17.இறைக்குள் மறைந்தோர்

குரு பார்த்துவிட்டால்  உயிர்த்துளிக் கடைசி வரை உள்ளம் இனித்துக்கொண்டே இருக்கும்.
   17.இறைக்குள் மறைந்தோர்

குரு பார்த்துவிட்டால்  உயிர்த்துளிக் கடைசி வரை உள்ளம் இனித்துக் கொண்டே இருக்கும். மங்காது மறையாது, கசக்காது, சலிக்காது, திகட்டாது என்று  சென்ற வாரத்தில் சிந்தித்தோம். 

அப்படிப்பட்ட குருவின் பார்வை நமக்கெல்லாம் கிடைக்குமா என்றார் விழுப்புரம் காஞ்சியனூர் கிராமத்து நண்பர் சதீஷ். குருவின் தயவில்லாமல் இறைவனின் திருவடிகளை அடைய முடியாது என்கிறது வேதங்கள். சைவ சித்தாந்தம் குருவின்றி கடவுளின் அருள் கிடைக்காது என்று உறுதிபடச் சொல்லிவிட்டது சதீஷ். அனைத்து பக்தி இலக்கியங்களும் தேடிக்கொண்டே இருந்தால் குருவே தேடி வருவார் என்கின்றன. 

தேடுவோரைத் தேடுபவன் குரு. 
தேடுவோரைச் சேருவோனும் குருவே! 

நாம் யாரைத் தேடிப் போகிறோமோ அவரே நேரில் வரும்போது நமக்கு ஆச்சரியமாக இருக்கும். “கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல வந்துவிட்டீர்களே!” என்போம். 

அதுபோல  உள்ளத்தால் குருவைத் தேடித் தினந்தோறும் தியானித்திருந்தால் அவர் நம்மைத் தேடி வருவார்.  அப்படித் தேடும் போது நமதுப் பக்குவ நிலையை முன்னிட்டுத் தாமதமாகவேக் காட்சியளிப்பார்! 

சித்தர்களும் ஞானிகளும் தன்னந்தனியே காடுகளிலும் மலைகளிலும் தவம் இருந்து உள்ளத்துக்குள்ளேயே மெய்க் குருபிரானைக் கண்டர்கள். 

அக உலகில் கண்ட குரு ஆத்மார்த்த குரு.
புற உலகில் காணும் குருக்கள் அவதார குருக்கள். 

ஏசு கிறித்து, முகமது நபி, ஆதி சங்கரர், கௌதம புத்தர், மஹா வீரர், குருநானக், யோகிராம் சுரத்குமார், காஞ்சிப் பெரியவர், கோடி சாமிகள், ஷீரடி பாபா, புட்டபர்த்தி சத்திய சாயி பாபா போன்ற  மனித குருமார்கள்  சிஷ்யர்களை வைத்துக்கொண்டு ஞானத்தை வழங்கியவர்கள்.

திருவண்ணாமலையில் ரமணர் தனக்குத்தானே மெய்க் குருபிரானைத் தேடிக் கண்டு கொண்டவர். பக்குவமற்றவர்கள் ரமணரையே குருவாகக் கொண்டு அவரது ஆசிரமத்தில் சென்று  இன்றைக்கும் தியானிக்கிறார்கள்.

எழுத்தாளர் பாலகுமாரனுக்கு யோகிராம் சூரத்குமார் என்ற உருவக் குருவாக வந்தார் இறைவன். 

நீங்கள் குருவை எப்படி எதிர்பார்க்கிறீர்களோ அப்படித்தான் அவரும் உங்களிடம் வருவார்.

மண விழாவிற்குப் புறப்படும் போது மனைவி எந்தப் புடவையை உடுத்திக் கொள்ளட்டும் என்று கணவரிடம் காட்டிக் கேட்பாள். அவன் ஓரக் கண்ணால்  குறிப்பிட்ட புடவையை உற்றுப் பார்த்தால் போதும். அதையே கட்டிக் கொண்டு வந்து நிற்பாள்.

