12.மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்

கிருஷ்ணன் கோயில் வெங்கடாசலம் மகாதேவன் என்ற இயற்பெயரை விடவும், கே.வி. மகாதேவன் என்ற பெயரில் தமிழின் மிக மிக முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவரான கே.வி மகாதேவன் ...
12.மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்

கிருஷ்ணன் கோயில் வெங்கடாசலம் மகாதேவன் என்ற இயற்பெயரை விடவும், கே.வி. மகாதேவன் என்ற பெயரில் தமிழின் மிக மிக முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவரான கே.வி மகாதேவன் பற்றித்தான் இந்த வாரம் பார்க்கப்போகிறோம்.

வடசேரியின் அருகே இருக்கும் கிருஷ்ணன்கோயிலில் 1918ல் மார்ச் 20ம் தேதி பிறந்தவர் மகாதேவன். இவரது தாத்தா, திருவிதாங்கூர் அரண்மனையில் சங்கீத வித்வானாக இருந்தவர். மிக இளமையிலேயே, தந்தையின் மூலமாகவும், ஊருக்கு சற்றுத் தொலைவில் வசித்துவந்த பூதப்பாண்டி அருணாசலக் கவிராயரிடமும் நன்றாக சங்கீதம் பயின்றவர் மகாதேவன். சங்கீதம் மட்டுமல்லாது, பலவிதமான இசைக்கருவிகளைக் கையாளும் தீர்க்கமான ஞானமும் பெற்றவர். பதினாலே வயதில், பாலகந்தர்வ கானசபா என்ற சென்னையைச் சேர்ந்த நாடக சபாவில் சேர்ந்து, ஸ்த்ரீபார்ட் உட்படப பல வேடங்களில் நடித்திருக்கிறார். இசையையும் நல்கியிருக்கிறார். ஆனால் நாடகசபா மூடப்பட்டுவிட்டதால், சென்னையிலேயே ஒரு ஹோட்டலில் சர்வராகவும் அப்போதே இருந்திருக்கிறார். சர்வர் மட்டுமல்லாது, இன்னும் பல வேலைகளையும் சென்னையில் இருந்த ஆரம்ப நாட்களில் செய்திருக்கிறார். பதினாலாவது வயதில் இருந்து 3-4 வருடங்கள் இப்படிப்பட்ட வேலைகளைச் செய்துகொண்டே இசையில் வாய்ப்புகளையும் தேடிக்கொண்டிருந்தார் மகாதேவன்.

அப்போது, இன்னொரு நாடகக் கம்பெனியில் ஒரு வாய்ப்பு கிடைக்க, அவர்களுடன் எஸ்.வி. வெங்கட்ராமனின் கண்ணில் மகாதேவன் பட, அவரது இசை வெங்கட்ராமனைக் கவர்ந்துவிட, அவரது உதவியாளராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டு மறுபடியும் சென்னை வருகிறார். வெங்கட்ராமன் அதுவரை கதாநாயகனாக நடித்துக்கொண்டிருந்தவர், ஏ.வி.எம்மின் ‘நந்தகுமார்’ (1938) படத்தில்தான் முதன்முதலில் இசையமைக்கும் வாய்ப்பையும் பெற்றிருந்தார் (இதுதான் டி.ஆர். மகாலிங்கம், டி.ஆர். ராமச்சந்திரன் ஆகியவர்களுக்கு முதல் படம். தமிழில் முதன்முறையாகப் பின்னணிப் பாடல்கள் பாட வைக்கப்பட்ட படமும் இதுதான் என்று அறிகிறோம். இப்படத்தில் பாடிய மும்பையைச் சேர்ந்த லலிதா வெங்கடராமன் தான் அந்த வகையில் தமிழின் முதல் பின்னணிப் பாடகி). இதில்தான் முதன்முதலில் கே.வி. மகாதேவன் வேலைசெய்தார். ஆனால் படம் தோல்வி அடைந்தது.

இதன்பின் ஓரிரு இசையமைப்பாளர்களிடம் உதவியாளராகவே இருந்துவந்தார் மகாதேவன். அப்போதுதான், 1942ல், மாடர்ன் தியேட்டர்ஸின் ‘மனோன்மணி’ படத்தில் இசையமைப்பாளர் டி.ஏ. கல்யாணம், தனது உதவியாளரான மகாதேவனுக்கு ஒரு பாடலுக்கு இசையமைக்கும் வாய்ப்புக் கொடுக்கிறார். அப்படி மகாதேவன் இசையமைத்த முதல் பாடல், ’மோகனாங்க வதனி’ என்ற பாடல். இதைப் பாடியவர் பி.யூ. சின்னப்பா. இப்படித்தான் மகாதேவனின் திரைவாழ்க்கை துவங்கியது.

