8. வளர் பூமியின் உழா நிலம்

ராமாயணத்தில் வரும் அகல்யையின் கதையை நவீன உள்ளடக்கமாகக் கொண்டது
8. வளர் பூமியின் உழா நிலம்

‘Cinema is an art form.I guess short films have a bright future... The advantage is budget.’
-Anurag Kashyap

ராமாயணத்தில் வரும் அகல்யையின் கதையை நவீன உள்ளடக்கமாகக் கொண்டது இக்குறும்படம் என்று ஒரு பார்வை உண்டு. பிரம்மனின் படைப்பில் மிக அழகான படைப்பு இவள். முதிய கௌதம ரிஷியை கணவராகக் கொண்டவள். இந்திரன் அகல்யையின் கணவரைப் போல உருவெடுத்து வந்து அவளை மயக்குகிறான். இந்த துரோகத்தினால் இருவரும் கௌதம ரிஷியின் சாபத்திற்கு ஆளாகின்றனர். அகல்யையை கல்லாய் சமைக்கிறார் அவளின் கணவர். பிறிதொரு சமயம் ராமனின் கால் பட்டு மனித உருவை அடைகிறாள். சாபத்திலிருந்து மீள்கிறாள்.

அஹல்யா (2015) / இயக்குனர் சுஜோய் கோஷ்

காலிங் பெல் அடிக்கிறது. வாலிபம் முறுக்கேறிய இன்ஸ்பெக்டர் இந்திரா சன் தெரு வாசலிலிருந்து வீட்டின் மாடியை அண்ணாந்து பார்க்கிறார். பொறுமையை இழக்கிறார். கதவைத் திறந்து ஒரு அழகான இளம் பெண் அவரிடம் சொல்லுங்கள் என்று மென்மையான குரலில் கேட்கிறாள். காவல் நிலையத்திலிருந்து வருகிறேன் என்றும் மிஸ்டர்.சாது இருக்கிறாரா? என்றும் அழுத்தமாக வினவுகிறார். மெல்லிய அதிர்ச்சி அவள் முகத்தில் எழ அவளின் அழகில் இவர் தடுமாறுகிறார். முன்னே அவள் நடக்க இவர் அவளின் பின்னழகு நடையில் கிறங்கிப் பின்தொடர்கிறார்.

ஹாலிற்கு வந்த பிறகு இருக்கையில் அமருங்கள் சாதுவை கூப்பிடுகிறேன் என்று சொல்கிறாள். சாப்பிட ஏதாவது டீ கொண்டு வரட்டுமா? என்று அவள் வினவ இன்ஸ்பெக்டரோ சிரமமில்லையெனில் என்று பதில் சொல்கிறார். கீழே ஏதோ விழும் சத்தம் கேட்க இன்ஸ்பெக்டர் அதைக் கண்ணுறுகிறார். இவளோ அந்நிகழ்வை பித்து மர்மம் என்றும் யாராவது வீட்டிற்கு புதிய நபர்கள் வந்தால் இப்படித்தான் இந்த பொம்மைகள் நடந்து கொள்கின்றன என்று செல்லமாக குறைபட்டுக்கொள்கிறாள்.

கீழே விழுந்த அந்த பொம்மையை எடுத்து மேஜையின் மீது நிற்க வைக்கப்பட்டிருக்கும் ஐந்தாறு பொம்மைகளுக்கிடையில் மீண்டும் நிற்க வைக்கிறாள். காரணம் புரியவில்லை என்பவளிடம் ஃபேனாக இருக்கலாம் என்று சொல்கிறார் இவர். கடவுளுக்கே வெளிச்சம் என்று சொல்லிவிட்டு நகர்கிறாள். அங்கிருக்கும் பொருட்களை பார்வையிடுகிற இன்ஸ்பெக்டர் தான் கையில் வைத்திருக்கும் ஒரு போட்டோவை கம்பேர் செய்து ஒரு பொம்மையை உற்றுப் பார்க்கிறார். அது தான் தேடி வந்த அர்ஜூன் ஜாடையில் இருப்பதை கண்டுகொள்கிறார். மேலும் அருகில் கண்ணாடிப்பேழையினுள் ஒரு கூழாங்கல் இருப்பதைப் பார்க்கிறார். மீண்டும் அர்ஜூன் பொம்மை மேஜையின் மேலிருந்து கீழே விழுகிறது.

