5. நிசப்தமான இரவுகள்

2017-ஆம் ஆண்டின் ஆஸ்கர் அவார்டின் சிறந்த லைவ் ஆக்சன் குறும்படப் பிரிவில்
5. நிசப்தமான இரவுகள்

2017-ஆம் ஆண்டின் ஆஸ்கர் அவார்டின் சிறந்த லைவ் ஆக்சன் குறும்படப் பிரிவில் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது இந்த ‘சைலன்ட் லைட்ஸ்’. உலகம் முழுவதிலும் உள்ள புலம்பெயர்வு அகதிகளின் வாழ்வைப் பற்றிய குறும்படங்கள் இந்த வருடப் போட்டியில் அதிகமாகக் கலந்துகொண்டன.

டென்மார்க்கின் கோபன்ஹேகனில் ஆதரவற்றோர் தற்காலிகமாக தங்கி வெளியேறும் அரசு விடுதியொன்றின்  லட்சியவாத விருப்ப உதவியாளர் இங்கெர் என்ற பெண்ணிற்கும் வறுமையில் உழன்று கானாவிலிருந்து கள்ளத்தோணியில் முறையற்ற புலம்பெயர்வாளனாக வேலை தேடி வந்திறங்கும் க்வாமேவிற்கும் இடையிலான காதலே இக்குறும்படம்.

கிருஸ்துமஸ் தினக் கொண்டாட்டத்திற்கு தயாராகும் டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகன். தேவாலயப் இசைக்குழு பாடல் இரவுக்காற்றில் மிதமாய் மிதந்தலைகிறது.

நிசப்தமான இரவு

ஆன்மீகமான இரவு

எல்லாம் அமைதியாக இருக்கின்றன

எல்லாமும் ஒளிர்கின்றன

புனிதவதியும் அவளின் மறைக் குழந்தையும் நம்முடன் இருக்கையிலே

மிக மிருது மிக மென்மை

சொர்க்கத்தின் அமைதியில் உறங்குக

சொர்க்கத்தின் அமைதியில் உறங்குக

நிசப்தமான இரவு

ஆன்மீகமான இரவு

பின்தொடர்பவர்களின் பிரார்த்தனை

பார்வைகளில்

தூரத்துச் சொர்க்கங்களில்

வழிகிறது தரிசனம்

பாடலின் பின்னனியில் கதிரவன் துயிலெழ கடலில் ஒரு தோணி அசைந்து அசைந்து வருகிறது. அதில் கொள்ளமுடியாத அளவுக்கு கருப்பு மனிதர்களின் பிதுக்கம். அவர்களுக்கு லைஃப் போட் என்கிற பாதுகாப்புக் கவசம் மற்றும் நெகிழிப் போத்தல் தண்ணீர் வழங்கப்படுகிறது. கரைகளில் மீன்கள் ஒதுங்குகின்றன. இரவு நேரம் க்வாமே தெருவோரத்தில் நிறுத்தி பூட்டி வைக்கப்பட்டிருக்கும் ஒரு மிதிவண்டியின் பூட்டை உடைத்துவிட்டு அம்மிதிவண்டியைத் திருடுகிறான். அன்புக்கு ஏங்கும் இங்கெரால் நாய் பொம்மை ஒன்று குழந்தைகளின் அருகில் கிருஸ்துமஸ் பொம்மைக் கொழுவில் நடப்படுகிறது. மென் புன்னகை அவளின் முகத்தில் பூரிப்படைகிறது. அவ்விரவில் க்வாமே குப்பைத் தொட்டிகளிலிருந்து நெகிழிகளையும் கண்ணாடிப் போத்தல்களையும் குளிர்பான தகர டப்பாக்களையும் பொறுக்கிக் கொண்டிருக்கிறான். நீலோற்பவம் வழியும் அவ்விரவில் இங்கெர் முத்தமிடும் இளஞ் ஜோடிகளின் அட்டை பொம்மையை காதலோடு உற்றுப் பார்க்கிறாள். இவனோ கொண்டாட்டம் ததும்பும் அவ்விரவில் பசியில் அலைந்து கொண்டிருக்க அவளோ நிம்மதியாக அவள் வீட்டுப் படுக்கையில் படுத்தவாறு கூரையில் நிறையும் நட்சத்திரங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