கணவன் எந்தச் சட்டை அணிவது என்று கேட்க வேண்டியதில்லை. அவளே தேர்வு செய்து கொண்டு வந்து தலையில் போடுவாள். அவன் வாங்கிப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

குருவானவரும் எந்த மாதிரி அமைந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறோமோ  அந்த மாதிரியே நமக்கு வந்து அமைவார்.

சராசரி மனிதர்களாக இருந்தால் அவர்களைப் போலவே  சராசரி மனு தேகம் கொண்டவர்களாக வருவார்கள்.

சோதனைகள் வயப்பட்டு திணறிப் போனவர்கள் என்றால் அவர்களுக்குள்ளேயே  ஞான குருவாக வருவார்கள்.

ஆக, குருவானர் இன்னொரு மனிதனாகவும் வருவார். தனக்குள்ளேயே தோன்றும் நினைவுக் குருவாகவும் வருவார்.  

வயதில் மூத்தவர்கள் என்றில்லை. இளையவர்களாக கூடக் குருக்கள் தோன்றுவார்கள்.

நல்ல விஷயங்களைத் தன்னை விட இளையவர்கள் சொன்னால் கூடக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

முன்னேறுவதற்குத் தடங்களை ஏற்படுத்தும் எதிரியும் கூட ஒருவகையில் குருவே.

உடலில் வரப் போகும் நோய்களுக்கு வரும் முன்னதாகவே தடைக்கல் போட வழிகாட்டும் யோகாசிரியன் ஒரு குரு! 

குருமார்கள்தான் நமக்கு அபயம். நமக்கு வழிகாட்டிகள். அவர்களைக் கொடுத்தவன் இறைவன். அவர்களுக்காக நாம் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும் என்றேன்.

அண்டமும் பிண்டமும்

இப்படிச் சொன்னவுடன்  வியப்போது ஆகாயத்தை அன்னார்ந்துப் பார்த்தார் சதீஷ். 

என்ன ஆகாயத்தைப் பார்க்கிறீர்கள்?

கடவுள் என்றதும் ஆகாயம்தானே நினைவுக்கு வருகிறது என்றார் சதீஷ். ஆகாயம் என்பது அண்டம். அந்த அண்டத்தின் பரிசுதான் இந்தப் பூகோளம்.

இந்தப் பூகோளத்தின் பரிசுதான் இந்தப் பிண்டமாகிய உடம்பு. 

ஆகாயம், வாயு, மண், நீர், நெருப்பு இவை ஐந்தும் சேர்ந்தது அண்டம்.
மனம், சுவாசம், உடம்பு, இரத்தம், உடல் வெப்பம் என்ற ஐந்தும் சேர்ந்தது இந்தப் பிண்டம்.

அண்டத்தில் பிண்டம் உண்டு; பிண்டத்தில் அண்டமும் உண்டு. பிண்டம் என்ற கூட்டுக்குள் இருக்கும் காற்று பிரிந்துவிட்டால் இந்த உடம்பு ஒரு பிணம். 

பிரிந்த காற்று அண்டத்தில் கலந்துவிடுகிறது.

இறந்து போனவர்கள் அனைவரும் இந்த அண்டத்திற்குள்தான் காற்றோடு காற்றாகக் கலந்திருக்கிறார்கள் சதீஷ்.

இறந்தவர்கள் இறைவனோடு கலந்தவர்கள். அதனால்தான்  இறைவனை வணங்குவோர் இறந்தோரையும் வணங்குகிறார்கள். இறைவனை வணங்கும் போதும் இறந்தோரை வணங்கும் போதும் ஆகாயத்தைப் பார்த்துத்தானே வணங்குகிறோம்!

அவர்கள் தாம் வாழும் போது வாழாத வாழ்க்கையை,  தம்மை வணங்குவோருக்கு, வாழ்வாங்கு வாழும் வரமாகத் தருவார்கள்!

