20. கண்ணும் கண்ணும் நோக்கியா!

தமிழ்த் திரைப்பட இசையில் ரோஜாவில் இருந்து ரஹ்மானே நம்பர் ஒன் இசையமைப்பாளராக
20. கண்ணும் கண்ணும் நோக்கியா!

தமிழ்த் திரைப்பட இசையில் ரோஜாவில் இருந்து ரஹ்மானே நம்பர் ஒன் இசையமைப்பாளராக இருந்து வந்தார். ஆனால் 2001ல் ரஹ்மானின் அந்த இடத்துக்குப் பலத்த போட்டி ஒன்று எழுந்தது. ‘மின்னலே’ வெளியானது. அப்படத்தின் அத்தனை பாடல்களும் சூப்பர்ஹிட் ஆயின. ஒன்பது வருடங்களாக ரஹ்மானே வாங்கிக்கொண்டிருந்த ஃபிலிம்ஃபேர் விருதை அந்த வருடம் மின்னலேவுக்காக ஹாரிஸ் ஜெயராஜ் என்ற இளைஞர் வாங்கினார். அவரது இசையில் மனதை மயக்கக்கூடிய அருமையான மெலடிகள் இருந்தன. அவர் இசையமைத்த வேகமான பாடல்களிலும் இசைக்கருவிகளின் சேர்க்கை பிரமாதமாக இருந்தது. மொத்தத்தில், ரஹ்மானின் வழியில், ரஹ்மானைப்போல இல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இசையமைக்கத் துவங்கியிருந்தார் ஹாரிஸ் ஜெயராஜ். இதனைத் தொடர்ந்து அன்றில் இருந்து இன்றுவரை தனக்கே உரிய அருமையான பாடல்களை வழங்கி வருகிறார். பதினாறு வருடங்களாக சற்றும் புகழில் குறையாமல், தன் இடத்தில் இருந்து இறங்காமல் இசையமைப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. ரஹ்மானுக்கு அடுத்தபடியாக ஹாரிஸைத்தான் பல இசை ரசிகர்களும் கருதுகின்றனர். நானும் அப்படித்தான். இந்த வாரம் ஹாரிஸின் இசையைப் பற்றிக் கவனிக்கலாம்.

ஹாரிஸின் தந்தை எஸ்.எம்.ஜெயக்குமார், மிகப்பிரபலமான கிடார் கலைஞர். பல இசையமைப்பாளர்களுக்குக் கிடார் வாசித்துள்ளார். தந்தை இசைக்கலைஞராக இருந்ததாலேயே, சிறுவன் ஹாரிஸுக்கு இசையின் மேல் இயல்பாகவே ஆர்வம் மேலோங்கியது. இசையைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தான். ஐந்தரை வயதில் தந்தை வாங்கிக்கொடுத்த கிடாரை வைத்துக்கொண்டு, கைவலிக்கப் ப்ராக்டீஸ் செய்ய ஆரம்பித்தான். ஆனால் அப்போதெல்லாம் ஏன் இப்படிக் கைகள் வலிக்க நம்மைத் தந்தை இப்படிக் கஷ்டப்படுத்துகிறார் என்ற கவலை அவனுக்கு இருந்தது. அதன்பின்னர் ஏழு வயதில்தான் கிடாரைப் பற்றி உண்மையில் அறிந்துகொள்ள ஆரம்பித்து, அதன்மீது ஆர்வம் பிறந்து, பின்னர் முழுமூச்சாக இசை பயில ஆரம்பித்தான் சிறுவன் ஹாரிஸ்.

