3. ’காதல் உன் லீலையா? காமன் உன் வேலையா?'

இளையராஜா பற்றிப் புதிதாக என்ன சொல்வது? அவரைப்பற்றிதான் தமிழ் இணையமெங்கும் ஆயிரக்கணக்கில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்களுக்கு மேலாகப் புதிதாக எதையுமே எழுதி விடமுடியாது.
3. ’காதல் உன் லீலையா? காமன் உன் வேலையா?'

இளையராஜா பற்றிப் புதிதாக என்ன சொல்வது? அவரைப்பற்றிதான் தமிழ் இணையமெங்கும் ஆயிரக்கணக்கில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்களுக்கு மேலாகப் புதிதாக எதையுமே எழுதி விடமுடியாது. தமிழில் உள்ள பிற அருமையான இசையமைப்பாளர்களைப் பற்றிய கட்டுரைகள் உண்மையில் மிகவும் குறைவு. ஜி.ராமநாதன், எம்.எஸ்.வி, கே.வி.எம், ஏ.எம்.ராஜா முதலியவர்களைப் பற்றித் தேடினாலும் எங்கேயோ ஓரிரு கட்டுரைகளே கிடைக்கும். அந்த அளவு இளையராஜா பொதுவான தமிழ் இணையவாசிகளின்/எழுத்தாளர்களின் மனதைக் கவர்ந்திருக்கிறார் (சாரு நிவேதிதா போன்ற ஓரிரு விதிவிலக்குகள் தவிர).

இளையராஜாவின் பாடல்களில் ஏராளமான ஹிட்கள் உண்டு. உண்மையில் நூற்றுக்கணக்கில் இசையமைத்தாலும், அவரது திறமை மங்காத பெருமளவுப் பாடல்களுக்கு இளையராஜாவே சொந்தக்காரர். அது கட்டாயம் ஜீனியஸ்களுக்கே உண்டான ஒரு பாங்கு. தமிழ்த்திரையிசையின் ஆரம்ப காலத்திலிருந்தே வழிவழியாக வரும் அந்த இடம், எம்.எஸ்.வியிடமிருந்து இளையராஜாவுக்கு வந்து சேர்ந்த எழுபதுகளின் பிற்பகுதியில் இருந்து தொண்ணூறுகளின் முடிவு வரையிலுமே இளையராஜாதான் தமிழ்த் திரையிசைக்குச் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தார். அவருக்குப் பின்னர் அது ரஹ்மானிடம் வந்து சேர்ந்தது.

இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் பாடலைப் பற்றிக் கவனிப்பதற்கு முன்னர், இந்தப் பாடலின் சிறப்பம்சம் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்.

இளையராஜா பல கதாநாயகர்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவர்களில் கமல்ஹாஸனுக்கு இளையராஜா இசையமைத்த பாடல்கள் பிற கதாநாயகர்களில் இருந்து வித்தியாசமானவை. பொதுவாக இளையராஜாவின் இசையமைப்பில் இடம்பெறும் தப்லா, டோலக் ஆகியவை கமல்ஹாஸனின் பெரும்பாலான பாடல்களில் இடம்பெறாது. மாறாக, western இசைக்கருவிகளான ட்ரம்ஸ், பேங்கோஸ் முதலியவையே இடம்பெறும். இது எப்போதிலிருந்து மாறியது என்று கவனித்தால், கமல்ஹாஸன் ஆரம்பகாலத்தில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த படங்களை விட்டுவிடுவோம். அவர் ஒரு பிரபல நாயகனாக மாறிய எண்பதுகளின் துவக்கத்திலிருந்து கவனித்தால், அவற்றில் இளையராஜா இசையமைத்த படங்களான மீண்டும் கோகிலா, கடல் மீன்கள், வாழ்வே மாயம், சங்கர்லால், எல்லாம் இன்ப மயம் முதலிய படங்களின் பாடல்கள் அப்படித்தான் இருக்கும். இந்தக் காலகட்டத்தில்தான் மெல்ல மெல்ல வெஸ்டர்ன் இசைக்கருவிகளால் அமைந்த பாடல்கள் கமல்ஹாஸனின் படங்களில் இடம்பெற ஆரம்பித்தன. இது முற்றிலும் ஒரு தற்செயல் நிகழ்வாகவும் இருக்கலாம். இருந்தாலும், இளையராஜா அதே காலகட்டங்களில் பிற நாயகர்களுக்கு இசையமைத்த பாடல்களையும், கமல்ஹாஸனுக்கு இசையமைத்த பாடல்களையும் ஒப்பிட்டால் மிகத் தெளிவாக இந்த வித்தியாசம் புரியும். கமல்ஹாஸன் பாடல்கள் தனித்துத் தெரியும்.

