குவியத்தின் எதிரிகள்: 2. பின்னூட்டமற்ற போக்கு

மூளையின் நான்கு பகுதிகளில் இரு பகுதிகள் பெருமூளை மற்றும் லிம்பிக் அமைப்பு. லிம்பிக் அமைப்பின் ஓருறுப்பு அமைக்டிலா என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பரிணாமத்தில் வளர்ந்த ஒன்று. 

ரமேஷ் சிவசாமி, பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் நடுநிலை மேலாளர். 35 வயதில், ஹெப்பாலில் 2BHK வீடு, இரு மகள்கள்; மென்பொருள் கம்பெனியொன்றில் வேலை செய்யும் 28 வயதான மனைவி என்று, சாஃப்ட்வேரில் சுவாசிக்கும் சாதாரண பெங்களூர்வாசி. ஒரு புல்லட் வைத்திருந்தவர், எல்லாரும் ஒரே நேரத்தில் செல்ல முடிவதில்லை என்று ஒரு சுசூகி டிஸைர் கார் சமீபத்தில்தான் வாங்கினார்.

ரமேஷ் சிவசாமி, முந்தாநாள் அதிகாலை மூன்றரை மணியளவில் இறந்துபோனார்

‘திடீர்னு நெஞ்சு அடைக்கிறதுன்னு சொன்னாரு. தண்ணி கொண்டுவர்றதுக்குள்ள…’ என்று கேவும் அவர் மனைவியிடம் சிறிது சிறிதாகக் கேட்டு, ரமேஷ் வேலை பார்த்த கம்பெனியின் மனிதவளத் துறை அறிந்த ஒரு செய்தி, ‘ரமேஷுக்கு ஒரு மாதமாக தோள்பட்டை வலி, ரத்தச் சர்க்கரை அளவு 240’.

‘நல்லாத்தான் இருக்கேன்’ என்றார் ரமேஷ், ஒரு வாரம் முன்பு, தனது புல்லட் 350-யை கிளப்பிக்கொண்டே. ‘பாருங்க, புல்லட் எடுக்க முடியுது, காலைல வாக்கிங் போறேன்’

பின், எப்படி?

‘அவன் அறிகுறிகளைச் சரியாகக் கவனிக்கவில்லை’ என்றார் மருத்துவ நண்பர் ஒருவர். ‘ரமேஷ் இதைச் சொன்னப்போ, ‘எதுக்கும் ஒரு இ.ஸி.ஜி. எடுத்துரு’ன்னேன். நல்லாத்தான் இருக்கறேன். காசு புடுங்கறதே ஃங்களுக்கு வேலை’ன்னு திட்டிட்டுப் போனான்’ என்றார்.

‘நல்லாத்தான் இருக்கிறேன்’ என்பது மனத்தளவில் நல்ல சிந்தனை. ஆனால் உடல், புறவயக் காரணிகள் தரும் பின்னூட்டங்களை, எவ்வளவு சிறியதாக இருப்பினும், அதன் மீது ஒரு கவனம் வைக்க வேண்டும். நம் குவியம், சற்றே அவற்றின் தாக்கம் மீது திரும்ப வேண்டும். இல்லையா?’

‘கரெக்ட். ஆனால் அதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. ரமேஷ் கொஞ்சம் பயந்த சுபாவம். அது ஒரு காரணமாக இருக்கலாம்’.

‘ஸாரி’ என்றேன். ‘ரமேஷ் அதிகம் கவலைப்படுகிற டைப். சவால்கள் வராமல் இருப்பதற்காக, முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்பான். பிரச்னைகள் இருந்தால், அவற்றைத் தவிர்க்கப் பார்ப்பான். அதற்கும் கவனத்துக்கும் என்ன தொடர்பு?’

‘அதைப்பற்றி அப்புறம் பார்ப்போம். இப்ப கொஞ்சம் விலகி, மூளையின் சில உறுப்புகளையும், அவற்றின் இயக்கத்தையும் பற்றி கொஞ்சம் புரிஞ்சுக்குங்க’ என்றார் டாக்டர்.

கொஞ்சம் பொறுமையாக கவனமாக, அடுத்த ஒரு பத்தியை வாசித்து நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இனி வரும் பத்திகளை அறிய இது பயன்படும்.