லண்டனைச் சேர்ந்த ட்ரினிடி காலேஜ் ஆஃப் ம்யூஸிக்கில் பாடங்கள் பயில ஆரம்பித்தான். ஏழு வயதில் பயில ஆரம்பித்து, பத்தாம் வயதில் நாலாவது க்ரேடில், ஆசியாவிலேயே முதல் மாணவனாகத் தேறினான். அது ஒரு சாதனை. இதன்பின் பனிரெண்டு வயதில் இருந்தே முழுமூச்சாகப் பிற இசையமைப்பாளர்களின் பாடல்களில் கிடார் வாசிக்க ஆரம்பித்தான். அப்படிச் சில வருடங்கள் வாசித்தபின்னர், கீபோர்ட் மற்றும் சிந்தசைஸரில் ஆர்வம் ஏற்பட்டு, அவற்றையும் நன்றாகக் கற்றுக்கொண்டான். ‘சீவலப்பேரி பாண்டி’ படத்தின் ‘ஒயிலா பாடும் பாட்டு’ பாடல்தான் ஹாரிஸ் கம்ப்யூட்டரில் கம்போஸ் செய்த முதல் பாடலாக அமைய, பாடல் சூப்பர் ஹிட். இதன்பின் ஏராளமான படங்களில் கீபோர்ட் ஆர்டிஸ்டாகப் பணிபுரிந்தான் இளைஞன் ஹாரிஸ். அப்போது கௌதம் வாசுதேவ் என்ற புதிய இயக்குநர், ஹேரிஸை அணுகி, ‘மின்னலே’ என்ற ஒரு படத்தை இயக்கப்போவதாகச் சொல்லி, அதற்கு இசையமைத்துத் தரமுடியுமா என்று கேட்க, தயக்கத்துடன் ஹாரிஸ் சம்மதிக்கிறார். அப்படி வெளியானதுதான் ‘மின்னலே’வின் ஆல்பம். வெளிவந்தவுடன் பிரம்மாண்ட ஹிட்டாக மாறியது. தமிழகமெங்கும் அனைவரது மனதிலும் மின்னலே படப்பாடல்கள்தான் பல மாதங்கள் ஒலித்தன. நானெல்லாம் டிவிடியையே தேய்த்திருக்கிறேன்.

மின்னலேவில் ஹாரிஸின் மெலடிக்களை மக்கள் கண்டுகொண்டார்கள். ‘வசீகரா’ பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. ‘தீயே அழகிய தீயே’, ‘வேறென்ன வேறென்ன வேண்டும்’, ‘வெண்மதி வெண்மதி’ ஆகிய முழுநீளப் பாடல்களும், ‘இரு விழி உனது’, ‘நெஞ்சைப் பூப்போல் கொய்தவளே’, ‘பூப்போல் பூப்போல்’, ‘மேடி.. மேடி’ என்ற குட்டிப் பாடல்களும் அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்டன.

இதன்பின் வெளியான படம், ‘மஜ்னு’. ஆனால் இதுதான் ஹேரிஸ் இசையமைத்த முதல் படம். மின்னலே ரிலீஸில் முந்திக்கொண்டது. மஜ்னுவின் பாடல்களும் தமிழ்நாடெங்கும் ஹிட் ஆயின. படம் தாமதமாக வந்ததால் சரியாகப் போகவில்லை. இருப்பினும் ‘முதற் கனவே’, ‘குல்மோஹர் மலரே’, ஹரி கோரி’ ஆகிய பாடல்கள் பெரிய ஹிட்கள் ஆகவே, ஹாரிஸின் பெயர் இன்னும் பரவலாக எல்லாருக்கும் தெரிய ஆரம்பித்தது.

அதன்பிறகு வெளியான 12பி, ஹாரிஸைப் புகழின் உச்சிக்குக் கொண்டுசென்றது. ‘ஒரு புன்னகைப் பூவே’, ‘சரியா தவறா’, ‘பூவே வாய்பேசும்போது’, ‘முத்தம் முத்தம் முத்தமா’ போன்ற முழுநீளப் பாடல்களும், ‘ஆனந்தம்’, ‘ஒரு பார்வை பார்’ போன்ற சிறிய பாடல்களும் கல்லூரிகள் எங்கும் பிரபலமடைந்தன. இந்தப் படத்துக்குப் பிறகு, ஹாரிஸ் என்றால் எந்த அறிமுகமும் தேவையில்லை என்ற அளவு தமிழின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவராக ஹாரிஸ் உயர்ந்தார்.

எப்படி இயக்குநர் சரண்-பரத்வாஜ் கூட்டணி மிகவும் பிரபலமோ, அப்படி கௌதம் வாசுதேவுடன் ஹாரிஸின் கூட்டணி மிகுந்த புகழடைந்த ஒரு கூட்டணி. மின்னலேவில் துவங்கி, அதன் ஹிந்திப்பதிப்பான ரெஹ்னா ஹை தேரே தில் மே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம் என்று கொடிகட்டிப் பறந்த கூட்டணி இது. பின்னர் விண்ணைத்தாண்டி வருவாயாவில் ரஹ்மானிடமும், நீதானே என் பொன்வசந்தத்தில் இளையராஜாவுடனும் கௌதம் வாசுதேவ் பணிபுரிந்தார். ஆனால் உடனடியாக என்னை அறிந்தால் படத்துக்காக ஹாரிஸுடன் மீண்டும் கூட்டணி அமைத்தார். இந்தக் கூட்டணியின் அத்தனை பாடல்களுமே எப்போதுமே கேட்க அட்டகாசமாக இருக்கும்.

