19. ஆபத்தில் காப்பான் இறைவன்

சிறந்த இறை நெறி சிவநெறிதான் என்பதை அனுபவம்தான் உணர்த்த முடியும் என்று சென்ற இதழில் பார்த்தோம்.
19. ஆபத்தில் காப்பான் இறைவன்

சிறந்த இறை நெறி சிவநெறிதான் என்பதை அனுபவம்தான் உணர்த்த முடியும் என்று சென்ற இதழில் பார்த்தோம்.

ஆனால் இன்றைக்கு மதமாற்று முயற்சிகள் பெருகி வருகின்றன. அனுபவமில்லாத மதமாற்றம் அடக்கு முறை மதமாற்றம். அந்த மாற்றங்கள் ஒருநாள்  சாயம் போய்விடும். ஆடையின்  வெண்மைதான் பூர்வீக மதம். அதற்கு நீலம் போடும் முயற்சிதான் மதமாற்றம்.

மற்றவர்களின் வற்புறுத்தலுக்கு, சூழலுக்கு, கட்டாயத்துக்கு, மிரட்டலுக்கு, சலுகைகளுக்குக் கட்டுப்பட்டு அதுவே தலைசிறந்த மதம் என்று மாறிக்கொண்டு  மதத்தைப் பரப்பும் முயற்சிகளிலும்  இன்றைக்கு ஈடுபடுகிறார்கள்.

'அவன் அருளாலே அவன் தாழ்வணங்கி' என்று மாணிக்கவாசகர் சொல்லிய வாக்கு இங்கே சிந்திக்கத்தக்கது.

இறைவனைக் கும்பிடுவதுற்கும் கூட இறையருள் வேண்டும்.

எந்த இறை சரியான இறை என்ற ஆராய்ச்சி நமக்குத் தேவையில்லை.

ஆனால்  மாணிக்கவாசகர் ஒரு  சிறந்த சிவனடியார்.

கிறித்துவ மதத்தைப் பரப்ப வந்த ஜி.யூ.போப் என்ற ஆங்கிலேயர் தமிழைக் கற்றுக் கொண்டு திருவாசகத்தைப் படித்துத் தன்னையே தமிழுக்குப் பறி கொடுத்தவர்.

சிறந்த வழிபாட்டு இலக்கியம் திருவாசகம் என்று ஒப்புக்கொண்டு, தான் இறந்த பிறகு தனது கல்லறையில் தன்னை 'ஒரு தமிழன்' என்று எழுதி வையுங்கள் என்றும் எழுதி வைத்துவிட்டு இறந்தார்!

தமிழ் அவருக்குச் சிவத்தைக் காட்டியதா? சிவம் அவருக்குத் தமிழைக் காட்டியதா?

முட்டையிலிருந்து கோழி வந்தததா? கோழியிலிருந்து முட்டை வந்ததா?

தமிழும் சிவமும் பிரிக்க முடியாதவை. அதனால்தான்  தமிழ் 'தெய்வத் தமிழ்' எனப்படுகிறது. தமிழைச் சிவத் தமிழ் என்றால் அது சாலப் பொருந்தும். அப்போதுதான் அது 'செம்மொழி என்று போற்றப்படுவதற்கும் பொருந்தும். செம்மை என்பதும் செம்பொருள் என்பதும்  சிவனையே குறிக்கும்.

இதற்கு மேல் வேறு விளக்கம் கூறத் தேவையில்லை.

*

நான் குழந்தையாக இருந்த போது கோயிலுக்குப் போகக் கூடாது என்றார் நாத்திகத் தந்தை.

வளர்ந்த பிறகு சுதந்திரமாகப் போனேன்.

ஆனால் வளர்ந்தும் என்னோடு கோயிலுக்கு வர மறுத்தார்களே என் நண்பர்கள் அது ஏன்?

மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு எனது ஆருயிர் கிறித்துவ நண்பர் கிறிஸ்டோபரும்,  இசுலாமிய நண்பர் அக்பரும் வர மறுத்தனர்.

எங்களுக்கென்று ஒரு வழிபாடுகள் இருக்கின்றன. நாங்கள் அதை மீறி வர மாட்டோம் என்றார்கள்.

