6. தனிமையின் இசை

சிறந்த குறும்படப் பிரிவில் 2016-ஆம் ஆண்டின் கான்ஸ் விருதை வென்றிருக்கும் இக்குறும்படத்தின்
6. தனிமையின் இசை

Timecode (2016) / Directed by Juanjo Giminez Pena

சிறந்த குறும்படப் பிரிவில் 2016-ஆம் ஆண்டின் கான்ஸ் விருதை வென்றிருக்கும் இக்குறும்படத்தின் கதை இதுதான். கதை என்று சொல்வதை விட கவிதை என்றே சொல்லலாம்.

லூனாவும் டீகோவும் ஒரு வண்டிகள் நிறுத்துமிடத்து பாதுகாவலர்கள். லூனாவுக்கு பகல் நேர வேலை. டீகோகுவுக்கு இரவு நேர வேலை.

குட்டைப் பாவாடையும் குறும் தோல் பையையும் அணிந்துகொண்டு அழகான ஒரு இளம் பெண் தார்ச்சாலையில் ஒய்யாரமாக நடந்துபோகிறாள். பணியிடத்திற்கு வந்து சேரும் அவள் தன் ஆடைகளை களைந்துவிட்டு பணிச்சீருடையை அணிந்து கொள்கிறாள். அவளின் ஒய்யார நடையும் வசந்தத்தில் அலை பாய்ந்த அவளின் கூந்தலும் இப்பொழுது அவளின் இறுக்கமான பெருமூச்சுடன் கண்ணாடியில் சிறைப்பிடிப்பின் மனதை பிரதிபலிக்கிறது. வீடு-வேலை-பள்ளி இம்மூன்றில் சுருங்கிய இயற்கை விடுபட ஏங்குகிறது. அவள் அணிந்து வந்த ஷூவில் ஒரு குதூகலமான சிறுமியின் ஓவியம் பூவேலைப் பாட்டுடன் ஆடிப் பாடிக் கொண்டிருக்கிறாள். இவள்தான் லூனா.

மின் வருகைப் பதிவேட்டில் பதிவு செய்துவிட்டு அலுவலகத்தில் நுழைகிறாள். தனது சக ஆண் ஊழியனுடன் நேற்றைய இரவில் வேலை எப்படி இருந்தது எனக் கேட்க அவனோ பெரும் அலுப்புடன் உடல் மொழி காட்டிவிட்டு விடை பெற ஆயத்தமாகிறான். அன்றைய தினம் நல்லபடியாய் அமையட்டும் என்று சொல்லிவிட்டு அவன் நகர இவளோ அங்கே பாடிக்கொண்டிருக்கும் டேப் ரெக்கார்டரை நிறுத்துகிறாள்.போர்டா ஃபிரல் என்னும் தனியார் கார் பார்க்கிங் நிறுத்துமிடத்தில் டீகோ என்ற இந்த வாலிபனும் லூனா என்ற இந்த இளம் நங்கையும் செக்யூரிட்டி கார்ட்களாக வேலை பார்த்து வருகின்றனர் என்பது நமக்கு தெரிய வருகிறது. அன்றாட அலுவல்களில் ஈடுபடும் லூனா கஸ்டமர் ஒருவருக்கு பணம் செலுத்துதல் விஷயமாக அறிவுரை கூறுகிறாள்.

போன் கால் ஒன்றை அட்டெண்ட் செய்கிறாள். அவளின் அதிகாரி கஸ்டமர் கார் ஒன்றின் ஹெட்லைட் உடைந்திருப்பதாகவும் அவர் வருவதற்குள் அதை சரி செய்ய வேண்டுமென்றும் காட்டமாக சொல்ல, இவளோ அதை தனது சிசிடிவியில் செக் செய்கிறாள். அங்கே அவள் காணும் காட்சி அவளை திகைக்க வைக்கிறது.டீகோ ஆடிக்கொண்டே ஒவ்வொரு தளமாக பார்வையிட்டுக் கொண்டு வருகிறான். ஓரிடத்தில் சுயம் மறந்து ஆடுபவனின் கால் பட்டு கார் ஹெட்லைட் உடைந்து விடுகிறது. இக்காட்சிகளை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருப்பவளை அதிகாரியின் குரல் குறுக்கிடுகிறது. அவளோ எல்லாம் சரியாகத்தான் இயங்கியிருக்கிறது என்கிறாள். போனை வைத்துவிட்டு அதற்கு முந்தைய நாட்களில் நடந்தவைகளை சிசிடிவியில் ஒவ்வொன்றாகப் பார்வையிடுகிறாள். அதிலெல்லாம் டீகோ வெறுமையின் இரைச்சலில் ஊறும் அவன் மனதை உடல் நடன இசைகொண்டு மீட்டெடுக்க முயற்சிப்பது தெரியவருகிறது. இவளுக்கு இது வினோதமான செயலாகப் படுகிறது.

