13. வெறுப்பின் சிதைவும் அன்பின் ஒழுங்கமைவும்

2009-ஆம் ஆண்டின் லைவ் ஆக்சன்  குறும்படப் பிரிவில் ஆஸ்கார் விருதைப் பெற்றிருக்கும் ‘டாய் லேன்ட்
13. வெறுப்பின் சிதைவும் அன்பின் ஒழுங்கமைவும்

Toyland (2007) / Spielzeugland / Director: Jochen Alexander Freydank

2009-ஆம் ஆண்டின் லைவ் ஆக்சன்  குறும்படப் பிரிவில் ஆஸ்கார் விருதைப் பெற்றிருக்கும் ‘டாய் லேன்ட்’-ஐ இயக்கியிருப்பவர் ஜோச்சன் அலெக்சாண்டர் ஃப்ரெய்டங்க்.

பியானோவை இசைக்கும் விரல்கள். இசைத் துணுக்கிலிருந்து இடம் பெயர்ந்து ரயில் பொம்மை தண்டவாளங்களில் பிரயாணிக்கிறது மனம். ஹெய்ன்ரிக் என்று அன்போடு, துயிலும் மகனை எழுப்புகிறாள் தாய். உருவம் ஜோடிக்கப்பட்டிருக்கிறது. படுக்கையில் மகன் இல்லை. பின் ஏதோ நினைவு வந்தவளாக அவசரமாக வீட்டிலிருந்து வெளியேறுகிறாள். அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மற்றொரு வீட்டிற்குள் போகிறாள். அங்கு யாரும் இல்லை. உடமைகள் அலங்கோலமாக சிதறடிக்கப்பட்டிருக்கின்றன. காலி செய்யப்பட்டிருக்கிறது அவ்வீடு. வேகவேகமாகப் படியிறங்கிப் போகிறாள் அந்த இளம் தாய். பொம்மை நிலம் என்று தலைப்பு தோன்ற சுழற்படிகள் மங்கலாகின்றன.

பியானோ வகுப்பு. நீண்ட நேரம் பயிலும் தன் மகன்களை கண்டு உவகை கொள்ளும் அண்டை வீட்டு நட்புத் தாய்மார்கள். ஒவ்வொரு நாளும் மெருகேறி வருகிறார்கள் இல்லையா? என்று டேவிட்டின் தாய் சொல்ல ஹெய்ன்ரிக்கின் அம்மையோ அதை பேரனுபவம் என்று சொல்கிறாள். குழந்தைகள் இருவரும் ஒருங்கிணைந்து பியானோவை இசைத்துக் கொண்டிருக்கிறார்கள். அருகில் கவனமுடன் லயித்துக் கொண்டிருக்கும் இசை ஆசிரியரான டேவிட்டின் தந்தையார்.

இதுபோல் டேவிட் தொடர்ந்து இசைக்க முடியும் என்றால் எப்படியிருக்கும் என்று டேவிட்டின் தாய் பக்கத்து வீட்டு ஹெய்ன்ரிக்கின் அம்மாவிடம் சொல்ல ஹெய்ன்ரிக்கின் அம்மா டேவிட்டின் அம்மாவை மனபாரத்துடன் கூடிய ஆச்சரியத்துடன் உற்றுப்பார்க்கிறாள். ஆமாம் அவர்கள் நாளை வரை மட்டுமே காலக்கெடு கொடுத்திருக்கிறார்கள் என்று சோகமாக பதில் சொல்கிறாள் டேவிட்டின் அன்னை.

அன்னையரின் பேச்சை தொந்திரவாக கருதும் பிள்ளைகள் சற்று நேரம் அமைதியாக இருங்கள் என்று கெஞ்ச வெளியே வீதியில் துப்பாக்கிச் சூட்டின் சப்தம் கேட்கிறது. சுடுபவனின் குரலில் யூதக் கசப்பின் விஷம் தோய்ந்திருக்கிறது. இன்று நன்றாக வாசித்தீர்கள் என்று பியானோ குருநாதர் டேவிட்டின் தகப்பன் பெருமூச்சுடன்  பாராட்டுகிறார். குழந்தைகள் இருவரும் குதூகலமாக ஓடிப் பிடித்து விளையாடுகின்றன. அது என்னுடைய இசை என்று அதிலொருவன் சொல்கிறான்.

அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து வேகமாக படியிறங்கி வரும் ஹெய்ன்ரிக்கின் அம்மா தெருவில் ஒரு பெரியவர் மறிக்க தேங்குகிறாள். என்ன இவ்வளவு அவசரம் என்று கேட்கும் அவரிடம் என் மகனைப் பார்த்தீர்களா என்று கேட்கிறாள். சில்பெர்ஸ்டெய்ன்ஸ் மட்டும் விடைபெற்று வெளியேறுகிறார்கள் வேறொன்றும் பெரிதாக நடந்தேறவில்லை என்று பெரியவர் சொல்ல அவரின் மனைவியும் இது ஹெய்ன்ரிக்கிற்கும் நல்லது என்று சொல்கிறாள். ஹெய்ன்ரிக்கின் தாய் டெடி பெயரைக் கொடுக்கும் பெரியவரை மறுத்துவிட்டு ஓடுகிறாள்.

உணவு மேஜை. ஹெய்ன்ரிக்கு பரிமாறுகிறாள் அவனின் அம்மா. மிஸஸ்.சில்பெர்ஸ்டெய்ன் ஏன் இன்று சோகமாக இருக்கிறாள் என்று ஹெய்ன்ரிக் கேட்க அவர்கள் பிரயாணம் போகப் போகிறார்கள் என்று மழுப்புகிறாள். பிரயாணமா? எங்கே? என்று இவன் கேட்க அவளோ பொம்மை உலகத்திற்கு என்று சொல்கிறாள். பொம்மை உலகத்திற்கா! நானும் அங்கு போக ஆசைப்படுகிறேன் என்று இவன் சொல்ல அவளோ அது முடியாத காரியம் என்றும் அமைதியாக சாப்பிடு என்றும் அதட்டுகிறாள். இவனோ கோபித்துக்கொண்டு அப்பாவாக இருந்தால் என்னை அங்கு போக அனுமதிப்பார் என்று அழுத்தமாக கூற இவளோ அவனுக்கு என்ன பதில்  சொல்வதென்று புரியாமல் தடுமாறுகிறாள்.

ஹெய்ன்ரிக்கின் தாய் தெருவில் மகனைத் தேடி ஓட்டம் எடுக்கிறாள். தான் ஆறுவயது சிறுவன் ஒருவனை தேடியலைந்து கொண்டிருப்பதாகவும் அவனை வழியில் எங்கும் கண்டீர்களா என்று  நாஜி அதிகாரி ஒருவரிடம் வினவ அவரோ யூதரா? என்று கேட்க இவளோ இல்லையென்று மறுக்கிறாள். பின் கவலைப்படாதீர்கள் யூதர்களைத்தான் ரயிலில் ஏற்றிக்கொண்டிருக்கிறோம் என்று தைரியமூட்டுகிறார்.

மாடிப்படியில் நெற்றியில் அடிபட்டு அமர்ந்திருக்கும் டேவிட்டின் அப்பா ஹெய்ன்ரிக்கிடம் வழியில் காண்டாமிருகம் ஒன்று கலவரம் செய்துவிட்டது யாரிடமும் சொல்லாதே என்று ரகசியம் சொல்ல அவனும் பதிலுக்கு தானும் அவர்களோடு சேர்ந்து பொம்மை உலகத்திற்கு பிரயாணம் செய்யப்போவதாக ரகசியம் சொல்கிறான்.

வீட்டில் உறங்கிக் கொண்டிருப்பவனின் அருகில் புறப்பாடு பெட்டியொன்று இருப்பதை காண்டுபிடித்து அதைக் கலைக்கிறாள் ஹெய்ன்ரிக்கின் தாய். என்னை ஏன் நீ பொம்மை உலகத்திற்குப் போவதற்கு அனுமதிக்க மறுக்கிறாய் என்று தாயிடம் இறைஞ்சுகிறான் ஹெய்ன்ரிக். அது ரொம்ப தூரம் என்று இவள் சொல்ல அதைப் பற்றி எனக்கு கவலையில்லை என்று இவன் கடுப்பாக அவளோ அங்குள்ள டெடி பியர் எல்லாம் பெரிய சைஸில் இருக்கும் என்று பயமுறுத்துகிறாள். லிட்டில் பாலை விடவா? என்று இவன் கேட்க அவளோ ஆமாம் பெரிய பெரியதாக என்று பெருங்கவலையுடன் பெருமூக்சு விடுகிறாள்.

