1. குரூர ரகசியம்

இப்படிப்பட்ட வார்த்தையை ஒரு பாட்டு ஆசிரியை போட்டி மேடையில் தனது மாணவர்களின்
1. குரூர ரகசியம்

பரத்தையின் பிள்ளைகளா !

இப்படிப்பட்ட வார்த்தையை ஒரு பாட்டு ஆசிரியை போட்டி மேடையில் தனது மாணவர்களின் choir பாட்டு நிகழ்வின்போது அடுத்துப் பாடப்போகும் அவர்களை நோக்கி திட்டுகிறாள்.

ஏன்?

சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்பட பிரிவில் இந்த வருட ஆஸ்கார் விருதை ‘சிங்’ (மின்டென்கி) எனும் ஹங்கேரிய திரைப்படம் வென்றிருக்கிறது. வென்றிருக்கிறது என்ற பதமே இப்படத்தைப் பற்றி கூறுவதற்கு தர்மசங்கடமாக இருக்கிறது. ஏனெனில் இதன் கதைக் கரு அப்படிப்பட்டது. நிஜமான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.

Sing (2016)/ Mindenki/ Director: Kristóf Deák

1990 – ஆம் ஆண்டு ஹங்கேரியிலுள்ள விராக் ப்ரைமரி ஸ்கூலின் பாட்டுக்குழு பல விருதுகளை வென்றிருக்கிறது. இந்தப் பள்ளிக்கு புதிதாக வந்து சேருகிறாள் சோஃபி. அந்தப் பள்ளியில் அவளுக்கு பிடித்த இடமாக பாட்டு க்ளாஸ் இருக்கிறது. ஸ்கூலில் சேர்ந்த கையோடு தனது அம்மாவிடமும் தலைமை ஆசிரியரிடமும் பாட வேண்டுமென்ற ஆசையைத் தெரிவிக்கிறாள். பள்ளி வகுப்பு ஆசிரியைகள் மிகுந்த இறுக்கத்துடன் சுரத்தில்லாமல் பாடமெடுக்கிறார்கள். ஆனால் பாடம் நடந்துகொண்டிருக்கும்போது குழந்தைகள் உயிரோட்டமாக விளையாடி மகிழ்கின்றனர். அதில் ஒரு சிறுமி லிசா மிகவும் துறுதுறுவென்று இருக்கிறாள். சோஃபியுடன் நட்பாகிறாள்.

சோஃபி ஆசையாசையாக பாட்டு வகுப்பில் பாடிவிட்டு வெளியேறும்போது பாட்டு ஆசிரியை மிஸ்.எரிக்காவால் தடுத்து நிறுத்தப்படுகிறாள். பாடலின் முடிவில் மற்ற குழந்தைகள் மிஸ் எரிக்கா கொடுக்கும் சாக்லேட்டுகளை எடுத்துக்கொண்டு அமைதியாக வெளியேறுகின்றனர். பாட்டுப் பயிற்சி போதாதென்றும் அதனால் மைம் (வெறும் வாயசைப்பு) மட்டும் செய்யுமாறும் சோஃபியிடம் சொல்கிறாள் எரிக்கா.மனமுடைகிற சோஃபியிடம் இதை வெளியில் சொன்னால் அசிங்கம் என்று மிரட்டி அனுப்புகிறாள் மிஸ் எரிக்கா.

பள்ளிவிட்டு வீட்டுக்குப் போகும் வழியில் தனது நண்பி சோஃபியிடம் மிட்டாய்களை பகிர்ந்துகொள்ளும் லிசா அவளிடம் தனது தகப்பன் ஒரு வானொலிக் கலைஞர் என்றும் நன்றாகப் பாடினால் அவருடன் வானொலி நிகழ்வில் பங்குபெறலாமென்றும் சொல்லிக்கொண்டு வருகிறாள். செய்தியிலும் மிட்டாயின் சுவையிலும் ஆர்வம் காட்டாதவளாக கூட நடந்துவரும் சோஃபியிடம் முகவாட்டம் உள்ளதைக் கண்டுபிடிக்கிறாள் லிசா. கேட்டதற்கு ஒன்றுமில்லையென்று மழுப்புகிறாள் சோஃபி.

