27. இசையில் தொடங்கும் இணைவு கமல்ஹாசன் & இளையராஜா

எனக்கு ஒரு எண்ணம், கடந்த பல வருடங்களாக இருந்து கொண்டே இருந்தது. அதனை
27. இசையில் தொடங்கும் இணைவு கமல்ஹாசன் & இளையராஜா

எனக்கு ஒரு எண்ணம், கடந்த பல வருடங்களாக இருந்து கொண்டே இருந்தது. அதனை இப்போது முற்றிலுமாக confirm செய்து, உணர்ந்துகொண்டே இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். நான் எண்பதுகளின் திரைப்படங்களுக்கு – குறிப்பாக, சத்யராஜ், ரஜினி & கமல் நடித்தவை – ரசிகன் என்பது நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். அதேபோல், அப்படங்களின் பாடல்களுக்கும் நான் ரசிகன். இதற்கு முதன்மையான காரணம், ’85லிருந்து, கிட்டத்தட்ட 2000 வரை, எனது தாய்மாமாவின் இசைத்தட்டு நூலகத்தில் 24 மணி நேரமும் நான் குடியிருந்ததே. ஆகவே, இயற்கையாகவே, இளையராஜாவின் அப்போதைய பல பாடல்களுக்கும் ரசிகன். தொண்ணூறுகளில் இளையராஜா ரிடையர் ஆக ஆரம்பித்தபின், மிகச் சில பாடல்களையே அந்தக் காலகட்டத்தில் நான் ரசித்திருக்கிறேன். காரணம், ரஹ்மானின் எழுச்சி. அதன்பின் ரஹ்மானின் ரசிகன் ஆனேன். ஆனால், 80-களில் இளையராஜா இசையமைத்த பல பாடல்களை எப்போதும் மறக்க முடியாது.

இந்தக் கட்டுரையை நான் எழுதக் காரணம், கடந்த பல  நாட்களில், 2000க்குப் பிறகு இளையராஜா இசையமைத்த பாடல்கள் பலவற்றை மறுபடி கேட்டதுதான். அதிலிருந்து, எனது பழைய எண்ணம் உறுதிப்பட்டது. அது என்ன எண்ணம்? அதற்கு முன், இளையராஜாவை அவரது capacity தெரிந்து, மிகத் துல்லியமாக, கனகச்சிதமாக உபயோகப்படுத்திக் கொண்ட இன்னொருவரைப் பற்றியும் பார்க்கவேண்டும்.

அவரது பெயர் கமல்ஹாசன்.

இதுவரை கமல்ஹாசன் தயாரித்துள்ள படங்களை எடுத்துக் கொண்டால், அவற்றில் ஐந்து படங்கள் நீங்கலாக (கடமை கண்ணியம் கட்டுப்பாடு – இளையராஜா இசையமைத்திருந்தாலும், பாடல்கள் இல்லை, பாசவலை – மரகதமணி, Chachi 420  – விஷால் பரத்வாஜ், நள தமயந்தி – ரமேஷ் விநாயகம், உன்னைப்போல் ஒருவன் – ஷ்ருதி ஹாசன்), மற்ற அத்தனை படங்களுக்கும் இளையராஜாதான் இசையமைத்திருக்கிறார். இவற்றில், 80கள் மற்றும் தொண்ணூறுகளில் வந்துள்ள படங்களை நாம் இப்போது கணக்கில் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. மாறாக, 2000த்தில் வந்த ஒரு படத்தையும், 2004ல் வந்த மற்றொரு படத்தையும் எடுத்துக்கொண்டு, அவற்றில் இருந்து சில பாடல்களைப் பார்த்து, அதன்மூலம் நான் சொல்ல வந்த விஷயத்தை எழுதுவதே நோக்கம்.

தமிழ்த்திரையுலகைப் பொறுத்தவரை, பாடல்களின் முக்கியத்துவத்தை சொல்லவே வேண்டியதில்லை. குறிப்பிட்ட காட்சியின் அழுத்தத்தையும், உணர்வு சார்ந்த தாக்கத்தையும், படம் பார்க்கும் ஆடியன்ஸின் மனதில் புகுத்த, பாடல்கள் பெரிதும் பயன்படுகின்றன. உதாரணத்துக்கு, நாயகன் படத்தின் ‘தென்பாண்டிச் சீமையிலே’ பாடலை எடுத்துக் கொள்ளலாம். படத்தில், மூன்று விதமான இப்பாடலின் வடிவங்கள் உபயோகப்படுத்தப்படுவதைப் பார்க்கலாம். இளையராஜா பாடியுள்ள வடிவம், கமல்ஹாசன் பாடியுள்ள இசையில்லாத வடிவம், இசையுடன் கூடிய கமல்ஹாசனின் இறுதி வடிவம் ஆகியவை இவை. இந்த மூன்று பாடல்களுமே, மணிரத்னத்தால் கச்சிதமாகப் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆடியன்ஸின் மனதை நெகிழவைக்கும் முக்கியமான தருணங்களில் எல்லாம் இப்பாடல்கள் ஒலிப்பதை மறக்கமுடியாது. அதேபோல், அபூர்வ சகோதரர்கள் படத்தின் புல்லாங்குழல் தீம் இசை. இதைப்போல் பல உதாரணங்கள் சொல்லமுடியும்.

