15.இறை...இசை...ஏ.ஆர்.ரஹ்மான்..! - ஒரு சூஃபி பயணம் (2)

சென்ற அத்தியாயத்தில், ரஹ்மானின் சூஃபி பாடல்கள் பற்றியும், தில் ஸே படத்தின்
15.இறை...இசை...ஏ.ஆர்.ரஹ்மான்..! - ஒரு சூஃபி பயணம் (2)

சென்ற அத்தியாயத்தில், ரஹ்மானின் சூஃபி பாடல்கள் பற்றியும், தில் ஸே படத்தின் பாடல்கள் பற்றியும் விரிவாகக் கவனித்தோம். மேலும் தொடருவோம்.

தில் ஸே படத்தின் ‘சைய்யா சைய்யா’ பாடல் பற்றி சுருக்கமாக சென்ற அத்தியாயத்தில் கவனித்தோம். இன்னும் கொஞ்சம் விரிவாக அப்பாடலைப் பார்க்கலாம். அதன்பின் பிற சூஃபி விஷயங்களுக்குள் செல்லலாம்.

சைய்யா சைய்யா பாடல், குல்ஸாரால் எழுதப்பட்டது. பாடலின் மெட்டும் சரி, இசைக்கருவிகளும் சரி, சூஃபி இசையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டவை என்பதைச் சென்ற வாரம் கவனித்தோம். இந்தப் பாடல் எதை பேசுகிறது என்றால், சூஃபிகளின் வாழ்க்கைத் தத்துவம்தான் இதன் மைய இழை. இறைவனை அடைவதுதானே சூஃபித் தத்துவம்? அதேபோல், யாரோ முகமற்ற ஒரு பெண்ணையும், அவளது பல குணங்களின் இயல்புகளையும் விரிவாகப் பேசி, அவளை அடைய நினைப்பதே இப்பாடலின் கருத்து. காதலின் நிழலில் நடப்பதையும், அப்படி நடக்கையில் பாதங்களின் கீழே சொர்க்கம் இருப்பதயும் சென்ற வாரமே கவனித்தோம். அத்துடன், நம்முடனேயே அரூபமாக நடக்கும் உற்ற துணை, இனிமையான உருதுவில் கிசுகிசுப்பதையும், காலை, மாலை மற்றும் ஒட்டுமொத்த உலகமுமே அவள்தான் என்பதையும், மலர்களில் மறைந்திருக்கும் அவள், தனது இருப்பை நறுமணத்தின் மூலமாக அவ்வப்போது வெளிப்படுத்துவதையும், அவளை தாயத்தாக்கி அணிந்துகொள்ளும் விருப்பம் இருப்பதையும், கூடவே வரும் இறைநம்பிக்கை போல அவள் இருப்பதையும், ஒரு இனிமையான இசை போலவும், இறைநம்பிக்கையூட்டும் புனிதச் சொற்கள் போலவும் அவள் விளங்குவதையும், பனித்துளி போல அவள் நடப்பதையும், அப்படி நடக்கையில் பாதத்துக்குக் கீழே சொர்க்கத்தை வைத்துக் கொண்டிருப்பதையும், இலைகளில், கிளைகளில், பூங்காற்றில் அவளைத் தேடிப் பார்ப்பதையும் பற்றிப் பேசுகிறது இப்பாடல்.

மேலும், ஒளி மற்றும் நிழல் ஆகிய இரண்டு வடிவங்களோடும் விளையாடி கொண்டிருக்கும் அவளது அத்தனை வடிவங்களுக்கும் காதலனாக இருப்பதையும், குறும்புத்தனத்தோடு அவள் வண்ணங்களை மாற்றி கொண்டிருந்தாலும், வண்ணங்கள் அடங்கிய அத்தனை உருவங்களையும் வழிபடும் ஒருவனாக இருப்பதால், இதெல்லாமே பிடித்திருக்கும் ஒருவனின் பாடலாக இது வெளிப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக யோசித்துப் பார்த்தால், இது காதலியைத் தேடும் காதலனைப் பற்றிய பாடல் மட்டுமல்லாது, வாழ்க்கையின் லட்சியமாக விளங்கும் ஒன்றை அல்லது ஒருவனைத் தேடும் பக்தன் ஒருவனின் வாக்குமூலமாகவும் இருப்பதை உணரலாம். அதுதான் குல்ஸாரின் சிறப்பு.

இந்தப் பாடலில் அத்தனை ஆழமான அர்த்தங்கள் உள்ளன. ஆனால் இதன் தமிழ் வடிவம் மிகத் தட்டையாக இருக்கும். இதைத்தான் சென்ற வாரம், தமிழில் ஆழமான வரிகள் அடங்கிய பாடல்கள் மிகக் குறைவு என்று குறிப்பிட்டிருந்தேன்.

