14.இறை...இசை...ஏ.ஆர்.ரஹ்மான்..! - ஒரு சூஃபி பயணம் (1)

இந்த வாரம், ரஹ்மான் இசையமைத்திருக்கும் முக்கியமான சூஃபி பாடல்கள் பற்றிப் பார்க்கலாம்.
14.இறை...இசை...ஏ.ஆர்.ரஹ்மான்..! - ஒரு சூஃபி பயணம் (1)

இந்த வாரம், ரஹ்மான் இசையமைத்திருக்கும் முக்கியமான சூஃபி பாடல்கள் பற்றிப் பார்க்கலாம். ரஹ்மான் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தாலும், அவரது சூஃபி ஈடுபாடு குறித்தும், அதில் அவரது பாடல்கள் குறித்தும் பொதுவான பாடல்கள் பற்றிய கட்டுரைகளில் எழுத முடியாது. இது அவசியம் தனியாகவே எழுதப்படக்கூடிய தலைப்புதான்.

ரஹ்மானிடம் உள்ள விசேடம் என்னவென்றால், சூஃபி இசையை அவரது பல பாடல்களில் அளித்துள்ளார் என்பதே. அவற்றில், காதல் பாடல்களும் அடங்கும். எனவே, நான் இங்கே எழுதப்போவது, இப்படிப்பட்ட அவரது பிரத்யேக சூஃபி பாடல்கள். இறைவனிடம் இறைஞ்சும் தன்மை உடையனவும் இவற்றில் அடங்கும். அதேசமயம், இறைப் பாடல்களாக இல்லாமல், காதல் பாடல்களாகவே இருந்தாலும்கூட, அவற்றிலும் சூஃபித் தன்மை உள்ள பாடல்களையும் பார்க்கலாம்.

முதலில், சூஃபி என்றால் என்ன அல்லது யார்? இதைத் தெரிந்துகொண்டால், இந்தப் பாடல்களை இன்னும் ஆழமாக ரசிக்கமுடியும். எவர் ஒருவருக்குப் பிற உயிர்களின் மீது அளவற்ற அன்பு இருக்கிறதோ, எவர் ஒருவர் இறைவனின் மீது அளவில்லாத அன்பு கொண்டிருக்கிறாரோ, எவர் ஒருவர் மீது இறைவனும் அளவற்ற அன்பு செலுத்துகிறானோ, அவரே சூஃபி. உலகின் சகல இயக்கங்களிலும் இறைவனின் அருள் செயல்படுவதைக் கண்டு அறிந்து வாழ்பவர்களே சூஃபிக்கள். இவர்கள், தாங்கள் கண்டுணர்ந்த விஷயங்களைப் பாடல்களாகவும் புத்தகங்களாகவும் அளித்தும் இருக்கிறார்கள். இப்படித்தான் சூஃபிக்கள் முஸ்லிம் மதத்தினரால் விளக்கப்படுகிறார்கள் (இத்தகைய நிலையில் இருப்பவர்கள் பல்வேறு மதங்களிலும் உண்டு. அருளாளர்கள் என்பது பொதுவான பொருள்).

இப்படிப்பட்ட சூஃபிக்கள், தங்களது இறைநம்பிக்கையை வெளிப்படுத்தும் வண்ணம் பாடல்களை எழுதினர். இறைவன் மீது இவர்களின் காதல் பொங்கி, அந்தக் காதலை உள்ளத்தைத் தொடும் இசையோடு வழங்கினர். இந்தியாவில் மிகப்பெரும்பாலும் ‘கவ்வாலி’ (Qawwali – கடவுளைப் பற்றிய உச்சரிப்பு) என்ற சூஃபி இசைவடிவமே பிரபலம். இது முகலாயர்கள் காலத்தில் பெர்ஷிய, அரேபிய, துருக்கிய இசைகளுடன் இந்திய இசையைக் கலந்து உருவானது என்று அறிகிறோம்.

