தேவிகா: 2.பாலிருக்கும் பழமிருக்கும்...!

‘மாடர்ன் தியேட்டர்ஸ் கம்பெனி படம்னாலே நடிக்கறவங்கப் பயப்படுவாங்க. அதாவது தொழில்லப் பய பக்தியோட நடிப்புல முழு கவனத்தோடு

‘மாடர்ன் தியேட்டர்ஸ் கம்பெனி படம்னாலே நடிக்கறவங்கப் பயப்படுவாங்க. அதாவது தொழில்லப் பய பக்தியோட நடிப்புல முழு கவனத்தோடு செயல்படுவாங்க. அரட்டைக் கச்சேரிக்கெல்லாம் இடம் தராத கட்டுப்பாடுள்ள கம்பெனி அது. சேலத்துலருந்து ஆரவல்லி படத்துக்காக எனக்கு முதலில் வாய்ப்பு வந்தது. சான்ஸ் கிடைச்சும் நடிக்க முடியாமல் போனது. ’- தேவிகா.

ஏவி.எம். மின் சகோதரி, களத்தூர் கண்ணம்மா,- அஞ்சலிதேவியுடன் நாகநந்தினி, பங்காளிகள்- பானுமதியுடன் கானல் நீர், என தேவிகாவுக்குக் கிடைத்த அனைத்துச் சந்தர்ப்பங்களும் சிறிய மற்றும் வேம்ப் ரோல்களாகவே அமைந்தன.

ஹீரோயினுக்கு நிழலாக உப பாத்திரங்களிலேயே அவரை ஒப்பனை செய்ய வைத்தன.

செகன்ட் ஹீரோயினாகத் திரையில் தோன்றியத் திறமை மிக்க ஏராளமான நடிகைகள், முதலிடத்துக்கு வர முடியாமல் முடங்கி, பின் காணாமல் போவது இன்று வரை நீடிக்கிறது.

‘ஓ காதல் கண்மணி’ மூலம் மணிரத்னம் அறிமுகப்படுத்திய நித்யா மேனனுக்கும் இந்த நொடியில் அதே அச்சம்!

அத்தகைய அவல நிலையை ஆர்வத்தாலும், இடை விடாத முயற்சிகளாலும், கடினமான உழைப்பாலும், இயல்பான நடிப்பாற்றலாலும் உடைத்தெறிந்து உச்சம் தொட்டவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படியோர் அரிய சாதனைக்கு முதன் முதலில் பிள்ளையார் சுழி போட்டவர் தேவிகா!

தேவிகாவுக்குப் பின்னர் தமிழில் முகம் காட்டியவர் சரோஜாதேவி. அவரைத் தென்னக சினிமாவின் முடி சூடா ராணியாகக் கொண்டாடி மகிழ்ந்தார்கள் தமிழர்கள்.

கோலிவுட்டில் யாரும் தேடி வராத சூழல். சரோவின் காற்று புகாத கேரள மண்ணில் பிரேம் நசீருடன், அரை டஜன் மலையாளச் சித்திரங்களில் ஜோடியாக நடித்தார் தேவிகா.

அப்போது தமிழில் தேவிகாவுக்குக் கை கொடுத்த ஒரே படம் மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே.

‘கொடுமைக்கார மாமியார் சி.கே.சரஸ்வதியிடம் சிக்கி அவதியுறும் மருமகளாக தேவிகா மிகையில்லாமல் செய்திருக்கிறார்.

கொடுமை வெள்ளம் தலைக்கு மேல் ஓடி விட்ட போது மாமியாரை ஒரு தள்ளு தள்ளி விட்டு, தொட்டிலில் இருந்து குழந்தையைத் தாவி எடுத்து அணைத்துக் கொள்ளும் கட்டம் ரசிக்கத்தக்கது. ’ என தேவிகாவின் நடிப்பை ‘குமுதம்’ மெச்சி எழுதியது.

தமிழகத்தில் அத்தனைப் பிரமாதமாக ஓடாத மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே தெலுங்கில் தேவிகா நடித்து மிகப் பெரிய வெற்றி பெற்றது.

ரேசுக்கா படத்துக்குப் பின்னர் மீண்டும் என்.டி. ராமாராவுடன் ஜோடி சேரும் அதிர்ஷ்டத்தை தேவிகாவுக்கு வழங்கியது ‘சபாஷ் ராமு’. மிகத் துணிச்சலுடன் அதில் பத்து வயது குழந்தைக்குத் தாயாராகத் தாலாட்டு பாடினார் இளம் ஹீரோயின் தேவிகா.

