16. சலூனில் இந்தி

எமிங்வேயா? பிராட்வேதான் தெரியும். டவுன்லே பூக்கடைப் பக்கம். அங்கேதான் ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோம், ஆரிய பவன் ஓட்டல் எல்லாம் உண்டு. இப்போ இருக்கா தெரியலே?
16. சலூனில் இந்தி

‘சிவசாமி, ஒரு நடை சலூனுக்குப் போயிட்டு வரணும்டா?’

‘தாராளமா போயிட்டு வாங்கண்ணா. குறுக்கே நிக்கறதா நினைச்சுக்கக் கூடாது. ஆனா, போன மாசம்தான் போயிட்டு வந்தது.

‘அதனாலென்னடா? சீக்கிரம் போனா, பின் பக்கத்திலே யாரான சவுக்கால அடிப்பாங்களான?’

‘அதுக்கு இல்லே அண்ணா. போன விசை வலது காதுக்கு மேல பட்ட காயமே இன்னும் ஆறலே. அதுக்குள்ளயா? ஆனா நீங்க பிரியப்பட்டா போயிட்டுவாங்கோ.’

‘அப்படிச் சொல்லு. சிவசாமி, சின்ன வயசிலே என் தாத்தா என்ன பண்ணுவார் தெரியுமா?’

‘அடிக்கடி சலூனுக்குப் போவாரா?’

‘ச்சீ, வாயை ஆசிட் விட்டு அலம்பு. அவரெல்லாம் வாசத் திண்ணையிலேதான் வெட்டிப்பார். அதுவும், 28-ம் நம்பர் பாம்பு பஞ்சாங்கத்திலே நாள் பார்த்து, ஹோம் விசிட்டா வரும் குப்பன்கிட்டேதான். அதோட விடுவாரா? என்னோட தலையைச் சுத்தி போட்ட கோடு அவர் கண்ணுக்கு மட்டும் தெரியும். வளரும் முடி அதை இம்மி அளவு தாண்டித்துனாக்கூட, ஜீபூம்பா பூதம் மாதிரி குப்பன் பொட்டியோட வந்துடுவான். சினிமா டைரக்டரா, அப்பப்போ கட் கட்டுனு சொல்லாம, இன்னும் இன்னும் வெட்டு. வெட்டுன்னு குப்பனுக்கு கட்டளை போடுவார். ஆனா, அவனோட முள்ளம் பன்றி ஸ்டைல்லேதான் இப்போ பாதி பேர் வெட்டிக்கறாங்க.’

‘அதுவும் பாதித் தலை முள்ளம் பன்றி. மீதித் தலை புல் சமவெளியா இருக்கணும்.’

‘சரியாச் சொன்னேடா. நீ அது மாதிரி எல்லாம் வெட்டிண்டு வராதே. அப்புறம் உன்னை மேற்கு மாம்பல எல்லைக்குள்ளேயே வர விடமாட்டேன்.’

‘அண்ணா, செய்யமாட்டேன்னு ஒரு உறுதிமொழி வேணா தந்துடறேன். என் தலையை விடுங்கண்ணா. நீங்க சலூன் போகணும்னு சொன்னேளே? கிளம்புங்கோ. உங்க தாத்தா கிழிச்ச கோட்டை முடி தாண்டிடப்போறது.’

‘போடா அசத்து’.

*

சலூனிலிருந்து திரும்பிவந்த பஞ்சாமியைப் பார்க்க சிவசாமிக்குத் தைரியம் வரவில்லை. தலை, குத்திக் குதறின முள்ளம்பன்றியா இருந்து சிரிப்பை மூட்டிவிட்டு விடப்போகிறதே என்கிற அச்சத்தினால்தான். இருப்பினும், ஓரக்கண்ணால் பார்த்தான்.

‘வெட்டும்போது கண் அசந்துட்டேளா, அண்ணா?’

‘ஏண்டா? குத்திக் கொதறிட்டானா?’ பரண் மேலே இருக்கிற பாச்சை அரிச்ச புஸ்தக அட்டை மாதிரி இருக்கா? இருந்துட்டுப் போகட்டும். இந்த வயசுக்கு கம்பீரம் இருந்தா போறும். காந்தம் வேண்டாம்.’

‘சூப்பர் ஒன் லைனர் அண்ணா.’

