51. நமக்குள் ஒரு ஞானி - 3

ஒரு ஹீமோக்ளோபின் நம் உடலுக்குள் எப்படி உருவாகிறது என்று தெரிந்தால் அசந்து போவோம். இறைவன் உடலுக்குக் கொடுத்திருக்கும் ஞானத்தை ஓரளவு நிச்சயம் புரிந்துகொள்ள முடியும். பார்க்கலாமா?
அணுவின் அமைப்பைக்கூட மனித மனம் கண்டுபிடித்துவிட்டது. எனவே அது அணுவைவிட நுட்பமானது. மனதின் பின்னால் உள்ள ஆன்மாவானது, மனதைவிட நுட்பமானது – ரமண மகரிஷி

வடிகட்டும் சிறுநீரகங்கள்

நமது இரண்டு சிறுநீரகங்களும் மிக அற்புதமான பல வேலைகளைச் செய்கின்றன. அவற்றில் ஒன்று வடிகட்டுதல். நமது ரத்தத்தில் கலந்துவரும் பலவிதமான சமாசாரங்களில் எது உடலுக்குத் தேவையானது, எது தேவையில்லாதது என்று தெரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் அவற்றைப் பிரித்தெடுத்து, ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, தேவையானதை மீண்டும் உடலுக்குள் அனுப்பிவிட்டு, தேவையில்லாததை சிறுநீர்ப்பைக்கு அனுப்பி உடலை விட்டு வெளியேற்றிவிடுகிறது!

ஆனால் இது புரோட்டீன், இது யூரியா, இது சோடியம், இது க்ளுக்கோஸ் என்று எப்படி அதற்குப் பிரித்தறியத் தெரியும்? க்ளோமெரூலஸ் என்று சொல்லப்படும் நுண்குழாய்கள் மூலம் அந்த வேலையை நம் கிட்னி செய்கிறது! மூன்றடுக்கு கொண்ட வடிதட்டு மாதிரியான அமைப்பில் அது வேலை செய்கிறது! நமது ஒரு லிட்டர் ரத்தத்தில் டஜன் கணக்கில் கரைந்துபோன க்ளுக்கோஸ், பைகார்பனேட், சோடியம், குளோரின், யூரியா போன்ற பல சமாசாரங்கள் இருக்கும். எல்லாவற்றையும் பரிசோதித்து, தேவையானதை மட்டும் உடலுக்குள் மீண்டும் அனுப்பிவிட்டு, தேவையில்லாததை வெளியேற்றிவிடுகிறது நம் கிட்னி! இயற்பியல், வேதியியல், உயிரியல் எதுவும் படிக்காமலே!

ரத்த அழுத்தம்

எனக்கு திடீர்னு ரொம்ப பிபி அதிகமாயிடுச்சு, ஏன்னே தெரியல, எனக்கு பிபி திடீர்னு ரொம்ப குறைஞ்சிடுச்சு, மயங்கி விழுந்துடுவேனோன்னு பயமாயிடுச்சு – இப்படி அங்கலாய்ப்பவர்கள் நம்மில் பலருண்டு. ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தும் வேலையைச் செய்வதும் நம் கிட்னிகள்தான் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? ரத்தத்தில் உள்ள திரவங்களின் அளவு அதிகமாகும்போது ரத்த அழுத்தம் கூடும். அப்போது கிட்னிக்கு இதயம் செய்தி அனுப்பும்! அதிகமான அளவில் உள்ள தேவையில்லாத திரவங்களையெல்லாம் சிறுநீரகங்கள் வெளியேற்றிவிடும். அதன்மூலமாக ரத்த அழுத்தம் ‘நார்மல்’ நிலைக்கு வருகிறது!

