17. இறை...இசை...ஏ.ஆர்.ரஹ்மான்..! - ஒரு சூஃபி பயணம்(4)

ரஹ்மானின் சூஃபி இசை பற்றிக் கவனித்து வருகிறோம். பனிரண்டு மற்றும் பதிமூன்றாம் நூற்றாண்டில், வட இந்தியாவில், ஆஜ்மீரில் வாழ்ந்த ஒரு துறவி, க்வாஜா மொய்னுதீன் (ச்)சிஷ்டி.
17. இறை...இசை...ஏ.ஆர்.ரஹ்மான்..! - ஒரு சூஃபி பயணம்(4)

ரஹ்மானின் சூஃபி இசை பற்றிக் கவனித்து வருகிறோம்.

பனிரண்டு மற்றும் பதிமூன்றாம் நூற்றாண்டில், வட இந்தியாவில், ஆஜ்மீரில் வாழ்ந்த ஒரு துறவி, க்வாஜா மொய்னுதீன் (ச்)சிஷ்டி. இவரது முழுப்பெயர், ஷேக் க்வாஜா சையத் முஹம்மத் மொய்னுதீன் சிஷ்டி. மிகவும் சக்திவாய்ந்த ஒரு சூஃபி துறவி. ‘சிஷ்டி’ என்ற ஒரு புதிய பிரிவை இந்தியாவில் தொடங்கிவைத்த முதல் துறவி ஆவார். இவரது மிகப்பிரபலமான மற்றொரு பெயர், ‘கரீப் நவாஸ்’ என்பதாகும். இதற்கு, ‘ஏழைகளின் பாதுகாவலர்’ என்பது பொருள். இவர், முஹம்மது நபியின் வழித்தோன்றலும் ஆவார்.

அஃப்கானிஸ்தானில் கி.பி. 1142ஆம் ஆண்டு பிறந்த இவர், தனது இளவயதில், ஒரு முஸ்லிம் துறவி அளித்த ஒரு ரொட்டியைச் சுவைத்தவுடன், ஞானம் அடைந்து, தனது சொத்துக்களைத் துறந்து, உலகெங்கும் பயணம் மேற்கொண்டார் என்பது இவரைப் பற்றிய உண்மை. பயணத்தின் போது லாகூருக்கு வந்த இவர், அங்கிருந்து கோரி முஹம்மத் என்ற மன்னனுடன் (மதனின் ‘வந்தார்கள் வென்றார்கள்’ – நினைவிருக்கிறதா?) இந்தியாவிற்கு – ஆஜ்மீருக்கு வந்து, அங்கேயே தங்கி விட்டார்.

அவர் வாழ்ந்த காலத்தில், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு – ஹிந்துக்கள், முஸ்லிம்கள் ஆகிய இருபாலருக்குமே – அருளை அள்ளி வழங்கினார். குறிப்பாக ஏழை மக்களுக்கு, எப்பொழுதும் இல்லை என்னாமல் அருளையும் பொருளையும் வாரி வாரி வழங்கினார். பல புத்தகங்களையும் எழுதினார். இன்றும், இவரது தர்ஹாவில் கூட்டம் அலைமோதுவதை, ஆஜ்மீருக்குச் செல்லும் நண்பர்கள் கவனித்திருக்கலாம். வட இந்தியாவில் இவரைத் தெரியாதவர்களே இல்லை.

இப்பொழுது, பாடலைப் பார்க்கலாம். இந்தப் பாடல், ஜோதா அக்பரில் வருகிறது. கதையின்படி, திருமணத்துக்கு முன்னர், இவரது அருளை வேண்டி, இளம் அக்பரின் முன்னிலையில் பாடப்பெறும் ஒரு பாடல் இது. பாடல் வரிகளை எழுதியது காஷிஃப்.

‘என்னுடைய க்வாஜாவே . . எனது இதயத்தில் வந்து வாழுங்கள். .

நீங்களே அரசர்களின் அரசர் ஆவீர்கள்; நீங்களே அலியின் (அலி – நபியின் மருமகன்) விருப்பத்திற்கு உரியவரும் ஆவீர்கள் . .

