21. மனதைப் போன்ற ஒரு எதிரி இல்லை, மறந்துவிடாதீர்கள்

நல்ல மனிதனை இறைவனே சுற்றிச் சுற்றி வந்துப் பாதுகாக்கிறான் என்பது அனுபவ பூர்வமானக் கண்டுபிடிப்பு.
21. மனதைப் போன்ற ஒரு எதிரி இல்லை, மறந்துவிடாதீர்கள்

நல்ல மனிதனை இறைவனே சுற்றிச் சுற்றி வந்துப் பாதுகாக்கிறான் என்பது அனுபவ பூர்வமானக் கண்டுபிடிப்பு.

ஆனால் இறைவனை மறந்துவிட்டு எவற்றுக்கெல்லாமோ ஆசைப்பட்டு அலைந்து வீணாகிறான் மனிதன் என்று சென்ற வாரத்தில் பார்த்தோம்.

மிஸ்டர் கந்தசாமி பிரபலமான  தனியார் கம்பெனியில் மேலாளராப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

“வாழ்க்கை நிம்மதியாகப் போய்க்கொண்டிருந்தது”என்று இப்போது சொல்கிறார், அப்போது சொல்லவில்லை!

காரணம் அருமை தெரியவில்லை.

எத்தனை நாளைக்குத்தான் அடிமை வேலைக்குப் போவது, கை நிறையச் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது.

பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் எதையும் செய்வார்கள். எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிப்பார்கள் என்பது உலகறிந்த உண்மை.

அதனால் இவருக்கு என்ன?

மனிதர்களின் பலவீனம் பிள்ளைப் பாசம்தான் என்பதைக் கண்டார் மிஸ்டர் கந்தசாமி கண்டார்.  அதையே மூலதனமாக்கினார்.

நோக்கமே சரியில்லை!

பாசத்தை வியாபாரமாக்கக் கூடாது.

பிறந்த குழந்தைகளுக்கான  ஆடைகளைத் தைத்தார்.

அவை போனியாகவில்லை.

அதனால் கைக் குழந்தைகளுக்கான குட்டிப் படுக்கைகளைத் தயாரித்தார். அதுவும் 'போனியாகவில்லை.'

குழந்தைகளுக்கான 'நடைவண்டி'களைத் தயாரித்தார்.

அதுவும் போனியாகவில்லை.

பிறகு குழந்தைகளுக்கான பொம்மைகளைத் தயாரித்துப் பார்த்தார்.

ஊகும், எல்லாம் போயிற்று!

கடைசியாக ப்ளே ஸ்கூல் ஒன்றை ஆரம்பித்த போது முதுமையும் ஆரம்பித்து விட்டது. 

ஓய்ந்து உட்கார்ந்துவிட்டார் மிஸ்டர் கந்தசாமி.

ஆடுகளுக்கும் பிள்ளைகளுக்கும் தேவை 'நல்லதொரு மேய்ப்பன்'

ஆயாக்கள் கிடைக்காததால் மனைவியையே 'மேய்ப்பனாக்கப் பார்த்தார்.

போய்க்கினே இருப்பேன் ஆயா வூட்டுக்கு, இத்தையெல்லாம் நம்மக்கிட்ட வெச்சிக்காதே வராது' என்று கிளம்பி நின்றாள்.

அப்பாதுதான் அவருக்கு வேலைக்குப் போன பழைய நாட்கள்  நினைவுக்கு வந்தன.

தூரத்துப் பச்சையாகத் தோன்றி மனதை மயக்கியது.

வேலை முடிந்து களைப்போடு வீடு திரும்புவது ஒரு சுகம்.

வேலையாட்கள் முதல் போடுவதில்லை.

யாரோ எப்படியோ சம்பளம் தருகிறார்கள். அதனால் வேலைக் களைப்பிலும் ஒரு சுகம் இருக்கிறது.

சம்பளம்  கொடுப்பவன் வேலையே பார்ப்பதில்லை. மூளையைக் கசச்சிக்கொண்டு ஏ.சியிலேயே உட்கார்ந்து கிடக்கிறான். ஆனாலும்  அவன் மனம் எல்லாம் ஒரே புழுக்கம்! உடம்பெல்லாம் புண்ணாக வலிக்கும். என்ன மாத்திரை என்ன மருந்து சாப்பிட்டாலும், எத்தனை நாள் மருத்துவமனையில் ஓய்வெடுத்தாலும்  குணமாக மறுக்கிறது. அத்தனை மன உளைச்சல்!

மனபாரத்தை எங்கும் இறக்கி வைக்கமுடியாது, அதனால் மனதை மதுவுக்குள் இறக்கி வைத்து, மயக்கத்திலேயே மறக்க முயல்கிறான். அப்போதுதான் பாரங்கள் பூதாகரமாக விஸ்வரூபம் எடுக்கின்றன! அதனால் மதுவை உடலுக்குள்ளேயே இறக்கிவைத்து ஒருநாள் மருத்துவமனைக்குள் ஒட்டு மொத்தமாகச் தஞ்சம் புகுந்து விடுகிறான்!