அவர்களிடம் உங்கள் பூர்வீகம் எது? என்று கேட்டேன்.

இருவருமே யோசித்தார்கள்.

அமெரிக்காவா, அரபு நாடுகளா என்று கேட்டதும் மேலும் கீழுமாகப் பார்த்தனர்.

ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்? நாங்கள் அமெரிக்க, அரேபியக் கடவுள்களை வழிபடுவது தப்பா? என்று கேட்டனர்.

நீங்கள் அமெரிக்க ஆண்டவரை வழிபட்டாலும் சரி, அரபிக் கடல் ஆண்டவரை வழிபட்டாலும் சரி,  பிறப்பால்  இந்தியர்கள்தான், பிறப்பால் நீங்கள்  தமிழர்கள். உங்கள் மூதாதையர்கள் எந்த ஆண்டவரை வழிபட்டார்கள் என்று  உங்களுக்குத் தெரியுமா? அமெரிக்க, அரபி நாட்டவர்கள் நம் இந்தியாவிற்கு வந்து நம்மவர்களை மதம்  மாற்றிய பிறகு அந்த வழிபாடுகளுக்கு மாறியவர்கள்  நீங்கள், சரிதானே?

ஆமாம். அதுவும் நல்ல மதம்தானே?

நான் இல்லை என்று சொல்லவில்லையே. எல்லா மதங்களுமே இறைவனை  அன்பு வடிவாக அடையாளப்படுத்த வந்தவைதானே.

உருவ வழிபாடுகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றனர் அந்த நண்பர்கள்.

நீங்கள் இருவருமே உருவமுடைவர்கள். நான் உங்களை நேசிக்கிறேன். அது போலத்தான் இந்துக்களும் இறைவனை  உருவமாக வழிபடுகிறார்கள். 

நம் கண்களுக்கு நிதர்சனமான உலகைக் காட்டுபவை உலகத்தின் உருவங்கள்! நம்மால் உருவங்களைப் புறந்தள்ள முடியாது. உருவங்கள் இல்லாமல் உருவத்தோடு வாழ முடியாது.

உருவங்களாகத் தெரியும் பழங்களை உண்ணும் போது உள்ளம்தானே அதனை ருசிக்கிறது.

உங்களோடு பழகும் போதுதானே எனது உள்ளம் மகிழ்கிறது!

மனிதனுக்கு மனிதன் உருவமாகத்தானே வந்து உதவுகிறான். உதவும் போது உள்ளங்கள்தானே மலர்கின்றன? உள்ளமும் உடலும் ஒருங்கிணைந்த பிறவி மனிதப் பிறவியல்லவா?.

முன்பின் தெரியாதவன் ஒருவன் விபத்தில் சிக்குண்டு கிடந்தால் அவனை ஓடிப் போய் காப்பாற்றுவது உருவம்தானே. அந்த உருவத்துக்குள்ளிருந்து உதவிடச் செய்வது எது? அதுதானே மனிதாபிமானம். அந்த மனிதாபிமானம்தானே இறைவன்!

மனிதன் உள்ளத்தைத் தள்ளிவிட்டு உடலால் மட்டும் வாழ முடியாது.

உடலைத் தள்ளி விட்டு உள்ளத்தாலும் வாழ முடியாது?

உடலும் உள்ளமும் உயிர்ப் பொருளுக்குத் தேவை. நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல. உடலும் உள்ளமும்.

நண்பர்களே, உங்களை இப்போதுக் குற்றம் சொல்ல முடியாது. உங்கள் முன்னோர்கள்  எப்படி  வளர்த்தார்களோ அப்படித்தான் இருக்கிறீர்கள். உண்மையில் பார்த்தால் நீங்கள் நீங்களாக இல்லை. 'இந்து' என்ற உண்மை ஸ்வரூபம் உங்களுக்குள் அழுந்திப் புதைந்து கிடக்கிறது.

மதம் மாறாதிருந்தால்  இந்துவாக இருந்திருப்பீர்கள்.

மதம் மாறிவிட்டதால் இந்துவாக இல்லாமல் போனீர்கள், அவ்வளவுதான்  வித்தியாசம்.

