25. கடவுள் சோதிப்பான்; கைவிட மாட்டான்!

பிரசவத்தில் உயிருக்குப் போராடும் இரண்டு உயிர்களையும் கடவுளால் காப்பாற்ற முடியும்  என்பது ஆன்மிக மெய்ஞானம்.
25. கடவுள் சோதிப்பான்; கைவிட மாட்டான்!

பிரசவத்தில் உயிருக்குப் போராடும் இரண்டு உயிர்களையும் கடவுளால் காப்பாற்ற முடியும்  என்பது ஆன்மிக மெய்ஞானம்.

விஞ்ஞானம் ஊனக் கண் தியானம்.

மெய்ஞானமோ ஞானக் கண் தியானம்.

விஞ்ஞானம் தோற்கக் கூடும். மெய்ஞானம் தோற்காது! என்று சென்ற வாரத்தில் பார்த்தோம். ஆனால் கடவுளே மனது வைத்தால் கூட சில உயிர்களை மீட்க முடியாமல் போய் விடக் கூடும்.

அப்படியும் சில உதாரணங்கள் உண்டு.

சம்பாத்தியத்தை எல்லாம் கோயில் கோயில் கோயில் என்று கோயிலுக்கே செலவழித்தும்  கடவுளால் கைவிடப்பட்ட கேஸ்கள் உண்டு.

பாட்ஷா படத்தில் எழுத்துச் சித்தர் பாலகுமாரன் எழுதிய வசனம் இது: ஆண்டவன் நல்லவங்களைச் சோதிப்பான். ஆனா கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு  அள்ளி அள்ளிக் குடுப்பான். ஆனா கை விட்டுடுவான்!”

தியேட்டரே ஆடிப் போய் விடும் கைத்தட்டலால்!

அது அவருக்குள்ளிருந்து இறைவன் எடுத்தியம்பிய வசனம்!

*

செட்டியார் குடும்பம் ஒன்று முருகனுக்குப் புகழ் சேர்க்கும் ஊரில் இருந்தது. அவரது குடும்பத்தில் மஹாலட்சுமி ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தாள்.

பிள்ளைகள் எல்லாரும் நல்ல படிப்பு, நல்ல உத்தியோகம் என்று வசதி வாய்ப்புக்களோடு வலம் வந்து கொண்டிருந்தார்கள்.

பிள்ளைகளுக்குத் தடபுடலாகக் கல்யாணம் பண்ணி வைத்திருந்தார்.

குறை ஒன்றும் இல்லை..மறை மூர்த்தி கண்ணா என்ற பாடல் ஒலிக்காத குறைதான். அத்தனை நிறைவு அந்தக் குடும்பத்தில்.

பேரக்குட்டிகள் நாய்க் குட்டிகள் போல 'மொலு மொலு'வென்று வீடு முழுக்க ஓடிக் கொண்டிருப்பதைப் பார்த்துப் பார்த்துப் பூரித்துக் கொண்டிருந்தார் செட்டியார்.

கோயில்களுக்கு அவரைப் போலச் செய்ய முடியாது.

ஊருக்குள் இருக்கும் கோயில்களுக்கு அடிக்கடி அபிஷேகங்கள் செய்வார்.

பன்னீரில் ஆரம்பித்து பால், பன்னீர், மஞ்சள், திருநீறு, அஞ்சனம், இளநீர், சந்தனம், என்று பஞ்சாமிர்தம் வரை அபிஷேகச் சாமான்கள் அனைத்தையும்  குடம் குடமாக ஊற்றி அபிஷேம் நடத்துவார்.

இறுதியாகத் தண்ணீரால் கழுவி அலங்காரம் செய்து ஆடை அணிகலன்கள் பூட்டி மலர மலர மாலைகளைச் சூட்டி ஊதுவத்தி சாம்பிராணி காட்டுவார்கள்.

அத்தனையும் கருவறைக்கு நேராக நந்தியோடு நந்தியாக  உட்கார்ந்து கொண்டு பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போவார் செட்டியார்.

