30. இதயத்தைத் தொட்ட இசை கூட்டணி

ஆஷிகி படத்துக்கு அடுத்து நதீம் ஷ்ரவணின் வெற்றிப்படங்கள் பற்றி எழுத ஒரு கட்டுரை போதாது. எனவே, சுருக்கமாக, அவர்களின் படங்கள் பற்றியும் இசை பற்றியும் கவனிக்கலாம்.
30. இதயத்தைத் தொட்ட இசை கூட்டணி

நதீம் ஷ்ரவண்: நதீம் அக்ஹ்தர் ஸைஃபி மற்றும் ஷ்ரவண் குமார் ரதோட் ஆகிய இருவரின் கூட்டணி.

ஹிந்தித் திரையுலகின் மாபெரும் இசையமைப்பாளர்களில் இவர்களை மறந்துவிடவே முடியாது. 1990 முதல் 1997 வரை அட்டகாசமான பல பாடல்களை அளித்திருக்கிறார்கள். பிரம்மாண்ட ஹிட் படங்கள் பலவற்றுக்கும் இசை அமைத்திருக்கிறார்கள். அந்தக் காலகட்டத்தில், இவர்களின் புகைப்படம் காஸெட்டில் இருந்தால் அந்தக் காஸெட் பல்லாயிரம் பிரதிகள் விற்பனை ஆகும் என்ற நிலையும் இருந்தது. குமார் சானு, உதித் நாராயண், அனுராதா பௌத்வால், அபிஜீத் , அல்கா யானிக் ஆகிய பாடகர்கள் இவர்களாலேயே பெரிதும் பிரபலம் அடைந்தார்கள். இவர்கள் இசையமைத்துப் பிரபலமடைந்த காலகட்டத்தில், வேறு எந்த இசையமைப்பாளருக்கும் இத்தனை ரசிகர்கள் சேர்ந்திருக்கவில்லை. அத்தனை பேரையும் அனாயாசமாக ஓரம் கட்டிவிட்டுப் புகழின் உச்சத்தில் பிரகாசித்தவர்கள் இவர்கள். ஆனால், எல்லாமே, ஒரு கொலைவழக்கில் நாசமாகப் போனது.

எண்பதுகளின் துவக்ககாலத்திலேயே ஹிந்திப் படங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்துவிட்ட கூட்டணி இது. 1982வில் இருந்து 1990 வரை இவர்கள் பிரபலம் அடையவில்லை. இந்தக் காலகட்டத்தில் பத்தொன்பது படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள். அவை எதிலும் கிடைக்காத புகழ், இவர்களின் இருபதாவது படத்தில் இவர்களுக்குக் கிடைத்தது. அந்தப் படம் இந்தியாவெங்கும் வெற்றிகரமாக ஓடிய படமும் கூட. இசைக்காகவே பெரிதும் புகழடைந்த படம். ஆஷிகி (Aashiqui) நினைவிருக்கிறதா? இயக்குநர் மகேஷ் பட்டின் படம். அந்தப் படத்துக்காக ஃபிலிம்ஃபேர் விருதுகளும் நதீம் ஷ்ரவண் கூட்டணிக்குக் கிடைத்தது. இந்தப் படத்தில் இருந்து, இவர்களின் இறுதிப் படமான தோஸ்தி படம் வரை, மிக வெற்றிகரமான இசையமைப்பாளர்களாகவே திகழ்ந்தார்கள்.