இரவு. அகதிகள் தகும் விடுதி ஒன்றில் விருப்ப உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் இங்கெர் அந்த நாள் இரவுக்கான அனுமதியை அளித்துக் கொண்டிருக்கிறாள். கொள்ள முடிந்த அளவுக்கு அகதிகள் அனுமதித்தாயிற்று. இங்கெர் மேலும் வருபவர்களை வாசலில் வைத்து மறிக்கிறாள். இடமில்லை என்று சொல்லச் சொல்ல உள்ளே நுழைய முயற்சிக்கிறான். இங்கெரின் சொல்லை மறுதலிக்கும் அவன் விடுதி நிர்வாகக் காப்பாளன் ஹென்ரிக்கையும் உதாசீனப்படுத்திவிட்டு வெளியேறுகிறான். உள்ளே உணவு வழங்கப்படுவதை கண்ணாடி ஜன்னல் வழியே எட்டிப்பார்க்கிறான். அதைக் கண்ணுறும் இங்கெருக்கு பரிதாபம் தோன்றுகிறது. க்வாமே கோபமும் தாழ்வுமாக அவளை முறைத்துவிட்டு இருட்டில் கரைகிறான். குளிரும் பசியும் வாட்ட பாதசாரிகள் நடைபாதையில் கிடந்து உறங்க முயற்சிக்கிறான். கனவில்லா நீள் இரவு. நடு நிசி குடியகம் ஒன்றில் நிறை போதையில் தளர்ந்து கிடக்கும் தன் தாயைத் தட்டி எழுப்புகிறாள் இங்கெர். வீட்டிற்கு கூட்டிவந்து உடை கழற்றி உறங்கப் பண்ணுகிறாள்.

குப்பைகளை காசாக மாற்றி கானாவிலிருக்கும் தன் மனைவியுடன் போனில் உரையாடுகிறான். அவளோ க்வாமேவின் குரல் சுணக்கம் கண்டு வாட்டமடைகிறாள். தகரங்களையே கூரையாக வைத்து வாழும் மனிதர்கள். இங்கு டென்மார்க்கில் கடுங்குளிர் என்று இவன் சொல்ல என்ன வேலை அங்கே என்ன சம்பளம் என்று வாஞ்சையாக வினவுகிறாள். பெரிய வருமானம் ஒன்றும் இல்லை கூடிய விரைவில் நல்ல வேலையில் அமர்ந்து விடுவேன் என்பவனிடம் நம்முடைய ஆடு ஒன்று மகிழ்வுந்தில் அடிபட்டு இறந்துவிட்டது என்று சொல்கிறாள். மேலும் கொஞ்சம் பணம் அதிகமாக அனுப்பு என்றும் குழந்தை கொஃப்-ற்கு பள்ளிக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது என்றும் க்வாமேவின் மனைவி சொல்கிறாள். முதலில் நான் வாடகை செலுத்த வேண்டும் சீக்கிரத்தில் பணம் அனுப்புவேன் என்றும் ஒரு வாரம் பொறுத்துக் கொள் என்றும் சொல்ல அவளோ ஒரு வாரமா? என்று கலக்கமடைகிறாள். இவனோ போனை வைத்துவிட்டு திக்குத் தெரியாமல் பெருமூச்செறிகிறான்.

நீண்ட நித்திரையில் கிடக்கும் தன் அம்மையை பின் பகல் மூன்று மணிக்கு ஒரு குழந்தையை எழுப்புவதுபோல் எழுப்புகிறாள் இங்கெர். அவளோ தூக்கத்திலேயே கழிந்துவிட்டிருக்கிறாள். படுக்கையில் கறை. தாயைக் குளிப்பாட்டுகிறாள். ஆற அமர புகைத்துக் கொண்டிருக்கும் தன் தாயிடம் தான் அமைதிப் படையில் வேலை பார்ப்பதாகச் சொல்கிறாள். கருப்பர்களின் கூடாரத்திலா? என்று இனவாதம் காட்டுகிறாள். அவர்கள் சொந்த மண்ணைவிட்டு புலம் பெயர்ந்தவர்கள் அவர்களை அப்படி வெறுப்பாக பார்க்கக்கூடாது என்று தாயின் சார்பை இறைஞ்சுகிறாள். ஏதாவது சம்பளம் கிட்டுகிறதா என்றாள் இல்லை அது ஆத்மார்த்தமான விருப்ப உதவியாளர் வேலை என்று மகள் சொல்ல தாய்க்கு இவள் மேல் இளப்பம் கவிகிறது.