3047 என்ற சம்பவம் நிறைந்த அந்த கார் நிறுத்தத்திற்கு வருகிறாள் லூனா. டீகோவால் உடைபட்ட அந்தக் காரின் முகப்பு விளக்கு உதிரிகளை கையிலெடுத்துப் பார்க்கிறாள். அதை தனது பாக்கெட்டில் வைத்து மறைத்துவிட்டு பதிவு செய்யும் கேமராவின் முன் நின்று அதை உற்றுப் பார்க்கிறாள். மாலை டீகோ இவளை வேலை மாற்றி விட்டுவிட்டு சரியாக இயங்குகிறதா என்று கேட்க அவளோ ஆம் நாளை பார்ப்போம் என்று நகர அவள் வைத்து விட்டுச் சென்ற குறிப்புச் சீட்டை கண்ணுறுகிறான். அதன் மேல் அவனால் உடைபட்ட முகப்பு விளக்கின் உதிரி. இவனுக்கும் ஆச்சரியம் தொற்றிக் கொள்கிறது. கூடவே நமக்கும். கேமரா எண்ணையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் குறிப்பு உணர்த்த அக்காட்சிகளை தனது சிசிடீவி ஃபுட்டேஜின் வழியே பார்க்கிறான். லூனா தனது உடலின் அசைவின் வழியே இரைச்சல் மிகுந்த கார் சப்தங்களின் நடுவே நடன இசையை மிதக்க விடுகிறாள்.

அடுத்த நாள் அரக்க பரக்க பணிச்சீருடை மாற்றி வருகையை பதிவு செய்துவிட்டு அலுவலகத்துள் நுழைந்து டீகோவிற்கு ஹாய் சொல்கிறாள். மேலும் நேற்றைய இரவு எப்படி இருந்தது என்று இவள் பூடகமாகக் கேட்க அவனோ மிகவும் அமைதியாக இருந்தது என்று சொல்கிறான். மேலும் அப்புறம் பார்க்கலாம் என்று நகர்பவனை விட்டு வேலையில் மும்முரமாகிறாள். அங்கே அவளின் மேசை மீது அவன் ஒட்டிசென்ற குறிப்புச் சீட்டு ஒன்று. பத்தாவது கேமரா நேரம் 03:15:07. லூனா டைம் கோடில் தேட அங்கே டீகோ எதிரும் புதிருமான அம்புக் குறிகளுக்கிடையில் நின்றுகொண்டு ஆள் படம் வரையப்பட்டிருக்கும் தரையில் தனது உடலை லாவகமாக இசைத்து நடனம் புரிகிறான். அசைவுகள் அப்பேரிரைச்சலின் நடுவே ஒய்யாரமாக நடை பயிலுகின்றன. நடனத்தின் முடிவில் நின்று கேமராவின் வழியே இவளுக்கு ஒரு புன்னகை லுக் விட்டுவிட்டு செல்கிறான். இதை உள்வாங்குகிற லூனா பூரிப்படைகிறாள். இசை மேலெழுகிறது. தொடர்ந்து வரும் நாட்களில் பச்சையும் சிவப்புமான கார் நிறுத்தங்களில் இவர்கள் புரியும் களி நடனங்கள் குறிப்புகளின் வழி குறிப்புணர்த்தி பறிமாறிக்கொள்ளப்படுகின்றன.

வழக்கமான அதே நாட்கள். பணிச்சீருடை காலணி மாற்றும்போது லூனாவின் கால்கள் வளைவு நெளிதலோடு லயத்தோடு அசைகிறது. பித்தின் மொழி அக்கால்கள் வழி கசிகிறது. அது நாள் வரை வருகைப் பதிவேட்டை பதற்றத்தோடு கடந்துபோகிற லூனா அன்று மட்டும் கால்களை தூக்கி அதன் அருகில் வைத்து உடலிசைவு மீட்டுகிறாள். மிக்க மகிழ்ச்சியாக பணியிடம் நுழையும் லூனா டீகோவை எப்படியிருக்கிறாய் என்று நலம் விசாரிக்கிறாள். மேலும் தினமும் அவனிடமிருந்து கிட்டும் குறிப்புச் சீட்டை அவளின் கண்கள் தேடுகின்றன. அது அங்கு இல்லாதது கண்டு மன வாட்டம் கொள்கிறாள். டார்ச் லைட்டையும் காஃபி ஃப்ளாஸ்க்கையும் கையிலேந்தியவாறு அவளின் எதிர்பார்ப்பு குன்றிய முகத்தோடு உராய்வதுபோல் ஒட்டி உறவாடி நகர்ந்து போகிறான் டீகோ. லூனாவிடம் பசலை படர்கிறது. அவன் பாதியிலேயே விட்டுச் சென்ற ரேடியோப் பெட்டி அலறிக் கொண்டிருக்கிறது. அதை நிறுத்துகிறாள் லூனா. குறிப்பு வேறோர் இடத்தில் கண்ணாடியில் ஒட்டப் பட்டிருக்க பார்வை அதை நோக்கி நகர மெல்லிய கீற்றாக அவனோ இழையோடி வெளியேறுகிறான். சிசிடீவி காட்சிகளெல்லாம் காண்திரையில் ஒளிர்கின்றன. இசை அலைவுறுகிறது.

