33. இருபத்தெட்டு வருடங்களில் ஆறு படங்கள்; தளராத ஒரு இசைப்பயணம்..!

தமிழ்த் திரைப்படங்களில் மிகக்குறைவான பாடல்களுக்கு இசையமைத்திருந்தாலும், அந்தப் பாடல்களின் தரத்தால் இன்றும் பலரது நினைவுகளிலும் இருந்து கொண்டிருக்கும் மிகச்சிலரில்... 
33. இருபத்தெட்டு வருடங்களில் ஆறு படங்கள்; தளராத ஒரு இசைப்பயணம்..!

தமிழ்த் திரைப்படங்களில் மிகக்குறைவான பாடல்களுக்கு இசையமைத்திருந்தாலும், அந்தப் பாடல்களின் தரத்தால் இன்றும் பலரது நினைவுகளிலும் இருந்து கொண்டிருக்கும் மிகச்சிலரில் ரமேஷ் விநாயகம் முக்கியமானவர். தமிழில் ’ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே’, ‘நள தமயந்தி’, ’அழகிய தீயே’, ‘ஜெர்ரி’, ‘ராமானுஜன்’ மற்றும் ‘மொசக்குட்டி’ ஆகிய படங்களுக்கு மட்டுமே இசையமைத்திருக்கிறார். இருப்பினும், இவரது பாடல்களை அவ்வப்போது நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். எங்காவது நமது காதுகளில் இவரது பாடல்கள் ஒலிக்காமல் இருந்ததே இல்லை.

இசையைப் பொறுத்தவரையில் எப்போதோ – 1986லேயே – ரமேஷ் விநாயகத்தின் முதல் தொகுப்பு வெளியாகிவிட்டது. ப்ரதித்வனி என்ற பெயரில். கடவுட்களைப் பற்றிய பாடல்களின் தொகுப்பு. இதன்பின் இயக்குநர் மௌலியின் ‘பைலா பட்சிசு’ என்ற தெலுங்குப் படத்தில் முதல் அறிமுகம் (1989). சிறுவயதில் கிரிக்கெட்டின் மீது அதிகப் பற்றுள்ளவராகவே ரமேஷ் விநாயகம் இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. ஆனால் ஒரு ஆசிரியர் அந்தக் கனவுக்கு வேட்டு வைத்த பின், இசையின் மீது ஆசை உருவானது என்று சொல்லியிருக்கிறார். அவர் படித்த ஏ.எம்.ஜெயின் கல்லூரியில், நண்பர்களுக்கு மத்தியில் பாடல்களைப் பாடிப் பிரபலம் ஆகியிருக்கிறார். இந்தப் பாடல்கள் இவரது சொந்தப் பாடல்கள். ஆனால் அவைகளைத் திரைப்படப் பாடல்கள் என்று சொல்லி நம்பவும் வைத்திருக்கிறார். ஆனால் அதையே நம்பியும் இருக்க இயலாது என்பதால், தந்தையின் நண்பரின் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். ஒருநாள், அவரது மேஜையில் அமர்ந்து, ஒரு குறிப்பிட்ட இசைக்குறிப்பை எழுதிக்கொண்டிருக்கையில், பத்து நிமிடங்களுக்கும் மேலாக வந்து எதிரில் அமர்ந்து கொண்டிருந்த நபரை திடீரென்று பார்க்க நேர்கிறது. ’அப்போதுதான் இசையைப் பற்றிய தீவிரமான ஆசை மனதில் உதித்தது’ என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் ரமேஷ் விநாயகம்.

இதன்பின்னர்தான் அவரது முதல் ஆல்பமான ‘பிரதித்வனி’ நிகழ்கிறது. எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு ட்ராக் பாடும் பாடகராக இசையுலகில் அறிமுகமாகிறார். பிரதித்வனியில் பத்துப் பாடல்களும் எஸ்.பி. பாலசுப்ரமணியமே பாடுகிறார். அதன்பின் அவருடன் ரமேஷ் விநாயகம் மொத்தமாக நான்கு ஆல்பங்கள் வெளியிட்டாயிற்று. எல்லாமே தெய்வீகப் பாடல்கள். கூடவே, பல தொலைக்காட்சி சீரியல்களுக்கும் க்ரேஸி மோகனுடன் வேலை செய்திருக்கிறார்.

