29. மார்ட்டின் கப்டிலை ஒரு தந்தையாக பார்க்க பரவசமாக இருக்கிறது கப்டிலின் மனைவி லாரா!

அன்றைய தினத்தின் சந்திப்புக்கு பிறகு இருவரும் அரிதாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் சந்தித்து உரையாடுகிறார்கள்.
29. மார்ட்டின் கப்டிலை ஒரு தந்தையாக பார்க்க பரவசமாக இருக்கிறது கப்டிலின் மனைவி லாரா!

அது 2011ம் ஆண்டு. சர்வதேச நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் கப்டில் விளையாட துவங்கி இரண்டு வருடங்கள் கடந்திருந்தது. அதற்குள் அவ்வணியின் நம்பிக்கை மிகுந்த ஆட்டக்காரர்களில் ஒருவராக கப்டில் உருவெடுத்திருந்தார். அவரது அசாத்தியமான  கிரிக்கெட் ஷாட்டுகள் உலகம் முழுக்க உள்ள ரசிகர்களால் வெகுவாக வியந்து போற்றப்பட்டது. உள்ளூரில் பல ரசிகர்கள் அவரை பின்தொடர துவங்கியிருந்தனர். பந்துகளை ராட்சதத்தன்மையில் எதிர்கொள்கின்ற அவரது திறனின் காரணமாக இயல்பாக ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாளுக்கு பெருகியபடியே இருந்தது. எனினும், கப்டில் எந்தவொரு சலனத்தையும் வெளிக் காண்பித்துக்கொள்ளவில்லை.

அவர் தொடர்ந்து தனது கிரிக்கெட் திறனை மேம்படுத்துவதில் மட்டுமே கவனத்தை குவித்திருந்தார். நெடுங்காலம் நியூசிலாந்து அணியில் நிலைத்திருக்க வேண்டியது அவருக்கு அவசியமாக இருந்தது. சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் அணியில் தனது மிக நெருக்கமான நண்பரான ரோஸ் டெய்லருடன் கிரிக்கெட் விளையாட்டின் சாதூர்யங்கள் குறித்து மணிக்கணக்காக உரையாடிக் கொண்டிருப்பார். அதேப்போல, கப்டில் அண்டர் 19 அணியில் விளையாடிய காலத்திலிருந்தே உடன் இணைந்து பயணிக்கின்ற டிம் சவுத்தி, காலின் முன்ரோ முதலியவர்களுடனும் நேரம் கிடைக்கும்போது கிரிக்கெட் சார்ந்த உரையாடல்களில் பங்குகொள்வது அவரது வழக்கம்.

'கிரிக்கெட் விளையாட்டில் நிலையான திறனுடன் தொடர்ந்து விளையாடுவது சாத்தியமில்லாதது. அதனால் நாம் பல துன்பகரமான தினங்களை எதிர்கொள்வதற்கும் தயாராக இருக்க வேண்டும். நல்ல நினைவுகளை விடவும், கொடும் தினங்களை அதிகளவில் நாம் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால், எந்தவொரு சூழலையும் கையாளும் உள் அமைதியையும், பெரியளவில் சோர்வுக்குள்ளாகாமல் நிதானமாக எதையும் அணுகும் போக்கையும் நாம் பெற்றிருக்க வேண்டும். அதுவே தொடர்ந்து உயிர்ப்புடன் இயங்குவதற்கான ஊக்கத்தை கொடுக்கும்” எனும் மாட்டின் கப்டிலுக்கு அப்போது வரையில் எங்கும் எப்போதும் கிரிக்கெட் மட்டும் அவரது வாழ்க்கையாகி போயிருந்தது. பிறகுதான் லாரா மெக்கோல்ட்ரிக்கின் வருகை நேர்ந்தது.