மாலை களைப்போடு வீடு திரும்பும் போது மனைவி சுடச்சுடக் காபி தருகிறாள். குடித்துவிட்டு கால்களை நீட்டிக்கொண்டு கையில் ரிமோட்டை வைத்தபடி சின்னப் பிள்ளை போல சேனல்களை  மாற்றி வேடிக்கை காலங்கள் மலையேறிப் போய்விட்டதை எண்ணிக் கசிந்து அழுதார் மிஸ்டர் கந்தசாமி.

நேற்றுத்தான் சம்பளம் வாங்கிய நினைவு. அதற்குள்  அடுத்த முப்பதாம் தேதி வந்து விட்டது. கத்தை கத்தையாக வாங்கியச் சம்பளப் பணம் எல்லாம் காலி.

பிள்ளைகளும்  மனைவியும் பேசாத பேச்சில்லை.

இதயக் குழாய் வழியாக ஒரு மெல்லிய “பிளாக்கேஜ்” வேறு மெல்ல எட்டிப் பார்க்கிறது.

அதைப் பார்க்காமலேயே பயந்து விட்டார் மிஸ்டர் கந்தசாமி. பிளாக்கேஜ் பெறுத்தால் ரத்தக்குழாய் ப்ளாஸ்ட் ஆகிவிடும் ஜாக்கிரதை என்று எச்சரித்தார் மருத்துவர்.

களைத்துப் போய் உட்கார்ந்து விட்டக் குரங்கைப் போல சோகத்தில் கைகளைத் தலையில் வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார் மிஸ்டர் கந்தசாமி!

குரங்குக்கு உடல் களைப்பு. கந்தசாமிக்கு உள்ளக் களைப்பு.

மனசு இருக்கிறதே, அது எதை எதையோ பெரிதாக நினைக்கும். கற்பனைகளை வளர்த்துக் கொண்டு ஆசைப்படும். முயற்சிக்கும். தோல்விகளில் துவண்டு போகும்.

மிகச் சிலரே தங்கள் கொள்கையில் இறுதி வரை உறுதியாக இருந்து போராடி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஒரே கொள்கை, அது நியாயமான கொள்கை அதுவும் பணத்தாசை இல்லாத கொள்கை இப்படிச் சில பல வரம்புகள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் மனிதன் ஆராய வேண்டும்.

அவற்றைத் திறனாய்வு செய்யத்தான் நமக்கு அறிவு இருக்கிறது.

அறிவுக்கு வேலை கொடுக்காதவர்களே ஆயிரமாயிரம் கனவுகளை வைத்துக்கொண்டு எதையுமே அடையாமல் பூமிக்குப் பாõரமாகப் போய்ச் சேர்கிறார்கள்.

மனதைப் போன்ற ஒரு எதிரி இல்லை, மறந்துவிடாதீர்கள்.

*

எனது உடல், எனது மனசு அது எப்படி  எனக்கு எதிரியாகும்? என்று கேட்டார் எனதருமை நண்பர் தினேஷ்.

உங்களுக்குப் பிடிக்காத விஷயங்கள் எவை எவை என்று சொல்ல முடியுமா என்று கேட்டேன்.

இப்படிக் கேட்டால் எப்படி? எது எது என்று குறிப்பிட்டுக் கேட்டால்தானே  சொல்ல முடியும் என்றார் தினேஷ்.

நான் உங்களுக்குப் பிடிக்காத விஷயங்களைப் பற்றிக் கேட்டுக் கொண்டே வருவேன். நீங்கள் டக்டக்கென்று அதற்குப் பதில் சொல்லிக் கொண்டே வர வேண்டும் சரியா? என்றேன்.

சரி என்று தலையாட்டினார் தினேஷ்.

ஆனால் ஒன்று. மனச்சாட்சிக்கு விரோதமாகச் சொல்லக் கூடாது. உண்மையிலேயே “பிடிக்காதவைகளாக அவை இருக்க வேண்டும. நான் தப்பாக நினைப்பேன் என்று போலியாகச் சொல்லக்கூடாது சரியா? என்று கேட்டேன்.

சரி கேளுங்கள் என்றார்.

உங்கள் குடும்பத்தில் உங்களுக்குப் பிடிக்காதவர்கள் யாராவது உண்டா?

உண்டே. என் தாத்தா பாட்டிதான் எனக்கு முதல் எதிரி. சும்மா சும்மாக் கூப்பிட்டு எனக்குப் புத்திமதி சொல்லிக்கிட்டே இருப்பாங்க.

