28. அநிருத்  -அதிரும் இளமையின் குரல்..!  

28. அநிருத்  -அதிரும் இளமையின் குரல்..!  

தமிழ்த்திரைப்படங்களில் தற்போதைய இளைஞர்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர் யார்? யோசித்துப் பார்த்தால், அநிருத்தைத் தவிர வேறு யாரையும் சொல்ல இயலவில்லை.

தமிழ்த்திரைப்படங்களில் தற்போதைய இளைஞர்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர் யார்? யோசித்துப் பார்த்தால், அநிருத்தைத் தவிர வேறு யாரையும் சொல்ல இயலவில்லை. அநிருத் இசையமைத்திருக்கும் திரைப்படங்கள் அப்படிப்பட்டவை. இன்றுவரை அண்மைக்காலத்தில் தமிழின் பிரம்மாண்ட ஹிட்களில் பல, இவரது இசைதான். உலகமெல்லாம் சுற்றிய ‘வொய் திஸ் கொலவெறி கொலவெறி டி’ பாடலை இசையமைத்தபோது அநிருத்துக்கு 20-21 வயது இருக்கலாம். அப்போதில் இருந்து இன்றுவரை தமிழின் முதன்மையான இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். Chart topping numbers என்ற, கேட்டதும் பிடித்து விடும் ஹிட்களை ஒவ்வொரு படத்திலும் ஒன்றிரண்டு பாடல்களிலாவது கொடுத்து விடுகிறார். அநிருத்தின் மேல் இருக்கும் ஒரே குற்றச்சாட்டு – வெளிநாட்டுப் பாடல்களில் இருந்து சுடுவது. இருப்பினும் இதைத் தமிழின் கிட்டத்தட்ட அனைத்து இசையமைப்பாளர்களுமே செய்து வருவதால், இதில் அநிருத்தை மட்டும் குற்றம் சாட்டிவிட முடியாது.

’மூணு’ படம்தான் அநிருத்தின் முதல் படம். அதற்கு முன்னர், லயோலாவில் பி.காம் படித்துக்கொண்டிருந்தபோது, ஐஷ்வர்யா ரஜினிகாந்த்தின் பத்துப் பனிரண்டு குறும்படங்களூக்கு இசையமைத்துக் கொடுத்திருந்ததாக அநிருத் பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். இதனால்தான் மூணு படமும் அநிருத்துக்கு வாய்த்தது (அநிருத்தின் குடும்பமும் ரஜினி குடும்பமும் நெருங்கிய உறவினர்கள் என்பது உலகம் அறிந்தது). தனது பத்தாவது வயதில் இருந்தே கம்போஸ் செய்து வந்திருப்பதாக அநிருத் சொல்லியிருக்கிறார். தமிழின் பல இசையமைப்பாளர்கள் இசை கற்றுக்கொண்ட அதே லண்டன்  ட்ரினிடி இசைக்கல்லூரியில்தான் அநிருத்தும் பியானோ படித்திருக்கிறார். சிறுவயதில் இருந்தே இசையில் ஈடுபாடு இருந்ததால் அவரால் ஒரு வெற்றிகரமான இசையமைப்பாளராக வர முடிந்தது. இருப்பினும், அநிருத்தின் குடும்பப் பின்னணியுமே அவர் 21 வயதிலேயே இசையமைப்பாளராக ஆனதற்கும் காரணம் என்பதை மறுக்க முடியாது. அதேசமயம், அப்படி இசையமைப்பாளராக ஆனதற்குப் பிறகு, அவரது திறமையினால்தான் இத்தனை தூரம் பயணித்திருக்கிறார் என்பதும் உண்மையே.

மூணு படத்தின் பாடல்கள் அப்படம் வெளிவந்தபோது பெரிதாகப் பேசப்பட்டன. ‘கண்ணழகா’ பாடலும், ‘நீ பார்த்த விழிகள்’ பாடலும் அனைவருக்கும் பிடித்திருந்தன. அதேபோல் ‘போ நீ போ’ பாடலும். ஆனால் கொலவெறி பாடலே இவைகளை விடவும் உலகம் முழுக்கச் சுற்றியது. அதன் எளிமையான ட்யூனும், உடைந்த ஆங்கிலத்தில் அமைந்திருந்த வரிகளுமே காரணம். அந்தப் பாடல் அநிருத்தின் இசை வாழ்க்கையில் மறக்க முடியாத பாடலாக அமைந்தது.

