6. இரண்டாம் நாயகன்: ஏபி டிவில்லியர்ஸ்

மே 23, 2018  கிரிக்கெட் வரலாற்றில் மற்றுமொரு சகாப்தம் முடிவுக்கு வந்த தினம்.
6. இரண்டாம் நாயகன்: ஏபி டிவில்லியர்ஸ்

'நான் எனது சிறுவனுக்குரிய துறுதுறுப்புகளை எப்போது இழக்கின்றோனோ, அன்றைய தினம்தான் நான் கடைசியாக கிரிக்கெட் விளையாடும் தினமாக இருக்கும். இதுநாள்வரையில் அது நிகழவில்லை என்பதோடு, இன்னும் சில காலத்துக்கு அப்படியொரு தருணம் நேராது என உறுதியாக நம்புகின்றேன். ஆனால், விதி எவரையும் விடாது. எனது இறுதி காலத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழல் எவ்விதமான முன் அறிவிப்பும் இல்லாமல், திடீரென தோன்றவும் வாய்ப்பிருக்கிறது. அதன்பிறகு, கிரிக்கெட் விளையாட்டில் நான்  நீடித்திருக்க மாட்டேன்.' ஏபி டிவில்லியர்ஸ் (தனது சுயசரிதையில்)

மே 23, 2018  கிரிக்கெட் வரலாற்றில் மற்றுமொரு சகாப்தம் முடிவுக்கு வந்த தினம். இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் பெங்களூர் அணி வெளியேற்றப்பட்ட உடனேயே சர்வதேச அளவில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படும் தென் ஆப்பிரிக்க வீரரான ஏபி டிவில்லியர்ஸ் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் டிவில்லியர்ஸின் இந்த திடீர் முடிவு அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  

இந்த ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்திய டிவில்லியர்ஸ், தனது ஓய்வு முடிவை அறிவிக்கும் சில தினங்களுக்கு முன்பாகத்தான், அதிகம் வியந்து போற்றப்பட்ட 'ஸ்பைடர்மேன் கேட்ச்’ பிடித்திருந்தார். சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான அந்த போட்டியில் அலெக்ஸ் ஹெய்ல்ஸ் விளாசிய பந்தை அந்தரத்தில் பறந்து ஒற்றை கையில் டிவில்லியர்ஸ் பிடித்த போது ஒட்டுமொத்த அரங்கமும் ஆர்ப்பரித்து கொண்டாடியது.

தனது அதிரடி ஆட்டத்துக்கும், பீல்டிங்கின்போது எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகின்ற வல்லமைக்கும் பெயர் பெற்ற டிவில்லியர்ஸ் தனது திடீர் ஓய்வு முடிவுக்கு காரணமாக கூறியது, 'நான் மிகவும் சோர்ந்துவிட்டேன்' என்பதைதான்.

இதில் ஓரளவுக்கு உண்மையும் இருக்கத்தான் செய்கிறது. தனது 20-வது வயதில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக 2004-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானதில் இருந்து, தனது 34-வது வயதில் ஓய்வு முடிவை அறிவிக்கும் தருணம் வரையில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடிய அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ச்சியாக விளையாடியவர் டிவில்லியர்ஸ்.

ஒரேயொரு தருணத்தில் மட்டும்தான், அவர் தனது பர்சனல் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதமான தருணம் ஒன்றிற்காக டெஸ்ட் போட்டியில் இருந்து விருப்ப விடுப்பு எடுத்துக் கொண்டார். 2015-ல் அவரது மகன் பிறந்த தினமே அது. சர்வதேச அளவில் டிவில்லியர்ஸ், நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் மெக்மெல்லன் போன்ற ஒரு சிலரே இவ்வாறாக தொடர்ச்சியாக ஓய்வின்றி கிரிக்கெட் போட்டிகளில் பங்கு கொண்டவர்கள்.

மிஸ்டர் 360 என்பதே டிவில்லியர்ஸை பொதுவாக கிரிக்கெட் ரசிகர்கள் அழைக்கும் பெயர். மைதானத்தில் அனைத்து பகுதிகளுக்கும் பந்தை விளாசி தள்ளக்கூடிய பேராற்றல் கொண்டவர் டிவில்லியர்ஸ். டி வில்லியர்ஸின் 34-வது பிறந்த நாளையொட்டி கிரி்க்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்த விநோத வாழ்த்தில், டி வில்லியர்ஸின் 360 டிகிரி பேட்டிங் ஸ்டைலை குறிக்கும் விதமாக ஃபேஸ்புக்கில் புகழ்பெற்ற 360 டிகிரி வகை புகைப்படத்துடன் தனது வாழ்த்துச் செய்தியாக பதிவிட்டிருந்தார் சச்சின் டெண்டுல்கர்.