ஆஷிகி படத்தில் மொத்தம் பனிரண்டு பாடல்கள். அத்தனை பாடல்களும் சூப்பர்ஹிட்கள். இவற்றின் பாடல்களை, ஒரு ஆல்பத்துக்காக நதீம் ஷ்ரவண் இசையமைத்து வைத்திருந்ததாகவும், அவற்றைத் தற்செயலாகக் கேட்ட மகேஷ் பட், அவற்றால் கவரப்பட்டு, பாடல்களை வைத்திருந்த குல்ஷன் குமாரிடம் கேட்டு வாங்கிப் பயன்படுத்தியதாகவும் ஆஷிகியின் இசை பற்றிய கதை உண்டு. ’சாசோங்கீ ஸரூரத் ஹை ஜைஸே’, ‘நஸர் கே சாம்னே’, ’தில் கா ஆலம்’, ’தீரே தீரே ஸே மெரி ஸிந்தகீ மே ஆனா’ ஆகிய பாடல்களை இன்றும் பல எஃப்.எம் சானல்களில் கேட்கலாம். தொலைக்காட்சிகள், ரேடியோ ஆகியவற்றில் இன்றுவரை தொடர்ந்து ஒலிக்கும் பாடல்கள் இவை. இக்காலகட்டத்தில் பள்ளி/கல்லூரிகளில் படித்தவர்களுக்கு ஆஷிகி நன்றாக நினைவிருக்கும். இசை மற்றும் பாடல்களுக்கான அத்தனை ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் 1991ல் ஆஷிகியே கைப்பற்றியது. ராஹுல் ராய் மற்றும் அனு அகர்வால் ஆகியோர் இந்த ஒரே படத்தில் இந்தியா முழுக்கப் பிரபலமானார்கள்.

ஆஷிகி படத்துக்கு அடுத்து நதீம் ஷ்ரவணின் வெற்றிப்படங்கள் பற்றி எழுத ஒரு கட்டுரை போதாது. எனவே, சுருக்கமாக, அவர்களின் படங்கள் பற்றியும் இசை பற்றியும் கவனிக்கலாம்.

ஆஷிகி வெற்றிக்குப் பின் நதீம் ஷ்ரவணுக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அவற்றில் மிகப் பிரபலமான அடுத்த படம் – தில் ஹை கி மான்தா நஹீன் (1991). ஆஷிகி படத்தின் வெற்றிக்கூட்டணியான தயாரிப்பாளர் குல்ஷன் குமார், இயக்குநர் மகேஷ் பட் ஆகியோர் மறுபடியும் இணைந்த படம். பிரபல ஹிந்தித் திரைப்படமான ‘It Happened One Night’ (1934) படத்தின் தழுவலான ‘சோரி சோரி’ (1956) படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது. மகேஷ் பட்டின் மகளான பூஜா பட்தான் ஹீரோயின். ஆமீர் கான் ஹீரோ. இதுவும் ஒரு வெற்றிப்படமே. இப்படத்தின் பாடல்களுமே ஆஷிகியைப் போலவே சூப்பர்ஹிட் ஆயின. ‘தில் ஹை கி மான்தா நஹீன்’ என்ற இதன் பாடலை உங்களால் மறக்கவே முடியாது. ஆஷிகியில் பனிரண்டு பாடல்கள் என்றால், இதிலோ பதினான்கு பாடல்கள்! படத்தில் பெண் குரலாக அத்தனை பாடல்களையும் அனுராதா பௌத்வால் பாட, குமார் சானுவும் அபிஜீத்தும் ஆண் குரல் ஆனார்கள்.

அதே வருடத்தில் வெளியான ‘சாஜன்’ படத்தின் பாடல்களும் இந்தியாவெஙும் பிரபலம் அடைந்தன. சல்மான் கான், மாதுரி தீட்சித், சஞ்சய் தத் ஆகியவர்கள் நடித்த படம். பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்த படம். ’தும் ஸே மில்னே கி தமன்னா ஹை’, ’மேரா தில் பீ கித்னா பாகல் ஹை’, ’தேகா ஹை பெஹ்லீ பார்’, ’பஹுத் ப்யார் கர்தே ஹை’, ‘ஜியே தோ ஜியே கைஸே’, ‘தூ ஷாயர் ஹை.. மை தேரி ஷாயரி’ ஆகிய பாடல்களை மறக்கவே முடியாது. தமிழ்நாட்டில் ஹிந்திப் பாடல்கள் பரவிய தொண்ணூறுகளின் ஆரம்பகட்டத்தில், அதற்கு இப்படத்தின் பாடல்களும் ஒரு முக்கியமான காரணம். சாஜன் பாடல்களின் இன்னொரு விசேடம், எஸ்.பி. பாலசுப்ரமணியம் அதில் சில பாடல்களைப் பாடியதே. அக்காலகட்டத்தில், சல்மான் கானுக்கு எஸ்.பி.பியின் குரல்தான் பல படங்களில் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. அந்த வருடத்தின் ஃபிலிம்ஃபேர் விருதுகளில் இசை, சாஜனுக்கே கிடைத்தது.