மகனை உறங்கச் செய்துவிட்டு இவள் நகர இவனோ லிட்டில் பால் பொம்மையிடம் இதற்கெல்லாம் நாம் பயப்படமாட்டோம் இல்லையா? என்று வினவுகிறான். வெளிச்சத்தை அணைக்காதே அம்மா என்று இவன் சொல்ல அவளோ பதிலுக்கு புன்னகைக்கிறாள். அதில் பெருங்கணம் ஒன்று காலப்பாதையில் நழுவாமல் தடுமாறுகிறது.

யூதப் பரத்தையே அங்கேயே நில் என்று ஒரு கடுங்குரல் இவள் ரயிலை நோக்கி போக விடாமல் தடுக்கிறது. நான் என் மகனை தேடிக் கொண்டிருக்கிறேன் என்பவளுக்கு நல்லது இனிப்பு இதயமே எங்கே போய்விட்டான் உன் சிறிய நட்சத்திரம் என்று காவலனின் சுப்பீரியர் வினவுகிறான். காவலனோ எங்கே உன் மஞ்சள் நட்சத்திர பேட்ஜ் என்று கர்ஜிக்கிறான். இவளோ குடியுரிமை பேப்பரைக் காட்ட நீ யூதரில்லையா என்று ஆச்சரியத்துடன் இளகுகிறார்கள். என் மகன் இங்குதான் எங்கேயோ இருக்கவேண்டும் என்று அழ ஆரம்பிக்கிறாள்.

ஹெய்ன்ரிக்கில் இரவில் எழுந்து ஜன்னலின் வழியே ஃப்ளாஷ் லைட் பொம்மையில் மின்மினி வெளிச்சம் காட்டுகிறான். அண்டைவீட்டு ஜன்னலிலிருந்து டேவிட் எட்டிப் பார்க்க இவனோ ஏன் நீ பிரயாணம் போகப் போவதை என்னிடம் சொல்லவில்லையென்று கேட்க அவனோ சொல்ல மறந்துவிட்டேன் என்று பதில் சொல்கிறான். நானும் உன் கூட பொம்மை உலகத்திற்கு வருகிறேன் என்று சொல்ல அதற்கு டேவிட்டோ அது உன்னால் முடியாது என்கிறான். நாம் ரத்த சொந்தங்கள் இல்லையா? நாம் எது செய்வதென்றாலும் ஒன்றாகத் தான் முடிவெடுப்போம் இல்லையா? நான் இசையை கொண்டு வருகிறேன் இருவரும் இணைந்தே மீட்டுவோம் என்று ஹெய்ன்ரிக் சொல்லிக்கொண்டே போக டேவிட் பொக்கென்று போய்விடுகிறான். ஹெய்ன்ரிக் தன் படுக்கைக்கு திரும்பி தூங்காமல் விழித்திருக்கிறான். இரவோ ஆழ்ந்த உறை நிலையில் மிதந்து கொண்டிருக்கிறது.

கருப்பு ரயில் தண்டவாளத்தில் மரணப்பாதையை நோக்கி நகர பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது. ஹெய்ன்ரிக்கின் தாய் நாஜி அதிகாரியுடன் அவ்விடம் வருகிறாள். அண்டை வீட்டாரின் பெயரென்ன என்னும் அதிகாரியின் கேள்விக்கு சில்பெர்ஸ்டெய்ன் என்று பதில் சொல்கிறாள். எல்லாப் பணியும் இங்கு சுமுகமாக நடந்து கொண்டு வருகிறது. உன் மகன் அவர்களோடு போக வேண்டுமென்று அடம்பிடித்தானா? என்ற கனமான வினாவுக்கு அவர்கள் நண்பர்கள் என்று பதில் சொல்கிறாள்.

