38. என் கண்ணே! - 6

கிட்டப்பார்வை, தூரப்பார்வை, சிதறல் பார்வை, முதுமையினால் வரும் பார்வைப் பிரச்னை, சாய்வுப் பார்வை என கண்ணில் ஏற்படும் பிரச்னை எதுவானாலும் சரியாகிவிடும்.

இந்த உலகில் மிகவும் பரிதாபத்துக்குரிய மனிதர் பார்வையில்லாதவர் அல்ல; தொலைநோக்கு இல்லாதவர்தான் – ஹெலன் கெல்லர்


டாக்டர் வில்லியம் பேட்ஸின் நிரூபிக்கப்பட்ட பயிற்சிகள் மூலம் ஆயிரக்கணக்கானோர் உலகெங்கிலும் பார்வை தொடர்பான பிரச்னைகளில் இருந்து குணமடைந்தார்கள். குணமடைந்துகொண்டிருக்கிறார்கள். பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் கொடுக்கப்படும் இலவச கண் சிகிச்சையும் பயிற்சியும், பேட்ஸின் வழிமுறைகளைப் பின்பற்றுபவையே.

எல்லாவிதமான பார்வைப் பிரச்னைகளுக்கும் மனம் தளர்ச்சி அடையாமல் டென்ஷனாக, ஸ்ட்ரெயினுடன் இருப்பதே காரணம் என்று பேட்ஸ் கருதினார். கொஞ்ச நேரம் கண்களை மூடியிருப்பதன் மூலம் ரிலாக்ஸ் ஆவது பெரும்பாலான நோயாளிகளுக்கு எளிதாக உள்ளது என்றும் கண்டுபிடித்தார். 

சற்று நேரம் கண்களை மூடி ஓய்வு கொடுத்து, பின்பு சட்டென்று திறந்து ஸ்நெல்லன் சார்ட்டையோ அல்லது புத்தகத்தையோ பார்க்கும்போது, சட்டென்று தெளிவான பார்வை கிடைப்பதை உணர முடியும். இப்படி அடிக்கடி செய்வதன் மூலம் தெளிவான இயல்பான பார்வையை திரும்பப் பெற முடியும். சில நோயாளிகளுக்கு இப்படிச் செய்ததன் மூலம் ஒரு மணி நேரத்துக்குள் இயல்பான, இயற்கையான, சாதாரணமான, நல்ல தெளிவான பார்வைத்திறன் நிரந்தரமாகக் கிடைத்துள்ளது என்றும் பேட்ஸ் தன் நூலில் பதிவு செய்திருக்கிறார். 

அவர் நினைத்தது உண்மைதான் என்று அவருடைய பயிற்சிகள் நிரூபித்தன. மனதில் ஏற்படும் அழுத்தமானது பார்வையில் பிரச்னையை ஏற்படுத்துகிறது. அழுத்தம் குறையக் குறைய, ரிலாக்சேஷன் அதிகரிக்க அதிகரிக்க, பார்வையில் ஏற்பட்ட பிரச்னைகள் குறைவதை நாம் உணர முடியும். ஏன், குறையின்றி நன்றாகப் பார்க்க முடியும்! கிட்டப்பார்வை, தூரப்பார்வை, சிதறல் பார்வை, முதுமையினால் வரும் பார்வைப் பிரச்னை, சாய்வுப் பார்வை என கண்ணில் ஏற்படும் பிரச்னை எதுவானாலும் சரியாகிவிடும். சரி, பயிற்சிகளுக்குள் போகலாமா? 

பயிற்சிகள் - கண்களுக்கு ஓய்வு தரும் பயிற்சி

1. கண்களை மூடி கொஞ்ச நேரம் கண்களுக்கு ஓய்வு கொடுங்கள். கருப்பு, வெள்ளை என்று உங்களால் மிகச்சரியாக நினைவுகூர முடிகிற ஏதாவது ஒரு நிறத்தை நினைத்துக்கொள்ளுங்கள். ஓய்வு கிடைத்துவிட்டது என்ற உணர்வு வரும்வரை கண்களை மெள்ள மூடியிருங்கள். 

