4. தோனியா கோலியா? யார் சிறந்த கேப்டன்?

தோனிக்கு பிறகான இந்தியா அணியை தலைமை தாங்கி வழிநடத்துவது சாதாரண காரியமல்ல.
4. தோனியா கோலியா? யார் சிறந்த கேப்டன்?

உண்மையை சொல்ல வேண்டுமானால், நான் எனது தனிப்பட்ட கிரிக்கெட் வாழ்க்கை குறித்து எவ்வித எதிர்கால திட்டங்களையும் வைத்திருக்கவில்லை. ஆனால், ஒரு அணியாக இந்தியா உலகில் உள்ள மற்றைய அனைத்து நாட்டு கிரிக்கெட் அணியின் மீதும் தனது ஆளுமையை செலுத்த வேண்டுமென விரும்புகின்றேன். இந்தியா அதற்கு முழு தகுதியுடைய நாடு. இந்திய கிரிக்கெட் வீரர்கள் அதற்கு முழு தகுதியுடைய விளையாட்டாளர்கள் - விராட் கோலி

தோனிக்கு பிறகான இந்தியா அணியை தலைமை தாங்கி வழிநடத்துவது சாதாரண காரியமல்ல. தோனியின் தலைமையில்தான் இந்தியா மிகச் சிறந்த கிரிக்கெட் அணியாக உருவெடுத்தது. 2007-ம் ஆண்டில் இருபது ஓவர் உலக கோப்பை, 2011-ல் உலக கோப்பை, 2013-ல் செம்பியன்ஸ் கோப்பை என தோனியின் தலைமையிலான இந்திய அணி புரிந்த சாதனைகள் இதற்கு முன்பு வரலாறு காணாதது.

உளவியல் ரீதியாக எதிர் அணியினரை அணுகும் போக்கினை தோனி கைக் கொண்டிருந்தார். ஸ்டம்புகளின் பின்னால் உறுதியுடன் நின்று கொண்டு ஒவ்வொரு விளையாட்டு வீரரையும் அவர் வழி நடத்தும் விதம் ஆளுமை மிக்கது. இந்திய அணியின் மிகச் சிறந்த கேப்டனாக தோனியே கருதப்படுகிறார். இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இன்னமும் தோனி கேப்டனில்லை என்பதை ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள். ‘தோனி தோனி’ என்ற சொல் மந்திரம் போல விளையாட்டு அரங்கங்களில் ஒலிப்பதை நம்மால் கேட்க முடிகிறது. மற்றைய எந்தவொரு இந்திய கேப்டனைவிடவும், படிப்பறிவற்ற பாமரர்களின் மனம் வரை ஆழமாக ஊடுருவியிருக்கும் பெரும் ஆளுமையாக தோனி இருந்து கொண்டிருக்கிறார் என்றால் மிகையில்லை.  

முதன்முதலாக, கோலியிடம் கேப்டன் பொறுப்பு கையளிக்கப்பட்டது 2014-ம் ஆண்டில். ஆஸ்திரேலியாகவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியான அதில் தோனி பங்கேற்கவில்லை என்பதால், கேப்டன் பொறுப்பு இயல்பாக விராட் கோலியின் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கோலி கேப்டனாக பொறுப்பேற்ற தனது முதல் இன்னிங்ஸிலேயே சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம், கேப்டனாக பொறுப்பேற்கும் முதல் போட்டியில் சதமடித்த நான்காவது இந்திய வீரர் என்கின்ற பெருமை கோலியை வந்தடைகிறது. இந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் கலந்து கொண்டதோடு, டெஸ்ட் போட்டிகளில் இருந்து தான் முழுமையாக ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். இதனை அடுத்து, டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பு கோலியின் வசம் வந்து சேர்கிறது. கோலி அடுத்தடுத்த போட்டிகளிலும் சதமடித்து, கேப்டனாக பொறுப்பேற்ற முதல் மூன்று டெஸ்ட் போட்டியிலும் சதமடித்த ஒரே சர்வதேச வீரர் என்ற புதிய சாதனையை படைக்கிறார்.

இந்திய அணியின் தலைமை பொறுப்பை சிறப்பாக பிரயோகிக்க வேண்டும் என்ற அழுத்தம் ஒருபுறம் இருந்தாலும், தனிப்பட்ட பல சாதனைளையும் கோலி தொடர்ந்து செய்தபடியே இருந்தார். ஒருகாலத்தில், சாதனை மன்னன் என வர்ணிக்கப்பட்ட சச்சினின் சாயைகளை கோலியில் எல்லோரும் உணர துவங்கினார்கள். ‘எனது சாதனைகளை முறியடிக் கூடிய தகுதியுள்ள பிளேயராக நான் கோலியை பார்க்கிறேன்’ என கோலியை சச்சின் பாராட்டியுள்ளார். ஆச்சர்யப்படத்தக்க ஒற்றுமையாக இருவரும், ஆறடிக்கும் குறைவான உயரம் கொண்டவர்கள்.

