே உணர்த்துவதற்குத்தான் வரக்கூடாத ஹார்ட் அட்டாக் வந்திருக்கிறது!

உண்மையில் நல்லவர்களுக்கு வரும் சோதனைகள் யாவும் இதயத்தின் வருடலாத்தான் வருகின்றன!

ஆனால் இதயத்தின் தாக்குதல் என்று தப்பாக விமரிசிக்கப்படுகின்றன! 

மதியே தப்பாக விமரிசித்தால் விதி என்ன செய்யும்? 

கவலைப்படாதீர்கள். இனி அவர் பிழைத்துக் கொள்வார்!  இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? எத்தனை பெரிய செல்வாக்கு அவருக்கு.. என்று வியந்து உரைத்த போது வளர்பிறை நிலவு ஆமாம் என்பது போல உச்சி வானில் தலை தூக்கி நின்றது!

ஞானம் பெருகும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com