36. என் கண்ணே! - 4

கண்ணில் ஒளி விழுவதால் நாம் பார்த்துவிடுவதில்லை. நமக்கு உள்ளே பார்க்க வைக்கின்ற ஒரு ஒளி உள்ளது. அதன் மூலமாகத்தான் நாம் பார்க்கிறோம்.
மனிதனுடைய கண் ஒரு மைக்ராஸ்கோப் போன்றது. அதனால்தான், இந்த உலகில் பார்க்கப்படுவதெல்லாம் உள்ளதைவிட மிகவும் பெரிதாகத் தெரிகிறதுகலீல் ஜிப்ரான்

பேட்ஸின் கண்டுபிடிப்புகள்

டாக்டர் வில்லியம் பேட்ஸின் ஆராய்ச்சிகள், ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு அவர்கள் கண்களின் இயற்கையான பார்வையை மீட்டுக்கொடுத்தது; கொடுத்துக்கொண்டிருக்கிறது; கண் கொடுத்த தெய்வம் என்று உலகம் அவரைப் போற்றிக்கொண்டிருக்கிறது. ஐரோப்பா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் அவரது பரிசோதனைகள் பின்பற்றப்படுகின்றன. தன் ஆராய்ச்சிகளின் மூலம் கண்ணைப் பற்றிய பல உண்மைகளைக் அவர் கண்டுபிடித்தார்.

நினைவாற்றல், கற்பனை ஆகியவற்றுக்கும் பார்வைக்கும் இடையில் உள்ள உறவைப் பற்றி அவர் சொல்வது மிக முக்கியமானது. அவை இரண்டும் மனத்தளர்ச்சியோடு தொடர்பு கொண்டவை. டாக்டர் பேட்ஸின் ஆராய்ச்சிகளின் அடி நாதமாக இருப்பது ரிலாக்சேஷன் என்ற சொல்தான். மனம் தளர்ச்சியடையாமல், பார்வைக் கோளாறு எதுவுமே சரியாகாது. மனம் தளர்ச்சியடைந்துவிட்டால், எந்தப் பார்வைக் கோளாறும் சரியாகாமல் இருக்காது என்பதுதான் பேட்ஸில் கண்டுபிடிப்பு என்றுகூடச் சொல்லிவிடலாம். அவர் சிபாரிசு செய்யும் பயிற்சிகளைப் பார்ப்பதற்கு முன், கண் பற்றி அவர் கூறும் பல முக்கியத் தகவல்களைப் பார்த்துவிடலாம்.

வில்லியம் பேட்ஸின் நூல்களைப் படித்துக்கொண்டிருந்தபோது, எனக்குத் தெரிந்த ஒரு உண்மை மேலும் உறுதிப்பட்டது. பார்ப்பது கண் அல்ல, மனம் அல்லது மூளைதான் பார்க்கிறது என்று அவர் கூறினார். மனமும் உடலும் ரிலாக்ஸ் ஆனால், எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்துபோகின்றன என்று கண்டு சொன்னார். அவர் சொன்னது விஞ்ஞானம் மட்டுமல்ல; அவருடைய பேச்சு சுத்தமான ஆன்மிகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பதினோறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானியும் மேதையுமான இமாம் கஸ்ஸாலி, ‘மிஷ்காத்துல் அன்வார்’ என்று ஒரு நூல் எழுதினார். ‘இறைவன் ஒளிகளின் ஒளியாக இருக்கிறான்’ என்ற திருமறையின் ஒரே ஒரு வசனத்தை விளக்குவதற்காக அந்த நூல்! சூஃபி வழி இதயத்தின் மார்க்கம் என்ற எனது நூலில், இமாம் கஸ்ஸாலியின் அந்த நூலைப் பற்றி நான் ஒரு அத்தியாயமே எழுதியுள்ளேன்.

