8. ’பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்' 

மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜன் என்ற எம்.கே. தியாகராஜ பாகவதர் பற்றி எழுத ஏராளமான விஷயங்கள் உண்டு.
8. ’பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்' 

மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜன் என்ற எம்.கே. தியாகராஜ பாகவதர் பற்றி எழுத ஏராளமான விஷயங்கள் உண்டு. தென்னிந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதரைக் கவனித்தால், அவரது படங்கள் ஆரம்பத்தில் இருந்தே கிட்டத்தட்ட ஒரே வார்ப்புருவைக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். மொத்தமே பதினான்கே படங்களில்தான் பாகவதர் நடித்திருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கலாம். அவற்றில் ஏழு படங்கள்தான் வசூல் சாதனைகளைப் புரிந்தன என்பது இன்னும் ஆச்சரியமாக இருக்கக்கூடும். ஆனால், அந்த ஏழு படங்களைக் கவனித்தால் அவரது வெற்றியின் ரகசியம் புரியும். பாகவதரின் முதல் படமான ‘பவளக்கொடி’, ஒன்பது மாதங்கள் தமிழகத்தில் ஓடியதாக அறிகிறோம்.

அவரது வெற்றிகரமான நாடங்களில் ஒன்றை எடுத்துத் திரைப்படமாக இப்படி அளித்தவர் புகழ்பெற்ற இயக்குநர் கே. சுப்ரமணியம். இதுதான் அவரது முதல் படமும் கூட. வெளியான ஆண்டு 1934. இப்படம் வெளியானபோது, ஸ்பாட்டிலேயேதான் நடிகர்கள் பாடி நடித்தனர். பவளக்கொடி என்ற இளவரசியைக் காதலிக்கும் அர்ஜுனனின் கதை இது (மேகமூட்டமாக வானம் கானப்படும் போதெல்லாம் நடிகர்கள் வேகமாக ஓடிச்சென்று உணவு உண்டனர். மேகம் கலைந்ததும் உணவுப்பொட்டலங்களை அப்படியப்படியே விட்டுவிட்டு நடிக்கத் திரும்பினர். அப்போதெல்லாம் அந்த உணவை உண்ணக் காகங்கள் குழுமும். இது படப்பிடிப்பைப் பாதித்தது. எனவே ஒரு ஆங்கிலோ இந்தியர் – ஜோ என்பவர் – காகங்களை விரட்டுவதற்காக துப்பாக்கி சகிதம் எப்போதும் அமர்ந்திருந்தார். இப்படத்தின் டைட்டில்களில் ‘Crowshooter – Joe’ என்ற வித்தியாசமான டைட்டிலைக் காணலாம்).

இப்படத்தின் பின்னர் பாகவதர் மிகவும் புகழ் பெற்றார். சிந்தாமணி, அம்பிகாபதி, திருநீலகண்டர், அசோக்குமார், சிவகவி, ஹரிதாஸ் ஆகிய அவரது படங்கள் பிய்த்துக் கொண்டு ஓடின. பெரும்பாலும் அவரது படங்களில், நல்ல இளைஞன் ஒருவன், விதிவசத்தால் காதலிலோ அல்லது சில சோதனைகளிலோ விழுந்து, தண்டிக்கப்பட்டு, பின்னர் மனம் திருந்துவான். இது அக்காலத்திய ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான கதையமைப்பு. கூடவே கணீரென்ற குரலில் பாகவதர் பாடிய பல பாடல்கள் அவரது பிராபல்யத்துக்குக் காரணமாக அமைந்தன.

பாகவதருக்கு இருந்த ரசிகர் கூட்டம் பிரம்மாண்டமானது. பிற்காலத்தில் எம்.ஜி.ஆருக்கு இருந்த ரசிகர் பட்டாளத்துக்கு சற்றும் குறையாததல்ல அது. நாற்பதுகளில், ஈரோட்டு ரயில் நிலையத்தில், பத்தாயிரம் பேருக்கும் அதிகமான கூட்டம். கொச்சி எக்ஸ்ப்ரஸில் சென்னைக்கு ஈரோடு மார்க்கமாகப் போய்க் கொண்டிருக்கும் பாகவதரை ‘தரிசிக்கத்தான்’ அந்தக் கூட்டம். தண்டவாளத்திலெல்லாம் அமர்ந்து கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். அவரைப் பார்த்த பின்னர்தான் கூட்டம் கலைந்தது.

அதுவே, லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு முப்பது மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், பாகவதருக்குப் பழைய புகழ் இருக்கவில்லை. அவர் எடுத்த படங்கள் தோல்வியடைந்தன. தனது நாற்பத்தொன்பதாவது வயதில், 1959ல் பாகவதர் காலமானார்.

