4. அருவக் கரைதல்

குறும்படப் பிரிவில் 2013-ஆம் ஆண்டின் கான்ஸ் விருதை பெற்றிருக்கும் இக்குறும்படம்
4. அருவக் கரைதல்

Whale Valley (2013) / Director Guðmundur Arnar Guðmundsson

குறும்படப் பிரிவில் 2013-ஆம் ஆண்டின் கான்ஸ் விருதை பெற்றிருக்கும் இக்குறும்படம் சினிமேட்டோகிராபிக் எக்ஸ்பிரஷன் (cinematographic expression) என்கிற தளத்தில் வெகுவாக பாராட்டப்பட்டது.  

இரண்டு சகோதரர்களுக்கிடையிலான அன்பை அவர்களின் தற்கொலை முயற்சியை முன் வைத்து மனதில் உறையும்படி காட்சி படிமங்களால் கோர்த்திருக்கிறார் இயக்குனர் குட்மன்ட்சன். பதினைந்து நிமிடங்களில் நம் மனதில் நிறப்பிரிகைகளாக உணர்ச்சி அலைகளை பொங்கிப் பெறுகும் ஒரு இசைப் பிரவாகமாக நிகழ்த்தியிருக்கிறார் இந்தத் திரைக்கலைஞன்.

ஐஸ்லாந்தின் ஒரு முகமறியா கிராமம். ஃப்ஜோர்ட் எனப்படுகிற கடலும் நிலமும் முயங்கி உப்புப்பனி உறைந்த பள்ளத்தாக்கு. அறிமுகமில்லா மனிதர்கள். இரு சகோதரர்கள் தங்கள் தாய் தந்தையுடன் வசித்து வருகின்றனர். நிச்சயமாக அவர்கள் ‘வாழ்ந்து’ வரவில்லை.

பச்சை பார்க்காத மன நிலம் வெறுமையை உழுது கொண்டிருக்கிறது. நீண்ட பகலும் இரவும் கொண்ட பருவங்கள்  கரிய மலை நிழல்களை உருவாக்கிய வண்ணம் உள்ளது. உடலை மட்டுமல்ல ஆன்மாவையும் சேர்த்தே பிழிந்தெடுக்கும் ஒரு கடினமான மீன்பிடித்தல் மட்டுமே அங்கு வாழ்வாதாரம்.

ஆழ் துயர்க் குறியீட்டைப் போல பெரும் வேல் மீன்கள் துக்கத்தையும் வாழ்வையும் ஒரு சேரக் கொண்டு வருகின்றன. தனிமை சூல்கொள்ளும் அந்த இருண்மையில் மன ஈரம் வறட்சியைத் தீண்டுகிறது.

ஒரு நாள் விவசாய தானிய கால்நடைக் கொட்டில் கிடங்கின் உத்திரத்தில் பதின் வயது அண்ணன் தூக்கு மாட்டிக்கொண்டு நிற்கும் காட்சியை விளையாடிக் கொண்டிருக்கும் தம்பி பார்த்துவிடுகிறான். இந்த நிலையில் தன்னைப் பார்த்துவிட்டானே என்று வேலியை மீறி தப்பி ஓடும் தம்பியை விரட்டிப் பிடிக்கிறான் அண்ணன்.

செம்மறிகள் வறண்ட நிலத்தை கரண்டுகொண்டிருக்கின்றன. அண்ணனின் பிடிக்குள் சிக்கிய தம்பி வறண்ட புற்களின் நடுவே உருண்டு புரள்கிறான். கரு மேகங்கள் சூழ்ந்த மந்தமான அந்த மந்தைவெளியில் பகலவன் மென் சூடு காட்டிக்கொண்டிருக்க அண்ணன் பதற்றமான மனநிலையில் ஒரு  சிகரெட்டை பற்ற வைக்க முயற்சிக்கிறான். அருகில் அதிர்ச்சியில் உறைந்த தம்பி அமைதியாக அமர்ந்திருக்கிறான்.

