2. ஆ! கெஸ்ட்!

மெட்ராஸ் வந்தா வீட்டுக்கு வாங்களேன்னு சொன்னேன். அதை ரிக், எஜுர், சாம, அதர்வண வேத வாக்கா எடுத்துண்டு ஜோஸ்யர் வந்துட்டாரா..
2. ஆ! கெஸ்ட்!

‘சிவசாமி! நம்ம திருவள்ளுவர் திருவள்ளூர்லேயா பிறந்தார்?’

‘இல்லேண்ணா, மதுரையிலேயா மயிலாப்பூரிலேயோன்னு ஒரு சர்ச்சை உண்டு’.

‘அப்படியா? அவர்தானேடா மருந்து புறத்தான்னு ஏதோ மெடிசன் சம்பந்தமா எழுதி இருக்கார் இல்லே’.

‘மருந்து புறத்தா இல்லேண்ணா. ‘விருந்து புறத்தாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று’ என்று பாடியிருக்கார். விருந்தோம்பல் அதிகாரம். குறள் எண் 82. பொழிப்புரை என்னன்னா, ‘நாம உண்கிறது அமிர்தமானாலும், வீட்டு ஹாலில் குத்துக்கல்லாட்டம் கெஸ்ட் உட்கார்ந்து இருக்கும்போது, அவருக்கும் குடுக்காம இருக்கிறது தப்பு’.

‘சரிடா சிவசாமி, இன்னிக்கு யாரு கெஸ்ட் வரா? நம்ம வீடு கிண்டி ராஜ்பவன் மாதிரி ஆயிடுத்து’.

‘இருந்தாலும், நம்ம ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாதிரி சிக்கனமா இருக்க முடியுமா? சாணி தெளிக்கக்கூட பிஸ்லேரி வாட்டர், பல் குத்த தங்க முலாம் பூசின டூத்பிக், சிகாகோவிலிருந்து வந்த வாழைப்பழம் ரேஞ்சிலே, ராஜ்பவன் ஆட்கள் சுல்தான்கள் மாதிரி அனுபவிச்சிண்டிருந்தார்களாம். அத்தனையும் ஆளுநர்ஜி நிறுத்தி செலவை 80 விழுக்காடு குறைச்சுட்டாராம். பழைய கவர்னர் பிரபுதாஸ் பட்வாரியையே மிஞ்சிட்டாராம்’.

‘சூப்பர்டா. இன்னிக்கு நம்ம ராஜ்பவனுக்கு யார் வராங்கடா?’

‘ரெண்டு பேர் அண்ணா. கும்பகோணத்திலேருந்து ஜோஸ்யர் அப்புணு சாரும், அவரோட மாப்பிள்ளை கோபாலியும். அண்ணா, அதோ ஆட்டோ வாசல்லே வந்து நிக்கறது. விருந்தாளிகள் வந்துட்டாங்க’.

‘போ போ, சட்னு ஆரத்தி எடு. வலது காலை எடுத்துவெச்சு வரச்சொல்லு. ஏதோ ரயில்லே ஒண்ணா போகும்போது உபசார வார்த்தையா, ‘மெட்ராஸ் வந்தா வீட்டுக்கு வாங்க’ளேன்னு சொன்னேன். அதை ரிக், எஜுர், சாம, அதர்வண வேத வாக்கா எடுத்துண்டு ஜோஸ்யர் வந்துட்டாரா? கூட எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கா மாப்பிள்ளை வேற? எவ்வளவு நாள் டேராவோ? சரி, சரி, அதிதிகளை மனம்கோணாம பாத்துக்கோடா’.

‘அப்படியே செஞ்சுடறது அண்ணா’.

உள்ளே நுழையும்போதே, கோபாலி, பேங்க் லோனுக்காக வந்த ஸ்டேட் பேங்க் அப்ரூவ்டு சர்வேயர் மாதிரி வீட்டை நோட்டம் விட்டு, ‘இதைக் கட்ட எவ்வளவு ஆச்சுன்னு’ கேட்டார். பஞ்சாமியும் சிவசாமியும் டைமிங்குடன் ஒருவர் ஒருவர் முகத்தைப் பார்த்துக்கொண்டார்கள். ‘என்ன மாப்ளே இது? அதை எல்லாம் சாவகாசமா கேட்டுக்கலாம்’னு சொன்னவர், கண்களை மூடி ‘ம்ம்ம்’னு விடுகதைக்கு யோசிக்கும் சிறு பயல் மாதிரி முகவாயிலே சுட்டு விரலால் தட்டி, ‘பெருசு ஒரு ரூபாய் இருக்கும்’ என்றார். ‘சீச்சீ! அவ்வளவு தேராது மாமா’ என்றான் கோபாலி.

