2. ஜன்னல் ஆகாயம்

சிலநேரங்களில் என்  வாழ்வு  300 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது.
2. ஜன்னல் ஆகாயம்

Le Femme et le TGV (2016)/ Director: Timo von Gunten

'சிலநேரங்களில் என்  வாழ்வு  300 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது. இந்த டிஜிவி ரயிலைப் போன்று.' ப்ருனோ அலிசேவுக்கு எழுதும் கடிதத்திலிருந்து..

மான்பிஜு என்பது  ஒரு அழகான சுவிட்சர்லாந்து கிராமம்.அந்த  ஊரின் ரயில்வே தண்டவாளத்தையொட்டி தனிமையில் அமைந்திருக்கும் ஒரு வீட்டில் வயதான  அலிசே வாழ்ந்து வருகிறாள். மகன் பியரே சிறுவனாக இருந்தபொழுதே கணவனை இழந்துவிட்ட அலிசே உள்ளூருக்குள் வாழ்வாதாரத்திற்காக தன் குடும்ப பேக்கரியை வயதான காலத்திலும் தொடர்ந்து  நடத்தி வருகிறாள். மகன் பியரே வெளியூரில் வேலையிலிருக்கிறான். 

சிறுவயதிலேயே தகப்பனை இழந்துவிட்ட பியரேவுக்கு தனிமை உணர்வு வந்து விடக்கூடாது என்பதற்காக வீட்டையொட்டியிருக்கும்  தண்டவாளத்தில் காலை மாலை இருவேளையும் வந்து போகும் ரயிலுக்கு கொடியசைத்து கைகாட்டுவது வழக்கம். தன்னுடன் மகன் வாழ்ந்து வராதபோதும் அலிசே கொடியசைப்பை தொடர்கிறாள்.

அலிசே நடத்திவரும் பவுலாஞ்சரி கன்ஃபிசரி பேக்கரியின் எதிர்த்தாற்போல் எக்கோல் ஆஃப் டேன்ஸ் என்ற நடனப் பள்ளியை ஜே.ட்ரே என்ற இளம் பெண் நடத்தி வருகிறாள். அவளைச் சந்திக்க இளம் வாலிபன் ஒருவன் அங்கு வந்து போகிறான். ஒரு தடவை அந்த இளம் வாலிபன் தெரியாத்தனமாக அலிசேவின் பேக்கரியின்முன் தனது காரை பார்க் செய்துவிடுகிறான். எரிச்சலுற்ற அலிசே அந்த இளம் வாலிபனை நடனப் பள்ளியின் முன்வைத்து எல்லா நடன மங்கைகளும் பார்க்கும் வகையில் சண்டையிடுகிறாள். ஆனால் அவனோ கூனிக் குறுகாமல் அலிசேவை தங்களோடு நடனமாட இடமிருக்கிறது என அன்பாக அழைக்கிறான்.

புழுதி பறக்க காரில் சீறிப் பாயும் இளங்காளை வாலிபன், கடிதங்களை உறவுகளின் அழைப்பைப்போல் வாஞ்சையோடு சுமந்துகொண்டலையும் போஸ்ட்மேன், தனது பால்கனி பூந்தொட்டியில் நீர்தெளிக்கும் வயதான முதியவர், தெரு நடுவில் அமர்ந்து முத்தமிட்டுக்கொள்ளும் காதலர்கள், குதூகலமாக விளையாடும் குழந்தைகள், பாசம் ததும்பும் முகத்துடன்  பிரியமாக பொருட்களை விற்கும் பெண்மணி என்று எதிர்வரும் எவரிடமும் புன்னகையை அளிப்பதில்லை அலிசே. உயிருள்ள மனிதர்களைவிட, காலை மாலை இருவேளையும் அந்த ஊரைக்கடக்கும் உயிரற்ற டிஜிவி ரயிலுக்கு கொடியசைத்து சந்தோசமடைகிறாள் அலிசே.