இன்ஸ்பெக்டர் மேலே சுழலும் மின் விசிறியைப் பார்த்து நகைக்கிறார். மீண்டும் கீழே விழுந்துவிட்டதா என்று சொல்லிக்கொண்டே கம்பீரமான ஒரு உருவம் இன்ஸ்பெக்டரை நோக்கி வருகிறது.

கௌதம் சாது என்று இன்ஸ்பெக்டர் இந்திரா சன்னிடம் கைகுலுக்குகிறது. யாராவது புதிதாக வீட்டிற்குள் வரும்பொழுது இந்த பொம்மைகள் கீழே விழுகின்றன என்று கௌதம் சாது சொல்ல இன்ஸ்பெக்டரோ உங்கள் மகள் சொன்னாள் என்று கூறுகிறார். சாதுவோ அவர் என்னுடைய மகளா? என்று புருவம் சுழிக்க இவர் தடுமாற அந்நேரம் அங்கு குடிக்க டீ கொண்டு வருகிறாள் அந்த இளம் நங்கை. சாது பலமாக சிரித்துக்கொண்டே தவறுதலாகப் புரிந்துகொண்டீர்கள் இவள் என் மனைவி என்று சொல்ல இன்ஸ்பெக்டரோ வழிகிறார். மன்னிப்பு கேட்கும் இன்ஸ்பெக்டரிடம் பரவாயில்லை எல்லோருமே இப்படித்தான் நினைக்கிறார்கள் என்றும் இவளிடம் எப்பொழுதுமே சொல்கிறேன் வலுவான வாழ்வைக் கொண்ட ஒருவனை தேர்ந்துகொண்டு இங்கிருந்து நகர்ந்து செல்ல வேண்டும் அவள் என்றும் அந்நியோன்யமாக உரையாடுகிறார். அப்படி என்னதான் என்னிடம் கண்டு கொண்டாளோ இவள் என்று ஆதங்கப்படும் சாது மேலும் எப்படியிருந்தாலும் படுக்கையில் நான் சிறப்பாகவே நடந்து கொள்கிறேன் என்று பேசி இன்ஸ்பெக்டரை திண்டாடச் செய்கிறார்.

அவள் கலந்து கொடுக்கும் டீயை பணிவுடன் வாங்கிக் கொள்கிறார் இன்ஸ்பெக்டர். டீயில் கூச்சம் நெளிகிறது. உளராதீர்கள் என்று இவள் தன் கணவனிடம் சொல்ல அவரோ உளறுதல் என்பது முதிய பருவத்தைப் பறைசாற்றுகிறது என்று மென்சோகத்துடன் சொல்கிறார். டீ குடிக்கிறீர்களா என்று கணவரிடம் தாம்பத்ய உணர்வுடன் கேட்க பைத்தியமா நீ என்று இருக்கையிலிருந்து எழுந்து நகர்ந்துபோய் விஸ்கியை கண்ணாடி டம்ளரில் ஊற்றுகிறார் மேலும் இது உள்ளே போனால் நாடி நரம்பெல்லாம் குதிரைக் கணக்காக திமிறும் என்று சொல்கிறார்.