நாட்கள் உருண்டோடுகின்றன. அதிகாரியின் குரல். பணிச் சீருடையை இங்கேயே மாற்றி பயன்படுத்திவிட்டு அலுவலகத்திலேயே விட்டுச் செல்ல வேண்டும் என்று கட்டளையிடுகிறது அக்குரல். கேபினிலேயே சாப்பிட்டுக் கொள்ளவேண்டும் என்றும் எட்டு மணி நேர டியூட்டி என்றும் மற்றவைகள் சம்பளத்திலிருந்தே பார்த்துக் கொள்ளப்பட வேண்டுமென்றும் மாற்றி  விட சாயங்காலம் ஆறுமணிக்கு ஆள் வரும்போது விடை பெறலாம் அக்குரல் ஒரு இளைஞனுக்கு கட்டளையிட்டுக் கொண்டிருக்க அவனோ சட்டைப் பித்தான்களை வரிசை மாற்றி அணிந்துகொண்டு முழிக்கிறான்.

பணி செயல்பாடுகளை விளக்கிக்கொண்டே வரும் அவர் எப்படி இங்கே கஸ்டமர்கள் கார் பார்க்கிங் செய்யலாம் என்றும் அதை எப்படி நாம் மானிட்டர் செய்ய வேண்டுமென்றும் மேலும் விளக்குகிறார். சிசிடீவிக்கு வருகிறார். முன்னால் பாதுகாவலர்களின் பணி அனுபவங்கள் என்று ஒரு ஃபுட்டேஜை திறந்து காட்டுகிறார். இரு முனைகளிலிருந்து வரும் டீகோவும் லூனாவும் கைகோர்த்து நடனமாடுகின்றனர். எதிர்நிலை அம்புக்குறிகளின் மேல் இருவரும் பனி உருகலின் மெல்லிசை போல் எட்ட நின்று ஆடியாடி ஆரத்தழுவுகின்றனர். அலைகள் மேவும் அவ்வுடல்கள் கூடியாடி ஒரு பெருங்கடலை தோற்றுவிக்கின்றன. நிதம் நிதம் நித்தம் நின்று குவிமையம் கொள்ளும் அவ்வாட்டங்கள் அமைதியில் ஒரு ஆரவாரத்தையும் ஆரவாரத்தில் ஒரு அமைதியையும் ஒரு பேரடாக்சிகலாக கட்டமைக்கின்றன.

வேறென்ன இதை காண்பித்துக்கொண்டிருந்த அதிகாரியிடம் தனக்கு நடனமாடத் தெரியாது என்று அப்பாவியாக புதிதாக வேலைக்குச் சேர்ந்த அவ்விளைஞன் சொல்ல பேரதிர்ச்சியில் உறைகிறார் அவ்வதிகாரி. கூடவே நாமும்தான்.

ஏனோ இக்கணம் இக்கவிதை மனதில் மேலெழுகிறது.