இப்படி வசந்தமில்லாத வாழ்வாகப் போய்க்கொண்டிருக்கும் அலிசேவின் அன்றாடத்தில் கூண்டுக்கிளியொன்றும், நேரந்தவறாது கொடியசைக்க உதவும் இரண்டு அலாரம் கடிகாரங்களுமே துணை. அவளது பேக்கரி சுவையை ஒரேயொருத்தி மட்டுமே அறிந்திருக்கிறாள். வாடிக்கையாளர்கள் வருகையை அதிகரிக்க தள்ளுபடியை அதிகரித்தும் ஒரு ஈ காக்கா கூட வருவதில்லை. எப்பொழுதாவது வருகிற அந்த இளம் வாலிபன் தன் நடனமகைக் காதலிக்கு பிடித்த கேக்குகளை வாங்கிச் செல்கிறான். உதவிக்கு ஆட்கள் வேண்டுமென்ற போர்டைப் பார்த்துவிட்டு அலிசேவுக்கு தான் உதவ விரும்புவதாகச் சொல்கிறான் அந்த இளம் வாலிபன் ஆனால் அவளோ அவனின் மனதைப் புண்படுத்தி அனுப்புகிறாள். மேலும் அலிசே வெறுப்புடன் பண்டங்களின் விலையை இவனுக்காக அதிகமாக கூட்டிச் சொன்னாலும் புன்னகை மாறாத அந்த இளம் வாலிபன் இவளுக்கு தனது சகிப்புத்தன்மையையே பரிசாக வழங்குகிறான்.

தீராத் தனிமையும் மனிதர்களிடமிருந்து மனவிலக்கமும் கொண்டிருக்கும் அலிசேவின் வாழ்வில் ஒரு நாள் டிஜிவி ரயிலிலிருந்து விழுந்த கடிதம் ஒன்று அவளின் மனதைத் தொடுகிறது. வறட்டுப் புல்லின் மீது மெல்ல பனி படிகிறது. 'டிஜிவி ரயிலில் வேலை நிமித்தமாக தினமும் பிரயாணம் செய்யும் எனக்கு தங்களின் கொடியசைப்பு என் தனிமையைப் போக்கி மனதிற்கு மிகுந்த உவகையளிக்கிறது. அன்புடன் ப்ருனோ சுப்ரிஸ்ட்.’ இப்படியாக அக்கடிதம் அலிசேவின் மன இறுக்கத்தை லேசாக தளர்த்துகிறது. அந்த ப்ருனோ யாராக இருக்கும் என்று ஆர்வம் மேலோங்க டிஜிவி ரயில் நிலையத்திற்கு போன் செய்து வினவுகிறாள். அலிசே அக்கடிதம் ரயில் எஞ்சின் டிரைவர் எழுதியது என்று பாவித்து வினவுகிறாள். தினமும் காலை டிஜிவி ரயில் புறப்படும் அந்த ஸூரிச் ரயில் நிலைய ஊழியப் பெண் அலிசேவின் வினவலுக்கு பதில் தர மறுக்கிறாள். எரிச்சலடைகிற அலிசே தனது பழைய டெலிபோன் ரெசீவரை பலமாக வைத்துவிட்டு ப்ருனோவை பற்றிய கற்பனைகளில் மூழ்குகிறாள். தான் ப்ருனோவைப் பற்றி மேலும் அறிய ஆவலாக இருப்பதாக ரயில்வே நிலைய முகவரியில் ப்ருனோவுக்கு போய்ச் சேராத ஒரு கடிதம் எழுதுகிறாள் அலிசே.