ஏழை எளியவர்களின் கொடும் விதியை, நீங்களல்லவா மாற்றினீர்கள் . .

(க்வாஜா. .)

க்வாஜாவே . .உங்களது அரசவையில், அருளின் ஒளியை நாங்கள் காண்கிறோம்

உங்களது அரசவையில், மற்ற சாதுக்களும் அருளாளர்களும் உங்களிடம் தலைவணங்குகின்றனர் . .

நீங்களே எங்களது பாதுகாவலர் . .உங்களது திருநாமம், எவ்வளவு அழகு . .

உங்களை நாங்கள் வணங்கினால்/விரும்பினால், நபியான முஸ்தஃபாவின் அருளும் எங்களுக்குக் கிடைத்திடும் . .

(க்வாஜா. .)

எனது குருவிற்கு எனது வணக்கங்கள் . . எனது அன்பிற்குறிய வணக்கங்கள் . .

அவரது மூலமாகத் தான் உங்களைத் தெரிந்து கொண்டேன் . .

எங்களது அனைத்துக் கவலைகளும் இப்பொழுது தொலைந்து விட்டன . .நாங்கள் உங்களது ஆனந்தமாகிய ஒளியின் நிழலில் அல்லவா இருக்கிறோம் . .

தங்களின் மேல் எவரும் எவ்வளவு பொறாமை கொண்டாலும், அது மிகச்சிறிய அளவுதான் எங்களின் வணக்கத்திற்கு உரிய க்வாஜாவே . .

உங்கள் பாதங்களை விட்டு நாங்கள் எப்படிப் பிரிவோம்?; நீங்கள் தாம் எமது வழிகாட்டி..

(க்வாஜா. .)

கேட்பவர்களின் மனதை உருக்கக்கூடிய பாடல் இது. ரஹ்மானே பாடியிருப்பார்.

அடுத்து, தில்லி-6 என்ற படத்திலும் ஒரு சூஃபி பாடலை ரஹ்மான் இசையமைத்தார். இப்படத்தின் அத்தனை பாடல்களுமே பிரமாதமாக இருக்கும். என்றாலும் இப்பாடல் அவற்றை விடவும் வித்தியாசமானது. அற்புதமாக இசையமைக்கப்பட்டது.

மனித வாழ்க்கை, துயரங்களால் நிரம்பியது. நமது வாழ்வில் எத்தனையோ துயரங்களைச் சந்தித்திருக்கிறோம். ஒவ்வொரு துயரமும், நம்மை மேலும் மேலும் செம்மைப் படுத்துகிறது. கடவுள் நம்பிக்கை இருப்பவர்களுக்கு, கொடுந்துயரம் அவர்களை வாட்டுகையில், கடவுள் ஒருவரே வடிகால். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு, அவர்களது தன்னம்பிக்கையே வடிகால். கொடிய துயரத்தில் சிக்கி அழுது கொண்டிருக்கும் வேளையில், கடவுளின் அருள் வேண்டி இசைக்கப்பட்ட ஒரு நெஞ்சைத் தொடும் பாடலே இது. கடவுள் நம்பிக்கை இல்லாத நண்பர்களும் இதைக் கேட்கலாம்; படிக்கலாம். ரஹ்மானின் மேதமையும் அடக்கமும் பணிவும் வெளிப்படும் ஒரு உருக்கமான பாடல் இது.

ப்ரஸூன் ஜோஷி எழுதிய வரிகளை ஜாவேத் அலி பாடியிருப்பார்.

‘என்னுடைய எல்லாக் கோரிக்கைகளையும் எனது முகத்தில் எழுதிக்கொண்டு வந்திருக்கிறேன் . . .

உன்னிடம் எதைக் கேட்பேன் நான். .? நீயாகவே எல்லாவற்றையும் புரிந்துகொள் எனது இறைவனே . . .

என்னுடைய இறைவனே . . .கடவுளே. .

நெற்றி முழுவதும் கவலைக் கோடுகள் இறைவா . . .

எனது விதியைச் சரி செய் இறைவா . . .