அப்படிப்பட்ட பாடல்களாக, பூங்காற்று புதிதானது (இது ஒரு ஃப்யூஷன் பாடல்; பாடலின் பல்லவியில் வெஸ்டர்ன் கருவிகளும், சரணத்தில் தப்லாவும் இருக்கும்), இளமை இதோ இதோ, வானம் கீழே வந்தால் என்ன, மேகம் கொட்டட்டும், ஏ.பி.சி நீ வாசி, பொன்மானே கோபம் ஏனோ, வானிலே தேனிலா, பட்டுக்க ன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும் (பல்லவியில் வெஸ்டர்ன்; சரணத்தில் தப்லா), சிறிய பறவை (பல்லவியில் வெஸ்டர்ன்; சரணத்தில் ஆங்காங்கே தப்லா), என்ன வேணும் தின்னுங்கடா டோய் போன்ற பல பாடல்களில் வெஸ்டர்ன் இசைக்கருவிகள்தான் இருக்கும். இது பிந்நாட்களில் இன்னும் அதிகரித்தது. பல வித்தியாசமான பாடல்கள் கமல்ஹாஸன்+இளையராஜா கூட்டணியில் இடம்பெற்றன.

இந்தக் காலகட்டத்தில்தான், எஸ்.பி. முத்துராமன்+பஞ்சு அருணாசலம் கூட்டணி உருவாக்கிய ஒரு திரைப்படத்தில் கமல்ஹாஸன் நடித்தார். இந்தக் கூட்டணி தமிழில் மறக்கமுடியாதது. எஸ்.பி.முத்துராமனும் பஞ்சு அருணாசலமும் கமல்ஹாஸனுடனும் ரஜினிகாந்த்துடனும் உருவாக்கிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்கள். அப்படிப்பட்ட கூட்டணியில் 1985ம் ஆண்டின் தீபாவளிக்கு வெளியான படம்தான் ‘ஜப்பானில் கல்யாணராமன்’. இந்தப் படத்தின் சிறப்பம்சம், பெரும்பாலும் ஜப்பானிலேயே எடுக்கப்பட்ட படம் என்பதே. ’உலகம் சுற்றும் வாலிபன்’ இதற்கு முன்னர் அப்படி வெளிநாடுகளில் எடுக்கப்பட்டிருந்தது. (அதற்கும் முன்னர், தமிழிலேயே முதன்முதலில் வெளிநாடுகள் சென்று எடுக்கப்பட்ட படம், ஸ்ரீதரின் ‘சிவந்த மண்’ என்பது திரை ஆர்வலர்களுக்குத் தெரிந்திருக்கும்).

ஜப்பானில் கல்யாணராமனுடன், 1985 தீபாவளிக்கு ரஜினியின் ‘வேலைக்காரன்’ போட்டிபோட்டது. பெரும் வெற்றியும் அடைந்தது. ஜப்பானில் கல்யாணராமன் சரியாகப் போகவில்லை. இருந்தாலும் அதன் பாடல்கள் இப்போதும் புகழ்பெற்றவை. ‘ராதே என் ராதே’ பாடலை இன்றும் மறக்கமுடியாதவர்கள் அதிகம் (இதைப் பாடியவர் பெயர் ரமேஷ். இவர் மிகச்சில பாடல்களே பாடியுள்ளார். மனோவின் குரல் போலவே இவரது குரல் இருக்கும்), ’சின்னப்பூ சின்னப்பூ’, ’அப்பப்பா தித்திக்கும் உந்தன் முத்தம்’, ’அப்பப்போய் அம்மம்மோய்’, ‘வாய்யா வாய்யா’ (இப்போதெல்லாம் பேய்ப்படங்கள் தமிழில் சக்கைப்போடு போடுகின்றன. அப்படிப்பட்ட பேய்களை ஒன்று திரட்டிக்கொண்டு கமல்ஹாஸனின் கல்யாணராமன் ஆவி ஆடிப்பாடும் பாடல் இது. 30 வருடங்கள் முன்னரே வந்தாயிற்று) முதலிய பாடல்கள் மிகவும் பிரபலம்.

