7. ஏபி டிவில்லியர்ஸை வெகுவாக கவர்ந்த க்ரிக்கெட் வீரர் யார்?

1995 நவம்பர் 17ஆம் நாள். உலக கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஷான் பொல்லாக்
7. ஏபி டிவில்லியர்ஸை வெகுவாக கவர்ந்த க்ரிக்கெட் வீரர் யார்?

1995 நவம்பர் 17ஆம் நாள். உலக கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷான் பொல்லாக் தென் ஆப்பிரிக்க அணிக்காக தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடிய தினம். சென்ச்சூரியன் பார்க் மைதானத்தில் நடந்த அப்போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்தை எதிர்த்து விளையாடிக் கொண்டிருந்தது. பின் காலத்தில் பெரும் சாதனைகளை குவித்த விளையாட்டு வீரரான பொல்லாக்கை அடையாளம் காட்டிய அப்போட்டி எவரும் அறியாத வண்ணம் மற்றொரு சிறப்பையும் பெற்றிருக்கிறது. ஆம். ஏபி டிவில்லியர்ஸ் முதல் முதலாக நேரடியாக மைதானத்தில் அமர்ந்து கிரிக்கெட் போட்டியைப் பார்த்தது அன்றைய தினத்தில்தான்.

மருத்துவரான டிவில்லியர்ஸின் தந்தை, அவரை அந்த போட்டியை காண அழைத்துச் சென்றார். தனது அசாத்தியமான ஃபீல்டிங் திறமையால், ஊடக வெளிச்சமும், பிரத்யேக ரசிகர் பட்டாளமும் ஒருங்கே வாய்க்கப் பெற்றிருந்த ஜான்டி ரோட்ஸின் பெயர் கொண்ட தொப்பியை அணிந்தபடி சென்ச்சூரியன் பார்க் மைதானத்தில் வியப்பு மேலிட போட்டியை டிவில்லியர்ஸ் பார்த்துக் கொண்டிருந்தார். டிவில்லியர்ஸும் ஜான்டி ரோட்ஸின் தீவிர பற்றாளர். தன்னை சுற்றி சில மீட்டர் தொலைவுக்கு, எந்தவொரு பந்தும் கடக்க முடியாதபடி அந்தரத்தில் பறந்து பல்டி அடித்து அனைத்தையும் தடுத்துக் கொண்டிருந்த ஜான்டி ரோட்ஸ் டிவில்லியர்ஸை வெகுவாக கவர்ந்திருந்தார். டிவில்லியர்ஸுக்கு அந்த நாளில் மனம் மகிழ்ச்சியில் பூரிந்திருந்தது.

ஆனால், ஒருசில தினங்களுக்குள்ளாகவே ஜான்டி ரோட்ஸ் தொப்பி அவமானகரமாக சூழலை டிவில்லியர்ஸுக்கு உருவாக்கிக் கொடுத்தது. வழக்கமாக தங்களது வீட்டு தோட்டத்தில் தனது இரண்டு மூத்த சகோதரர்கள் மற்றும் அவர்களது நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவதைப் போலவே அன்றும் விளையாடிக் கொண்டிருந்தார்.

அவர்களுள் டிவில்லியர்ஸ்தான் மிகவும் இளையவர். 11 வயது மட்டுமே அப்போது அவருக்கு ஆகியிருந்தது. அதனால், அவருக்கு பேட்டிங் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. நீண்ட நேரமாக ஃபீல்டிங் மட்டுமே செய்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவசமாக தனது கைகளுக்கு வந்த கேட்ச் ஒன்றை டிவில்லியர்ஸ் தப்பவிட்டுவிட்டார்.

கோபத்துடன் டிவில்லியர்ஸை நெருங்கி வந்த அவரது சகோதரரின் நண்பர், 'உனக்கு அந்த தொப்பியை போட அருகதை இல்லை. அதனால் உடனடியாக அதனை கழற்று' என்று உத்தரவிட்டார். டிவில்லியர்ஸுக்கு அழுகைப் பொத்துக்கொண்ட்டு வந்துவிட்டது. மெல்ல தொப்பியை கழற்றி வைத்துவிட்டு, பலவீனமான மனநிலையுடன் விளையாட்டை தொடர்ந்தார்.