பயணக் களைப்பு தீர நீராடிவிட்டு இருவரும் டிபன் சாப்பிட உட்கார்ந்தார்கள். ரவா பொங்கல், கீரை வடை, சின்ன வெங்காய சாம்பார், தக்காளி சட்னி, சூடா டிகிரி காபி. இருவரும் விட்ட ஏப்பங்கள் ஸ்ருதி சுத்தியுடன் பிணைந்து ஒலித்தன.

மத்தியான சாப்பாட்டுக்குப் பிறகு, மந்தவெளி வரை போயிட்டு வரேன்னு அப்புணு கிளம்பிப் போனார். கோபாலி கெஸ்ட் ரூமில் வெறுந்தரையில் கால்களை ஜியாமெட்ரி பாக்ஸ் டிவைடராக 45 டிகிரிக்கு மேலே விரித்து மல்லாக்கப் படுத்து தூங்கிக்கொண்டிருந்தான். பெருச்சாளி உறுமும் குறட்டைச் சத்தத்தை பெரிய டெசிபலில் போடவும் செய்தான்.

‘சிவசாமி, இவங்க எதுக்கு வந்திருக்காங்களாம்? எவ்வளவு நாள் சுணக்கமாம்?’

‘தெரிலே அண்ணா. ஏதோ லேடி சமாசாரம் போலிருக்கு. அதான் அப்புணு போயிருக்கார்னு நினைக்கிறேன்’.

‘அப்புணுக்கு அறுபது வயசான இருக்கும். ஆனாலும் அம்சமா இருக்கார். கரு கரு முடி. சுருக்கம் இல்லாத மூஞ்சி. உடம்பிலே பிராஸோ போட்டுத் தேச்சா மாதிரி ஒரு ஷைனிங். பொண்டாட்டி வேற இல்லை. இவர் தேமேன்னு இருந்தாலும் சில லேடீஸ் விடமாட்டாங்களேடா’.

‘அண்ணா. மேட்டர் கோபாலி சம்பந்தப்பட்டது. அவனுக்கு மெட்ராஸிலே இருக்கிற ஒரு பொண்ணு மேலே ஒரு கண்ணாம். மறு கண்ணும் அவள் மேலேயாம். சீக்ரெட்டா கல்யாணம் பண்ணிக்கப்போறதா கேள்விப்பட்ட அப்புணு சார் பதறி, ஏது என்னன்னு விசாரிக்கப் போயிருக்காராம். ‘சிவசாமி! அவனுக்கு நாச்சியார் கோயில் குத்துவிளக்கு மாதிரி கும்பகோணத்திலே ஒரு பொண்டாட்டி இருக்க இப்படிப் பண்றானேப்பா. ஏதான செஞ்சு அம்புலுவைக் காப்பாத்து’ன்னு மூக்கால அழுது சில விவரங்களை எங்கிட்டே நம்பிக்கை வெச்சு சொன்னார்’.

‘ம், நான் இதை டீல் பண்ணட்டுமா? எங்கிட்டே கைவசம் ஒரு பிளான் இருக்கு. ராத்திரி உங்கிட்டே சொல்றேன்’.

‘அப்படியே ஆகட்டும் அண்ணா’.

மத்தியானம் தூங்கி எழுந்த பஞ்சாமி, கிளப்புக்குப் போய் அரட்டை அடித்துவிட்டு வீடு திரும்பினபோது ராத்திரி எட்டு மணி. சிவசாமி, உ.வே.சாவின் ‘என் சரித்திரம்’ புத்தகத்தைப் படிச்சிண்டு இருந்தான்.

‘என்னடா? அதை நீ படிக்கிறயா, பாராயணம் பண்றயா?’

‘சரியாச் சொன்னேள் அண்ணா. பாராயணம்தான் பண்றேன். பண்ண வேண்டியது ஆச்சே’.

‘எங்கேடா மாமனார்-மாப்பிள்ளை காம்போவைக் காணும்?’

‘கும்பகோணத்துக்கு ரதி மீனாலே கிளம்பிப் போயிட்டா’.

‘என்னது, கிளம்பிப் போயாச்சா? அந்த மோகினியோட சமாசாரம் என்னடா ஆச்சு?’

‘அதெல்லாம் சால்வ் ஆயிடுச்சு அண்ணா’.

‘என்னது? இந்த மாதிரி காதல் மேட்டர் எல்லாம் தனுர் மாசத்து ஆஸ்துமா மாதிரி இழுத்து இழுத்து அடிக்குமேடா. என்ன பண்ணினே? பின் கதை என்னன்னு சொல்லு’.