தில் ஸே படத்துக்கு இசையமைத்தபின்னர், 1947: எர்த், டோலி சஜா கெ ரக்ஹ்னா (காதலுக்கு மரியாதையின் ஹிந்திப் பதிப்பு. ப்ரியதர்ஷன் இயக்கியது. நாயகி – ஜோதிகா), தால், தக்‌ஷக் ஆகிய ஹிந்திப்படங்களுக்கு இசையமைத்திருந்தார். அப்போது, 2000த்தில், ஃபிஸா என்ற ஹிந்திப்படம் வெளியானது. ஹ்ரிதிக் ரோஷன் நடித்திருந்த இப்படத்தில் அனைத்துப் பாடல்களையும் அனு மாலிக் இசையமைத்திருக்க, ஒரே ஒரு பாடலை மட்டும் ரஹ்மான் இசையமைத்திருந்தார். அது ஒரு கவ்வாலி. சையத் பீர் ஹாஜி அலி ஷா புஹாரி என்ற முஸ்லிம் துறவியைப் பற்றிய பாடல் அது. பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த துறவி இவர். கடவுளின் பெயரால் பல அற்புதங்கள் நிகழ்த்தியவர். பல நாடுகளைச் சுற்றி வந்து, பம்பாயில் தங்கி விட்டவர். இறக்கையில், தனது உடலைக் கடலில் விட்டுவிடவேண்டும் என்றும், உடல் எங்கே ஒதுங்குகிறதோ, அங்கே புதைக்கப்படவேண்டும் என்றும் சொல்லிவிட்டு இறந்தவர். அப்படியே, அவரது உடல் கரைசேர்ந்த இடத்தில் தர்ஹா கட்டப்பட்டது. இன்றுவரை இந்தியாவின் மிகப்பிரபலமான தர்ஹாக்களில் இதுவும் ஒன்று. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்லும் இடம்.

இத்தகைய புகழ்வாய்ந்த ஹாஜி அலி பற்றி ஃபிஸா படத்தில் ஒரு பாடல் வேண்டும் என்று இயக்குநர் காலித் மெஹ்மூத் கேட்க, ரஹ்மானின் முதல் நேரடி சூஃபி கவ்வாலியாக அப்பாடல் அமைந்தது.

இப்பாடலைப் பாட ரஹ்மான் அழைத்த இருவர், மிகப் புகழ்பெற்றவர்கள். காதர் குலாம் முஸ்தஃபா மற்றும் முர்தஸா குலாம் முஸ்தஃபா. இந்த இருவரும், உஸ்தாத் குலாம் முஸ்தஃபா கானின் மகன்கள். தற்போது எண்பத்து ஆறு வயதாகும் குலாம் முஸ்தஃபா கான் பற்றிப் புதிதாக எதுவும் சொல்லவே தேவையில்லை. ஹிந்துஸ்தானி இசையில் தலைசிறந்த இசைக்கலைஞர்களில் ஒருவர். பல புகழ்வாய்ந்த விருதுகளை வென்றிருப்பவர். பத்மபூஷன் விருது பெற்றவர். ஹிந்தித் திரையுலகின் பல்வேறு சிறந்த பாடகர்கள் இவரையே குருநாதராகக் கருதுகின்றனர். இவரது பல இசைத்துணுக்குகள் இணையமெங்கும் நிறைந்திருக்கின்றன. ரஹ்மானோடு கோக் ஸ்டுடியோவின் மூன்றாவது சீஸனில் சில பாடல்கள் பாடியிருக்கிறார். ரஹ்மான் மனமார்ந்த மரியாதையோடு நடத்தும் ஒருசில முக்கியமான இசைக்கலைஞர்களில் ஒருவர்.

பாடலைப் பாடிய காதர் குலாம் முஸ்தஃபா மற்றும் முர்தஸா குலாம் முஸ்தஃபா ஆகிய குலாம் முஸ்தஃபா கானின் மகன்கள், ரஹ்மானின் இசையில் மேலும் சில கவ்வாலிகளைப் பாடியுள்ளனர்.

பாடலை எழுதியுள்ள ஷௌக்கத் அலியும் சாதாரணமான நபர் கிடையாது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற பாடகர். இவரது மூத்த சகோதரர் இனாயத் அலி கான் இவரைவிடவும் புகழ்பெற்ற பாடகர். பாகிஸ்தானில், நமது பாரத ரத்னாவுக்கு இணையான, உச்சபட்ச விருதான ’Pride of Performance’ விருதை 1990யிலேயே வென்றவர்.

இப்படி ஒரு கூட்டணி முதன்முறையாக ஒன்றாக இணைந்தபோது உருவான பாடல் நெஞ்சை உருக்குவதாக அமைந்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையல்லவா?

இதோ பியா ஹாஜி அலி பாடலின் தமிழ் மொழிபெயர்ப்பு.