கிருத்திகை, சஷ்டி, அமாவாசை, பவுர்ணமி என்று வருமானத்தில் ஒரு பகுதியை ஊருக்குள் உள்ள கோயில்களுக்குச் செலவழிப்பார்.

அவரது அழைப்பிற்கிணங்கி சொந்த பந்தங்கள் வந்து சூழ்ந்திருப்பார்கள்.

இன்ன கிழமையில் இந்தக் கோயிலில் செட்டியார் பூஜை என்று அறிந்து வைத்திருக்கும் அவர்கள். அழையா விருந்தாளியாகவே அங்குச் சென்று  அமர்ந்திருப்பார்கள்.

அந்தச் சொந்தக்காரங்களில் நானும் ஒருவனாகப் போவது வழக்கம். அதுவும் சுண்டலுக்குத்தான். பக்தி சுத்தமாகக் கிடையாது என்னிடம்.

ஆனாலும் சுற்றிச் சுற்றி யாராவது ஏழை பாழைகள் இருக்கிறார்களா என்று நோட்டம் விட்டுக் கொண்டிருப்பேன்.

ஒருத்தர் கூட இல்லை!

வந்திருக்கும் எல்லோருமே செட்டியாரது அடிவருடிகள்!

சொந்த பந்தங்களுக்குப் பெருமை காட்டவே அவர் இவற்றை எல்லாம் செய்கிறார் என்ற உண்மை எனக்குப் புரிந்துவிட்டது.

பூஜைகளுக்குப் போகும் போதே பிரசாதங்களை நினைத்துக் கொண்டுதான் போவார்கள்.

அயிட்டங்கள் ஒன்றா இரண்டா!  லெமன் சாதம், புளிச்சாதம், தயிர் சாதம், இட்லி சட்னி, வடை!

குறிப்பாக புளிச்சாதத்தில் கொண்டைக் கடலையைக் கலந்திருப்பார்கள். அதன் சுவையோ சுவை. இறுதியாக இலையோரத்தில் வைக்கப்படும் “இஞ்சிப் புளிதான் எல்லோருக்குமே பிரசித்தம்!

தின்றதை எல்லாம் அடக்கி ஆளுவதற்காகத்தான் அந்த இஞ்சிப் புளி!

கோயிலில் கடவுள் இருக்காரோ இல்லையோ சுண்டல்,பொங்கல், புளியோதரை, பஞ்சாமிர்தம் நிச்சயம்  இருக்கும் என்றுதான் உறவுக்காரர்கள்  தேடி வருவார்கள்.

வரும் உறவாளிகள் ஒருவர் கூட பசியோடு வருவதில்லை.

அவர்கள் “பிச்சைக்காரர்கள் இல்லையே! ஆனால் கோயிலுக்கு வெளியே பட்டினியோடு எட்டிப் பார்க்கும் “பிச்சைக்காரர்களைப் பற்றி யாருமே எண்ணிப் பார்ப்பதில்லை.

செட்டியாரே எண்ணிப் பார்ப்பதில்லையே!

கோயில் கோயிலாகச் சொந்தங்களைக் கூட்டி இப்படித் தம்பட்டம் அடிக்கும்  சீமான்கள் இன்றைக்கும் எல்லா ஊர்களிலும் உண்டு.

எனக்கும் ஒரு ஆசைக் கனவுண்டு.

திருக்கோயில்களில் ஏன் “பிச்சைக்காரர்களை  மட்டும் அழைத்து வைத்து இதுபோன்ற அபிஷேகங்களை நடத்தக் கூடாது?

படமாடக் கோயில் பகவற்கொன் றீயில்

நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா

நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில்

படமாடக் கோயில் பகவற்க தாமே

என்கிறார் திருமந்திரம் எழுதிய திருமூலர்.

கோயிலில் உள்ள கடவுள் சாமி சிலைகளை க் குளிப்பாட்டிப் பல விதமான வாசனாத் திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம். பலவித ஆடை அணிகலன்களை அணிவித்து அலங்காரம் செய்து பல்வேறு  உணவுகளையும்  படையல் போடுகிறோம்.