சோஃபி-லிசா நட்பு இறுகுகிறது. பாட்டு வகுப்பில் சோஃபி பாடாமல் வெறும் வாயை மட்டும் அசைப்பதைக் கண்டுபிடித்துக் கேட்கிறாள் லிசா. வேறு வழியில்லாமல் டீச்சர் தனக்கு இட்ட கட்டளையை மிகுந்த மனவலியோடு லிசாவிடம் சொல்கிறாள்.அடுத்த பாட்டு வகுப்பில் சோஃபியைப் போலவே மற்ற சில குழந்தைகளும் பாடாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியுறுகிறாள் லிசா. மிஸ் எரிக்காவிடம் பாட்டின் இடைவெளியில் இதை பற்றி வினவுகிறாள் லிசா. அவளோ பரிசு வாங்கவேண்டுமெனில் நன்றாகப் பாடாதவர்களை மறைத்து ஓரங்கட்டவேண்டும் என்று சொல்ல லிசாவோ தானும் பாட விரும்பவில்லையென்று அவ்விடத்தைவிட்டு அகல்கிறாள். மிஸ் எரிக்கா லிசாவைத் தடுத்து லிசா ஒரு சிறந்த பாடகியென்றும் பாடமுடியாத குழந்தைகள் மற்றவர் முன் அவமானப்பட வேண்டாமென்றும் உசுப்பிவிடுகிறாள். அதற்கு வசப்படும் லிசா அமைதியாகிவிடுகிறாள். சோஃபியும் தன்னைபோலவே பாடமுடியாத குழந்தைகளை கண்டுகொள்கிறாள்.

பாட்டு வகுப்பில் பாடமுடியாமல் தவிக்கும் சோஃபி தனிமையில் தன் வீட்டிலும் பள்ளி மைதானத்தில் குழந்தைகளோடு குழந்தைகளாக விளையாடும்போதும் உரக்கப் பாடி மகிழ்கிறாள். லிசா தனது தகப்பனுடைய இசைக்கோர்ப்புகளை சோஃபிக்குப் கேட்க வைக்கிறாள். லிசாவுக்கு சோஃபியின் உள்ளக்கிடக்கை தெரியவருகிறது.மிஸ் எரிக்காவை மடக்க ஒரு வழி இருக்கிறது என்று சொல்கிறாள் சோஃபி.choir பாட்டுப்போட்டி நெருங்குகிறது. எரிக்காவின் குரூர ரகசியத்தை எப்படித் தகர்ப்பது ? சோஃபி திட்டம் தீட்டுகிறாள்.

விழா மேடை. பாட்டுப்போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தான் சொன்னதை தொடர்ந்தால் வெற்றிப்பரிசாக ஸ்வீடன் முழுவதும் பெருமை பொங்க பாடி வரலாம் என்ற மிஸ் எரிக்காவின் வார்த்தைகள் குழந்தைகளின் மனதில் ரீங்காரமிடுகின்றன. அடுத்தடுத்து வேறுவேறு பள்ளிகுழந்தைகள் பாடி முடிக்கும் தருவாயில் லிசா-சோஃபியின் குழு மேடையேறுகிறது. குழந்தைகளின் முன் நின்று மிஸ் எரிக்கா பாடுமாறு அவர்களைக் கட்டளையிடுகிறாள். கூட்டம் அவர்களை உன்னிப்பாக கவனித்து பாடலைக் கேட்க தயாராகுகிறது. குழந்தைகள் ஆழமான கலை நெகிழ்வோடு பாட ஆரம்பிக்கின்றன.மேலெழுவது குரல் அல்ல; வெறும் வாயசைப்பு மட்டுமே. மிஸ் எரிக்கா பொறுமையிழக்கிறாள். கூட்டம் சலசலப்பாகிறது. கடுப்பாகிற மிஸ் எரிக்காவிற்கு வெறும் வாயசைப்பு மட்டுமே அக்குழந்தைகளால் அங்கு நிகழ்த்தப்படுகின்றது. லிசாவின் கடைவாயோரம் மெல்லிய புன்னகைக் கீற்று.{pagination-pagination}