இந்தக் காலகட்டத்திலேயே, சாத்தி, பூல் ஔர் காண்டே, சடக் (தமிழில் பிரசாந்த் நடிக்க அப்பு என்ற படம் வந்ததே.. அதன் ஒரிஜினல் படம்), தில் கா க்யா கஸூர், ஜான் தேரே நாம் (இதன் பாடல்களை அக்காலத்தில் தூர்தர்ஷனில் தொடர்ந்து ஒளிபரப்பிக்கொண்டே இருந்தனர்), தீவானா போன்ற படங்களை இசையமைத்து, ஹிந்தியின் நம்பர் ஒன் இசையமைப்பாளர்களாக விளங்கினர் இந்த ஜோடி. இவற்றில், தீவானா, மறுபடியும் சிறந்த இசையமைப்பாளர்களுக்கான ஃபிலிம்ஃபேர் விருதை இவர்களுக்குப் பெற்றுத் தந்தது. தீவானாதான் ஷா ருக் கானின் முதல் படமும் கூட.

தீம் ஷ்ரவணின் அடுத்த மிகப்பெரிய ஹிட், ஹம் ஹைன் ராஹி ப்யார் கே படம். 1993யில் வெளியானது. ஆமீர் கானும் ஜூஹி சாவ்லாவும் நடித்த படம். ஜூஹி சாவ்லாவுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும், சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் வாங்கிய படம். இயக்கியவர் அதே மகேஷ் பட்.

அடுத்து, ஏராளமான படங்கள். அவற்றில் தில்வாலே போன்ற சூப்பர்ஹிட்களும் அடக்கம். பர்ஸாத், ராஜா, ஜங், ஜீத் ஆகிய தொடர்ச்சியான ஹிட்கள். பின்னர் 1996ல் நதீம் ஷ்ரவணின் அடுத்த பிரம்மாண்ட ஹிட் வெளியானது. ராஜா ஹிந்துஸ்தானி. நதீம் ஷ்ரவணின் இசையின் விசேடம் என்ன தெரியுமா? வேறெந்த இசையமைப்பாளர்களின் பாடல்களையும் இன்றும் தொடர்ச்சியாக மக்கள் கேட்பதில்லை. வட இந்தியாவுக்கு நீங்கள் சென்றால் தெரியும். பல இடங்களில் நதீம் ஷ்ரவணின் இசைதான் பெரும்பங்கு வகிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வீர்கள். அதுதான் ராஜா ஹிந்துஸ்தானிக்கும் நடந்தது. இன்றும் கேட்கப்படும் பாடல்கள் இதன் சிறப்பம்சம். அந்த வருடத்துக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகளும் இவர்களுக்கே கிடைத்தது. இதன் பர்தேசி பர்தேசி பாடலைப் பற்றி, அப்பாடலில் கண்களில் ஒளிரும் தீ பற்றி, ஆனந்த விகடனில் அப்போது கட்டுரை ஒன்றும் வெளிவந்திருந்தது.

இதற்கு அடுத்து, நதீம் ஷ்ரவணின் மிகப்பெரிய ஹிட்டாக, 1997ன் ‘பர்தேஸ்’ படத்தையே சொல்லவேண்டும். சுபாஷ் கை எடுத்த படம். ஷா ருக் கான், மஹிமா சௌத்ரி ஆகியவர்கள் நடித்த படம். படத்தின் பாதிக்கதை யுனைடட் ஸ்டேட்ஸில் நடக்கும். இந்தப் படத்தின் இசையின் சிறப்பம்சம் என்ன தெரியுமா? அதுவரை ஹிந்துஸ்தானி இசை மற்றும் கஸல்களின் சாயலிலேயே இசையமைத்துக்கொண்டிருந்த நதீம் ஷ்ரவண், முதன்முறையாகப் பல்வேறு இசைவகைகளில் கவனம் செலுத்தியதுதான். இதில் ஆங்கிலப் பாடலும் ஒன்று உண்டு. பர்தேஸின் இசை மிகப்பெரிய ஹிட் ஆனது. அதில் இடம்பெற்ற ‘மேரி மெஹ்பூபா’, ‘திவானா தில்’, ‘தோ தில் மில்ரஹே ஹைன்’, ‘ஐ லவ் இண்டியா’ ஆகிய பாடல்கள் மறக்கவே முடியாதவை.