அப்படி, கச்சிதமான பாடல்கள், முக்கியமான காட்சிகளின் பின்னணியில் உபயோகப்படுத்தப்பட்டால், காட்சிகளின் அழுத்தமும் தாக்கமும் மிக அதிகமாகவே கூடி, படம் பார்க்கும் ஆடியன்ஸை உன்மத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் என்பதைத் துல்லியமாக அறிந்து வைத்திருப்பவராக, நான் அறிந்தவரையில், கமல்ஹாசன் மட்டுமே இருந்து வருகிறார் (உன்மத்த நிலை என்பதை மனதில் வையுங்கள்). வேறு பலரும் இப்படிக் காட்சிகளை வைக்கும் போதிலும், கமல் வடிவமைக்கும் காட்சிகள், நான் இனிமேல் கூறப்போகும் உதாரணங்களில் தனித்துத் தெரிவதை நண்பர்கள் உணரமுடியும் என்று நம்புகிறேன்.

சரி. இப்போது, உதாரணங்களைப் பார்ப்போம்.

இரண்டே உதாரணங்கள் தான் பார்க்கப்போகிறோம். அதாவது, இரண்டு படங்கள். அவற்றில் முதல் படம், 2000ல் வெளிவந்த ஹே ராம். ஹேராம் திரைப்படம் சொல்ல வரும் கருத்து என்ன, அதில் கமல்ஹாசன் நமக்குப் புரியவைக்கும் விஷயம் என்ன என்பதெல்லாம் மறப்போம். ஒரே ஒரு சிச்சுவேஷனை மட்டும் நோக்குவோம்.

படத்தின் கதாநாயகன், தனது மனைவியுடன், தீபாவளி அன்று, ‘பாங்’ குடித்துவிட்டு, நேரம் செலவழிக்கிறான். அப்போது, பின்னணியில் ஒரு பாடல் ஒலிக்கிறது.

மதுவோ, பாங்கோ அடித்துவிட்டு, trance music கேட்டிருக்கும் எவருக்கும் இந்த இசையைக் கேட்டால், பைத்தியம் பிடிக்கும். இதில் சிறிது கூட அதிசயோக்தியாக சொல்லப்படவில்லை. இதை ஏன் சொன்னேன் என்றால், படத்தில் கதாநாயகன், பாங் அடித்துவிட்டு என்னென்ன மனப்பிறழ்வுகளை அனுபவிக்கிறானோ, அவற்றை, அந்தப் பாடலைக் கேட்பதன் மூலம், நாமும் அனுபவிக்கமுடியும். அதுதான் அப்பாடலின் விசேஷம். இளையராஜா இசையமைத்ததில், நாடி நரம்புகளை ஒரு ஆட்டு ஆட்டி, கேட்பவர்களை உன்மத்தம் கொள்ளவைக்கும் (வெகுசில) பாடல்களில், இப்பாடலும் ஒன்று.

இப்படியொரு பாடலை, தானாகவே இளையராஜா கொடுத்திருக்க மாட்டார். ஏனெனில், திரைப்பட ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கும். ஹேராம்  படத்துக்கு ஆரம்பத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் எல். சுப்ரமண்யம். அத்தனை பாடல்களையும் இசையமைத்துக் கொடுத்துவிட்டு, பாடல்கள் படமாகவும் ஆக்கப்பட்டபின், கமலுக்கும் சுப்ரமண்யத்துக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு (அந்தக் காரணம் இப்போது வேண்டாம்) சுப்ரமணியத்தை நீக்கினார் கமல். அதன்பின் கமல் வந்தது, நேராக இளையராஜாவிடம். இசையமைக்கச் சம்மதித்த இளையராஜாவிடம், படத்தின் பாடல்கள் ஏற்கெனவே படமாக்கப்பட்ட விபரம் தெரிவிக்கப்பட்டது. அதன்பின், அந்தக் காட்சிகளைப் பார்த்த இளையராஜா, அவற்றுக்குத் தக்கவாறு கச்சிதமாக (ஸீன் சீக்வென்ஸுக்கு எந்தக் குந்தகமும் ஏற்படாதவாறு) இசையமைத்துக்கொடுத்த பாடல்கள்தான் ஹேராமின் இறுதியான பாடல்களாக வெளியிடப்பட்டன.

