13. மனசுல சூர காத்தே...!

தமிழ்த் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் இந்தியத் திரைப்படங்களிலேயே கூட, எப்போதுமே பாடல்களைப் பாடுபவர்கள் சிறந்த, நளினமான குரல்களைக் கொண்ட பாடகர்களாகத்தான் இருந்து வந்திருக்கின்றனர்.
13. மனசுல சூர காத்தே...!

தமிழ்த் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் இந்தியத் திரைப்படங்களிலேயே கூட, எப்போதுமே பாடல்களைப் பாடுபவர்கள் சிறந்த, நளினமான குரல்களைக் கொண்ட பாடகர்களாகத்தான் இருந்து வந்திருக்கின்றனர். தமிழை எடுத்துக்கொண்டால் தியாகராஜ பாகவதர், டி.எம்.எஸ், பி.பி ஸ்ரீநிவாஸ், யேசுதாஸ், ஜெயச்சந்திரன், எஸ்.பி.பி, மலேஷியா வாசுதேவன், மனோ போன்ற பாடகர்களும், பி.சுசீலா, எஸ்.ஜானகி, ஜிக்கி, வாணி ஜெயராம், சுநந்தா, சித்ரா, சுஜாதா போன்ற பாடகிகளும் மிகப்பிரபலம். இவர்கள்தான் தமிழ்த் திரையுலகில் அதிகமான பாடல்களைப் பாடியிருப்பவர்கள். படம் எப்படி இருந்தாலும் சரி – நடிகர் யாராக இருந்தாலும் சரி – இவர்களில் யாராவதுதான் பாடல்களைப் பாடியிருப்பார்கள். கதாநாயகன்/கதாநாயகிக்கு இவர்களின் குரல் பொருந்தியிருந்தாலும் பொருந்தாவிட்டாலும் – அந்த சூழ்நிலைக்குப் பாடல் பொருந்தியிருந்தாலும் பொருந்தாவிட்டாலும் – இவர்களில் ஒருவர்தான்.

அதேபோல், பாடல்களின் சூழ்நிலைகளுக்குத் தேவையான இசையும் கச்சிதமாக அந்தச் சூழலுக்கு இசையமைக்கப்பட்டிருக்காது. மாறாக, இயல்பாக இல்லாமல், அந்தச் சூழலையே இன்னும் தூக்கிக்காட்டி அதன்மூலம் சற்றே செயற்கையான சூழலாக அதனை வெளிக்காட்டும் இசையே (romanticized music) பல வருடங்களாக இருந்து வந்தது. இது தவறே அல்ல. இந்தியா முழுதுமே இப்படித்தான் இருந்தது (சில வங்காளப் படங்களைத் தவிர). உங்களுக்குப் பிடித்த எந்தப் படத்தையும் யோசித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட ரொமாண்டிசைஸ் செய்யப்பட்ட சூழல்கள்தான் மிக அதிகம் என்பதை உணர்வீர்கள். காரணம் இந்தியாவில் இசை என்பது திரைப்படப் பாடல்களின் வாயிலாக மட்டும்தான் பெரும்பாலும் பல வருடங்களாக அறியப்படுகிறது. எனவே திரைப்படங்களின் காட்சிகள் ரொமாண்டிசைஸ் செய்யப்பட்டு இருப்பதால் பாடல்களும் அப்படித்தான் இருக்கமுடியும்.

ஹிந்தியில் அனுராக் காஷ்யப் மற்றும் அமித் த்ரிவேதியின் மூலம் இது உடைந்தது. அந்தப் படம் – தேவ் டி. ’திரை இசைக்குத் தேவையான குரல்’ (மேலே உள்ள பட்டியலைப் பார்த்துக்கொள்ளவும்) என்றே கற்பனை செய்யமுடியாத குரல்களெல்லாம் அந்தப் படத்தில் பாடின. அதுதான் இயல்பாகவும் இருந்தது. அடுத்ததாக அனுராக்கின் ‘குலால்’ படத்தின் மூலம் பியுஷ் மிஷ்ராவும் இயல்பான, சூழலுக்குக் கச்சிதமாகப் பொருந்திய, ரொமாண்டிசைஸ் செய்யப்படாத இசையைக் கொடுத்தார். தமிழில் ‘பருத்தி வீரன்’ படத்தை இதற்கு ஒரு உதாரணமாகச் சொல்லலாம் (’டங்கா டுங்கா’ மற்றும் ’ஊரோரம் புளியமரம்’ – இந்த ஊரோரம் புளியமரம் பாடலின் மூலம் – ’புதிய வார்ப்புகள்’ படத்தில் வரும் தெருக்கூத்து.). ‘விருமாண்டி’ படத்தில் ஒன்றிரண்டு பாடல்கள் இப்படி இருக்கும் (’கருமாத்தூர் காட்டுக்குள்ளே’). அதேபோல் ‘தேவதை’ படத்தின் ’வாரானே வாரானே வாட்டமுள்ள அரக்கன்’ பாடல். எம்.எஸ்.வியும் சரி – இளையராஜாவும் சரி – ரஹ்மானும் சரி – இப்படிப்பட்ட இயல்பான இசையை மிகவும் அரிதாகத்தான் கொடுத்திருக்கின்றனர்.