மெல்ல தன் பார்வையை மிசஸ்.சாதுவின் மேல் படரவிடும் இன்ஸ்பெக்டர் தெரியாமல் படும் அவளின் கால் தொடுகையால் தடுமாறி நிலைக்கு வருகிறார். விஸ்கியை விழுங்கும் கௌதம் சாதுவின் முன் கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டிருக்கும் அந்த கூழாங்கல் மீண்டும் நம் கண்ணில் படுகிறது. எழுபத்தெட்டு வயதாகிறது தனக்கு என்றும் திருப்தியுறுகிற தன் மனதிற்கு மிக நெருக்கமானவைகள் புகைப் பழக்கமும் குடிப் பழக்கமும் என்று சொல்லிவிட்டு பெருமூச்செறிகிறார் சாது. குடிக்கிறீர்களா என்று கேட்பவருக்கு டுயூட்டியில் இருக்கும்போது தான் குடிப்பதில்லை என்று கண்ணியம் காக்கிறார் இன்ஸ்பெக்டர் இந்திரா சன்.

வந்த காரியம் என்னவோ என்று சாது கேட்க இவள் சாதுவை உற்றுப் பார்த்துவிட்டு தான் மேலே மாடிக்குப் போவதாகவும் காரியம் முடிந்தவுடன் மேலே வாருங்கள் என்றும் சொல்லிவிட்டு மாடிப்படியேறிப் போகிறாள். வந்த வேலையை மறந்துவிட்டு அவள் போவதையே லஜ்ஜையுடன் பார்க்கிறார் இன்ஸ்பெக்டர். தன் மனைவியை காமத்துடன் பார்க்கும் இன்ஸ்பெக்டரிடம் அழகாக இருக்கிறாள் இல்லையா என்று கேட்க டீ குடித்துக்கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டருக்கு புரையேறுகிறது. தன்னுடைய எல்லாப் படைப்பும் அவளால்தான் என்றும் அவளுடைய உடலின் ஒவ்வொரு இன்ச்சும் அதற்கு எடுத்துக்காட்டு என்றும் சிலாகிக்கிறார் சாது. உலகே என்னை ஒரு சிறந்த படைப்பாளி என்று கருதுகிறது. அவளில்லாமல் நான் வெறும் பூஜ்ஜியம் என்று சொல்கிறார்.  

வந்த காரணம் என்னவென்று தன் பாக்கெட்டிலிருந்து அர்ஜூனின் புகைப்படத்தை எடுத்து சாதுவிடம் காட்டி இவரைத் தெரிகிறதா என்று அதிகாரத் தோரணையில் வினவுகிறார் இன்ஸ்பெக்டர். அடையாளம் தெரியாமல் தடுமாறும் சாது பிறகு இவன் ஒரு மாடல் இல்லையா? என்று பதில் தெரிவிக்க ஆமாம் இவன் பெயர் அர்ஜூன் என்று இன்ஸ்பெக்டர் சொல்கிறார். பாண்டவர்களில் மூன்றாமவன் என்று அழுத்தமும் நிதானமுமாக பேச ஆரம்பிக்கும் சாது. ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு அமர்விற்கு வந்திருந்தான் என்னுடைய கடைசி படைப்பு அவன் உருவில்தான் என்று சாது சொல்ல இன்ஸ்பெக்டரோ அதைத் தான் கண்டு கொண்டதாகச் சொல்கிறார். ஏன் என்னாவாயிற்று? என்று சாது கேட்க அர்ஜூன் காணாமல் போய்விட்டதாகவும் கடைசியாக தங்களைப் பார்க்கத்தான் அவன் வந்ததாகவும் துப்பு என்று சொல்கிறார் இன்ஸ்பெக்டர்.

தடுமாறும் சாது காணாமலா போய்விட்டான் என்று பாவமும் அதிர்ச்சியுமாக கேட்க இன்ஸ்பெக்டர் அவரை நெருங்கிவிட்ட தோரணையில் அசால்ட்டாக டீயை குடிக்கிறார். இப்பொழுதுதான் தனக்கும் எல்லாம் புரிகிறது என்கிற பாவனையில் இப்படி ஒருவேளை நடந்திருக்கலாம் என்று சாது இன்ஸ்பெக்டரிடம் எதையோ ஒன்றை கூற முயற்சிக்கிறார். இன்ஸ்பெக்டர் அவரை உற்று நோக்குகிறார்.