மார்ட்டின் கப்டில் அப்போது இங்கிலாந்தில் நடைபெறவிருந்த தொடருக்கான ஆயத்த பணிகளில் ஈடுப்பட்டிருந்தார். அவரது கவனம் முழுக்க முழுக்க அந்த தொடரில் மட்டுமே குவிந்திருந்தது. அந்த நிலையில், பிரபல தொலைக்காட்சி ஊடகமான ஸ்கை டிவியில் இருந்து ஒரு நேர்காணலுக்காக அவரை அணுகியிருந்தார்கள். நேர்காணலை நிகழ்த்தவிருந்தவர், லாரா மெக்கோல்ட்ரிக். லாராவுக்கு அது இரண்டாவது நேர்காணல். அப்போதுதான் ஊடகத்துறையில் தனக்கான எதிர்காலத்தை உருவாக்கிக் கொண்டிருந்த லாராவுக்கு மார்ட்டின் கப்டிலின் நேர்காணல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. எனினும், சிறியளவில் உள்ளுக்குள் பதற்றமாகவும் இருந்தது.

கிரிக்கெட் விளையாட்டில் வளர்ச்சியின் பாதையில் மெல்ல நகர்ந்துக் கொண்டிருந்த மார்ட்டின் கப்டிலும், ஊடகத்துறையில் தனக்கான எதிர்காலத்தை தேடிக் கொண்டிருந்த லாராவும் அன்றைய தினத்தில் சந்தித்து உரையாடினார்கள். இருவருமே வயதில் மிகமிக இளையவர்களாக அப்போது இருந்ததால், நேர்காணல் என்பதையும் கடந்து, ஒருவர் மீதான மற்றவரின் கவனிப்பும், ஈர்ப்பும் அதிகளவில் பெருகியிருந்தது. மார்ட்டின் கப்டிலை லாராவின் பொன்நிற கூந்தலும், அழகும் வசீகரித்தது. அவரால் லாராவை இயல்பாக எதிர்கொள்ள முடியவில்லை. தயங்கி தயங்கி தடுமாற்றத்துடன் லாராவின் கேள்விகளுக்கு பதிலளித்துக்கொண்டிருந்தார். மறுபுறம் லாராவையும், கப்டிலின் துடிப்புமிக்க இயல்பும், கூச்ச உணர்வும் பிடித்துவிட்டது. ஊடக நேர்காணல் எனும் அளவில் நிகழ்ந்த அவர்களது சந்திப்பு, பின்காலங்களில் ஒருவரை ஒருவர் பிரிந்திருக்க இயலாது எனும் அளவில் ஆழமாக இருவருக்குள்ளும் வேர்விட்டு வளர்ந்திருந்தது.

தங்களது முதல் சந்திப்பை பற்றி மார்ட்டின் கப்டில் குறிப்பிடுகையில், “நாங்கள் பச்சை திரை விரிக்கப்பட்டிருந்த அறையில் நேர்காணலுக்காக முதல்முதலில் சந்தித்தோம். லாரா மிக அழகான பெண்ணாக என் முன்னால் தோன்றினாள். முதல் பார்வையிலேயே என்னை வசீகரித்துவிட்டாள். அவளது அழகுதான் உடனடியாக என்னை கவர்ந்தது” என்கிறார். அதேப்போல, லாரா அன்றைய தினத்தைப் பற்றி நினைவுகூருகையில், “அதுதான் எனது இரண்டாவது தொலைக்காட்சி நேர்காணல் என்பதால், மிகுந்த பதற்றத்துடன் மார்ட்டின் கப்டிலை எதிர்கொண்டேன். அன்றைய தினத்தில் எனது செயல்பாடு சிறப்பாக அமைந்திருந்தது என்று என்னால் உறுதியாக கூற முடியாது. மார்டினின் தலைகேசம் அப்போதும் அதிகளவில் வளர்ந்திருந்தது. கிளப் கிரிக்கெட் டீ ஷர்ட் ஒன்றை அணிந்துக்கொண்டு என் முன்னால் ஒரு துடிப்புமிகுந்த சிறுவனைப்போல தோன்றினார். அவரது குழந்தைத்தனமான இயல்பு என்னை பெரிதளவில் கவர்ந்தது. என்னை இயல்பாக எதிர்கொள்ள முடியாமல் சற்றே நெளிந்தபடியே பதிலளித்துக்கொண்டிருந்தார். அவரது கூச்ச உணர்வு மிக அழகாக வெளிப்பட்டதை இப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன். நான் உரையாடிய துவங்கிய உடனேயே அவர் மிகச் சிறந்த பண்பாளர் என்பதையும் புரிந்துகொண்டேன்” என்கிறார்.

