2. எனது நாட்டிற்காக விளையாடுகிறேன்! விராட் கோலியின் நிறைவேறிய ஆசை!

‘நீங்கள் புகழ் அடைந்த பிறகு, பணம் வெகு இயல்பாக உங்கள் கைகளில் தவழத் துவங்கிவிடும்.
2. எனது நாட்டிற்காக விளையாடுகிறேன்! விராட் கோலியின் நிறைவேறிய ஆசை!

முதல் நாயகன் – விராட் கோலி - 2

‘நீங்கள் புகழ் அடைந்த பிறகு, பணம் வெகு இயல்பாக உங்கள் கைகளில் தவழத் துவங்கிவிடும். ஆனால், பணம் பற்றியெல்லாம் நான் பெரிதளவில் விருப்பம் கொள்வதில்லை. நான் ஒரு அடையாளத்தை விட்டுச் செல்ல விரும்புகின்றேன். பல வருடங்களுக்கு பிறகு, இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றை ஒருவர் திரும்பிப் பார்க்கும்போது, அதன் முன்னேற்றத்தில் பாதை அமைத்துக் கொடுத்த வீரர்களில் நானும் ஒருவனாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இந்திய அணியில் சகாப்தங்களை உருவாக்கிய வீரர்களுள் நானும் ஒருவனாக நிச்சயம் நிலைபெறுவேன்’ - விராட் கோலி  

தலைநகர் தில்லியின் மேற்கு திசையில் இருக்கும் உத்தம் நகரில் மிக எளிய மத்தியவர்க்க பஞ்சாபி குடும்பமொன்றில் பிறந்தவர் விராட் கோலி. இவர் பிறந்தது 1988-ம் ஆண்டு நவம்பர் 5-ம் நாள். கோலியின் தந்தையான பிரேம் கோலி குற்றவியல் வழக்கறிஞராக பணி செய்து கொண்டிருந்தார். தாய் சரோஜ் கோலி எதார்த்தமான இந்தியக் குடும்ப பெண்மணி.

மிக எளிய மனிதரான கோலியின் தந்தைக்கு பெரியளவில் வழக்குகள் எதுவும் வந்து குவிந்துக் கொண்டிருக்கவில்லை. வாடகை வீட்டில்தான் வசிக்க வேண்டியிருந்தது. கோலிக்கு மூத்த சதோதர் ஒருவரும், மூத்த சகோதரி ஒருவரும் உள்ளார்கள். கோலிதான் வீட்டின் கடைக்குட்டி. அதனால் இயல்பாகவே அந்தக் குடும்பத்தில் இருந்த அனைவருக்கும் கோலியின் மீது கொள்ளை பிரியம்.

பஞ்சாபி மக்களுக்கே உரிய உணவுகளின் மீதான நாட்டம் கோலிக்கும் சிறு வயதிலிருந்தே இருந்து வந்தது. கோலி தீவிரமான சிக்கன் பிரியர். சிக்கனை ருசித்து உண்ணக் கூடியவர். இந்திய அணியில் இடம்பெறுவதற்கு முன்பான கோலியின் புகைப்படங்களை பார்க்கையில், இன்றையை தோற்றத்திற்கு நேரெதிராக கன்னம் உப்பிய நிலையில் பருமனான உடல் கொண்டவராக கொழுகொழுவென்று இருக்கிறார்.

ஒரு விளையாட்டு வீரனுக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்தது அவனது உடலமைப்பே என்பதை பின்னாளில் உணர்ந்து கொண்டதாக சொல்லும் கோலி, அதன் பிறகே, உடற்பயிற்சியை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார். உடற்தகுதியில் பிரபல செர்பிய நாட்டு டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிக்கே தனது போட்டியாளர் என கோலி விளையாட்டுத்தனமாக சொல்வதுண்டு.

கோலிக்கு மூன்று வயதிருக்கும் போதே, அவரது தந்தையுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது வழக்கமாக இருந்திருக்கிறது. கிரிக்கெட்டின் மீது ஈடுபாடு கொண்டிருந்த பிரேம் தனது மகனை பேட் செய்யச் சொல்லி, கோலிக்கு மகிழ்ச்சியுடன் பந்து வீசுவாராம். இருவரும் அருகில் இருக்கும் மைதானதிற்கு ஸ்கூட்டரில் சென்றுவிடுவார்கள். உடல் சோர்ந்து வியர்வை துளிர்த்து மண்ணில் விழும் வரை இருவரும் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருப்பார்கள். பிரேம் தனது மகனை சந்தோஷமடையச் செய்வதில் அலாதியான விருப்பம் கொண்டவர். சிறு வயதில் விளையாட்டு போக்காய் தொடங்கிய கோலியின் கிரிக்கெட் ஆர்வத்தை, மேற்கு தில்லி கிரிக்கெட் அகாதெமியில் சேர்த்துவிட்டு மேலும் விஸ்தாரமாக்கியவர் அவர்தான்.