2. இப்போது கண்களைத் திறந்து, எதிரே உள்ள புத்தகத்தில் ஒரு வாக்கியத்தையோ, சொல்லையோ, எழுத்தையோ ஒரு விநாடி அல்லது அதற்கும் குறைவான நேரம் பாருங்கள். முழுமையாகவோ அல்லது கொஞ்சமாகவோவாவது நீங்கள் கண்களை ரிலாக்ஸ் செய்திருந்தால், நிச்சயம் உங்களுக்குத் தெளிவான பார்வை கிடைத்திருக்கும். பார்க்கப்பட்ட பகுதி சிறியதாக இருக்கும். 

3. இப்படிப் பார்த்து முடித்தவுடன், மீண்டும் கண்களை மெள்ள முன்போல மூடிக்கொள்ளுங்கள். மீண்டும் கருப்பு, வெள்ளை என்று உங்களால் மிகச்சரியாக நினைவுகூர முடிகிற ஏதாவது ஒரு நிறத்தை நினைத்துக்கொள்ளுங்கள். ஓய்வு கிடைத்துவிட்டது என்ற உணர்வு வரும்வரை கண்களை மெள்ள மூடியிருங்கள். 

4. இப்போது மீண்டும் கண்களைத் திறந்து எதிரே உள்ள புத்தகத்தில் ஒரு வாக்கியத்தையோ, ஒரு சொல்லையோ, எழுத்தையோ ஒரு விநாடி அல்லது அதற்கும் குறைவான நேரம் பாருங்கள்.

இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வரும்போது, தெளிவான பார்வை கிடைக்கும் நேரம் கூடிக்கொண்டே போவதை உணர முடியும். முதல் முறையைவிட இரண்டாவது முறை கூடுதலான கணங்களுக்குத் தெளிவாகப் பார்த்திருக்க முடியும், இப்படியே செய்யச் செய்ய, தெளிவான பார்வைத்திறன் கூடிக்கொண்டே போகும். தினமும் கொஞ்ச நேரம் கண்களை மூடி ஓய்வு கொடுத்து, மனதில் சுகமான எண்ணங்களை ஓடவிட்டுக்கொண்டிருக்க வேண்டும். உங்கள் அறை இருட்டாக இருக்குமானால், கண்களை கைகளால் மூடக்கூட வேண்டியதில்லை. அந்த இருட்டிலேயே கொஞ்ச நேரம் இருந்தால் போதும்.

சூரிய ஒளியைப் பார்க்கும் பயிற்சி

ஐயையோ, சூரிய ஒளி கண்ணில் பட்டால் கண்ணுக்கு ஆகாதே, கண் குருடாகக்கூட ஆகிவிடலாமே என்று பலர் பயப்படுவார்கள். ஆனால், இப்படிப்பட்ட பயம் அர்த்தமற்றது; ஆதாரமற்றது. இந்தப் பயிற்சி சூரிய ஒளியை, அதாவது வெயிலை, பார்க்கும் பயிற்சிதான். கண்களை கொட்டக் கொட்டத் திறந்து வைத்துக்கொண்டு நடுப்பகல் சூரியனை பார்க்கச் சொல்லவில்லை.

கண்ணில் ஒரு பிரச்னை ஏற்படும்போது, சூரிய ஒளியின் துணைகொண்டு அதை குணப்படுத்த முடியும். முறையாகப் பயன்படுத்தினால், சூரிய ஒளி கண்களின் நண்பனாகும் என்று பேட்ஸ் கண்டுபிடித்ததாக பேட்ஸைப் பின்பற்றும் இன்னொரு டாக்டரான மெக்ராக்கன் கூறுகிறார். 

பயிற்சி

கண்களை மெள்ள மூடிக்கொண்டு சூரிய ஒளி கண்ணில் படுமாறு அமர வேண்டும். முதலில் ஒரு சில நிமிடங்கள் இப்படி இருக்கலாம். பழகிய பிறகு கால் மணி நேரம், அரை மணி நேரம்கூட இப்படி இருக்கலாம். ஒரு நாளில் ஒரு தடவைக்கு மேலும் இப்படிச் செய்யலாம். இப்படி மூடிய கண்களுடன் வெயில் படும்படி இருந்துவிட்டு, பிறகு சட்டென்று கண்களைத் திறந்து ஒரு கணம் வானத்தையும் சூரியனையும் பார்க்கலாம். ஒரு கணம்தான். இப்படிச் செய்வதனால் பார்வைத்திறன் கூடும், தளர்ச்சியான மனநிலையும் உண்டாகும் என்கிறார் பேட்ஸ்.