விழா மேடையிலேயே இக்கட்டுரையின் முதலில் வந்த அந்த முதல் வார்த்தையை உதிர்த்துவிட்டு கோபாவேசமாமாக வெளியேறுகிறாள் அந்தப் பாட்டு ஆசிரியை மிஸ்.எரிக்கா. சோஃபி கண்ணசைக்க யாரையெல்லாம் பாடக்கூடாது என்று மிஸ்.எரிக்கா ஒதுக்கி வைத்திருந்தாளோ அக்குழந்தைகள் அனைத்தும் நம் ஜீவன் உருக பாட ஆரம்பிக்கின்றன.தனித்துவங்களைக் கொன்று மாகாணத்திலேயே முதலிடம் பெறும் சூட்சுமங்கள் பல்லிளிக்க ஆரம்பிக்கின்றன.

இக்கணத்தில் இக்கவிதையைக் குறிப்பிடவேண்டுமென்று தோன்றுகிறது.

குழந்தை என்னிடம் கேட்டது

மீன் உடம்பிற்குள் ஈரமாக இருக்குமா?

இல்லை என்றேன் நான்

அப்படியென்றால் வேறு எப்படியிருக்கும்

சிவப்பாகவும் இளஞ்சிவப்பாகவும்

காலை நேரத்துக் கல்லறையைப் போல

குளிர்ச்சியாகவும் இருக்கும் என்றேன்

குழந்தை மறுபடியும் கேட்டது

உனக்கு எப்படித் தெரியும் அது

இறந்து போனாலன்றி?

---பிரெய்ன் டர்னர்

 (தமிழில்: எஸ். பாபு)

இக்குறும்படத்தின் நுட்பங்கள் என சிலவற்றைக் குறிப்பிடலாம். முதலாவதாக, முதன் முதலில் பள்ளி பாடல் குழுவுடன் சோஃபி இணைந்துபாடும்  பாடலை வராண்டாவை துடைத்து சுத்தப்படுத்திக்கொண்டிருக்கும் வேலைக்காரப் பெண்மணி கேட்டு நெகிழ்வதைக் காட்டும்போதும், மைதானத்தில் குழந்தைகள் ரைம் பாடல்களைச் சொல்லி ஒருவருக்கொருவர் கூடிப் பாடி களிநடனம் புரிந்து மகிழ்கையில் பாடலாசிரியைக்கு கிட்டாத அக்கானத்தின் மேன்மை நமக்கும் புரியவருகிறது. இரண்டாவதாக குரூர ரகசியத்தை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தோழி லிசாவுடம் மனபாரத்துடன் நடந்துவரும்போது பின்னனியில் நாயின் குரைப்பொலியை பயன்படுத்தியிருப்பது சோஃபியின் மனவலியை நாம் ஆழமாக அனுபவிக்கமுடிகிறது.

மூன்றாவதாக வீட்டில் தன் குரலை தானே பாடி கேட்கும்போது தான் நன்றாகத்தானே பாடுகிறேன் ஏன் என்னை பாட்டு ஆசிரியை மைம் செய்யச் சொன்னாள் என்று குழம்பி கண்ணாடியில் முகம் பார்க்கும் காட்சி சோகப்பூவாக நம் மனதில் மலர்கிறது. நான்காவதாக சில குழந்தைகளின் தனித்துவமான குரல்கள் பாட்டு ஆசிரியை கொடுக்கும் சாக்லேட்டுகளில் மைம்- ஆக மாறுகின்றன. ஐந்தாவதாக பாட்டு ஆசிரியையின் பியானோவின் மீது அவளின் மனதைப் பிரதிபலிக்கும் விதமாக முட்கள்ளி பூந்தொட்டி ஒன்று இருப்பதைக் கவனிக்கலாம்.