அதன்பின்புதான் இயக்குநர் மௌலியின் தெலுங்குப் படத்தில் முதன்முதலில் அறிமுகம். பின்னர் 1995ல் ‘ஆண்ட்டி’ என்ற மௌலியின் படம். அதில் இருந்து ‘ஆண்ட்டி ரமேஷ்’ என்று மாறுகிறார்.

அதன்பின்னர் பலரிடம் வாய்ப்பு தேடியிருக்கிறார். ஆனால் பலனில்லை. ஒரு நாள் க்ரேஸி க்ரியேஷன்ஸைச் சேர்ந்த காந்தன் (பிந்நாட்களில் ஜெர்ரி படம் இயக்கியவர். ஜெர்ரிக்கும் இசை ரமேஷ் விநாயகமே) சொல்லி, இயக்குநர் வஸந்த்தின் அலுவலகம் சென்றிருக்கிறார். அங்கே தினமும் ஒரு ட்யூனை கம்போஸ் செய்து, வீடு திரும்புவார். இப்படி ஒரு மாதம் சென்றபின்னர், ஒரு நாள் வஸந்த் இவரை அழைத்து, ஐந்து இசையமைப்பாளர்களைத் தனது அடுத்த படத்தில் அறிமுகம் செய்யப்போவதாகச் சொல்ல, அப்படித்தான் ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே’ படத்தில் ‘தொட்டுத் தொட்டுத் தொட்டுச் செல்லும் ஐஸ் காற்றிலே’ பாடலுக்கு இசையமைக்கும் வாய்ப்பு ரமேஷ் விநாயகத்துக்கு வருகிறது. அந்தப் பாடல் மிகவும் பிரபலமும் அடைகிறது. அந்தப் பாடலை ரமேஷே பாடியிருந்தார்.

இதன்பின்னர் ‘யூனிவர்ஸிடி’ திரைப்படத்துக்கு இசையமைக்கிறார் ரமேஷ் விநாயகம். ஜீவன் அறிமுகமான படம். அந்தப் படத்தின் ‘நெஞ்சே துள்ளிப்போ’ பாடல் அப்போது மிகவும் பிரபலம். பாடியிருந்தது கார்த்திக். படம் ஓடாவிட்டாலும், பாடல்கள் பிரபலம் அடைந்ததால் ரமேஷ் விநாயகத்தின் பெயர் வெளியே தெரிய ஆரம்பிக்கிறது. உடனடியாக, கமல்ஹாஸனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘நள தமயந்தி’ திரைப்படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு தேடி வருகிறது. இன்றுவரை நள தமயந்தியின் பாடல்கள் பிரபலம். அந்தப் படத்தின் அத்தனை பாடல்களும் நன்றாக இருந்தாலும், குறிப்பாக இரண்டு பாடல்கள் பற்றி எழுதவேண்டும். முதல் பாடல் – ‘என்ன இது என்ன இது என்னைக் கொல்வது’. இப்போதுவரை பல எஃப்.எம். சேனல்களில் இப்பாடலை நீங்கள் கேட்க முடியும். படம் வந்ததில் இருந்து இன்று வரை இந்தப் பாடலை அடிக்கடி கேட்கும் பலரையும் எனக்குத் தெரியும். எனக்கு மிகப்பிடித்தமான பாடல்களில் இதுவும் ஒன்று. ரமேஷ் விநாயகமே பாடியிருக்கும் பாடல். உடன் சேர்ந்து பாடியிருப்பவர் சின்மயி. தமிழில் வெளியான அற்புதமான மெலடிக்களில் இதுவும் ஒன்று என்பது பாடலைக் கேட்டதும் தெரிந்துவிடும். இந்தப் பாடலில் வரும் இசைக்கருவிகள், பாடலில் ஆங்காங்கே இழையும் மௌனம்,  இசைக்கருவிகளின் இசையைத் தழுவிச்செல்லும் கிறங்கிய குரல்கள் என்று முதலில் இருந்து இறுதி வரையிலும் மிக இனிமையான இசையை வழங்கும் பாடல் இது. கேட்டதும் பிடிக்கும் தன்மை உடையது.

