குவியத்தின் எதிரிகள் - 17. கண்முன் இல்லையெனில்…

நாம் ஒரு செயலைச் செய்யாமல் காலம் தாழ்த்துவதன் மிகப்பெரிய காரணம், அதன் கடினத்தன்மை குறித்தான நம் மனச்சோர்வு, தயக்கம் அல்லது பயம். இதனைத் துணிந்து தாண்டினால், பெருமளவில் வேலைகள் கைகூடும்.

165, 67, 456, 635, 365, 296, 61, 86,969 - இந்த எண்களில் ஒரு ஒற்றுமை என்ன? அடுத்த பத்தியை உடனே படிக்காதீர்கள். ஒரு ஐந்து நிமிடம் மெனக்கெடுங்கள்.

முதலில், கொஞ்ச நேரம் அடுத்தடுத்த எண்களைக் கூட்டி, கழித்து, வகுத்து ஒரு பொதுப்படையைத் தேடியிருப்பீர்கள். அது இல்லாதபோது, ஒற்றைப்படையா, இரட்டைப்படையா என எண்களின் தன்மையைப் பார்த்திருப்பீர்கள். அதுவுமில்லாதபோது, எண்களை அப்படியே பார்த்து, இறுதியில் ‘ஆங்! எல்லா எண்களிலும் 6 என்ற எண் வருகிறது’ என்பீர்கள். சரியா?

இப்போது இந்த எண்களில் அதுபோல் முயலுங்கள்.

71, 63, 81, 55, 36, 567, 875, 910, 752

அனைத்தும் ப்ரதம எண்கள்? இல்லை. 81, 36 என்பது 9 மற்றும் 6-ஆல் வகுபடும். ஒற்றைப்படை? இல்லை…

ஒரேயொரு பொதுப்படை. எதிலும் 4 என்ற எண் வரவில்லை.

இது ஏன் கவனத்தில் வரவில்லை? என்னவெல்லாமோ யோசித்தோமே?

எது இருக்கிறதோ, அதைத்தான் நாம் அதிகம் கவனத்தில் கொள்கிறோம். அதில் உள்ள தருக்கத்தை அலசுகிறோம். கூட்டல், பெருக்கல், கழித்தல், வகுத்தல் எல்லாவற்றையும் போட்டு கலக்குவோம். இல்லாத ஒன்று கவனத்தில் வருவது கடினம். புலன்களுக்குப் புலப்படும் ஒன்று – சாதகமாகவோ, பாதகமாகவோ இருப்பினும் நம் கவனத்தில் வந்துவிடும். நமது இயக்கம் அதனைச் சார்ந்திருக்கும்.

ஆங்கிலத்தில் சொல்வார்கள் ‘கண் முன் இல்லாதது; கவனத்தில் வராது’ (Out of sight; out of mind). இதன் நீட்சி, கவனத்தில், ஏன் குவியத்திலும் உண்டு. ஒரு தகவல், கவனத்தில் வருமுன். அது சில வடிகட்டிகளைத் தாண்டி வரவேண்டி இருக்கிறது.

ஒரு பில் கட்ட வேண்டிய கால அவகாசம் முடிந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். இனி ஒரு வாரத்துக்குள் 5 சதவீத அபராதத்துடன் கட்ட வேண்டும். அது கடந்தால் 10 சதவீத அபராதம் எனக் கொள்வோம். எத்தனை பேர் 5 சதவீத அபராதத்துடன் கட்டுவார்கள் என நினைக்கிறீர்கள்?

35 சதவீதம் மட்டுமே முதல் அபராதத்துடன் கட்டுகிறார்கள் என்கிறது ஆய்வுகள். கடனட்டை (கிரெடிட் கார்டு) பணம் கட்டுவதில் மிக அதிகமாகத் தவறுவது முதல் அபராதத்தில்தான். அதன்பின் அவர்கள் அழைத்து, மிரட்டிய பிறகு கட்டும்போது, கிட்டத்தட்ட 7 சதவீதம் இரு மாதத்தில் அபராதமாகக் கட்டுகிறார்கள்.