அடுத்த முறை க்வாமே முன்னமே அவ்விடுதிக்கு வந்துவிடுகிறான். நிம்மதியாக உணவு உண்ணுகிறான். கோபம் தணிய இங்கெரின் பணிவிடையில் உவகை கொள்கிறான். க்வாமே அலைபேசியில் மனைவிக்கு போன் செய்ய, அவளோ அங்கே கூட்டுப் புழுக்களில் ஒன்றாய் அனலில் காய்ந்துகொண்டிருக்கிறாள். அவ்வளவு வறுமையிலும் கணவன் தொலைதூர இடத்தில் கஷ்டப்படக் கூடாது என்றும் தத்தளிக்கிறாள். அந்நேரம் அங்கு வரும் சில அராபிய இளைஞர்கள் இவனின் அலைபேசியை அடித்துப் பிடுங்குகிறார்கள். அடிபட்டுக் கொண்டிருப்பவனை தடுத்தாட்கொள்கிறாள் அங்கு வரும் இங்கெர். இவனை நிலக்கரித் துண்டு பரத்தையின் மகனே என்றும் அவளை பரத்தையே என்றும் தராதர இறக்கம் செய்யும் அவ்விளைஞர்கள் பெரும் காயம் ஒன்றை க்வாமேவிற்கு பரிசளித்துவிட்டு திமிராக சாலை ஏகுகின்றனர்.

அகதி விடுதியில் வைத்து மருந்தளிக்கும் இங்கெர் அங்கு வரும் ஹென்ரிக்கிடம் முறை வைக்கிறாள். இனவாதம் களையப்பட வேண்டும் என்று கோபம் கொள்ள ஹென்ரிக் எல்லா இடத்திலும் தீயைப் போல அது பரவியிருக்கிறது என்று விளக்கமளிக்கிறான். க்வாமே இங்கெரிடம் கிடைக்கப் பெற்ற பாதுகாப்புணர்வை மனதுள் பொத்தி வைக்கிறான். சமையலில் உதவுகிறான். ஏன் டென்மார்க்கை தேர்ந்தெடுத்தாய் என்றவளிடம் உலகத்திலேயே சிறந்த நாடு இது என்று கேள்விப்பட்டேன் என்று பதில் சொல்கிறான். அவளோ பரிகாசமாகச் சிரித்துக்கொண்டே தான் அப்படி நினைக்கவில்லை என்று சொல்கிறாள். உலக அரசியல் முகங்கள் வேஷம் கலைக்கின்றன அவ்விடத்தில். உருளை உருண்டு விழ வெள்ளிக்கிழமை விருந்து படைக்க ஹென்ரிக் தயாராக க்வாமே இங்கெரிடம் கேட்கும் பழைய பாக்கி மன்னிப்பு ஸ்பரிசத்துடன் புது அவதாரம் எடுக்கிறது. புளகாங்கிதப் புற்கள் மெய் சிலிர்க்கின்றன. ஹென்ரிக் இவனின் வேலையை அங்கீகரிக்க, அவளுக்கோ பெருமிதம் முகத்தில் தளும்புகிறது. டேய் டேய் என்று மனம் துடியுடன் துள்ள ஆரம்பிக்கிறது. கொஞ்ச நேரமாக இருந்தாலும் அந்த வெள்ளி இரவு அகதிகள் அடையாளத்தை மெல்ல துடைத்தழிக்கிறது. இங்கெரை கல்லாவிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்து க்வாமேவை பல சரக்கு வாங்கப் பணிக்கிறது. குளிருக்கு இதமாய் கம்பளிகளும் ஸ்வெட்டர்களும் பரிசளிக்கப்படுகின்றன.

நன் காலை. இங்கெர் எப்படி இருந்தது நேற்றிரவு என்று க்வாமேவிடம் வினவ, இங்கு தான் பாதுகாப்பாய் உணர்வதாகச் சொல்கிறான். இங்கெர் பூரிப்புடன் இன்றைக்கு என்ன பணி என்று க்வாமேவிடம் அடி போட அவனோ எப்போதும் போலத்தான் என்று சொல்கிறான். அதற்கு அவளோ டிவோலி போயிருக்கிறாயா? என்று கேட்க அது என்ன என்று ஆச்சரியத்தில் புருவம் சுருக்குகிறான்.