ஜப்பானில் கல்யாணராமன் படத்தில், இசைத்தட்டில் இடம்பெற்றுப் படத்தில் வராத பாடல் ஒன்று உண்டு. என்னைப்பொறுத்தவரையில் அந்தப் படத்தின் மிகச்சிறந்த பாடல் அதுதான். வைரமுத்து எழுதி, இளையராஜாவே பாடிய பாடல் அது. ’காதல் உன் லீலையா… காமன்.. உன் வேலையா’ என்று துவங்கும் பாடல்.

இளையராஜாவின் குரலுக்கு ஒரு விசேடம் உண்டு. ஒரு raw ஆன குரல் அவருடையது. விருமாண்டி படத்தில் ‘அந்தக் காண்டாமணி ஓச கேட்டுருச்சு’ பாடலும், அதே ட்யூனில் க்ளைமேக்ஸ் சீக்வென்ஸில் வரும் ‘கர்ப்பக்கிரகம் விட்டு சாமி வெளியேறுது’ பாடலும் அவர் பாடிய பாடல்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தவை. இந்தப் பாடலுக்கு மிகச்சரியான தேர்வு இளையராஜாவின் குரல்தான் என்பதைக் காதல் உன் லீலையா பாடலைக் கேட்டதும் உணர்வீர்கள். காரணம், இந்தப் பாடல், ஜப்பானில் உலவும் இரு காதலர்களுக்கு இடையே மாண்டேஜாக வரும் பாடல் என்று இதைக் கேட்டாலே புரிந்துவிடும் (வளையோசை பாடலைப் போல). பாடலில் வரும் காதல் வரிகள், அந்த வரிகளைக் கச்சிதமாக இணைக்கும் இசை, குரல், பாடல் கொடுக்கும் mood ஆகியவை எல்லாம் சேர்ந்து, இளையராஜாவின் சிறந்த பாடல்களில் ஒன்றாக இந்தப் பாடலை மாற்றியிருக்கும்.

இந்தப் பாடல் தரும் மூடுக்கும் படத்தில் இடம்பெற்ற பிற பாடல்களுக்கும் சம்மந்தமே இருக்காது. அதனால்தான் பாடல் படத்தில் இடம்பெறவில்லை என்று யூகிக்கிறேன். இருந்தாலும், இன்றுவரை பலருக்கும் பிடித்த பாடலாக இருந்து வருகிறது இப்பாடல். ஜப்பானில் கல்யாணராமன் வெளிவந்தபோது எனது தாய்மாமாவின் இசைத்தட்டு நூலகம் கோவையில் பிரபலம். அங்குதான் பல ஆண்டுகாலங்கள் இசைத்தட்டுகளுடனேயே வாழ்ந்தேன். எனவேதான் பல பாடல்களையும் அறிந்தேன். அச்சமயம் கேஸட்களில் பாடல் பதிவு செய்யக் கோரிக்கைகள் வரும்போதெல்லாம் அதில் இப்பாடல் கட்டாயம் இடம்பெறும். பாடலைக் கேட்டுக்கேட்டு என் நினைவிலேயே தங்கி விட்ட பாடல் இது. அனக்கு அப்போது ஆறு வயது.

பாடலைக் கேட்டுப்பாருங்கள். உங்களுக்கும் கட்டாயம் பிடிக்கும்.

பாடலின் சுட்டி:  

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com