டிஜிவி ரயிலின் மூலமாக அலிசேவுக்கு அடுத்ததாக ப்ருனோவிடமிருந்து ஒரு கடிதம் கிடைக்கிறது. 'தங்களின் பேக்கிங்கில் உருவான க்ரைசாந்தும் ட்ரஃபுல் சாக்லேட்டும் இன்னும் என் சுவை மொட்டுகளில் தங்கியிருக்கின்றன. அந்தச் சுவையில் உங்களின் மனம் தெரிகிறது. அது என்னை வாழ்வை அப்படியே ஏற்றுக்கொள்ளச் சொல்கிறது. மனதிற்கினிய ப்ருனோ.’  இப்படியான வரிகளைக் கண்டவுடன் மனம் மலர்கிறாள் அலிசே. பதிலுக்கு ப்ருனோ கொடுக்கும் பாலாடைக் கட்டிகள் அவளின் குளிர் பதனப் பெட்டி முழுவதும் நிரம்பி வழிகின்றன. மற்றுமொரு கடிதத்தில் பாரீஸ் நகரத்தின் அழகை வர்ணித்துவிட்டு அங்கு தன் வாழ்வை ஷிஃப்ட் செய்ய விரும்புவதாக குறிப்பிடுகிறார் ப்ருனோ.   

தாய் அலிசேவின் பிறந்த நாள் நெருங்குகிற வேளையில், வெளியூரில் வாழ்ந்துகொண்டிருக்கும் மகன் பியரே அவளை நேரில் வந்து சந்திக்க வேண்டுமென்று போனில் சொல்கிறான். தங்களின் பேக்கரியில் சந்திக்கலாமென்று அலிசே சொல்ல அவனோ அவ்வழைப்பை மறுத்துவிட்டு ஊரிலுள்ள மற்றொரு ரெஸ்டாரண்டுக்கு வரச் சொல்கிறான். அந்நாளில் அங்கு இருவரும் சந்திக்கின்றனர். தன் புதிய பாலாடைக்கட்டி நட்பைப் பற்றி அலிசே புளகாங்கிதமாக மகனிடம் சொல்ல இந்த வயதில் இது அவசியமா என்று அவளை ஏளனமாகப் பேசுகிறான். மேலும் வீட்டையும் பேக்கரியையும் விட்டுவிட்டு முதியோர் இல்லத்தில் சேர வற்புறுத்துகிறான். அதற்கான படிவத்தை அவளிடம் கொடுக்கும்பொழுது தனக்கு இன்னும் வாழ்க்கை தீர்ந்து போய்விடவில்லை என்று மகனிடம் கோபப்படுகிறாள். கடந்தகாலத்தை தக்கவைக்க முயற்சிக்காதே என்கிற மகனை அங்கேயே விட்டுவிட்டு விருட்டென்று வெளியேறுகிறாள் அலிசே. அலுவலக போனை அட்டென்ட் செய்யும் மகன் அலிசேவின் இந்தச் செயலைக்கண்டு அதிர்ச்சியுறுகிறான். இவ்வளவு வேகமாக எங்கே போகிறாள் என்று பதட்டமடையும் பியரேவுக்கு டிஜிவி ரயில் ரெஸ்டாரண்ட் முதலாளி பதில் சொல்கிறார்.

மாலை மங்குகிற நேரம். டிஜிவி ரயில் வராததுகண்டு மனவருத்தம்கொள்கிறாள் அலிசே. மேலும் தண்டவாளத்தில் தனியாக உலாவிக்கொண்டிருக்கிறாள். இக்காட்சியைப் பார்த்து தாயின் மீது பரிதாபம்கொள்கிற மகன் அவளின் சோகத்திலிருந்து அவளை விடுபடவைக்க முயற்சிக்கிறான். வாழ்வில் நாம் ஒருவரையொருவர் மறக்கத்தான் வேண்டியிருக்கும் என்று தாயைத் தழுவிக்கொள்கிறான். மெல்ல இருள் கவிகிறது.