பெற்றோரில் உங்களுக்குப் பிடிக்காதவர் யார்.?

அப்பாதான். எந்த நேரமும் எதாவது குறை சொல்லிக் கொண்டே இருப்பார்.

உங்களுக்குப் பிடிக்காத சகோதரர், சகோதரி?

அண்ணனைப் பிடிக்காது. என் “ஃபிரண்ட்ஸ்களைப் பற்றியே என்னிடம் எச்சரித்துக் கொண்டிருப்பார். என் அக்காவையும் பிடிக்காது.  நான் வீட்டுக்கு வந்த உடனேயே,  இன்னேரம் வரை எவனோட சுத்திக்கிட்டு வர்றேடான்னு கேட்பா. அது எனக்கு இர்ர்ரிடேஷனா”இருக்கும்.

சரி, பிடிக்காத சொந்தக்காரங்க?

யாரையுமே பிடிக்காது. எல்லாரும் எப்படி எப்படியோ சம்பாதிச்சு எப்படி எப்படியோ வசதியா இருக்காங்க. எனக்கு அதல்லாம் பிடிக்காது.

உங்களுக்குப் பிடிக்காத அண்டை வீட்டார்?

மாடியில் குடியிருப்பவர். தினமும் காரில் காலையிலும் மாலையிலும் கோயிலுக்குப் போய் கொண்டே இருப்பார், வேறு வேலையே இருக்காது போலும்.

பிடிக்காத பாடம்?

கணக்கு. புரியாது.

பிடிக்காத ஆசிரியர்?

சயின்ஸ் மாஸ்டர் கோதண்டராமன்.  அடித்துக் கொண்டே இருப்பார்.

பிடிக்காத காய்?

பாகற்காய், கோவங்காய் மற்றும் சுண்டைக்காய் எல்லாமே ஒரே கசப்பு.

பிடிக்காத ஸ்நாக்ஸ்?

வடை, பஜ்ஜி,போண்டாவைக் கண்டாலே பிடிக்காது. பர்கர், நூடுல்ஸ், பீசாதான்  ஒரிஜினல் ஸ்நாக்ஸ்.

பிடிக்காத டிபன்?

இட்லி,தோசை பொங்கல் பூரி பிடிக்காது.

பிடிக்காத லஞ்ச்?

சாதம், சாம்பார் ரசம், கூட்டுப் பொறியல் அயிட்டங்கள் எதுவுமே பிடிக்காது. அசைவம்தான் எனக்கு உயிர். சைனீஸ், தந்தூரி அயிட்டங்கள்தான் பிடிக்கும்.

பிடிக்காத சம்பவம்?

இறப்பு. நான் எந்த டெத் வீடுகளுக்கும் போவதில்லை.

பிடிக்காத உணர்வு?

பொறுமை. ஏமாளியாக்கி விடுவார்கள்.

பிடிக்காதது காதலா காமமா?

காதல். அதற்குக் காத்திருக்க வேண்டும். காமம் என்றால் உடனே ஓ.கே. டன் ஓ.கே.!

பிடிக்காத நிறம்?

வெள்ளை. அடிக்கடி அழுக்காகும்.

பிடிக்காத திரைப்படம்?

பழைய படங்கள் எதுவுமே பிடிக்காது. நேர்மையான கதைகளைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். கதையே இருக்கக் கூடாது. அதைக் கவனிக்கப் பொறுமையும் கிடையாது. ஒரே ஜாலியாக இருக்கணும். ஒரே வயலன்ஸா, திரில்லா இருக்கணும். இருந்தால்தான் படம் “ஜோரா இருக்கும்.

பிடிக்காத ஹீரோ?

எம்.ஜி.ஆர். புத்திமதி சொல்லிக் கொண்டே இருப்பார்.

பிடிக்காத ஹீரோயின்?

பழைய நடிகைகள் எவரையுமே பிடிக்காது. அரைகுறை ஆடையோடு கிளாமராக வரும் இன்றைய நடிகைகள்தான் நடிகைகள்.

பிடிக்காத காமடியன்?

என்.எஸ்.கிருஷ்ணனிலிருந்து சந்திரபாபு, தங்கவேலு வரை எவரையுமே பிடிக்காது. அவர்கள் சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைப்பார்கள். புது காமடியன்கள் குறுக்கு வழியில் டபுள் மீனிங்கில் பேசியே சிரிக்க வைத்து விடுவார்கள். அதுதான் பிடிக்கும்.

பிடிக்காத இசைக் கருவி?

வீணை. “டொய்ங் டொய்ங்... என்று படுபோராக இருக்கும்.

பிடிக்காத பாடல்கள்?

