40. என் கண்ணே! - 8

ஒரு நிமிடத்துக்குள்ளேயே உங்களால் ‘ஆன்’ செய்யப்பட்ட விளக்கின் ஒளியை கண் கூசாமல் பார்க்க முடியும். கண் ஸ்ட்ரெய்ன் ஆகாது என்று நன்றாகத் தெரிந்தால் சூரியனைக்கூட ஒரு விநாடி பார்க்கலாம்.

மிகமிக முக்கியமானது எதுவும் கண்களுக்குத் தெரிவதில்லை – அந்துவான்-து-செயின்ட் எக்சுபரி

பொதுவாக, கண் பார்வையை மீட்டெடுக்கும் சில பயிற்சிகளை இதுவரை பார்த்தோம். குறிப்பிட்ட கண்ணின் உறுப்புகள் சார்ந்த சில பயிற்சிகளை இங்கே பார்க்கலாம்.

கண்ணின் பாவைக்கான பயிற்சி

ஒளி, இருள், ஒளி, இருள் என்று மாறிமாறிப் பார்ப்பதன் மூலம், கண்ணின் பாவையும் அதனோடு தொடர்புகொண்ட தசைகளும் வலுப்பெறும். இதனை இரவிலும் செய்யலாம், பகலிலும் செய்யலாம்.

இரவென்றால், ஒரு அறையில் இரண்டு மூன்று விநாடிகளுக்கு ஒரு தரம், ஒரு விளக்கைப் போட்டுப் போட்டு அணைக்கலாம். போடும்போது, அந்த ஒளியை உடனே பார்க்காமல் ஒரு வெள்ளைப் பரப்பை அல்லது ஒரு நோட்டுப் புத்தகத்தில் உள்ள எழுதாத பக்கத்தை முதலில் பார்க்கலாம். பின்பு அந்த ஒளியைப் பார்க்க வேண்டும். இப்படிப் பார்ப்பது சிரமமாக இருந்தால், பகல் நேரத்தில் ஜன்னலைத் திறந்து வெளிச்சத்தைப் பார்த்துவிட்டு, உடனே ஜன்னலை மூடி அல்லது திரைச்சீலையைப் போட்டு மூடிப் பார்க்கலாம்.

இப்படிப் பார்க்கும்போது கிடைக்கும் இருட்டான நேரத்தில், அறையில் என்னென்ன பொருள்கள் உள்ளன என்று கவனிக்க வேண்டும். அப்போதுதான், நம் கண்ணின் பாவையை விரிவடையைச் செய்யும் தசைகள் தூண்டப்படும். பாவை விரிய விரிய பொருள்கள் அதிகமாகப் புலப்பட ஆரம்பிக்கும். நம் பார்வைத் திறன் கூடும்.

ஒரு நிமிடத்துக்குள்ளேயே உங்களால் ‘ஆன்’ செய்யப்பட்ட விளக்கின் ஒளியை கண் கூசாமல் பார்க்க முடியும். கண் ஸ்ட்ரெய்ன் ஆகாது என்று நன்றாகத் தெரிந்தால் சூரியனைக்கூட ஒரு விநாடி பார்க்கலாம்.

கிட்டப்பார்வை உள்ளவர்களுக்காக

சாதாரணமாக, அதிகம் பேருக்கு இருக்கும் பிரச்னை கிட்டப்பார்வை. அருகில் உள்ளவை தெளிவாகத் தெரியும். தூரத்தில் உள்ளவை மங்கலாகத் தெரியும் பிரச்னை இது. விழித்திரையில் பிம்பம் விழுவதற்குப் பதிலாக முந்திரைக்கொட்டை மாதிரி கொஞ்சம் முன்னாடியே பிம்பம் விழுவதால் இப்பிரச்னை ஏற்படுகிறது. இருபது வயதுக்குள் இது வந்துவிடுவதாகவும், ஐரோப்பியர்களில் 30 விழுக்காடும், ஆசியர்களில் 60 விழுக்காடும் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தூரநோக்கு கொண்ட – தூரப்பார்வை அல்ல – விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்! போகட்டும். இப்பிரச்னையைச் சரிசெய்ய பேட்ஸின் பயிற்சிகள் என்னவென்று பார்க்கலாம்.

எங்கிருந்து பார்த்தால் குறிப்பிட்ட எழுத்து தெளிவாகத் தெரிகிறதோ அங்கிருந்து முதலில் பார்க்க வேண்டும். பிறகு கண்களை மூடி அந்த எழுத்தை கற்பனையால் பார்க்க வேண்டும். பின் மறுபடியும் கண்ணைத் திறந்து எழுத்தைப் பார்க்க வேண்டும். பின் மறுபடியும் கற்பனையில் பார்க்க வேண்டும். இப்படியே கொஞ்ச நேரம் மாற்றி மாற்றி செய்துகொண்டிருக்க வேண்டும். கற்பனையில் பார்த்த அளவுக்குத் தெளிவாக கண்ணைத் திறந்த பிறகும் பார்க்க முடிகிறவரை.