அம்மா அப்பாவிடம் இந்த சம்பவத்தைப் பற்றி மூச்சுவிடாதே; அவர்களுக்கு ஒன்றும் புரியாது என்று தாழ்வு மனப்பான்மையில் அரற்றுகிறான் அண்ணன். சிகரெட்டை ஒரு இழுப்பு இழுத்துவிட்டு தம்பியிடம் அதைக் கொடுக்க அவனும் புகையை இழுக்கிறான். கைப்புள்ளைகளை கட்டுப்படுத்தும் சூட்சுமம் அண்ணன்களுக்கு சாகிற தருவாயிலும் கைகூடி வருகிறது. மனமில்லாமல் இழுத்துவிட்டு அண்ணனிடம் சிகரெட்டைக் கொடுத்துவிட்டு வறப்புற்களை அளைந்துகொண்டிருக்கிறான்.

இரவு உணவு. உணவு மேஜையில் அம்மா அப்பாவுடன் அமர்ந்து அண்ணன் தம்பி இருவரும் அமைதியாக உணவருந்திக் கொண்டிருக்கிறார்கள். அப்பா அமைதியாக காரியத்தில் ஆழ்ந்திருக்க மனமில்லாமல் உணவை துழாவிக் கொண்டிருக்கும் இளையவனை அம்மா கண்ணுறுகிறாள். இன்னிக்கு காலையிலிருந்து எங்கே இருந்தாய்? என்னும் அம்மையின் கேள்விக்கு அண்ணனைப் பார்க்க அவனோ நீண்ட கடற்கரையில் என்று சுருங்கப் பதில் சொல்கிறான். அப்படின்னா அந்த தனித்து கரையொதுங்கிய வேல் மீனை பார்த்திருப்பாய் என்று அம்மை விளிக்க அமைதியாக ஆமோதிக்கிறான் மூத்தவன். இளையவன் அண்ணனின் பராக்கிரமத்தை மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தத்தளிக்கிறான்.

படுக்கை அறை. நள்ளிரவு. தூக்கம் வராமல் தத்தளிக்கும் தம்பி எழுந்துபோய் தூங்கிக்கொண்டிருக்கும் தன் அண்ணனின் மூச்சை நாசியில் வருகிறதா என்று தொட்டுணர்கிறான்.

அடுத்த நாள் உழும் இரும்பு இயந்திரம் தனிமையில் நின்றுகொண்டிருக்க நம் தம்பி மனபாரத்துடன் காய்ந்த செடிகள் ஒவ்வொன்றாக அடித்துக்கொண்டு வருகிறான். அண்ணங்காரன் அவன் அறையில் தனிமையில் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறான். பிறகு அரிவாளை பதம் பார்த்துக்கொண்டிருக்கும் தகப்பனை நோக்கி நகர்ந்து போகிறான். அப்பா திரும்பவும் அண்ணன் ஆர்னர் சோகமாகிவிட்டான் என்று தகப்பனிடம் முறையிடுகிறான். அவரோ இளையவனை உற்றுப் பார்த்துவிட்டு அமைதியாக தனது அரிவாளை மூங்கில் கழியில் கட்டிக்கொண்டிருக்கிறார். இவன் மென்று முழுங்குவதை அவர் கண்டுகொள்ளாமல் இருப்பதால் இளையவன் சுரத்தில்லாமல் ஆகிவிடுகிறான்.