பெரும்பாலும் உருது வார்த்தைகள் இந்தக் கவ்வாலிகளில் இடம்பெறும். உருது மொழிக்கே ஒரு இனிமை உண்டு. ஹிந்தியில் பல பாடல்களில் பெரும்பாலும் உருது வார்த்தைகளே உபயோகப்படுத்தப்படுகின்றன. அவை துல்லியமாக உச்சரிக்கப்படும்போது எழும் இனிமையை எழுத்தில் வடிக்க இயலாது. கேட்டால் மட்டுமே புரியும் (முகத்தர் என்ற வார்த்தையை அப்படியே உச்சரிக்க இயலாது. மு(க்)ஹத்தர் என்று சொல்லவேண்டும். மேல்தொண்டையில் இருந்து எழும் ‘க்ஹ’ என்ற ஒலி, உருதுவின் வார்த்தைகளுக்கு மிகவும் முக்கியம். உச்சரிப்பு துல்லியமாக இருந்தால்தான் அவ்வார்த்தைகள் ஏற்றம் பெறும்). உதாரணமாக, ரஹ்மானின் ‘தில் ஸே’ (தமிழில் உயிரே) படத்தின் ஹிந்திப் பாடல்களைச் சொல்லலாம். குல்ஸார் என்ற அற்புதமான கவிஞனின் பாடல்வரிகள் மூலமாக உருது அத்தனை அழகாகப் பாயும். அப்படத்தில் ‘சைய சைய சய்யா சய்யா’ பாடலைக் கேட்டாலே போதும். ’ஜின்கே சர் ஹோ இஷ்க் கி ச்சாவோன்.. பாவ்(ன்) கே நீச்சே ஜன்னத் ஹோகி’ என்ற வரிகளுடன்தான் அந்தப் பாடலே துவங்குகிறது. இவ்வரிகளுக்கு என்ன அர்த்தம் என்றால், ‘எவரெவர்களின் தலைகளில் காதலின் நிழல் படிந்திருக்கிறதோ, அவர்களின் பாதங்களுக்கு அடியில் சொர்க்கம் இருக்கிறது’ என்பதே. குல்ஸாரின் அற்புதமான கவித்துவத்துக்கு இவ்வரிகள் ஒரு சிறிய உதாரணம் மட்டுமே. இப்பாடல் நெடுகிலும் அவ்வளவு அற்புதமான வரிகளும் வார்த்தைகளும் உருதுவில் உள்ளன. இந்தப் பாடல் ஒரு சூஃபி பாடல் என்று சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். ஆனால் நிஜம். பாடலின் வரிகளின் பொருளைக் கவனித்தாலே போதும். நான் மேலே குறிப்பிட்ட வரிகளே ஒரு அழகான சூஃபிக் கவிதை போன்றவைதான்.

அதேபோல் தில் ஸே படத்தில் இடம்பெறும் மற்றொரு பாடலான ‘தில் ஸே ரே’ (சந்தோஷக் கண்ணீரே), இதுவரை எனக்குப் பிடித்த அத்தனை பாடல்களிலும் சிறந்த பாடலாகவே தோன்றும். காரணம், அப்பாடலில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் அட்டகாசமான, உலகத்தரமான இசை மட்டும் அல்ல. அந்தப் பாடலின் வரிகளும், அவ்வரிகள் நமக்கு உணர்த்தும் பொருளுமேதான். ஒருசில வரிகளை மட்டும் கவனிக்கலாம்.

’சூரியன் உதித்துவிட்ட வேளை..

தட்பவெப்பம் கொஞ்சம் குறைந்திருந்த வேளை..

ஒரு சூறைக்காற்று உருவானது..

உள்ளத்தில் இருந்து அப்போது ஒரு கதறல் வெடித்துக் கிளம்பியது..

இதயம், போயும் போயும் இதயம்தானே?

இனிமையும் கடுமையும் கலந்த ஒன்றுதானே அது?

இலையுதிர்காலத்தின் இரண்டு இலைகள், கிளைகளில் இருந்து உதிர்ந்தன..

பல காலங்கள் கடந்தன..

அந்த இரண்டு துயரமான இலைகள், மீண்டும் துளிர்க்க விரும்பி, மிகப்பெரிய பாலைவனத்தையும் காடுகளையும் கடந்துபோயின..

அந்த இலைகள், நமது இதயங்கள்தான்..

இதயம் என்று இருந்தால் வலி என்பதும் இருக்கும்..

வலி என்று இருந்தால் அங்கே இதயமும் இருக்கும்..