இதன்பின் அதே வருடம், ஆனந்தன் (அல்லது) அக்னிபுராண மகிமை என்ற படத்துக்குத்தான் முதன்முதலில் இசையமைக்கிறார் மகாதேவன் (படமோ பாடல்களோ இப்போது துளிக்கூட எங்கும் இல்லை. அழிந்துவிட்டன). பின்னர் படிப்படியாக ஒவ்வொரு படமாக இசையமைத்து, ஹெச்.எம்.வி நிறுவனத்துடன் இணைந்து பக்திப் பாடல்களையும் இசையமைத்துவந்தார். நாற்பதுகளில் சில படங்களுடன், ஐம்பதுகளில் ஒருசில படங்களுக்கு இசையமைத்து வந்த போதுதான், ‘கூண்டுக்கிளி’ படத்தில் மகாதேவனுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. இப்படத்தைப் பற்றி உங்களுக்கே தெரிந்திருக்கும். எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இணைந்து நடித்த முதல் படம். இதில்தான் டி.எம்.எஸ் சிவாஜிக்காகப் பாடிய முதல் பாடல் இடம்பெற்றது என்று அறிகிறோம் (’-கொஞ்சும் கிளியான பெண்ணை’).

இதன்பின்னர் சில படங்களுக்குப் பின்னர், குலேபகாவலியில் இடம்பெற்ற ‘மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ’ பாடலுக்கு மட்டும் கே.வி.எம் இசையமைத்தார் (படத்துக்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன். பாடல் மட்டும் கூண்டுக்கிளிக்காகப் போடப்பட்டது. ஆனால் அதில் உபயோகமாகவில்லை. இயக்குநர் ராமண்ணாவின் வேண்டுகோளுக்கு இணங்க இப்படத்தில் அப்பாடல் உபயோகப்படுத்தப்பட்டது). இதன்பின்னர் வெளியாகி, நன்றாக ஓடி, மகாதேவனை மிகவும் பிரபலப்படுத்தியதுதான் ‘டவுன்பஸ்’. அப்படத்தின் பாடல்களை இன்றும் யாருமே மறக்க இயலாது (’பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா’, ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா’). பின்னர் தேவர் ஃபிலிம்ஸின் ‘தாய்க்குப் பின் தாரம்’ படத்துக்கு இசையமைத்தார் மகாதேவன். அதுதான் தேவர் ஃபிலிம்ஸின் முதல் படமும் கூட (’மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே’, ’அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ’, ’என் காதல் இன்பம் இதுதானா’). இதன்பின்னர் தேவர் ஃபிலிம்ஸின் பல படங்களுக்குத் தொடர்ந்து இசையமைத்தார்.

இதன்பின் தமிழின் புகழ்பெற்ற இசைமைப்பாளர்களில் ஒருவராக மாறினார் மகாதேவன். எண்ணற்ற படங்களுக்கு இசையமைத்தார். தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஏராளமாக இசையமைத்து, இரண்டு தேசிய விருதுகளும் வாங்கியிருக்கிறார் (கந்தன் கருணை & சங்கராபரணம்).

எம்.ஆர். ராதா குத்தாட்டம் போட்ட ‘மாமா மாமா மாமா’ (மகாதேவனையே ‘மாமா’ என்றுதான் அனைவரும் அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது), ’ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே’, ’ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்’, ’வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி என் எதிரே வந்தாள்’, ‘காவியமா நெஞ்சின் ஓவியமா’, ‘ஒரு நாள் போதுமா’, ‘பாட்டும் நானே பாவமும் நானே’, ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’, ’ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா’, ‘கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்’, ‘பதினாறும் நிறையாத பருவமங்கை’, ‘பட்டணம்தான் போகலாமடி’, ‘சித்தாடை கட்டிக்கிட்டு’, ‘வீணைக்கொடியுடைய வேந்தனே’ (வெங்கட்ராகவனுக்கு மிகப்பிடித்த பாடல் இது. ராவணனே விஸ்தாரமாகப் பாடும் பாடல்), ‘மண்ணுக்கு மரம் பாரமா’, ‘கல்லிலே கலைவண்ணம் கண்டான்’, ‘கல்யாணம் ஆனவரே சௌக்யமா’, ‘சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாள்’, ‘ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்’, ‘கட்டித்தங்கம் வெட்டியெடுத்து’, ‘கங்கைக்கரைத் தோட்டம்’, ‘ஒருவன் மனது ஒன்பதடா’, ’உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்’, ‘மஞ்சள் முகமே வருக’, ‘ஹலோ ஹலோ சுகமா’, ‘கண்ணெதிரே தோன்றினாள்’, ஏ.பி. நாகராஜனின் பாடல்கள், சங்கராபரணம் பாடல்கள் என்று கே.வி. மகாதேவனின் பிரபல பாடல்களை இங்கே பட்டியல் போட ஆரம்பித்தால், நூறு பக்கங்களையும் தாண்டி எழுதவேண்டிவரும் என்பதால், அவரது இசையில் எனக்குப் பிடித்த ஒரு பாடலை மட்டும் இங்கே கவனிக்கலாம்.