ரஹ்மானுக்கு ‘தில்லி 6’ படம் ஒரு உதாரணம். இந்தியத் திரை இசை கடந்த சில வருடங்களாகத்தான் இப்படிப்பட்ட இயல்பான இசையை வழங்கத் துவங்கியிருக்கிறது என்று அவசியம் சொல்லலாம். இந்த மாற்றத்துக்குக் காரணம் அனுராக் காஷ்யப், விஷால் பரத்வாஜ் போன்ற இளைய தலைமுறை இயக்குநர்களின் படையெடுப்புதான். கூடவே, இப்போதைய உலகில் உலகின் அத்தனை மூலைகளிலும் இருக்கக்கூடிய இசை பற்றி இசை ஆர்வலர்களுக்கு அவசியம் பல தகவல்கள் கிடைப்பதும்தான். இது மிகவும் வரவேற்கத்தக்க விஷயமே.எனவே, தமிழ்த் திரைப்படங்களில், இயல்பான, சூழலுக்குத் தகுந்த பாடல்கள் தற்சமயம் வெளிப்பட ஆரம்பித்திருக்கும் காலகட்டத்தில்தான் சந்தோஷ் நாராயணனின் இடம் முக்கியமானதாகிறது.

’அட்டகத்தி’ பாடல்களை எடுத்துக்கொண்டால், அந்தப் படம் சென்னையின் ஊர்ப்புறத்தில் வாழும் இளைஞன் ஒருவனைப்பற்றிய படம். அவனது வாழ்க்கையில் சிறுவயதுமுதலே ’கானா’பாடல்கள் முக்கியமான இடத்தை வகித்து வந்திருக்கின்றன. அப்படியென்றால் அவன் உற்சாகமாகப் பாடும் தருணங்கள் எப்படி இருக்கும்? ’ஆடி போனா ஆவணி – அவ ஆள மயக்கும் தாவணி’ என்பதுபோன்ற கானாவாகத்தானே இருக்கும்? அந்தப் பாடலுமே ரொமாண்டிஸைஸ் செய்யப்பட்ட சூழலில் வருவதில்லை. மாறாக இயல்பான தருணம் ஒன்றில்தான் வருகிறது. பாடலைப் பாடியவர் கானா பாலா. கானா பாடல்களைப் பாடுவதே இவரது தனித்தன்மை. இப்படி சூழல், பாடகர், இசை ஆகிய அனைத்தும் இயல்பாக இருப்பதே நல்ல இசைக்கும் படத்துக்கும் அடையாளம். மாறாக, இந்த தருணத்தில் தபேலா, டோலக் சகிதம் யேசுதாஸ் அல்லது ஜெயச்சந்திரன் போன்ற ஒரு குரல் ஒரு இனிமையான பாடலைப் பாடியிருந்தால் எப்படி இருந்திருக்கும்? பாடல் ஒருவேளை ஹிட் ஆகியிருக்கலாம். ஆனால் அந்த சூழலுக்குச் சற்றும் பொருந்திருக்காது.

இதுவேதான் ’நடுக்கடலுல கப்பலா’ பாடலுக்கும் பொருந்தும். பாடல் இடம்பெறும் சூழல் அத்தகையது. இதுபோன்ற இடங்களில் இயக்குநரின் கருத்தும் இன்றியமையாதது. ‘இன்னின்ன சூழலில் இன்னின்ன பாடல் வேண்டும்’ என்று கேட்டுப்பெறும் தன்மை அவசியம் ஒரு இயக்குநரிடம் இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் அந்தப் பாடல்கள் இயல்பாக இருக்கும்.

அந்தவகையில் சந்தோஷ் நாராயணனிடம் வேலைவாங்கிய இயக்குநர் ரஞ்சித்தும் குறிப்பிடத்தக்கவர். அந்தப் படத்தில் ஒரு பேண்டு வாத்திய இசையும் உண்டு. ’அடி என் கானா மயில்’ என்ற பாடலும் இப்படிப்பட்டதே. சந்தோஷ் நாராயணனின் இசையைக் கேட்டால், அவர் முழுக்க முழுக்க வெஸ்டர்ன் இசையால் கவரப்பட்டவர் என்பது புரியும். அப்படிப்பட்டவரை கானாவை நோக்கி அழைத்துக் கொண்டு வந்தது இயக்குநரின் சாமர்த்தியம்தான் என்று தோன்றுகிறது. இதுதான் பரிசோதனை முயற்சி. இப்படிச் செய்யச் செய்யத்தான் ஒரு இசையமைப்பாளர் மெருகேற முடியும். மாறாக, தனக்கு எது வருகிறதோ அதிலேயே இருந்து கொண்டிருந்தால் தேக்கநிலை வந்துவிடும்.