இதேபோல் இயக்குநர் ஜீவாவுடனும் ஹாரிஸ் சேர்ந்து 12பி, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே, தாம் தூம் ஆகிய நான்கு படங்களில் பிரம்மாதமான பாடல்கள் கொடுத்திருக்கிறார். ஷங்கருடன் அந்நியன் & நண்பன் என்று இரண்டு படங்கள். முருகதாஸுடன் ஹாரிஸின் டீம் மிகவும் பிரபலம். கஜினியில் துவங்கி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, இந்த வருடம் வெளியாகப்போகும் Spyder என்று நான்கு படங்கள். இயக்குநர் கே.வி ஆனந்துடன் சேர்ந்து அயன், கோ, மாற்றான் & அனேகன் என்று நான்கு படங்கள். 2001ல் இருந்து இன்றுவரை வெறும் 46 படங்களே ஹாரிஸ் இசையமைத்திருக்கிறார். ‘ஒவ்வொரு ஞாயிறன்றும் கதை கேட்பேன். ஒரு வருடத்தில் நான் கேட்கும் 52 கதைகளில் மூன்றை மட்டுமே ஒப்புக்கொள்வேன்’ என்பது ஹாரிஸின் கருத்து. கதை தன்னைக் கவர்ந்தால் மட்டுமே அப்படத்தில் வேலை செய்துவருவதாகச் சொல்லியிருக்கிறார்.

ஹாரிஸின் இசை எப்படிப்பட்டது? உண்மையில் தமிழில் கிடாரின் முழுவீச்சையும் இசை ரசிகர்கள் கேட்க ஆரம்பித்தது ஹாரிஸ் வந்த பின்னர்தான் என்று சொல்லமுடியும். அதேபோல், துள்ளலான பாடல்கள் ஹாரிஸின் பிரத்யேக அடையாளம். அவரது படங்களில் உங்களுக்குப் பிடித்த பாடல்களை யோசித்துப் பாருங்கள். தலைசிறந்த மெலடியாக இருக்கும்; அல்லது ராக் இசை கலந்த பாடலாக இருக்கும்.

ஆனால், எனக்கு ஹேரிஸிடம் பிடித்தது இந்த இரண்டுமே அல்ல. மாறாக, ஹேரிஸின் குத்துப்பாடல்களைக் கேட்டிருக்கிறீர்களா? மிகவும் தரமாக இருக்கும். ஹேரிஸ் இசையமைத்த குத்துப்பாடல்கள் மிகவும் குறைவு. ஆனால் அப்படி அமைக்கும்போது அவற்றை மறக்கமுடியாத பாடல்களாக மாற்றிவிடுவார். அதுதான் ஹேரிஸின் சிறப்பம்சம்.

உதாரணமாக, தொட்டி ஜெயா படத்தில், ‘யாரி சிங்காரி’ என்று ஒரு பாடல் உண்டு. பக்கா இலங்கை பைலா பாப் என்றே இதைக் கேட்டவுடன் சொல்லிவிடலாம். பாடலைப் பாடியவர்களில் சிலோன் மனோகரும் ஒருவர். இந்தப் பாடல் முழுக்கவும் அட்டகாசமான, தரமான குத்து இசை நிரம்பி வழியும். பாடலை நீங்கள் கேட்டுப்பார்த்தால்தான் இது புரியும். பாடலில் சிலோன் மனோகரின் குரல், இந்த பைலா பாப்புடன் பிரம்மாதமாக ஒன்றிணையும். வாரணம் ஆயிரம் படத்தில், ‘அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல’ பாடல் நினைவிருக்கிறதா? இன்றுவரை பலரின் தேசிய கீதமே இப்பாடல்தான். இதேபோல், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில், ‘வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு’ என்ற பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்தப் பாடலில் பெண்கள் பாடும் ‘வஞ்சிரம் மீனு வவ்வாலு’ கோரஸ் கேட்கவே அற்புதமாக இருக்கும். எத்தனை முறை கேட்டாலும் இந்தப் பாடல் எனக்கு அலுக்காது. போலவே, அனேகனில் ‘டங்கா மாரி ஊதாரி’ பாடல். படத்தின் பாடல்கள் வெளிவந்ததும் இந்தப் பாடல் எவ்வளவு பெரிய ஹிட் அடித்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். என்னை அறிந்தால் படத்தின் ‘அதாரு அதாரு’ பாடலை மறக்க முடியுமா? எனக்கு ஹாரிஸிடம் மிகவும் பிடித்த பாடல்களில் இவற்றுக்கு முக்கியமான இடம் உண்டு.