மனதில் ஒரு வழிபாட்டு முறைகளும், நம்பிக்கையும் வேரூன்றிப் போன பிறகு அதை மாற்றுவது சிரமம். காலம் காலமாக வேரூன்றிப் போனப் பயிற்சிகள்.

அப்படிப்பட்டவர்களை மாற்ற முயல்வதும் சிரமம். அது ஒரு குற்றம்கூட!

ஆனால் தானாக நினைத்தால் மாறலாம். உண்மையைத் தெரிந்துகொள்ள அனுபவம் வேண்டும்.சரியான  அனுபவம் கிடைத்துவிட்டால் அதைக் கொண்டே அவனைச் சிறந்த  இந்துவாக மாற்றிவிடுவான் குருபகவான்.

'தொட்டதை விட்டவனும் கெட்டான். விட்டதைத் தொட்டவனும் கெட்டான்' என்ற பழமொழி உண்டு.

ஒரு மதவழிபாட்டு முறையில் ஆழ்ந்திருப்போரை மதம் மாற்ற முயன்றால் மாறுவோரும் கெடுவர். மாற்றுவோரும் கெடுவர். இரண்டு பேரது மதங்களும் ஆட்டம் கண்டுவிடும்.

நமது நட்பில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் என்னோடு நீங்களும் திருவிழாவுக்குத் தாராளமாக  வரலாம் என்றேன்.  எனது கிறித்துவ நண்பரும் இசுலாமிய நண்பரும் மறுப்பேதும் சொல்லாமல் உடன் வந்தார்கள்.

கோயில் பிரகாரத்தில் உட்கார்ந்து இருந்தபோது நான் சற்று நேரம் கண்களை  மூடித் தியானம் செய்வதைப் பார்த்தார்கள். இது என்ன கோலம்? என்று கேட்டார்கள்.

அப்போது நான் 'சின் முத்திரையில்' கைகளை வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டிருந்தேன்.

அவர்கள் கேட்டதற்கு விளக்கமளிக்காவேண்டியதாயிற்று.

                                 சின் முத்திரை

மனிதனுக்கு மொத்தம் மூன்று வழிகளில் துன்பங்கள் வரும்.

ஒன்று, தன் உடல் அளவில் ஏற்படும் அசௌகரிய நோய்கள்.

இரண்டாவது, மனத்தளவில் ஏற்படும் தீமையான எண்ணங்கள், பயங்கள்.

மூன்றாவதாக நட்புறவு, காதல், குடும்பம், அலுவலகம், வியாபாரம், தொழில் இவற்றில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்கள்.

இந்த மூன்றுக்கும் காரணம் நமது  முன்வினைகளே! அதனால்தான் யோகிகள்  அந்த மூன்றையும் அகற்றுவதற்கு முத்திரைகளை வைத்தார்கள்.

யோகப் பயிற்சியின் போதும், தியானத்தின் போதும் இரண்டு கைகளையும் சின் முத்திரையில் வைக்கச் சொல்கிறார்கள்.

'சின் முத்திரை' என்பது என்னவென்றால் சுண்டு விரல், மோதிர விரல், நடுவிரல் இம்மூன்றையும் நீட்டி, ஆட்காட்டி விரலை மடக்கி கட்டை விரலுக்கு அடியில் வைத்துக் கொள்வது.

இதற்கு என்ன பொருள் என்று கேட்டார் நண்பர் கிறிஸ்டோபர். மனிதனுக்கு இன்னல் தருவன மொத்தம் மூன்று.

அவை,

1)ஆணவம் என்ற அறியாமை = அகம்பாவம், கர்வம், திமிர்  (சுண்டு விரல்)

2) கன்ம வினை என்ற பாவங்கள் = தண்டனைகள் (மோதிர விரல்)

3) மாயை என்ற உலகம் = சம்பவங்களை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் (நடுவிரல்)

(மேற்கண்ட மூன்றின் வழியாகத்தான் மனிதனுக்குத் துன்பங்கள் வந்து சேர்கின்றன.)

4) ஆத்மா= இன்ப துன்பங்களை அனுபவிக்கும்  வஸ்து (ஆட்காட்டி விரல்) மனதால் இறைவனைப் பணிவது.