என்.டி.ஆர்.-தேவிகா இணையை ரசித்து மாபெரும் கூட்டம் கூடியது. சபாஷ் ராமு சக்கை போடு போட்டது.

அதே நேரத்தில் தமிழகத்தில் எம்.ஜி.ஆர்.- சரோஜாதேவி ஜோடி தூள் கிளப்பி வந்தது. அவர்களுக்குக் கிடைத்த வரவேற்பை விடவும், ஆந்திராவில் என்.டி. ஆர்.-தேவிகா ஜதைக்கான மவுசும் வற்றாத வசூலும் நிச்சயம் அதிகம்!

தமிழில் தனக்கொருத் திருப்பம் ஏற்படாதா என்று ஏங்கிய தேவிகாவின் தலையெழுத்தை, 1961ல் வெளியான ‘பாவ மன்னிப்பு’ அடியோடு மாற்றி எழுதியது.

அதற்குக் காரணமான மும்மூர்த்திகள் முறையே 1.ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் 2. நடிகர் திலகம் 3. ஏ.பீம்சிங்.

சின்னதோ பெரியதோ முகம் சுளிக்காமல் தனக்கு வாய்த்த வேடங்களை தேவிகா, தயங்காமல் ஏற்றுக் கொண்டு நடிப்பில் பரிமளித்த விதம் அவர்களைக் கவர்ந்திருக்க வேண்டும்.

அம்மூவரும் பங்கேற்ற பாவமன்னிப்பு மெகா பட்ஜெட் படத்தில் நடிகர் திலகத்தின் ஜோடியாக முதன் முதலாக நடிக்கும் அபூர்வ வாய்ப்பு தேவிகாவைத் தேடி வந்தது.

‘பிரசிடென்ட் பஞ்சாட்சரம்’ நாடகம் ரசிக ரஞ்சனி சபாவில் நடந்தது. அதில் தேவிகா நடித்ததைப் பார்த்து விட்டு, மொத்தம் மூன்று சினிமாவுக்கு ஒப்பந்தங்கள் போட்டோம்.

1.இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளத்துக்குச் ‘சகோதரி’ 2. மூவாயிரத்து ஐநூறு ரூபாய்க்குக் ‘களத்தூர் கண்ணம்மா’ 3. நாலாயிரத்து ஐநூறு ரூபாய் ஊதியத்துக்கு ‘பாவ மன்னிப்பு’.

பாவ மன்னிப்பு படத்துக்கு அப்புறம் தேவிகாவுக்கு ஒரு பெரிய பிரேக் கிடைத்தது.’ - ஏவி.எம். சரவணன்.

‘சாவித்ரி பாராட்டுகிறார் போல் இல்லை. மின்ன வைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு ஒளியூட்டியிருப்பது தேவிகாவுக்குத்தான். ’என்று, பாவ மன்னிப்பு திரை விமரிசனத்தில் குமுதம் வெளிப்படையாகவே போட்டு உடைத்தது.

சிவாஜிக்கு இணையாக அவருக்கு ஈடு கொடுத்து நடிக்க இன்னொரு நாயகி கிடைத்து விட்டார் என்று பாவ மன்னிப்பின் மகத்தான வெற்றி நிருபித்தது.

பாவ மன்னிப்பு சென்னை சாந்தி தியேட்டரில் வெள்ளிவிழா கொண்டாடிய முதல் சினிமா.

பாவ மன்னிப்பு படப் பாடல்களாக கண்ணதாசன் - எம்.எஸ். விஸ்வநாதன் - டி.கே. ராமமூர்த்தி சேர்ந்திசையில் எட்டுத் தேன் கிண்ணங்கள் இன்று வரை ரசிகர்களைத் திக்குமுக்காடச் செய்கின்றன. அவற்றில் எது மிகச் சிறந்தது என்று போட்டியும் நடத்தப்பட்டது.

பாவ மன்னிப்பில் சிவாஜி-தேவிகா பங்கேற்ற பாலிருக்கும் பழமிருக்கும் டூயட் பாடலும் அதற்கான காட்சியும் என்றுமே மறக்க முடியாதவை.

சாவித்ரியும் தேவிகாவும் பங்கேற்ற அத்தான் என் அத்தான்’ பாடலில் பி. சுசிலாவின் குயில் குரலில் தேவிகாவின் ஆகாய விழிகள் இரண்டும், புறாக்கள் இடம் மாறுவதைப் போல் நகர்வது நெஞ்சில் நிலைத்து விட்ட ஒன்று!