அன்றைய நாளின் முடிவில்தான், அவருக்கு பேட்டிங் வாய்ப்பு வழங்கப்பட்டது. தன்னை அவமானப்படுத்தியவர்களை பழிவாங்க வேண்டும் என்கின்ற உந்துதல் டிவில்லியர்ஸின் மனதில் வளருகிறது. அதனால், தனது விக்கெட்டை பறிக்கொடுக்காமல் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடியபடியே இருக்கிறார். எல்லோரும் சோர்வுக்குள்ளாகிறார்கள். ஆனால், டிவில்லியர்ஸ் விடுவதாக இல்லை. மிக அதிக உறுதியுடன் களத்தில் நிலைத்திருக்கிறார். சிலப்பல தந்திரங்களை கூட அங்கிருப்பவர்கள் நிகழ்த்த முயற்சிக்கிறார்கள். ஆனால், அன்றைய தினத்தில் டிவில்லியர்ஸை அவர்களால் வீழ்த்த முடியவில்லை. இறுதியில், பெருமிதத்துடன் தனது ஜான்டி ரோட்ஸ் தொப்பியை மீண்டும் கையிலெடுத்து அணிந்துக்கொள்கிறார்.

இக்காலங்களில் இருந்தே டிவில்லியர்ஸுக்கு சுய மரியாதை என்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. எப்போதும் தன்னை எல்லோரும் சரிநிகராக நடத்த வேண்டுமென்பதே அவரது அதிகபட்ச எதிர்ப்பார்ப்பாக இருந்தது. தனது விடா முயற்சிக்கும், போராடும் குணத்திற்கும் கிடைக்கும் மரியாதையாக அது இருக்க வேண்டும் என டிவில்லியர்ஸ் கருதினார்.

பெலா பெலா பிராந்தியத்தில் தனது சிறுவயதுகளை கழித்த டிவில்லியர்ஸ் அனைத்துவிதமான விளையாட்டுகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். அந்த பிராந்தியத்தில் அனைவருமே ஒருவருக்கு ஒருவர் நன்கு அறிமுகமானவர்கள். அதனால், எவருடனும் சட்டென உரையாடலை துவங்கி, எந்த விளையாட்டையும் கண நேரத்தில் துவங்கிவிடும் வாய்ப்பு டிவில்லியர்ஸுக்கு இருந்தது.

திடீரென ஒரு தருணத்தில் கொல்ஃப் விளையாடிக் கொண்டிருப்பார். அல்லது டென்னிஸ் கோர்ட்டில் தனியாக யாரையும் பார்த்தால், அவருடன் இணைந்து உடனடியாக டென்னிஸ் விளையாட்டில் பங்குக்கொள்வார். டிவில்லியர்ஸுக்கு குறிப்பிட்ட ஒரு விளையாட்டு என்பதைவிட, நான் தேர்வு செய்கின்ற எந்தவொரு விளையாட்டிலும் சிறப்பான நிலையை அடைய வேண்டும் என்கின்ற முனைப்பே அதிகமிருந்தது.

யாருமே இல்லையென்றாலும் கூட, வீட்டில் தனியாக , கிரிக்கெட் பந்தை துணி ஒன்றில் திணிந்து அதனை அந்தரத்தில் தொங்கவிட்டு தனது பேட்டால் அடித்துக்கொண்டிருப்பது டிவில்லியர்ஸுக்கு வாடிக்கையாகவே இருந்தது.

அதோடு அக்காலத்தில் அவர், தீவிரமான டென்னிஸ் பயிற்சியையும் மேற்கொண்டிருந்தார். டானி சுலிவன் மற்றும் அவரது தந்தையான ஓம் டெரிக்கே அவரது பயிற்சியாளர்கள். இருவரும் அவருக்கு பல நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார்கள். இந்த பயிற்சிகள்தான் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கே அடித்தளம் அமைத்துக்கொடுத்தது என பின்னாளில் டிவில்லியர்ஸ் நினைவு கூர்கிறார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரால் டென்னிஸில் நீண்ட தினங்கள் நீடிக்க முடியாமல் ஆகிறது.