பறவைகள் கீச்சொலி முழங்க தூங்கிக் கொண்டிருப்பவனை ட்ரக் வண்டிகளின் சப்தம் எழுப்பிவிட எழுந்து போய் ஜன்னல் வழியே பார்க்கிறான் ஹெய்ன்ரிக். வீதியில் கலவர முகங்களுடன் யூதர்கள் காலி செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவனோ தன் பெட்டியில் துணிமணிகளை அடுக்கிக்கொண்டு வதைமுகாமிற்கு போகத் தயாராகிக் கொண்டிருக்கும் டேவிட்டை நோக்கி ஓடுகிறான்.

பதற்றமாக ரயில் தண்டவாளத்தில் அதிகாரிகளுடன் விரைகிறாள் ஹெய்ன்ரிக்கின் தாய். ஒரு ரயில் பெட்டியிடம் நின்று அதை திறக்கிறார்கள். ஹெய்ன்ரிக் என்று இவள் ஏக்கமாக தன் மகனை அழைக்க அங்கு அமைதி நிலவுகிறது. சின்னஞ்சிறிய பிஞ்சொன்றின் அழுகுரல் பெரும் ஓலமாய் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஹெய்ன்ரிக் இது ஒளிந்து விளையாடுகிற நேரமல்ல என்று அதிகாரி அதட்டுகிறான். மெல்ல மனிதர்கள் விலக அங்கு சிறுவனொருவன் இசை குடும்பமான மிஸ்டர் அண்டு மிஸஸ் சில்பெர்ஸ்டெய்னை கட்டிக்கொண்டு நிற்கிறான். முகத்தை திருப்ப அது டேவிட். இருவரும் ஒன்று போல உடை அணிந்திருக்கிறார்கள்.

ஹெய்ன்ரிக் நாஜி ட்ரக் வண்டியில் தன் நண்பனோடு போகமுடியாமல் காவலர்களுடன் போராடுகிறான். தன் தாய் தகப்பனோடு பிரிந்து போகிறான் டேவிட். பொம்மை உலகத்திற்கு டேவிட்டுடன் தானும் போக வேண்டுமென்ற மன்றாடல் அம்மண்ணிலேயே கரைந்து போகிறது. இவன் அங்கேயே நிற்க வைக்கப்பட டேவிட் எங்கேயோ அழைத்துச் செல்லப்படுகிறான்.

ரயில் பெட்டியில் மரண பயத்தில் அறையப்பட்டிருக்கும் தாய் தந்தையின் அருகில் மௌனமாக நின்றிருக்கும் டேவிட்டை ஹெய்ன்ரிக்கின் தாய் ஒரு கணம் உற்றுப் பார்த்துவிட்டு வா ஹெய்ன்ரிக் போகலாம் என்று அழைக்கிறாள். மிஸ்டர் அண்டு மிஸஸ் சில்பெர்ஸ்டெய்ன் ஒருவரையொருவர் மௌனமாக பார்த்துக் கொள்கின்றனர். பின்னர் அவனின் முதுகில் ஒட்டப்பட்டிருக்கும் அடையாள அட்டையை சத்தமில்லாமல் கழட்டிவிட்டு ஹெய்ன்ரிக்கின் தாயிடம் அனுப்புகின்றனர். ஒரு நிமிஷம் என்று சொல்லி அனைவரையும் பதட்டத்திற்குள்ளாக்கும் நாஜி அதிகாரி உன் அம்மையைப் போலவே நீயும் அழகாக இருக்கிறாய்; அழகான உன் அம்மாவை அழ வைக்காதே என்று பல்லிளிக்கிறான். பெட்டி மூடப்படுகிறது. டேவிட்டின் பெற்றோர் முகத்தில் இருள் படருகிறது. ரயில் நகர்கிறது. அன்பும் நன்றியும் அவர்கள் முகத்தில் படர டேவிட் ஹெயின்ரிக்காக அந்த ரயில் நிலையத்தை விட்டு வெளியேறுகிறான்.

