14. நரக வேலையும் நடைப்பிண வாழ்வும்

விடியவே விடியாத இரவின் அடர்த்தி கூடும்படி அலாரம் அடிக்கிறது. முட்கள் கைகளை
14. நரக வேலையும் நடைப்பிண வாழ்வும்

The Employment (2008) / El empleo /Director:  Santiago Bou Grasso

விடியவே விடியாத இரவின் அடர்த்தி கூடும்படி அலாரம் அடிக்கிறது. முட்கள் கைகளை அகலத் திறந்திருக்கிறது. யுகத்தின் கணம் அதிகரிக்க தினத்தின் முகம் கோரம் காட்டுகிறது. படுக்கையிலிருந்து எழுந்த அவர் மனித உருவில் நின்று கொண்டிருக்கும் மின்விளக்கை போடுகிறார். முகச்சவரம் செய்கிறார். முகமில்லா மனிதர் ஒருவர் அவருக்கு முகம் பார்க்கும் கண்ணாடியை காட்டுகிறார்.  உடை உடுத்துகிறார். மூன்று பேர் உணவு மேஜை நாற்காலியை போல இருக்கையாக இவர் அதன் மீது அமர்கிறார். காலை சிற்றுண்டி உண்ணுகிறார். மேல்கோட் மற்றும் பெட்டியை எடுக்கிறார். கோட் ஸ்டேண்டாக நிற்கும் பெண்ணின் வாயிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் அலுவலக அறைச் சாவியை எடுக்கிறார்.

தார்ச்சாலைக்கு வந்து டாக்ஸிக்காக டாக்ஸி ஸ்டேண்டில் நின்று கொண்டிருக்கிறார். கால்கள் சாலையில் உருளுவதைப் போல ஓட்டமெடுக்கின்றன. ரோடு சிக்னல் கம்பத்தில் சிவப்பு விளக்காக ஒரு மனிதர் தொங்கிக் கொண்டிருக்கிறார். அருகே பச்சை விளக்கு போன்று வேறொரு மனிதர் சட்டை அணிந்து தொங்கிக் கொண்டிருக்கிறார். கோட்டைத் திறந்து பச்சை சட்டையைக் காட்ட வாகனங்களைப் போல நின்று கொண்டிருக்கும் மனிதர்களை உப்பு மூட்டைகளைப் போல முதுகில் ஏற்றிக் கொண்டிருக்கும் மனிதர்கள் ஓடுகிறார்கள். கடிகாரத்தில் மணி பார்க்கிறார்.  அலுவலகத்திற்கு வந்து சேருகிறார்.

வாசலில் மனிதக்கதவு இடது-வலது விலகி வழிவிடுகிறது. லிஃப்ட்டில் ஏறி மேலே போகிறார். அருகில் ஒரு பெரிய மனித உருவம் லிஃப்ட் மேலேற ஏற அது இறங்கிக்கொண்டு வருகிறது. இவர் அலுவலக அறைத் தளத்திற்கு வந்து சேருகிறார். அங்கு இவர் தனது மேல் கோட்டையும் பெட்டியையும் கழட்டி தனது ரேக்கில் மாட்ட அதை ஒரு பெண் உருவம் தனது கைகளால் ஏந்திக் கொள்கிறது. இவர் தனது டையை இறுக்கிக்கொண்டே நடந்து போகிறார். பாஸின் அறைக்கு முன்னே நீட்டி சாஷ்டாங்கமாக படுத்துக்கொள்கிறார். இவரின் பாஸ் வருகிறார். தனது பூட்ஸ் காலில் படிந்திருக்கும் அழுக்கை கீழே படுத்திருக்கும் அந்த ‘அவர் மீது துடைத்துவிட்டு தன் அறையுள் நுழைகிறார். பாஸின் அறை வாசலின் முன் தொடர்ந்து ஒரு கால் மிதியைப் போல படுத்திருக்கும் அந்த அவரோ பெருமூச்செறிகிறார்.

திரை இருள தலைப்புகள் நகர்ந்து முடிகின்றன. கடைசியில் நம்மவர் நிற்கும் மின்விளக்காக நின்று கொண்டிருக்கிறார். தன் தலையில் மாட்டப்பட்டிருக்கும் அலங்கார விளக்கை கழட்டியெறிந்துவிட்டு வெடுக்கென்று மிடுக்காக நடந்து போகிறார்.

ஏனோ இக்கணம் இக்கவிதை மனதில் மேலெழுகிறது.

சொல்வது நமது ஆனந்த்

ஆனந்த் சொல்கிறார்

தான் ஒரு வர்த்தக காலனியில் குடியிருப்பதாகவும்

அதன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முகவர்களே

குறிப்பிட்ட சமூக நிறுவன எல்லைகளை

பாதுகாத்துக் கொண்டிருப்பதாகவும்

ஒருவனது தேசம் என்பதே

கற்பிதம் எனச்சொல்லும் அவர்

ஒரு இறக்குமதி கார் வைத்திருக்கிறார்

காலனியில் இளம்பெண்கள்

இலவசமாகக் கிடைப்பதாகக் கூறுமவர்

தான் ஒரு சக்கரை நோயாளி எனவும்

தனியார் கம்பெனி ஒன்றில் முப்பதாயிரம்

சம்பளம் பெறுவதாகவும்

அவ்வப்போது நட்சத்திர விடுதிகளில்

கேளிக்கைக்கிடையே பலகோடி பேரத்தில்

ஈடுபடும்போது தன்னால் எதையும்

அனுபவிக்க முடியவில்லை எனவும்

அங்கலாய்த்துக் கொள்கிறார்

கோட் சூட்டோடு வாசனைத் திரவியம் பூசி

வரவேற்பறைப் பெண்களிடம் தன்னால்

பாலியல் குறும்பு மட்டுமே பண்ண முடிகிறது

என உதட்டைப் பிதுக்கும் ஆனந்திற்குச் சுமார்

நாற்பத்தைந்து வயதிருக்கலாம்

ஆண்டவன் எல்லாவற்றையும் அளந்துதான்

வைத்திருக்கிறான் எனத் தத்துவம் சொல்லும்

ஆனந்த் தன்னை ஒரு அமெரிக்கன் என்றே

குறிப்பிட விரும்புகிறார்

ஏழ்மையும் படிப்பறிவுமற்ற ஒரு காலனியில்

வர்த்தகக் குறியீட்டு எண்

அடிக்கடி சரிவது இயல்பானதுதான்

எப்படியும் மக்கள் உயிரோடிருக்கும் வரை

உற்பத்திக்கும் உடலுக்கும் வாங்குதிறனுக்கும்

புதிய குழந்தைகள் பெரியவர்களாகும் வரை

ஒரு காலனி என்பது

இயல்பூக்கமற்ற மந்தைகளின் நோய்த் தொகுதிதான்

எனப்பெருமூச்சு விடும் அவர்

கடவுளும்கூட ஒரு அமெரிக்கர்தானே

எனச்சொல்லி அட்டகாசமாகச் சிரிக்கிறார்

- யவனிகா ஸ்ரீராம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com