4. நினைத்து நினைத்து பார்த்தேன்..!

இயக்குநர்கள் + இசையமைப்பாளர்கள் என்று யோசித்துப் பார்த்தால், ஆரம்பகாலத்தில் இருந்தே தமிழில் இத்தகைய கூட்டணிகள் இருந்தே வந்திருக்கின்றன.
4. நினைத்து நினைத்து பார்த்தேன்..!

இயக்குநர்கள் + இசையமைப்பாளர்கள் என்று யோசித்துப் பார்த்தால், ஆரம்பகாலத்தில் இருந்தே தமிழில் இத்தகைய கூட்டணிகள் இருந்தே வந்திருக்கின்றன. தமிழின் முதல் சூப்பர் ஸ்டாராகிய எம்.கே.தியாகராஜ பாகவதரின் முக்கியமான படங்கள் அனைத்துக்கும் இசை பாபநாசம் சிவன். இவரது ‘சிந்தாமணி’, ’அம்பிகாபதி’, ’திருநீலகண்டர்’, ’அஷோக் குமார்’, ’சிவகவி’, ‘ஹரிதாஸ்’ ஆகிய பிரமாதமான வெற்றிப்படங்கள் பாபநாசம் சிவனின் பாடல்களாலேயே மிகப்பிரபலமாகின.

இப்படங்களை YV ராவ், எல்லிஸ் ஆர் டங்கன், ராஜா சாண்டோ, எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு, சுந்தர்ராவ் நட்கர்னி முதலிய பலர் இயக்கியிருந்தாலும், இசையாலும் பாடல்களாலுமே இப்படங்கள் பிய்த்துக்கொண்டு ஓடின என்ற கருத்தில் மறூப்பு இருக்காது. பாகவதரின் அருமையான குரல்வளத்துக்குப் பாபநாசம் சிவனின் பாடல்கள் அட்டகாசமான கூட்டணியாக அமைந்தன. பாகவதர் கிட்டத்தட்ட கடவுளைப் போல பிரபலமானார்.’கிருஷ்ணா முகுந்தா முராரே’, ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’, ’சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே’, ’பூமியில் மானிட ஜென்மம்’, ‘ராஜன் மகராஜன்’, ’வதனமே சந்த்ர பிம்பமோ’, ’அம்பா மனம் கனிந்துனது கடைக்கண் பார்’, ’சத்வகுண போதன்’, ’வசந்த ருது மன மோகனமே’ முதலிய பாடல்கள் இன்றுமே கேட்க இனியவை (பாகவதரைப் பற்றி இந்தத் தொடரில் விபரமாகப் பிறகு பார்க்கப்போகிறோம்).

பாகவதரின் காலத்துக்குப் பிறகு, இயக்குநர்களின் காலம் துவங்கியது. ஸ்ரீதர், பீம்சிங், கிருஷ்ணன் – பஞ்சு, பிரகாஷ்ராவ், பந்துலு, யோகானந்த், பா.நீலகண்டன், கே.சங்கர், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் மற்றும் ராமசுந்தரம், ஏ.பி.நாகராஜன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், எம்.ஏ திருமுகம் முதலிய ஏராளமான இயக்குநர்கள் தங்கள் முத்திரையைப் பதித்தனர். அவர்களுக்கெல்லாம் உறுதுணையாக இருந்ததில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், ஏ.எம்.ராஜா, வேதா, சங்கர்-கணேஷ், வி.குமார் போன்ற இசையமைப்பாளர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. குறிப்பாக, பாடல்களை மறக்க முடியாமல் ஆக்கியதில் ஸ்ரீதர் முக்கியமானவர். இவருடன் ஆரம்பத்தில் ஏ.எம்.ராஜா கூட்டணி அமைத்துப் பிரமாதப்படுத்தினார். பின்னர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இவருடன் இணைந்தனர். பின்னர் விஸ்வநாதன் மட்டும் பல இறவாப் பாடல்களை ஸ்ரீதருக்கு அளித்தார். இவர்களுடன் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வாலி, ஆலங்குடி சோமு, கொத்தமங்கலம் சுப்பு, மருதகாசி, கா.மு.ஷெரீஃப் போன்ற பாடலாசிரியர்கள் அணி சேர்ந்து, மறக்கமுடியாத பல பாடல்களை அளித்தனர்.

இதன்பின் பாலசந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா, மணி ரத்னம், பாக்யராஜ், மணிவண்ணன், ராஜசேகர், எஸ்.ஏ.சந்திரசேகர், தேவராஜ்-மோகன், ராபர்ட்-ராஜசேகரன், ஆபாவாணன் முதலியவர்களின் படையெடுப்பு. அப்போது இளையராஜாவே பிரதான இசையமைப்பாளர். இத்தனை பேருக்கும் அள்ள அள்ளக் குறையாத அருமையான பாடல்களை வழங்கினார். பின்னர் ரஹ்மான் அறிமுகமானார். அவரும் பல இயக்குநர்களுடன் கூட்டணி அமைத்தார். மணி ரத்னம், ஷங்கர், ராஜீவ் மேனன், அசுதோஷ் கொவாரிகர், கதிர் போன்ர இயக்குநர்களுக்கு மறக்க முடியாத பாடல்கள் அளித்தார்.