ஆக, கமலின் இன்புட்கள் இல்லாமல் இப்படிப்பட்ட ஒரு பாடல் வெளிவர சாத்தியமில்லை. எந்த இசையமைப்பாளராக இருந்தாலும், அவர்களின் படைப்பாற்றலின் அடியாழம் வரை அவர்களை விரட்டி, அவர்களின் அற்புதமான இசைத்திறமையை முழுதாக வெளிக்கொணர, அந்த ஆற்றல் உள்ள இயக்குனர்கள் தேவை. அந்தத் திறமை, கமலுக்கு வெகுவாகவே இருக்கிறது என்பதும் எனக்கு மிக நன்றாகவே தெரியும்.

அந்தப் பாடல்தான், அஜய் சக்ரவர்த்தியால் அற்புதமாகப் பாடப்பட்ட ‘இசையில் தொடங்குதம்மா’ என்ற அற்புதம். ஒருமுறை கேட்டாலே, கேட்பவர்கள் அத்தனைபேரையும் சந்நதம் கொண்டு ஆட வைக்கும் பாடல் இது.

அந்தப் பாடலை இங்கே காணலாம்.

காட்சிகளின் பின்னணியில்தான் இந்தப் பாடல் தொடங்குகிறது. ஆனால், போகப்போக, கதாநாயகன் பாங் அடித்த பின், பாடல் மெதுவாக முன்னணிக்கு வருகிறது. அப்போது ஒலிக்கும் பாடலின் இசையை கவனித்துப் பாருங்கள்.

கூடவே, இந்த அற்புதத்தை compliment செய்யும் காட்சிகளும் முக்கியமில்லையா? அவையும் கச்சிதமாக கமல்ஹாசனால் வடிவமைக்கப்பட்டிருக்கும் (பாங் அடித்தபின், க்ளோஸப்பில் காண்பிக்கப்படும் ஷெனாய், பிரம்மாண்டமான பொம்மை வீழ்த்தப்படுவது, மனைவியின் அருகாமை இத்யாதி). ஆக, என் தனிப்பட்ட கருத்தின்படி, பாடலும் சரி, இசையும் சரி, காட்சிகளும் சரி – கச்சிதமாகக் கலந்து, திரையில் காண்பிக்கப்பட்ட உன்மத்தம் கொள்ள வைக்கும் பாடல்களில், இது முதலிடம் பெறுகிறது.

இந்தப் பாடலை வைத்திருக்கும் நண்பர்கள், ஹெட்ஃபோன் அல்லது இயர்ஃபோன் அல்லது கார் ஸ்டீரியோ மூலமாக, அட்லீஸ்ட் ஒரு முறை, தனிமையில் நல்ல வால்யூமோடு கேட்டுப்பாருங்கள். மெய்மறப்பீர்கள் என்பது ஒரு understatement.

(பாடலின் ஆரம்ப கணம். தடால் தடாலென்று ஒலிக்கும் பேரிகை. அதன் பின்னணியில் தட்டப்படும் மற்றொரு சிறிய பேரிகை (என் பாஷையில் டமாரம்). முதல் செகண்டின் இறுதியில் இருந்து மூன்றாம் செகண்டின் பாதிவரை, ஐந்து முறை ‘தட் தட் தட் தட் தட்’ என்று பின்னணியில் தட்டப்படும் அந்த சிறிய டமார ஒலி, அதன்பின் பாடலின் எந்த கணத்திலும் அதே போன்ற தாளலயத்துடன் வரவே வராது. பாடலின் ஆரம்பத்தை ஒரு தூக்கு தூக்கும் அந்த ஒலி, அட்டகாசம்! பொதுவாக, இதைப்போன்ற சிறிய ஒலிகள், ரஹ்மானின் இசையில் பளிச்சிடும் (அவற்றைப் பற்றியும் ஸ்டடி செய்து வைத்திருக்கிறேன். முடிந்தால் விரைவில் எழுதுகிறேன்). சொல்லவந்த விஷயம், இளையராஜாவின் இசையில் அப்படிப்பட்ட டக்கரான பின்னணி ஒலிகள் கொஞ்சம் குறைவுதான். ஆனால், அந்த ஏக்கத்தை இப்பாடல் தீர்த்துவைத்துவிட்டது. அதேபோல், பாடலின் முதல் சரணத்துக்கு முன் வாசிக்கப்படும்  அந்த ஷெனாய் – Genius!! அந்த ஒலியில் வழிந்து ஓடும் தாபமும் ஏக்கமும், எழுத்தினால் சொல்ல முடியாதது. அதேபோல், இரண்டாவது சரணத்தில் வரும் வரிசையான, ஒரே சீரான டமார ஒலிகள். அதனைத் தொடர்ந்த ஸாரங்கி இசை. ‘பூந்து விளையாடுறது’ என்பது இதுதான்!)