5) பரமாத்மா = நாடுவோரை நாடி வந்து அருள் பாலிக்கும் இறைவன். (கட்டை விரல்) ஆட்காட்டி விரலைக் கவர்ந்து மூடுவது

ஆட்காட்டி விரலை மடக்காது போனால் கட்டை விரலும் மடங்காது. (செய்து பாருங்கள்)

ஆட்காட்டி விரல் என்ற 'மனதை' இறைவனுக்குச் செலுத்தி உட்பக்கமாக மடக்கினால் அதற்கு மேலே இருக்கும் கட்டை விரலான இறைவன் குனிந்து வந்து ஆட்காட்டி விரலை மூடி நம்மை ஆட்கொள்வான்.

இதுதான் சின்முத்திரைக்கு விளக்கம்.

அதாவது நாம் செய்த பாவங்களுக்காக மனம் வருந்திப் பணிந்து இறைவனிடம் சரணாகதி அடைந்தால் இறைவனும் நமக்காக இறங்கி வந்து  நம்மை மன்னித்து அரவணைத்து அருள் பாலிப்பான்!

தீமைகள் தரும் துன்பங்களை விலக்குவான். நன்மைகள் தரும் இன்பங்களைக் கூட்டுவிப்பான்.

எந்த ஆதரவும் இல்லை. எவரிடமும் நமது மனக்குறைகளைச் சொல்ல முடியவில்லை  என்ற வேதனையில் தனிமைப்பட்டு  மனம் உழல்கிறது என்றால் அவர்களுக்குத் தேவை இந்தச் சின்முத்திரைத் தியானம் என்றேன்.

அப்படி எல்லாம் யாரும் இனி துன்பத்தில் உழல வேண்டாம்.

தனியாக பூஜை அறைக்குள்ளே சென்று விரிப்பிலோ அல்லது நாற்காலியிலோ உட்கார்ந்து கொண்டு, கைகளை “சின் முத்திரையில் வைத்துக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள். எந்த மனக்குறை தோன்றினாலும் அதனைக் கடவுளிடம் முறையிட்டுக்கொண்டே இருங்கள் தெரியும் என்றேன்.

அப்படி உட்கார்ந்தால் குரு வருவாரா? என்று கேட்டார் நண்பர் அக்பர்.

ஆமாம் அக்பர். உங்கள் ஆபத்துக்களை விலக்கும் ஆத்ம குருவாக உங்களுக்குள்ளேத் தோன்றுவார். அல்லது எவராவது ஒரு ஆள் மூலமாக வெளியே இருந்து தேடி வந்து உங்கள் மனக்குறைகளைத் தீர்ப்பார். அதற்கென்றே காத்திருப்பவன்தானே  இறைவன், அது தெரியாதா? என்றேன்.

அப்போதுதான்  கிறிஸ்டோபரும்,  அக்பரும் எதையோ யோசிக்க ஆரம்பித்தார்கள்.

இன்றைக்கு கிறித்துவ, இசுலாமிய நாடுகளில் எல்லாம் யோகத் கலை தீவிரமாகப் பரவி வருகிறது. அவர்கள் எல்லோருமே இந்த தத்துவத்தைச் சொன்னதுமே புரிந்துகொண்டு சின் முத்திரையில்தானே அமர்கிறார்கள் என்றதும் இருவருமே தங்கள்  தொடுபேசியில் எதையோ சொடுக்கித் தேடினார்கள்.

வெளிநாட்டவர்கள்  சின்முத்திரையில் அமர்ந்திருக்கும் கோலங்களைப் பார்த்துவிட்டு எனக்குத் அதைக் காட்டிப் புன்முறுவல் செய்தார்கள்.

பின்னர் நாங்கள் எழுந்து திருவிழாக் கொண்டாட்டங்களைப் பார்த்துவிட்டுத் திரும்பினோம்.

தீயணைப்பு நிலையம்

மறுநாள் நானும் நண்பர் சதாசிவமும் மாலைச் சிற்றுண்டி உண்ண ஊர்க் கோடியிலுள்ள  “சடையுடையார் ஹோட்டலு”க்குப் போய்க்கொண்டிருந்தோம்.

“கடவுளை நம்பினோர் கைவிடப்படார்” என்ற வாசகத்தோடு ஒரு ஆட்டோபோய்க்கொண்டிருந்தது.