காலங்கள் கடந்துகொண்டே இருக்கின்றன..இதயத்தில் இருந்து…

இதுதான் பாடலின் முதல் சரணத்தின் (தோராயமான) மொழிபெயர்ப்பு. கட்டாயம் இது சூஃபி வகையைச் சேர்ந்த பாடல்தான் என்பது வரிகளைப் படித்தாலே தெரிந்திருக்கும். தத்துவார்த்தமாகக் காதலை அணுகுகிறது இப்பாடல். எழுதியவர் குல்ஸாரேதான். உண்மையில் ஹிந்தியில் இவை மிக மிக ஆழமான வரிகள்.என் மொழிபெயர்ப்பு தோராயம்தான். ஹிந்தியில் இப்படிப்பட்ட வரிகள் சர்வசாதாரணமாகப் பாடல்களில் இடம்பெறும். இதை எப்படி நாம் உணர முடியும் என்றால், மனுஷ்யபுத்திரன் இதுவரை அவரது வாழ்நாளில் எழுதிய ஒரே திரைப்படப் பாடலான ‘அல்லா ஜானே’ (உன்னைப்போல் ஒருவன்) பாடல் வரிகளை ஒருமுறை படித்துப் பாருங்கள். ஒருசில வரிகளை இங்கே கொடுக்கிறேன்.

‘வீதிகள் எங்கும் வேதனை நிழல்கள்..

வீடுகள் எங்கும் விம்மிடும் குரல்கள்..

வீட்டுக்குப் போகும் பாதைகள் எங்கே..

வேட்டை முடிந்து திரும்புதல் எங்கே..

பிள்ளைகள் நடுங்கும் பேய்களின் நடனம்..

பேரிருள் இன்று நிலவினைத் திருடும்..

அழிந்தவர் குரல்கள் சுவர்களில் கேட்கும்..

அடுத்தவர் மொழிகள் திசைகளை அசைக்கும்..

வெல்பவர் இல்லாப் போர்களில் இங்கே..

வீழ்ந்தவர்க்கெல்லாம் பேர்களும் இல்லை..

முகங்கள் இல்லா மரணத்தின் பாதை

முடிவொன்றும் இல்லா அழிவொன்றின் பாதை..’

இந்த வரிகள் எப்படி உள்ளன? இவ்வரிகளோடு, ‘அன்பே.. கண்ணே.. அமுதே.. காதலே.. தேவதையே.. கந்தர்வனே..உன் குழந்தையை என் வயிற்றில் சுமக்க வேண்டும்.. அதுவே காதலின் லட்சியம் (சத்தியமாக இதே வரிகள் அண்மையில் ஒரு பிரபல திரைப்படத்தின் பாடலில் இடம்பெற்றன)’ என்றெல்லாம் மிகமிகப் பெரும்பாலும் வரிகள் இடம்பெறும் சமகாலத் தமிழ்ப்பாடல்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போதுதான், குல்ஸார், ஜாவேத் அக்ஹ்த்தர், இர்ஷாத் கமில், ஆனந்த் பக்‌ஷி, மஜ்ரூ(ஹ்) சுல்தான்புரி போன்றவர்கள் எழுதும் பாடல் வரிகளின் முக்கியத்துவம் புரியும். வைரமுத்துவின் வரிகளில் ஆங்காங்கே அற்புதமான பொருள்கள் தெறிக்கும். ஆனால் அவரை விட்டால், இப்படிப்பட்ட ஆழமான பொருளோடு பாடல்கள் எழுத இங்கே பாடலாசிரியர்கள் குறைவே. ஆனால் உண்மையில் தமிழில் அருமையான கவிஞர்கள் ஏராளம். மனுஷ்யபுத்திரன் ஒரு உதாரணம். இப்படிப்பட்டவர்களை நம் திரையுலகம் உபயோகித்துக்கொண்டால் ஏராளமான ஆழமான பாடல் வரிகள் கிடைக்கும் என்பது என் தனிப்பட்ட ஏக்கம். மனுஷ்யபுத்திரனுக்கே இதுவரை ஒரே ஒரு பாடல்தான் கிடைத்தது என்பதை நினைவில்கொண்டால், அது கடினம் என்பதும் புரியும். அதுதான் தமிழின் பிரச்னை. நான் இங்கே தமிழைக் குறையே சொல்லவில்லை. ஆனால் அருமையான கவிஞர்கள் இருக்கும் சூழலில் ஏன் படங்களின் பாடல்கள் ஆழமாக இல்லை என்பதே என் வருத்தம்.