ஃப்ளாஷ்பேக் காட்சிகள் சாதுவின் வாய்ஸ் ஓவரில் தொடர்கிறது. அர்ஜூன் தனக்கான மாடலிங் கூலியைப் பெற வந்திருந்தான். ஒவர்கோட் அணிந்த அர்ஜூன் சாதுவின் வீட்டினுள் மாடலாக இயங்குகிறான். வேலையை முடித்துவிட்டு கிளம்புவனிடம் போய் நான் ஒரு முட்டாளைப் போல ஒரு விஷயத்தைச் சொன்னேன் என்று சாது சொல்லி முடிக்கவும் இன்ஸ்பெக்டரின்  முகம் இறுகவும் அலைபேசி அடிக்கவும் சரியாக இருக்கிறது. இவள் ஒருத்தி மொபைல் போனை எல்லா இடங்களிலும் வைத்து விட்டுப் போய் விடுகிறாள் என்று அலைபேசியை கையிலெடுக்கிறார்; பாருங்க இன்னும் கொஞ்சம் நேரத்தில் கூச்சலிடுவாள் என்று இன்ஸ்பெக்டரின் ஆர்வத்தை இடை மறிக்கிறார். டீ மேஜையின் மீது வைக்கப்பட்டிருக்கும் கூழாங்கல்லை தொடப்போகும் இன்ஸ்பெக்டரை அக்கல்லில் மேஜிக் பவர் இருக்கிறது என்று சொல்லி எச்சரிக்கிறார் சாது. பயந்து பின் வாங்குகிறார் காவல் துறை ஆய்வாளர் இந்திரா சன்.

ராமாயணம் படித்திருக்கிறீர்களா? எனும் சாதுவின் கேள்விக்கு தனக்கு பேசிக் லைன் மட்டும் தெரியும் என்று இன்ஸ்பெக்டர் சொல்ல சாதுவோ சிரிக்கிறார். இந்தக் கல்லிற்கும் பேசிக் லைன் கதையொன்று இருக்கிறது என்று கூற ஆரம்பிக்கிறார்.

கடவுள்களின் தலைவன் இந்திரன் ஒரு குறும்புக்காரன் உங்களின் பெயரும் அதுவே என்னும் சாது தொடர்ந்து அவனிடமும் இப்படி மேஜிக் தன்மை கொண்ட ஒரு கல் இருந்தது என்றும் அந்தக் கல்லை வைத்துக் கொண்டு பல விஷமத்தனங்களை செய்து வந்தான் எனவும் சொல்ல ஆர்வம் மேலோங்க எப்படி என்று இன்ஸ்பெக்டர் இந்திரா சன் மும்முரமாக சாதுவிடம் கதை கேட்க ஆரம்பிக்கிறார்.

அந்தக்கல்லை வைத்துக்கொண்டு நினைத்த மாத்திரத்தில் நினைத்த உருவை எடுக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் சாதுவை இடைமறித்து அப்படீன்னா நீங்க சொல்றதப் பார்த்தா இந்தக் கல்லை வைத்து நீங்கள் யாரை வேண்டுமானாலும் உருமாற்றம் செய்யலாம் என்றா சொல்கிறீர்கள்? என்று மையத்திற்கு வருகிறார். நான்தான் ஆரம்பத்திலேயே சொன்னேனில்லையா நீங்கள் நான் சொல்லும் கதையை நம்பப் போவதில்லையென்று - இது சாது. இதைக்கேட்டுவிட்டு இதற்கும் அர்ஜூனுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறார் இன்ஸ்பெக்டர். அர்ஜூன் தான் சிலபேரிடமிருந்து தப்பிப்பதற்காக இந்தக் கல்லைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று என்னிடம் மன்றாடினான்; மேலும் இன்றைய தினத்தைப் போலவே அன்றைக்கும் இந்த பாழாய்ப் போன மொபைல் அடித்தது; அதைக் கொண்டு போய் என் மனைவியிடம் மாடியில் கொடுத்துவிட்டு வருவதற்குள் அர்ஜூன் போய் விட்டிருந்தான்;