அந்த நூலில் அவர் என்ன சொல்லியிருக்கிறார்? கண்ணைப் பற்றி வில்லியம் பேட்ஸ் என்ன சொல்கிறாரோ அதைத்தான். கண்ணில் ஒளி விழுவதால் நாம் பார்த்துவிடுவதில்லை. நமக்கு உள்ளே பார்க்க வைக்கின்ற ஒரு ஒளி உள்ளது. அதன் மூலமாகத்தான் நாம் பார்க்கிறோம். சூரியன் உலகுக்கே ஒளி கொடுக்கிறது. ஆனால், அதற்கும் ஒளி கொடுத்தவன்தான், ஒளிகளின் ஒளியாக இருக்கும் இறைவன் என்று இமாம் கஸ்ஸாலி விளக்கினார். பேட்ஸும் கிட்டத்தட்ட இமாம் கஸ்ஸாலி கூறிய முடிவுக்குதான் வருகிறார். ஆனால், அவரால் ஆண்டவன் என்று சொல்லமுடியவில்லை. பார்ப்பது உண்மையில் கண் அல்ல, மனம்தான், மூளைதான் என்று அவருக்குத் தெரிந்த பாஷையில் கூறுகிறார். வேறு வகையில் பார்த்தால், எல்லா இயக்கங்களும் ஆன்மாவுக்குச் சொந்தமானவையே. ஆன்மாதான் பார்க்கிறது, கேட்கிறது, எல்லாம் செய்கிறது. உடலின் வழியாகச் செய்கிறது. ஆனால், உடலும் மனமும் ரிலாக்ஸ்டாக இல்லாதபோது உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. எனவே கோளாறுகள் தோன்றுகின்றன. எப்போதுமே உடலை ரிலாக்ஸ்டாக வைத்துக்கொண்டால், ஆன்மாவின் தன்மைக்கு உடலை நகர்த்துகிறோம். அப்போது எல்லாக் காரியங்களும் மிகச்சரியாக நடக்கின்றன. இந்த உண்மையைத்தான், வில்லியம் பேட்ஸ் அவருடைய விஞ்ஞான வழியில் கண்ணை வைத்து ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தார். சரி, பேட்ஸுக்குப் போவாமா?

கண்ணில் திடீரென்று அதிக ஒளி பட்டாலோ, வேகமாக ஒளிக்கதிர்கள் மாறிக்கொண்டிருந்தாலோ, கண் பார்வை பல மாதங்களுக்குப் பாதிக்கப்படலாம். அதேபோல, அதிக சத்தமும் கண் பார்வையைப் பாதிக்கும். எதிர்பாராத பேரொலி அல்லது இரைச்சலைக் கேட்கும்போது, அதைக் கேட்பவர்களுக்குப் பார்வைத்திறன் குறைவு ஏற்படும். நமக்குத் தெரிந்த ஒலிகள் நம் பார்வையைப் பாதிப்பதிப்பதில்லை. ஆனால் புதிய ஒலிகள், நமக்குப் பழக்கமில்லாத ஒலிகள் நம் பார்வையை பாதிக்கலாம் என்கிறார் பேட்ஸ்.

இந்த இடத்தில் எனக்கொரு சுவையான நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. ஒருநாள், ஒரு பேராசிரியர் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது பயங்கரமான ஒரு ஒலி கேட்டது. அப்படிப்பட்ட ஒரு ஒலியை வாழ்நாளில் அதுவரை அவர் கேட்டதில்லை. ஒலியின் அளவு ராட்சசத்தனமாக இருந்ததால், அனைவரும் வகுப்பை விட்டு வெளியே வந்து பார்த்தார்கள். அருகில் இருந்த வகுப்புகளில் இருந்த மாணவர்களும் பேராசிரியர்களும் வெளியே வந்து நின்றுகொண்டிருந்தனர். கொஞ்ச நேரத்துக்கெல்லாம், அந்த ஒலி தூரமாகப் போய்த் தேய்ந்து மறைந்துவிட்டது. பின்னர்தான் அது கன்கார்ட் என்ற வகை விமானம் சென்றதனால் உண்டான ஒலி என்று விளக்கம் கிடைத்தது. சுவையான விஷயம் அதுவல்ல. இப்போது நான் சொல்லப்போவதுதான்.

வகுப்பை முடித்துவிட்டு அந்தப் பேராசிரியர் அவர்களுக்கான அறைக்குள் நுழைந்தார். அங்கே ஒரு மூத்த பேராசிரியர் மேஜை மீது கால் போட்டுக்கொண்டு அவரது வழக்கப்படி சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார். கல்லூரி முதல்வர் ஒரு வேலையாக டெல்லிக்குச் சென்றிருந்தார். கல்லூரி முதல்வருக்கும் அந்த மூத்த பேராசிரியருக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்! நேரம் பார்த்து அவர் முதல்வரைக் காலை வாரிவிடுவார்! அறைக்குள் நுழைந்த பொறுப்பு முதல்வரிடம், என்ன சத்தம் என்று அந்த மூத்த பேராசிரியர் கேட்டார். ‘ஏதோ கான்கார்டு வந்திருச்சாம்’ என்று அவர் பதில் சொன்னார். அதற்கு உடனே அந்த மூத்த பேராசிரியர், ‘அப்படியா, நான் முதல்வர்தான் டெல்லியிலிருந்து வந்துட்டாரோன்னு நெனச்சேன்’ என்றாரே பார்க்கலாம்! (இந்த நிகழ்ச்சிக்கும் நான் பேராசிரியராகப் பணியாற்றியதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை!).

