மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இருந்தும் தென் ஆப்பிரிக்க அணி இதுவரை உலக கோப்பை வெல்லாதது ஏன்?

தென் அப்பிரிக்க கிரிக்கெட் அணி பல சிறப்பு வாய்ந்த வீரர்களை வரலாறு நெடுகிலும் கொண்டிருக்கிறது.
மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இருந்தும் தென் ஆப்பிரிக்க அணி இதுவரை உலக கோப்பை வெல்லாதது ஏன்?

என்னைப் பொருத்தவரையில் கிரிக்கெட் விளையாட்டின் வெற்றி என்பது, எந்த அளவுக்கு நாம் எதிரணி வீரர்களின் மீது அழுத்தத்தை சுமத்துக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. ஒரு பேட்ஸ்மேன் எப்போதும் சுதந்திரமாக ரன்களை சேர்ப்பதன் மூலம், பந்து வீச்சாளருக்கு நெருக்கடியை உண்டாக்க வேண்டும். ஒரு பந்து வீச்சாளர் ரன்களை அதிகம் விரயம் செய்யாமல் பேட்ஸ்மேனுக்கு நெருக்கடியை உண்டாக்க வேண்டும். கிரிக்கெட் விளையாட்டின் சாரம்சமே இவ்வாறு தங்களுக்கு நேர்கின்ற அழுத்தங்களை மற்றவருக்கு மடைமாற்றம் செய்வதில்தான் இருக்கிறது.’ - ஏபி டிவில்லியர்ஸ்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பல சிறப்பு வாய்ந்த வீரர்களை வரலாறு நெடுகிலும் கொண்டிருக்கிறது. கேரி கிரிஸ்டன், காலிஸ், ஆலன் டொனால்ட், லான்ஸ் குளூசினர், ஜான்டி ரோட்ஸ், கிப்ஸ், ஆம்லா என ஒவ்வொருவரும் பெரும் சாதனைகளை நிகழ்த்தியவர்கள். உலகின் நம்பர் 1 கிரிக்கெட் அணி என்கின்ற பெருமைக்கு எப்போதும் தகுதியுடைய அணி தென் ஆப்பிரிக்கா. ஆனால், துரதிர்ஷ்டவசமாக பல தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்களை பெற்றிருந்தாலும், இதுவரையிலும் உலக கோப்பை பெற்றிராத அணிகளில் ஒன்றாகவே அது இருக்கிறது. காலம்காலமாக, தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர்களின் பெரும் கனவுகளில் ஒன்றாக இன்னமும் உலக கோப்பை நிலைப் பெற்றிருக்கிறது.

ஒவ்வொரு முறை தென் ஆப்பிரிக்கா அணி உலக கோப்பை தொடரில் பங்கேற்கும்போதும், பெரும் எதிர்பார்ப்புடன் வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியில் அதனை ஏபி டிவில்லியர்ஸ் பார்த்துக் கொண்டிருப்பார். வெற்றி பெறுகின்ற போது பெருத்த ஆரவாரத்தையும், தோல்வி அடைகின்ற போது, கட்டுப்படுத்த முடியாத அழுகையையும் டிவில்லியர்ஸ் இயல்பாக வெளிப்படுத்தி விடுவார். அவரது பெரும் லட்சியங்களில் ஒன்றாகவே உலக கோப்பை சிறு வயதுகளில் இருந்தே இருந்து வந்தது. சர்வதேச அளவில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடிய பல வீரர்களை கொண்ட அணி தென் ஆப்பிரிக்கா என்கின்ற பெருமிதம் ஏபி டிவில்லியர்ஸுக்கு எப்போதும் உண்டு.

அதனாலேயே, 2004-ல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியில் இடம் பெற்றபோது, அங்கிருந்த ஒவ்வொரு சக வீரர்களிடம் பிரம்மிப்புடன் தானே நெருங்கிச் சென்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார். ஆனால், அதே சமயத்தில், அவர்களை தொந்தரவு செய்யும் விதமாக தனது செயல் இருந்து விடக்கூடாது என்பதிலும் அதிக கவனத்துடன் இருந்தார். மிக நிதானமாக ஒவ்வொரு வார்த்தையையும் தேர்ந்தெடுத்து பேசினார்.

முதல் தொடரிலேயே காலிஸ், ஸ்மித், பவுச்சர் போன்ற பெரும் சாதனையாளர்களுடன் இணைந்து விளையாடும் சந்தர்ப்பம் டிவில்லியர்ஸுக்கு உண்டாகிறது. இந்த மூவரும் தான், அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் துவக்க காலத்தில் மிகப்பெரிய நம்பிக்கையையும், அவரது ஆட்டத்திறனை வளர்த்தெடுக்க பல்வேறு அறிவுரைகளையும் சொல்லி டிவில்லியர்ஸை ஊக்கப்படுத்தியவர்கள்.