இந்தக் கல் மட்டும் இங்கேயே தரையில் இருந்தது என்று சாது சொல்ல அப்படீன்னா அர்ஜூன் இந்த மந்திரக்கல்லை வைத்து வேறொரு ஆளாக உருமாறிவிட்டான் என்றா சொல்கிறீர்கள் என்று இன்ஸ்பெக்டர் கேட்க அப்படித்தான் இருக்கணும் என்று சாது பதில் சொல்கிறார். அவனுக்காக வருத்தப்பட்டு அமர்ந்திருக்கும் சாதுவை நக்கலாக உற்றுப் பார்க்கும் இன்ஸ்பெக்டர் இருக்கையிலிருந்து சடாரென்று எழுந்து சாதுவை அர்ஜூனை கொலை செய்த குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்கிறேன் என்று சொல்ல நீங்கள் நான் சொல்வதை நம்புவேனென்றல்லவா ஆரம்பத்தில் சொன்னீர்கள் என்று சாது சொல்ல அதற்கு இன்ஸ்பெக்டர் நக்கலாக நம்புகிற மாதிரி சொல்லியிருந்தால் நம்பியிருப்பேன் என்று கடுப்பாகிறார். இது ரொம்ப அதிகம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே மாடியிலிருந்து சாதுவின் இளம் மனைவியின் குரல் மொபைலைக் கேட்டு கதறுகிறது.

நம்பவில்லையெனில் நீங்களே ஒரு முறை முயற்சி செய்யுங்களேன் என்று இன்ஸ்பெக்டரை உசுப்பேற்றுகிறார் சாது. இந்தக் கல்லை கையில் வைத்துக்கொண்டு நான்தான் நீங்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள் பிறகு இந்த மொபைல் போனை என் மனைவியிடம் கொண்டு போய் கொடுங்கள் என்று சொல்லும் சாதுவை இளக்காரமாக பார்க்கும் இன்ஸ்பெக்டரிடம் என்ன பயமாக இருக்கிறதா? என்று தீர்க்கமாகப் பார்க்கிறார் சாது.

மந்திரக்கல் சாதுவின் கையிலிருந்து இன்ஸ்பெக்டரின் கைக்கு இடம் பெயர்கிறது. மெல்லிய பதற்றத்துடன் மாடிப்படியேறிப் போகிறார் இன்ஸ்பெக்டர். ஜன்னல்களைக் கடக்கும்போது உள் அறையில் சாதுவின் மனைவி ஒயிலாக படுக்கையில் சாய்ந்து சஞ்சிகையொன்றை புரட்டிக் கொண்டிருக்கிறாள். இவருக்கு நடையில் எதிர்ப்பும் மிடுக்கும் கூடுகிறது. மொபைலை சீக்கிரம் கொண்டு வாருங்கள் என்கிற தொனியில் கைநீட்ட தன் உடலைக் கண்ணாடியில் கௌதம் சாதுவாக காண்கிறார் இன்ஸ்பெக்டர் இந்திரா சன். அந்த போலீஸ்காரனோடு அப்படி என்ன விஷயம் இவ்வளவு நேரம் எடுத்திருக்கிறது உங்களுக்கு? என்று கொஞ்சலான தொனியில் சாதுவாக உருமாறிப்போன இன்ஸ்பெக்டரிடம் உரையாடுகிறாள் மிஸஸ்.சாது. மீண்டும் மீண்டும் கண்ணாடியில் முகம் பார்த்து குழம்பித் தடுமாறுகிறார் இன்ஸ்பெக்டர் இந்திரா சன். படுக்கைக்கு அழைக்கும் மிஸஸ்.சாது இன்ஸ்பெக்டரை மல்லாக்கப்போட்டு அவரின் மார்பில் சாய்கிறாள். படுக்கையில் சரியில்லையென்று ஏன் நீங்கள் அந்த இன்ஸ்பெக்டரிடம் பொய் சொன்னீர்கள்? என்று செல்லக் கோபம் கொண்டு உருமாறிய இன்ஸ்பெக்டரைத் தீண்டுகிறாள். சீக்கிரம் அந்த இன்ஸ்பெக்டரை அனுப்பிவிட்டு வாருங்கள் போங்கள் போங்கள்ள் போங்கள்ள்ள் என்று காமவிருந்தை விளம்புகிறாள். அதிர்ச்சியும் மகிழ்ச்சியுமாக அறையை விட்டு வெளியே வரும் இன்ஸ்பெக்டர் வந்த காரியத்தையே மறந்து போகிறார். தன் கை கால்களை சம்சயத்துடன் தடவிப் பார்த்துக் கொள்கிறார். காமம் ஊற்றெடுக்க மிஸஸ்.சாதுடன் கூடி முயங்க தினவோடு உள் நுழைகிறார். அவளும் இவரை இரு கை விரித்து அணைக்க ஆலிங்கனம் அரங்கேறுகிறது.

