25. வெற்றிப்பாதையில் சிறகடிக்கும் ஜிப்ரான்   

தமிழில் கடந்த சில வருடங்களில், தற்காலத் தலைமுறைக்கு ஏற்றபடி, இசையில் நீர்த்துப் போகாமல் தொடர்ந்து பல வித்தியாசங்கள் காட்டி வரும் இசையமைப்பாளர்கள் யார்?
25. வெற்றிப்பாதையில் சிறகடிக்கும் ஜிப்ரான்   

தமிழில் கடந்த சில வருடங்களில், தற்காலத் தலைமுறைக்கு ஏற்றபடி, இசையில் நீர்த்துப் போகாமல் தொடர்ந்து பல வித்தியாசங்கள் காட்டி வரும் இசையமைப்பாளர்கள் யார்? யோசித்துப் பார்த்தால், எப்படி எம்.எஸ்.விக்குப் பின் இளையராஜா, அவருக்குப் பின்னர் ரஹ்மான் என்ற வரிசையில், ரஹ்மானுக்குப் பின்னர் யார் என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டு வருகிறது. இதில் யுவன், ஹேரிஸ் ஜெயராஜ் உட்படப் பலரும் போட்டியில் இருந்தாலும், அவர்கள் அனைவருமே ரஹ்மானுடன் இணைந்தே சமகாலத்தில் இசைமைத்து வருகின்றனர். எனவே, சந்தோஷ் நாராயணன் அந்த இடத்துக்குச் சரியாக வருவார் என்று பலரும் கணித்துள்ளனர் (நானும்). ஆனால், சமீப காலத்தில் சந்தோஷின் இசை ஒரே போன்ற வார்ப்புருக்குள் மாட்டிவிட்டது என்று கட்டாயம் சொல்லமுடியும்.

இந்த நிலையில், தனது முதல் படத்தில் இருந்தே இசையில் குறிப்பிடத்தக்க, தனக்கே உரிய பாணியில் தொடர்ந்து இசையமைத்து வருகிறார் ஜிப்ரான். சந்தோஷ் நாராயணன், அநிருத் ஆகியோர் கவனிக்கப்பட்ட அளவுக்கு ஜிப்ரான் பலராலும் கவனிக்கப்படவில்லை. ஆனாலும், இவர்களுக்குக் குறையாமல், இவர்களை விடவும் செய்நேர்த்தி மிகுந்த பல பாடல்களைத் தொடர்ந்து கொடுத்து வருகிறார் ஜிப்ரான் என்ற வகையில், ரஹ்மானுக்கு அடுத்து யார் என்ற போட்டியில் ஜிப்ரானுக்கும் கட்டாயம் ஒரு இடம் உண்டு.

எட்டு வயதில், கோவையில், ஒரு சிறிய போட்டியில் வென்றதுதான் ஜிப்ரானுக்கு இசையில் கிடைத்த முதல் பரிசு. அந்தப் போட்டியில், பாடல்களைப் பாடி வென்றான் சிறுவன் ஜிப்ரான். உடனடியாக அவனது பெற்றோர்கள் கர்நாடக இசையைக் கற்றுக்கொள்ள அவனை ஒரு இடத்தில் சேர்த்துவிட்டனர். இரண்டு வருடங்கள் கர்நாடக இசையைப் பயின்றான் சிறுவன் ஜிப்ரான். அப்போது, புகழ்பெற்ற இசைக்கலைஞர் யான்னி இந்தியா வருகை புரிந்தார். தாஜ் மஹாலில் அவரது நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் கண்ட ஜிப்ரான், அசந்து போனான். அன்றில் இருந்து யான்னி தாஜ் மஹாலில் வாசிக்கும் காட்சி அவனது மனதில் பதிந்து போனது. அப்போதில் இருந்து பியானோ வகுப்புகளுக்கும் சிறுவன் ஜிப்ரான் போகத் துவங்கினான்.