எனது கொடுந்துயரத்தை மராமத்து செய் கடவுளே . .

உனது வாயிலில் நான் வணங்குகிறேன் . .விழுகிறேன் . .விழுந்து எழுகிறேன் . .

எனது விதியைச் சரி செய் இறைவா . . .

எவரெல்லாம் உனது வாயிலுக்கு வருகிறார்களோ . . எந்தத் தலைகள் அங்கு வந்து வணங்குகின்றனவோ. .

அவர்கள் ஆனந்தத்தில் ஆடிக்கொண்டு அனைவரின் முன்னரும் தோன்றுகின்றனர் . .

எவரெல்லாம் தாகத்தோடு உன்னிடம் வருகின்றனரோ,

அவர்கள் ஒரு நதியையே திரும்பக் கொண்டு செல்கின்றனர் . .

உன் அருளின் ஒளியில் அவர்கள் நீந்திக் கரையேறுகின்றனர் . .

கடவுளே . .என் இறைவா . .

ஒரு நறுமணம் எங்கிருந்தோ கமழ்ந்தது . .

அதன் தேடலில் நான் அலைந்தேன் . .தொலைந்தேன் . .

அது ஒரு மிருதுவான மாயை . .நான் அதிர்ந்தேன் . .பயந்தும் போனேன் . .

எப்பொழுது உனது இடத்துக்கு வந்தேனோ . .

அப்பொழுதுதான் நான் உண்மையை அறிந்து கொண்டேன் . .

அந்த நறுமணம் என்னுள் இருந்தே வந்தது . .

நீயே தான் எனக்கு இதைப் புரிய வைத்தாய் . .

இறைவனே . . எனது கடவுளே . .

நெற்றி முழுவதும் கவலைக் கோடுகள் இறைவா . . .

எனது கொடுந்துயரத்தை மராமத்து செய் கடவுளே . .

துண்டுதுண்டாகச் சிதறிப்போவது எனக்கு நன்றாகப் பழக்கப்பட்டதுதான் . . எத்தனையோ முறை அவ்வாறு சிதறியிருக்கிறேன் . .

இல்லையெனில், உனது பிரார்த்தனையில் என்னையே இழக்கவும் தெரியும் . .

உனது நினைவிலேயே என்னை எப்பொழுதும் இருக்க விடு . . இதைத்தாண்டி நான் எங்கும் செல்லவே மாட்டேன் . .

நீயுமே என்னைக் கைவிட்டு விட்டால், நான் முற்றிலுமாகச் சிதறுண்டு விடுவேன் . .

என்னால் மீண்டு எழவே இயலாது . .

கடவுளே . . இறைவனே . .

தலை நிமிர்ந்து கர்வத்துடன் எத்தனையோ ஆசைப்பட்டிருக்கிறேன் . .

எத்தனைக் கனவுகள் இதுவரை கண்டிருக்கிறேன் . .

எத்தனை முறை முயன்றிருப்பேன் . .

ஆனால் . .

நீ எப்பொழுது முழுமையாக என் முன் வந்தாயோ. .

அப்பொழுது உன்னைக் கண்கொண்டு என்னால் பார்க்க இயலவில்லை . .

அந்தப் பொழுதில், உன் முன் தலைவணங்கிய அந்த நொடியில், என்னால் அடைய முடியாதது என்ன?

கடவுளே . .எனது இறைவா . .

எனது இறைவன் வீடு வந்து விட்டான் . . .

இறைவா . . .இறைவா . . . ‘

இந்தப் பாடலைக் கேட்டீர்கள் என்றால், சில நிமிடங்களாவது எல்லாவற்றையும் மறந்துவிட்டு, ஒருவித அமைதியில் கட்டாயம் ஆழ்ந்திருப்பீர்கள் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை.

ரஹ்மானின் சூஃபி இசையைப் பற்றி வரும் அத்தியாயத்திலும் இன்னும் கொஞ்சம் கவனிப்போம்.

பாடலின் சுட்டிகள் – 

Khwaja Mere Khwaja

Arziyan

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com