கோலிக்கு அந்த கிரிக்கெட் அகாதெமியில் சேர்ந்தபோது ஒன்பது வயது. துறுதுறுவென சுட்டித்தனமாக ஆர்வ மிகுதியுடன் அலைந்துக் கொண்டிருக்கும் கோலியை இயல்பாக அகாதெமியில் இருந்த எல்லோருக்கும் பிடித்துப் போனது. அவரது திறனை அவர்களும் ஊக்கப்படுத்தியபடியே இருந்தனர்.

இந்திய கிரிக்கெட்டின் விளையாட்டின் கடவுளாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு, ஆக்ரேக்கர் என்ற பயிற்சியாளர் கிடைத்ததைப் போலவே, கோலிக்கு மேற்கு தில்லி கிரிக்கெட் அகாதெமி கிடைத்திருந்தது.

கோலியின் துவக்க கால பயிற்சியார்களுள் ஒருவரான ராஜ்குமார் ஷர்மா கோலியைப் பற்றிக் கூறுகையில், ‘கோலி அசாத்தியமான திறன் மிக்கவர். அவரை அமைதியாக ஓரிடத்தில் கட்டுப்படுத்தி உட்கார வைப்பதே பெரும்பாடு. அவர் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருப்பார். எந்த ஒரு செயலையும் மிகத் தீவிரமாகவும், எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளாமலும் செயல்படுத்திவிடுவார். ஆட்ட வரிசையில் எந்த நிலையில் இறக்கிவிட்டாலும், தனது பணியை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தக் கூடியவராக கோலி இருந்தார். உண்மையில், ஒவ்வொரு பயிற்சி நாளின் இறுதியிலும் அகாதெமியிலிருந்து கோலியை நீங்கள் பலவந்தமாக வெளியேற்ற வேண்டும். ஏனெனில், அவர் அகாதெமியை விட்டு வெளியே செல்லவே விரும்ப மாட்டார்’ என்று அந்நாளின் நினைவுகளை விவரிக்கிறார்.

கோலி சச்சினின் மிகப்பெரிய ரசிகர். பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சச்சினின் ஆட்டத்தை மிகவும் விரும்பிப் பார்ப்பார். அவரது விளையாட்டு நுணுக்கங்களை கூர்ந்து அவதானிப்பார். சச்சின் என்கின்ற ஆளுமையின் மீது கோலியின் மனதில் மிகப் பெரிய எண்ணம் உருவாகியிருந்தது. எந்தவொரு இந்திய கிரிக்கெட் ரசிகனையும்போல சச்சினின் ஆட்டத்தை அலாதியான முறையில் கொண்டாடியவர் கோலி. ‘சச்சின் வெறும் விளையாட்டு வீரர் என்கின்ற நிலையையும் கடந்து, இந்திய கிரிக்கெட் ஆர்வலர்களின் மனங்களில் ஆழமிக்கதும் உணர்வுப்பூர்வமானதுமான நினைவலைகளை உருவாக்கியவர்’ என சச்சினின் மீதான தனது நேசத்தை கோலி வெளிப்படுத்தியிருக்கிறார்.    

கோலி படிப்பிலும் படு சுட்டி. பள்ளித் தேர்வுகளில் எப்போதும் முதல்நிலை மதிப்பெண்களை பெறுவதே அவரது இயல்பாய் இருந்தது. தான் சார்ந்திருக்கும் எதுவொன்றின் மீதும் அதீதமான முழுமையான அர்ப்பணிப்போடு செயல்படுத்தக் கூடியவர் கோலி. அத்தகைய ஆற்றல்தான் அவரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பொறுப்பை மிக விரைவாக ஏற்கும் நிலை வரை உயர்த்திவிட்டது.

இதனிடையே கோலியின் குடும்பம் மீரா பாக் பகுதிக்கு இடம்பெயர வேண்டிய நிலை உருவானது. மீரா பாக் கோலியின் கிரிக்கெட் அகாதெமி அமைந்திருந்த இடத்திற்கு வெகு அண்மையில் இருந்ததால், கோலியின் பயிற்சிகள் மேலும் மேலும் உறுதியுடன் நகர்ந்துக் கொண்டிருந்தன. அப்போதெல்லாம் தினமும் கோலியை பயிற்சிக்கு அவரது தந்தைதான் அழைத்துச் செல்வதும் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவதுமாக இருப்பார். கோலி மிக பிரபலமான கிரிக்கெட் வீரராக உருவாக வேண்டுமென விருப்பம் கொண்டிருந்த பிரேம் ஒவ்வொரு நாளும் அந்த நம்பிக்கையை கோலியின் மனதுக்குள் ஆழமாக விதைத்தபடியே இருந்தார்.

தொடர் பயிற்சியின் பயனாகவும், அகாதெமியின் ஆதரவாலும், கோலிக்கு 2002-ம் ஆண்டு தில்லி அணியில் பதினைந்து வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டியில் (அண்டர் 15) விளையாடும் சந்தர்ப்பம் உண்டாகிறது. பாலி உம்ரிகர் கோப்பை என்ற தொடரில் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 172 ரன்கள் அந்த தொடரின் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற நிலையை அடைந்தார். கோலியின் தந்தைக்கு மகனின் செயல்பாடு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. பின்னாளில் மிக திறன்வாய்ந்த கிரிக்கெட் வீரராக கோலி பரிணமிக்கப் போகிறார் என்பதை அப்போதே உணர்ந்திருந்தார் பிரேம்.