மயோக்ளோபினும் ஹீமோக்ளோபினும்

நமது உடலில் நிறைய புரோட்டீன்கள் உள்ளன. அவற்றுக்கு வேறுவேறு பெயர்கள். புரோட்டீன் என்பது பொதுப்பெயர். ஊழியர்கள் என்பது மாதிரி. ஒவ்வொரு ஊழியருக்கும் ஒரு பெயர் இருக்குமல்லவா? அதுபோல. உதாரணமாக, நாம் எழ வேண்டும், தொழ வேண்டும், விழ வேண்டும், அழ வேண்டும், பார்க்க வேண்டும், சேர்க்க வேண்டும், கோர்க்க வேண்டும், படுக்க வேண்டும், தடுக்க வேண்டும், குத்த வேண்டும், கத்த வேண்டும், சிரிக்க வேண்டும், பறிக்க வேண்டும், கொரிக்க வேண்டும் – இப்படி எல்லா டும்டும் காரியங்களுக்கும் நம் தசைகள் ஒத்துழைக்க வேண்டும். நம் தசைகள் ஒத்துழைக்க வேண்டுமென்றால் தொடர்ந்து நமது செல்களுக்கு ஆக்ஸிஜன் கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டும்!

அப்படியானால் அந்த ஆக்ஸிஜனை யார் கொண்டு வந்து கொடுப்பார்? அவர் ஒரு புரோட்டீன். அவருக்குப் பெயர் மயோக்ளோபின். ஹீமோக்ளோபின் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அடிக்கடி நம் ரத்தத்தில் அது குறைகிறது, கூடுகிறது என்றெல்லாம் நமக்குத் தெரியும். அந்த ஹீமோக்ளோபினுக்கும் இந்த மயோக்ளோபினுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. பெயர்களில் மட்டுமல்ல, செயலிலும்தான். இருவருமே ஆக்ஸிஜனைக் கொண்டு வருபவர்கள்! ஆமாம். ஹீமோக்ளோபின் தேவையான அளவு ஆக்ஸிஜனை ரத்தத்துக்குக் கொண்டு செல்லும். மயோக்ளோபின் தசைகளுக்குக் கொண்டு செல்லும்.

இரண்டுக்கும் வித்தியாசம் உண்டா? உண்டு. ஹீமோக்ளோபின் அதிகமான அளவு ஆக்ஸிஜனை ரத்தத்துக்குக் கொண்டு செல்லும். மயோக்ளோபின் குறைந்த அளவு, கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ஸிஜனை தசைகளுக்குக் கொண்டு சேர்க்கும். அது முயல் என்றால், இது ஆமை. ஆனால், இவர்கள் தங்கள் வேலையை மாற்றிக்கொண்டால் என்னாகும்? கிழிஞ்சுது கிருஷ்ணகிரி என்பார்களே, அப்படியாகிவிடும் நம் உடல்! ஆமாம். தசைகளுக்கு அதிக அளவு ஆக்ஸிஜன் சென்றாலோ, ரத்தத்துக்கு குறைந்த அளவு ஆக்ஸிஜன் சென்றாலோ கதை கந்தலாகிவிடும். உடலின் சமநிலை கெட்டுவிடும். ஒரே வேலையைச் செய்கின்ற இரண்டு பேரை நாம் மாற்றி மாற்றி வேலைக்கு அனுப்பலாம். நம் வாழ்வில் இது நடக்கிறது. அது நன்மையாகக்கூட இருக்கலாம். ஆனால், உடலுக்குள் அப்படிச் செய்யக்கூடாது. எனவே எந்தக் காலத்திலும் மயோக்ளோபின் வேலையை ஹீமோக்ளோபினோ, ஹீமோக்ளோபினின் வேலையை மயோக்ளோபினோ செய்வதில்லை! எந்தக் காலத்திலுமே அத்தகைய தவறு நடப்பதே இல்லை! அடடா, இந்த அற்புத ஏற்பாட்டை என்னவென்று சொல்வது!

ஒரு ஹீமோக்ளோபின் உருவாகும் அற்புதம்

ஒரு ஹீமோக்ளோபின் நம் உடலுக்குள் எப்படி உருவாகிறது என்று தெரிந்தால் அசந்து போவோம். இறைவன் உடலுக்குக் கொடுத்திருக்கும் ஞானத்தை ஓரளவு நிச்சயம் புரிந்துகொள்ள முடியும். பார்க்கலாமா?