திரை இருள்கிறது. மீண்டும் அதே காலிங் பெல் ஓசை. அதே சாது ஒரு ஆண் மாடலிடம் தன் படைப்புத் தேவையை விளக்கிக் கொண்டிருக்க யாரும் கேட்க முடியாத ஈன ஸ்வரம் மெல்ல பெருக்கெடுத்து அதிக டெசிபலில் கேட்கத் துவங்குகிறது. மிஸ்டர்.சாது நான் இங்கிருந்து வெளியேறவேண்டும் என்னை விடுவியுங்கள் என்று மனிதர்கள் கேட்க முடியாத டெசிபல் சத்தத்தில் கதறி கூப்பாடு போடுகிறார். கதறலின் உதறலில் மேஜை மேலிருந்து அடுத்தடுத்து நிற்க வைக்கப் பட்டிருக்கும் பொம்மைகளின் வரிசையிலிருந்து கீழே விழுகிறார் பொம்மையாய்ச் சமைந்துபோன இன்ஸ்பெக்டர் இந்திரா சன்.

மீண்டும் சாதுவின் குரல்.  இது ஒரு இனம்புரியா பித்து மர்மம்; ஒவ்வொரு தடவையும் யாராவது புதிதாக இவ்வீட்டிற்கு வந்தால் இப்பொம்மைகள் கீழே விழுகின்றன என்று சாது சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவரின் மனைவி கீழே விழுந்த இன்ஸ்பெக்டர் பொம்மையை எடுத்து மீண்டும் டேபிளின் மீது சமைந்துபோன பொம்மைகளின் வரிசையில் நிற்க வைக்கிறாள். வைக்கும் முன் சாதுவிடம் காட்ட அவரோ என்னுடைய கடைசிப் படைப்பு என்று பெருமை கொள்கிறார். எல்லாம் இவளால்தான் என்று சொல்லிவிட்டு டீ குடிக்கிறாயா என்று கேட்டுவிட்டு அகல்யா ஒரு கப் சாயா? என்று சொல்லி விருந்தோம்பலுக்கு தயாராகிறார் கௌதம் சாது. மற்றவர்களைப் போல் குறும்பு செய்யாமல் அடங்கியிரு என்று பொம்மை இன்ஸ்பெக்டரை மௌன மொழியில் அதட்டிவிட்டு மாதவிப் பொன் மயிலாள் தோகை விரிக்கிறாள். இன்ஸ்பெக்டர் தயவு செய்து என்னைக் காப்பாற்று! என்று பெருங்குரலெடுத்துக் கதறுகிறார்.

அகல்யா என்று ஆங்கிலத்தில் டைப் ரைட்டிங் செய்யப்படும் எழுத்துக்கள் திரையில் தோன்றுகின்றன. மீண்டும் அதே காலிங் பெல் ஓசை அடிக்கக் கேட்கிறது.