டிவோலி என்பது ஒரு தீம் பார்க். இருவருக்கும் சிறகுகள் முளைத்திருக்கிறது அன்று. இவர்களின் ரோலர்கோஸ்டர் மயிர்க்கூச்செறிதலை புகைப்படம் மிகுந்த அன்புடன் பதிந்து கொள்கிறது. மரம் ஆர்ட்டின்களை கனிகளாக்க இருவரும் கள்ள மாங்காய் புளிப்பில் கூசுகிறார்கள். இன்று நீ செலவு செய்த பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவேன் என்று இவன் சொல்ல, அவளோ அது பரிசு என்று பதில் சொல்ல, ஒளிகள் பொங்கி வர்ணங்கள் அந்தர வெளிகளில் அலைகின்றன. இருவரும் நெகிழ்ந்து கரைகிறார்கள். மனம் ஒன்றாக, அதன் தொடர்ச்சியாக உடலும் ஒன்றாக அப்புறமென்ன அன்றிரவு... அவர்களுக்கேயானது.

மறுநாள் காலை இருவரும் வெட்கி வெட்கி வழிகின்றனர். காபியின் சுவை நாவில் திகட்டி அச்சுவை மணமாகி நாசியில் துவள்கிறது. அவள் தன்னிடமுள்ள செல்போன் ஒன்றை கொடுத்து அதில் தன் எண்ணை பதிந்திருப்பதாகவும் தன்னை இழக்கும் நேரங்களில் அவன் விளிக்கலாம் என்றும் சொல்ல அவன் நன்றி என்று சொல்லி மனம்  நிறைகிறான்.

கானாவிலிருந்து போன். கடைக்குட்டி அக்வாவிற்கு மலேரியா காய்ச்சல் கண்டு படுத்த படுக்கையாயிருக்க மருத்துவத்திற்கு பணம் கேட்டு க்வாமேவின் மனைவி அழைப்பு. மூச்சுவிட முடியாமல் குழந்தை தவிப்பதாக மனைவி சொல்ல க்வாமேவோ அவளுக்கு தைரியம் சொல்லி உடனடியாக கொஞ்சம் பணம் அனுப்புவதாகச் சொல்கிறான். மேலும் உங்களையெல்லாம் நினைத்து மிகவும் ஏக்கமாக இருக்கிறது என்றும் என் அன்பை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் சொல்ல அவளும் எனக்கும்தான் உன்னை பார்க்க வேண்டும்போல் இருக்கிறது என்று சொல்கிறாள்.

பணத்திற்கு வழி தெரியாமல் பரத்தைகளும் குடிகாரர்களும் புழங்கும் வீதியில் குப்பை பொறுக்கிக்கொண்டிருக்கிறான் க்வாமே. கோபன்ஹேகனின் இருள் இவனுக்கு ஒரு வெளிச்சத்தையும் கொடுக்கவில்லை. மேலும் டென்மார்க் இளைஞர்களால் உதாசீனப்படுத்தப்படுகிறான். அதில் உச்சம் அவமானப்படுத்த வேண்டி ரூபாய் நோட்டு ஒன்றும் அவன் கண்முன்னால் கிழிக்கப்படுகிறது. மனம் இறுக்கமாக அகதி விடுதியில் கல்லாவில் கை வைக்கிறான். கிடைத்த பணத்தைச் சுருட்டி மணி எஃஸ்சேஞ்சர் வழியாக மனைவிக்கு பணம் அனுப்புகிறான். க்வாமே பணம் களவாடியதை ஹென்ரிக் இங்கெரிடம் கேமராப் பதிவைப் போட்டுக் காட்டுகிறான். தான் கேட்டதாகவும் அதை அவன் மறுத்ததாகவும் வீடியோவை போட்டுக்காட்டி க்வாமேவை வெளியேற்றியதாகவும் ஹென்ரிக் இங்கெரிடம் சொல்கின்றான். மேலும் அவன் இங்கே வரக்கூடாது என்று சொல்லி அவனுக்கு  வாழ்நாள் தடை விதித்ததாகவும் கூற இங்கெர் துடிதுடித்துப்போகிறாள்.

