குவியத்தின் எதிரிகள் - 25. எதிரிகளிடம் இருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்!

பிழைகள் அனைத்தும் ஒருவகையில் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஒன்றைத் தொட்டால், மற்றது அசையும். நற்பழக்கப் பயிற்சி என்பது ஒட்டுமொத்த முன்னேற்றத்தை வளர்க்கும்.
குவியத்தின் எதிரிகள் - 25. எதிரிகளிடம் இருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்!

நமது சிந்தனையில் இடையூறுகளாக, உள்ளிருந்தே சத்தமெழுப்பாமல் சிதைக்கிற எதிரிகளை இதுவரை பார்த்தோம். இவை மட்டும்தானா? நிச்சயமாக இல்லை. பழக்கம் சார் உளவியல், பரிமாற்ற பகுப்பாய்வினர், கானேமான்-ட்ரவெர்ஸ்கி போன்ற பலரும், திரிகின்ற நமது சிந்தனைப் பாய்ச்சலை எப்படி கவனித்திருக்கின்றனர் என்பது, இன்றுவரை வந்துகொண்டிருக்கும் ஆய்வுப் புத்தகங்களும், தனிமனித மேம்பாட்டு ஆய்வுகளின் முடிவுகளும் காட்டுகின்றன.

இதெல்லாம் எதிரிகள், எச்சரிக்கையாக இருங்கள் என்கிறீர்கள். இதை அறிவதால் மட்டுமே என் சிந்தனை உருப்பட்டுவிடுமா என்று கேட்கலாம். உருப்படலாம், படாமல் போகலாம். அது உங்களது தீவிர ஈடுபாட்டையும், முயற்சியையும் பொறுத்தது. ரோல்ஃப் டோப்லி, அறிதலில் இருக்கும் நூற்றுக்கும் மேலான பிழைகளைப் பட்டியலிட்டு, ‘இவற்றை அறிந்த எனக்கு இன்னும் இவையெல்லாம் இருக்கிறது. ஆனால், சிலவற்றை என் முயற்சியால் குறைத்திருக்கிறேன்’ என்கிறார்.

அந்த வகையில், வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல் இப் பகுதியில் வெளியான ஒவ்வொரு கட்டுரையையும் மெருகேற்றியிருக்கேன். இவற்றில் ஏதேனும் ஒன்றை, ஒரு கால அவகாசத்தில் எடுத்துக்கொண்டு, உணர்வோடு, சிந்தனையில் அந்த பிழை வரும்போது கண்டு மாற்றுவது என்று நீங்கள் முடிவெடுத்து, அதில் வெற்றி கண்டால், நிச்சயம் உங்களது தனிமனித, பொதுச்சமூக வாழ்வு பெருமடங்கு மெருகேறும் என்று என்னால் நிச்சயமாகக் கூறமுடியும்.

பல பிழைகளைக் கவனமாகத் தவிர்த்திருக்கிறேன். முக்கியமாக, காலம் தாழ்த்துவது (procrastination), கால ஆளுமையின்மை, தன்னம்பிக்கையின்மை, எதிர்மறை உணர்வுகள், வினைச்செயல்வகையின்மை எனக் குறிப்பிட்டு சிலவற்றைச் சொல்லலாம். இவை ஒவ்வொன்றும் பல புத்தகங்கள், பயிற்சி முகாம்களாக நீளும் என்பதும், நாலு பக்க அத்தியாயத்தில் இவற்றிலொன்றைக்கூட சுட்டிக்காட்டிவிட முடியாது என்பதால் தவிர்த்திருக்கிறேன்.