தினமும் காலை மாலை இரண்டு வேளையும் வந்துபோகும் டிஜிவி ரயில் வராதது கண்டு அலிசேவின் மனம் சோகத்தில் ஆழ்கிறது. ரயில்வே நிலையத்துக்கு போன் செய்கிறாள். டிஜிவி ரயில் இனிமேல் இவள் வீட்டுத் தண்டவாளத்தில் ஓடாது என்பதை அறிகிறாள். மேலும் அந்த ரயில் பாரீஸுக்கு திருப்பிவிடப்பட்டிருக்கிறது என்பதையறிந்த அலிசே  ஒரு முடிவுக்கு வந்தவளாக தந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகவேகமாய் மிதிக்கிறாள். அழகான கவுனை உடுத்தி தங்க பட்டனிட்டு கைக்கடிகாரம் நேர்த்தியாகக் கட்டி காற்றில் கூந்தல் அலைபாய தனது மாடி வீட்டு ஜன்னலின் வழியாக புன்னகை ததும்ப டிஜிவி ரயிலுக்கு கொடியசைப்பு நிகழ்த்திக்கொண்டிருந்த அலிசே இன்று குளிக்காமல் கொள்ளாமல் இரவு உடையுடன் ஊரிலுள்ள மனிதர்களையெல்லாம் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டு அதிவேகமாக காற்றைக் கிழித்துக்கொண்டு ஸூரிச் ரயில்வே நிலையத்தை நோக்கி விரைகிறாள்.

வேகவேகமாக சைக்கிளை ஓட்டி வந்து மூச்சிரைக்க ஓரிடத்தில் நிற்கிறாள் அலிசே.  எப்பொழுதும் அலிசேவின் வெறுப்புக்குள்ளாகும் அந்த நடன மங்கையின் காதலன் தனது காரின் டிக்கியின் மீது அமர்ந்துகொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இக்காட்சியை வேடிக்கை பார்க்கிறான். ஆபத்பாந்தவனாக மாறும் அவன் அலிசேவை சரியான நேரத்தில் ஸூரிச் ரயில் நிலையத்திற்கு கொண்டுவந்து இறக்கிவிடுகிறான். குளிருமென்று தனது ஜெர்கினை எடுத்து நீட்ட அவளோ சூழலை மறந்தவளாக ரயிலைப்பிடிக்க ஓடுகிறாள். ரயில் புறப்படும் நேர அறிவுப்பு பலகையில் டிஜிவி ரயிலின் புறப்பாடை அறிகிற அலிசே பதற்றமாக விரைகிறாள். ரயில், ஸ்டேசன் மாஸ்டரால் விசில் ஒலியை மனதில் வாங்கிக்கொண்டு பெட்டிகளை இழுக்கத் தயாராக மூச்சை உள்வாங்கி வெளியே விட்டுக்கொண்டிருக்கிறது. அலிசே எஞ்சின் டிரைவர்தான் ப்ருனோ என்று தப்பர்த்தம்கொண்டு அவரை அழைக்கிறாள். அவரோ தந்து கேபினில் ஏறி அமர்ந்துவிட்டு ரயிலின் அனைத்துக் கதவுகளையும் மூடுகிறார்.

ஓடிவந்து மூச்சிரைக்க நிற்கும் அலிசேவை கண்ணாடி ஜன்னலின் தட்டல் கவனம் கலைக்கிறது. அந்த குரலற்ற வாயசைப்பு ப்ருனோ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறது. அலிசேவின் முகம் பிரகாசமடைகிறது. ப்ருனோவுக்கும் மகிழ்ச்சி. மேலும் தன் மனைவியை அறிமுகப்படுத்தி வைக்கிறார் ப்ருனோ. அலிசேவின் முகம் வாடுகிறது. ரயில் நகர ஆரம்பிக்கிறது. கூடவே அலிசேவும் ஓடுகிறாள். ப்ருனோவும் அவரின் மனைவியும் கையசைக்க அலிசே நிற்க ரயில் வேகமெடுத்து ஓடி மறைகிறது. ஒரு அன்பான நினைவு மனவெளியில் ஊர்ந்து மறைகிறது. காலத்தில் உறைந்து நிற்கும் அலிசேவை தனது ஜெர்கினைகொண்டு போர்த்தி அன்போடு அணைக்கிறான் நடனமங்கை காதலன்.

சில நாட்களுக்குப் பிறகு

'கண்முன்னே வாழ்வு இருப்பதையறியாத நான் இவ்வளவு நாள் அது என் கையைவிட்டு போய்விடுமோவென்று வருத்தப்பட்டுக்கொண்டிருந்துவிட்டேன்

அது உங்களால் மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது. நன்றி..'