சூரிய சிகிச்சை (Sun Treatment)

ஒளியூட்டப்பட்ட அறையில் ஸ்நெல்லன் சார்ட்டை குறிப்பிட்ட தூரத்தில் வைத்துப் படித்துவிட்டு, பிறகு அதே சார்ட்டை வெயிலில் அதே தூரத்தில் வைத்துப் படிக்க முயற்சி செய்யலாம். அப்படிச் செய்யும்போது வெயிலில் வைத்த சார்ட்டில் உள்ள வாக்கியத்தை அறையில் படித்ததைவிட அதிக தூரத்தில் படிக்க முடியும். இப்படிப் பயிற்சி செய்யும்போது அச்சமோ, அய்யய்யோ வெயிலாச்சே கண் என்னவாவது ஆகிவிடுமோ என்ற வீண் கவலையோ இல்லாமல் செய்ய வேண்டும். இதற்கு சூரிய சிகிச்சை (sun treatment) என்று பெயர். நல்ல கண்களைவிட, பிரச்னை உள்ள கண்களுக்கு ஒளி எப்போதுமே நல்லதுதான் செய்யும். அது செயற்கை ஒளியாக இருந்தாலும் சரி, சூரிய ஒளியாக இருந்தாலும் சரி.

பாமிங் (Palming) பயிற்சி (உள்ளங்கை சிகிச்சை)

பேட்ஸின் பயிற்சிகளில் இது மிகவும் பிரபலமானது. மிகமிக எளிமையானது. உலகில் உள்ள பல நாடுகளிலும் இது இன்றளவும் பின்பற்றப்படுகிறது. யூட்யூபில் இப்பயிற்சி பற்றிய விரிவான காணொளிகள் உண்டு. இது மிக முக்கியமான பயிற்சியும்கூட. பலவிதமான கண் தொடர்பான பிரச்னைகளுக்குப் பலவிதமான பயிற்சிகளை பேட்ஸ் சிபாரிசு செய்கிறார். அப்பயிற்சிகளைச் செய்யும்போதும், செய்த பிறகும்கூட ‘பாமிங்’ செய்வதையும் ஒரு முறையாக அவர் அறிமுகப்படுத்துகிறார். எனவே, ‘பாமிங்’ என்பது பயிற்சிகளின் பயிற்சியாக உள்ளது என்று கூறலாம்.

உள்ளங்கைகளை கன்ன எலும்புகளின் மீது வைத்து வெளிச்சம் படாதவாறு கைகளினால் கண்களை மெள்ள மூடிக்கொள்ள வேண்டும். முழங்கைகளை மேஜையின் மீது வைத்து ஊன்றிக்கொள்ளலாம். அப்போதுதான் உடலில் உள்ள எல்லா தசைகளும் ரிலாக்ஸ்டாக இருக்கும். அப்போது வழக்கம்போல மனதில் எண்ணங்களை ஓடவிட்டுக்கொண்டோ அல்லது அதுவாக ஓடுவதை அனுமதித்துக்கொண்டோ இருக்கக்கூடாது. 

கண்களை மூடிய பிறகு தெரியும் இருட்டில் ஏதாவது நிறங்கள் தெரியலாம். ஆனால் அவை கற்பனையின் விளைவுகள். பார்வை நரம்பின் வழியாக மூளைக்கு எதுவும் போகவில்லை. அப்படி ஏதாவது தெரிந்தாலும், அதையும் மீறி எல்லாம் பரிபூரண கருப்பாக மாறும்வரை காத்திருக்க வேண்டும். அதுவரைக்கும், தோன்றும் நிறங்கள் அல்லது உருவங்களில் இருந்து விடுபட முயற்சி செய்யவும்கூடாது. ஏனெனில், அது ஒரு போராட்டத்தையும் அதன் விளைவாக மன இறுக்கம் என்று புரிந்துகொள்ளப்படும் டென்ஷனையும் உண்டுபண்ணிவிடும். மனமும் உடலும் ரிலாக்ஸ்டாக இருப்பது அவசியம். அப்படியானால் என்ன செய்ய வேண்டும்? 