இதே பயிற்சியை ஆறு அங்குல தூரத்திலும், பின் மூன்று அங்குல தூரத்திலும் செய்யலாம்.

சிதறல் பார்வை (astigmatism) உள்ளவர்களுக்கான பயிற்சி

கண்ணின் தசைகளைத் தளர்ச்சியடையச் செய்யும் இந்தப் பயிற்சியின் மூலம் சிதறல் பார்வைக் கோளாறுகள் நீங்கும். உங்கள் முகம் ஒரு சுவர்க் கடிகாரத்தின் நடுவில் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். உங்கள் மூக்குக்கு நேராக உங்கள் பெருவிரலைக் கொண்டுவாருங்கள். பெருவிரல் தெளிவாகத் தெரிய வேண்டுமென்ற அவசியமில்லை. கண்ணின் தசைகளுக்குத் தளர்ச்சி கொடுப்பதுதான் இப்பயிற்சியின் நோக்கம்.

மெதுவாக பெருவிரலை கடிகாரத்தின் 12 என்ற எண் இருக்கும் இடத்தை நோக்கி மேலே கொண்டு போங்கள். கண்ணை மேலே உயர்த்தி அதைப் பார்க்கக் கூடாது. விரல் மட்டும்தான் மேலே போக வேண்டும். பார்வை போகக் கூடாது. இப்போது பெருவிரல் தெரியாது. அங்கே பெருவிரலை நிறுத்திவைத்துக்கொள்ளுங்கள். ஆனால் இரண்டு விநாடிகள்தான். அதற்கு மேல் வேண்டாம். இந்த நேரத்தில் கண் தசைகளில் ஒரு இறுக்கம் இருப்பதை உணர முடியும். பிறகு பழையபடி பெருவிரலை மூக்குக்கு நேரே கொண்டுவாருங்கள். இப்போது கண் தசைகளில் ஒரு தளர்ச்சியை உணர முடியும்.

இப்போது விரலை கடிகாரத்தில் 1 இருக்கும் இடத்துக்குக் கொண்டு போங்கள். மீண்டும் நடுப்பகுதிக்குக் கொண்டுவந்துவிடுங்கள். இப்படியே 3, 5, 6, 7, 9, 11, 12 என்று போய் வாருங்கள். மத்தியிலிருந்து பெருவிரலை வெளியே கொண்டு போகும்போது, மூச்சை நிதானமாக உள்ளிழுங்கள். மீண்டும் நடுப்பகுதிக்கு, அதாவது மூக்குக்கு நேரே, வரும்போது மூச்சை நிதானமாக வெளியே விடுங்கள்.

இந்தப் பயிற்சியை, முதலில் 12-ல் இருந்து வலப்பக்கமாகத் தொடங்கி (clock-wise) கீழிறங்கி வர வேண்டும். ஒரு சுற்று முடிந்தபின், இடப்பக்கமாகத் (anti-clockwise) தொடர வேண்டும். இவ்விதம் பயிற்சியை இரண்டு நிமிடங்களுக்குச் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து நான்கு முறைகள் செய்யலாம்.

திபேத்திய வட்டப் பயிற்சி - 1

பயிற்சியைத் தொடங்குமுன் பாமிங் செய்துகொள்ளவும். திபேத்திய வட்டப் பயிற்சிக்கான வரைபடத்தை மூக்கின் நுனிக்கு நேரே இரண்டிலிருந்து பத்து சென்டிமீட்டர் தூரம் வரை வைத்துக்கொள்ளலாம். வரைபடத்தை சரியாகப் பார்க்க முடியாவிட்டால் கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், இது கண் தசைகளுக்கு ரிலாக்சேஷன் கொடுக்கும் பயிற்சிதான். வரைபடத்தின் உச்சியில் உள்ள வட்டங்களை சுவர்க் கடிகாரத்தின் மணி காட்டும் எண்களாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.