அமைதியான கிராமத்துப் பள்ளிக்கூடங்களில் படித்த குழந்தைகள், இரைச்சல் மிகுந்த நகரப் பள்ளிக்கூடங்களுக்குச் சென்ற பிறகு, வெகு காலத்துக்குப் பார்வைக் கோளாறால் அவதிப்படுகின்றனர் என்கிறார் பேட்ஸ்! பாவம், அவர் நம் பால்வாடிகளுக்கு வந்ததில்லை என்று நினைக்கிறேன்! குழந்தைகளின் மனம் பாதிக்கப்படும்போது, அவர்களின் நல்ல கண்கூட நொள்ளைக் கண்ணாகவும், ஏற்கெனவே கோளாறு இருந்தால் அது அதிகமாகவும் வாய்ப்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார். விபத்துகள் நடப்பதற்குக்கூட தாற்காலிகமான பார்வைக் கோளாறு ஏற்படுவது ஒரு காரணம் என்று பேட்ஸ் கூறினார்.

கிட்டப்பார்வை ஒரு நிமிடத்தில் சரியானது

ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்த 1200 மாணவர்களின் கண்களை பேட்ஸ் பரிசோதித்தார். ஒரு மாணவருக்குக் கிட்டப்பார்வை இருந்ததாகச் சொல்லப்பட்டது. கரும்பலகையில் எழுதப்பட்டிருப்பதைப் படிக்கவோ சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்துச் சொல்லவோ அந்த மாணவரால் முடியவில்லை. ஆனால், பேட்ஸ் அவரிடம் ஒரு நிமிடம் பேசிய பிறகு அந்த மாணவர் கரும்பலகையில் எழுதியிருந்ததையெல்லாம் படிக்க ஆரம்பித்தார். சுவர்க்கடிகாரத்திலும் மணி பார்த்து சரியாகச் சொன்னார். இயேசு தன் புனிதக் கைகளால் தொட்டு நோயை குணப்படுத்திய மாதிரி, பேட்ஸ் பேசியே சரி செய்திருக்கிறார்! ஆசிரியருக்கு மிகவும் ஆச்சரியமாகப் போய்விட்டது. கிட்டப்பார்வை பிரச்னை எப்படி ஒரு நிமிடத்தில் சரியாக முடியும் என்று ஆசிரியருக்கு விளங்கவில்லை.

ஆனால், இப்படிப்பட்ட பிரச்னைகள் மட்டுமல்ல, பெரும்பாலான பார்வைக் கோளாறுகள் மனம் சார்ந்தவையே, கண் சார்ந்தவை அல்ல என்று பேட்ஸ் தன் பரிசோதனைகள் மூலம் நிரூபித்துக்கொண்டே இருந்தார். மனம் ரிலாக்ஸானால் பார்வைக் கோளாறுகளை சரிசெய்ய முடியும் என்பதை பேட்ஸ் வலியுறுத்தினார். ரிலாக்சேஷன் என்ற ஒரு சாவியால், எல்லா நோய்களையும் குணப்படுத்தும் பொக்கிஷ அறையைத் திறக்கமுடியும் என்று திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தார் பேட்ஸ்.

அந்த மாணவரிடம் நம்பிக்கை தரும் விதத்தில், அவருடைய அச்சம் போக்கும் விதத்தில் பேசினார். அவ்வளவுதான். உடனே அந்த மாணவர் ஸ்நெல்லன் சார்ட்டில் இருந்த பத்து வாக்கியங்களைப் படித்ததோடு அல்லாமல், ஆசிரியரையும் ஆச்சரியப்பட வைத்தார். மனம் என்ற ஒன்றை மருத்துவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை என்று பேட்ஸ் அடிக்கடி சொன்னது இங்கு நினைவுகூரத்தக்கது.