ஒன்றும் செய்யக்கூடாது. தெரியும் நிறங்களோடு போராடவே கூடாது. அவற்றை விரட்டிவிட எந்த முயற்சியும் செய்யக்கூடாது. ஏனெனில், அது ரிலாக்சேஷனைக் கெடுத்துவிடும். மனம் எந்த அளவுக்கு ரிலாக்ஸ்டாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பார்வை தெளிவாக மாறும், பார்வைத்திறன் கூடும். எனவே பொறுமை வேண்டும். பொறுமையாளர்களோடு நிச்சயமாக நான் இருக்கிறேன் என்று இறைவன் கூறுகின்ற வசனம் ஒன்று திருக்குர்’ஆனில் உள்ளது (8:46). எனவே எந்தக் காரியமும் வெற்றிகரமாக முடிவதற்கு மனிதனுக்குக் கொஞ்சம் பொறுமை அவசியம். அதுவும் ரிலாக்ஸ்டான பொறுமை. எதிர்ப்பார்த்தலற்ற காத்திருப்பு என்றும் இதைச் சொல்லலாம். 

மனதில் டென்ஷன் போய்விட்டால் மூடிய கண்களுக்குள் தெரிந்த நிறங்களெல்லாம் போய் வெறும் கருப்பு தோன்றிவிடும். எல்லாம் கருப்பாகத் தெரிந்தால், உருவங்கள் எதுவும் தெரியாவிட்டால், மனம் ரிலாக்ஸ் ஆகிவிட்டதென்று புரிந்துகொள்ளலாம். எந்த அளவுக்கு கருப்பு ஆழமாகத் தெரிகிறதோ அந்த அளவு மனம் அமைதியாகிவிட்டதென்றும், பார்வைத் திறன் பரிபூரணமாகிவிட்டதென்றும் அர்த்தம்.

அதேசமயம் பசி, தூக்கமின்மை, கோபம், களைப்பு, கவலை, மன அழுத்தம் போன்ற உடல், மன ரீதியான பிரச்னைகளை வைத்துக்கொண்டு கண்களை ரிலாக்ஸ் செய்ய முயன்றால், அது முடியாமல் போய்விடலாம். சாதாரண மனநிலையில் ‘விடாது கருப்பை’ப் பார்க்க முடிகிறவர்களுக்கும் மன அழுத்தம் இருக்கும் நிலையில் அப்படிப் பார்ப்பது கஷ்டமாகிவிடும். ஏனெனில், கண் பார்வை மிகத்தெளிவாக இருந்தால் மனம் மிக அமைதியாக இருக்கிறதென்று அர்த்தம் என்று கூறுகிறார் பேட்ஸ். இதையே தலைகீழாகப் பார்த்தோமானால், இன்னொரு கதவை நம்மால் திறக்க முடியும். அது என்ன? பார்வையை தெளிவாக வைத்துக்கொண்டால் மனம் அமைதியாக இருக்கும் அல்லவா?!

‘பாமிங்’ செய்யும்போது மூடிய கண்களுக்குள் கருப்பான ஒரு பின்புலம் தெரிவதற்குப் பதிலாக, சிவப்பு, பச்சை, சாம்பல், மஞ்சள் என்று பல நிறங்கள் திட்டுத் திட்டாகத் தெரிவதாகவோ அல்லது கருப்பு நிறம் மேகங்களைப்போல துண்டு துண்டாக மிதந்துகொண்டு செல்வதைப் போலவோ காண்பதாக பேட்ஸிடம் சில நோயாளிகள் கூறினர். இன்னும் சிலருக்கு கருப்பு பின்புலம் சில கணங்களுக்குத் தெரிந்ததாகவும், பிறகு உடனே வேறு நிறங்கள் வந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர். 

ஆனாலும் கருப்பு நிறத்தையோ அல்லது கருப்பான பொருள்களையோ நினைவுப் பெட்டகத்திலிருந்து எடுத்துப் பார்ப்பது பலன் தரும். பார்க்கப்படும் கருப்பு நிறம் அல்லது கருப்புப் பொருள் தெளிவற்றதாக இருந்தாலும் பரவாயில்லை. சுமாராகத்தான் தெரிகிறது என்றாலும் அதுவும் பார்வையை மீட்க உதவும். பேட்ஸின் பயிற்சிகளின்படி, கருப்புதான் பார்வை மீட்பராகச் செயல்படுகிறது! ‘பாமிங்’ பயிற்சியின் மூலம் தெளிவான, ஆழமான கருப்பைப் பார்த்து, பார்வைத்திறனை மீட்க முடிந்தவர்கள் ‘கருப்புதான் எனக்குப் புடிச்ச கலரு’ என்று ஆனந்தமாகப் பாடலாம்! 