  1. மெதுவாக மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டு, படத்தில் உள்ள படிகளின் வழியாக மத்தியிலிருந்து மேலே செல்லுங்கள் (கற்பனையால்). அங்கே ஒரு இரண்டு விநாடிகள் இருந்துவிட்டு பின்பக்கமாக படிப்படியாகக் கீழே வாருங்கள். இப்படிச் செல்லும்போது, மூச்சு உள்ளே இழுக்கும்போது தசைகளில் டென்ஷனையும், மூச்சை வெளியே விடும்போது ரிலாக்சேஷனையும் உணருங்கள்.
  2. பின் மத்தியிலிருந்து மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே வலப்பக்கமாக உள்ள கோட்டின் வழியாக அதன் முனைவரை செல்லுங்கள். இது உங்கள் தசைகளை தளர்ச்சியடையச் செய்யும். அங்கே இரண்டு விநாடிகள் இருந்துவிட்டு மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே திரும்பி வாருங்கள்.
  3. 1-ஐயும் 2-ஐயும் திரும்பச் செய்யுங்கள். இப்படியே வட்டம் முழுவதற்கும் செய்து தசைகளை ரிலாக்ஸ் செய்துவிட்டு மீண்டும் இடப்பக்கமாகத் தொடங்கி (anti-clockwise) இதைச் செய்யுங்கள்.

இவ்விதம் பயிற்சியை இரண்டு நிமிடங்களுக்குச் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து நான்கு முறைகள் செய்யலாம். இதே பயிற்சியை கீழ் விளக்கியவாறு இன்னொரு விதமாகவும் செய்யலாம்:

திபேத்திய வட்டப் பயிற்சி - 2

  1. முதலில் பாமிங் செய்துகொள்ளவும்.
  2. வரைபடத்தின் மேலே உள்ள புள்ளியில் தொடங்கி கண்களை இடப்பக்கமாக (clockwise) புள்ளிகளை மட்டும் பார்த்து வரவும்.
  3. கண்களை 2-லிருந்து 8-க்கும், 8-லிருந்து 2-க்கும் கொண்டுவரவும் (அதாவது, வரைபடம் சுவர்க் கடிகாரம் என்று கற்பனை செய்து, அதன் புள்ளிகள் யாவும் எண்கள் என்று கற்பனை செய்துகொள்ள வேண்டும்).
  4. பின்பு அதே நகர்வை 4-லிருந்து 10-க்கும், 10-லிருந்து 4-க்கும் செய்யவும்.
  5. சில விநாடிகள் கண்களை சிமிட்டிவிட்டு பாமிங் செய்து முடித்துக்கொள்ளவும்.

தூர ஊஞ்சலாட்டம்

அடிவானத்தைப் பார்க்கும்படி உயரமான இடத்தில் நின்றுகொண்டு இந்தப் பயிற்சியை செய்வது நல்லது. அப்படி நின்றுகொண்டு உடலை இடம் வலமாக அரைவட்டம் போட்டு சுற்றி ஊஞ்சல்போல ஆட்டவும். அப்போது அந்த ஊஞ்சலாட்டத்துக்குத் தகுந்த மாதிரி கண்களும் அடிவானத்தைப் பார்க்கட்டும். சில நிமிடங்கள் பயிற்சியைச் செய்யலாம். ‘லாங் ஸ்விங்’ என்று இது குறிப்பிடப்படுகிறது.

உருளையை காட்சிப்படுத்தும் பயிற்சி

  1. ரப்பரால் ஆன ஒரு சின்ன உருளையை உங்கள் வலது கண்ணுக்கு சற்று மேலே வைத்திருப்பதாக கற்பனை செய்யுங்கள்.
  2. உங்கள் விரல்களால் அந்த உருளையை இடம் வலமாக நசுக்குவதாகவும், அதன் காரணமாக அதன் வடிவம் நீள்வதாகவும் சுருங்குவதாகவும், விரல்களை எடுத்தவுடன் மீண்டும் அது தன் பழையை வடிவத்துக்கு வருவதாகவும் கற்பனை செய்யுங்கள்.
  3. அதேபோல மேலிருந்து கீழாக விரல்களால் நசுக்குவதாகவும், அதனால் அதன் வடிவம் மாறுபடுவதாகவும், மீண்டும் விரல்களை விடுவித்தவும் பழைய நிலைக்குத் திரும்புவதாகவும் கற்பனை செய்யுங்கள்.
  4. இதே கற்பனையை இடது கண்ணுக்கும் செய்யுங்கள்.

பயிற்சியை ஐந்திலிருந்து பத்து முறைகள் வரை இரண்டு நிமிடங்களுக்கு செய்யலாம். ஒரு நாளைக்கு மூன்றிலிருந்து எட்டு முறைகள் இப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

கண் கோளங்களை அமுக்கிவிடும் பயிற்சி

பாமிங் செய்யும்போதோ, மேலே சொன்ன உருளையை காட்சிப்படுத்தும் பயிற்சிக்குப் பின்னரோ இதைச் செய்வது நல்லது.