ஆறாவதாக.இயக்குனர், செர்ஜி எய்சன்ஸ்டெய்னின் ‘ஜக்ஸ்டாபொஸிசன்’ எடிட்டிங்கின் மூலமாக இக்குறும்பட உள்ளடக்கத்தை கட்டமைத்திருப்பது ஒரு நல்ல திரைக்கதை என்பது எடிட்டிங்கின் வழியாக எழுதப்படும்பொழுது அதன் நாடகத்தன்மையை மெருகேற்றலாம் என்பதற்கு இக்குறும்படம் ஒரு சான்று.

இக்குறும்படம் ‘சிங்’ -குடன் போட்டியிட்ட சக குறும்படங்கள்: Ennimis interieurs, La femme et le TGV, Timecode, Silent nights ஆகியவைகளாகும். மின்டென்கி எனும் இக்குறும்படம் தற்காலத்தில் உணர்ச்சி வறட்சியோங்கி குழந்தைகளிடையே மனவியாதிகள்  பெருகிவரும் நிலையில் பெரும் சாட்டையடியாக வெளிவந்திருக்கிறது. முப்பத்தி ஐந்து வயதாகும் இயக்குனர் க்றிஸ்டோஃப்  டீக் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் திரைப்பட இயக்க படிப்பும், திரைப்பட தயாரிப்பு படிப்பை ஹங்கேரியன் அகாடமி ஆஃப் ட்ராமா, ஃபிலிம் அண்டு டிவியிலும் முடித்திருக்கிறார். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ‘ம்யூனிக்’ திரைப்படத்தில் உதவி எடிட்டராக பணிபுரிந்திருக்கிறார்.

க்றிஸ்டோஃப்  டீக் இதற்கு முன்பே சில குறும்படங்களையும் இயக்கியிருக்கிறார்; அதில் குறிப்பிடத்தக்கது ‘லாஸிங் இட்’ . 2012-ஆம் ஆண்டே தன் ஸ்வீடிய நண்பன் மூலமாக இக்குறும்படத்தின் உள்ளடக்கததை கடன் வாங்கிய டீக் அதற்கான திரைக்கதை எழுதி முடித்துவிட்டு அதை ஆங்கில மண்ணின் பின்புலத்தில் எடுக்க காத்திருந்தார். அத்திரைக்கதையை 2014-ஆம் ஆண்டு மறுதிருத்தம் செய்து நேசனல் மீடியா அண்டு கம்யூனிகேசன்ஸ் அத்தாரிட்டியிடமிருந்து ஹங்கேரியப் பணத்தில் எண்பது லட்சம் ஃபாரின்ட்களும் மேலும் இருபது லட்சம் ஃபாரின்ட்கள் திரைக்கலைஞர்கள் மற்றும் ஸ்டுடியோக்களிடமிருந்தும் பெற்று இக்குறும்படத்தை இயக்கியிருக்கிறார்.

நடிப்புத் தேர்வில் கலந்துகொண்ட எண்பது குழந்தைகளில் முன்னிலைக் கதாபாத்திரங்களில் நடித்த சோஃபியும்-லிசாவும் தேர்வாகியிருந்தார்கள். மேலும் ஐந்து பள்ளிகளிலிருந்து பாட்டுப்பாடும் குழந்தைகள் தேர்வாகியிருந்தார்கள். ஆறே நாட்களில் படமாக்கப்பட்ட இக்குறும்படம் ஒரு வருட காலம் எடிட்டிங்கிற்காகவும் ஒலிகோப்பிற்காவும் எடுத்துக்கொண்டது. உலக திரைப்பட விழாக்களில் பவனி வந்த இந்த குறும்படம் ஆஸ்கார் மட்டுமல்லாது பெர்லின் திரைப்பட விழா விருதும் பெற்றிருக்கிறது.

பேசலாம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com