ஹெய்ன்ரிக்கின் வீட்டில் டேவிட்டும் இணைகிறான். இருவரும் ஒன்றாக பியானோவை இசைக்கிறார்கள். ஹெய்ன்ரிக்கின் அம்மை பார்க்க காலம் கடந்து போகிறது. பியானோவின் மேல் அன்பின் பிம்பங்கள் புகைப்படங்களாய் இசை மீட்டும் நான்கு கைகளின் முன்னும் அமைதியாக வீற்றிருக்க அவ்விசை பிரபஞ்சத்தை தாலாட்டத் தொடங்குகிறது.

ஏனோ இக்கணம் இக்கவிதை மனத்தில் மெல்ல மேலெழுகிறது.

E=mc2

ஒற்றைக் குருட்டு
வெண்விழிப் பரிதி
திசையெங்கும் கதிர்க்கோல்கள்
நீட்டி
வரட்டு வெளியில் வழிதேடி
காலம் காலமாய்
எங்கோ போகிறது.
‘எங்கே?’
என்றார்கள் மாணவர்கள்.
ஒன்பது கோடியே
முப்பதுலெச்சம் மைல்
தூரத்தில்
எங்கோ
ஒரு உலகத்துளியின்
இமாலயப் பிதுக்கத்தில்
இருந்து குரல்கொடுத்து,
நைவேத்தியத்தை
குருக்கள் திருடித் தின்றதினால்
கூடாய் இளைத்துவிட்ட
நெஞ்சைத் தொட்டு
‘இங்கே’ என்றான் சிவன்.
‘அசடு’ என்று
மாணவர்கள் சிரித்தார்கள்.

ஒரு குழந்தை விரல்பயிற்ற
ஐன்ஸ்டீனின் பியானோ
வெளியாய்
எழுந்து விரிகிறது.
மேஜையில் அக்ஷர கணிதத்தின்
சங்கேத நதி!
மனித மனத்தின் மணற்கரையில்
தடுமாறும்
ஒரு பழைய பிரபஞ்ச விருக்ஷம்.
நதி பெருகி
காட்டாறு.
காலமும் வெளியும் ஒருமித்து
ஓடும் ஒற்றை நிழலாறு.
ஒரு புதிய பிரபஞ்சம்.
நேற்று நேற்று என்று
இறந்த யுகங்களில்
என்றோ ஒருநாள் அவிந்த
நக்ஷத்ர கோளங்கள்
ஒளிவேகத்தின்
மந்தகதி தரும் நிதர்சனத்தில்
இன்றும் இருக்கின்றன -
காலமே வெளி!

இன்று கண்டது
நேற்றையது,
இன்றைக்கு நாளைக்கு.
இக்கணத்தின் கரையைத்
தீண்டாத
இப்புதிய புவனத்தின் பிரவாகம்
வேறொரு பரிமாணத்தில்.

விரிந்து
விண்மீன்களிடையே
படர்ந்த நோக்கின்
சிறகு குவிகிறது.
பிரபஞ்சத்தின்
சிறகு குவிந்தால்
அணு.
அணுவைக் கோர்த்த
உள் அணு யாவும்
சக்தியின் சலனம்.
அணுக்கள் குவிந்த
ஜடப்பொருள் யாவும்
சக்தியின் சலனம்.
ஒளியின் கதியை
ஒளியின் கதியால்
பெருக்கிய வேகம்
ஜடத்தைப் புணர்ந்தால்
ஜடமே சக்தி!
மெக்ஸிக்கோவில்
பாலைவெளிச் சாதனை!
1945
ஹிரோஷிமா நாகசாகி.
ஜடமே சக்தி.
கண்ணற்ற
சூர்யப் போலிகள்.
கெக்கலித்து
தொடுவான்வரை சிதறும்
கணநேர நிழல்கள்.
பசித்து
செத்துக் கொண்டிருக்கும்
சிவனின்
கபாலத்துக்
கெக்கலிப்பு.

இசைவெளியின் சிறகுமடிந்து
கருவி ஜடமாகிறது.

பியானோவின் ஸ்ருதிமண்டலம்
வெறிச்சோடிக் கிடக்கிறது.
உலகின் முரட்டு இருளில்
எங்கோ ஒரு குழந்தை அழுகிறது.
ஜன்ஸ்டீனின் கண்ணீர்த்துளியில்
தெறிக்கிறது பரிதி.
ஒரு கணப் பார்வை. 

 - பிரமிள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com