வீடு. தனிமை. இரவு. இங்கெர் சமைத்துக்கொண்டிருக்க அழைப்பு மணி ஓசை அடிக்கிறது. க்வாமே வந்திருக்கிறான். அதுவும் மன்னிப்பு கேட்க. அவள் இவனை மன்னிக்க தயாராக இல்லாத நிலையில் தன் தாத்தாவின் அறுவைச் சிகிச்சைக்காகத்தான் திருடினேன் என்று மழுப்புகிறான். தான் கடினமான ஒரு வாழ்வை வாழ்ந்துகொண்டிருப்பதாக க்வாமே சொல்ல தானும் அப்படித்தான் என்று சொல்கிறாள் இங்கெர். அழத் தொடங்குபவளை நெற்றியில் முத்தமிட்டுப் பிரிகிறான். அவனால் ஒதுக்கிவிடப்பட்ட அவளின் முடி மெல்ல விசும்ப ஆரம்பிக்கிறது.

இங்கெரின் தாய் காலையில் அதுவும் வீட்டிலேயே குடிக்க ஆரம்பிக்கிறாள். மதியம் கிருஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு வருவாயா என்று தாயிடம் பாசத்தோடு இங்கெர் வினவ அவள் வேண்டா வெறுப்பாக குடித்துக் கொண்டிருக்கிறாள். இங்கெர் ஒரு தாயாக இடம் மாறி உனக்காக வாத்துக்கறியும் பன்றிக்கறியும் வறுத்துவைக்கிறேன் என்று சொல்ல தாயோ கூடவே அரிசி பதார்த்தத்தையும் சேர்த்து செய் என்று கூறிவிட்டு உணவு மேஜையில் இங்கெரின் எதிரில் வந்து அமர்கிறாள். தான் ஒருவனை சந்தித்ததாக இங்கெர் சொல்ல பருவம் அப்படித்தான் எதையாவது செய்யும் என்று அதைக் கொச்சைப் படுத்துகிறாள் அம்மாக்காரி. அவனுமா நம் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளப் போகிறான் என்று சுரத்தில்லாமல் கேட்க இங்கெர் சந்தோஷமாக ஆமோதிக்கிறாள்.

தேவாலயம். பிரார்த்தனை. வழிபாடு. இங்கெரும் க்வாமேவும் அதில் கலந்துகொண்டுவிட்டு விருந்துண்ண வீட்டுக்கு வருகிறார்கள். ஈஸ்டர் வரையிலும் விடுமுறை மனநிலைதான் என்று சந்தோஷம் பொங்க பாடி ஆடுகிறாள். க்வாமேவிற்கு கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு கையுறை ஒன்றை அவனுக்கு பரிசளிக்கிறாள். பதிலுக்கு அவன் தான் கழுத்தில் எப்பொழுதுமே அணிந்திருக்கும் கானா அணிகலனை கழட்டி இங்கெரின் கழுத்தில் அணிவிக்கிறான்.மேலும் தான் அவளின் மேல் காதல் கொண்டிருப்பதாகவும் சொல்ல முத்தமிட நெருங்குகிறார்கள் இருவரும்.

அந்நேரம் பார்த்து அழைப்பு மணி அடிக்கிறது. அவளின் தாய் விருந்தில் கலந்து கொள்ள வந்திருக்கிறாள். தான் விரும்புகிறவன் வந்திருக்கிறானென்றும் தன் தாயை அவனிடம் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறாள். சரியென்று தலையாட்டுகிற தாய் உள் நுழைந்து அவனைக் கண்டவுடன் முகம் சுழிக்கிறாள். தன் பெயர் சொல்லி தானே முன் வந்து அறிமுகமாகி கைகுலுக்க அதை அறுவறுப்பாக உணர்கிறாள் இங்கெரின் தாய். வியர்த்து வழியும் அவனை வெறுப்பாக ஏறிட்டுவிட்டு சாப்பிடுகிறாயா என்று கேட்கும் மகளுக்கு பசியே போய்விட்டது என்று சொல்கிறாள் அவள். கண்டுபிடிச்சுட்டேன்னு சொன்னியே உனக்கு நல்ல ஒரு டேனிஷ் பையன் கிடைக்கலையா போயும் போயும் ஒரு...என்று குமட்டுகிற தாயை கோபமாக வீட்டைவிட்டு விரட்டுகிறாள் இங்கெர். உணர்விற்குப் பிறகான படுக்கை. இங்கெர் தான் க்வாமேவை கல்யாணம் செய்துகொண்டால் இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவனுக்கு நிரந்தக் குடியுரிமை அவனுக்குக் கிட்டும் என்று சொல்லி மேலும் அவன் தன்னை இதற்காக காதலிக்க வேண்டியதில்லை என்றும் இந்தக் காரியத்தை அவனுக்காக மட்டுமே செய்யப் போவதாகவும் சொல்கிறாள். க்வாமே பதிலுக்கு தான் அவளை மேலும் அதிகமாக நேசிப்பதாகச் சொல்லி அவளின் நெற்றியில் முத்தமிடுகிறான்.