1961ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே மிகச் சிறந்த படமாக இரண்டாவது பரிசை ஜனாதிபதியிடமிருந்து தட்டி வந்தது பாவ மன்னிப்பு. அத்தகைய அரிய விருதை இன்று வரை அடுத்து ஒரு தமிழ்ப்படமும் பெறவில்லை என்பது அவசியம் குறிப்பிடத்தக்கது.

பாவ மன்னிப்புக்குப் பிறகு தேவிகாவின் புகழைச் சிகரத்தில் ஏற்றி வைத்தது நெஞ்சில் ஓர் ஆலயம். அதில் ஆரம்பத்தில் தேவிகா கிடையாது.

சீதா என்கிறப் புனிதமான வேடத்துக்கு டைரக்டர் ஸ்ரீதரின் முதல் சாய்ஸ் விஜயகுமாரி. ஏற்கனவே ஸ்ரீதரின் கல்யாணப் பரிசு மூலம் தாய்க்குலங்களின் மனம் கவர்ந்த குணச்சித்திர நாயகியாக விஜயகுமாரி புகழ் பெற்றிருந்தார்.

நெஞ்சில் ஓர் ஆலயம் வெளி வந்த அதே 1962ல், ஸ்ரீதரின் போலீஸ்காரன் மகள் படத்தில் டைட்டில் ரோலில் விஜயகுமாரி மிகப் பிரமாதமாக நடித்திருப்பார்.

பிறகு ஏன் நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் விஜயகுமாரி இல்லை? அதற்கானப் பதிலை டைரக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

‘நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் விஜயகுமாரி நடிக்க ஒப்புக் கொண்டார். அதன் கதையை எஸ்.எஸ். ஆர். கேட்க விரும்புகிறார் என்று தெரிந்ததும், எனக்குக் கோபம் வந்து விட்டது. இலேசான அவமானமாக உணர்ந்தேன் என்று கூடச் சொல்லலாம்.

விஜயகுமாரி நடிக்கச் சம்மதித்த பின்னர் அவருடைய கணவர் கதை என்ன என்று கேட்பது எனக்குச் சரியென்று படவில்லை. அந்தக் கணமே விஜயகுமாரி என் படத்தில் நடிக்கவில்லை என்று தெரிவிக்கச் சொல்லி விட்டேன்.

‘விஜயகுமாரிக்குப் பதில் யார்? ’

சட்டென்று என் நினைவுக்கு வந்தவர் தேவிகா. அப்போது அவர் இரண்டாம் கதாநாயகி என்ற அளவில் நடித்து வந்தார்.

அவரது திறமையை அறிந்து, ஹீரோயினாக என் படத்தில் பிரமோஷன் கொடுக்கத் தீர்மானித்தேன். ’ -ஸ்ரீதர்.

நெஞ்சில் ஓர் ஆலயம் விநியோகஸ்தர்களுக்குப் போட்டுக் காட்டப்பட்டது. அநேக முறைகள் திரையிடப்பட்டும் வாங்க ஆளில்லை. கடைசியில் வேறு வழியின்றி ஸ்ரீதரே சென்னை கேஸினோ திரை அரங்கில் ரிலீஸ் செய்தார்.

சிறந்த படம் என்கிறப் பெயருடன் நெஞ்சில் ஓர் ஆலயம் கேஸினோவில் மட்டும் ஒன்றரை லட்சம் வசூல் செய்தது.

‘எந்தக் காடசியிலுமே அப்போதுதான் சோப்பு போட்டு முகம் கழுவிக் கொண்டு வந்தவர் போல் சீதாவாக வரும் தேவிகா காட்சி தருவதில் வியப்பில்லை. மனமும் அழுக்கற்று இருப்பதைக் காட்ட முடிகிறதே அதுவே சிறப்பு.

தனக்குத் தாலி கட்டிய மணாளன்... மரணப்படுக்கையில் கிடப்பதைக் காணும் போது படக்கூடிய மன வேதனையை, கணவனை நேசிப்பதையே கடமையாகக் கொண்ட படித்த, பண்புள்ள மனைவியை தேவிகா அழகாகச் சித்திரித்திருக்கிறார்’என்று குமுதம் தேவிகாவுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்தது.