இதன் காரணம், மனம் அந்த மறதியால் வந்த இழப்பு, அபராதம் என்ற வலியை மறக்க நினைக்கிறது. எனவே, கடனட்டைக்காரர்களின் எச்சரிக்கை கடிதம், குறுஞ்செய்தி போன்றவை பார்க்கப்பட்டாலும், நினைவில் நிற்காமல் போகிறது. ‘நான் பிசியா இருந்தேன்’ என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொள்கிறோம்.

நினைவில் வைப்பதில் இருக்கும் சிக்கல், அதன் உணர்வு தரும் வலி, மறந்துபோனோமே என்ற எரிச்சல், அமைக்டிலாவின் பதட்டம்… இதனை நினைவு வைக்க மூளை விரும்புவதில்லை. எனவே, நினைவிலிருந்து தாற்காலிகமாக அதனை உணர்வில் கொண்டு வருவதில்லை.

அந்த குறுஞ்செய்தி, கடிதங்கள் நம் புலன்களுக்குத் தட்டுப்படுமெனினும், நம்மால் அதனை உணர்வில் கொண்டுவரத் தோன்றாதது ஒரு புறம். கண்ணில், புலனில் படவில்லையெனில், அது நினைவில் வருவது மிகக் கடினம். எனவேதான், வங்கியிலிருந்து ஒரு கட்டணம் தானியங்கி நிலையில் சென்றுகொண்டிருந்தால், அது பல நிலைகளில் நல்லது. ஆனால், அதில் ஒரு தவறு ஏற்படுமானால், இழப்பு நமக்கு மிகப்பெரிய அளவில் இருக்கக்கூடும். பல கடனட்டை நிறுவனங்கள், இதனை மிகப் புத்திசாலித்தனமாகக் கையாளுகின்றன. நாம் விழிப்புடன் செலவு விவரத்தைச் சரிபார்த்துச் சொல்லவில்லையானால், பணம் போய்க்கொண்டே இருக்கும்.

சில ஆசிரியர்கள் குறித்த நேரத்தில், விடைத்தாள்களைத் திருத்தித் தருவதில்லை என்ற புகார் எழுந்தபோது, பல ஆசிரியர்கள், விடைத்தாள் கட்டுகளை கண்முன்னே வைத்திருந்தும் கவனத்தில்கொள்ளாது, தங்களது பிற வேலைகளைப் பார்ப்பதாக, ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் சொன்னார். சொன்ன தேதியில் விடைத்தாள்களைத் திருத்தித் தர வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பினும், அதன் முக்கியத்துவத்தை அறிந்திருப்பினும், கவனத்தில் அது பிசகுவதை கல்வியியலாளர்கள் அறிந்திருக்கிறார்கள். கண்முன்னே இருந்தும் ஏன் கவனத்தில் வரவில்லை. கண் அதனைக் காண்கிறது என்றாலும், அந்த புலன் வழிச் செய்தி, நினைவு மண்டலத்தை எட்டுவதில்லை. இது, கண்டும் காணாதிருத்தல் (seeing and not observing). விலக்குவது (avoidance) என்பதிலிருந்து இது வேறுபட்டது.

ப்ரையன் ட்ரேஸி, ‘Eat That Frog’ என்றொரு புத்தகத்தை எழுதினார். ‘காலையில் முதல் வேலையாக ஒரு தவளையை விழுங்கினால், அன்றைய தினத்தின் மிக மோசமான நிகழ்வை நாம் சந்தித்துவிட்டோம்; இனி எதுவும் சுலபமாக இருக்கும்’ என்ற பொருளில் வரும் சொற்றொடர் அது. சொல்ல வருவது, ‘மிகக்கடினமான வேலை எது என நினைக்கிறாயோ, அதனை முதலில் கையிலெடு; எளிதானவை எளிதில் முடிந்துவிடும்’ என்பதுதான். ‘நாம் ஒரு செயலைச் செய்யாமல் காலம் தாழ்த்துவதன் மிகப்பெரிய காரணம், அதன் கடினத்தன்மை குறித்தான நம் மனச்சோர்வு, தயக்கம் அல்லது பயம். இதனைத் துணிந்து தாண்டினால், பெருமளவில் வேலைகள் கைகூடும்’ என்கிறார்.