ஒவ்வொரு டி.என்.ஏ.வுக்குள்ளும் முந்நூறு கோடி எழுத்துகளால் ஆன உத்தரவுகள், தகவல்கள் பதிவாகியுள்ளன என்று ஏற்கெனவே பார்த்தோம். அந்த முந்நூறு கோடியில் நம் உடலுக்குத் தேவையான அனைத்து உத்தரவுகளும் தகவல்களும் அடங்கியுள்ளன. ஒரு ஹீமோக்ளோபின் உருவாக வேண்டும் என்ற சூழ்நிலை வரும்போது, அந்த முந்நூறு கோடி எழுத்துகளில் இருந்து தேவையான உத்தரவுகள் மட்டும் மிகுந்த கவனத்தோடு தனியே பிரித்தெடுக்கப்படுகின்றன. அந்த வேலையை ஆர்.என்.ஏ. பாலிமரேஸ் என்ற என்ஸைம் செய்கிறது! ஒரு சின்னத் தவறுகூட நடக்காமல், வெகு உன்னிப்பாக எல்லா எழுத்துகளும் படிக்கப்பட்டு, அவற்றிலிருந்து தேவையான எழுத்துகள் மட்டும் எடுக்கப்பட்டு, அவற்றில் உள்ள உத்தரவுகள் ஆர்.என்.ஏ.வால் செயல்படுத்தப்படுகின்றன.

எழுத்துகள் / உத்தரவுகளைப் படிப்பது, அதன்பிறகு ஹீமோக்ளோபின் தயாரிக்க வேண்டிய இடத்துக்கு அந்த உத்தரவுகளை எடுத்துக்கொண்டு போக வேண்டியது மட்டும்தான் ஆர்.என்.ஏ.வின் வேலை. அந்த உத்தரவுகளின்படி ஹீமோக்ளோபின் என்ற புரோட்டீனை உருவாக்க வேண்டியது ரைபோசோம் என்ற என்ஸைமின் வேலை. ஆர்.என்.ஏ. கம்பெனியின் எம்.டி. மாதிரியும், ரைபோசோம் சீஃப் எக்ஸிகியூட்டிவ் மாதிரியும் செயல்படுகின்றனர் என்று வைத்துக்கொள்ளலாம். சரி இருக்கட்டும். ஆர்.என்.ஏ. படிக்கும் உத்தரவுகளின் படத்தைப் பார்க்கலாமா? கீழே பாருங்கள் -

இந்தப் படத்தில் உள்ள எழுத்துகள் எல்லாம் உத்தரவுகளாகும். இவை தொடர்பின்றி, சகட்டுமேனிக்கு எடுக்கப்பட்ட எழுத்துகள் அல்ல. மிகுந்த கவனத்துடன் ஒரு ஹீமோக்ளோபினை உருவாக்குவதற்காக மட்டும் கையாளப்படும் உத்தரவுகளாகும். அந்த வரிசையும், அவற்றின் அர்த்தமும், ஆர்.என்.ஏ. மற்றும் ரைபோசோமுக்கு மட்டுமே வெளிச்சம்! இப்படித்தான் நம் உடல் முழுக்க அவ்வப்போது தேவைப்படும் உத்தரவுகள் டி.என்.ஏ.யிலிருந்து எடுக்கப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டு, புரிந்துகொள்ளப்பட்டு செயல் வடிவம் பெறுகின்றன! மனித உடலைவிட ஓர் அற்புதம் இந்த உலகில் உண்டா, சொல்லுங்கள்!

ஏன் இந்த நெகிழ்ச்சி?

நமது ரத்தத்துக்கு சிவப்பு நிறம் கொடுப்பது சிவப்பணுக்கள் என்று நமக்குத் தெரியும். அவற்றின் இன்னொரு பெயர் எரித்ரோசைட். எரித்ரோசைட்டுகள், இரண்டு பக்கமும் குழிந்த தட்டுகளைப்போல இருக்கும். அவற்றின் சிறப்பு அம்சம், அவற்றின் நெகிழும் தன்மைதான். அது எதற்காக? எந்த விஷயமும் அர்த்தமில்லாமல் கொடுக்கப்படவில்லை. மிகச்சிறிய ரத்தக்குழாய்களைவிட இரண்டு மடங்கு அளவு அதிகமான குறுக்களவு கொண்டவை அவை என்றாலும், எத்தனை சிறிய, குட்டிக்குழாய்களானாலும் அவற்றுக்குள்ளும் அவை எளிதாகப் பயணிக்கும். காரணம், அவற்றின் அந்த நெகிழும் தன்மைதான்.