கால்வாய் மலைகளில் வழிந்தோடிக்கொண்டிருக்கிறது. எதிர்க்காற்று சாமரம் வீச தார்ச்சாலையில் தன் இரு மகன்களையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு சிட்டாய்ப் பறக்கிறார் தகப்பன். வண்டியில் பாடலை ஒலிக்கவிட்டு காற்றில் கேசம் அலைபாய சந்தோஷமாக பின் பகுதியில் உட்கார்ந்து வரும் சின்ன மகனை ஓட்டுனர் இருக்கையின் பின் பகுதியிலிருக்கும் சிறிய கண்ணாடி ஜன்னலைத் திறந்து சந்தோஷமாகப் பார்க்கிறார். இளையவனின் குதூகலம் காற்றோடு உறவாடுவதைக் காண்கிறார். முன்புறத்தில் தகப்பனோடு அமர்ந்து வரும் மூத்தவனோ சோகமாய் இருப்பதை அல்லைக்கண்ணாடி பிரதிபலிக்கிறது.

கடலோரம் இறந்து தனித்துக் கிடக்கும் வேல் மீனை வாஞ்சையாக தொட்டுணரும் இளையவன் அதன் நெஞ்சாக்கூட்டில் காது வைத்துக் கேட்கிறான். அப்பா என்றவனழைக்கும் குரலுக்கு ஒதுங்கிபோ என்று மறுதலிக்கிறார் தகப்பன். உடன் அழைத்து வரப்பட்ட நண்பரோடு தகப்பன் அந்த மீனை வெட்டியெடுத்துக் கொண்டிருக்க இளையவனோ இரைச்சலிடும் கரையின் பின்னனியில் மரத்துப்போய் நிற்கிறான்.

முகம் கழுவும் குழாயில் தண்ணீர் வழிந்துகொண்டிருக்க தன் முகத்தை கண்ணாடியில் பிரதிபலித்துக்கொண்டே தான் அணிந்திருக்கும் ஸ்வெட்டரின் நூலை உருவிக்கொண்டிருக்கிறான் இளையவன். கதவைத் திறந்து வெளியேறும் அண்ணனை கண்ணாடி ஜன்னல் வழியாக உற்றுப் பார்த்துவிட்டு வெகு வேகமாகப் பின் தொடர்கிறான். பின் தொடர்ந்து வருபவனை தடுத்து நிறுத்தும் விதத்தில் பெருமூச்சொன்றை உதிர்த்துவிட்டு ஆவேசமாக தம்பியை நோக்கிப் போகிறான் அண்ணன் ஆர்னர்.

இப்ப நீ ஒழுங்கு மரியாதையா வீட்டுக்கு திரும்பி போகலைன்னா அடி வெளுக்கப்போறேன் பாரு என்று கோபாவேசமாக கத்திவிட்டு தம்பியை தூக்கி தரையில் போடுகிறான். விழுந்து அடிபடும் தம்பி கல்லொன்றை எடுத்து அண்ணனை அடிக்க கையை ஓங்குகிறான். அவனோ இவனைத் திரும்பிப் பார்க்காமல் கடலை நோக்கி வேகவேகமாகப் போகிறான்.

கடல் இரைந்துகொண்டிருக்க தம்பியின் குரல் பாசமும் பதற்றமுமாக ஆர்னர்! என்று கூவுகிறது. பெரும் மலை ஒன்று கடலடியில் வேல் மீனைப் போலவே படுத்துக் கிடக்க அதைத் தொடர்ந்து அண்ணனைத் தேடி அலைகிறான் தம்பி.

மீண்டும் அதே கூவல் ஆர்னர்! ஒற்றைக் கல்லின் மீது தனிமையில் குத்துக்காலிட்டு அமர்ந்திருக்கிறான் தம்பி கவலையுடன். மலை சூழ் தனிமையில் அமர்ந்திருப்பவனை காட்டுக் குதிரைகள் முகர வருகின்றன. மன அழுத்தம் அதிகமாகி எரிச்சலில் தன்னைச் சூழ்ந்திருக்கும் குதிரைகளை விரட்டுகிறான். கனைத்துக்கொண்டே தெறித்து ஓடுகின்றன அவை.