தமிழ்த்திரையுலகில் தியாகராஜ பாகவதரைப்போல் வாழ்ந்தவரும் யாருமில்லை; அவரைப்போல் நொடித்து இறந்தவரும் யாருமில்லை என்ற அளவு, மனித வாழ்க்கையின் அபத்தங்களை இவரது வாழ்வில் காணலாம். தங்கத்தட்டில் சோறு உண்டவர் பாகவதர். அவர் எங்கு சென்றாலும் அவரைப் பார்ப்பதற்கென்றே ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் மொய்ப்பது வழக்கம். பெண்களெல்லாம் பாகவதர் மீது பித்துப்பிடித்து அலைந்த காலம் உண்டு.

தியாகராஜ பாகவதரின் கணீர்க்குரலைப்போன்ற இன்னொரு குரல் தமிழில் இல்லை. பாகவதருக்குப் பிற்காலத்தில் அறிமுகமாகிப் புகழ்பெற்ற டி.எம்.எஸ்ஸின் குரலையும் விஞ்சிய குரல் அது. இப்போதும் கேட்கக் கொஞ்சம்கூட சலிக்காத குரல் பாகவதருடையது. அவரது ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே’, ‘தீன கருணாகரனே நடராஜா’, ’ராஜன் மகராஜன்’, வதனமே சந்த்ர பிம்பமோ’, ’சத்வகுண போதன்’, ’ராதே உனக்குக் கோபம் ஆகாதடி’, ‘வசந்த ருது மனமோகனமே’ ‘மன்மதன் லீலையை வென்றார் உண்டோ’ (மன்மத லீலையை அல்ல – மன்மதன் லீலை), ’வள்ளலைப் பாடும் வாயால்’, ’ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் ஈசன் நாமம்’, ’கிருஷ்ணா முகுந்தா முராரே’ முதலிய ஏராளமான பாடல்களைப் பற்றி எழுத ஒரு கட்டுரை போதாது. இவை அத்தனையும் கேட்கக் கொஞ்சம் கூட சலிக்கவே சலிக்காத பாடல்கள். அவரது குரல் எத்தனை அனாயாசமாக மேலும் கீழும் சஞ்சாரம் செய்கிறது என்பதைக் கவனிக்க ஆரம்பித்தோமேயானால், இப்பாடல்களை மீண்டும் மீண்டும் நேரக் கணக்கே இல்லாமல் கேட்டுக்கொண்டிருக்க நம்மால் முடியும்.

பாகவதரின் பாடல்களின் இறவாத்தன்மைக்கு மற்றொரு காரணம், அவரது பெரும்பாலான பாடல்களுக்கு இசையமைத்த பாபநாசம் சிவன். ராமையா என்ற இயற்பெயரில் தஞ்சை போலகத்தில் 1890ல் பிறந்தவர். பொதுவாக இப்போதைய காலகட்டத்தில் திரைப்பாடல்களுக்காகவே அறியப்பட்டாலும், தனிப்பாடல்களை ஏராளமாக இயற்றியிருப்பவர் இவர். இளம்பருவத்திலேயே மிகச்சிறந்த இசைப்பயிற்சி பெற்றவர். கோயில் கோயிலாகச் சென்று பக்திப்பாடல்கள் பாடிக்கொண்டிருந்தவர். ’தமிழ்த் தியாகையர்’ என்ற பெயருடையவர். கலாக்‌ஷேத்ராவில் இசைத்துறையின் தலைவராகவும் 1934 முதல் 1939 வரை பணியாற்றியுள்ளார். எண்ணற்ற திரைப்பாடல்களையும் இந்தக் காலகட்டத்தில் துவங்கி ஐம்பதுகளின் இறுதி வரை எழுதி இசையமைத்துள்ளார்.

பாகவதர் & பாபநாசம் சிவன் கூட்டணியின் இறவாப்புகழ் பெற்ற பாடல்கள் காலம் உள்ள வரையும் அழியாது. அவர்களால் உருவான சூப்பர்ஹிட் பாடல் பற்றிதான் இன்று பார்க்கப்போகிறோம்.

மாமன்னர் அசோகரைப் பற்றி உலவிக்கொண்டிருக்கும் ஒரு கதை. அசோகரின் மகன் குணாளனை, அசோகரின் இளம் மனைவியான திஷ்யரக்‌ஷிதை விரும்புகிறாள். அவளது விருப்பத்தை அறிந்த குணாளன் அவளை வெறுத்து ஒதுக்குகிறான். உடனேயே, மன்னரிடம், குணாளன் தன்னை பலாத்காரம் செய்யப் பார்த்ததாக திஷ்யரக்‌ஷிதை குமுறுகிறாள். மன்னன் எதையும் ஆராயாமல், குணாளனின் பார்வையைப் பறித்து, நாட்டை விட்டே துரத்துகிறான். குழந்தையை இழந்து பல இன்னல்களுக்கு ஆளாகும் குணாளன், இறுதியில் புத்தரின் அருளால் இழந்த பார்வையைப் பெறுகிறான். இதுதான் ‘அசோக்குமார்’ படத்தின் கதை.