இவற்றையெல்லாம் கற்சிலைக்கு செய்வதால் என்ன பயன்? ஒரு பயனும் இல்லை. அவற்றில் ஒன்றுகூட  தெருவில் பசியோடு நடமாடும் ஏழைகளைப் போய்ச் சேர்வதில்லை.

அந்த நடமாடும் கோயிலான  ஏழைகளுக்குச்  செய்தால் மட்டுமே அவை ல்லாம் படமாடக் கோயிலான  பகவானுக்குப் போய்ச் சேரும்.

ஏழைகளுக்கு உணவு கொடுப்பதே இறைவனுக்கு உணவு படைப்பதாகும் என்கிறார் திருமூலர்.

நாட்கள் நகன்றன-

செட்டியாரின் மனைவிக்குச் சிறுநீரகக் கோளாறு வந்துவிட்டது!

உடனடியாக மாற்றுச் சிறுநீரகம் பொருத்தியாக வேண்டும் என்று கூறிவிட்டார் டாக்டர்.

செட்டியாருக்கு வயதாகி விட்டதால், அவருடைய சிறுநீரகங்கள் பொருந்தாது என்று கூறிவிட்டனர்.

வேறு சிறுநீரகத்திற்கு ஏற்பாடு பண்ணுங்கள் என்று அவசரப்படுத்தினர்.

நலம் விசாரிக்க ஏன்டா வந்தோம் என்று ஆகிவிட்டனர் சொந்தபந்தங்கள்.

அவர்களை வைத்துக் கொண்டு அவர்களிடமே “டாக்டர்கள்  இவளுக்குச் சிறுநீரகங்கள் போயிடுச்சுன்னு சொல்றாங்க.  யாராவது சிறுநீரகம் குடுக்க முன் வந்தா புண்ணியமாப் போகும். அதுக்கு நல்ல தொகையும் குடுக்கலாம்னு இருக்கேன்..யாரு குடுப்பாங்களோ... “என்று புலம்பினார் செட்டியார்.

அவர் சொன்னதுமே கேட்டுக் கொண்டிருந்த ஆண்கள் தங்கள் தோளில் கிடந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார்கள்.

பெண்களோ தங்கள் முந்தானைகளை முதுகுக்குப் பின்னால் இழுத்துப் பிடித்துச் வயிற்றில் செருகிக் கொண்டார்கள்.

திரைப்படத்தில் இதைக் காட்டினால் டைரக்டோரியல்  “டச் என்று சொல்லிக் கை தட்டுவார்கள். ஆம். சிறுநீரகங்கள் முதுகுப் பக்கத்தில் உள்ளன. என்னுடைய சிறுநீரகத்தைத் தர முடியாது. கேட்டுவிடாதீர்கள் என்று சொல்லாமல் சொல்வது போலத்தான் அவர்களது முதுகுப் பகுதியை முந்தானையாலும், துண்டினாலும் மூடி மறைத்துக் கொண்டார்கள் அந்தச் சொந்தங்கள்.

படையல் தின்ற சொந்தங்களில் ஒருவர் கூடத் தனது சிறுநீரகத்தில் ஒன்றைத் தர முன்வரவிலை.

கோயிலுக்கு நாமா தேடிப் போனாம்? கூப்பிட்டதால தானப் போனாம். அதுவும் சாப்பாட்டுக்கு  இல்லாமலா போனோம். ஏதோ கோயில் பிரசாதமே, நல்லா இருக்குமேன்னுதான் போனோம், இப்ப எல்லாம் “உள்ள இருக்கறதைக் கேட்பாருன்னு தெரிஞ்சுருந்தா அதுவும் போயிருக்க மாட்டோம் என்று தங்களுக்குள்ளாகப் பேசிக் கொண்டார்கள்.

கோடி கோடியாகப் பணம் இருந்தும் என்ன பயன்?

செட்டியாரின் மனைவி கவலையிலேயே வருந்தி வருந்தி, படுக்கையில் அழுந்தி அழுந்திச் மாண்டுபோனார்!

விருந்துண்ட அத்தனை பேரும் துக்க வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். வாங்கித் தின்ற  பிரசாதங்களுக்கு நன்றிக் கடனாக.