குறிப்பாக, காலிஸுடன் 44 டெஸ்ட் போட்டிகளில் டிவில்லியர்ஸ் இணைந்து விளையாடி இருக்கிறார். அதில் 13 முறை 100 ரன்களுக்கும் மேலாக இவர்களது இணை சேர்த்திருக்கிறது. பல நெருக்கடி தருணங்களில் காலிஸ் டிவில்லியர்ஸுக்கு மிகப் பெரிய தன்னம்பிக்கையை விதைப்பவராக இருந்திருக்கிறார். காலிஸ் பொதுவாக எவருடனும் அதிகம் கலந்துப் பழக விரும்பாத இயல்பு கொண்டவர். விளையாட்டில் மட்டுமே அவரது முழுமையான கவனம் எப்போதும் இருந்த வண்ணமிருக்கும். உலகளவில்கூட காலிஸ் போன்ற திறன் வாய்ந்த ஆல் ரவுண்டர் எவருமில்லை என உறுதியாக சொல்லலாம்.

டிவில்லியர்ஸ் தானே நெருங்கிச் சென்று ஒவ்வொருமுறையும் காலிஸுடன் உரையாடலில் பங்குக கொள்வார்.  சர்வதேச அரங்கில் சில சதங்களையும் கடந்திருந்த நிலையிலும், காலிஸின் அதீத அனுபவ அறிவு டிவில்லியர்ஸுக்கு தேவையாய் இருந்தது. களத்தில் மட்டுமல்லாது, பயிற்சிகளின் போதும் காலிஸ் பல நுணுக்கங்களை டிவில்லியர்ஸுடன் பகிர்ந்து கொள்வார்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டி ஒன்றில் தனது முதல் டெஸ்ட் சதத்தை நோக்கி டிவில்லியர்ஸ் நகர்ந்துக் கொண்டிருந்தபோது, அவருடன் களத்தில் இணைந்திருந்தது காலிஸ்தான். டிவில்லியர்ஸ் 98 ரன்களை கடந்துவிட்டதும் அவருக்கு பதற்றம் அதிகரித்துவிட்டது. சர்வதேச அளவில் முதல் முறையாக சதத்தை நெருங்கும் பரவசமான அதே சமயத்தில் ஷாட்டை தேர்வு செய்வதில் பெரும் குழப்பங்களும் மிகுந்திருக்கும் தருணம் அது. 

அப்போது அவரை நெருங்கிச் சென்ற காலிஸ், ‘அமைதியாக இரு இளைஞனே. சதம் உன்னை நெருங்கி வரும். அதுவாக உன்னை நெருங்கி வரும்’ என்று அறிவுரை கூறினார். அதிரடியாக விளையாடக் கூடிய இயல்பை பெற்றிருந்த டிவில்லியர்ஸ் காலிஸின் அனுபவ பகிர்வுகளின் மூலமாகவே டெஸ்ட் போட்டியில் நிதானத்தை கையாளும் திறனை கற்றறிந்தார்.

தென் ஆப்பிரிக்கா அணி இக்காலங்களில் ஸ்மித் தலைமையில் பல சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருந்தது. தனது 22-வது வயதிலேயே கேப்டன் பொறுப்புக்கு வந்துவிட்ட ஸ்மித், துடிப்புமிக்க இளைஞராக தென் ஆப்பிரிக்கா அணியை தலைமை ஏற்று பல சாதனைகளை கடக்க காரணமாக இருந்தவர். அவரது தலைமையில்தான் 1965க்கு பிறகு இங்கிலாந்து அணியை அவர்களது நாட்டிலேயே வீழ்த்திய சாதனையை தென் ஆப்பிரிக்கா அணி செய்தது.

அதே போல, ஆஸ்திரேலிய அணியையும் அவர்கள் நாட்டிலேயே வைத்து வீழ்த்தியது. ஸ்மித்தின் தலைமை பண்புகளை டிவில்லியர்ஸ் வெகுவாக வியந்து கவனித்துக் கொண்டிருந்தார். அவரது ஆட்ட சாதூர்யங்களும், அணியை கட்டுக்கோப்புடன் முன்னகர்த்தி செல்கின்ற திறனும் டிவில்லியர்ஸை வெகுவாக கவர்ந்தது.

டிவில்லியர்ஸ் மோசமான ஃபார்மில் தவித்துக் கொண்டிருந்த காலங்களில் கூட ஸ்மித் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை அளித்து அவர் மீண்டும் ஃபார்முக்கு வரக் காரணமாக இருந்திருக்கிறார்.

ஆனால், இவர்கள் இருவரையும் விட டிவில்லியர்ஸ் தனக்கு மிகவும் நெருக்கமான தோழமையாக உணர்ந்தது மார்க் பவுச்சரைதான். ஆட்டவரிசையில் ஆறு அல்லது ஏழாவது ஆட்டக்காரராக களமிறங்கும் பவுச்சர், எந்த நிலையில் இருந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லக் கூடிய அசாதாரண திறன் மிக்கவர். அவரது போராட்ட இயல்பு டிவில்லியர்ஸை வெகுவாக கவர்ந்திருந்தது. தானும் அதே போன்றே அணியை வெற்றியின் பாதைக்கு இழுத்துச் செல்கின்ற வீரராக இருக்க வேண்டும் என்றே டிவில்லியர்ஸ் விரும்பினார்.