’இறைவன், அவரது தோழர்கள் பரிந்துரைக்கும்போது, அவசியம் ஒப்புக் கொள்வார் . .

இந்த வாயிலில் இருந்து, நாம் கடைத்தேற நம்பிக்கையும் விடுதலையும் அவசியம் கிடைக்கும் . .

உங்கள் இதயத்தின் அடியாழத்திலிருந்து வேண்டியதைக் கேளுங்கள் . . இது கடவுளின் நண்பரான ஹாஜி அலியின் இடம் . .

சமுத்திரங்களின் அரசரே . . ஹைதரின் தோன்றலே . .ஒரே ஒரு பார்வை அருளுங்கள் . .

எங்களின் விருப்பத்துக்குறிய ஹாஜி அலியே . . நீங்களே சமுத்திரங்களில் அடங்கியுள்ள புதையலாகும் . .

உங்களது இந்த வாயில், அருள்நிறைந்த, தூய்மையான, எங்களின் லட்சிய வாயிலாகும் . .

ஒளி மிகுந்தவரே . . இயல்பானவரே . . கள்ளங்கபடம் இல்லாதவரே . .

உங்கள் அருள்நிழலை எங்கள் அனைவரின் மேலும் படர விடுங்கள் . .

இங்கு ஹிந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய அனைவருக்கும் வேண்டியது கிடைக்கிறது . .

இந்த சமுத்திரம், உங்களது வாயிலைத் தினந்தோறும் காக்கிறது . .

உங்கள் திருமுகம், ஒளி நிரம்பியதாக இருக்கிறது . .

முஹம்மது முஸ்தஃபாவின் பெயரால் தானம் செய்யுங்கள் . .

இந்த வாயிலில் இருந்து ஒருவரும் மனமுடைந்து திரும்பியதில்லை . .

ஓ துறவியே . . ஒருவரும் மனமுடைந்து திரும்பியதில்லை . .

ஒருவரது இதயத்தில் என்னவெல்லாம் மறைந்திருக்கிறதோ, அது அத்தனையும் நீங்கள் நன்றாக அறிவீர்கள்..

உங்கள் மேன்மைக்குரிய செயல்களை, சொர்க்கத்திலிருப்பவர்களும் வியந்து போற்றுகின்றனர் . .

ஏழைகளாகிய எங்களின் கதறல்களைச் செவிமடுத்து, எங்கள் மேல் உங்களது அருளைப் பொழியுங்கள் . .

அகிலம் முழுவதும், உங்களைப் பார்த்துப் பெருமைப்படுகிறது . .

கொடும் விதியும், உங்களது வாயிலில், நல்லதிர்ஷ்டமாக மாறுகிறது . .

எனது வேண்டுதல்கள் நிறைவேறாமல் இருக்கும் வரை, எனது வாழ்வு உங்கள் வாயிலில் நின்று கண்ணீர் வடிக்கும் . .

துறவியே . .எவரெல்லாம் உங்களுடையவர்கள் ஆகிவிட்டனரோ, அவர்களிடம் கர்வமும், கொடுமதியும் ஏது?’

பாடலை ஒருமுறை கேட்டுவிட்டு, மொழிபெயர்ப்பையும் படித்துப் பாருங்கள். பாடல், முதன்முறை கேட்கையிலேயே உங்கள் உள்ளத்தை அவசியம் உருக்கும் தன்மையுடையது.

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், இச்சமயத்திலெல்லாம், சூஃபி இசையைப் பற்றி ரஹ்மானுக்குக் குறைவாகவே தெரிந்திருந்தது. நஸ்ரத் ஃபதே அலி கானின் ‘தம் மஸ்த் கலந்தர் மஸ்த் மஸ்த்’ பாடலைக் கேட்டபின்னர்தான் கவ்வாலிகள் மேலும் சூஃபி இசை மேலும் ஈடுபாடு வந்ததாக ரஹ்மானே குறிப்பிட்டிருக்கிறார்.

ரஹ்மான், திரையிசையில் ஈடுபடுமுன்னரே ’தீன் இசை மாலை’ என்ற ஆல்பத்தை, 1989ல் வெளியிட்டிருந்தார். மனோ, ஷாகுல் ஹமீது மற்றும் சுஜாதா பாடிய ஆல்பம் இது. இதில் மொத்தம் பதினோரு பாடல்கள் உண்டு.    இந்தப் பாடல்கள் இப்போதும் சாதாரணமானவையே. ரோஜாவில் ரஹ்மான் உபயோகித்திருந்த இசை கூட இதில் இருக்காது. ரோஜாவுக்கும் இதற்கும் உள்ள ஒரே ஒற்றுமை, பாடல்களின் ஒலியில் இருக்கும் துல்லியம் மட்டுமே.

ரஹ்மானின் இசையில் சூஃபி பாதிப்பு பற்றி வரும் வாரமும் தொடரலாம்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com