கால ஆளுமை குறித்த ஆய்வாளர்களில் சிலர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. சிறிய வேலைகளைச் செய்து முடித்து, ‘முடித்துவிட்டேன்’ என்று அதனை எழுதி அடித்துவிடுவது, மூளைக்கு ‘செஞ்சுட்டேன் பார்’ என்பதான உற்சாகத்தை மூட்டுகிறது. தேவையான ஹார்மோன்கள் சுரந்து நம்மை ஊக்குவிக்கின்றது. எனவே, சிறிய செயல்களைப் பட்டியலிடுங்கள். அதனை செய்துமுடித்து, கண் முன்னே இருக்குமாறு பட்டியலில் அடித்து வையுங்கள் என்கிறார்கள், சில ஆலோசகர்கள். ஸ்டீபன் கோவே போன்றோர், ‘செயலைவிட, செயலின் திட்டம், முன்கூட்டியே தானாக இயங்குதல் போன்றவை முக்கியம்’ என்கிறார்கள். இதன் அடிப்படை, செயல் வலி தருமானதாக இருப்பினும், ஆர்வமும், அதன் எதிர்பார்ப்பும் மூளையில் இருப்பதால், நினைவிலிருந்து நழுவாது நிற்கும் என்பதான கருதுகோள்.

இதில், எது சரி என்று குழப்பிக்கொள்ள வேண்டாம். மிக அதிகமாக வேலைப்பளு இருப்பதாக நாம் மலைத்தால், முதலில் ஒரு காகிதத்தில் செய்ய வேண்டியதை எழுதுங்கள். அதன்பின் முக்கியம் என்பதன் அடிப்படையில் அவற்றை வரிசைப்படுத்துங்கள். (வேண்டுமென்றால், மறுபடி மற்றொரு காகிதத்தில் எழுதுவது சிறந்த்து. எழுத எழுத, வேலையினைப் பற்றிய கவலை குறையும் என்றொரு உளவியல் கருத்து உண்டு)

அவற்றில் நச்சு பிச்சு வேலைகளாக இருப்பவை அதிகமாக இருந்தால், அவற்றை முடிக்க முனைப்படுங்கள். நாலு வேலைகளே இருக்கின்றன. அதில் ஒன்று கடினமானது என்றால் அதனை முதலில் எடுத்துக்கொள்ளுங்கள். இது, ஒருவகை அனுபவத்தின் அடிப்படையில் வந்த வகைப்படுத்தல் முறை. எது, எவ்வளவு கடினம், ஏன் என்பது உங்களுக்கு மட்டுமே தெரியுமென்பதால், வகைப்படுத்துவதில் உங்கள் பங்கு மட்டுமே இருக்கிறது என்பதை நினைவில்கொள்ளவும்.

பெருமளவில், ப்ரையன் ட்ரேஸி கூறிய ‘பெரிய கடினமான வேலையை முதலில் செய்வது’ என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த மனப்பயிற்சியின் முக்கியப் பாடம், எதை நாம் கவனத்திலிருந்து மறைக்கிறோமோ, மறக்கிறோமோ, அதனை எத்தனை வலி தருமானதாக இருப்பினும், கடினமாக இருப்பினும், கவனத்தில் கொண்டுவருவதுதான். வெறுப்பான செயல்தான். இழப்பு, அதனினும் வெறுப்பூட்டும். எது தேவை? யோசிக்க வேண்டும் - நேராக.

(யோசிப்போம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com