மூளையின் நான்கு பகுதிகளில் இரு பகுதிகள் பெருமூளை மற்றும் லிம்பிக் அமைப்பு. லிம்பிக் அமைப்பின் ஓருறுப்பு அமைக்டிலா என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பரிணாமத்தில் வளர்ந்த ஒன்று. இது உணர்ச்சிவயமான ஆளுமையின் இடம். தன்இயக்கம், புறவயத் தூண்டுதலுக்கான உடலின் எதிர்வினை என்பனவற்றை அமைக்டிலா கவனித்துக்கொள்கிறது. திடீரென பலத்த ஒலி கேட்டால் நாம் பதறுகிறோம். உடலின் இந்த எதிர்வினையை அமைக்டிலா தூண்டுகிறது. பலத்த ஒலி, திடீர் நிகழ்வுகள், இதயத் துடிப்பை அதிகமாக்கி, ரத்தத்தை அதிக அழுத்தத்தில் உடலெங்கும் செலுத்தி, பரபரப்பூட்டும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்களை சுரக்கவைத்து… கிட்டத்தட்ட, கற்கால மனிதன், சிங்கத்தைப் பார்த்தால் ஓட முயற்சிக்கும் இயக்கத்துக்கு நம்மைத் தயாராக்குகிறது. இதன் வேலை இன்றும் தொடர்கிறது. என்ன, இப்போது சிங்கம் வரத் தேவையில்லை, ஹலோ என்றாலே அரைமணி நேரம் அறுக்கும் எதிர்வீட்டு ரிடையர்டு சதாசிவம் வந்தால் போதும்.

கடந்த சில ஆயிரம் ஆண்டுகளாக பாலூட்டிகளுக்கு அதிகமாக வளர்ந்த ஒரு பகுதி, பெருமூளை. இதனாலேயே இதற்கு நியோ (புதிய) கார்டெக்ஸ் என்றொரு பெயரும் உண்டு. இதன் முன்புறப் பகுதியை pre frontal cortex என்கிறார்கள். இது, அக, புறவயமான தூண்டுதல்களை, தகுந்த செய்திகளுடன், தர்க்கத்துடன், மட்டுப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளுடன் ஆராய்ந்து, நம்மைச் செயல்பட வைக்கிறது.

எனவே, நமது அறிதலுக்கும், எதிர்வினைகள் உருவாகுதலுக்கும் இரு சாத்தியங்கள் இருக்கின்றன. அமைக்டிலாவின் அட்டகாசம் மற்றும் பெருமூளையின் பாதுகாப்பு.

நமது எதிர்வினை எப்படி, எதன் மூலமாக இருக்க வேண்டும்?

இதற்கு ‘பின்னூட்டம் குறித்தான அறிதல் வேண்டும்’ என்கிறார் டேனியல் கோல்மேன். எனவே பின்னூட்டம் பற்றி முதலில் பார்ப்போம்.

அத்தியாயம் இரண்டில், ‘எங்கே ஓடுகிறேன்? என்ற கேள்வி முதலிலும், எப்படி ஓடுகிறேன் என்பது இரண்டாவதாகவும் இருக்க வேண்டும்’ எனப் பார்த்தோம். இப்போது இரண்டாவது கேள்வியைக் கவனிப்போம்.

இதனை, ‘எப்படி ஓடிக்கொண்டிருக்கிறேன்?’ என்ற தொடர்நிகழ்கால கேள்வியாக அடிக்கடி நம்மையும், நாம் நம்புகிறவர்களையும் கேட்டுக்கொள்ள வேண்டும் எனப் பொருள் கொள்ளலாம். இயங்குவதைவிட, பின்னூட்டம் பெற்று, இயக்கத்தைத் திருத்துவது அவசியம். ‘நல்லாத்தான் போயிட்டிருக்கு’ என்ற நினைப்பு, இருவிதமான தவறுகளை நாம் அறியாமலே செய்விக்கிறது.

ஒன்று, பாதையிலிருந்து சிறிது சிறிதாக நாம் விலகிச்செல்வதை நாம் அறியாமல் போவது. Drifting என்று இதனைச் சுருக்கமாக அழைப்போம்.