மருத்துவமனை. மண்டையில் அடிபட்டு படுக்கையில் கிடக்கும் இங்கெரின் தாய். கீழே கிடந்தவளை சில இளைஞர்கள் இங்கு கொண்டு வந்து சேர்த்ததாக மருத்துவர்கள் சொன்னதாக மகளிடம் சொல்கிறாள். அந்த நாள் விருந்தின் மகிழ்வை தான் கெடுத்துவிட்டதாக வருத்தப்படும் தாயை சமாதானம் சொல்லி தேற்றுகிறாள் இங்கெர். டென்மார்க்கின் அரசி மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதை தொலைக்காட்சியில் இங்கெரும் க்வாமேவும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அன்றிரவு வான வேடிக்கைகள் முழங்க மக்களோடு மக்களாக கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர் இருவரும். அடுத்த நாள் தாயைப் பார்க்க அவள் ரூமிற்குப் போகும் இங்கெர் படுக்கையில் அவள் இறந்து கிடப்பதைப் பார்க்கிறாள். அதிர்ச்சியடைகிறாள். அழுகிறாள். குழந்தை ஒன்றின் கெக்கலிச் சிரிப்பு ஒன்று அந்த துக்கத்தில் பீறிட்டெழுகிறது. அடக்கம் முடிந்த மூன்றாம் நாள் க்வாமேவுடன் சென்று தன் தாயின் அடக்கத்திற்கு மலர் வளையம் வைக்கிறாள் இங்கெர். தாயின் அடுக்குமாடிக் குடியிருப்பொன்று சொத்தாக அவளை வந்தடைகிறது.

குளியலறையில் சுயமாக கர்ப்பிணிப் பரிசோதனை மேற்கொள்ளும் இங்கெர் உறுதிப்பட்டவுடன் அதிர்ச்சி-ஆச்சரியம்-மனபாரம்-மகிழ்வு என்று ஒரு சேர உணர்ச்சி வசப்படுகிறாள். குளித்துக்கொண்டிருக்கும் க்வாமேவிடம் தெரிவிக்க விரைகிறாள். நிர்வாணமாகக் குளித்துக்கொண்டிருப்பவனை பார்த்து வெட்கப்படுகிறாள். சீக்கிரம் வெளியே வா என்று அவசரப்படுத்திவிட்டு நகர்பவளை க்வாமேவின் அலைபேசி நிறுத்துகிறது. மறுமுனையில் அவனின் மனைவி. இங்கெரின் குரலைக்கேட்கும் அவள் அவனில்லையா என்று உரிமையோடு வினவ இவளுக்கு சம்சயம். அலைபேசியை சோதனையிட அதில் அவன் தன் ,மனைவியுடன் காதலாகிக் கசிந்துருகும் புகைப்படங்கள் மற்றும் அன்போடு குடும்பஸ்தனாக மனைவியோடும்  குழந்தைகளுடனும் நின்று கொண்டிருக்கும் புகைப்படங்கள். இவைகளைக் கண்ணுறுகிற இங்கெர் க்வாமே மீது கோபாவேசமாகிறாள். பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு வெளியேறுமாறு உத்தரவிடுகிறாள். என்ன சொல்வதென்று புரியாமல் தடுமாறுகிறான் க்வாமே.