இது முதல் உதாரணம். அடுத்த உதாரணமாக, 2004ல் வெளிவந்த மற்றொரு படம். அதன்பெயர் – விருமாண்டி.

படத்தில் ஒரு குறிப்பிட்ட சிச்சுவேஷன். கதாநாயகன், அவனது கிராமத்துச் சாமியான விருமாண்டியை, அவனது நண்பர்களுடன், விருமாண்டி கிணற்றில் நுழைந்து மூடப்பட்ட நாளில் வழிபடுகிறான். இந்த இடத்தில், பின்னணியில் ஒலிக்கிறது ஒரு பாடல்.

கர்ணகடூரமான குரலில், தடதடவென்ற இசையமைப்புடன், இப்பாடலைப் பாடியவர் இளையராஜாவே தான் என்பது நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். ‘விருவிருமாண்டி விருமாண்டி’ என்ற இப்பாடல்தான் அந்தப் படத்திலேயே எனக்குப் பிடித்தமான இரண்டு பாடல்களில் ஒன்று (மற்றொரு பாடல் – கருமாத்தூர் காட்டுக்குள்ளே). இந்தப் பாடலையும், காட்சிக்குத் தேவையான வேகத்துடன் படமாக்கியிருப்பார் கமல்ஹாசன். ஆனால், இந்தப் பாடலின் முழு உபயோகமும், படத்தின் இரண்டாம் பாதியின் கடைசியில் – க்ளைமேக்ஸில்  தான் வருகிறது. அதைப்பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.

க்ளைமேக்ஸ். கதாநாயகன் விருமாண்டி, சூப்ரின்டென்ட்டின் போலீஸ் உடையை அணிந்துகொண்டு வெளியேறுகிறான். காரணம்? கொத்தாளத் தேவனைத் தடுப்பதே. இந்த நேரத்தில், வெளியே கொலைவெறி பிடித்த பிற கைதிகள் தப்பித்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். விருமாண்டி வெளியேறுவதை படம் பார்க்கும் ஆடியன்ஸின் மனதில் பதியவைக்க என்ன செய்ய வேண்டும்?

இங்கேதான் ‘விருவிருமாண்டி விருமாண்டி’ பாடலின் ஹைஸ்பீட் வெர்ஷன் உதவுகிறது.

‘கர்ப்பக்கெரகம் விட்டு சாமி வெளியேறுது… இது நியாயத் தீர்ப்பு கூறும் நாளுடா.. தர்மம் பூட்டுப் போட்டா உள்ள அடங்காதுடா.. அத்த தடுக்குறவன் இப்ப ஆருடா’ என்று தொடங்கும் இப்பாடல், படத்தின் சிச்சுவேஷனோடு சேர்த்து, பார்ப்பவர்களை உடனடியாக வெறி கொள்ளவைப்பதில் பெருவெற்றி அடைகிறது. யோசித்துப் பாருங்கள். எங்கு பார்த்தாலும் கைதிகளின் வெறியாட்டம். திடீரென்று, பெரிய கம்பிக்கதவை தலைக்குமேல் தூக்கிக்கொண்டு விருமாண்டியும் பிற கைதிகளும் ஓடிவருகின்றனர். எல்லோருக்கும் முன்னால், அலறிக்கொண்டு ஓடிவருகிறான் விருமாண்டி. அவன் தோற்றமே பழைய விருமாண்டி சாமி போலவே இருக்கிறது. மிகச்சரியாக அந்த சூழ்நிலையை ஒரே கணத்தில் மனதில் பதியவைக்கக்கூடிய பாடலாக இது இருக்கிறது.

இதோ இந்த வீடியோவில், 2:16லிருந்து துவங்குகிறது அப்பாடல்.

(இதே படத்தில், கமலின் அறிமுகக்காட்சியில், ஆடியன்ஸின் கரகோஷமா அல்லது பாடலில் வரும் கரகோஷமா என்றே பிரித்தறிய முடியாதவாறு, கமல் வந்து குதிக்கும் ‘கொம்புல பூவச்சுத்தி’ பாடலையும் இந்த லிஸ்ட்டில் சேர்த்துக்கொள்ளலாம்).

கமல்ஹாசன், பாடல்களின் முக்கியத்துவத்தையும், காட்சிகளின் பின்னணியில் அவை மக்களின் மனதில் விளைவிக்கும் மாற்றங்களையும் பற்றி நன்றாகத் தெரிந்தவராகவே இருக்கிறார் என்பதற்கு இவை சில உதாரணங்கள். திரைக்கதை அமைக்கும்போது, இப்படிப்பட்ட பாடல் – காட்சி ஒத்திசைவு, வெகுமுக்கியம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com