11. பிராணனற்ற பிரதிபிம்பங்கள்

2002-ஆம் ஆண்டின் அகாதெமி அவார்டு லைவ் ஆக்சன் குறும்படப் பிரிவில் நாமினேட் செய்யப்பட்ட ‘காப்பி ஷாப்’
11. பிராணனற்ற பிரதிபிம்பங்கள்

‘My Life is very monotonous,’ the fox said. ‘I hunt chickens’; men hunt me. All the hickens are just alike, and all the men are just alike. And, in consequence, I am a little bored.’

-Antoine de Saint – Exupery, The Little Prince

COPY SHOP (2001) /  DIRECTOR VIRGIL WIDRICH

2002-ஆம் ஆண்டின் அகாதெமி அவார்டு லைவ் ஆக்சன் குறும்படப் பிரிவில் நாமினேட் செய்யப்பட்ட ‘காப்பி ஷாப்’ என்ற இந்த குறும்படத்தை இயக்கியவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்த விர்ஜில் விட்ரிக். வசனங்களற்ற இக்குறும்படம் ஒரு ஜெராக்ஸ் கடை ஊழியர் தவறுதலாக தன்னை ‘போல’ப்பிரதி எடுத்துவிடுவதையும் ஒவ்வொரு நாளும் மாற்றமில்லாமல் அதே ‘போல’ இருப்பதையும் அனுபவிக்கிறார். பூக்கடை பணிப்பெண் மட்டுமே அவன் வாழ்வில் பங்கெடுக்கும் ஒரேயொரு மனுஷி. சமூக யதார்த்தத்திலிருந்து மேலும் மேலும் விலகிப்போகும் அவன் அம்மனநிலையிலிருந்து வெளியேறுகிறான். அவனின் அகமனதுள் விழுகிறான். தன் அடையாளத்தை இருப்பை இழக்கிறான். டைம் லூப்பில் ஊடாடும் சர்ரியலிச க்ளோனிங் போட்டோக்ராப்பாக உறைநிலைக்கு மாற்றமடைகிறது இவனின் வாழ்வு.

பதினெட்டாயிரம் போட்டோ காப்பி ஃப்ரேம்களால் வடிவமைக்கப்பட்ட இக்குறும்படம் பதினோரு நிமிட நாடகீயத்தை உள்ளடக்கமாகக் கொண்டது. கம்பி வாத்திய  கருப்பு-வெள்ளை அழகியல் மிளிர மௌனப்பட குணங்களை கொண்ட இக்குறும்படம் ‘பிரதிபலிப்பு அழகியல்’ கூறுகளை வெளிப்பாடாகக் கொண்டிருக்கிறது. இது போஸ்ட் மாடர்னிஸக் கூறான செல்ஃப் ரிஃப்லெஃஸிவிட்டியை ஒத்தது. முதலில் டிஜிட்டல் கேம்கார்டரில் ஷூட் செய்யப்பட்டு இதன் ஃபுட்டேஜ் கம்ப்யூட்டருக்கு மாற்றப்பட்டு எடிட் செய்யப்பட்டது. பின்னர் அதிலிருந்து ஒவ்வொரு ஃப்ரேமும் அச்சிடப்பட்டு போட்டோ காப்பி எடுக்கப்பட்டு 35mm கேமராவில் அதன் இயக்கங்கள் காட்சிகளாக படம் பிடிக்கப்பட்ட்து. போட்டோ காப்பி பேப்பர்கள் கசக்கப்படுவதும் கிழிக்கப்படுவதும் போன்ற டெக்னிக்குகள் இன்டெர்டெக்சுவாலிட்டியாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மிக முக்கியமாக இதன் சப்த அமைப்பு காஃப்காயேஸ்க் அனுபவத்தைக் கொடுக்கும்.

உலகம் முழுவதுமே அரசியல் பொருளாதாரக் காரணங்கள் பிரபஞ்ச வாழ்வை தட்டையாக ஒடுக்கிக்கொண்டு வரும் நிலையில் பன்முகத்தன்மை அசுரகதியில் தேய்ந்து வருகிறது. இதைப் பிரதிபலிக்கிறான் இக்குறும்படத்தின் முதன்மைக் குணாளன். பீட்டர் ஹன்ட்கேவையும் விம் வெண்டரையும் அண்டை வீட்டாராகக்கொண்ட விர்ஜில் விட்ரிக் தனது  சூப்பர்-8 கேமராவில் பதிமூன்று வயதில் படம்பிடிக்க ஆரம்பித்தவர். வியன்னா ஃபிலிம் அகாதெமியில் பயின்ற இவர் தேர்ந்த திரைப்பட விழா விருது குறும்பட அனுபவங்களுக்குப் பிறகு அமோர் ஃபொள ஃபிலிம் என்ற கலைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை  நண்பர்களுடன் சேர்ந்து நடத்தி வருகிறார்.