‘பாமிங்’ செய்யும்போது, அதை தீவிரப்படுத்தும் பொருட்டு சில பயிற்சிகளை கூடுதலாகச் சேர்த்துக்கொள்ளலாம். மூடிய கண்களுக்கு உள்ளே ஒரு வெள்ளைப்பட்டை அல்லது வெள்ளைக் காகிதம் இருப்பதாகவும் அதன் மீது ‘ஓ’ என்ற ஆங்கில எழுத்து வடிவம் கருப்பாக இருப்பதாகவும் கற்பனை செய்யலாம். அப்படிச் செய்யும்போது வெள்ளைத்தாளின் பின்புலத்தைவிட அந்த எழுத்து கருப்பாகத் தெரியும்.

இந்தக் கற்பனை வராவிட்டால், ஒரு கடற்கரையில் கடல் அலைகளின் மீது ஒரு கருப்புப் பந்து அல்லது பெரிய உருளை ஆடிக்கொண்டிருப்பதாகவும், அது அலைகளோடு அலைந்து சிறிதாகி தூரமாக மறைந்துபோவதாகவும் கற்பனை செய்யலாம் என்று பேட்ஸ் கூறுகிறார். இந்தக் கற்பனைதான் என்றில்லை; மனதை ரிலாக்ஸ் செய்யும் எந்தக் கற்பனையாக இருந்தாலும் ஓகேதான்.

நமக்கு நன்கு தெரிந்த கருப்புப் பொருள்களை நினைவுகூரலாம். அது எளிதாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். உதாரணமாக, ஒரு டெய்லருக்கு கருப்பு நூல்கண்டை மனதில் கொண்டுவருவது எளிதாக இருக்கும். பெண்களின் கருங்கூந்தலை கற்பனை செய்வது இன்னும் எளிதாக இருக்கும்! (ஆனால் இது எமி ஜாக்சன்களுக்குப் பொருந்தாது என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது)!

கண் அயற்சி என்று சொல்லப்படும் (eye strain) பிரச்னைக்கும் இது ஒரு நல்ல தீர்வாக இருக்கும். மூளையில் உள்ள பார்வை மையத்தைத் தூண்டும் பயிற்சிகளில் இது மிகச்சிறந்ததாகும் என்றும், தான் உருவாக்கிய பயிற்சிகளிலேயே ‘பாமிங்’தான் மிக எளிமையானது என்றும் பேட்ஸ் கூறுகிறார். 

‘கேடராக்ட்’ பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஒருவர் அறுவை சிகிச்சை இல்லாமல் நல்ல பார்வையை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற உறுதியான முயற்சியில் இந்த ‘பாமிங்’ பயிற்சியை தீவிரமாகச் செய்து ஒரே நாளில் குணமடைந்த அனுபவத்தையும் பேட்ஸ் தனது நூலில் விவரிக்கிறார்.

‘பாமிங்’ பயிற்சியில் மனம் ரிலாக்ஸ் ஆகும். அப்படி ஆகும்போது வசதியான தூரத்தில் ஸ்நெல்லன் சார்ட்டை வைத்துக்கொண்டு அதில் உள்ள எழுத்துக்களில் ஒன்றைப் பார்க்கலாம். அப்படிப் பார்த்த பிறகு கண்களை மூடிக்கொண்டு அதை மனக்கண்ணால் பார்க்க வேண்டும். மனம் ரிலாக்ஸ்டாக இருப்பதால், அப்போது மனதால் பார்க்கப்படும் எழுத்து உண்மையில் இருப்பதைவிட கருமைகூடியதாகத் தெரியும். இப்படியே கருமை கூடும் விதத்தில் கற்பனை செய்து செய்து மீண்டும் மீண்டும் பார்ப்பதன் மூலம் இழந்த பார்வைத்திறனை மிக விரைவில் பெறமுடியும் என்கிறார் பேட்ஸ். 