இதன்பின் இன்றுவரை இப்படிப் பல இயக்குநர்கள்+இசையமைப்பாளர்கள் கூட்டணிகளைச் சொல்லலாம்.

இப்படிப்பட்ட இயக்குநர்+இசையமைப்பாளர் கூட்டணிகளில் செல்வராகவன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா என்ற கூட்டணி மிகவும் முக்கியமானது.

செல்வராகவன் படங்கள், ஏனைய இயக்குநர்களின் படங்களில் இருந்து வித்தியாசமானவை. காதல் என்ற ஒன்று நம்மைத் தாக்கும்போது அதில் மகிழ்ச்சி மட்டுமே இல்லையல்லவா? அந்த மகிழ்ச்சியோடு நெருங்கிய தொடர்புடைய சோகமும் துயரமும் காதலின் இரண்டு முக்கியமான விளைவுகள். இவை ஒரு மனிதனை எப்படி ஆட்டிப்படைக்கின்றன என்பது பற்றிய மிக இயல்பான சித்தரிப்புகளை உள்ளது உள்ளபடி செல்வராகவன் காட்டினார். பல உணர்வுகளால் தாக்குறும் மனம், இந்த உணர்வுகள் ஒவ்வொன்றையும் எப்படிக் கையாள்கிறது? எப்படி ஒரு மனிதனைச் செலுத்துகிறது? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் செல்வராகவனிடம் பதில்கள் இருக்கும்.

காதலை அழுத்தமாகக் கையாண்ட இவரது படங்களில், கதாநாயகனே இருண்ட தன்மை உடையவனாகவும் இருப்பான். தனியாக வில்லன் என்று ஒரு கதாபாத்திரம் இருக்காது. இந்தக் கதாநாயகன் உளவியல் ரீதியாக, மனதில் ஒரு பெண்ணை விரும்பத் தொடங்கியதும் ஏற்படும் மாற்றங்களால் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்படுகிறான் என்பதே செல்வராகவனின் பெரும்பாலான படங்களின் கருத்தாக இருக்கிறது. செல்வராகவனின் நாயகர்களுக்கு இருக்கும் உளவியல் பிரச்சினைகள், அவர்களின் மனதில் எழும் காதலைப் புரிந்துகொள்வதில் அவர்களுக்குச் சிக்கலை ஏற்படுத்துகின்றன.

இப்படிப்பட்ட நாயகர்களை எழுதுவதோ, அவர்களுக்கு ரத்தமும் சதையுமான குணாதிசயங்களை அளிப்பதோ எளிது அல்ல. இவர்களை போகிற போக்கில் உருவாக்கிவிட முடியாது. மனதில் இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் உருவாகி, அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் போதுதான் இவை இயல்பான கதாபாத்திரங்களாக மாறுகின்றன. இவைகளுக்குள் நிகழும் காதலோ, அதன் பின் அதனால் இவர்களின் மனதில் ஏற்படும் மாற்றமோ - எதுவாக இருந்தாலும் அவைகளையும் இயல்பாகக் காட்டுவது கடினமான செயலே. அதையும் தாண்டி அவைகளை நிஜ வாழ்க்கையில் நாம் காணும் மனிதர்களைப் போல் உருவாக்கி உலவவிடுவது பலராலும் முடியாது. அதை செல்வராகவனின் படங்கள் பெரும்பாலானவற்றில் காண முடியும்.

அப்படிப்பட்ட ஒரு செல்வராகவன் படத்தில் வரும் பாடல் இது.

கதிர் என்ற இளைஞனுக்கு, அவரது காலனியில் இருக்கும் அனிதா என்ற வடநாட்டுப் பெண்ணின்மேல் காதல். அவளுடன் பழக ஆரம்பிக்கிறான். அவளுக்கு அவனைப் பற்றித் தெரியும். அவனது காதலை மறுத்துக்கொண்டே இருக்கிறாள். கதிர் ஒரு வெட்டிப்பயல். அவனுக்குப் பிடித்த பெண்ணைப் பேருந்தில் பார்க்கையில் கூட, அவளைப் பற்றி யோசித்துப் பார்க்காமல், தன் மொக்கையான காதலையே பெரிதாக எண்ணி அதனை அவள் மீது சுமத்தி, அவளை அழவைக்கும் இளைஞன்.