கோயில் கோயிலாக அபிஷேக ம் பண்ணிய மனுஷனுக்கா இந்தச் சோதனை? எல்லாம் விதி... என்று அவர்களுக்குள் முணுமுணுத்துக்கொண்டனர்.

செட்டியார் அங்கு வந்திருந்தவர்களை ஏறெடுத்துக் கூடப் பார்க்கவில்லை!

தேர்தலில் வீடு வீடாகப் பணத்தைக் கொடுத்துவிட்டு, வெற்றிக் களிப்புடன் காத்திருக்கும் வேட்பாளருக்கு “டெபாசிட் காலி என்ற செய்தி வந்தால் எப்படி இருக்கும்?

அப்படித்தான் அன்று துக்க வீட்டில் அமர்ந்திருந்தார் செட்டியார்.

எத்தனை எத்தனையோ கோயில்களுக்குச் செய்தேன், ஒரு சாமி கூடக் கண்ணைத் திறக்கலையே என்று உள்ளுக்குள் நொந்து கொண்டிருந்தார்.

அப்போதுதான் அவரது மனச்சாட்சி அவரைப் பார்த்துக்  கேட்டது:

கோயிலுக்கு எத்தனையோ செய்தாயே, அவற்றில் ஒன்று கூடக் கடவுளைப் போய்ச் சேரவில்லையே, காரணம் என்னவென்று யோசித்தாயா? ஆயிரக்கணக்காகச் செலவு செய்தது என்னவாயிற்று? அத்தனையும்  சொந்த பந்தங்களின் அடிவயிற்றுக்குள் அல்லவா தஞ்சம் புகுந்தன. ஏழைக்கு உதவாத பிரசாதம் எப்படி உணவுப் பொருளாகும்? அது உணவுப் பொருளாக இருந்தால்தானே உடலில் சேரும்?

அதனால்தான் அவையெல்லாம் உணவகம் நில்லாப் பேருந்து போல வயிற்றிலேத் தங்காமல் நேராக மலக்குடலுக்குள் போய் முடங்கிக் கொண்டன!

மனசாட்சியின் வார்த்தைகளுக்குக் கூட மனக் காதினைக் தீட்டவில்லை செட்டியார்.

ஆம்-

அப்போதும் கூடச் செட்டியார் ஏழைகளைப் பற்றி எண்ணிப் பார்க்கவே இல்லை.

அவருக்குக் கோபம் எல்லாம் கோயில்கள் மீதுதான்.

ஏழைகளை அறியாத பரம்பரைப் பணக்காரர் அவர்.

அவருக்குத் தனது பசி மட்டுமே தெரியும். அது தோன்றும் போதே பல்சுவை உணவுகள் வந்து அந்தப் பசியைப் பூர்த்தி செய்துவிடும்.

செட்டியார் வேளா வேளைக்குச் சரியாகச் சாப்பிடுபவர்.

காலை எட்டு மணி, மதியம் ஒரு மணி, இரவு எட்டு மணி என்று சாப்பிட உட்காரும் நேரங்களைப் பார்த்து நம் கடிகாரங்களைச் சரி செய்து கொள்ளலாம்.

தோன்றும்போதே அவரது பசியானது களை எடுக்கப்பட்டு விடும்! அதனால் பசியின் கொடுமை அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

பசியோடு வந்தச் சொந்தங்களுக்குப் படையல் போட்டோம் என்று பெருமைப்பட்டாரேயொழிய  பசியோடு நின்ற பிச்சைக்காரர்களுக்கு என்ன கொடுத்தோம் என்று யோசிக்கவில்லை.

உணவு கிடைக்காத பிச்சைக்காரர்கள் கண்கள் பஞ்சடையத்  தலை சுற்றி உடல் சோர்ந்து வெயிலில் கிடக்கும் வேதனை என்னவென்று  அவருக்குத் தெரியாது!

சொந்த பந்தங்களுக்குச் சோறு போட்டால்  சிறுநீரகத்தையும், கல்லீரலைக் கொண்டு கொண்டு வந்து நீட்டுவான் என்று நம்பிக் கொண்டிருந்தார் செட்டியார்.