இறைவனுக்கு உரிய அத்தனை தகுதிகளும் இறந்தவர்களுக்கும் உண்டு சதீஷ், அதை மறந்துவிடாதீர்கள். அவர்கள் வாழ்க்கை இறந்த பின்னும் தொடர்கிறது. அதனால்தான்  அவர்களை  நாம் மறவாமல் வழிபட வேண்டும் என்றார்கள் முன்னோர். 

வினைகளை முன்னிட்டு நம்மைவிட்டு முன்கூட்டியே விடை பெற்றுக்கொண்டோர்  இறந்தோர். அவர்கள் தாங்கள் வாழும் காலத்தில் தன் மீது அன்பு காட்டியோருக்கு  அன்பு காட்டி வழி நடத்துகிறார்கள்.

இப்படிச் சொன்னதும் சதீஷ் திடீரென்று கண்ணீர்  மல்க  அழுதார்.

ஏன் அழுகிறீர்கள் சதீஷ்?

கைகால்கள் செயல்படாத எனது அருமை நண்பர் புஷ்பராஜை, என்னால் இயன்ற அளவு தூக்கிச் சுமந்தேன். அவரது உடலைச் சுமந்தாலும் அது ஒரு உயிர்த்தொண்டு. உலகில் எங்கும் எதிலும் கிடைக்காத இன்பம்  அது. தொண்டின் அருமையைத் தொண்டு செய்து பார்த்தால்தான் தெரியும்.

உலகில் எதுவும் தராத உள நிறைவை அவர் மூலம் பெற்று வந்தேன். 

என் கைகள் வலிக்கும் என்று கருதியதாலோ என்னவோ, போதும்  சதீஷ் நீ இனி ஓய்வெடு என்று கூறாமல் கூறி அண்மையில் என்னைக் கைவிட்டு விட்டுக் கண் மூடிவிட்டார் புஷ்பராஜ் என்று சொல்லிவிட்டுக் கண்ணீர் வடித்தார் சதீஷ்.

தாளமுடியாத சோகத்தில் இருக்கும் போது வார்த்தைகள் ஆற்றுப்படுத்தாது. அதனால் எனது கையால் அவரது முதுகைச் செல்லமாகத் தடவிக் கொடுத்தேன்.

என் பிரிவுத் துன்பம் தீருமா? யாரால் தீர்க்க முடியும் சொல்லுங்கள்.. என்று சின்னப்பிள்ளை போலக் கேட்டார்.

இது போன்ற தருணங்களில்தான் நமக்குக் குருவானர் மிகவும் தேவைப்படுவார்.

நானும் எவ்வளவோ ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லிப் பார்த்தேன்.

எதுவுமே அவரை ஆற்றுப்படுத்தவில்லை.

புற உலகத்து இழப்புகளால் வரும் சோகம் வேறு. அக உலகத்து இழப்புக்களால் வரும் சோகம் வேறு.

புற உலக இழப்புகளுக்குப்புற உலகிலேயே தீர்வுகள் உண்டு. இடமாற்றம், சூழ்நிலை மாற்றம் , பணி மாற்றம் பொழுதுபோக்கு என்று மனதை எதிலேனும் செலுத்தி ஆறுதல் அடைய முடியும். 

ஆனால் கூடவே இருந்துவிட்டுத் திடீரென்னு பிரிந்துபோனவர்கள் சோகம் எல்லாம் தீராது. 

அது இருக்குமட்டும் இருந்துவிட்டுத் தானாகத்தான்  தீரும்.

காரணம் அது அந்த சோகத்தின் மூலம் அந்த மனிதனுக்கு ஒரு ஞானத்தைக் கொடுத்துவிட்டுப்போகும்.  

இது போன்ற ஈடு செய்ய முடியாத இழப்புக்களுக்கு  புறஉலகக் குருவைத் தேடுவதை விட அக உலகத்துக் குருவைத்தான் நாடியாக வேண்டும்.  

தனிமைத்  துயரத்தை மற்றவர்கள் உணர முடியாது. அதை பாதிக்கப்பட்டோரின் அகம்தான் உணர முடியும். அதுவே அவர்களுக்கு ஒரு விடுதலை காட்டும். சோகத்திலிருந்து ஒரு விமோசனத்தைக் காட்டும். அதன்மூலம் ஒரு பாடத்தையும் புகட்டும்.