அதன்பின் அவனது குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. சில பணச்சிக்கல்களால், அப்போது ஜிப்ரானால் தொடர்ந்து இசை கற்க முடியாமல் போனது. இருந்தும், பியானோ கற்பதை மட்டும் ஜிப்ரான் விடவில்லை. அப்போது, இரண்டு வருடங்கள் லாட்டரி டிக்கெட்கள் கூட விற்றதாக ஜிப்ரான் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். இதன்பின் பியானோவில் ஐந்தாவது க்ரேட் முடிக்கிறார் ஜிப்ரான் – தனது 17வது வயதில். அந்த நேரத்தில், சொந்தமாக ஒரு ஸ்டுடியோ அமைத்தே ஆகவேண்டும் என்று முயன்று, வெறும் நானூறே சதுர அடியில் ஒரு ஸ்டுடியோவை அமைக்கிறார். அந்தக் காலகட்டத்தில் விளம்பரங்கள் தயாரிக்கும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் கம்போஸராகவும் பணியாற்றியிருக்கிறார்.

இதன்பின் சில வருடங்கள் விளம்பரத் துறையில் ஈடுபட்டுப் பல்வேறு விளம்பரங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இது 2005 வரை தொடர்ந்தது. ஒருநாள் தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் ஓடிக்கொண்டிருக்க, அவரது சவுண்ட் இஞ்சினியர், ‘இது நமது பாடலாயிற்றே!’ என்று ஜிப்ரானிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் ஜிப்ரானுக்கு அது அவருடையது என்றே நினைவில்லை. அந்த அளவு அந்தச் சமயத்தில் இயந்திர கதியில் பல்வேறு விளம்பரங்களுக்குத் தொடர்ந்து இசையமைத்துக் கொண்டிருந்திருக்கிறார். இதை உணர்ந்ததுமே, எதுவும் வேலைக்காகாது என்று புரிந்துகொண்டு, விளம்பரங்களுக்கு மூட்டை கட்டிவிட்டு, வீட்டை விற்றுவிட்டு, இருந்த பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு சிங்கப்பூர் கிளம்பிவிடுகிறார்.

சிங்கப்பூரில், மேற்கத்திய க்ளாஸிக் இசையைக் கற்கத் துவங்குகிறார் ஜிப்ரான். அங்கே, லிண்ட்ஸே விக்கரி (Lindsay Vickery) என்ற ஆஸ்த்ரேலிய இசையமைப்பாளரிடம் பயில்கிறார். இது ஒரு சில வருடங்கள் தொடர்ந்தது. அங்கே நன்றாக மேற்கத்திய இசையைப் பயின்ற பின்னர் சென்னை வருகிறார். அந்த நேரத்தில், அவரது பழைய க்ளையண்ட்கள் எல்லாமே வேறு இசையமைப்பாளர்களிடம் சென்றுவிட்டனர்.

அப்போதுதான், சற்குணம் என்ற இயக்குநர் ‘வாகை சூடவா’ என்ற படம் எடுக்கப்போவதாக ஜிப்ரானுக்குத் தெரியவருகிறது. ஜிப்ரான் விளம்பரங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தபோது, இயக்குநர் விஜய் எடுக்கும் விளம்பரங்களுக்கு சற்குணம் தான் ஸ்க்ரிப்ட் எழுதுவது வழக்கம். எனவே, சற்குணத்துக்கு ஜிப்ரானை நன்கு தெரியும். இப்படித்தான் தனது முதல் படமான ‘வாகை சூடவா’வுக்கு இசையமைக்கிறார் ஜிப்ரான்.