மனம் போன போக்கில் வெறுமையோடு கைகோர்த்து அலைகிறாள். அன்றாடங்களை அன்போடு செய்பவளை தற்போது வெறுப்பு பீடித்திருக்கிறது. தனிமையில் உழல்பவளை ஹென்ரிக் என்னவென்று வினவ வெடித்தழுகிறாள் இங்கெர். தான் ஹென்ரிக்கிடம் பொய் சொல்லிவிட்டு க்வாமேவிடம் உறவில் ஈடுபட்டதாகச் சொல்கிறாள். மேலும் இந்த நான்கு வார உறவின் இறுதியில் அவனுக்கு கானாவில் குடும்பம் ஒன்றிருப்பதை கண்டுபிடித்ததை சொல்கிறாள் இங்கெர். அவனுடன் இருந்த நாட்களில் கிட்டிய சந்தோஷத்தைப் போல் தன் வாழ்வில் எப்பொழுதும் கிட்டியதில்லை என்று சொல்கிறாள். பதிலுக்கு ஹென்ரிக் அன்பு காயப்படுத்தும் என்று சொல்கிறான். அவன் ஏன் எனக்கு இப்படி ஒரு துரோகத்தைச் செய்தான் என்று கேட்க அது இயல்பில் அப்படித்தான் என்று ஹென்ரிக் சொல்ல இவளோ மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் என்று தன் கோபத்தை நன்மை தீமை விவாதமாக்க விரைகிறாள்.

'Stop moralizing'

இது ஹென்ரிக்.

மேலும் நீ நினைக்கிறாயா அவன் மட்டும் மற்றவர்களிடமிருந்து விதிவிலக்கு என்று கேட்கிறான். யார் சொன்னாங்க அவன் உன்னை காதலிக்கவேயில்லையென்று? என்று முதிர்ச்சியுடன் கேட்கும் ஹென்ரிக்கிடம் என்ன சொல்றன்னு புரியவில்லை என்று கேள்வி கேட்க அவனோ ஆமாம் நான் என்ன சொல்ல வரேன்னு யோசித்துப் பார் புரியும் என்கிறான்.

அடுத்து வரும் நாட்களில் க்வாமேவைத் தேடி அலைகிறாள் இங்கெர். குளக்கரைப் படித்துறையில் குப்பை பொறுக்கிக் கொண்டிருப்பவனை கண்டுபிடிக்கிறாள். எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கிறார்கள் இருவரும்.

How are you ?

இது அவள்.

I am not fine.

இது அவன்.

I  know.

இது அவள்.

அவனின் கையை பரிவோடு கோர்த்துக்கொள்கிறாள். அவள் பரிசளித்த கையுறைகளை அவன் அணிந்திருக்கிறான்.

‘நான் நினைக்கிறேன் நீ கானாவிற்குத் திரும்பிப் போகவேண்டுமென்று’

இது இங்கெர். மேலும் ‘இங்கே உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைவதற்கான எந்த நம்பிக்கையும் கிடையாது. ஊருக்குத் திரும்பி உன் மனைவி பிள்ளைகளோடு சேர்ந்துவிடுவதே உனக்கு நல்லது’ என்று கனமான மனத்தோடு சொல்லும் இங்கெருக்கு அதற்கு வாய்ப்பேயில்லை என்று சொல்கிறான். பணம் சம்பாதித்துக்கொண்டு போகவில்லையெனில் அவமானத்தில் இறந்து போவேன் என்று சொல்பவனிடம் அவனின் நிலையை உணர்ந்தவளாக நீ ஒரு நல்ல மனிதன் என்று சொல்கிறாள் இங்கெர். அப்படியா நினைக்கிறாய் என்று வருத்தப்படுகிறான். உன்னை நீ அவமானமாகக் கருதாதே என்று சொல்லிவிட்டு பண உறை ஒன்றை எடுத்துக் கொடுக்கிறாள். இதில் ஐம்பதினாயிரம் உள்ளதாகவும் வீட்டிற்கு திரும்பு என்றும் சொல்லிவிட்டு மறுப்பவனை ஒரு தாயைப்போல மனதார கட்டியணைக்கிறாள் இங்கெர். இருவரின் கண்களில் பெருக்கெடுக்கும் அந்தக் கண்ணீர் நமக்கு பெரும் தரிசனத்தை அளிக்கிறது.