நான் ஏற்கெனவே சொன்னமாதிரி, செயல்பாட்டு ரீதியான பிரச்னைகள் பெரும்பாலும், ஆழ்மனம் அல்லது மூளை சார்ந்த பிரச்னைகளே. அவை உறுப்பு சார்ந்த பிரச்னை என்ற முடிவுக்கு வந்து, நமக்கே தெரியாமல் ஒருவரை நோயாளியாக்கிவிடுகிறோம் அல்லது நம்மை நாமே நோயாளியாக்கிக்கொள்கிறோம் என்பதுதான் உண்மை. இந்த உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து போட்டு உடைத்தார் பேட்ஸ். குறிப்பாக, கண் அழுத்தம் (eye strain) என்று சொல்லப்படும் பிரச்னை உண்மையான பிரச்னையே அல்ல. அது, எதிர்மறையான எண்ணத்தை மனதில் ஏற்றிவிடுவதால் வரக்கூடியது என்பதை, அந்த மாணவரை குணப்படுத்தியதன் மூலம் அவர் நிரூபித்தார்.

சென்ட்ரல் ஃபிக்சேஷன் (Central Fixation)

கண் ஒரு கேமரா மாதிரி இயங்குகிறது என்று கூறுவார்கள். ஆனால், உண்மை தலைகீழானது. கேமராதான் மனிதனின் கண்ணைப்போல் இயங்குகிறது. ஆனால், ஒரு கேமராவுக்கு இல்லாத தொலைநோக்கும் விஸ்தீரணமும் கண்களுக்கு உண்டு.

இயந்திரமான கேமராவுக்கும் நம் விழிக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. கேமராவில் உருவங்களைப் பதிவு செய்யும் தகடு முழுவதும் ஒரே மாதிரியான கூர் உணர்வுகொண்டதாக இருக்கும் (equally sensitive throughout). ஆனால், விழித்திரை எனப்படும் நம் ரெடீனா, அது போன்றதல்ல. ஒரு குறிப்பிட்ட புள்ளியில் அல்லது பகுதியில் மட்டும் அது மிகுந்த கூர் உணர்வோடும், மற்ற பகுதிகளில் ஒப்பீட்டளவில் குறைவான கூர் உணர்வும் கொண்டதாக இருக்கும். அதிகபட்ச கூர் உணர்வு கொண்ட அப்பகுதியை fovea centralis என்று கூறுவர். ‘மத்தியில் உள்ள பள்ளம்’ என்று அதை தமிழாக்கலாம்.

நம் ரெடீனாவில், திரைதிரையாக ஒன்பது அடுக்குகள் உள்ளன. அந்த ஒன்பதில், ஒன்றே ஒன்றினால்தான் நாம் பார்க்கிறோம்! அதாவது, அந்த ஒன்றுதான் நாம் பார்ப்பதற்கு உதவியாக ஏதோ செய்கிறது என்று அர்த்தம். ரெடீனாவின் மையப்பகுதியில் ஒரு வட்ட வடிவ மேடு உள்ளது. அது ‘மஞ்சள் பகுதி’ எனப்படும். அந்த மஞ்சள் பகுதியின் மையத்தில் இருப்பதுதான், மேலே சொன்ன ஃபோவியா (fovea). ஃபோவியாவின் மையப்பகுதிதான் நாம் பார்க்கும் காட்சிகள் பதிவாகும் பகுதி. ஃபோவியாவை விட்டு நாம் தள்ளிப் போகும்போது, நாம் பார்க்கும் காட்சிகள் மங்கலாகத் தெரியும். அல்லது தெரியாமல்கூட போய்விடலாம்.

கண்பார்வை நார்மலாக இருக்கும்போது, ஃபோவியாவின் கூர் உணர்வும் நார்மலாக இருக்கும். பார்வையில் குறைபாடு ஏற்படும்போது, ஃபோவியாவின் கூர் உணர்வும் குறைகிறது. மனதில் ஏற்படும் அழுத்தம் இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. பார்வையில் ஏற்படும் எல்லா விதமான குறைபாடுகளுக்கும் மன அழுத்தம் காரணமாக உள்ளது என்றும், மன அழுத்தம் இருக்கும்வரை கண் சரியாகப் பார்க்காமல் தாற்காலிகமாகக் குருடாகும் வாய்ப்பு உண்டு என்றும் கூறுகிறார் பேட்ஸ்! மன அழுத்தத்தின் அளவைப் பொறுத்து பார்வைக் குறைவுப் பிரச்னையும் அதிகரிக்கும். அதாவது, மனமும் கண்களும் சேர்ந்துதான் பார்க்கின்றன. மனம் எங்காவது அலைந்துகொண்டிருந்தால், கண்கள் அநாதைகளாகிவிடுகின்றன!