பழைய பாடல்கள் எதுவுமே பிடிக்காது. தத்துவங்களைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். கேட்கப் பொறுமை இருக்காது. புதுப்பாடல்களில் உணர்ச்சி வசப்பட்டுக் கத்துவார்கள். இடிபோல இசை போட்டு நம்மை உற்சாகப்படுத்திவிடுவார்கள். அதிலும் குத்துப் பாட்டுக்கு ஈடு இணையாக உலகத்தில் எந்தப் பாட்டும் நிற்க முடியாது!

சரி, பிடிக்காத நூல்?

எதுவுமே படிக்கப் பிடிக்காது. வேஸ்ட் ஆஃப் டைம்.

பிடிக்காத ஊர்?

பட்டிக்காடு. பொழுது போக்கே இருக்காது. வயலும் காத்தும்தான் கிடக்கும்.

பிடிக்காத கோயிலோ, சாமியோ உண்டா?

எந்தச் சாமியும் எந்தக் கோயிலும் பிடிக்காது. எல்லாமே நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது.

சரி, என்னையாவது பிடிக்குமா, பிடிக்காதா?

உங்களைப்  பிடிக்காமல் போகுமா?  எனது ஆருயிர் நண்பர் அல்லவா நீங்கள்? என்றார் தினேஷ்.

அவசரப்படாதீர்கள், கடைசியாக ஒன்று கேட்கப் போகிறேன்.  அதைக் கேட்ட பிறகு என்னையும் நீங்கள் பிடிக்காது என்று சொல்லப் போகிறீர்கள் என்றேன்.

சரி, அதையும்தான் கேட்டு விடுங்களேன்! என்றார்.

வாழ்க்கையில் நீங்கள்  மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டுமா தினேஷ்?

யாருக்குத்தான் வெற்றியடைய ஆசை இருக்காது. நான் மிகப் பெரிய வெற்றியடைவேன். 

சத்தியமாக “வெற்றியடைய மாட்டீர்கள் என்றதும் பயங்கரமான அதிர்ச்சியடைந்தார் தினேஷ்.

கோபத்துடன் எரிப்பது போல என்னைப் பார்த்தார்.

இதற்குத்தான் இத்தனை கேள்விகள் கேட்டீர்களா? ச்சே, நீங்களாச்சு, உங்கள் நட்பாச்சு. போதும் போதும். இன்றோடு உங்கள் சங்காத்தமே வேண்டாம் என்று சொல்லிவிட்டு என்னை விட்டு கோபத்தோடு அகன்றார் தினேஷ்.

அவரது கையைப் பிடித்து இழுத்தேன்.

ஒரே ஒரு விஷயத்தை மட்டும் கேட்டுவிட்டுப் போகலாம் நண்பரே, என்றதும் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு நின்றார்.

தாத்தா பாட்டி, அப்பா அம்மா, அக்கா அண்ணன் புத்திமதி சொல்வது நல்லதுக்குத்தானே. கசப்பான உணவுகளிலும் அசைவத்திலும்தானே மருத்துவ குணங்கள் இருக்கின்றன. பழைய படங்கள்தானே  நமக்கு வழிகாட்டியாக இருந்தன.

புதிய படங்களும் தொடுதிரை ஃபோன்களும் மனதைக் கெடுக்கின்றன அல்லவா?

நீங்கள் பிடிக்காது என்று சொன்ன யாவுமே உங்களது வெற்றிக்குத் தடையானவை. பிடிக்காது என்று சொன்னவற்றை எல்லாம் தனியாக அமர்ந்து ஒவ்வொன்றாக அலசி ஆராய்ந்து பாருங்கள் தினேஷ். உங்களுக்குப் பிடிக்காத விஷங்கள்தான் உங்களை  வெற்றியாளராக மாற்றக் கூடிய வழிமுறைகள்.

நீங்கள் அந்த வழிமுறைகளைத் தகர்த்துவிட்டு, உங்களைப் பாழ்படுத்தக் கூடிய   விஷயங்களை எல்லாம் பிடித்த விஷங்கள் என்று உங்களோடு வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்! அது எவ்வளவு தப்பானது தெரியுமா? உங்களுக்கு எதிரானவற்றை எல்லாம் தூக்கி எரியுங்கள் தினேஷ்!!

அப்படியா ? என்று கேட்டபடி அப்பாவியாக என் முகத்தைப் பார்த்தார் தினேஷ்

உங்களது அறியாமைதான் உங்களை  அடிமுட்டாளாக்கி  வைத்திருக்கிறது.  போனது போகட்டும், இனியாவது உங்கள் அறியாமைகளை விலக்கி உங்கள் உடலுக்கும் மனதுக்கும்  புத்துயிர் உயிரூட்டுங்கள். இனி நல்லவற்றையே நாடுங்கள். மனதை மயக்கும் நாகரீக மோகத்தை விட்டுடொழியுங்கள் என்றேன்.

நண்பர் யோசித்தார்.

(ஞானம் பெருகும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com