கானாவில் குதூகலத்தை மைதானத்தில் விட்டெறிந்துவிட்டு தகப்பனைக் கண்ட சந்தோஷத்தில் பாசம் பொங்க ஓடி வருகின்றன க்வாமேவின் குழந்தைகள். அள்ளி அணைத்து உச்சி மோந்து நிற்கிறான் க்வாமே. இங்கே டென்மார்க்கில் அவனின் நினைவாக ரோலர்கோஸ்டர் புகைப்படத்துடன் இங்கெர். பொருளீட்ட வெளியூர் போன கணவன் வீடு வந்து சேர்ந்துவிட்டான் என்று க்வாமேவைப் பார்த்தவுடன் அதிர்ச்சியாகி ஆனந்தக் கூப்பாடு போடுகிறாள் அவனின் மனைவி. கடைக்குட்டி தாவி ஓடி வந்து தகப்பனைத் தழுவ சுற்றங்கள் நெகிழ்ந்து போகின்றன. இங்கே டென்மார்க்கில் மருத்துவ பரிசோதனையில் அது ஒரு ஆண் குழந்தை என்று மருத்துவர் சொல்ல மனம் நெகிழ்கிறாள் இங்கெர். கண்ணீரோடு மலரும் அந்த முகத்தில் ஆயிரமாயிரம் வாழ்க்கை ரேகைகள் படர்கின்றன.

ஏனோ இக்கணம் இக்கவிதை என் மனதில் மெல்ல மேலெழுகிறது.

பொருள்வயின் பிரிவு

அன்றைக்கு அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை

நிசப்தம் காடாக விரிந்து கிடந்தது

சாரல் மழை பெய்து சுகமான குளிர் வியாபித்திருந்தது

அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் பெரியவன்

அரவம்கேட்டு விழித்த சின்னவன்

சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது

சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்

இவள் வென்னீர் வைத்துக் கொடுத்தாள்

வெளுத்த துணிகளை எடுத்து வைத்தாள்

வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தாள் தாய்போல

முதல் பேருந்து ஓட்டுநர் இருக்கைக்குப் பின்புற ஜன்னலோரம்

பிழைப்புக்காக பிரிந்து வந்து கொண்டிருந்தேன்

மனசு கிடந்து அடித்துக் கொள்ள

இனவாதமும் புலம்பெயர்வும் அகதி முகாம்களுமாக இன்றைய ஐரோப்பாவின் மிக முக்கியாமான பிரச்னைகள் இவைகள் என்று கூறும் இக்குறும்படத்தின் தயாரிப்பாளர் கிம் இக்குறும்படம் இரு வேறு அரசியல் களங்களில் விளைந்த மனிதர்களின் வலிகளோடு கூடிய காதல் சங்கமம் என்றும் குறிப்பிடுகிறார். ஆப்பிரிக்க புலம் பெயர்வாளர்களை வேர்களற்று ஆவிகளாக அலையும் ஆன்மாக்களாக தான் தினமும் தான் வாழும் பகுதியில் கண்ணுற்று கலங்குவதாகச் சொல்கிறார் இயக்குனர் அஸ்கி. மேலும் அராபிய அல்லது ஆப்பிரிக்க நடிகர்கள் அற்ற டென்மார்க்கில் அஸ்கியும் இங்கெராக நடித்த மலீனேவும் கதாநாயகனைத் தேடியலைந்து ஓய்ந்து போன ஒரு நாளில் இரவு உணவகத்தில் அமர்ந்திருக்கையில் அங்கு சமையல்காரராக வேலை பார்த்துக் கொண்டிருந்த அப்பியாவைக் கண்டடைந்ததாக ஆச்சரியத்துடன் சொல்கின்றனர்.

இயக்குனர் அஸ்கி பேங் ‘லேடி பாய்’ மற்றும் ‘தி ஸ்ற்றேஞ்சர்’ ஆகிய இரு குறும்படங்களை முன்னரே இயக்கியுள்ளார். இதில் ‘தி ஸ்ற்றேஞ்சர்’ பூர்வீக வசதியிருந்தும் வேலைக்குப் போய் முன்னேறாமல் கஞ்சா அடித்துக்கொண்டு பெற்றோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் வெட்டியாக சுற்றிக்கொண்டு இருக்கும் டாமி என்பவனுக்கும் உள்ளூர் குற்றவாளிகளிடமிருந்து தப்பித்து இவன் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பை நோக்கி ஓடிவரும் ஒரு தாய்லாந்து இளம் பரத்தைக்குமான உறவைப் பற்றி பேசுகிறது. ‘லேடி பாய்’ போர்ன் இண்டஸ்ட்ரி வாழ்க்கையைப் பேசுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com