டிவில்லியர்ஸ் தரையில் முட்டிப்போட்டு ஸ்கொயர் லெக் பகுதியில் அவர் அடிக்கும் சிக்ஸர்கள் ராட்சஸத் தன்மையை கொண்டிருக்கும். டிவில்லியர்ஸ் ஓரிரு ஓவர்கள் களத்தில் நிலைத்து நின்று விட்டால் போதும், நாலாபுறமும் பந்து சிதறப் போவது உறுதி. வேகப்பந்து வீச்சாக இருந்தாலும், சுழல்பந்து வீச்சாக இருந்தாலும், அவரது அசுரத்தனமான ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாது.

2015-ல் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான போட்டியில், மிகக் குறைந்த பந்துகளில் (16 பந்துகளில்) அரை சதம், 31 பந்துகளில் சதம் எனபல புதிய உலக சாதனைகளை ஏபி டிவில்லியர்ஸ் நிகழ்த்தினார். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில், குறுகிய நேரத்திற்குள் இத்தகையை விரைந்து ரன் சேர்க்கும் ஆட்டத்திறன் பெற்ற வீரர்கள் வெகு சொற்பமானவர்களே. சாஹித் அப்ரிடி, பிரயன் லாரா, ஆடம் கில்கிரிஸ்ட் போன்ற ஜாம்பவான்களின் பெயர்களோடு டிவில்லியர்ஸின் பெயரும் இந்த தருணத்திற்கு பின்பாக இணைந்துக் கொண்டது.

ஐ.பி.எல் போட்டித் தொடரில், ஏபி டிவில்லியர்ஸ் பங்கேற்றிருந்த பெங்களூரு அணியின் கேட்பனான விராட் கோலி, டிவில்லியர்ஸை 'நம் காலத்தின் முழுமையான பேட்ஸ்மேன்’ என புகழாரம் சூட்டுகிறார்.  அதேப்போல, 1970 – 80-களில் நட்சத்திர அந்தஸ்து பெற்றிருந்த மேற்கு இந்திய கிரிக்கெட் வீரரான சர் விவியன் ரிச்சர்ட்ஸ், டிவில்லியர்ஸிடம் நேரடியாகவே, 'காலம் காலமாக விளையாடப்பட்டு வரும் கிரிக்கெட் விளையாட்டின் தன்மையையே நீ மாற்றிக் கொண்டிருக்கிறாய். ஒரு காலத்தில் என்னை மக்கள் இப்படித்தான் சொன்னார்கள். இன்று உனக்கு அந்த இடம் கிடைத்திருக்கிறது. நீ கிரிக்கெட் விளையாட்டை அடுத்த நிலைக்கு உயர்த்திச் செல்கிறாய். வாழ்த்துக்கள்’ என பாராட்டியிருக்கிறார்.

டிவில்லியர்ஸ் பொதுவாக டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி என்றெல்லாம் பிரித்துப் பார்ப்பதில்லை. பெரும்பாலான டெஸ்ட் போட்டிகளில் அதிரடி ஆட்டத்தையே அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். அரிதான ஒன்றிரண்டு தருணங்களை தவிர்த்து விரைவாக ரன்களை குவிப்பதையே தனது இலக்காக டிவில்லியர்ஸ் கொண்டிருந்தார். அதேப்போல, பல விநோதமான ஷாட்டுகளுக்கும் அவர் பிரசித்திப் பெற்றவர். ரசிகர்களின் ஆரவாரத்திற்கு நடுவில் களமிறங்கும் டிவில்லியர்ஸ் தனது புதிய புதிய ஷாட்டுகளால், ரசிகர்களின் வியப்பை அதிகரித்தபடியே இருப்பார். இது சில தருணங்களில் எதிர்மறையான போக்குகளையும் உண்டாக்கியிருக்கிறது.