இவ்வாறாக ஈ-மெயில் கடிதம் எழுதி தான் புதிதாக வாங்கிய கம்ப்யூட்டர் வழியாக ப்ருனோவுக்கு நன்றியோடு அனுப்புகிறாள். நடனமங்கைக் காதலன் அலிசேவுடன் பேக்கரியில் உதவும் ஆளாக மாறியிருக்கிறான். ஊர்மக்கள் மீண்டும் அலிசேவின் அன்புச் சுவையை அறிய பெருக்கெடுத்து ஓடிவர அலிசேவின் மனம் நெகிழ்கிறது. ஜன்னல் ஆகாயம் விரிவடைய கூண்டுக்கிளி தற்போது வெளியே உலவுகிறது.   

இந்த வருட ஆஸ்கார் விருதில் லைவ் ஆக்சன் குறும்படப் பிரிவில் போட்டியில் கலந்துகொண்ட குறும்படம் இது. நமக்குள் இருக்கும் அன்பை வெளிப்படுத்தவும் மாட்டோம்; யாரையும் நம் உள்வட்டத்துள் அனுமதிக்கவும் மாட்டோம்; ஆனால் கசிந்துருகும் அன்பிற்காக ஏங்குவோம். இப்படித்தான் நாம். இக்குறும்படம் அந்த அகத் தத்தளிப்பை வெளிச்சம்போட்டு காட்டுகிறது.  இருபத்தெட்டு வயதாகும் இந்தக் குறும்படத்தின் இயக்குனர் டிமோ சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ராவில் செல்லோ என்கிற கம்பி வாத்தியக் கருவியை வாசித்துவருபவர். Le Voyageur (2016) என்ற முழு நீள திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். பால்சாக்கின் சிறுகதை ‘தி அன்னோன் மாஸ்டர்பீசை’-த் தழுவி ஜேக் ரிவெட் இயக்கிய ஃப்ரென்ச் திரைப்படம் La belle noiseuse. இதில் நம் டிஜிவி ரயில் கதாநாயகி அலிசேவாக நடித்த ஜேன் பிர்கின் முக்கியமான பாத்திரமேற்று நடித்திருக்கிறார். டிமோவின் டிஜிவி குறும்படத்தில் முகத்தில் வாழ்வின் கோலங்களை உணர்ச்சிப்புள்ளிகள் வழி வரைந்து காட்டியிருக்கிறார்,

அர்த்தமற்ற இவ்வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவது அன்பு மட்டுமே. அனைத்திற்குகும் தீர்வு அதில் மட்டுமே உள்ளது. நாம் வெற்றுச் சட்டகங்கள் அல்ல; எல்லையில்லாப் பேரண்டம் நம்முள்ளே. ஏனோ தேவதேவனின் இக்கவிதை இக்கணம் மனதில் நிரம்புகிறது; அலிசேவின் கூண்டுக்கிளி குறியீடு சொல்லும் பறத்தலே அதன் சுதந்திரம் என்பது போல.

என் வீட்டுக்குள் வந்து 

தன் கூட்டை கட்டியது ஏன் ?

அங்கிருந்தும் 
விருட்டெனப் பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு ?

பார் ஜன்னல் கம்பிகளை உதைத்து

இப்பவும் விருட்டென்று தாவுகிறது அது 

மரத்திற்கு
மரக்கிளையினை
நீச்சல்குளத்தின் துள்ளுபலகையாக மதித்து

அங்கிருந்தும் தவ்விப்பாய்கிறது

மரணமற்ற பெருவெளிக்கடலை நோக்கி

சுரேலென தொட்டது அக்கடலை என்னை

ஒரு பெரும் பளீருடன்

நீந்தியது அங்கே உயிரின் 

ஆனந்த பெருமிதத்துடன்

நீந்தியபடியே திரும்பிப் பார்த்தது தன் வீட்டை

ஓட்டுகூரையெங்கும்
ஒளியும் நிழலும் உதிர் சருகுகளும்

உள் அறைகளெங்கும்

சிரிப்பும் அழுகையும் மரணங்களும்

- தேவதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com