இந்த வருடத்தில்தான் இவர்களின் இசைவாழ்வில் கொடூரமான சம்பவம் ஒன்று நடந்தது. டி சீரீஸ் நிறுவனர் குல்ஷன் குமார் கொல்லப்பட்டார். அந்தக் கொலையில் நதீமுக்குத் தொடர்பிருப்பதாக சந்தேகம் எழுப்பப்பட, நதீம் லண்டன் தப்பிச்சென்றார். அதன்பின் பல வருடங்கள் அவர் இந்தியா வரவே இல்லை. அங்கிருந்துகொண்டே இசைக்குறிப்புகளை அவர் அனுப்ப, இந்தியாவில் இருந்த ஷ்ரவண் அக்குறிப்புகளை வைத்து இசைமைத்தார். அப்படி வெளியாகி, மறுபடியும் அத்தனை பாடல்களும் பெரிதாகப் பேசப்பட்ட படம் – தட்கன். மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது. ’தும் தில் கி தட்கன் மேய்ன்’, தில் நே யே கஹா ஹை தில்ஸே’, ’நா நா கர்தே ப்யார்’, ‘அக்ஸர் இஸ் துனியா மேய்ன்’, ‘தூல்ஹே கா செஹ்ரா சுஹானா லக்தா ஹை’ ஆகிய பாடல்களுக்காகவே இப்படம் பிரமாதமாக ஓடியது.

இப்படத்துக்குப் பின்னர் கஸூர், ஏக் தா ரிஷ்டா, ஹம் ஹோகயே ஆப்கே, ஹா மைனே பி ப்யார் கியா, ராஸ் தும் ஸே அச்சா கௌன் ஹை, தில் கா ரிஷ்டா, அந்தாஸ், கயாமத், தும்ஸா நஹி தேகா ஆகிய படங்கள் வெளிவந்தன. அவற்றில் பல பாடல்களும் ஹிட்கள் ஆயின. இருந்தாலும், இந்தப் புதிய காலகட்டத்தில் இந்தக் கூட்டணியின் (ஓரளவு பழகிவிட்ட) இசை எடுபடாமலேயே போய்விட்டது. இதன்பின் இந்தக் கூட்டணி பிரிந்தும் விட்டது.

இவர்களின் விசேடம், ஹிந்துஸ்தானி இசையோடு, கஸல்களின் மெட்டுகளில் ஆங்காங்கே சூஃபி சாயலில் இடம்பெற்ற மெட்டுக்களே. அதில் தப்லா, டோலக், ஷெனாய் ஆகிய கருவிகளின் அருமையான ஜுகல்பந்தியே. ஆனால் இவர்களின் இசை, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டுமே உரியது. தொண்ணூறுகளுக்கானது. ஏனெனில், இவர்கள் உச்சத்தில் இருக்கும்போதுதான் ரஹ்மான் ஹிந்தியில் நுழைகிறார். அவரது இசை, இவர்களின் இசையை அனாயாசமாகப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. போலவே, ஜதின் லலித் கூட்டணியின் இசையுமே இவர்களின் இசையைவிடவும் பிரபலம் அடையத் துவங்கி, குல்ஷன் குமாரின் கொலையோடு இவர்களின் சகாப்தம் பெரிதும் முடிவடைந்துவிட்டது.

இருப்பினும், ஹிந்தி இசையின் மிக முக்கியமான இசையமைப்பாளர்களில் இவர்களும் அடங்குவார்கள். தொண்ணூறுகளின் ரொமாண்டிக் ஹிந்திப் படங்கள் மக்களின் மனதில் இருக்கும்வரை நதீம் ஷ்ரவணின் இசையும் அவற்றுடன் கலந்தே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com