அதே ஆண்டின் இறுதியில் வெளியானது சுமைதாங்கி. ரா.கி. ரங்கராஜனின் கதை. ஸ்ரீதரின் படைப்பாக்கத்தில் ஜெமினி கணேசன்-தேவிகா காதல் ஜோடியாக நடித்தனர். மெல்லிய காதலுடன் நடுத்தரக் குடும்பங்களின் வாழ்க்கையை மிக இயல்பாக திரையில் எடுத்துச் சொன்ன முதல் தமிழ்ப் படம் என்கிற பெருமை பெற்றது.

‘சுமைதாங்கியில் தேவிகாவுக்கு அதிக ரோல் இல்லை. ஆனாலும் மனதில் தங்கும்படியாக நடித்திருக்கிறார் என்றது ஆனந்த விகடன்.

ஜெமினி கணேசனின் ஒப்பற்ற நடிப்பாற்றலுக்கு ஓர் உதாரணச் சித்திரம் சுமைதாங்கி! நடிகர் திலகத்தைக் கடந்து 1962ன் மிகச் சிறந்த நடிகராக ஜெமினி தேர்வாகக் காரணமாக இருந்தது.

அப்படி இருந்தும் ஜெமினி கணேசனுக்கு ஒரு படி மேலாக,

‘நடிப்பில் முதல் இடம் பெறுபவர் தேவிகா. நம் மனத்தில் நிறைந்து விடுகிறார். ஜெமினி கணேசனிடம் சுருக் சுருக்கென்று பேசுவதும்... சுடச் சுடப் பதில் கொடுப்பதும், பிறகு காதலில் குழைவதும் இறுதியில் ஏமாற்றம் அடைந்து துடிப்பதும் எல்லாருடைய மனத்திலும் பதிந்து விடுகின்றன’ என்றெல்லாம் தேவிகாவைத் தூக்கிப் பிடித்து ‘கல்கி’ வார இதழ் மனமாறப் பாராட்டி எழுதியது.

நெஞ்சில் ஓர் ஆலயம் தேவிகாவை ‘காதல்’ பட நாயகி பானுமதிக்கு இணையாக, 1962ன் சிறந்த நடிகையாக உச்சத்தில் கொண்டு நிறுத்தியது குமுதம். அதே ஆண்டின் சிறந்த பிராந்திய மொழிச்சித்திரமாக நெஞ்சில் ஓர் ஆலயம் தேர்ந்தெடுக்கப்பட்டது. மத்திய அரசின் வெள்ளிப்பதக்கத்தை விருதாகப் பெற்றது.

கால்ஷீட் விஷயத்தில் சரோஜாதேவியின் நடவடிக்கை பிடிக்காதவர்கள், இருக்கவே இருக்கிறார் தேவிகா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

தேவிகாவின் பக்கம் காற்று பலமாக வீசத் தொடங்கியது.

சுந்தர்லால் நஹாதா அந்நாளில் கொடி கட்டிப் பறந்த பட முதலாளி. அவரது சகோதரரின் மனைவி நடிகை ஜெயப்பிரதா.

தமிழிலும் கொடி மலர், வீர அபிமன்யு, அவள், ராதா உள்ளிட்ட ஏராளமான சினிமாக்களைத் தயாரித்தவர். சபாஷ் ராமுடு அவரது படைப்பு. 25 வாரங்களைக் கடந்தும் வாரிக் குவித்தது.

தெலுங்கில் தேவிகாவின் ராசியான படக் கம்பெனியாக ‘நஹாதா பிலிம்ஸ்’ வெற்றி நடை போட்டது.

1972 வரையில் சுந்தர்லால் நஹாதாவின் பேனரில் என்.டி.ஆர். - தேவிகா ஜோடி சேர்ந்த அத்தனைப் படங்களும் வெள்ளி விழா கொண்டாடின. தெலுங்குத் திரையில் தேவிகா, என்.டி. ஆரின் தீராக் காதலியாக வலம் வர சபாஷ் ராமுடுவே அஸ்திவாரம்.

தேவிகாவை இந்திக்கும் அழைத்துச் சென்றது சுந்தர்லால் நஹாதாவின் சாந்தி நிவாஸம்.

சாந்தி நிவாஸம் படத்தில் தேவிகாவுக்குக் குணவதியான பாசமுள்ள அண்ணி வேடம். மிக அருமையான கதாபாத்திரம். அவரிடம் கண்ணியமாக நேசம் பாராட்டும் மைத்துனர் ஏ. நாகேஸ்வரராவ்.