சில விமரிசகர்கள் அவரது இத்தகைய சில ஷாட்டுகளை 'இது கிரிக்கெட் விளையாட்டுக்கு உரிய ஷாட்டே அல்ல’ என்றெல்லாம் எழுதியிருக்கிறார்கள். ஆனால், டிவில்லியர்ஸ் 'எனது மனதில் சரியான ஷாட், தவறான ஷாட் என்றெல்லாம் எதையும் நான் கருதுவதில்லை. ஏராளமான ஷாட்டுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் பிரத்யேக தேவையையும், அபாயத்தை ஒருங்கே கொண்டிருக்கிறது. ஒரு சிறந்த ஆட்டக்காரனின் திறன், சூழலுக்கு பொருத்தமான ஷாட்டை தேர்ந்தெடுத்து, அதனை சரியான முறையில் வெளிப்படுத்துவதில் தான் இருக்கிறது’ என்று இத்தகைய விமரிசனங்களுக்கு பதிலளித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர விளையாட்டாளரான அவருக்கு, இந்தியாவிலும் அதிகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஐ.பி.எல் போட்டித் தொடரின் பயனாக, அவரது ஆட்டத்தை வெகுவாக ரசித்து கொண்டாடும் பலர் உருவாகி விட்டார்கள். டிவில்லியர்ஸுக்கு அவரது இரண்டாவது தாய்நாடு போலவே இந்தியா மாறிவிட்டது. அவர் செல்லும் பகுதிகளில் எல்லாம் ரசிகர்கள் அவரை சூழ்ந்து உணர்ச்சிவயப்பட வைக்கிறார்கள். தனது உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாத டிவில்லியர்ஸ் இது போன்ற தருணங்களை எதிர்கொள்ள முடியாமல் பலமுறை தடுமாறி இருக்கிறார்.

இவையெல்லாம் துவங்கியது 2012 ஐ.பி.எல் தொடரில்தான். இந்த தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக பெங்களூரில் நடைப்பெற்ற போட்டியில் ஆர்.சி.பிக்கு 18 பந்துகளில் 39 ரன்கள் அடிக்க வேண்டிய நெருக்கடியான சூழல் நிலவுகிறது. டிவில்லியர்ஸின் நெருக்கமான நண்பரும், தான் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக அறிமுகமான அதே நாளில் தனது அறிமுகத்தை நிகழ்த்தியவருமான ஸ்டெயின் இப்போது எதிரணியில் இருந்தபடி டிவில்லியர்ஸுக்கு பந்து வீசுகிறார்.

சூழலின் அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை டிவில்லியர்ஸுக்கு உண்டாகிறது. தனது நெருக்கமான நண்பன் என்ற எண்ணத்தை கலைத்துவிட்டு எதிரணி வீரர் என்ற நினைப்புடன் முதல் பந்தை டிவில்லியர்ஸ் எதிர்கொள்கிறார். பந்து சிக்ஸர் பறக்கிறது.

அதுவரையிலும் ஆர்.சி.பி, ஆர்.சி.பி என்று கோஷமிட்டுக் கொண்டிருந்த ரசிகர்கள் உடனடியாக, ஏ.பி.டி, ஏ.பி.டி என மாற்றி உரக்க குரலெழுப்புகிறார்கள். டிவில்லியர்ஸுக்கு மேலும் பொறுப்பு கூடுகிறது. அடுத்தடுத்த பந்துகளையும் விலாசி தள்ளுகிறார். முடிவில் தனது நெருக்கமான நண்பரான ஸ்டெயினின் ஓவரில் தயவு தாட்சணமின்றி 23 ரன்களை சேர்த்திருந்தார். அரங்கத்தில் ஏ.பி.டி, ஏ.பி.டி என்ற சொற்கள் மேலும் மேலும் உறுதியுடன் ஒலித்தபடியே இருக்கிறது.

அடுத்த ஓவரிலும் அதிரடி ஆட்டம் தொடர்ந்தபடியே இருக்கிறது. முடிவில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான அந்த போட்டியில் ஆர்.சி.பி வெற்றிப் பெறுகிறது. லட்சக்கணக்கான மக்கள் குழுமியிருந்த அந்த மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் திரையில், 'திரைப்படங்களில் மட்டுமே இத்தகைய தருணங்கள் நிகழும்' என்ற சொற்கள் ஒளிர்கின்றன. ஏபி டிவில்லியர்ஸ் ஒட்டுமொத்த இந்திய மக்களின் மனங்களில் அக்கணத்திலேயே இடம் பிடித்துவிட்டார்.