கோலி அடுத்தடுத்த போட்டிகளிலும் அதிகளவில் ரன்களை குவித்துக் கொண்டிருந்தார். அவரது வளர்ச்சி அதிவேகமாக இருந்தது. 2003-ல் பாலி உம்ரிகர் தொடரில் கேப்டன் பொறுப்பு அவர் வசம் ஒப்படைக்கப்படுகிறது. 2004-ல் அண்டர் 17 தில்லி அணியில் சேர்ந்து, விஜய் மெர்சண்ட் தொடரிலும் அதிக ரன்களை குவிக்கிறார். அதற்கு இரண்டு ஆண்டுகள் கடந்து, இந்தியாவின் அண்டர் 19 அணியில் அவருக்கு இடம் கிடைக்கிறது. இங்கிலாந்தில் நடைபெற்ற அந்த சர்வதேச போட்டித் தொடரிலும் கோலி தனது திறன்வாய்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

2006-ல் முதல்நிலை தில்லி அணியில் இடம்பிடிக்கும்போது தமிழக அணிக்கு எதிராக விளையாடியபோது அவரது வயது 18. இந்த போட்டித் தொடரில் கர்நாடகாவுக்கு எதிரான போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது அவருக்கு அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவல் ஒன்று வந்துச் சேர்கிறது. நீண்ட நாட்களாக நோயுற்றிருந்த அவரது தந்தையின் மரணச் செய்தியே அது. கோலி இந்தச் செய்தியால் மிகப்பெரிய அதிர்வடைகிறார். மனம் முழுக்க அழுகையால் நிரம்பி தளும்புகிறது. தந்தையுடனான நினைவுகள் அனைத்தும் அக்கணத்தில் திரும்ப திரும்ப நினைவில் எழுந்தபடியே இருக்கின்றன. அதி தொலைவில் தந்தையின் உடல் உயிரற்ற நிலையில் தரையில் கிடத்தப்பட்டிருப்பதான காட்சிகள் மனதில் அரங்கேறியபடியே இருக்கின்றன. எனினும், கோலி பொறுமையுடன் இருந்தார்.

உள்ளுக்குள் நேர்ந்துகொண்டிருக்கும் தவிப்புகளை வெளியில் காட்டாமல், மிக நிதானமாக ஆட்டத்தை தொடருகிறார். ரன்கள் குவிந்து கொண்டே இருக்கின்றன. அந்த ஆட்டத்தில் கோலி சேர்த்தது 90 ரன்கள். ‘அன்றைய போட்டியில் எனது ஆட்டம் மெல்ல மாற்றமடைந்திருந்தது. நான் ஒன்றை மட்டும் மனதில் நிறுத்திக் கொண்டேன். நான் எனது நாட்டிற்காக விளையாடுகின்றேன். நான் நாட்டிற்காக விளையாட வேண்டுமென்று விரும்பிய என் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்’. கோலி அன்றைய போட்டியில் ஆட்டமிழந்ததும் விரைந்து சென்று தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார்.

சிறுவயதில் தந்தையின் ஸ்கூட்டரில் பின் இருக்கையில் அமர்ந்து கிரிக்கெட் மட்டையைச் சுமந்து சென்ற தினங்கள் அவருக்கு நினைவுக்கு வந்தபடியே இருக்கிறது. தொலைவில் தந்தை புன்னகைத்தபடியே பந்துவீச தன்னை நோக்கி ஓடி வருகிறார். அவரது மூச்சுக்காற்று கோலியின் முகத்தில் மோதி வருடுகிறது. நாட்கள் அதிவிரைவாக தன்னை கடந்துச் செல்வதை கோலி பார்க்கிறார். இப்போது தந்தை தன்னிடமில்லை என்கின்ற நினைவு மனத்தை அழுத்துகிறது. இறுதி காரியங்கள் அனைத்தையும் முடித்துவிட்டு வெறுமை கவிந்த நிலையில் அமைதியுடன் தனது அறையில் அமர்ந்திருக்கிறார்.

கோலியின் தாய் அன்றைய தினத்தை நினைவு கூர்கிறார். ‘கோலி அன்றைய தினத்திற்கு பிறகு வெகுவாக மாறிவிட்டான். அப்போது அவன் என் பார்வைக்கு முழு மனிதனாக தோன்றினான். சுயமாக எழுந்து நிற்க வேண்டியதை உணர்ந்து கொண்டான். அதன்பிறகு, ஒவ்வொரு போட்டியையும் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளத் துவங்கினான். முழுக்க முழுக்க தனது வாழ்க்கை இனி கிரிக்கெட் விளையாட்டுக்கே அர்ப்பணிக்கப்பட்டதைப்போல அவன் மாறியிருந்தான். இப்போது, அவன் தனது தந்தையின் கனவை நிறைவேற்றிவிட்டான். அது அவனது கனவும்கூட’.

சிக்ஸர் பறக்கும்…...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com