அதற்கும் முன்னர், கே.வி. மகாதேவன் எப்படி இசையமைப்பார் என்றும் பார்க்கலாம். தமிழில் ஒரு அரிய மாண்பை அவர் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தார். பொதுவாக இசையமைப்பாளர்கள் ஒரு ட்யூனை அமைப்பார்கள். பின்னர் அந்த மெட்டுக்கு ஏற்பப் பாடலாசிரியர்கள் பாடல் வரிகளை எழுதுவார்கள். இதுதான் வழக்கம். ஆனால் கே.வி. மகாதேவனோ, முதலில் பாடலை எழுதி வாங்கிக்கொள்வார். அதன்பின் அந்தப் பாட்டுக்கு மெட்டமைப்பார். இதுதான் மகாதேவனின் கொள்கையும் கூட. எனவே, அவர் இசையமைத்த படங்களில் பெரும்பான்மையான பாடல்கள் இப்படி இசையமைக்கப்பட்டவையே.

அறுபதுகள் தவிர, எழுபதுகள், எண்பதுகளில் கூடப் பிரமாதப்படுத்தியவர் மகாதேவன். அவருக்கு தேசிய விருது வாங்கித்தந்த ‘சங்கராபரணம்’, எண்பதுகளின் படமே. தமிழில் இது பிய்த்துக்கொண்டு ஓடியது நினைவிருக்கலாம். இப்படத்தின் பாடல்கள் இன்றும் மறக்க இயலாதவை.

கே.வி. மகாதேவன் இசையமைத்து, பி. மாதவன் இயக்கி, 1963ல் வெளிவந்த படம், ‘அன்னை இல்லம்’. சிவாஜி கணேசனும் தேவிகாவும் நடித்தது. இந்தப் படத்தில் அத்தனை பாடல்களும் பிரமாதமாக இருக்கும். ‘எண்ணிரண்டு பதினாறு வயது’ பாடலை மறக்கவே முடியாது. ’நடையா இது நடையா’ பாடல் ஒரு காலத்தில் தூர்தர்ஷனின் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் டேப் தேய ஒளிபரப்பட்ட பாடல்.

இப்படத்தில்தான் ‘மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்’ என்ற அற்புதமான பாடல் இடம்பெறுகிறது. கதாநாயகனும் நாயகியும் காதல் பொங்கப் பாடிக்கொள்ளும் பாடல். இந்தப் பாடலின் மெட்டை கவனித்துப் பாருங்கள். அவ்வளவு அழகான ட்யூன் இது. பாடிய சுசீலாவும் டி.எம்.எஸ்ஸும் பிரமாதப்படுத்தியிருப்பார்கள். பாடலை எழுதியவர் கண்ணதாசன். சொல்லவும் வேண்டுமா பாடலின் இனிமைக்கு?

கே.வி. மகாதேவன் ஒரு ஜீனியஸ். அவரது பாடல்களைத் தேடிப்பிடித்துக் கேட்டுப் பாருங்கள். தமிழின் அற்புதமான இசையமைப்பாளர்களில் ஒருவர். இவரைத் தவிர்த்துவிட்டுத் தமிழ்த்திரையுலகை நினைத்தே பார்க்க இயலாது.

(உண்மையில் இந்த அத்தியாயத்தில், ‘வீர அபிமன்யு’ படத்தின் ‘பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அணைத்தேன்’ என்ற அட்டகாசமான பாடலைப் பற்றி எழுதவேண்டும் என்றே நினைத்தேன். ஆனால் இரண்டு பாடல்களையும் திரும்பித்திரும்பிக் கேட்கையில், ‘மடிமீது தலைவைத்து’ பாடலே வென்றது).

மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்

மறு நாள் எழுந்து பார்ப்போம்

மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்

மறு நாள் எழுந்து பார்ப்போம்

மங்கலக் குங்குமம் நெஞ்சிலே மல்லிகை மலர்கள் மண்ணிலே

மங்கலக் குங்குமம் நெஞ்சிலே மல்லிகை மலர்கள் மண்ணிலே

பொங்கிய மேனி களைப்பிலே பொழுதும் புலரும் அணைப்பிலே

ஆஹா ஓஹோ ம்ம்

மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்

மறு நாள் எழுந்து பார்ப்போம்

இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே

இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே

சேவல் குரலே கூவாதே சேவல் குரலே கூவாதே

சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே

மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்

மறு நாள் எழுந்து பார்ப்போம்

வாயின் சிவப்பு விழியிலே மலர்க்கண் வெளுப்பு இதழிலே

வாயின் சிவப்பு விழியிலே மலர்க்கண் வெளுப்பு இதழிலே

சாயும் நிலவின் மழையிலே காலம் நடக்கும் உறவிலே

மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்

மறு நாள் எழுந்து பார்ப்போம்

பி.கு – கட்டுரைக்குப் பெரிதும் உதவியது, ராண்டார் கை எழுதிய பழைய திரைப்படங்களைப் பற்றிய கட்டுரைகள். அவைகள் நிஜமாகவே பொக்கிஷம் எனலாம். கூடவே, கோவையைச் சேர்ந்த பி.ஜி.எஸ் மணியன் அவர்கள் எழுதியிருக்கும் கட்டுரைகளும். ஒவ்வொரு தகவலையும் அவ்வளவு அற்புதமாகத் தொகுத்து வழங்கியிருக்கிறார் மணியன்.

பாடலின் சுட்டி:

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com