எந்த இயந்திரமும், உயிரியும் சீராக ஒரே தளத்தில் எப்போதும் ஒரே மாதிரி இயங்குவதில்லை. அக மற்றும் புறவயக் காரணிகளால், இயக்கம் தடுமாறுகிறது. மாட்டுவண்டிகளில் கட்டப்பட்டிருக்கும் மாடுகள், எங்கு செல்ல வேண்டுமென அறிந்திருந்து, மிகப் பழக்கமான பாதையில் செல்வதாக இருப்பினும், வண்டிக்காரர் அடிக்கடி அவற்றை நேராகச் செலுத்துவதைப் பார்த்திருப்போம். நேராக ஒரே ரோட்டில் செல்ல வேண்டுமென்றாலும், ஓட்டுநர்கள் ஸ்டீரிங் வீலை விட்டுவிடுவதில்லை. பின்னாலும், முன்னாலும் வருபவற்றை, முன்னே பாதையில் இருக்கும் இடர்களை, வளைவுகளைக் கவனித்து ஓட்டவேண்டி இருக்கிறது. இந்தக் கவனம் என்பது ஒரு பின்னூட்டம்.

அதன் விளைவாக நாம் எடுக்கும் எதிர்வினைச் செயல்களை இரு வகையாகப் பிரிக்கலாம். 1. திருத்தமான ஆக்கங்கள், 2. தடுக்கும் விதமான ஆக்கங்கள். (Corrective Action, Preventative action). ஒன்று, ஒரு நிகழ்வின் பின்னான எதிர்வினை; மற்றது, நிகழ்வு வருமுன்னே எடுக்கப்படும் செயல்கள்.

பின்னூட்டங்கள், இவை இரண்டிலும் எது வேண்டுமோ, அதனை சரிவர எடுக்க உதவுகின்றன. நமது கிரகிப்புத் திறன், பின்னூட்டங்களை எடுக்கும் விதத்தைப் பொறுத்தே நமது எதிர்வினைகள் அமைகின்றன. இந்த எதிர்வினைகள்தான் ‘வினையாக’ வந்து முடிகின்றன.

‘நீ பெயிலாப் போவே’ என்று அப்பாவோ, ஆசிரியரோ சொல்கிறார் என்றால், கேட்கும்போது அது ஒரு திட்டு. கொஞ்சம் நமது வகையில் நேராக யோசித்தால், எதிர்மறை உணர்வு சார்ந்த பின்னூட்டம். நாம் இதனை ‘வந்துட்டார்யா, அட்வைஸ் பண்ணறது மட்டுமே வேலை’ என்று சலிப்புடன் எடுக்கலாம், அல்லது ‘என்னைப் பிடிக்கல இவருக்கு, அதான் திட்றாரு’ என்று கோவப்படலாம். இவை இரண்டும், மூளையின் அமைக்டிலா என்ற உறுப்பின் இயக்கம். உணர்ச்சிக் கொந்தளிப்பு நம் சிந்தனையைத் தாக்கினால், அது அமைக்டிலாவின் வேலை!

இந்த இரண்டு சிந்தனையிலும் விலகி, அதே உணர்வுத்தாக்கத்தில் மற்றொன்று செய்யலாம். அது விளக்கம் கேட்கும் கேள்வி. ‘எதைவைத்து இப்படிச் சொல்றீங்க?’ என்ற கேள்வி, நம்மைத் திட்டுபவரிடம் கேட்க வாய்ப்பு இருக்குமானால், அப்படி ஒரு உரையாடல் சாத்தியமானால், தயங்காமல் கேளுங்கள். இது இரு வகையில் பயன்படும்.

ஒன்று, நம் மனத்தில் இருப்பது, ஒரு பகுத்தாய்வுச் சிந்தனையின் வெளிப்பாடான கேள்வியாக வருகிறது. இதன் பதில் ஒரு பின்னூட்டமாக அமையும் வாய்ப்பு இருக்கிறது.