அந்தப் படத்தின் பாடல்கள் இன்றும் பிரபலம். தமிழகமெங்கும் பலராலும் முணுமுணுக்கப்பட்ட ‘சர சர சாரைக்காத்து’ பாடல் உட்பட, எல்லாப் பாடல்களும் ஹிட் ஆயின. தொடர்ந்து ஜிப்ரான் பிரபலமைடைய ஆரம்பித்தார். அப்போதும்கூட, அவரது பாடல்களைப் பல எஃப்.எம் சேனல்கள் ஒலிபரப்ப மறுத்திருக்கின்றன. புதிய இசையமைப்பாளர் என்பதே காரணம். அப்போது வாகை சூடவா பாடல்களைக் கேட்ட ரஹ்மானிடம் இருந்து ஜிப்ரானைப் பாராட்டி ஒரு செய்தி வர, அதனைத் தொடர்ந்தே ஜிப்ரானின் இசை எஃப்.எம்களிலும், தொடர்ந்து பல இடங்களிலும் பிரபலம் அடைந்தது என்று ஜிப்ரான் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். வாகை சூடவாவின் இசை, அந்த வருடத்திய ஃபிலிம்ஃபேர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. மேலும் பல விருதுகள் (விகடன் நம்பிக்கை நட்சத்திரம் விருது உட்பட) ஜிப்ரானுக்குக் கிடைத்தன.

வாகை சூடவாவைத் தொடர்ந்து வத்திக்குச்சி, குட்டிப்புலி, நைய்யாண்டி என்று படங்கள் ஜிப்ரானுக்கு வெளியாக ஆரம்பித்தன. அவற்றின் பாடல்களும் பரவலாகக் கவனிக்கப்பட்டன.

இதன்பின் வெளியான ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ படத்தின் பாடல்கள் பெரிதாகப் பேசப்பட்டன. படம் பற்றித் தெரியாதவர்களுக்கும், இப்படத்தின் பாடல்கள் தெரிந்திருந்தன. இப்படத்துக்குப் பின் வெளியான ‘அமரகாவியம்’ படத்தின் பாடல்களுமே ஜிப்ரானுக்கு ஹிட்களாகவே அமைந்தன.

ஜிப்ரானின் பாடல்கள் எஃப்.எம் சேனல்களில் ஒலிபரப்பாகத் துவங்கின என்று படித்தோம் அல்லவா? அப்போது ஜிப்ரானுக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் காத்துக்கொண்டிருந்தது. கமல்ஹாஸனிடம் இருந்து வந்த அழைப்புதான் அது. சர சர பாடல் கமல்ஹாஸனுக்கு மிகவும் பிடித்துவிட, உடனடியாகத் தனது மூன்று படங்களுக்கு (விஸ்வரூபம் 2,  உத்தம வில்லன் மற்றும் பாபநாசம்) இசையமைக்கச் சொல்லியிருக்கிறார். இது ஜிப்ரானுக்கு மாபெரும் பரிசாக அமைந்தது. சர சர பாடலைக் கேட்டதுமே, சிடியை வாங்கிவந்து, விஸ்வரூபம் படத்தின் ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் கமல்ஹாஸன் போட்டுக்காட்டியிருக்கிறார். உடனடியாக ஜிப்ரானைத் தனது மூன்று படங்களுக்கு ஒப்பந்தமும் செய்துவிட்டார்.

கமல்ஹாஸனின் உத்தம வில்லன் படத்துக்காக, லாஸ் ஏஞ்சலீஸ் மற்றும் ரஷ்யன் இண்டர்னேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விருதுகள் உட்படப் பல விருதுகளை அள்ளினார் ஜிப்ரான். உண்மையில் சமீபகாலத்தில் வெளியான குறிப்பிடத்தக்க ஆல்பங்களில் ஒன்று உத்தம வில்லன். படத்தில் பல்வேறு வகைகளிலும் பாடல்கள் உண்டு. Comtemporary, folk, theatre மற்றும் பல்வேறு தனிப்பட்ட காட்சிகளுக்கான இசைக்கோர்வைகள் என்று ஒரு மிக வித்தியாசமான ஆல்பம் அது. படத்தில் ‘லவ்வா லவ்வா’, ’காதலாம் கடவுள் முன்’, ’இரணியன் நாடகம்’, ‘முத்தரசன் கதை’ உட்பட அனைத்து இசைக்கோர்ப்புகளும் பிரபலம் அடைந்தன.