இந்த நெகிழும் தன்மை இல்லாவிட்டால், அல்லது கெட்டுவிட்டால் என்னாகும்? உதாரணமாக, சர்க்கரை வியாதி வந்தவர்களின் கண்களில் உள்ள சிவப்பணுக்களின் நெகிழும் தன்மை குறைந்துவிடும். அல்லது சுத்தமாகப் போயிவிடும். அதன்விளைவாக, கண்களில் உள்ள மிகச்சிறிய நாளங்கள் குறுகி, இறுகி, தடையாகி, வேண்டிய அளவு ரத்தம் பாய முடியாமல் போய், இறுதியில் பார்வை பாதிக்கப்படும்.

அப்படியானால், ஒரு உயிரணுவுக்குள் உள்ள சமாசாரங்கள் என்ன வடிவத்தில், என்ன அளவில், என்ன நிறத்தில், என்ன தன்மையில் உள்ளன என்பதெல்லாமே ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டவையாக உள்ளன. பிரபஞ்சப் பேரறிவின் ஒரு துண்டுதான் நம் உடல். நமது உடலை ஒரு குட்டிப் பிரபஞ்சம் என்றும் சொல்லலாம்.

‘யாமிருக்க பயமேன்’ என்ற வாக்கியம் முருகப்பெருமானோடு தொடர்புபடுத்திச் சொல்லப்படுவது நமக்குத் தெரியும். அந்த முருகப்பெருமான் வேறெங்கும் இல்லை. நம் உடல்தான் அவர். அவர் சொல்கிறார் - யாமிருக்க பயமேன். கேட்க நாம் தயாரா?

இடுக்கி கொண்ட ஹீமோக்ளோபின்

நம் உடலில் உள்ள எல்லா செல்களுக்கும் ஆக்ஸிஜன் தேவை. அந்த ஆக்ஸிஜன் மாலிக்யூல்களை உடலில் உள்ள எல்லா செல்களுக்கும் கொண்டுசெல்வது சிவப்பணுக்கள் என்று அறியப்படும் எரித்ரோசைட்டுகள்தான். ஆக்ஸிஜன் மாலிக்யூல்கள் ரத்தத்தில் ஜாலியாக மிதந்துகொண்டே வரும். அவற்றை அப்போது ‘கபக்’ என்று பிடித்து எல்லா செல்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். ஆனால், சிவப்பணுக்கள் தாங்களே அந்த வேலையைச் செய்வதில்லை. அதற்காக அவர்களுக்கு உதவுவதுதான் ஹீமோக்ளோபின்.

ஆக்ஸிஜன் மாலிக்யூல்களை பிடித்துக்கொண்டு செல்வதில் ஹீமோக்ளோபின்களுக்கு ஒரு பிரச்னை உள்ளது. விருப்பமில்லாத பெண்ணைத் தொட்டால் எரிந்து சாம்பலாவாய் என்று ராவணணுக்கு ஒரு சாபம் இருந்ததைப்போல, ஹீமோக்ளோபின்களுக்கும் ஒன்று உள்ளது! ஆக்ஸிஜன் மாலிக்யூல்களைத் தொட்டால் போதும், அவ்வளவுதான்! ஏன், என்னாகும்? இருவரும் ‘இணைந்து’ ஆக்ஸிஜன் ஆக்ஸைடு ஆகிவிடும்! அப்படி ஆகிவிட்டால் மற்ற செல்களுக்கு ஆக்ஸிஜன் செல்ல முடியாது! அடக்கடவுளே! அப்ப என்ன செய்வது?

ஆக்ஸிஜன் மாலிக்யூல்களைத் தொடமாலே அவற்றைக் கொண்டுசெல்ல வேண்டும்! அதற்காக பிரத்தியேகமாக ஹீமோக்ளோபின்களுக்கு குறடுகள்போல இடுக்கிகள் உண்டு! அந்த இடுக்கிகளால் ஆக்ஸிஜன் மாலிக்யூல்களைப் பிடித்துக்கொண்டால், அவற்றைக் கையால் தொடாமல் விலங்குபோட்டு இழுத்துச்செல்வது மாதிரியாகிவிடும்! அதன் உடலின் அமைப்பிலேயே அப்படி இழுத்துக்கொண்டு போவதற்காக ’ஹீம் க்ரூப்’ (heme group) என்ற சமாசாரம் இருக்கும். அவற்றின் உதவி கொண்டுதான் ஆக்ஸிஜனை தேவையான செல்லுக்கு ஹீமோக்ளோபின் எடுத்துச் செல்லும்!