அன்றைய தினத்தின் சந்திப்புக்கு பிறகு இருவரும் அரிதாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் சந்தித்து உரையாடுகிறார்கள். ஒருவரின் மீதான மற்றவரின் புரிதால் நெடுவென வளர்ந்தபடியே இருக்கிறது. இருவரும் ஒருவர் மற்றவரின் நினைவுகளில் மூழ்கி போயிருந்தனர். அதுநாள்வரையில் அனுபவித்திராத ஒருவித பரவச உணர்வு இருவருக்குள்ளும் மெல்ல மேலிடுகிறது. எப்போது மறுமுறை சந்திப்போம்? என எதிர்பார்க்க துவங்குகிறார்கள்.

இந்த தருணத்தில் மார்ட்டின் கப்டில் இங்கிலாந்தில் அப்போது நடைபெறவிருந்த கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்க அங்கு சென்றுவிட்டார். மூன்று மாதங்கள் வரையில் அவர் இங்கிலாந்திலேயே இருக்க வேண்டியிருந்தது. இந்த தினங்கள் மிகுந்த வலி மிக்கதாக லாராவுக்கு இருந்தன. மிக நெருக்கமான உயிரொன்றை பிரிந்திருக்கும் உணர்வு லாராவுக்கு உண்டாகிறது. 'அப்போதைய எனது உணர்வுகளை எந்த வார்த்தைகளை இட்டும் நிரப்பிவிட முடியாது' என்று லாரா அக்காலத்தை குறிப்பிடுகிறார்.

அதன்பிறகு, மார்ட்டின் கப்டில் நியூசிலாந்து திரும்பியதும் அவர்களது உறவு வேறொரு நிலைக்கு உயருகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசிக்கத் துவங்கினார்கள். மிகச் சிறந்த நண்பர்களாக ஓராண்டு காலம் நகர்த்திய அவர்கள், மறு வருடத்திலேயே திருமணமும் செய்துக்கொண்டார்கள். இன்று, என்றென்றைக்கும் ஒருவரிடமிருந்து மற்றவர் விலக இயலாத வகையில், அதீத அன்புடனும், ஆழ்ந்த புரிதலுடன் அவர்களது திருமண உறவு தொடர்ந்துக்கொண்டிருக்கிறது. 2017ம் வருடத்தில் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஹார்லி லூயிஸ் கப்டில் என தங்களது குழந்தைக்கு பெயர் சூட்டியிருக்கிறார்கள் தம்பதியினர் இருவரும். மார்ட்டின் கப்டில் மற்றும் லாரா தீராக் காதலின் அடையாளமாகவும், உயிர்ப்பு முகமாகவும் ஹார்லி திகழ்கிறாள். மார்ட்டின் கப்டில் தனது வாழ்க்கை இப்போதுதான் அர்த்தமுள்ளதாக ஆகியிருக்கிறது என்றபடியே ஹார்லியை தூக்கிக் கொஞ்சுகிறார்.