ஏனோ இக்கவிதை இக்கணம் மனதில் மெல்ல மேலெழுகிறது.

என்னுடல்

குறுஞ்செடிகள் மண்டிய மலையில்
பெருகுகிறது ஒரு நதி
அதன் கரைகளில் வளைந்து
நீர்ப் பரப்பினைத் தொட்டோடுகின்றன
பால்வழியும் மரத்தின் கிளைகள்
இஞ்சியின் சுவைகூடிய பழங்கள்
மெல்லிய தோல் பிரித்து
விதைகளை வெளித்தள்ளுகின்றன
பாறைகளில் பள்ளம் பறித்தெஞ்சிய நீர்
முனைகளில் வழுக்கி விழுகிறது அருவியாய் 
நீர்த்தாரைகளின் அழுத்தத்தில்
குருதி படர்ந்த வாயை நனைக்கிறது
வேட்டையில் திருப்தியுற்ற புலி
கீழிறங்குகையில்
எரிமலையின் பிளந்த வாயிலிருந்து
தெறிக்கிறது சிவப்புச் சாம்பல்
வானம் நிறமிழக்க
வலஞ்சுழிப் புயல் நிலத்தை அசைக்கிறது
குளிர்ந்த இரவில் வெம்மை
தன்னைக் கரைத்துக்கொள்கிறது
இறுதியில் இயற்கை
என் உடலாகிக் கிடக்கிறது

-சுகிர்தராணி

மிஸ்டர்.சாது என்கிற கௌதம் சாதுவாக சௌமித்ர சட்டர்ஜியும், மிஸஸ்.சாது என்கிற அகல்யாவாக ராதிகா ஆப்தேவும், இன்ஸ்பெக்டர் இந்திரா சன்னாக டோட்டா ராய் சௌதுரியும் நடிப்பில் அக உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இக்குறும்படத்தில் சப்தங்கள் கலை நேர்த்தியுடன் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒளிப்பதிவுக் காட்சிக் கோணங்களும் இசையும் ஆடை வடிவமைப்பும் செட் பொருட்களும் மிக கவனமாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. பதினான்கு நிமிட குறும்படம் ஆண்களை மயக்கி ஏமாற்றும் வித்தையை பாடு பொருளாகக் கொண்ட ஒரு எளிமையான சஸ்பென்ஸ் திரில்லர் என்று சொல்லலாம். அதே வேளையில் இக்குறும்படத்தின் கதை ராமாயணத்தில் வரும் அகல்யையின் கதையை ஒத்திருப்பதாக சொன்னாலும் அது விவாதத்துக்குரியதே.

அறியாமையால் காமத்தில் ஈடுபடும் இளநங்கை அகல்யாவை மையக் கதாபாத்திரமாகக் கொண்ட இக்குறும்படம் இயக்குனர் சத்யஜித்ரே எழுதிய ப்ரொஃபசர் ஷோன்கு அண்ட் ஸ்ட்ரேஞ்ச் டால்ஸ் ( Professor  Shonku And Strange Dolls ) என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

காமத்தையும் வன்முறையையும் அடிப்படையாகக் கொண்ட அகல்யா என்ற இக்குறும்படத்தின் இயக்குனர் பெயர் சுஜோய் கோஷ். 13 வயதில் லண்டனுக்கு குடிபெயர்ந்த சுஜோய் கோஷ் பொறியியல் பட்டப் படிப்பும் வியாபார நிர்வாகத்தில் உயர் பட்டப்படிப்பும் முடித்துவிட்டு ரியூட்டர்ஸ் மீடியா நிறுவனத்தில் தென்னாசியாவின் உயரதிகாரியாக பணிபுரிந்திருக்கிறார்.  கஹானி மற்றும் Te3n போன்ற திரைப்படங்களை இயக்கியதன் மூலம் மெயின் ஸ்ட்ரீம் சினிமாவின் குறிப்பிடத் தகுந்த இயக்குனரானார்.

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com