பாபநாசம் படத்தில் இரண்டே பாடல்கள்தான். அவை இரண்டுமே ஜிப்ரானின் பெயர் சொல்லும் பாடல்களாக அமைந்தன. குறிப்பாக, ‘ஏய்யா என் கோட்டிக்காரா’ பாடல் எவ்வளவு முறை கேட்டாலும் அலுக்காத பாடல். நா. முத்துக்குமாரின் அட்டகாசமான வரிகளில், கறாரான கருமி ஒருவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நிகழும் பாடல் இது. பாடல் வரிகள் முழுக்க, நாயகனின் பணத்தை சேமிக்கும் குணம் பற்றி மனைவி கேட்கும் வரிகளும், அதற்கு நாயகனின் பதில்களும் நிரம்பிய பாடல். பாடலில் நடித்த கமல்ஹாஸனும் கௌதமியும் இப்படத்துக்குப் பின்னர் பிரிந்துவிட, அவர்களின் உறவை நினைவுபடுத்தும் பாடலாகவும் இது விளங்குகிறது.

இவ்வருடத்திலும், வரும் வருடத்திலும் ஜிப்ரானின் பல்வேறு படங்கள் வெளியாக இருக்கின்றன. கட்டாயம் அப்படங்களின் இசையும் குறிப்பிடத்தக்கதாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஜிப்ரானின் இசையில் என்ன புதிய அம்சம்? சந்தோஷ் நாராயணன் போலவே, ஜிப்ரானின் இசையுமே கேட்டதும் ஜிப்ரான் என்று கண்டுபிடித்துவிடலாம். நவீன இசைக்கருவிகளை வைத்துக்கொண்டு ஒருவிதமான மெல்லிசை கலந்த classical இசை அவருடைய பாணி. அவருடைய பாடல்களில், பல்வேறு layerகளில் இசை பயணிக்கும். கூடவே, குரல் சார்ந்த பின்னணி இசை ஜிப்ரானின் தனிப்பட்ட அம்சம். அழகான, ஆழமான குரல்கள் ஹம்மிங் செய்யும். பாடும் குரல்களுமே நன்றாக நம் மனதில் பதியும் இசை அவருடையது. இதனாலேயே அவருடைய பாடல்கள் எளிதில் கண்டுபிடிக்கத்தக்கவையாக இருக்கின்றன. இதேபோல், படங்களுக்குப் பின்னணி இசையிலும் ஜிப்ரான் சிறந்தே விளங்குகிறார். தூங்காவனம் பார்த்தவர்கள் அதன் இசையை மறக்க முடியாது. பல படங்களில், பாடல்கள் நன்றாக இருக்கும் அளவு பின்னணி இசை நன்றாக இருக்காது. ஆனால் தூங்காவனத்தில் பின்னணி இசை நன்றாக நம் நினைவில் நிற்கும் (இதற்குக் கட்டாயம் கமல்ஹாஸனின் இசை பற்றிய கருத்துகளும் காரணமாக இருக்கும் என்றே நம்புகிறேன். தனக்குத் தேவையான இசையை இசையமைப்பாளர்களிடம் இருந்து வரவழைப்பதில் கமல்ஹாஸன் கைதேர்ந்தவர்).

ஒருவேளை ஜிப்ரானின் பாடல்களை நீங்கள் கேட்டதில்லை என்றால் கேட்கத் துவங்கலாம். கட்டாயம் உங்களுக்கு இசையில் ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும் என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்.

எனக்கு மிகவும் பிடித்த ஜிப்ரானின் பாடல் இங்கே. கார்த்திக் நேதாவின் அற்புதமான, வித்தியாசமான வரிகள் இப்பாடலுக்கு அவசியம் அழகு சேர்க்கின்றன. குறிப்பாக இவ்வரிகள்:

’தண்ணீரைக் கூசிக்கொண்டே மெல்லச் செல்லும் பிம்பங்கள் நீயாகிறாய் எதிரே’

கேட்டுப் பாருங்கள்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com