'உங்களால் கற்பனை செய்யவியலாத அளவுக்கு நான் சிறுமி ஹார்லியை நேசிக்கிறேன். கப்பியை (மார்ட்டின் கப்டில்) நான் என்றென்றும் காதலித்துக் கொண்டிருக்கிறேன்.  துவக்கத்தில் அவரை இந்தளவுக்கு நேசிப்பேன் என்று நினைத்திருக்கவில்லை. அவரை ஒரு தந்தையாக பார்க்க அத்தனை பரவசம் உண்டாகிறது. அதேப்போல, எனது மகள் பிறந்ததற்கு பிறகு, அவளது அண்மையில் இருப்பதை விடவும் உலகத்தில் வேறெந்த சந்தோஷமும் பெரியதல்ல என்பதை உணர்ந்திருக்கிறேன். அவளுக்காக நான் எதுவொன்றையும் செய்ய தயாராக இருக்கிறேன்' என்கிறார் லாரா.  

32 வயதாகும் மார்ட்டின் கப்டில் அதற்குள் சர்வதேச அளவில் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராகவும், மறுபுறத்தில் பொறுப்புமிகுந்த குடும்ப தலைவராகவும் வளர்ச்சியுற்றிருக்கிறார். முன் காலங்களில் கிரிகெட் தவிர்த்த எந்தவொரு செயலுக்கும் முக்கியத்துவம் அளித்திடாத கப்டில் இப்போதும் உலகத்தின் எந்த மூலைக்கு சென்றிருந்தாலும், தனது நினைவுகளில் லாராவையும், ஹார்லியையும் சுமந்துக் கொண்டிருக்கிறார். வீட்டில் இருக்கும்போது எப்போதும் ஹார்லியை சுற்றியே அவரது தினசரிகள் கழிகின்றன. ”ஒரு தந்தையாக அவர் சிறப்பாக செயல்படுவார் என்று எனக்கு தெரியும். ஆனால், இந்தளவுக்கு குழந்தையின் மீதான அவரது அன்பு தீவிரமாக இருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை. அதிகாலை நான்கு மணிகெல்லாம் எழுந்து குழந்தையின் உடைகளை மாற்றுவது அவருக்கு அலாதியான மகிழ்வை கொடுக்கிறது. இத்தகைய உயிர்களுடன் நான் இருக்கிறேன் என்கின்ற உணர்வே என்னை நெகிழ்வுகொள்ள செய்கிறது” என்று கப்டிலுக்கும், ஹார்விக்கும் இடையிலான நெருக்கத்தை பகிர்ந்துகொள்கிறார் லாரா.

மார்ட்டின் கப்டில் இன்னமும் சர்வதேச அளவில் பலபல சாதனைகள் நிகழ்த்தப் போகிறார் என்பதில் துளியும் சந்தேகமே இல்லை. எனினும், ஒரு தந்தையாக தனது மகளுக்கு அவர் உருவாக்கிக் கொடுக்கப்போகிற நினைவுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. முன்காலங்களில் அணியில் இடம் கிடைக்காமல் போகின்ற தருணங்கள் அதிக சோர்வளிக்கக்கூடியதாக கப்டிலுக்கு இருந்தது. இப்போது அவருக்காக அவரது மகள் ஹார்வி வீட்டில் காத்திருக்கிறாள். அவளது மென் கரங்கள் கப்டிலை நோக்கி நீண்டிருக்கிறது. தந்தையின் அண்மை அவளை பரவசமூட்டுகிறது. லாராவின் அதீத அன்பும் கப்டிலை ஒவ்வொரு கணத்திலும் ஊக்கப்படுத்தியபடியே இருக்கிறது. 32 வயதுக்குள் பெரியளவில் கிரிக்கெட் விளையாட்டில் அதிர்வுகளை உண்டாக்கியிருக்கும் கப்டில் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகச் சிறந்த மனிதராக மிளிர்ந்துக்கொண்டிருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டில் இன்னமும் அவர் நிகழ்த்தப்போகின்ற சாதனைகளுக்காக அவரது பெயரை பன்னெடுங்கால அளவில் நியூசிலாந்து அணி சொல்லிக் கொண்டிருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.  

சிக்ஸர் பறக்கும்…

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com