கோலியின் தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பான வெற்றியென கருத்தப்படுவது, தென் ஆப்பிரிக்கா அணியினரை 3-0 என்ற கணக்கில் தோல்வியடைய செய்ததுதான். இந்த தொடருக்கு பின்பாக இந்தியா, டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசை பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு உயர்ந்தது.

2017-ம் ஆண்டு ஜனவரியில் தான் ஒரு நாள் போட்டியின் கேப்டன் பதவியை துறப்பதாக அறிவித்த மகேந்திர சிங் தோனி, ‘விராட் கோலியிடம் கேப்டன் பொறுப்பை கைமாற்றம் செய்ய சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். இப்போது நேரம் கைக்கூடி விட்டது என கருதுகிறேன். ஒரு கேட்பனாக செயல்படுவது ஒருநாள் போட்டியை விட டெஸ்டில்தான் மிகுந்த சவாலான காரியம். கோலி அதனை மிகச் சிறப்பாக செயல்படுத்துகிறார்.

இனி ஸ்டம்பின் பின்னால் நின்று எனது கருத்துக்களை கோலியிடம் பகிர்ந்துக் கொள்வேன். நான் என்னால் முடிந்த அளவுக்கு ஐடியாக்களை கொடுத்துக் கொண்டே இருப்பேன். கோலியிடம் நான் 100 யோசனைகளை முன்மொழிந்தால், அதில் சரியானதை தேர்வு செய்யும் நுண்ணுர்வை அவர் பெற்றிருக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

கோலியின் தலைமையிலான இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் நிகழ்த்திய சாதனை அபாரமானது. 5-1 என்ற கணத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்ததன் மூலம், தென் ஆப்பிரிகாவில் ஒருநாள் தொடரை வென்ற முதல் கேப்டன் என்ற சாதனை கோலிக்கு கிடைத்தது. கோலி அந்த தொடரில் மிகச் சிறப்பாக விளையாடினார். மூன்று சதங்கள் உட்பட 558 ரன்களை தனது பங்களிப்பாக கோலி சேர்பித்திருந்தார். கோலியின் சாதனை மகுடங்களில் மற்றுமொரு மைல்கல்லாக இந்த வெற்றி போற்றப்படுகிறது.

கோலி இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று ஓராண்டு காலம்தான் ஆகிறது என்றாலும், அதற்குள் தோனியின் தலைமை பண்பையும், கோலியின் தலைமை பண்பையும் விளையாட்டு ஆய்வாளர்கள் அலச தொடங்கிவிட்டார்கள். ஐந்து முக்கிய வேறுபாடுகள் இருவருக்குமிடையில் இருப்பதாக கூறப்படுகிறது.

முதலாவது, ஒவ்வொரு போட்டியின் போதும் அணியினரை மாற்றும் வழக்கம் கோலியிடம் மிகுதியாக காணப்படுகிறது. அவர் அவ்வப்போது தனது அணியில் மாற்றம் செய்தபடியே இருக்கிறார். மாறாக, தோனி தனது தலைமையில் வெற்றிப் பெறுகின்ற அணியையே தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருப்பார். தோனியின் அணியில் மிக அரிதாகவே மாற்றங்கள் நிகழும்.

இரண்டாவது, கூல் கேப்டன் என பெயரெடுத்திருக்கும் தோனிக்கு அப்படியே நேரெதிராக, சீற்றம் கொண்ட சூறாவளியாக கோலி களத்தில் சுழன்றுக் கொண்டிருப்பார்.

மூன்றாவது, தோனியின் அணியில் பெரும்பாலும் சுழல் பந்து வீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பார்கள். அஸ்வின், ஓஜா, ஜடேஜா என தோனி தனது சுழல் பந்து வீச்சாளர்களின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால், கோலியின் அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

நான்காவது, ஊடகத் துறையினரை எதிர்கொள்வது. தோனி தனது கோபத்தை ஊடகவியலாளர்களிடம் நேரடியாக வெளிப்படுத்த மாட்டார் என்றாலும், சாதுர்யமான பதில்களை சொல்வதன் மூலமாக, நெருக்கடியான சூழலை எளிதாக தவிர்த்து விடுவார். கோலி உடனுக்குடன் வெடித்து தள்ளுபவர். பலமுறை கலந்துரையாடல்களில் கோலி ஆக்ரோஷமாக நடந்துக் கொண்டிருக்கிறார்.