பஞ்சாமிக்கு புஸ்ஸுனு பம்மியிருந்த ரெண்டு பூரி, பட்டாணி போட்ட மசாலா, ஆனியன் ரைய்த்தாவைப் போட்டுக்கொண்டு சிவசாமி சொன்னான்.

‘கோபாலி கல்யாணம் பண்ணிக்கணுங்கிற பத்மாவதி வீட்டுக்கு நேராகப் போன அப்புணுக்கு ஏமாத்தமாம். வீடு பூட்டி இருந்ததாம். திரும்பி வந்து என்னப்பா செய்யறதுன்னு கேட்டார். நான் சொல்றபடி செய்யறேளான்னு கேட்டு என் பிளானைச் சொன்னேன். முதல்லே சீச்சின்னு வெக்கப்பட்டு திகைச்சாலும், கடைசிலே சரின்னு வழிக்கு வந்தார். கோவிலுக்குப் போயிட்டு வாங்கோன்னு அனுப்பி வெச்சேன்.

‘தூங்கி எழுந்த கோபாலிகிட்டே, ‘என்ன இப்படி ஆச்சே. பத்மாவதிகிட்டே நல்லவிதமாப் பேசி மனசை மாத்த உங்க அப்பா அவள் வீட்டுக்குப் போனாராம். ஆனா அவளைப் பாத்ததும் தள்ளாடிட்டாராம். சின்ன வயசிலே அவர் லவ் பண்ணி பெயிலான பொண்ணு மாதிரியே அச்சா அப்படியே இருந்தாளாம். தனக்கு ரெண்டாம்தாரமா வந்தா ஜம்முனு இருக்கும்னு முடிவு பண்ணி, மேல ஒண்ணும் பேசாம மறுபடியும் நாளைக்கு வரேன்னு சொல்லிட்டு வந்தாராம். உன்னைத்தான் அவளுக்கு அவ்வளவா பிடிக்கலே. ஆனா உங்கப்பாவைப் பார்த்து மயங்கின மாதிரி இருந்தாளாம். அவர்தான் ஜம்முனு முறுக்கோட இருக்காரே’ன்னு அடிச்சு விட்டேன்.

‘கோபாலி வாயைப் பிளந்தான். நெஜமாவே அவனைவிட அவன் அப்பா பார்க்க ஸ்மார்ட்டா இருக்கிறது அவனுக்கு உறுத்திண்டு இருந்திருக்கும். ‘ச்ச்சீ என்ன மனுஷர் இவர். நான் பொண்டாட்டியா அடையணும்கிறவ எனக்கு சித்தியா வரதான்னு’ கத்தினான். ஏதான செய்யப்பா. நாளைக்கு மறுபடியும் அவர் போனா, உனக்கு அவ சித்தி ஆயிடுவான்னேன்.

‘இப்பவே ஊருக்குக் கிளம்பறேன். எங்கே அப்பா?. இதோ வந்துட்டாரே’ன்னு சொன்னவன், முகத்தை அப்பாவியா வெச்சுண்டு, ‘அப்பா, ஊர்லேருந்து போன் வந்தது. பாட்டி கொல்லையிலே விழுந்துட்டாளாம். கொடம் கொடமா ரத்தம் கொட்டறதாம். உடனே கிளம்பணும்னான்’.

‘என்னடா இது?’ன்னு அப்புணு பெரிசா பிகு பண்ணின்டு மூஞ்சியை பெருசா தூக்கி வெச்சுண்டு கிளம்பிட்டார். அப்புணு சீரியல்லே அப்பாவா ஆக்ட் பண்ணலாம். நடிப்பு அவ்வளவு தத்ரூபம். பஸ்லே சாப்பிட பத்து பூரி பார்சல் பண்ணி குடுத்திருக்கேன்’.

‘சூப்பர்டா சிவாசாமி. ஒரு விருந்தினர் செட் போயாச்சு. அடுத்து யார் வரப்போறாங்களோ?’

‘வள்ளுவர் அதற்கும் சொல்லி இருக்கார். ‘செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல் விருந்து வானத்தவர்க்கு’ன்னு. என்னோட பாமர பொழிப்புரை - கிளம்பிப்போன கெஸ்ட்டை அனுப்பிவிட்டு அடுத்து வருவது யாருன்னு காத்திருப்பவன், மேலுலகில் தேவர்களுக்கு விருந்தினன் ஆயிடுவான். இன்னும் ரெண்டு பூரி போட்டுக்கோங்கோ, அண்ணா. இல்லாட்டி நடுநிசியிலே வயத்தைப் பசிக்கும்’.

*

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com