திரையில் காப்பி  ஷாப் என்று ஜெராக்ஸ் மெஷின் இரு முறை இழுக்கிறது. மெஷினின் மின் விளக்கின் வெளிச்சம் தேய்ந்து மறைகிறது. மெஷின் வேகமெடுக்கிறது. ஒருவன் தனது வீட்டின் படுக்கையறையில் தூங்கிக்கொண்டிருக்கிறான்.காட்சிகள் அருகாமையை  நோக்கி நகர்கின்றன. புரண்டு படுக்கும் அவனின்  அலுப்பை ஆழ்ந்த உறக்கத்தை அலாரம் அடித்துக் கலைக்கிறது. சோம்பல்  முறித்து படுக்கையிலிருந்து எழும் அவன் குளியலறை வாஷ்பேஷினில் முகம் கழுவுகிறான். கண்ணாடியில் முகம் பார்க்கிறான். முடியைக் கோதுகிறான். மாடியிலிருந்து இறங்கி வீதிக்கு வருகிறான். வீதியில் நாளிதழைப் படித்துக்கொண்டு ஒருவரும் நாயோடு வாக்கிங் போகும் ஒருவரும் பூக்கடையில் வேலை செய்யும் இளநங்கை ஒருத்தியும் இவனின் பார்வையில் படுகின்றனர். இளநங்கை இவனைப் பார்த்து புன்னகை பூக்கிறாள். இவனும் பதிலுக்கு புன்முறுவல் காட்டிவிட்டு அங்கிருந்து நகர்கிறான். இவன் வேலை செய்யும் கடைக்கு வருகிறான்.

காப்பி ஷாப் என்ற ஜெராக்ஸ் கடை அது. அலமாரியிலிருந்து பேப்பர்களை எடுத்து  ஜெராக்ஸ் மெஷினில் காப்பி போடுகிறான். கடுமையான சத்தத்துடன் இயங்கும் அது வினோதமான காரியம் ஒன்றையும் செய்கிறது. தவறுதலாக உள்ளங்கையை  வைத்துவிடும் அவன் அதிர்ச்சியாகும்படியாக அதை நகலெடுக்கிறது. மேலும் அந்நாளின் செயல் ஒவ்வொன்றையும் பின்னோக்கி பிரதியெடுக்கிறது. அலாரம் அடித்து எழுந்தது; முகம் கழுவி கண்ணாடியில் பார்த்தது என காலம் பின்னோக்கி நகர்கிறது. வயலின் தாறுமாறாய் இசைக்க இடைவெட்டாக காட்சிகள் கத்தரியில் மின்னல் வெட்டுகின்றன. இவனோ  மெஷினின் ஓட்டத்தை நிறுத்திவிட்டு அந்தப் பிரதிகளை கொண்டுபோய் மறுபடியும் அதே அலமாரியில் வைத்துப் பூட்டுகிறான்.  கடையை பூட்டிவிட்டு  வீடு திரும்புகிறான்.  மீண்டும் படுக்கையிலிருந்து எழும் அவன் அதே நிகழ்வுகளை அனுபவிக்கிறான். முகம் கழுவி கண்ணாடியைப் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது அவனின் பிரதியொன்று இவன் தூங்கியெழுந்த படுக்கையிலிருந்து இவனைப்  போலவே துயிலெழுகிறது.. இவனோ ஓடிப்போய் திரைச்சீலையின் பின்னால் ஒளிந்துகொள்கிறான்.

பிரதி இவனைப்போலவே புறப்பாடு செய்து அதேபோல் காலை நிகழ்வுகளை நிகழ்த்துகிறது. இவன் அந்த உருவத்தை, அதாவது அவனையே பின் தொடர்கிறான். ஜெராக்ஸ் கடையில் அதேபோல போட்டோகாப்பி எடுக்கிறது அது. அதில் ஜன்னல் வழியே இப்பிரதியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரிஜினலுக்கு அதிர்ச்சி. பிரதியின் கையில் ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்கும் ஒரிஜினலின் புகைப்படமாய் காப்பி வர தற்போது பிரதிக்கு அதிர்ச்சி. ஒரிஜினல் உள்ளே வர பிரதி மறைந்து போய்விடுகிறது. ஜெராக்ஸ் மெஷின் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. தற்போது அது ஒரிஜினலின் முகத்தையே அப்பிரதியைப் பார்த்துக்கொண்டு இருப்பது போல் காப்பி போடுகிறது. மீண்டும் அதே போல் கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்கு  வர கதவு ஏற்கனவே திறந்திருக்கிறது.