இதற்குப் பின் அநிருத் இசையமைத்தது, துரை செந்தில்குமார் இயக்கிய ‘எதிர்நீச்சல்’. சிவகார்த்திகேயன் நடித்து, நன்றாக ஓடிய படங்களில் ஒன்று. இந்தப் படத்தின் ‘பூமி என்னை சுத்துதே’, ‘வெளிச்சப்பூவே’, ‘லோக்கல் பாய்ஸ்’, ‘நிஜமெல்லாம் மறந்துபோச்சு’ ஆகிய பாடல்கள் இன்றுமே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. எதிர்நீச்சல் ஆல்பம் அநிருத்துக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது.

இதற்குப் பிறகு, ‘டேவிட்’ படத்தின் ‘கனவே கனவே’ பாடல் அநிருத்துக்குப் புகழ் சேர்த்தது. இளைஞர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்த பாடல் இது. அந்தப் பாடலை அநிருத்தே பாடியும் இருந்தார். அந்த ஒரு பாடல் மட்டுமேதான் அப்படத்தில் அவர் இசையமைத்த பாடலும் கூட. இப்படத்துக்குப் பின்னர் அவர் இசையமைத்த ‘வணக்கம் சென்னை’ படம் ஓடாமல் போனாலும் கூட, பாடல்களால் புகழடைந்தது. ‘ஓ பெண்ணே’ மற்றும் ‘ஒசாகா ஒசாகா’ ஆகியவை அநிருத்தின் இசையமைப்புக்கு உதாரணம். அதற்குப் பிற்கு, செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’ படத்தின் இரண்டு பாடல்களுக்கு இசையமைத்து, படத்தின் பின்னணி இசையையும் அநிருத் கவனித்துக்கொண்டார்.

இதற்குப் பிறகு வந்த 2014 தான் அநிருத்தின் இசை வாழ்க்கையில் இன்றுவரை மறக்க முடியாத ஆண்டு என்று சொல்லலாம். ‘வேலையில்லா பட்டதாரி’, ‘மான் கராத்தே’, ‘கத்தி’, ‘காக்கி சட்டை’ ஆகிய நான்கு படங்களுக்கு அந்த வருடத்தில் அநிருத் இசையமைத்தார். இந்த நான்கு படங்களிலுமே பாடல்கள் சூப்பர்ஹிட்கள் ஆயின. குறிப்பாக, வேலையில்லா பட்டதாரி & கத்தி ஆகிய இரண்டு படங்களுமே பிரமாதமாகவும் ஓடின. அந்த வருடனம் முழுதும் ஒலித்துக் கொண்டிருந்த சூப்பர்ஹிட் பாடல்களான ‘போ இன்று நீயாக’, ‘வாட் எ கருவாட்’, ‘வேலையில்லா பட்டதாரி’, ‘மாஞ்சா போட்டுதான்’, ‘டார்லிங் டம்பக்கு’, ‘உன் விழிகளில்’, ‘செல்ஃபி புள்ள’, ‘ஆத்தீ என்ன நீ’, ‘பாலம்’, ‘காதல் கண் கட்டுதே’ ஆகியவை அநிருத்தின் கைவண்ணமாக 2014 எங்கும் சக்கைப்போடு போட்டன. வேலையில்லா பட்டதாரியின் 'அம்மா அம்மா' பாடல், தமிழின் மிகச்சிறந்த அம்மா செண்டிமெண்ட் பாடல்களில் ஒன்றாகவும் மாறியது.