அப்படித்தான் ‘குக்கூ’ படத்தை நாம் கருதவேண்டும். இது சந்தோஷ் நாராயணனின் களமே அல்ல. இது இளையராஜாவுக்கான களம். ஆனால், சந்தோஷ் நாராயணன் போன்ற ஒரு வெஸ்டர்ன் பாதிப்புள்ள இசையமைப்பாளர் இப்படித் தனக்கு இயல்பாக இல்லாத களத்தில் இறங்குவதே அவரை இன்னும் மேம்படுத்தும். அதேபோல் குக்கூ பாடல்கள் அந்தப் படத்துக்குத் தேவையான உணர்வுகளை வழங்கவே செய்தன. உண்மையில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்த பாடல்களிலேயே, குக்கூவின் பாடல்களுக்குத் தனி இடம் உண்டு என்பது என் கருத்து. ராஜு முருகன் இளையராஜா ரசிகர். எனவே அவரது படத்தில் பாடல்களும் அந்தச் சாயலில்தான் இருக்கும். அதில் சந்தோஷ் நாராயணனிடம் பாடல்கள் வாங்கியது அவரது திறமைதான்.

குக்கூவில், ‘மனசுல சூறக்காத்தே’ என்ற பாடலைப் பலரும் இன்னுமே மறந்திருக்க இயலாது. கேட்டவுடனேயே மனதில் தங்கிக்கொள்ளும் வகையைச் சேர்ந்த பாடல் இது. பாடலைப் பாடியிருக்கும் ஷான் ரோல்டன் பற்றியும் அவசியம் சொல்லவேண்டும். அற்புதமான குரல் படைத்த பாடகர். சமீபகாலங்களில் இவரது குரலின் வீச்சைப் போல இன்னொரு குரலை நான் கேட்டதில்லை. எந்தவகையான பாடலாக இருந்தாலும் அநாயாசமாகப் பாடக்கூடிய குரல் இது. அவர் இசையமைத்துக் கொண்டிருப்பதும் வரவேற்கத்தக்கதே. ‘ஜோக்கர்’ படத்தில் தனது முழுத்திறமையையும் உபயோகித்திருப்பார். ஷான் ரோல்டனுடன் இணைந்து பாடியுள்ள திவ்யா ரமணியின் குரலும் பிரம்மாதம். இசை, குரல், வரிகள் என்று அனைத்திலுமே அருமையான அனுபவத்தைத் தரக்கூடிய பாடல்.

மனசுல சூர காத்தே அடிக்குது காதல் பூத்தே

மனசுல சூர காத்தே அடிக்குது காதல் பூத்தே

நிலவே சோறூட்டுதே கனவே தாலாட்டுதே

மின்னல் ஓசையும் காதிலே கேக்குதே

உந்தன் வாசனை வானவில் காட்டுதே

வாவென்று சொல்லும் முன்னே வருகின்ற ஞாபகம்

கண்ணே உன் கண்ணில் கண்டேன் அறியாத தாய்முகம்

ரகசிய யோசனை கொடுக்குதே ரோதனை

சொல்லாத ஓசை என்னை சுடச்சுடக் காய்ச்சுதே

பொல்லாத நெஞ்சில் வந்து புது ஒளி பாய்ச்சுதே

கண்ணிலே இல்லையே காதலும் நெஞ்சமே காதலின் தாயகம்

ஆனந்தம் பெண்ணாய் வந்தே அழகாய் பேசுதே

மின்சார ரயிலும் வண்ணக்குயில் போல கூவுதே

கைதொடும் போதிலே கலங்கவும் தோணுதே

அன்பே உன் அன்பில் வீசும் கருவறை வாசமே

எப்போதும் என்னில் வீச மிதந்திடும் பாவமே

மூங்கிலே ராகமாய் மாறுதே

மூச்சிலே வானொலி பாடுதே

மனசுல சூர காத்தே அடிக்குது காதல் பூத்தே

மனசுல சூர காத்தே அடிக்குது காதல் பூத்தே

மின்னல் ஓசையும் காதிலே கேக்குதே

உந்தன் வாசனை வானவில் காட்டுதே

பாடலின் சுட்டி - 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com