புகழ்பெற்ற ஜெர்மானிய டென்னிஸ் வீரரான போரிஸ் பெக்கரைப் போல பந்தை காற்றில் வீசி, அதனை தரையில் இருந்து எகிறி டென்னிஸ் மட்டையால் அடிக்கும் பயிற்சி டிவில்லியர்ஸுக்கு அளிக்கப்பட்டது. என்றாலும், அவரால் அவர்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. தனது வயதுக்கும், உயரத்திற்கும் டென்னிஸ் ஒத்துவராது என்ற எண்ணம் டிவில்லியர்ஸுக்கு உண்டாகிறது.

பின்னர் தனது உயர்நிலை கல்வியை ஆஃபீயஸில் பயின்ற டிவில்லியர்ஸுக்கு மேலும் ஓரு பயிற்சியாளர் கிடைத்தார். ஆஃபீயஸ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான டியான் போட்ஸ், பேட்டிங் குறித்து தான் அறிந்து வைத்திருந்த அத்தனை விவரங்களையும் டிவில்லியர்ஸிடம் பகிர்ந்துக்கொண்டார்.

“டியான் போட்ஸ்தான் எனக்கு முதல் முதலாக பேட்டிங் சார்ந்த புரிதலை உண்டாக்கியவர். நான் எவ்விதமாக பேட்டை பிடிக்க வேண்டும். கிரீஸில் எப்படி நிற்க வேண்டும். எப்படி பந்தை எதிர்கொள்ள வேண்டும் என்றெல்லாம் நிதானமாக எனக்கு சொல்லிக் கொடுத்தார். அதற்கு முன்பு எத்தனை வேகமாக பந்தை விலாசி தள்ள முடியுமோ அந்தளவுக்கு வேகமாக அடிக்க வேண்டுமென்பதே எனது பேட்டிங் சார்ந்த புரிதலாக இருந்தது” என டியான் போட்ஸ் பயிற்சியை டிவில்லியர்ஸ் மிகுந்த போற்றுதலோடு பகிர்ந்துக்கொள்கிறார்.

நான்கு வருடங்கள் ஆஃபீயஸ் அணிக்காக விளையாடிய டிவில்லியர்ஸ் மொத்தமாக 1839 ரன்களை குவித்திருந்தார். ஆனால், அதைவிடவும் கூடுதலான ரன்களை குவித்தவர் ஒருவர் அப்பள்ளியில் இருந்தார். 3190 ரன்களை சேர்த்திருந்த அந்த மனிதர்தான் தற்போது தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக பதவி வகிக்கும் டூப்ளஸிஸ். டிவில்லியர்ஸுன், டூப்ளஸிஸும் அக்காலத்தில் இருந்தே நெருக்கமான நண்பர்களாக வளர்ந்து வந்தார்கள்.

பள்ளி கல்வியை முடித்ததும், டிவில்லியர்ஸ் விளையாட்டு அறிவியல் பிரிவில் கல்லூரியில் இணைகிறார். தனது தந்தை ஒரு மருத்துவர் என்பதால் கல்வி குறித்த சகல சந்தேகங்களையும் மாலையில் அவருடன் உரையாடி அறிந்துக்கொள்வது டிவில்லியர்ஸுக்கு மகிழ்வு அளிக்கக்கூடிய தருணங்களாக இருந்தது. டிவில்லியர்ஸ் படிப்பில் அதிக கவனத்தை செலுத்தி வந்தார்.

இந்நிலையில் அவரது வாழ்க்கையையே அடியோடு மாற்றிப்போடும் தொலைப்பேசி அழைப்பொன்று அவருக்கு வந்தது. டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளரான டேவ் நாஸ்வர்த்திதான் தொலைபேசியில் அழைத்தவர்.