அதேபோல் 2015 ஆம் ஆண்டு, 2014ஐ விடவும் பிரம்மாண்டமான ஆண்டாக அநிருத்துக்கு அமைந்தது. அந்த வருடத்தின் முதல் படமே ‘மாரி’. படம் சரியாகப் போகாவிட்டாலும், அப்படத்தின் பாடல்கள் இன்றுமே சூப்பர்ஹிட்களே. அப்படத்தின் ‘டானு டானு டானு’, ‘மாரி’, ‘ஒரு வித ஆசை’ ஆகிய பாடல்கள் இன்ஸ்டண்ட் ஹிட்களாக மாறின. மாரி படத்துக்கு அடுத்து வெளியான ‘நானும் ரௌடிதான்’ படமோ சூப்பர்ஹிட்டாக மாறியது. அந்தப் படத்தின் அத்தனை பாடல்களுமே மிகப்பெரிய ஹிட்களாக மாறின. ‘தங்கமே உன்னத்தான்’, ‘என்னை மாற்றும் காதலே’, ‘கண்ணான கண்ணே’, ‘நானும் ரௌடிதான்’, ‘நீயும் நானும்’ ஆகிய பாடல்களை மறக்க முடியுமா? கண்ணான கண்ணே பாடலுக்குப் பின்னால் இருக்கும் கதை (விஜய் சேதுபதி ஒரு விழாவில் நயன் தாராவைக் கடத்த விரும்பியதாகச் சொன்னது - அதை வைத்து விக்னேஷ் சிவன் அந்தப் பாடலை எழுதியது) பலருக்கும் தெரிந்திருக்கும்.

அதே வருடத்தில் அஜீத்குமார் நடித்த ‘வேதாளம்’ படமும் அநிருத்துக்கு ஒரு ஹிட் படமாக அமைந்தது. மாரி & நானும் ரௌடிதான் அளவு அத்தனை பாடல்களும் ஹிட்டாக இல்லாவிட்டாலும், ‘ஆலுமா டோலுமா’ தமிழகத்தைக் கலக்கியது. வெறித்தன ஹிட் ஆகியது. அந்த வருடம் வெளியான ‘தங்க மகன்’ படம் தோல்வி. ஆனால் வழக்கப்படி பாடல்கள் ஹிட். ‘என்ன சொல்ல’ பாடல் மிகவும் இனிமையானது.

இதன்பிறகு ‘ரெமோ’, ‘ரம்’ ஆகிய இரண்டு படங்கள் இதுவரை வெளிவந்துள்ளன. தற்போது  ‘விவேகம்’ படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

அநிருத்துக்கு இப்போது வெறும் 26 வயதுதான் ஆகிறது. இதற்குள் தமிழின் முக்கியமான இசையமைப்பாளராக அவர் எப்படி ஆனார்? யோசித்துப் பார்த்தால், அநிருத் குறிவைப்பது இளைஞர்களை மட்டுமே என்பது தெரியும். இங்கு முதலிலிருந்து நான் குறிப்பிட்டிருக்கும் அத்தனை பாடல்களையும் அவர்களுக்காகவே இசையமைத்திருக்கிறார். கல்லூரிகளிலும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும், பார்ட்டிகளிலும் தொடர்ந்து இசைக்கப்படுபவை இந்தப் பாடல்களே. இதுதான் பிரதான காரணம். கூடவே, கேட்டதும் நம்மை ஆடவைக்கும் பாடல்கள் அநிருத்தின் விசேடம். அது மட்டும் இல்லாமல், அற்புதமான மெலடிக்களையும் இந்தக் குறுகிய காலகட்டத்தில் அவர் கொடுத்திருக்கிறார் என்பதை மறுக்கவே முடியாது. அதேபோல், அநிருத்தின் இன்னொரு விசேடம், EDM. எலக்ட்ரானிக் டான்ஸ் ம்யூஸிக் என்ற இந்த வகையான இசையைப் பரவலாக உபயோகிப்பதே இளைஞர்களுக்கு அது பிடித்திருப்பதற்குக் காரணம். பொதுவாக நட்சத்திர ஹோட்டல்களின் பார்ட்டிகளிலும் டான்ஸ் ஃப்ளோர்களிலுமே அதிகமாக உபயோகப்படுத்தப்படுவது இந்த EDM. மூணு படத்தில் இருந்தே இதை அநிருத் அதிகமாக உபயோகித்துக்கொண்டிருக்கிறார் (Come on Girls, Chennai City Gangsta, செஞ்சிட்டாளே, அள்ளாதே சிறகையே, ஆலுமா டோலுமா, Surviva, Don’t you mess with me ஆகியவை ஒரு சில உதாரணங்கள்).

