11. விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி..! 

தமிழ்த் திரைப்படங்களின் இசையமைப்பாளர்களில், தேவாவைப்போல் படுவேகமாக இசையமைத்துத் தருபவர்கள் அரிது.
11. விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி..! 

தமிழ்த் திரைப்படங்களின் இசையமைப்பாளர்களில், தேவாவைப்போல் படுவேகமாக இசையமைத்துத் தருபவர்கள் அரிது. தொண்ணூறுகளில் விகடனிலோ குமுதத்திலோ அவரது ஒரு பேட்டியில், மூன்றே நாட்களில் ஒரு படத்தின் மொத்த ரீரெக்கார்டிங்கையும் அவர் முடித்துத் தந்ததைக் குறிப்பிட்டிருந்தார்கள். 1989ல் அறிமுகமாகி, தடதடவென்று தனது இசைப்பயணத்தை முழுவீச்சில் துவக்கிய தேவா இளையராஜாவுக்கு மாற்றாகப் படுவேகமாக வந்துகொண்டிருந்தவேளையில்தான் 1992ல் முற்றிலும் புதிய இசையுடன் ரஹ்மானின் அறிமுகம் நிகழ்ந்தது. அப்போதில் இருந்து, இளையராஜாவுக்கு மாற்று என்றால் ரஹ்மானையே அனைவரும் குறிப்பிடத் துவங்கினர். ஆனாலும், முதல் படத்தில் இருந்தே தேவாவின் இசை இளையராஜாவின் இசையில் இருந்து வித்தியாசமானதே (வித்யாசாகரின் ஆரம்பகாலப் பாடல்கள் இளையராஜா பாடல்கள் போலவே இருக்கும் என்று ஏற்கெனவே கவனித்திருக்கிறோம். ஆனால் தேவா, ரஹ்மான், பரத்வாஜ், யுவன் ஆகியோர், தங்களது முதல் படத்தில் இருந்தே வித்தியாசமாக, தங்களின் முத்திரை அழுத்தமாகப் பதியும்வண்ணமே இசையமைத்தனர்).

ஆனாலும், 1991ல் இருந்து, ஒவ்வொரு வருடமும் தேவாவே மிக அதிகமான தமிழ்ப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார். இது 2004 வரை தொடர்ந்தது. உச்சபட்சமாக, 1997ல் மட்டும் இருபத்தொன்பது படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் தேவா. உலகிலேயே ஒரே வருடத்தில் இத்தனை படங்களுக்கு இசையமைத்தவர் வேறு யாராவது இருக்கமுடியுமா என்று தெரியவில்லை. ஒருவேளை இளையராஜா, எம்.எஸ்வி ஆகியோர் தங்களது உச்சபட்ச நாட்களில் அப்படிச் செய்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

தேவாவின் முதல் படமான ‘மனசுக்கேத்த மகராசா’வில் ‘ஆத்துமேட்டு தோப்புக்குள்ள’ என்ற பாடல் இன்றும் பிரபலம். எஸ்.பி.பியும் சுசிலாவும் பாடிய பாடல் அது. அந்தப் படம் வெளிவந்தபின்னர் தேவா இசையமைத்த ‘வைகாசி பொறந்தாச்சு’ படம்தான் அவரைத் தமிழகத்தின் மூலை முடுக்குக்கெல்லாம் கொண்டு சேர்த்தது. ‘நீலக்குயிலே நீலக்குயிலே’, ‘சின்னப்பொண்ணுதான் வெக்கப்படுது’, ‘கண்ணே கரிசல்மண்ணு’, ‘தண்ணீக் கொடம் எடுத்து’ ஆகிய பாடல்கள் இன்றும் பலருக்கும் நினைவிருக்கலாம். மலேசியா வாசுதேவன் பாடிய ‘ஆத்தா உன் கோவிலிலே’ பாடலைப் பல கோவில்களில் கேட்டிருக்கிறேன். (இந்தப் படமும் பிரமாதமாக ஓடியதால், ஹிந்தியிலும் ‘ஐ லவ் யூ’ என்ற பெயரில் பிரசாந்த்தையே ஹீரோவாகப் போட்டு 1992ல் எடுக்கப்பட்டது). வைகாசி பொறந்தாச்சு படத்துக்காகத் தமிழ்நாடு அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது தேவாவுக்குக் கிடைத்தது.

இப்படத்துக்குப் பின் உடனடியாக மிகவும் பரபரப்பான இசையமைப்பாளராக மாறினார் தேவா. இரண்டே வருடங்களில் ரஜினி படத்துக்கு இசையமைப்பாளராக ஆகிறார் (‘அண்ணாமலை’). பாடல்கள் சூப்பர்ஹிட் ஆகின்றன. சரமாரியாகப் பல படங்கள்.   ‘சூரியன்’ படத்துக்கு இசையமைக்கிறார். மறுபடியும் சூப்பர்ஹிட் பாடல்கள். இப்படியாக, 1991ல் இருந்து அடுத்த பதிமூன்று வருடங்களில் எக்கச்சக்கப் படங்கள்.