சீலியா

இது என்ன என்கிறீர்களா? இதுவும் நாம்தான்! நமக்குள்தான்! நமது மூச்சு மண்டலத்தில் உள்ள ஒரு சமாசாரம் இது. நாம் காற்றை சுவாசிப்பதாக நினைத்துக்கொண்டுள்ளோம். அது உண்மைதான். ஆனால், நாம் அது மட்டும் செய்வதில்லை. காற்றோடு சேர்த்து கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய தூசிகளையும் சேர்த்தே சுவாசிக்கிறோம். அந்த தூசிகளெல்லாம் நுரையீரலுக்குள் சென்றால் என்னாகும்?

அதைத்தடுக்க, ஆண்டவன் பல பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வைத்திருக்கிறான். தூசிகளெல்லாம் அந்தப் பாதுகாப்பு வளையத்தினுள் கொண்டு செல்லப்பட்டு, தீங்கு விளைவிக்கமுடியாதவையாக மாற்றப்பட்ட பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக நம் உடம்பிலிருந்து வெளியேற்றப்படுகின்றன! எப்படி?

மூக்கிலிருந்து ப்ராங்கியோல் எனப்படும் மூச்சு நுண்குழாய் வரை சளி மாதிரி ஒன்று இருக்கும். தூசிகள் இஷ்டத்து நீந்திச் சென்றுவிடாமல், அவற்றை ஆங்காங்கு ‘அரெஸ்ட்’ செய்து இந்தச் சளி வைக்கும். இது முதல் கட்டம். ஆனால், அவற்றை எப்படி வெளியேற்றுவது? அதற்குத்தான் ‘சீலியா’ (cilia) உதவுகிறது.

சீலியா என்பது ஊசிகளால் ஆன முடி அல்லது முடியால் ஆன ஊசி மாதிரி என்று வைத்துக்கொள்ளலாம். நம் மூச்சு மண்டலப்பாதை முழுவதும் சீலியாக்களால் நிரம்பியிருக்கும். இந்த சீலியாக்கள் இரண்டுவிதமாக அசையும். கீழிருந்து மேலாக. மேலிருந்து கீழாக. மேல்நோக்கியும் கீழ் நோக்கியும் விசிறுவதுபோல. நுரையீரல் பகுதியிலிருந்து தொண்டைப்பகுதி வரை தூசிகளை விரட்டும்போது, சீலியா மேல் நோக்கி விசிறும். மூக்குக்குள் வந்தபிறகு கீழ்நோக்கி விசிறும்! அடடா, எவ்வளவு அறிவார்ந்த ஏற்பாடு! இடத்துக்குத் தக்கபடி விசிறி, தூசிகளையெல்லாம் மூக்கு வழியாக வெளியேற்றிவிடுகிறது. அல்லது சளியோடு சேர்த்து நாம் விழுங்கிவிடுவோம். பின் அவை பின்பக்கமாக வெளியேறிவிடும்!

நம் உடம்பின் செல்களின் செயல்பாடுகளையும் ஞானத்தையும் பார்க்கும்போது, மனித அறிவை ஸ்தம்பிக்கவைக்கும் வியப்புதான் ஆண்டவனோ என்று தோன்றுகிறது! நாம் சாதாரணமாக அணு, உயிரணு என்றெல்லாம் சொல்லிவிடுகிறோம். ஆனால் அவை ஒவ்வொன்றுக்கும் உள்ளேயும் கண்களுக்குப் புலப்படாத, மனித அறிவால் அறிந்துகொள்ள முடியாத அற்புதமான, சிக்கலான, கற்பனைக்கு எட்டாத அமைப்புகள், உப அமைப்புகள் உள்ளன. என்ன செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று அவற்றுக்குத் தெரிந்திருக்கிறது. அவற்றின் பணிக்கு இடையூறு செய்யாமல் நாம் இருந்தாலே போதும். ஆரோக்கியமாக வாழலாம். புரிகிறதா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com