கொண்டாட்டத்துடன் கூடிய பிரம்மாண்டமான, நினைவு கொள்ளத்தக்க பாடல்கள் வேண்டும் என்றாலேயே ‘கூப்பிடு அநிருத்தை’ என்ற ட்ரெண்ட் இப்போதைய காலகட்டத்தில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. உண்மையிலேயே பல்வேரு இசைக்கருவிகள், அவற்றில் ஒரு பிரம்மாண்டம்,மகிழ்ச்சியோடு கேட்டுவிட்டு ஆடுவது என்ற இளைஞர்களின் உலகத்தில் அநிருத் இன்றியமையாத அம்சமாக ஆகிவிட்டதற்கு இதுவே அடையாளம்.

அநிருத்தின் இன்னொரு சிறப்பம்சம் - அவரது குரல். அருமையான மெலடியாகை இருந்தாலும் சரி- தரை ரேட் குத்துப் பாடலாக இருந்தாலும் சரி - அவரது குரல், நன்றாக முதிர்ந்து, சிறப்பாகப் பொருந்திவிடக்கூடிய குரல். தனது இசையில் மட்டும் இல்லாமல், வேறு இசையமைப்பாளர்களின் இசையிலும் ஹிட் பாடல்களை அநிருத் பாடியிருக்கிறார். 'மெர்சலாயிட்டேன்' - ரஹ்மான் இசையில் ஒரு உதாரணம். 'ரோமியோ ஜூலியட்' படத்தில் டண்டணக்கா, 'ஜில் ஜங் சக் - ஷூட் த குருவி, 'சேதுபதி' - ஹேய் மாமா, 'போகன்' - டம்மாலு டும்மீலு ஆகியவை இன்னும் சில உதாரணங்கள்.

அறிமுகமாகிச் சில வருடங்களே ஆனாலும், அநிருத்தைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் கொஞ்சநஞ்சம் இல்லை. பீப் சாங், போலி வீடியோ என்று ஏராளமான சர்ச்சைகள். இன்னும் முழுமையாக இவற்றில் இருந்து அவரால் வெளியே வர இயலவில்லை.

தனது இசையை ஒன்றிரண்டு விஷயங்களுக்குள் சுருக்கிக்கொள்ளாமல், வெளிநாட்டுப் பாடல்களிலிருந்து உருவாமல், ஒரிஜினாலிடியுடன் கூடிய நல்ல இசையை அநிருத் வழங்க வேண்டும் என்பது எனது ஆசை. அது அவரால் முடியும். யோசித்துப் பார்த்தால், 3, நானும் ரவுடிதான், எதிர்நீச்சல் ஆகிய படங்கள் போல, அவற்றையும் மிஞ்சிய இசையை அநிருத் கொடுக்கவேண்டிய காலகட்டம் நெருங்கிவிட்டது. அதேபோல், பாடல்களால் புகழடைந்த அளவு பின்னணி இசையால் அநிருத் இன்னும் பிரபலம் ஆகவில்லை. பாடல்கள்- பின்னணி இசை ஆகிய இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால், ஜிப்ரானே தமிழில் மிகப்பெரிய திறமைசாலி என்பது என் எண்ணம். ஆனால் அநிருத்துக்கு அமைந்த படங்கள் போல ஜிப்ரானுக்கு இளமையான, குறும்பான படங்கள் இன்னும் அமையவில்லை.

தனது இசையில் பல்வேறு பரிசோதனைகளை அநிருத் செய்வாரா என்பதைப் பொறுத்துப் பார்ப்போம்.

(தொடரும்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com