ஆனால் அவனது மனதில் இருக்கும் அந்த மொக்கையான காதலே கூட, அந்தப் பெண்ணின் மீது ஒரு மரியாதையான உணர்வாகவே இருக்கிறது. அந்தப் பெண் சரியாகப் புரிந்து கொள்ளாமல், உடலையே பெரிதாக நினைக்கும் இளைஞர்களிடம் பழகுகையில், அதைப்பற்றிக் கதிர் பேசும் நீளமான வசனம் மிகவும் முக்கியமானது. சிறுகச்சிறுக கதிரைப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறாள் அனிதா. இருவரும் இருவரது வீடுகளுக்கும் அவ்வப்போது செல்கின்றனர். இருவருக்கும் இருவரைப் பற்றிய புரிதலும் மேம்படுகிறது. அனிதா அவனைக் கவனிக்க ஆரம்பிக்கிறாள். இருந்தாலும் தன் பின்னால் கதிர் சுற்றுவதை அவ்வப்போது கண்டிக்கவும் செய்கிறாள். அவளைக் கொண்டுபோய் கல்லூரியில் விடுகிறான் கதிர். அவனைப் பொறுப்பாக இருக்கச் சொல்கிறாள் அனிதா. அவனை மனிதனாக மாற்றுகிறாள். அவனிடம் இருக்கும் திறமையை வெளிக்கொணர்கிறாள். கதிர் பொறுப்பானவனாக மாறுகிறான்.

அந்த நேரத்தில், எதிர்பார்க்காமல், அனிதா ஒரு விபத்தில் இறந்துபோகிறாள். அவளுக்கு இவன் மீது காதல் இல்லை என்று, அவள் பெற்றோர்களுக்காகக் கதிர் பொய் சொல்லிவிடுகிறான்.

அந்தப் பெண்ணின் சவ ஊர்வலத்தின்போது வரும் பாடல் இது.

அவளுடன் பழகிய தருணங்கள், அவளது முகம், அவளது நினைவுகள் என்று கதிருக்குப் பல தருணங்கள் நினைவு வருகின்றன. நா.முத்துக்குமாரின் இறவா வரிகள் இந்தப் பாடலை நமது ஒவ்வொருவரின் நினைவுகளோடும் பின்னிப் பிணைய வைக்கின்றன. நம் எல்லாருக்குமே காதல்கள் உண்டு. ஆணாக இருந்தாலும் சரி- பெண்ணாக இருந்தாலும் சரி. அப்படிப் பழகியவர்களின் நினைவுகள் இந்தப் பாடல் எங்காவது ஒலிக்கும்போது ஒரு கணம் வந்துபோகாமல் இருக்காது. தனது மனதில் இருக்கும் உணர்வுகளை அப்படியே ஆடியன்ஸின் மனதில் கடத்துவது கட்டாயம் ஒரு கலை. அந்தக் கலை செல்வராகவனுக்கு இருந்தது. இசை, பாடல் வரிகள் ஆகியவை மூலம் தான் நினைத்ததை அப்படியே வெளிப்படுத்தி, பார்ப்பவர்கள்/கேட்பவர்களின் மனதை ஒரு ஆட்டு ஆட்டும் விதமாகவே துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெய்ன்போ காலனி ஆகிய படங்களை எடுத்தார். கிட்டத்தட்ட அவரது எல்லாப் படங்களிலுமே அவப்போது, சில காட்சிகளில் அவரது அந்த brilliance வெளிப்படும்.

இந்தப் பாடலின் வரிகளை மட்டுமே, எந்த இசையும் இல்லாமல் படித்தாலே உள்ளுக்குள் எதுவோ ஒன்று உருகுவதை உணர முடியும். நா முத்துக்குமார் எழுதிய அமரத்துவம் வாய்ந்த பல பாடல்களில் என்னைப் பொறுத்தவரை இதுவே முதன்மையானது. யுவன் ஷங்கர் ராஜா பலவிதமான genre-களில் இசையமைப்பதில் வல்லவர். தமிழில் இளையராஜாவின் மெலடிகளை ரஹ்மானின் புதிய வடிவில் அனாயாசமாகக் கோர்ப்பதில் கில்லாடி. உண்மையில் தமிழுக்கு ஏற்ற பாடல்களை வழங்குவதில் என்னைப்பொறுத்தவரை யுவனே பிரதானமானவர். அவரது பருத்திவீரன் இசை+பாடல்கள் பற்றியே பல கட்டுரைகள் எழுத முடியும்.

இந்தப் பாடலை ஷ்ரேயா கோஷல் பாடும் வடிவமும் உண்டு. அதுவும் இதற்கு இணையாக – ஏன்? இதற்கு மேலும் மனதைக் கரைக்க வல்லது. அதையும் கேட்டுப்பாருங்கள்.

’அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்

உன்னை கேட்கும் எப்படி சொல்வேன்?

உதிர்ந்துபோன மலரின் மௌனமா?

தூது பேசும் கொலுசின் ஒலியை

அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்?

உடைந்துபோன வளையல் பேசுமா

உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்

விரல்கள் இன்று எங்கே . . .?’

(தொடரும்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com