இருவரையும் இணைத்து அவ்வீட்டுப் பெண்களே களங்கம் கற்பிக்கிறார்கள். க்ளைமாக்சில் தற்கொலைக்கும் தயாராகிற நாயகியின் தூய்மையைக் குடும்பத்தினர் உணர்ந்து திருந்துவதே திரைக்கதை.

சாந்தி நிவாஸம் ஓஹோவென்று ஓடியது. படத்தின் வசூலை கவனித்த ஜெமினி எஸ்.எஸ். வாசன் அதை இந்தியில் எடுக்க ஏற்பாடு செய்தார்.

ஹீரோயின் ரோலில் நடிக்க மீனாகுமாரியிடம் கால்ஷீட் கேட்டார்கள். மீனாகுமாரி கைவிரித்த பின்பு தேவிகாவை வாசன் கூப்பிட்டனுப்பினார்.

ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசனுடனான சந்திப்பு குறித்து தேவிகா தெரிவித்தவை-

‘என்னை உட்காரும்மா என்றவர், சாந்தி நிவாஸ் படத்துல நீ பண்ணின ரோலை இந்தியிலயும் பண்றியாம்மான்னு கேட்டார்.

அதிர்ச்சி. ஆச்சரியம். சந்தோஷம் எல்லாம் என்னை ஒரு சேரத் தாக்கின. இதே ஜெமினியில் வாசன் சாரைப் பார்த்து அநேக முறைகள் வாய்ப்பு கேட்டிருக்கிறேன். தருவதாகச் சொன்னவர், பல அலுவல்களுக்கிடையே அதை மறந்திருந்தார். அவரே என்னை அழைத்துப் பெரிய வாய்ப்பை வழங்கும்போது மறுக்க முடியுமா? உற்சாகமாக ஒப்புக் கொண்டேன்.

அந்த இந்திப்படம் கரானா. தமிழில் குடும்பம் என்று அர்த்தம். என் கணவராக ராஜ்குமாரும் கொழுந்தனாக ராஜேந்திர குமாரும் நடித்தார்கள். பிரபல இந்தி நட்சத்திரம் ஆஷா பரேக்கும் கரானாவில் முக்கிய வேடத்தில் இடம் பெற்றார்.

சாந்தி நிவாஸம் படத்தை விடப் பல மடங்கு கரானா வசூலித்தது. வடக்கே வருஷக்கணக்கில் ஓடிப் பொன் விழா கொண்டாடியது.

இந்தி சினிமாவில் எனது அனுபவத்தில் நான் கண்டது- சின்ன நடிகை, பெரிய ஸ்டார் என்ற வித்தியாசம் பாராட்டுவதோ, முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு பேசாமல் இருப்பதோ பம்பாய் நட்சத்திரங்களிடம் கிடையாது.

தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பார்கள். இப்படி நடி... அப்படி நடி என்று நம்ம ஊர் சிவாஜி போல் கற்றுத் தர ஆள் இல்லை.

மும்பையில் எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் தமிழ், தெலுங்கு என்று இங்கேயே பிஸி ஆக இருந்ததால் தொடர்ந்து நிறைய இந்தி சினிமாக்களில் நடிக்க முடியாமல் போனது.

வாசன் சாரைப் பத்தி சொல்லணும்னா நிறைய விஷயம் சொல்லிக்கிட்டே போகலாம். கதை விஷயத்தில் அவரை எளிதில் திருப்திப்படுத்தி விட முடியாது. காரணம் ஜனங்களின் ரசனையை அவர் மிகச் சரியாகப் புரிந்து கொண்டவர்.

தனது மனத்தோடு கதை இலாகாவின் சிந்தனையும் ஒத்துப் போகிறதா என்பதை உற்று கவனிப்பார். திரைக்கதை விவாதத்தில் மாறுபாடான கருத்துக்கள் எழுந்தால் மீண்டும் மீண்டும் அனைவரின் ஆலோசனைகளையும் கேட்பார்.

கடைசியில் துல்லியமான தீர்மானத்துக்கு வருவார். லைட் பாயின் எண்ணத்தைக் கூட அலட்சியப்படுத்த மாட்டார்.

காட்சிகளைப் படமாக்கும் போது ஏகப்பட்ட டேக்குகளை எடுப்பார். எதற்காக இத்தனை ஷாட் என்று ஆச்சரியமாகத் தோன்றும்.

திரையில் பார்க்கும் போது அவற்றை எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார் என்று பிரமிப்பு தட்டும். ’- தேவிகா.

------------------------

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com