ரஹ்மானின் தில் ஸே பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அதிலேயே எனக்கு தில் ஸே ரேயை விடவும் மிகவும் பிடித்த பாடல் ஒன்று உண்டு. அதுதான் சைய்ய சைய்யா பாடலின் softer வெர்ஷனான ‘தய்ய தய்ய தய்யா தய்யா’. இந்தப் பாடல் உருவான கதை சுவாரஸ்யமானது. சுக்வீந்தர் சிங்குடன் ரஹ்மான், ’தக்‌ஷக்’ என்ற கோவிந்த் நிஹலானி படத்தில் வேலை செய்திருக்கிறார். அதில் ஹிட் பாடலான ‘முஜே ரங்தே’ பாடலை எழுதியவர் சுக்வீந்தர்தான். எனவே, சுக்வீந்தருக்குப் பிடித்த பஞ்சாபிக் கவிஞரான புல்லே ஷா (Peer Baba Bulleh Shah – பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சூஃபிக் கவிஞர்) பற்றி ரஹ்மானிடம் சொல்கிறார். ஒரு தர்ஹாவில் கேட்ட அவரது சில வரிகளை ரஹ்மானிடம் படித்துக் காட்டுகிறார். ரஹ்மானும் அவரது பாடல்களைப் படித்துப் பார்க்கிறார். அப்போது உருவான பாடல்தான் இது (உண்மையில் தில் ஸேயின் பாடல்கள் எல்லாமே தனிப்பட்ட சுஃபி ஆல்பத்துக்காக ரஹ்மான் உருவாக்கி வைத்திருந்தவையே). பின்னர் தில் ஸேயில் அந்தப் பாடலின் வரிகளில் குல்ஸாரின் உருது வார்த்தைகளும் சேர்ந்துகொண்டு, பாடலை ஒரு தூக்கு தூக்குவிட்டன.

தைய்ய தைய்யா பாடலின் வரிகளும் வசீகரமானவையே. முடிந்தால் பாடலின் வரிகளைக் கவனித்துப் பாருங்கள். இணையத்தில் பாடலின் மொழிபெயர்ப்பும் தாராளமாகக் கிடைக்கிறது.

தில் ஸேயின் பாடல்களில் இருக்கும் சூஃபித் தன்மைக்கு, ’சத் ரங்கீரே’ பாடல் இன்னொரு உதாரணம். காதலில் இடம்பெறும் ஏழு நிலைகளைப் பற்றி மிகவும் விரிவாக இப்பாடல் பேசுகிறது. இந்த ஒவ்வொரு நிலையும், சூஃபி ஞானிகளின் புத்தகங்களில் இருக்கும் நிலைகளே என்று அறிகிறோம். சாதாரணமான காதலில் ஆரம்பித்து, அதன்பின் மெல்ல நெருங்கி, தீவிரமான காதலாக மாறி, பிரிவு என்பதையே தாங்கமுடியாத நிலைக்குச் சென்று, காதலனோ காதலியோ அல்லது இருவருமே அடுத்தவரிடம் அடிமையாகும் நிலையை அடைந்து, அந்த அடிமை நிலையே ஒருவிதப் பைத்தியமாக மாறி, பின்னர் இறப்பில் முடியும் நிலைகள் அவை. இந்த ஒவ்வொரு நிலையையுமே, இறைவன் என்ற அடிப்படையில் கவனித்தால் எல்லா அர்த்தங்களுமே மாறும். இந்தப் பாடலில் ஒரு ஹம்மிங் பாடல் நெடுக வரும். ‘இஷ்க் பர் ஸோர் நஹி(ன்) ஹை யே வோ ஆதிஷ் காலிப்’ என்று துவங்கும் ஹம்மிங். இந்த வரிகள் மிர்ஸா காலிப்பின் வரிகளே தான். அதை குல்ஸார் தன் பாடலின் இடையே அருமையாகப் பயன்படுத்தியிருக்கிறார் (இவ்வரிகளுக்கு அர்த்தம் என்னவென்றால், ‘காதல் ஒரு பெருநெருப்பு. அதை யாரும் கட்டுப்படுத்த இயலாது, காலிப். நினைத்ததும் அது பற்றிக்கொள்ளாது. அதேபோல் நினைத்ததுமே அதை அணைக்கவும் இயலாது). இந்த வரிகள், காதலின் ஏழு நிலைகளை விளக்கும் பாடலின் இடையே வருவது பொருத்தம்தானே?

எனவே, ரஹ்மானின் சூஃபிப் பாடல்களுக்கு தில் ஸே ஒரு மிகச்சிறந்த உதாரணம் என்பதால் அதைப்பற்றி விபரமாகச் சொன்னேன்.

அடுத்த வாரம், ரஹ்மானின் சூஃபிப் பாடல்களை இன்னும் கொஞ்சம் ஆழமாகக் கவனிக்கலாம்.

ஏ.ஆர்.ரஹ்மான் பாடும் கவ்வாலியின் சுட்டி: 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com