அறிமுகமான 16 வருடங்கள் கழித்தும் இன்றும் ஹேரிஸ் ஒரு முக்கியமான இசையமைப்பாளரே. இன்னும் பல வருடங்கள் தொடர்ந்து இசையமைப்பார் என்பதும் நிச்சயம். ஒரு வெடிகுண்டு போல அறிமுகமாகிவிட்டு, ரஹ்மானுக்கு நேரடிப் போட்டி என்று ரசிகர்கள் கருதும்படி பல ஹிட்களைத் தொடர்ந்து கொடுத்து, பின்னர் தனக்கென்று ஒரு பாணியில், பாதையில் பயணித்துக்கொண்டிருப்பவர். இவரது ஆரம்பகாலப் பாடல்கள் பலவற்றுக்கு நான் ரசிகன்.

ஹேரிஸின் இசையில், இந்த அத்தியாயத்தில் நாம் பார்க்கப்போகும் பாடல், அந்நியன் படத்தில் இடம்பெற்ற ‘கண்ணும் கண்ணும் நோக்கியா’. ஹேரிஸின் எத்தனையோ பாடல்கள் இருந்தாலும், இந்தப் பாடலை நான் தேர்ந்தெடுத்ததற்குக் காரணங்கள் இரண்டு. முதலில், இப்பாடலில் வருவது போன்ற இசைக்கருவிகளின் கூட்டணியை நான் தமிழில் குறைவாகவே கேட்டிருக்கிறேன். இரண்டு - லெஸ்லி லூயிஸின் குரல், இந்தக் கருவிகளுடன் கலந்து நமக்குக் கொடுக்கும் அனுபவம் தலைசிறந்தது. நல்ல தரமான ஹெட்ஃபோன்களில் இந்தப்பாடலைக் கேட்டுப்பாருங்கள். மிகுந்த உற்சாகம் நம்மைச் சூழ்ந்துகொள்வது உறுதி. இந்தப் பாடலைப் பாடிய பெண்கள் யாரென்று தெரியுமா? ஆண்ட்ரியாவும் வசுந்தரா தாஸும்!

ஹேரிஸிடம் ஒரு வித்தியாசமான வழக்கம் உண்டு. யாரேனும் ஒரு பாடகி பாடிக்கொண்டிருக்கும் ட்ராக்கை சட்டென்று இன்னொரு பாடகி பாடும் வரியோடு இணைத்துவிடுவார். கேட்பதற்கு ஒரே ஒருவர் பாடுவது போலவே இருக்கும். ஆனால உன்னிப்பாகக் கேட்டால் இந்த இணைப்பு புரியும். அது ஒரு ஆச்சரியமான அனுபவத்தைக் கொடுக்கும். ஒரு உதாரணம் தருகிறேன். தொட்டி ஜெயாவில், ‘உயிரே என்னுயிரே’ என்று ஒரு பாடல் மிகவும் பிரபலம். அதில், இரண்டாவது சரணத்தில், ‘உன்னுடன் இருக்கையிலே.. நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே’ என்று ஒரு வரியை அனுராதா ஸ்ரீராம் துவங்குவார். ‘நிலவுக்கும்’ என்ற இடத்தில் அனுராதாவின் குரல், ‘சிறகுகள்’ என்ற இடத்தில் பாம்பே ஜெயஸ்ரீயின் குரலாக மாறிவிடும். ‘நிலவுக்கும்’ முடிந்ததும், ‘சிறகுகள்’ என்பதை பாம்பே ஜெயஸ்ரீ பாடியிருப்பார். இருவரின் குரல்களையும் இப்படி ஓர் புள்ளியில் இணைப்பது ஒரு மேஜிக். இப்படிப் பாதி வரியில் குரல்கள் மாறி நான் கண்டது ஹேரிஸின் இசையில் மட்டுமே. நீங்களும் கவனித்துப் பாருங்கள். இப்படி ‘கண்ணும் கண்ணும் நோக்கியா’வில் ஆண்ட்ரியாவின் குரலும் வசுந்தராவின் குரலும் கலப்பதை நீங்களே கவனியுங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com