‘சிவசாமி, ஒன் லைனர், பிரேக் லைனரை எல்லாம் விடுடா. இன்னியோட சலூன் கதையைக் கேளு. போன தடவை போனபோது, என் தலையை பகதூர் வெட்டினான். சொந்த ஊர் திபெத்தாம். யாரான, குமாரு, டில்லிபாபுன்னு நம்ம ஆளுங்க வெட்டறச்சே, எடப்பாடி, ஓ.பி.எஸ்., வைகோ, பினராயின்னு பேச்சு கொடுக்கலாம். அதான் இல்லியே? அதனாலே, பக்கத்து நாற்காலியில் உக்காந்து முடி வெட்டிக் கொண்டிருந்தவனோட கதை காதிலே விழுந்தது. பையன் மூஞ்சியிலே சாப்ட்வேர் களை. வெட்டறதை நிறுத்தச் சொல்லிட்டு, மொபைலில் வந்த போன் காலை அட்டெண்ட் பண்ணிப் பேசினான். காதிலே விழுந்த மேட்டர் என்னன்னா, அவனுக்கு ஒரு பொண்ணை நிச்சயம் பண்ணி நிச்சயதார்த்தம்கூட ஆயிடுத்தாம். பேரு பானுவோ, ஜானுவோ ஏதோ சொன்னான். கல்யாணத்துக்கு முன்னே பேசிப் பழகும் படலத்திலே, ஒரு தடவை இந்திப் படத்துக்குப் போனாங்களாம். அது ஷாருக்கான் படமாம். பொண்ணு அந்த நடிகரைப் பாத்து பொங்கி வழிஞ்சிதாம். ‘உனக்கு இந்தி தெரிமா? ஷாருக்கைப் பிடிக்குமா’ன்னு கேட்டுதாம். இவன், ‘தெரியாது, பிடிக்காது’ன்னு சொன்னானாம் இந்தி தெரியாதவனையும், ஷாருக்கைப் பிடிக்காதவனையும் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு சொல்லி, கல்யாணத்தை கான்சல் பண்ணிடுத்தாம். சிவசாமி, இதென்ன கண்றாவிடா? ஷாருக்கான் மாதிரி, இந்தப் பையனோட ஓடற ரெயில் கூரை மேல ஏறி, ‘தையத் தையத் தையா, தக தையத் தைய தையா’னு ஆடப்போறாளான? கீழே விழுந்தா 32 பல்லும் போயிடும். பாவம்டா அந்தப் பையன்.’

‘அண்ணா அந்தப் பையன் பேரு என்ன சொன்னேள்?’

‘விஷால்னு காதிலே விழுந்தது. அதை விடுடா? ஹீட்டரை ஆன் பண்ணினியா?’

*

‘சிவசாமி, எங்கேடா போயிருந்தே? அட கிராப் வெட்டிண்டு வந்தியா? சூப்பரா வெட்டி இருக்கானே? எங்கேடா? சுந்தரி அழகு நிலையம் தானேடா? நர்ஸரி ஆளுங்க சீரா லானை வெட்டினா மாதிரி இருக்கே. யாரோட கைங்கர்யம்? பகதூரா பழனியா? இல்லே, வேற யாரானவா?’

‘ராமேந்தரன், அண்ணா. ராமச்சந்திரனைத்தான் அப்படி அமுக்கி கேரள மக்கள் சொல்லுவாங்க. சலூன்லே எப்பவுமே கதைகள் கிடைக்கும். உங்க சலூன் சகா விஷாலுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சாம் தெரியுமா?’

‘அதிலே என்னடா அதிசயம். சாப்ட்வேர் இன்ஜினீயர். ஆள் ஜம்முன்னு இருக்கான். நல்ல உயரம். அவனுக்கு கல்யாணம் நிச்சயம் ஆனதிலே என்ன ஆச்சரியம்?’

‘முழுசா கேளுங்கோ. அந்த ஷாருக்கான் ரசிகை பானுவோடதானாம்.’

‘அட, அவ, இந்தி தெரியாது, ஷாருக்கானைப் பிடிக்காதுங்கிறதாலே வேணாம்னு சொன்னவளாச்சே. இப்ப எப்படி டிராக் மாறினா?’

‘அண்ணா, நடந்தது இதுதான். மூணு மாசத்துக்கு முன்னே நீங்க பகதூர் கிட்டே தலை வெட்டிக்கப் போனபோது, பக்கத்திலிருந்து பேசிண்டிருந்த பையன்தான் விஷால். அவனுக்கு தலை வெட்டிண்டிருந்த ராமேந்திரன், அவன் சோகக் கதையைக் கேட்டு வெம்பிப் போனானாம்? ராமேந்திரன் என்ன செஞ்சான் தெரியுமா?’

‘ஓ! பானு வேண்டில்லா. வேற பெண்குட்டி கிட்டும்’னு பறஞ்சானா?’

‘இல்லேண்ணா. விஷாலுக்கு ஓய்வு நேரத்திலே ட்யூஷன் எடுத்து 60 நாளிலே ஹிந்தி பேசக் கத்துக்கொடுத்தானாம். ராமேந்திரனுக்கு ஹிந்தி அத்துப்படியாம். அப்படியே ஹிந்தி சினிமா டயலாக்கை ஓரளவு புரிஞ்சிக்கிற ஞானப்பாலையும் ஊட்டினானாம்.’

‘மெய்யாலுமா?’

‘ஆமாண்ணா.’

‘நெஜமாவா?’

‘அண்ணா, உங்களுக்கு எமிங்வே தெரியுமா?’

‘எமிங்வேயா? பிராட்வேதான் தெரியும். டவுன்லே பூக்கடைப் பக்கம். அங்கேதான் ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோம், ஆரிய பவன் ஓட்டல் எல்லாம் உண்டு. இப்போ இருக்கா தெரியலே?’

‘பிராட்வே இல்லேண்ணா. எமிங்வே! எர்னஸ்ட் எமிங்வே. எழுத்துக்கு நோபல் பரிசு வாங்கினவர். அவரோட மொத்த வொக்காபுலரியே 300 வார்த்தைகளுக்குள்ளாம். அப்படி இருக்கும்போது மொகபத், காந்தான், இஷ்க், ஷாதி, அரே-யார், உல்லுக்கே பேட்டா வார்த்தைகளைப் புரிஞ்சிண்டு, ஹிந்திப் படத்தை புரிஞ்சிக்க முடியாதான?’

‘ஆமாண்டா. அத்தோட புதுசா கல்யாணம் ஆனா, படத்தை யாரு பாத்துண்டு இருக்கப்போறா, இல்லியா?’

‘அ-ண்-ணா!?

‘தமாஷ் பண்ணினேன்டா.’

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com