ஐந்து, அணியில் உள்ள வீரர்களுக்கு தங்களது திறனை நிரூபிக்க போதிய அவகாசம் அளிப்பது. இத்தகைய முறைமை தோனியின் தலைமையில்தான் நிகழ்ந்திருக்கிறது. ரோஹித் சர்மா போன்ற சிலர் பார்ம் இன்றி தவித்தபோது, தோனி அவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்திருக்கிறார். ஆனால், கோலியின் அணியில் செய் அல்லது செத்து மடி என்பதாகத்தான் வீரர்களின் நிலை இருக்கும். தனக்கு கொடுக்கப்படுகின்ற வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்கிறவர் அணியில் நீடிக்கலாம், மற்றவர்களுக்கு அங்கு இடம் கிடையாது என்பதே கோலியின் வழக்கமாக இருந்து கொண்டிருக்கிறது.

கோலி யாருடனும் எமோஷனலான உறவை வளர்த்துக் கொள்வதில்லை. ‘நான் பெரியளவில் யாருடனும் நட்புணர்வுடன் பழகுவதில்லை. அதற்கு எனக்கு அவசியமும் இல்லை. நெருக்கமாக நட்பு கொண்டிருந்தால் பல வகையிலும் நாம் சமரசம் செய்ய நேரிடும். அது நமது உறுதியை குலைக்கவும் சாத்தியமுண்டு’ என்கிறார் கோலி.

கேப்டனாக இருப்பது கோலிக்கு அவரது விளையாட்டில் எவ்விதமான அழுத்தங்களையும் உண்டாக்கவில்லை. தொடர்ந்து சாதனைக்கு மேல் சாதனைகளை குவித்து கொண்டே இருக்கிறார். அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து இரட்டை சதம் அடித்தது, மிக குறுகிய காலத்தில் 25 ஒருநாள் சதங்களை கடந்தது, ஏழாயிரம் ரன்களை விரைவாக அடைந்தது என கோலியின் சாதனை பட்டியல் நீண்டபடியே இருக்கிறது.  

கேப்டனாக அவரது செயல்பாடு எத்தகைய மாற்றங்களை எதிர் வரவிருக்கும் தலைமுறையினருக்கு அமைத்துக் கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதுவரையிலான போட்டிகளில், தன் சக இந்திய அணி வீரர்களை பரபரப்புடன் செயல்பட வைப்பதை கோலி வழக்கமாக கொண்டிருக்கிறார். அவசியம் இருக்கும் சமயங்களில் கோபமாக திட்டியும், சில நெருக்கடியான தருணங்களில் தவறுகளே நேர்ந்தாலும் தட்டிக் கொடுப்பவராகவும் கோலி இருந்திருக்கிறார்.

அவரைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் வீரரும் போர்க்குணம் மிக்கவராக இருக்க வேண்டும். நமது ஆளுமை அழுத்தமானதாக எதிர் அணியினரை கலக்கமுற செய்வதாக இருக்க வேண்டுமென்பதே அவரது எண்ணமாக இருக்கிறது. மைதானத்தில் துளி இரக்கமும் அற்ற இறுகிய முகத்துடன்தான் கோலியை பெரும்பாலும் பார்க்க முடிகிறது.

இந்தியாவின் கேப்டன் பொறுப்பு என்பது சாதாரண காரியமல்ல. முந்தைய கேப்டன்களின் சாதனைகளை முறியடிப்பதோடு, எதிர் வரும் தலைமுறையினருக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ வேண்டும். சரியான பாதையை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

‘என்னை முன் உதாரணமாகக் கொண்டு எந்த ஒரு சிறுவனாவது கிரிக்கெட் விளையாட தலைப்பட்டால், என்னை வழிப்பற்றி நம் நாட்டின் இளைஞர்கள் இந்திய அணியில் இணைந்து டெஸ்ட் போட்டிகளில் சாதனைகளை புரிந்தால், அதுதான் எனது வாழ்க்கையின் மிகப் பெரிய சாதனையாக இருக்கும். அதுதான் நான் இந்த சமூகத்துக்கும், எனது விளையாட்டிற்கும், எனது வாழ்க்கைக்கும் நான் செய்யும் மிகப் பெரிய அர்ப்பணிப்பாக இருக்க முடியும்’

சிக்ஸர் ப ற க் கு ம்……

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com