ஃபோவியாவின் கூர் உணர்வு குறையும்போது, குறிப்பிட்ட பொருளை அல்லது மனிதரை நாம் பார்த்தால், அப்பொருள் அல்லது அந்த மனிதர் தெரியமாட்டார். அல்லது மங்கலாகத் தெரிவார். ஆனால், ஃபோவியா அல்லாத ரெடீனாவின் மற்ற பகுதிகளில் கூர் உணர்வு அதிகரித்திருக்கும்! இதன் காரணமாக, ஒரு நோயாளி எதைப் பார்க்க விரும்பி தன் கவனத்தை அதன்மீது திருப்புகிறாரோ அது மட்டும் சரியாகத் தெரியாது. மற்ற இடங்கள், மனிதர்கள் நன்றாகத் தெரியலாம். ஆனால், நோயாளியின் கவனம் அங்கு திரும்பும்போது, அது ஃபோவியாவின் ‘ஏரியா’வுக்குள் வந்துவிடுவதால் அதுவும் சரியாகத் தெரியாது!

ஒரு பெண்ணுக்குத் தன் விரல்களையே பார்க்க முடியவில்லையாம். கண்ணுக்கு நேராக விரல்களைக் கொண்டுவந்தால்கூடப் பார்க்க முடியவில்லை. ஆனால், பக்கவாட்டில் கைகளை நகர்த்திக்கொண்டு போனால் பார்க்க முடிந்ததாம்! அவளுக்கு, மூளை நரம்பில் ஏதோ கோளாறு என்று டாக்டர்கள் கூறினார்கள். ஆனால், மன அழுத்தம்தான் காரணமென்று பேட்ஸின் வழிமுறைகளால் நிரூபணமானது.

ஃபோவியாவில் காட்சிகள் குவிந்து அங்கிருந்து பார்ப்பதற்குப் பெயர்தான் சென்ட்ரல் ஃபிக்சேஷன் (செ.ஃபி.) செ.ஃபி. நடக்கும்போது பார்வை பிரமாதமாகவும், கண்கள் ஓய்வாகவும் இருக்கும். களைப்பின்றி நம்மால் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்க முடியும். தற்கால மனிதர்கள் டெலஸ்கோப் வைத்தால்கூட தெளிவாகப் பார்க்க முடியாததையெல்லாம், நிர்வாணக் கண்களாலேயே கற்கால மனிதர்கள் பார்க்க முடிந்ததற்குக் காரணம் செ.ஃபி.தான் என்கிறார் பேட்ஸ்.

அதுமட்டுமல்ல. எந்தவிதமான தொற்றுநோய் இருந்தாலும் சரி, டைஃபாய்டு, சிஃபிலிஸ், கொனோரியா போன்ற செக்ஸ் நோய்கள் ஏற்பட்டிருந்தாலும் சரி, செ.ஃபி. சரியாக இருந்தால், கண் சிவப்பாகக்கூட ஆகாமல், வலி எதுவும் இல்லாமல் பார்வை தெளிவாக இருக்கும் என்றும், செ.ஃபி. சரியாக இருந்தால், பார்த்தல் மட்டுமல்ல, கேட்டல், தொட்டறிதல், சுவையறிதல், நுகர்தல் ஆகிய ஐம்புலனுணர்வுகளும் அற்புதமாக இருக்கும் என்கிறார் பேட்ஸ்! அதுசரி, சிஃபிலிஸ், கொனோரியாவுக்கெல்லாம் கண்ணா காரணம் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழத்தான் செய்கிறது!

வெறும் நம்பிக்கையான பேச்சு மட்டுமே ஒரு பிரச்னையைத் தீர்க்கப் போதுமானதாக இருக்குமா? நிச்சயம் இருக்காது. ஆனால், பேட்ஸ் அதை மட்டும் செய்யவில்லை. பல பயிற்சிகள் மூலம், பலருக்கு இருந்த கண் தொடர்பான எல்லாவிதமான பிரச்னைகளையும் தீர்த்துக் காட்டினார். அவையும் உளரீதியான மனத்தளர்ச்சியை (mental relaxation) அடிப்படையாகக் கொண்டவை. அவை பற்றி தேவையான அளவு விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com