இந்தக் காதல்
இவ்வளவு வன்முறையான

இவ்வளவு மென்மையான

இவ்வளவு மிருதுவான

இவ்வளவு நம்பிக்கையிழந்த

இந்தக் காதல்

பகல் பொழுதைப் போல் அழகாக

வானிலை மோசமாக இருக்கும்போது

மோசமாக இருக்கும்

அந்த வானிலை போன்ற

இவ்வளவு நிஜமான இந்தக் காதல்

இவ்வளவு அழகான இந்தக் காதல்

இவ்வளவு மகிழ்ச்சியான

ஆனந்தமான

மேலும் இவ்வளவு பரிதாபமானதுமான

இந்தக் காதல்

இருட்டிலுள்ள குழந்தை போல் பயந்து நடுங்கியும்

ஆனாலும் இரவின் மத்தியிலும்

நிதானமிழக்காத மனிதனைப் போல்

தன்னைப் பற்றிய ஒரு நிச்சயத்துடன்

மற்றவர்களைப் பயமுறுத்திய

அவர்களைப் பேச வைத்த

வெளிறச் செய்த இந்தக் காதல்

நாம் கண்காணித்தோம் என்பதால்

கண்காணிக்கப்பட்ட இந்தக் காதல்

துரத்தப்பட்ட புண்படுத்தப்பட்ட தொடரப்பட்ட

முடிக்கப்பட்ட மறுக்கப்பட்ட மறக்கப்பட்ட

இந்தக் காதல்

நாம் அதைத்

துரத்திப் புண்படுத்தி தொடர்ந்து முடிந்து மறுத்து

மறந்தோம் என்பதால்

இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதுடன்

முழுமையாக ஒளிர்ந்து கொண்டிருக்கும்

இந்தக் காதல் முழுமையாக

உன்னுடையது

என்னுடையது

எப்போதும் புதுமையான ஒன்றாக

இருந்து கொண்டிருப்பதோடு அல்லாமல்

மாறாதது

ஒரு தாவரத்தைப் போல் அவ்வளவு நிஜம்

ஒரு பறவையைப் போல் அவ்வளவு துடிப்பு

கோடைக் காலத்தைப் போல் அவ்வளவு

சூடானது அவ்வளவு உயிர்த்திருப்பது

நாம் இருவரும்

போகலாம் திரும்பிவரலாம்

மறந்துவிடலாம்

மீண்டும் உறங்கிப் போகலாம்

விழித்துக் கொள்ளலாம் அல்லலுறலாம்

மூப்படையலாம் 

சாவைப் பற்றிக் கனவுகாணலாம்

விழிப்புடன் இருக்கலாம் புன்னகைக்கலாம்

சிரிக்கலாம்

பின்னர் இளமையும் அடையலாம்

அங்கேயே நின்றுவிடுகிறது நம் காதல்

கழுதையைப் போல் பிடிவாதமாக

ஆசையைப் போல் துடிப்பாக

ஞாபகத்தைப் போல் கொடியதாக

மனக்குறைகளைப் போல் முட்டாள்தனமானதாக

நினைவுகளைப் போல் மென்மையாக

பளிங்கைப் போல் குளிர்ச்சியாக

பகல் பொழுதைப் போல் அழகாக

குழந்தையைப் போல் மிருதுவாக

புன்னகையுடன் நம்மைப் பார்க்கிறது

ஒன்றும் சொல்லாமல் நம்முடன் பேசுகிறது

நான் அதைக் கேட்கிறேன் நடுங்கியபடியே

கத்துகிறேன்

உனக்காகக் கத்துகிறேன்

எனக்காகக் கத்துகிறேன்

தயவுசெய்து கேட்கிறேன்

எனக்காகவும் உனக்காகவும்

ஒருவரையொருவர் நேசிக்கும் 

இந்தக் காதல்

நேசித்த அனைவருக்காகவும்

ஆம், நான் உன்னிடம் கத்துகிறேன்

உனக்காக எனக்காக எனக்குத் தெரிந்திராத

மற்ற அனைவருக்காகவும்

அங்கேயே இரு

எங்கு இருக்கிறாயோ

அங்கேயே 

முன்பு எங்கு இருந்தாயோ

அங்கேயே 

அசையாதே

போய்விடாதே

காதல் வயப்பட்டிருந்த நாங்கள்

உன்னை மறந்துவிட்டோம்

எங்களை நீ மறந்து விடாதே

உன்னை விட்டால் இப்பூமியில் எங்களுக்கு

யாருமில்லை

எங்களை உறைந்து போக விட்டுவிடாதே

மிகத் தொலைவிலும் எப்போதும்

எங்கிருந்தாலும்

இருக்கிறாய் என்று தெரிவி

காலந்தாழ்ந்து ஒரு வனத்தின் மூலையில்

நினைவில் கானகத்திலிருந்து 

திடீரென்று வெளிப்படு

எங்களுக்குக் கரம் நீட்டு

எங்களைக் காப்பாற்று.

- ழாக் ப்ரெவர்
(தமிழில்  வெ. ஶ்ரீராம்)

ஐம்பத்தி மூணாவது வயதில் இக்குறும்படத்தை இயக்கியிருக்கும் இயக்குனர் ஜுவாஞ்சோ ‘ரகசியங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள்’ என்று இந்தக் கதையின் சூட்சுமத்தை தெரிவிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com