இந்தியாவில் பெங்களூருதான் தனது விருப்பமான பகுதி என்று டிவில்லியர்ஸ் குறிப்பிட்டிருக்கிறார். ஒவ்வொருமுறை தான் பெங்களூருக்கு வரும்போதும் அந்த நகரம் வளர்ச்சியுற்றபடியே இருக்கிறது என்றாலும், அதன் பசுமையை இழக்காமல் இருப்பது ஆச்சர்யமளிக்கிறது என்று டிவில்லியர்ஸ் தெரிவித்திருக்கிறார். பெங்களூரின் பரபரப்பாக இயங்கும் சூழலும், அதன் மக்களையும் டிவில்லியர்ஸ் வெகுவாக  நேசிக்கிறார்.

டிவில்லியர்ஸ் பொதுவாக தனது உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாதவர். பல சாத்தியமற்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் போதும், அதனை பொறுமையுடன் நிதானமாக கடந்துச் செல்வதையே அவர் வழக்கமாக கொண்டிருக்கிறார். எதிரணியினரை குறித்த அவரது மதிப்பீடு எப்போதும் உயர்வானதாகவே இருந்திருக்கிறது. வெற்றிக்காக கடினமாக போராடும் அவர்களை உதாசீனப்படுத்துவதோ வெறுப்பேற்றும் விதமாக நடந்து கொள்வதோ அவருக்கு விருப்பமில்லை. அதனாலேயே உலகளவில் பல கிரிக்கெட் வீரர்களால் விரும்பப்படும் மனிதராக டிவில்லியர்ஸ் இருக்கிறார்.

பல விளையாட்டுகளில் மிகச் சிறந்த திறன் பெற்றவராக இருந்தாலும், ஏபி டிவில்லியர்ஸ் கிரிக்கெட்டை தேர்வு செய்ததற்கான காரணம், இதுவொரு குழு விளையாட்டு என்பதால்தான். குழுவாக இணைந்து விளையாடுவதில் ஏற்படுகின்ற அதீத மகிழ்ச்சியும், மன உறுதியும் அவருக்கு எப்போதுமே பிடித்தமான விஷயங்கள். தனி நபர் சாதனைகளை விடவும், குழுவாக ஒரு அணி பெறும் வெற்றியே அவருக்கு முக்கியமானதாக இருந்தது.

டென்னிஸ், ரக்பி, ஹாக்கி, கொல்ஃப் என பல விளையாட்டுகளில் மிகச் சிறிய வயதிலேயே ஈடுபாடுக் கொண்டிருந்த ஏபி டிவில்லியர்ஸ், தான் ஒரு டென்னிஸ் வீரராக உருவெடுக்க வேண்டும் என்பதையே துவக்க காலங்களில் விரும்பினார். அவரது தாயார் ஒரு டென்னிஸ் விளையாட்டு பயிற்சியாளராக இருந்தவர். அதனால், டென்னிஸ் விளையாட்டின் மீது அவருக்கு பெருமளவில் விருப்பமிருந்தது. தாயாரை தவிர்த்து வேறொரு பயிற்சியாளரின் கீழும் டிவில்லியர்ஸ் பயிற்சி பெற்றிருக்கிறார்.

டிவில்லியர்ஸின் சுறுசுறுப்பையும், எதிலும் முனைப்புடன் தீவிரமாக ஈடுபட வேண்டுமென்கின்ற ஆற்றலையும், எந்த சூழலிலும் விட்டுக்கொடுக்காத போராட்ட குணத்தையும் கண்டுக்கொண்ட அந்த பயிற்சியாளரான டானி சுலிவன் டிவில்லியர்ஸின் பெற்றோரிடம் ஒருநாள் இவ்விதமாக  தெரிவித்தார்.

'இந்த சிறுவன் முற்றிலும் வேறானவன். இவன் என்றாவது ஒருநாளில் ஏதாவதொரு விளையாட்டில் தென் ஆப்பிரிக்காவின் தேசிய அணிக்காக பங்கெடுத்திருப்பான் அல்லது சிறையில் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள போகிறான்' என்றார். அப்போது ஏபி டிவில்லியர்ஸுக்கு வெறும் ஏழே வயதுதான் ஆகியிருந்தது.

சிக்ஸர் ப ற க் கு ம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com