ஆனால் இப்படி ‘பாமிங்’ செய்யும்போது செய்யக்கூடாத ஒரு செயலும் உண்டு. அதுதான், கருப்பின் மீது கவனத்தைக் குவிப்பது. எப்படியாவது கருப்பாகத் தெரிந்துவிட வேண்டும் என்று கருப்பை ‘கான்சன்ட்ரேட்’ செய்வது. ஒரு புள்ளியில் மனதைக் குவிக்க முயலும் செயலானது, மனதில் டென்ஷனை ஏற்படுத்தி ரிலாக்சேஷனைக் கெடுத்துவிடும். கண்களுக்கு அது ‘ஸ்ட்ரெய்ன்’ கொடுத்துவிடும். எனவே, ‘பாமிங்’ செய்யும் நோக்கமே வீணாகிவிடும் என்று பேட்ஸ் எச்சரிக்கிறார். 

எவ்வளவு அதிகமான நேரம் ‘பாமிங்’ செய்ய முடியுமோ அவ்வளவுக்கு ரிலாக்சேஷன் கிடைக்கும். எவ்வளவு ரிலாக்சேஷன் கிடைக்கிறதோ அவ்வளவுக்கு பார்வையில் தெளிவு ஏற்படும் என்றும் பேட்ஸ் கூறுகிறார். 

‘பாமிங்’ செய்வதற்கு முன் ஒரு கருப்பான பொருளைப் பார்த்திருந்தால், ‘பாமிங்’ செய்யும்போது அந்த கருப்பான பொருள் மட்டுமின்றி, வெள்ளையான அல்லது கருப்பல்லாத அதன் பின்புலமும் நினைவுக்கு வரும். எனினும் ஒரு சில விநாடிகளுக்கு அந்தக் கருப்பான பொருளைப் பார்த்தாலே அதன் பின்புலம் மறைந்து எல்லாம் கருப்பாகிவிடும். 

கருப்பை ஆழமாகப் பார்க்காமலே பார்த்ததாக நோயாளிகள் கூறுவதுண்டு. ஆனால், ‘பாமிங்’ செய்ததன் விளைவுகளைப் பரிசோதிக்கும்போது, அவர்கள் பொய் சொன்னார்களா அல்லது உண்மை சொன்னர்களா என்பது தெரிந்துவிடும். பார்வைத்திறன் கூடியிருந்தால் அவர்கள் சொன்னது உண்மை. இல்லையெனில் கற்பனை. 

சரி, கருப்பான பொருள்களை தேவையான அளவுக்கு நினைவுகூர்வதில் பிரச்னை இருந்தால் என்ன செய்யலாம்? சிவப்பு, மஞ்சள், பச்சை, பழுப்பு, வெள்ளை என எந்த நிறத்தில் உள்ள பொருளை வேண்டுமானலும் உதவிக்கு அழைக்கலாம்! இந்த நிறத்தையோ அல்லது இந்நிறங்களில் உள்ள பொருள்களில் ஏதாவது ஒன்றையோ நினைவுகூரலாம். ஆனால், ஒரு வினாடிதான். ஆமாம். கருப்பல்லாத நிறங்களை ஒரு விநாடிக்கு மேல் பார்க்க வேண்டியதில்லை என்கிறார் பேட்ஸ். இப்படிப் பார்ப்பதும் விட்டுவிடுவதுமாக ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்கு விட்டுவிட்டுச் செய்ய வேண்டும். 

ஐம்புலன்களுக்கான எல்லா நரம்புகளையும் ரிலாக்ஸ் செய்வதில் ‘பாமிங்’ பயிற்சிக்கு பெரிய பங்குண்டு. இப்படித் தொடர்ந்து செய்து வந்தால், நோயாளி நிரந்தரமாகக் குணமடைவார் என்பது மட்டுமல்ல; கண்வலி, தலைவலி எல்லாம் போயிவிடும் என்றும் பேட்ஸ் அடித்துக் கூறுகிறார். 

க்ளாகோமா எனப்படும் விழி விறைப்பு நோயால் வலது கண் பாதிக்கப்பட்ட ஒருவர், கடுமையான வலியாலும் வேதனையாலும் ஆறு மாதங்களாகக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். ஆனால், அவர் அரை மணி நேரம் ‘பாமிங்’ செய்த பிறகு அவருடைய வலி முற்றிலுமாகப் போய்விட்டது. அவரால் ஒளியைப் பார்க்க முடிந்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நிரந்தரமாகக் குணமடைந்தார். மறுபடியும் அவருக்கு க்ளாகோமா வரவே இல்லை என்று பேட்ஸ் தனது நூலில் குறிப்பிடுகிறார். 