தேவாவின் சிறப்பம்சம் என்ன? அவரது பாடல்கள் எந்தவகையில் பிற இசையமைப்பாளர்களிடம் இருந்து மாறுபட்டவை?

தேவாவின் பெரும்பாலான பாடல்களில் ஒரு துள்ளல் இருக்கும். அவர் உபயோகிக்கும் தபலா, டோலக் முதலிய வாத்தியக் கருவிகளின் தாளக்கட்டே வேகமாகத்தான் இருக்கும். இதனாலேயே அப்பாடல்கள் சுசுறுப்பாக இருந்து, நம்மை ஆடவைக்கும் தன்மை உடையவையாக இருக்கும். அவரது எந்தப் படமாக இருந்தாலும் சரி - பாடல்களை கவனியுங்கள். ‘வந்தேண்டா பால்காரன்’, ‘நான் ஆட்டோக்காரன்’, ‘அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா’ போன்ற ரஜினி பாடல்களானாலும் சரி, ‘வேல வேல வேல வேல’, ‘வை ராஜா வை’, கந்தசாமி மாடசாமி குப்புசாமி ராமசாமி’ போன்ற கமல்ஹாஸன் பாடல்களானாலும் சரி, பிற நடிகர்களுக்கு தேவா இசையமைத்த பாடல்களானாலும் சரி - வேகமான தாளக்கட்டால் துடிப்புடன் இருக்கும் பாடல்களாகத்தான் பெரும்பாலானவை இருக்கும். அதேசமயம், இதற்கு எதிர்வெட்டாக, அருமையான பல மெலடிக்களையும் தேவா அளித்திருக்கிறார். ‘ஒரு கடிதம் எழுதினேன்’, ‘கொஞ்ச நாள் பொறு தலைவா’, ‘காதலி காதலி காதலால் தவிக்கிறேன்’, ‘காதல் பிரியாமல்’, ‘ராசிதான் கை ராசிதான்’, ‘தஞ்சாவூரு மண்ணெடுத்து’, ‘ஏ நிலவே’, ‘காலமெல்லாம் காதல் வாழ்க’, ‘நலம் நலமறிய ஆவல்’ போன்ற அழகான பாடல்கள் தேவாவிடம் உண்டு.

தேவா என்றதும் கானா பாடல்களும் நினைவுக்கு வரும். காதல் கோட்டையில், ‘கவலைப்படாதே சகோதரா’ பாடலில் இருந்து கானா பாடல்கள் தொடர்ந்து தேவாவின் இசையில் இடம்பெற ஆரம்பித்தன. அவரே பாடிய அந்தப்பாடல் தமிழ்நாடெங்கும் பிரபலம் அடைந்தது. தொடர்ந்து ‘சலோமியா’, ‘ஒயிட்டு லகான் கோழி ஒண்ணு கூவுது’, ‘கந்தன் இருக்குமிடம் கந்தகோட்டம்’, ‘குன்றத்துல கோயில் கட்டி’, ‘நான் சால்ட்டு கொட்டா’, ‘வா முனிமா வா’, ‘கொக்க கோலா ப்ரவுனு கலருடா’, ‘ஆண்டாளு என் ஆண்டாளு’ முதலிய பாடல்கள் ரசிகர்களை மெய்மறக்கவைத்தன. இப்பாடல்களை இன்றும் பல பேருந்துகளில் கேட்கமுடியும். தேவாவின் கானா ஹிட்ஸ் என்றே டிவிடிக்கள் விற்கப்படுகின்றன.

நடிகர் விஜய்யை அடிக்கடி பாடவைத்தவர் தேவாதான். விஜய்யின் ஆரம்பகாலப் படங்களில் பல, தேவா இசையமைத்தவை. ரசிகன் படத்தின் ‘பாம்பே சிட்டி சுக்கா ரொட்டி வந்தாபாரு செவத்தக்குட்டி’ பாடலின் மூலம்தான் விஜய் பின்னணிப் பாடல்களே பாட ஆரம்பித்தார். இன்றுவரையிலுமே விஜய் பாடிய பாடல்களில் தேவா படங்களே அதிகம்.

தேவாவின் பாடல்களின் கட்டமைப்பு புரிந்து, அவர் பாடல்களே இப்படித்தான் இருக்கும் என்று ரசிகர்கள் ஒரு முடிவுக்கு வரும் நேரங்களில், டமாலென்று தனது இசையமைக்கும் முறையையே மாற்றி, ‘ஆசை’, ‘நேருக்கு நேர்’, ‘வாலி, ‘குஷி’, ‘சிட்டிசன்’, ‘முகவரி’, ‘சாக்லேட்’ போன்ற படங்களுக்கு இசையமைப்பார். இப்படி அவ்வப்போது முற்றிலும் தன்னை மாற்றிக்கொண்டு இசையமைத்த இசையமைப்பாளர் வேறு யாரும் இல்லை என்றே நினைக்கிறேன்.