அதைச் சுட்டிக் காட்டிய சதாசிவம் இந்த வாசகம் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும்? என்று கேட்டார்.

அதைத்தான் நான் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு வருகிறேன். கடவுள் அருள் என்பது அனுபவித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.மற்றவர்கள் சொன்னால் தெரியாது என்று.

நாங்கள் நடக்கும் போது வழியில் ஒரு தீயணைப்பு நிலையம் இருந்தது.

தீயணைப்பு அலுவலகத்தில் காக்கி நிறச் சீருடைகள் அணிந்த மீட்பு வீரர்கள் சுறுசுறுப்போடு இயங்கிக் கொண்டிருந்தார்கள். தீயணைப்பு லாரியின் எஞ்சினும் கர..கர..கரவென்று  ஓடிக்கொண்டிருந்தது. டிரைவர் லாரியைப் பயங்கரமான சத்தம் வரும்படி “ரேஸ்” பண்ணிக்கொண்டிருந்தார்.

'ஐயோ தீவண்டி கிளம்பிடுச்சு, எங்கேயோ பத்திக்கிச்சு,... ஐயோ யாருக்கு என்ன ஆச்சோ தெரியலையே' என்று பதறினார் நண்பர் சதீஷ்.

நீங்களே போய் அந்த செக்யூரிட்டியிடம் விவரம் கேளுங்களேன் என்று சதாசிவத்தை  அனுப்பினேன்.

அவர் ஓடிப்போய், செக்யூரிட்டியிடம் விவரம்  கேட்டார்.

செக்யூரிட்டியோ சிரித்தபடி,  'இல்லைங்க தம்பிகளா, நாங்க தினமும் வண்டிய தயாராக்கி எஞ்சினை ஓட வச்சுப் பார்க்கறது கடமை. எப்போ எங்க பத்திக்குமோ என்ன நடக்குமோன்னு யாருக்குத் தெரியும்? எப்பத் தகவல் வந்தாலும் பறந்தாகணுமே. அதனாலதான்  தினமும் சும்மாவாவது ரேஸ் பண்ணி வைக்கிறோம். பழுதும் பார்த்து வைப்போம். டயர்களை எல்லாம்  தினந்தோறும் காத்து  இருக்கான்ணு செக் பண்ணுவோம். பிரேக்குகளைச் சரி பார்ப்போம்.  தினந்தோறும்  அப்படிச் சரி பார்த்து வைக்கிறது எங்க கடமை தம்பிகளா. எந்த நேரமும் ஆபத்தான தகவல் வரும் இல்லையா? அதற்காகத்தான் இந்த ஏற்பாடெல்லாம்' என்றார்.

சதாசிவம் நிம்மதியோடு திரும்பி வந்தார்.

இது மட்டுமல்ல, ஆம்புலன்ஸ் வண்டிகளையும் இதுபோலத்தான் தினமும் தயார் படுத்தி வைப்பார்கள். நாட்டின் எல்லையிலே எந்த நேரமும் சீருடையுடன் இராணுவ வீரர்கள் காவல் நிற்பதில்லையா? போர் வரும்போது மட்டும் நின்றால் போதும் என்று நிற்க முடியுமா? நீச்சல் குளத்தின் அருகே நீச்சல் வீரர்கள் காவல் நிற்பதில்லையா?

காவல்துறை, மின்சாரத்துறை, மீட்புப் படை போன்ற முக்கியமானத் துறைகள் அனைத்துமே தினந்தோறும்  ஆயத்தமாக இருப்பது, ஆபத்துக்களில் மீட்பதற்கு அரசு  தயாராக உள்ளதைக் காட்டுகிறது.

மனிதன் ஏற்படுத்திய அரசே, மனிதனுக்கு இப்படி உதவக் காத்திருக்கும் போது மனிதனைப் படைத்த இறைவன் உதவ மாட்டானா? அதைத்தான் கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்று அந்த ஆட்டோக்காரர் எழுதி வைத்திருக்கிறார்.

அவர் அனுபவமில்லாமல் இதை எழுதியிருக்க மாட்டார்!

(ஞானம் பெருகும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com