ஒழுங்காகப் ‘பாமிங்’ செய்தால், செய்து கண்களைத் திறந்த பிறகும் ரிலாக்சேஷன் தொடரும். பின் அது உங்களை விட்டுப் போவதில்லை. ‘பாமிங்’ மூலம் முயற்சி செய்பவர்கள் மிக விரைவில் குணமடைகிறார்கள். அவர்களைப் பாராட்ட வேண்டும் என்று பேட்ஸ் கூறுகிறார்.

எழுவது வயது நோயாளி ஒருவர் ‘பாமிங்’ செய்து குணமான விவரங்களையும் தருகிறார். அந்த எழுபது வயது முதியவருக்கு பல பிரச்னைகள் இருந்தன. அவருக்கு முதுமையினால் ஏற்படும் பார்வைக் குறைவு (presbyopia), தூரப்பார்வை, சிதறல் பார்வை இதெல்லாம் அல்லாமல் காடராக்ட் வேறு இருந்தது! கிட்டத்தட்ட, நாற்பது ஆண்டுகளாக அவர் மூ.க. அணிந்திருந்தார். படிப்பதற்கும் மேஜை வேலைகளைப் பார்க்க மட்டுமே அவர் இருபது ஆண்டுகள் மூ.க. அணிந்திருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில், மூ.க. அவருக்கு உதவவில்லை. எப்படிப் பார்த்தாலும் பார்வை சரியாகத் தெரியவில்லை. அப்போதுதான் பேட்ஸின் ‘பாமிங்’ பற்றித் தெரிந்துகொண்டார். 

நான் அதை அதிக நேரம் செய்யலாமா என்று பேட்ஸிடம் கேட்டார். இல்லை, ரொம்ப நேரம் செய்யவேண்டியதில்லை. ‘பாமிங்’ என்பது கண்களுக்கு ஓய்வு கொடுப்பதுதான். ஓய்வையும் ரொம்ப நேரம் கொடுக்கக்கூடாது என்று பேட்ஸ் கூறினார். 

கொஞ்ச நாள் கழித்து பேட்ஸைச் சந்தித்த அந்த முதியவர், “டாக்டர், ரொம்ப கஷ்டமாகிவிட்டது; ரொம்ப சலிப்பூட்டுகிறது” என்றார். 

எது சலிப்பூட்டுகிறது என்று பேட்ஸ் கேட்கவும், ‘பாமிங்’ என்று பதில் சொன்னார். ஏன் என்று பேட்ஸ் கேட்க, “தொடர்ந்து 20 மணி நேரம் நான் ‘பாமிங்’ செய்தேன்” என்று கூறியிருக்கிறார்!

“இல்லையே, அப்படி செய்திருக்க முடியாதே, நீங்கள் இடையில் சாப்பிடப் போயிருக்க வேண்டுமே” என்று பேட்ஸ் கேட்க, “இல்லை டாக்டர், நான் சாப்பிடப் போகவே இல்லை. காலையில் நாலு மணியிலிருந்து இரவு பன்னிரண்டு வரை தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டு தொடர்ந்து ‘பாமிங்’ செய்துகொண்டிருந்தேன்” என்றாரே பார்க்கலாம்!

நிச்சயம் சலிப்பூட்டுவதாகத்தான் இருந்திருக்கும்! இவ்வளவு நேரம் ‘பாமிங்’ செய்வதை பேட்ஸ் சிபாரிசு செய்யவில்லை. ஆனால், எப்படியாவது பிரச்னையிலிருந்து விடுபட்டால் போதும் என்ற வேகம் அந்த முதியவரை அப்படிச் செய்யவைத்துள்ளது. ஆனாலும் அவருக்கு அது உதவவே செய்தது. எப்படி?

மூ.க. போடாமல் பரிசோதனை சார்ட்டில் இருந்த எழுத்துகளை அவரால் 20 அடி தூரத்திலிருந்து படிக்க முடிந்தது! Perfect Eyesight Without Glasses என்ற அவரது நூலில் ‘பாமிங்’ பற்றிய அத்தியாயத்தின் 135-வது பக்கத்தில் பேட்ஸ் இதைப் பதிவு செய்துள்ளார். 

இன்னும் நிறைய உண்டு. பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com