விஜயகாந்த், சரத்குமார் ஆகிய நடிகர்களுக்குப் பல படங்கள் இசையமைத்திருக்கிறார் தேவா. அதேபோல் அஜீத்துக்கும் விஜய்க்கும் ஆரம்பகாலப் படங்களில் தேவாதான் இசை. தொண்ணூறுகளில் ஒரு சமயத்தில் கல்லூரிப் படங்களாகவே வர ஆரம்பித்திருந்தன. அவற்றில் பெரும்பாலும் தேவாவின் இசைதான் இருக்கும். கட்டாயம் ஒரு குத்துப்பாடலும் உண்டு. க்ளைமேக்ஸுக்கு முன்னர் வரும் பாடல் கானாவாகவோ குத்துப்பாட்டாகவோ அமைப்பதுதான் தனது ஸ்டைல் என்று தேவாவே பேட்டிகளில் கூறியிருக்கிறார். பெரும்பாலும் அவருக்கு முன்னர், இத்தகைய பாடல்கள் ஓரளவு மெதுவாகவே இருக்கும் என்றும், இவர்தான் அப்பாடல்களைத் துடிப்போடு அமைக்கத் துவங்கியதாகவும் குறிப்பிடுகிறார்.

சென்னையில் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துக்குள் மட்டும் பாடப்பட்டுக்கொண்டிருந்த கானா பாடல்களைத் தமிழகமெங்கும் பரப்பியது தேவாதான். அவரது பாதையை அடியொற்றித்தான் இன்று கானா பாலா, மரண கானா விஜி, ஆண்ட்டனி தாசன் முதலியவர்கள் பயணிக்கின்றனர். இந்தப் பயணத்துக்கு விதை, தேவா போட்டதுதான் என்ற வகையில், அவரது பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடலைத்தான் இந்த வாரக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

ரேக்ளா வண்டி ஓட்டும் நபர் ஒருவர், தனது காதலிக்கும் தனக்கும் இருக்கும் உறவைப்பற்றி மகிழ்ச்சியோடு பாடுகிறார். பயணிகளாக வரும் இருவர் அதனை ரசிக்கின்றனர். ‘காதலே நிம்மதி’ என்ற படத்தில் வரும் பாடல் இது. சூர்யா 1998ல் ஹீரோவாக நடித்த படம். முரளி கௌரவ வேடம். சிவசக்தி பாண்டியன் தயாரித்த படம். அப்போதெல்லாம் பல புதுமுக இயக்குநர்களுக்கு அவர் வாய்ப்பு கொடுப்பார். ‘காதல் கோட்டை’, ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ ஆகிய படங்களின் வெற்றிக்குப் பின் இப்படம் வெளியானது. ஆனால் தோல்வி அடைந்தது.

பாடலின் ட்யூன் வசீகரமானது. மட்டுமில்லாமல், பாடலை தேவாவே பாடியிருப்பார். லேசான நடுக்கத்துடன் கூடிய அவரது குரல், கானா பாடல்களுக்கென்றே எழுதிவைக்கப்பட்டது போல இருக்கும். அழகான, துள்ளலான கானா.

விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி..

என் அக்கா மக வந்து நின்னா முன்னாடி

எப்பவுமே காதல் ஒரு கண்ணாடி

அத உடைச்சிடாம பாக்குறவன் கில்லாடி

என் அக்கா பொண்ணு அஞ்சல

நான் வச்சேன் பாரு நெஞ்சுல

நாங்க ரெண்டு பேரும் பிஞ்சுல

அட எங்கேயும் போயி கொஞ்சல

டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா...

ஒரு நாள் மார்கழி மாசம்

காலங்காத்தால அவ வீட்டு முன்னாலே

காலையில் எழுந்து கோலம் போடுகையில்

காதல சுமந்துகிட்டு நானுமிருந்தண்டா

இருந்து பார்க்கையில் ஜன்னல தொறந்தண்டா

கொஞ்சும் குமரிய கண்ணுல பார்த்தண்டா

அவ என்னப்பார்த்தா..நான் அவள பார்த்தேன்

கண்ணும் கண்ணும் முட்டிக்கிச்சி

காதல் வந்து ஒட்டிக்கிச்சி

டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா...

சென்னை மாநகரிலே.. சவுத் உஸ்மான் ரோட்டிலே

லலிதா ஜூவல்லரியில் நெக்லசு வாங்கி தந்தேன்

பகவான் கடையிலே கட்பீசு வாங்கி தந்தேன்

கண்ணுல அளவெடுத்து ஜாக்கெட்டு தைச்சி தந்தேன்

தேவி தியேட்டருல காதல் கோட்டை படம் பார்த்தோம்

அவ என்னைத் தொட்டா . .நான் அவள தொடல

கண்ணும் கண்ணும் முட்டிக்கிச்சு காதல் வந்து ஒட்டிக்கிச்சு

டாவு டாவு டாவுடா டாவில்லாட்டி டையிடா...!

பாடலின் சுட்டி:

(தொடரும்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com