அடுத்த பாடல், ‘Stranded on the Streets’ என்ற ஆங்கிலப் பாடல். ‘கல்யாண சமையல் சாதம்’ பாடலின் ட்யூனில் அமைந்த பாடல் இது. பாடியிருப்பவர் கமல்ஹாஸன். முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் கமல்ஹாஸனாலேயே எழுதப்பட்ட பாடல். ஒரு பாடகராகக் கமல்ஹாஸன் பற்றி ஒரு விரிவான கட்டுரை எழுதவேண்டும் என்ற எண்ணம் உடையவன் நான். அவரது குரல் மிகவும் வித்தியாசமானது. ஓரளவு இளையராஜாவின் குரலோடு ஒத்தது. இயல்பாகவே நன்றாக இருந்தாலும், வேண்டுமென்றே அந்தக் குரலை மாற்றி மாற்றிக் கஷ்டப்படுத்துவதால் ஒருசில பாடல்கள் மோசமாக மாறிவிட்டாலும், இந்தக் குறிப்பிட்ட பாடலில் அற்புதமாக ஆங்கிலத்தில் பாடியிருப்பார் கமல். பாடல் ஹிட் ஆகவில்லை என்றாலும், கேட்டுப் பார்த்தால் உங்களுக்கும் பிடிக்கக்கூடும். படத்தில் இதன் தமிழ் வடிவமே உபயோகப்படுத்தப்பட்டது.

நள தமயந்தியின் இசை ஹிட் ஆனதுமே, ரமேஷ் விநாயகம் இசையமைத்தது ராதாமோகனின் ‘அழகிய தீயே’. இந்தப் படத்தின் ‘விழிகளின் அருகினில் வானம்’ பாடல் காதலர்களின் தேசிய கீதமாகவே இருந்தது. இப்போதும் எண்ணற்ற முறைகள் அவ்வப்போது ஒலிபரப்பப்படும் பாடல் இது. தமிழில் மறக்கமுடியாத இன்னொரு பாடல். இதையும் ரமேஷ் விநாயகமே பாடியிருக்கிறார். அதன்பின் காந்தன் இயக்கத்தில் ‘ஜெர்ரி’ படம் ரமேஷ் விநாயகத்துக்கு அமைகிறது. இப்படத்தின் ‘என் சுவாசத்தில் காதலின் வாசம்’ பாடல் ஹிட் ஆகிறது. மது பாலகிருஷ்ணன் மற்றும் கல்யாணி பாடிய பாடல் இது.

இதன் பின்னர் சில வருடங்கள் கழித்து, ‘ராமாநுஜன்’ படம் ரமேஷ் விநாயகத்துக்கு அமைகிறது. அந்தப் படத்தின் பாடல்கள் பெரிய கவனம் எதுவும் பெறவில்லை என்றாலும், அத்தனை பாடல்களும் இனிமையானவையே. அவசியம் அவை பெரிதும் மக்களிடம் சேர்ந்திருக்கவேண்டும். ஆனால் படம் துளிக்கூட ஓடாமல் போனதால் அவரது பாடல்கள் பிரபலம் அடையவில்லை. உதாரணமாக, ரமேஷ் விநாயகமும் வினயாவும் பாடியிருக்கும் ‘துளித்துளியாய்.. பனித்துளியாய்’ பாடலைக் கேட்டுப் பாருங்கள். ராமாநுஜன் பாடல்களில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் அத்தனை இசைக்கருவிகளுமே அக்காலத்தியவை. இந்தப் பாடலில் அவை கொடுக்கும் அனுபவம், கேட்டுப் பார்த்தால் தெரியும். இதே பாடலை, கௌஷிகி சக்ரவர்த்தியுடனும் ரமேஷ் விநாயகம் பாடியிருக்கிறார். அதேபோல், உன்னிகிருஷ்ணன் நீண்ட இடைவெளிக்குப் பின் பாடியிருக்கும் ‘விண்கடந்த ஜோதியாய்’ என்ற பாடலின் பின்னணி இசையைக் கவனித்துப் பாருங்கள். இதே போல் சில இசைக்குறிப்புகளும் படத்தின் இசையில் உண்டு. என்னைப் பொறுத்தவரையில் ராமாநுஜன் ஒரு குறிப்பிடத்தகுந்த ஆல்பம்தான். அவசியம் பிரபலம் அடைந்திருக்கவேண்டிய உழைப்பு இதில் உண்டு.

அறிமுகமாகிக் கிட்டத்தட்ட இருபத்தெட்டு ஆண்டுகள் ஆனாலும் ரமேஷ் விநாயகத்துக்கு உரிய புகழ் கிடைக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. ஆனால், துளிக்கூட இளைப்பாறிவிடாமல் இன்னும் அதிகமான முயற்சிகளை அவர் செய்துகொண்டேதான் இருக்கிறார். அந்த உழைப்புக்கான பலன் அவசியம் அவருக்குக் கிடைக்கும் என்பதிலும் எனக்குச் சந்தேகம் இல்லவே இல்லை.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com