பிரார்த்தனை

அப்போது பல வருடங்களுக்கு முன்னால் நான் பார்த்த ஒரு ஆங்கிலப் படம் நினைவுக்கு வந்தது. 

அந்தக் கதையைச் சொன்னால் எல்லோருக்கும் ஆறுதலாக இருக்கும் போலத் தோன்றுகிறது.

அந்தப் படத்தில் ஒரு சிறு கப்பல் கடலில் போய்க்கொண்டிருக்கிறது. அதில் ஒரு பெயிண்டிங் பண்ணும் ஓவியனும் போய்க்கொண்டிருக்கிறான். திடீரென்று கடும் சூறாவளிக் காற்றினால் கப்பல் கவிழ்ந்து பயணிகள் அனைவரும் மூழ்கிப் போகிறார்கள். 

ஓவியன் மட்டும் மயக்கத்திலிருந்து கண் விழிக்கிறான். அப்போது தான் ஒரு சிறு தீவின் கரையில் ஒதுங்கிக் கிடப்பதை உணர்கிறான். உடன் வந்தோர் ஒருவரும் காணப்படவில்லை.  மயான அமைதியோடு காணப்பட்ட தீவின் காடுகளுக்கிடையே யாராவது இருக்கிறார்களா என்று தேடிக்கொண்டே மெல்ல நடக்கிறான்.  

யாருமே இல்லை. மரங்களில் பழங்கள் பழுத்துக் கிடக்கின்றன. பறித்து உண்டுப் பசியாறுகிறான். சுனையில் கிடக்கும் நீரைப் பருகித் தாகம் தணிகிறான். 

எங்குமே எவருமே இல்லாத நிசப்தம்! 

கடல் அலைகளின் இரைச்சல், பலத்த காற்று, பறவைகளின் ஓசைகள். 
இவை மட்டுமே அந்தத் தீவுக்குச் சொந்தம். அந்த ஓசைகள் அவனுக்குப் பீதியை ஏற்படுத்துகின்றன. யாராவது ஒரு துணை கிடைக்க மாட்டார்களா என்று பரிதவிக்கிறான். 

மாலை மயங்கும் வேளை. அவனது மனம் மேலும் திகிலடைகிறது.

அத்தீவில் வெள்ளைப் பூசணிக்காய் போன்ற பெரிய பெரிய காய்கள் கொடிகளில் காய்த்துக் கிடக்கின்றன. எல்லாமே அவனுக்கு மனிதத் தலைகள் போலத் தோன்றுகின்றன. அவற்றில் ஒன்றைப் போய்ப் பறிக்கிறான். 

தனது தோள் பைக்குள் இருந்த பெயிண்ட்டுகளை எடுக்கிறான். தூரிகையின் துணை கொண்டு அழகான ஒரு மனித முகத்தை அந்தப் பூசணிக்காய் மேல் வரைகிறான். அதை ஒரு மரத்தடியில் கொண்டுபோய் வைக்கிறான். தினமும் அந்த ஓவியத் தலையோடு பேசிப் பேசி அதற்கு உயிர் ஊட்டுகிறான்!

அதுவே அத்தீவின் ஒரே துணை அவனுக்கு.

நாட்கள் நகர்கின்றன

இரவும் பகலும் அந்த பூசணிக்õகய் ஓவியத்தோடு பேசிப்பேசி ஆறுதல் அடைகிறான்.  அதுவே அவனுக்கு உற்றத் துணையாகிவிடுகிறது. 

பின்னர் அதுவே அவனுக்குத் தாயாக, தந்தையாக தோன்றுகிறது. நாளடைவில் அதுவே அவனுக்கு குருவாகவும் தோன்றுகிறது. பின்னர் அதையே தெய்வமாகக் கருதிக்கொண்டு அதனிடம் சரணாகதி அடைகிறான்.  அதனிடம் தன் மனக்குறைகளைக் கொட்டுகிறான்.  க்னிமைத் துயரங்களைச் சொல்லி அழுகிறான்.