பின்னூட்டத்தின் எதிர்வினை, உணர்வுபூர்வமாக அமைக்டிலாவின் தாக்கமாக அமையும் வாய்ப்பு இப்போது கணிசமாகக் குறைகிறது. கிட்டத்தட்ட 60 சதவீத அமைக்டிலாவின் தாக்கம் குறைவதாகச் சில ஆய்வுகள் சொல்கின்றன. இதன்பின்னும் உணர்வுபூர்வமாக நம் எதிர்வினை அமையும் வாய்ப்பு இருக்கிறதென்றால், செய்ய வேண்டியது... ஆம், நீங்கள் நினைப்பது சரி, ‘ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்?’ என்ற கேள்வியை மீண்டும் தொடுப்பது. இதன் பதில் ஒரு பின்னூட்டம். மீண்டும் கேள்வி, பின்னூட்டம். ஒரு சுழற்சியில், இது போகப்போக, இறுதியில், அவர் அப்படிச் சொன்னதன் காரணம் வேறாக இருப்பதைக் காண முடியும். அல்லது, காரணமே இன்றி அவர் கத்தியதை அவரே உணரவும் வாய்ப்பு இருக்கிறது.

எல்லா உரையாடல்களும் இப்படி எம்.ஜி.ஆர். பட முடிவுபோல ‘சுபம்’ என முடிந்துவிடாது. வாக்குவாதமும், விவாதமுமாகத் தொடர வாய்ப்பு இருக்கிறது. இது எதிராளியின் அமைக்டிலாவின் ஆதிக்கத்தையும் பொறுத்தது. எனவே, பின்னூட்டத்தின் பின் நிற்கும் நிலையைச் சற்றே நிதானமாக நோக்குங்கள். எதிரே இருப்பவர் காட்டுத்தனமாக, சற்றும் தர்க்கமில்லாமல் கத்திக்கொண்டே போனால், விவாதத்தைத் தொடர வேண்டாம். ஏனெனில், தேவையற்ற விவாதத்தில் வெற்றிபெற்றவர் என எவருமில்லை.

மற்றொன்று, நமது கேள்வி, நிதானமாகப் பகுத்தாய்ந்து, தர்க்கத்தின் வழியாக வரும் பரிமாற்றமாக வெளிப்படுகிறது. இப்படிக் கேட்பதற்கு மூளையின் Pre frontal cortex வேலை செய்கிறது. இது, தர்க்கத்தின் இயங்குதளம். இதன்மூலம் வரும் பரிமாற்றங்கள், நம்மை உணர்ச்சியில் பொங்காமல் அமைதியாக நடந்துகொள்ளவைக்கும். எனவே, நாம் பிறரது சொற்களால், நடத்தையால் தூண்டப்பட்டாலும், நிதானம் இழக்காமல் செயல்படும் வாய்ப்பு அதிகம். ஒன்றும் பெரிதாகச் செய்துவிட முடியாவிட்டாலும், குறைந்தபட்சம், அநாவசியமான சொற்களைப் பேசவோ, நடந்துகொள்ளவோ மாட்டோம். அந்த அளவுக்குப் பாதிப்பு தவிர்க்கப்படும்.

பின்னூட்டங்களின் ஆற்றலைப் புரிந்துகொள்ள, நம்மைப் பற்றிய சுயஉணர்வு நிலை அவசியம். ‘நான் ஒரு பின்னூட்டத்தை எதிர்பார்க்கிறேன்’ என்ற நினைப்பே, நமது அமைக்டிலாவை சற்றே அழுந்தச் செய்துவிடும். நிதானத்துடன் நமது நிலைப்பாடு இருக்கும்போது, எதிர்வினைகள் தர்க்கரீதியில், கட்டுப்பாடான உணர்வுடன் வெளீப்படுகிறது. நேராக யோசிப்பதன் ஒரு முக்கிய நிலை இது.

இது மற்றொரு கேள்வியைக் கொண்டுவருகிறது. நமது மூளையின் கார்டெக்ஸின் முன் பகுதி எப்போதுமே, தர்க்க நெறியில், பின்னூட்டத்தை உள்வாங்கிச் சரியாகச் செயல்பட, சிந்திக்கவைக்கிறதா? அமைக்டிலாவை விடுத்து, கார்டெக்ஸின் முன்பகுதி வழியாக எதிர்வினையைக் கொண்டுவரும் ஆளுமையை வளர்ப்பது சாத்தியமா? அப்படி வளர்க்க என்ன உத்தி இருக்கிறது?

இன்னும் சில எதிரிகளை அடையாளம் கண்டபின், இதுபற்றி நேராக யோசிப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com