கன்னங்களில் கண்ணீர் வழிய திரும்பிப் பார்க்கிறான் அவனுடைய அண்ணன் தூரத்தில் நிழலாட நடந்து வருகிறான். தம்பியோ வேக வேகமாக விவசாய தானிய கால்நடைக்கொட்டில் கிடங்கை நோக்கி ஓடுகிறான். அதே உத்திரத்தில் கயிறு போட்டு கட்டுகிறான். அண்ணன் வருகிறானா என்று எட்டிப் பார்க்கிறான். தூரத்தில் அவன் கடலை விட்டகன்று குன்றேறி வந்து கொண்டிருக்கிறான். இவனோ கழுத்தில் சுருக்கு கயிறை மாட்டி தயாராக நிற்கிறான்.

காலடியில் வைக்கப்பட்ட முக்காலிப் பலகை திடீரென்று உடைந்து நொறுங்க கயிறு இறுகி மூச்சுத் திணறுகிறான் தம்பி. குரல்வளையை இறுக்கும் கயிறை தளர்த்த முடியாமல் உத்திரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறான் தம்பி. அங்கு வரும் அண்னன் ஆர்னர் துடித்துக்கொண்டிருக்கும் தம்பியை கண்டவுடன் இவார்! என்று அதிர்ச்சியில் கத்திக்கொண்டே ஓடி வந்து தூக்குகிறான். சுருக்கு கயிற்றை கத்தியால் அறுத்தெடுக்கிறான். தம்பியை மரணத்திலிருந்து மீட்கிறான்.

அக்கணத்தில் வெளியேகும் தம்பியின் மனமும் அண்ணனின் மனமும் அவர்கள் விடும் மூச்சுக் காற்றில் பெரும் பாசத்தை எழுதிச் செல்கிறது. என்ன பண்ணுகிறாய் நீ? என்று ஆவேசப்படுகிறான் அண்ணன் ஆர்னர். அவ்வளவு மூச்சுத் திணறலிலும் அண்ணனை இறுக்கி கட்டிக் கொள்கிறான் தம்பி. அவனை உச்சி மோந்து ஆரத்தழுவுகிறான் தழுதழுப்புடன் அண்ணன். பிறகு வெட்டுண்ட சுருக்கு கயிறையும் உடைந்துபோன முக்காலி மரப் பெட்டியையும் தூக்கி ஓரமாக எறிந்துவிட்டு ‘சீக்கிரம் ரெடியாகு; எதையும் சொல்லாதே’ என்று தம்பியை தைரியமூட்டி சகஜ நிலைக்கு கொண்டு வருகிறான் அண்ணன்.

அமைதியாக வெளியே வரும் இருவரும் அவ்விடத்திற்கு தகப்பன் ட்ரக்கில் வந்து சேர்வதை எதிர்கொள்கிறார்கள். இங்கதான் ஒளிஞ்சிருக்கியா என்று மகனை அதட்டும் தகப்பனோடு சேர்ந்து மூட்டைகளை இருவரும் கொட்டிலினுள் இறக்கிக் கொண்டுபோய் வைக்கிறார்கள். வேடிக்கை பார்க்கும் தம்பிக்கோ மூச்சுத் திணறல் சகஜத்திற்கு திரும்புகிறது.  வேலையை முடித்த அண்ணன் கனிவோடு தம்பியை தோளில் தட்டி கூட்டிச் செல்கிறான்.

இரவு. அண்ணன் தம்பி இருவரும் அவரவர் படுக்கைகளில். இவார்! தூங்கிட்டியா!- இது அண்ணனின் குரல். அமைதியாக திரும்பி பார்க்கிற தம்பி அண்ணனை நோக்கிப் போகிறான். வாத்சல்யமான அண்ணனின் அம்மை அரவணைப்பில் ஒரு குழந்தையைப் போல் கிடந்து உறங்க ஆரம்பிக்கிறான் தம்பி இவார். அந்தர வெளியில் மெல்ல தாலாட்டுத் தூளி புத்துயிர்ப்பை மீட்டுகிறது.