இப்படத்தில், ‘உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ’ பாடல் இன்றும் உலகப்பிரசித்தம். ஒரே இரவில் நியூடோன் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்ட பாடல் இது (எடுத்தவர், கே.ராம்நாத் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவலும் உண்டு). இது கண்ணாம்பாவுக்கு இரண்டாவது படம். தமிழே அவருக்குத் தெரியாத காலகட்டம். தெலுங்கில் எழுதப்பட்ட வசனங்களைத் தமிழில் இலகுவாகப் பேசி நடித்தார் கண்ணாம்பா. பாகவதரும் கண்ணாம்பாவும் தோன்றும் இப்பாடலை அவசியம் அனைவரும் பார்க்கவேண்டும்.

படத்தின் இரண்டாம் பாதியில், கண்ணிழந்த குணாளன், புத்தர் மஹோத்சவத்துக்குக் கிளம்பும் இடத்தில், பிச்சையெடுத்துக்கொண்டே குடும்பத்துடன் பாடிச்செல்லும் பாடல் – ’பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்’ என்ற பாடல். படத்தில் இடம்பெறும் இப்பாடலுக்கும், இசைத்தட்டில் வெளிவந்த பாடலுக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. படத்தில் வந்த பாடல், எளிமையானது. பல்லவி முடிந்து சரணங்கள் வரும் இடங்களிலெல்லாம் இசை இல்லாமல் தொடர்ச்சியாகப் பாடல் வந்து முடிந்துவிடும். ஆனால் இசைத்தட்டில் வெளியான பாடலோ, அருமையான இசையுடன் ஒரு முழுமையான பாடலாக விளங்கும். இரண்டிலுமே பாகவதரின் குரல் அப்பழுக்கின்றி மிகத் துல்லியமாக இருக்கும்.

இந்தப் பாடலின் சிறப்பு என்னவெனில், இப்போதும் இப்பாடலின் இசையை contemporaneityயுடன் ரசிக்க முடியும். அறிந்தும் அறியாமலும் படத்தில் ‘தீப்பிடிக்கத் தீப்பிடிக்க’ பாடலில் இப்பாடலைத்தான் யுவன் ஷங்கர் ராஜா ரீமிக்ஸ் செய்திருப்பார். அந்தப் பாடலுடன் இப்பாடல் எப்படிப் பொருந்துகிறது என்று கவனித்துப் பாருங்கள். இதன் இசையில் தொனிக்கும் சமகாலத்தன்மை மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அதை யுவன் கச்சிதமாகத் தேர்ந்தெடுத்தது இன்னும் ஆச்சரியம்.

இப்போது பலராலும் மறக்கப்பட்டுவிட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர், தென்னிந்தியத் திரைப்படங்களுக்குக் கிடைத்த வரம். ஒரு மன்னனைப் போல் வாழ்ந்தவர். எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த்துக்கு எல்லாம் முன்னர் அவர்களை விடப் புகழுடனும் ரசிகர் படையுடனும் விளங்கியவர். ஆனால் இன்று அவர் யார் என்று கேட்பவர்களே அதிகம். வாழ்க்கையின் நிலையாமை இது. எம்.கே.டி பாடிய பாடல் பாடல்களுடன் அவரது வாழ்க்கையைப் பொருத்திப் பார்க்க இயலும். ’ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே.. ஊனக்கண் இழந்ததால் உலகில் குறையும் உண்டோ’ என்று ராஜமுக்தி படத்தில் ஒரு அட்டகாசமான பாடல் உண்டு. பாகவதரின் கடைசிக்காலத்தை இப்பாடலுடன் எளிதில் பொருத்திப்பார்க்க முடியும்.

பலராலும் மறக்கப்பட்டுவிட்ட எம்.கே.டி, அவரது பாடல்களின் மூலம் இன்னும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்வார் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. தமிழ்த்திரையின் நூறாவது ஆண்டில், நாம் அவசியம் நினைத்துப் பார்க்கவேண்டிய மிக முக்கியமான ஆளுமைகளில் பாகவதருக்குத் தனியிடம் உண்டு.

’பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்

புண்ணியம் இன்றி விலங்குகள் போல்

காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவீண்

காலமும் செல்ல மடிந்திடுமொ

உத்தம மானிடராய் பெரும் புண்ணிய

நல்வினையால் உலகில் பிறந்தோம்

சத்திய ஞான தயாநிதியாகிய

புத்தரை போற்றுதல் நம் கடனே

உண்மையும் ஆருயிர் அன்பும் அகிம்சையும்

இல்லை எனில் நர ஜென்மமிதே

மண்மீதிலோர் சுமையே பொதிதாங்கிய

பாழ்மரமே வெறும் பாமரமே’.

பாடல் ஒலியாக மட்டும் கொண்ட சுட்டி: 

(தொடரும் )

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com