'2003 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் வார்ம் அப் போட்டியில் டைட்டன்ஸ் அணியில் இணைந்து விளையாட விருப்பமா?' என்று டிவில்லியர்ஸிடம் முற்றிலும் எதிர்பாராத வகையில் அவர் கேட்டார். முன்னதாக, ஆஃபீயஸ் அணியில் டிவில்லியர்ஸின் ஆட்டத்தை பார்த்து அவரது திறனை வெகுவாக ரசித்திருந்த டேவ் நாஸ்வர்த்தி டிவில்லியர்ஸுக்கு இந்த வாய்ப்பினை அளிக்க முன்வந்திருந்தார்.

டிவில்லியர்ஸுக்கு ஒருகணம் எதுவுமே புரியவில்லை. புகழ்பெற்ற டைட்டன்ஸ் அணியில் தனக்கு விளையாட அழைப்பு விடப்பட்டிருப்பதை எண்ணி வியப்பில் பதிலேதும் பேசாமல் தொலைப்பேசியை காதில் வைத்தபடியே பரவசத்துடன் பேச்சற்று நின்றிருந்தார். அவரால் அக்கணத்தை நம்ப முடியவில்லை. உதடுகள் சொற்களை உளற தனது சம்மதத்தை டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.

அந்த போட்டியில் டிவில்லியர்ஸுக்கு, தென் ஆப்பிரிக்கா அணியின் வரலாற்று நாயகனான காலிஸுடன் இணைந்து ஆட்டத்தை துவங்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒருபக்கம் தான் கனவுலகில் சஞ்சாரம் செய்துக் கொண்டிருப்பதாக உணர்ந்தாலும் மறுப்பக்கம் தனது ஆட்டத்தையும் மிகுந்த கவனத்துடன் டிவில்லியர்ஸ் வடிவமைத்துக் கொண்டார். முடிவில் 109 ரன்களில் அவர் அவுட் ஆக, டைட்டன்ஸ் அணிக்கான விளையாடிய தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்த வீரர் எனும் பெருமை அவருக்கு கிடைத்தது. டேவ் நாஸ்வர்த்தியின் நம்பிக்கை பொய்க்கவில்லை. எதிர்கால தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்காக மிகச் சிறந்த விளையாட்டு வீரர் ஒருவரை டேவ் நாஸ்வர்த்தி கண்டடைந்திருந்தார்.

மீண்டும் மீண்டும் டேவ் நாஸ்வர்த்தி டிவில்லியர்ஸுக்கு பல வாய்ப்புகளை வழங்கியபடியே இருந்தார். இதனால், கல்லூரி படிப்பை தொடர முடியமல் ஆகிறது. விளையாட்டில் முழுமையான கவனத்தை செலுத்துகிறார். கடினமான உழைப்பை கோரும் பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்கிறார்.

அவரது பெற்றோருக்கும், டிவில்லியர்ஸ் கல்லூரி படிப்பை விட விளையாட்டில் கவனம் செலுத்துவதுதான் முறையென்று படுகிறது. பல உலக நாடுகளுக்கு பயணிக்கும் சந்தர்ப்பமும் அவருக்கு வாய்த்தது. டிவில்லியர்ஸ் தனக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் சரியாக பயன்படுத்திக்கொண்டார். சதத்திற்கு மேல் சதம் பறந்துக்கொண்டே போனது. டிவில்லியர்ஸ் இந்த நாட்களில் முழுமையான அதிரடி ஆட்டக்காரராக மாறியிருந்தார்.

2004ஆம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி டிவில்லியர்ஸுக்கு மீண்டும் ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது. ஆனால், இந்த முறை அழைத்தது டேவ் நாஸ்வர்த்தி அல்ல. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய தலைவர்களுள் ஒருவரான, ஹாரூன் லோர்காட்.

'ஏபி, இன்னும் இரண்டு வார காலத்தில் போர்ட் எலிசபெத் மைதானத்தில் இங்கிலாந்து எதிராக தொடங்கவுள்ள போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்காக உங்களை துவக்க ஆட்டக்காரராக களம் இறக்க விரும்புகிறோம். உங்களுக்கு சம்மதமா?'.

சிக்ஸர் பறக்கும்... ...  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com