சாவித் துவாரத்தின் வழியே ஒரிஜினல் எட்டிப் பார்க்க அங்கே மேலும் ஒரு  பிரதி அவனைப் போலவே அவன் படுக்கையில் தூங்கிக் கொண்டிருக்கிறது. இவனைப் போலவே அல்லது முன்னே  கிளம்பிய  பிரதியைப் போலவே இதுவும் கிளம்புகிறது ஜெராக்ஸ் கடையை நோக்கி. கதவைத் திறந்து உள்ளே வரும் இவனை எதிர்கொண்ட அப்பிரதி அதிர்ச்சியாகிறது. இருவரும் மேலும் இரு பிரதிகள் அவ்வீட்டில் ஒளிந்திருப்பதை கண்டுபிடிக்கின்றனர். தற்போது அலாரம் அடிக்க  இவர்களைப் போலவே  துயிலெழுகிறது. ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கின்றனர். ஒரிஜினல் அப்பிரதிகளிடமிருந்து தப்பியோடி வர வீதியில் முன்பு சந்தித்த பேப்பர் மனிதர் நாய் வாக்கிங் செல்லும் மனிதர் பூக்கடை இளநங்கை ஆகிய அனைவரும் இவனைப் போலவே மாறிவிடுகின்றனர்.

கடைக்கு  வருகிறான். அங்கே இவனுக்கு முன்னமே வந்து காத்திருக்கும் பிரதிகள் நின்று கொண்டிருக்கின்றன. உள்ளே போய்ப் பார்த்தால் பிரதிகள் அனைத்தும் ஜெராக்ஸ் மெஷினில் பிரதிகள் எடுத்துக் கொண்டிருக்கின்றன. மேலும் ஒரு பிரதி இவனைப் போலவே தன் உள்ளங்கையை பிரதியெடுக்க அங்கிருக்கும் பிரதிகளனைத்தும் அதேபோல தங்கள் உள்ளங்கைகளை பிரதியெடுக்கின்றன. இவன் போய் மூலப்பிரதியின் செயலை உற்று நோக்க அது ஜெராக்ஸ் மெஷினின் பிளக்கை பிடுங்கிக்கொண்டு தான் போட்ட பிரதிகளை எடுத்துக் கொண்டு கடையை விட்டு வெளியே ஓடுகிறான்.

வீதியில் இவனின் அந்த மூலப் பிரதியை துரத்துகிறார்கள் அப்பிம்பங்கள். இவனும் அவைகளோடு சேர்ந்து தப்பித்து ஓடும் மூலப் பிரதியை வீதியில் மற்றும் பிரதிகள் உணவருந்தும் ரெஸ்டாரண்டில்  என்று மாறி மாறி துரத்துகிறான். நகரத்தின் பெரிய ஆலையொன்றின் படிகளில் ஏறி நின்று அம்மூலப்பிரதி அனைவரையும் அதிர்ச்சியோடு உற்றுப் பார்க்கிறது. ஒரிஜினல் மூலப்பிரதியைப் போலவே வேறொரு ஆலைத்  தூணின் மீது ஏறுகிறது. தடுமாறி அங்கிருந்து கீழே விழ தரையில் நின்று கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான பிம்பங்களில் ஒன்றின் மீது விழுந்து நொறுங்குகிறது. இவன் இதை மற்றொரு தூணின் மீது நின்றுகொண்டு பேரதிர்ச்சியுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான். திரை இருள்கிறது.

இயக்குனர்<strong> </strong>விர்ஜில் விட்ரிக்
இயக்குனர் விர்ஜில் விட்ரிக்

ஏனோ இக்கணம் இக்கவிதை மனதில் மெல்ல மேலெழுகிறது.

எல்லை

அலை வறண்டது கடல்.
ஒளி வறண்டது வான்.
உயிர் வறண்டது காற்று.

நிலமெங்கும் சருகுகள்.
நெய்தவனே பிணமாகித் தொங்கக்
கிழிந்துபட்டது சிலந்திக்கூடு.

தெரிகிறது சாவின் பாசறை.
திரும்பாது இனி என் படை.

- ராஜா சுந்தரராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com