இப்போது பிச்சைக்காரனே  அவற்றைத் தருகிறேன் என்றால் எப்படிக்  கை நீட்டுவார்?

பிச்சைக்காரன் சிறுநீரகத்தையா வைப்பது என்று அருவெறுப்பார்.

*

கடவுள் உண்டு.

அவன் அனைவரையும்  காப்பாற்றுவன்.

காப்பாற்ற விடாமல் தடுப்பவனை கடவுளேகூடக் காப்பாற்ற முடியாது. அதற்காகக் கடவுளையே முழுக்க நம்பிக் கொண்டு காரியம் ஆற்றாமலும் இருந்துவிடக் கூடாது.

கடவுள் மீது அதீத நம்பிக்கை வைக்கலாம். அதிலும் ஒரு விழிப்புணர்வு வேண்டும்.

பேருந்துக்காகக் காத்திருக்கிறோம்.

எல்லாம் கூட்டமாகவே வருகிறது.

கடவுளே கூட்டமில்லாத பேருந்தாக வந்தால் நன்றாக இருக்குமே என்று வேண்டிக் கொள்ளலாம். அதற்காக அப்படி ஒரு பேருந்து தனக்காகத் தனியாக வரவேண்டும் என்று கடவுளிடம் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா?

பேருந்து நிறுத்தத்தில் ஒரு பக்தன். ஓடு மீன் ஓட உறுமீன் வரும்வரை காத்துக் கொண்டிருந்தான்.

அடுத்த பேருந்து காலியாக வரும் .. அடுத்த பேருந்து காலியாக வரும் என்று வரும் பேருந்துகளை எல்லாம் வழியனுப்பிக் கொண்டிருந்தான் அந்தப் பக்தன்.

திடீரென்று அரசியல் தலைவர்  இறந்துவிட்டார் என்று ஊரில் கலவரம் ஏற்பட்டுவிட்டது.  அனைத்து ப் பேருந்துகளையும் நிறுத்தி விட்டார்கள். அவன் நின்று கொண்டிருப்பதோ திருவொற்றியூர். போக வேண்டியதோ திருவான்மியூர்.

வந்த பேருந்திலேயே ஏறியிருந்தால் இன்னேரம் திருவான்மியூர் போய் இறங்கி, பாதுகாப்பாக வீட்டுக்குள்ளும்  நுழைந்திருப்பான்.

இப்போது அந்த இடத்தை விட்டு எங்கும் நகரமுடியாமல் போய்விட்டது!

ஆட்டோக்களும் வர மறுத்தன. கையிலும் காசு இல்லை. தங்கவும் இடம் இல்லை. அரசு மரியாதையோடு தலைவரை அடக்கம் செய்ய இரண்டு மூன்று தினங்கள் ஆகிவிடும் என்றார்கள்.

களைப்போடு ஓரத்தில் போய் உட்கார்ந்து கடவுளிடம் “என்ன சாமி, உன்னையே நம்பிக் கொண்டிக்கிற பக்தனை இப்படிப் பண்ணிவிட்டாயே? என்று கேட்டான்.

கடவுளுக்கே கோபம் வந்துவிட்டது.

பக்தனே, நான் உனக்காகப் எத்தனையோப் பேருந்துகளை அனுப்பி வைத்தேன். எதிலுமே ஏறாமல் என் மீது கொண்ட நம்பிக்கையால் காலியாக வரும் பேருந்துக்கக் காத்திருந்தாய். வந்த பேருந்துகளைத் தட்டிக் கழித்தது உன் குற்றம். வீணாக என் மீது பழி போடாதே என்றார்.

கடவுள் கைவிட மாட்டார்தான்.  அதற்காக முட்டாள்தனமான பக்தியை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. அதிலும் கூட புத்திசாலித்தனமான  பக்தி நம்மிடம்  வேண்டும். 

நம்முடைய கண்மூடித்தனமான பக்தியால் கடவுளின் கண்களையே மூடி அவரைக் காணமுடியாமல் செய்துவிடக் கூடாது.

இமைப் பொழுதும் நீங்காத இறைவன் இமைக்காமல் நம்மைக் காப்பவன் என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்!

(ஞானம் பெருகும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com