ஊர் நினைப்பு வருகிறது. மனைவி மக்கள் மனதுக்குள் இருந்து அவனை வாட்டி வதைக்கிறார்கள். 

அந்தப் பொம்மைக் கடவுளிடமே தான் எப்படியாவது ஊருக்குத் திரும்பி மனைவி மக்களைக் காணவேண்டும் என்று சொல்லி அழுகிறான். 

அந்தக் காட்சியைப் பார்த்தபோது எனக்கு அம்மன் கோயில் வழிபாடுகள் நினைவுக்கு  வந்தன. அம்மன் திருமுகத்தை மட்டும் தரையோடு  வைத்து, மஞ்சள் பூசி அலங்காரம் செய்து மாலைகள் சூடியிருப்பார்கள். 

முண்டகக் கண்ணியம்மன் போன்ற கோயில்களில் பார்த்திருக்கிறேன்.

மனிதன் உண்டாக்கிய கோயில்கள் மனிதர்களுக்கே வரம் தருகின்றன எனும்போது அந்த ஓவியன்  ஏற்படுத்திக்கொண்ட பூசணிக்காய் ஓவியம் மட்டும் இறைவனாக மாறி வரம் அளிக்காதா?

அந்த பூசணித் தலை முதலில் தாயும் தகப்பனும் குருவுமாகி, அதுவே பின்னர் தெய்வமும் ஆகி அவனுக்கு வழி காட்டியது!

அவனதுப் பிரார்த்தனை கைகூடியது!

ஆம், பல மாதங்களுக்குப் பிறகு ஆகாயத்தில்  திடீரென்று ஒரு சிறு விமானம் தாழப் பறந்து வந்து வட்டமடித்தது. அவன் தனது சிவப்பு நிற சட்டையைக் கழற்றி  ஆகாயத்தை நோக்கி அசைத்துக் காட்டினான். 

ஆகாயத்தில் இருந்து இறைவன் பார்க்கும் போது, விமானத்தில் பறக்கும் மனிதன் பார்க்க மாட்டானா? சைகை காட்டுவதைக் கண்டதும் விமானம் கடல் பரப்பில் வந்து இறங்கி மிதந்தபடி நின்றது;  அவன் கடலுக்குள்  பாய்ந்துச் சென்று விமானத்தில் ஏறிக்கொண்டான்!

ஒரு ஆகாயப் பயிற்சி விமானம் அது.  விமானிகள் யதார்த்தமாக ஓட்டி வந்தார்கள். 

இறைவனோ காரணத்தோடு ஓட்ட வைத்தான்!

தனிமனிதனின் தியானப் பயிற்சிக்குக் கிடைத்த பலன் அது!

உங்கள் நண்பர் புஷ்பராஜ உங்களை விட்டுப் போகவில்லை. உங்களுக்கு வரம் தரும் பொருட்டு இறைவனாக மாறியிருக்கிறார் என்பதே உண்மை. அதை நம்புங்கள்.

நம் குடும்பத்திலும் நாம் நேசித்தவர்கள் நம்மை விட்டு மறைந்திருக்கலாம்.  'இறை' என்றாலும் 'மறை' என்றாலும் ஒரே பொருளைக்  காட்டுகிறது.

'மறைந்திருப்பவன்' இறைவன் என்றால் “மறைந்திருப்போரும்”  இறைவன்தானே!

மாதா, பிதா, குரு தெய்வத்துடன் நம் முன்னோர்களையும் தொழுதுகொள்ளுங்கள். அவர்கள் நம் பொருட்டு இறைவனிடம் முறையீடு செய்து நமக்காக உதவ நாளை முன் வருவார்கள்! நிச்சயம்.

நம் தேவைகள் அனைத்தையும் நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பது மாதா பிதா குரு தெய்வம். அதை மறந்துவிடாதீர்கள்.

(ஞானம் பெருகும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com