இந்த நிலையில், பவுச்சர் இல்லாத தருணங்களில் டிவில்லியர்ஸ் விக்கெட் கீப்பர் பொறுப்பையும் சுமக்க வேண்டியிருந்தது. அதனால், தென் ஆப்பிரிக்காவின் அடுத்த விக்கெட் கீப்பர் டிவில்லியர்ஸ்தான் என்ற பேச்சுகள் அதிகரித்தபடியே இருந்தது. பவுச்சருக்கும், டிவில்லியர்ஸுக்கும் இதனால் மனரீதியாக இடைவெளி உண்டாகலாம் என கருதப்பட்ட நிலையிலும், பவுச்சர் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல், டிவில்லியர்ஸை உற்சாகப்படுத்துவதை தொடர்ந்தபடியே இருந்தார்.

‘ஒவ்வொருமுறை நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்போதும், பவுச்சர்தான் என்னை முதலில் பாராட்டி உற்சாக மூட்டுவார். அதே போல, ஒவ்வொருமுறை மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மனம் வெளிறிய நிலையில் பெவிலியன் திரும்பும்போதும், பவுச்சர்தான் முதலில் என்னை அரவணைத்து ஆறுதல் வார்த்தைகள் கூறுவார்’ என்று பவுச்சர் உடனான தனது அனுபவங்களை டிவில்லியர்ஸ் பகிர்ந்து கொள்கிறார்.

உண்மையில், டிவில்லியர்ஸுக்கு விக்கெட் கீப்பராக நீடிப்பதில் அதிகளவில் விருப்பமில்லை. மைதானத்தில் அனைத்து திசைகளிலும் பாய்ந்து பாய்ந்து பீல்டிங் செய்வதையே அவர் விரும்பினார். ஜான்டி ரோட்ஸின் ரசிகர் அல்லவா? அதனால் அவருக்கு பீல்டிங்கில் சிறப்பாக பரிணமிக்க வேண்டும் என்பதே ஆசையாக இருந்தது. எனினும், அணியின் கட்டாயத்தால் விக்கெட் கீப்பராக நீடிக்க வேண்டிய பொறுப்பும் அவருக்கு இருந்தது.

தொடர்ச்சியாக விக்கெட் கீப்பராக நீடித்தது அவரது ஆட்டத்திறனையும் பாதித்ததாகவும் கருதப்படுகிறது. ஒரு இன்னிங்க்ஸ் முழுவதும் அதீத கவனத்துடன் ஸ்டம்புகளின் பின்னால் குனிந்து நின்றுவிட்டு, மீண்டும் வந்து பேட்டிங்கை தொடர்கையில் அவருக்கு, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் சிக்கல்கள் இருந்தது. எனினும், தென் ஆப்பிரிக்கா அணிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருந்த டிவில்லியர்ஸ் அதனை வெளியில் காண்பித்துக் கொள்ளாமல் அணியின் தேவையை சிறப்புற பூர்த்தி செய்வதில் மட்டுமே தனது கவனத்தை குவித்திருந்தார்.

2008 ஏப்ரல் 4-ம் தேதி. அகமதாபாத்தில் இருக்கும் சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கிறது. அதற்கு முந்தைய தின மாலையில் பால் ஹாரீஸுடன் டிவில்லியர்ஸ் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் பால் ஹாரீஸ், ‘இந்தப் போட்டியில் நீ இரட்டை சதம் அடிக்கப் போகிறாய்’ என்கிறார். டிவில்லியர்ஸுக்கு தூக்கிவாரிப்போடுகிறது. ‘ஏன் அப்படி சொல்கிறாய்?’ என்று வியப்புடன் கேட்க, ‘எனது உள்ளுணர்வு அப்படிச் சொல்கிறது’ என எவ்வித பரபரப்புமின்றி சாத்விதமான முறையில் பால் ஹாரீஸ் டிவில்லியர்ஸிடம் தெரிவித்தார்.

விநோதமான முறையில் அவர் சொன்னது அப்படியே பலித்தது. அன்றைய போட்டியில் டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி 217 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பெரும் மகிழ்ச்சி அவரை சூழ்கிறது. வீட்டில் இருந்து தனது பெற்றோர் இந்த போட்டியை பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்கின்ற எண்ணம் எழுகிறது. மனம் கட்டுப்பாடற்ற நிலையில் பரவசத்தில் ஆழ்ந்திருந்தது. தான் தேர்வு செய்த கிரிக்கெட் விளையாட்டுக்கு முதல் முறையாக நியாயம் செய்திருப்பதாக டிவில்லியர்ஸ் கருதுகிறார். சுபர்மதி நதிக்கரையில் அமைந்திருக்கும் அகமதாபாத் நகரத்திலிருந்து, அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் மற்றுமொரு இன்னிங்க்ஸ் அன்றைய தினத்தில் இருந்து துவங்கியது.

சிக்ஸர் பறக்கும்… …    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com