ஏனோ இக்கணம் இக்கவிதை மனதில் மேலெழுகிறது;

சுவராணியில் 
சிரிப்புடன் தொங்கும் நான் அறையில் 
ஒரு மேசை கூனல் முதுகு 
3 1/2 கால்கள்
(ஊனம் இழிவான சொல்), 
மனிதன் பண்டமாகிவிட்டான், உதட்டில் பதுங்குகின்றது பல்லி, அழாதே, 
எனது சிரிப்பு உனது இரை 
வர்ண வர்ண மாத்திரைகள் குழந்தைத்தனமானவை உனக்கு, ஆறிய தேநீரில் தத்தளிக்கும் அறையை மூடிவிடு 
கடன்பட்ட பணத்தில் இரு முழக் கயிறு, 
பேரம் பேசி வாங்கியிருக்கிறேன் தற்கொலையின் முடிவில் ???????????, 
இறந்த பின் என்னிடம் கேளுங்கள் ஏன்? எதற்காக? 
மிகுதிக் கேள்விக் குறிகள்... 
இலை நுனியில், இறுதி மழைத் துளி ஈரத்தில் கரைகிறது வானவில்லின் தசைத் துண்டு
'நீ' கனவு 
தூக்கு கயிற்றின் கீழிருக்கும் நாற்காலி, 
தற்கொலைக்கு முயற்சிப்பது பொழுதுபோக்கு, 
சிரிக்காதே, அது எனக்கு விளையாட்டு மாத்திரமே, 
உள்ளங் கை மின் மினிப் பூச்சியே நின் சிரம் பணிந்து மன்றாடுகின்றேன், 
மனம் இரவின் 103 வது பக்கம் 
ஒரு தாளை கிழிக்கட்டுமா? 
தோணி செய்ய.

- ஜெம்சித் ஸமான்

‘கனவும் கவித்துவ படிமமுமாக சூல்கொண்டது இக்குறும்படத்தின் திரைக்கதை. நீண்ட குளிர்கால இரவுகள் மற்றும் வெளிப்படுத்த முடியாத தாங்கவொணவியலாத நுண் பிரக்ஞைகள் ஐஸ்லாந்தின் தற்கொலை மனோபாவத்திற்கு காரணம். இக்குறும்படத்தின் நிலவியல் சகோதரர்களின் மனதை கண்ணாடி போல பிரதி பலிக்கின்றன.” போன்ற வாக்கியங்களை மனம் விட்டு பேசும் வேல் வேலியின் (whale valley)  இயக்குனர் ஒரு தேர்ந்த நுண்ணுணர்வாளர். இவருடைய அர்ட்டன் (Ártún) என்ற குறும்படத்திற்கு பிறகு தற்போது முழு நீளத் திரைப்படமான ஹார்ட்ஸ்டோன் (Heartstone) வெளிவரவிருக்கிறது. குழந்தைகளையும் பருவத்தினரையும் புரிந்துகொள்ளாத வாலிப உலகை விமர்சனம் செய்வதில் அடங்கியிருக்கிறது குட்மன்ட்சன்னின் கதைக் கருக்கள்.  

1982-ஆம் ஆண்டு ஐஸ்லாந்தில் ரெய்க்ஜவிக் என்னுமிடத்தில் பிறந்த குட்மன்டர் அமர் குட்மன்ட்சன் ஐஸ்லாந்து ஆர்ட் அகாடமியில் நுண்கலைப் படிப்பில் பட்டம் பெற்ற பிறகு திரைக்கதை எழுத்தாளராக டென்மார்க்கில் பயிற்சி பெற்றிருக்கிறார். திரைப்படங்களை இயக்குவதோடு மட்டுமில்லாமல் பகுதி நேர ஆசிரியராக திரைக்கதை, இயக்கம் மற்றும் வீடியோக் கலையை பயிற்றுவிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com