  1. மூடிய இரண்டு கண்களின் இமைகளின் மீது ஒரு அல்லது இரண்டு விரல்களை மெதுவாக வைத்துக்கொள்ளவும்.
  2. இப்படி வைத்துக்கொள்ளும்போது கொடுக்கப்படும் அழுத்தம் சுகமானதாக இருக்க வேண்டும். வலிக்குமாறு அழுத்திவிடக் கூடாது.
  3. இடம் வலமாகவோ, மேல் கீழாகவோ, வட்டமாகவோ விரல்களால் அமுக்கிவிட்டுக்கொண்டோ சுற்றலாம். இப்படி பத்து தடவைகள் செய்யலாம். இடப்பக்கமாவோ, வலப்பக்கமாகவோ செய்து சுற்றை முடிக்கலாம். மென்மையான முறையில் செய்வது முக்கியம்.

ஒரு நிமிடத்துகு இப்பயிற்சியை செய்யலாம். ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து நான்கு முறைகள் செய்யலாம்.

தூரப்பார்வைக்கான பயிற்சி (முதுமையின் காரணமாக உண்டாகும் பார்வைக்கோளாறுகளுக்கும் இதே பயிற்சிதான்)

பார்க்கும்போது படிமங்கள் விழித்திரையில் விழாமல் அதற்குப் பின்னால் விழுவதனால் ஏற்படுவது தூரப்பார்வை பிரச்னை. அதனால் தூரத்தில் உள்ளது மட்டுமே தெளிவாகத் தெரியும். ஆனால் அருகில் உள்ளது மங்கலாகத் தெரியும். இப்பிரச்னை உள்ளவர்கள் புத்தகம், பத்திரிக்கை என படிக்கும்போது கண்கள் விரைவில் தளர்ச்சியடையும். தலைவலி, எரிச்சல் போன்றவை வரலாம். கீழ்க்கண்ட பயிற்சிகளைச் செய்வதன் மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வாய்ப்புண்டு.

சின்ன எழுத்துகளில் எழுதப்பட்டதை ரிலாக்ஸ்டாக படிக்க முயல்வதன் மூலம் பார்வை மேம்படும். ஒரு சார்ட்டில் பலவித அளவுகள் கொண்ட எழுத்துருக்களில் எழுதப்பட்ட பத்திகளைப் பார்க்க வேண்டும். ஒரு பத்தி 12 அளவு கொண்ட எழுத்துருவில் இருந்தால் அடுத்த பத்தி 10, அடுத்தது 8, அடுத்தது 6 என்று குறைத்துக்கொண்டே போவதாக இருக்கலாம். இதை நாமேகூட கணினியும் பிரின்ட்டரும் இருந்தால் தயார் செய்யலாம்.

  1. அப்படி ஒரு சார்ட்டை தயார் செய்துகொள்ள வேண்டும்.
  2. பெரிய எழுத்தில் உள்ள சொற்களை ஒவ்வொரு எழுத்தாகப் பார்க்க வேண்டும். அவ்வப்போது இமைத்துக்கொண்டும், கொஞ்ச நேரத்துக்கு ஒருதரம் கண்களை மூடி ஓய்வு கொடுத்துக்கொண்டும் இருக்க வேண்டும். கண்களை மூடி ஓய்வெடுக்கும்போது கண் திறந்து பார்த்த எழுத்தை கற்பனையில் பார்க்க வேண்டும்.
  3. இப்போது சின்ன எழுத்துருக்களில் உள்ள சொற்களுக்குச் சென்று 2-ல் சொன்னதுபோல் செய்ய வேண்டும். எழுத்து தெளிவாகத் தெரியாவிட்டால், கண்களுக்கு அழுத்தம் கொடுத்துப் பார்க்க வேண்டாம். எழுத்தின் வடிவம், ஓரங்கள், இரண்டு எழுத்துகள் அல்லது சொற்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளி இவற்றைப் பார்க்கலாம். சற்று இமைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் கண்கள் ரிலாக்ஸ் ஆகும். ‘தாள் வெள்ளையாகவும், எழுத்து கருப்பாகவும் இருக்கிறது’ என்று மனதில் சொல்லிக்கொள்ளுங்கள்.
  4. கண்கள் களைப்படையவில்லையெனில், இன்னும் சிறிய எழுத்துருக்கள் கொண்ட பகுதிக்குச் சென்று 3-ல் உள்ளதுபோல் செய்யலாம்.
  5. மீண்டும் பெரிய எழுத்துருக்களுக்குச் செல்லுங்கள். முன்பைவிட அவை இப்போது தெளிவாகத் தெரியும்.

இப்பயிற்சியை மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள்வரை செய்யலாம். ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் செய்யலாம்.

இன்னும் உண்டு, பார்க்கலாம்…

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com