பிழைகள் அனைத்தும் ஒருவகையில் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஒன்றைத் தொட்டால், மற்றது அசையும். (நேர்மறைக் குணம் வளர்த்தல் என்பது பொறாமையைக் கட்டுப்படுத்தும்). நற்பழக்கப் பயிற்சி என்பது ஒட்டுமொத்த முன்னேற்றத்தை வளர்க்கும். ஒன்றோடொன்று தொடர்பில்லாதவையும் உண்டு. எது நமக்குத் தேவை என்பதைத் தெளிவாக அறிந்துகொண்டு, அதனைச் சுட்டும் மற்றொரு பிழையினைத் தவிர்க்க முயற்சிக்கலாம். இதற்கு இப்பிழைகள் குறித்து நல்ல புரிதலும், நமக்கு என்ன தேவை என்பதைக்குறித்த அறிதலும் மிக அவசியம்.

இதனைக் கண்டுபிடிக்க, குடும்பத்தில் ஒரு உறுப்பினரையோ, நண்பரையோ அணுகலாம். அவர்கள் உங்களது முயற்சியில் உதவ முன்வருபவராக இருக்க வேண்டும். ஓரிரு எதிர்மறை விமரிசனங்கள் போதும், உங்களை நத்தையெனச் சுருளவைக்க. எனவே, உங்களது பார்ட்னரை கவனமாகத் தேர்ந்தெடுங்கள். எதுவரை, எதனைச் சொல்லாம் என்பது அவர்களுடனான உங்களது நம்பகத்தன்மையைப் பொறுத்துது.

புதிதாக் கற்றுக்கொள்ளும் எதுவும் ஒரு உற்சாகத்தைத் தரும். அதனைப் பற்றிய உரையாடல்களை அடிக்கடி செய்துபார்க்கத் தோன்றும். பிறரது மனநிலையையும் சற்றே நினைத்துப் பாருங்கள். உங்கள் தீவிர உற்சாகம் அவர்களுக்கு இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. உங்கள் உற்சாகத்தை உங்களிடம் மட்டுமே எதிர்பாருங்கள்.

ஒரு செயற்படி முறையை இங்கே சற்றே விளக்கமாகக் காண்போம். இதன் செயற்படிகள்போல அப்படியே இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், ஆவணப்படுத்துதல் என்பது அவசியம்.

ஒரு வாட்ஸப் குழுமம், பேஸ்புக் நட்புக் குழு என உடனே தொடங்காதீர்கள். இது தனிமனித செதுக்கல் சமாசாரம்.  ஒரு குறிப்பிட்ட பண்பை ஒரு நாள் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் உங்களைப் பற்றிய அனுமானத்தை, ஒரு சாய்வுமின்றி ஒரு காகிதத்தில் எழுதுங்கள். பின் இரு நாட்கள் கழித்து அதனை மீள்பார்வை செய்யுங்கள். எத்தனை முறை திருத்துகிறீர்கள் என்பது, எந்த அளவு உண்மைக்கு அருகில் வந்திருக்கிறீர்கள் என்பதைக் குறிக்கிறது என்கிறார்கள் சோதனை உளவியல் வல்லுநர்கள். எழுதுதல் - மீள்பார்வை – எழுதுதல் – மீள்பார்வை என்ற சுழற்றி, சில நாட்களில் உங்களைப் பற்றிய ஒரு இணக்கமான, உண்மை அருகில் சென்றிருக்கும் தகவலைத் தரும். அதுகொண்டு, உங்கள் அடுத்தகட்ட இயக்கத்தைத் தீர்மானிக்கலாம்.

உதாரணமாக, பொறாமை என்ற குணத்தை எடுத்துக்கொள்வோம்.

முதற்படி - பொறாமை என்றால் என்ன? எனக்கு இருக்கிறதா? (ஸ்லைட்டா.. என்றால், எதில்?). யார் மீது இருந்தது? ஏன்?

இதன் காரணம் என்ன? அவருக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால் எனக்குக் கிடைத்திருக்குமா? அப்படியானால் அது போட்டியா? பொறாமையா? (இந்தக் கேள்வி நமக்கு ஒரு பெரும் தெளிவை ஏற்படுத்தும்). பொறாமை என்பது, எனக்குக் கிடைக்காமல் போகும் ஒன்றுடன் தொடர்பே இல்லாமல் இருந்தாலும், அது கிடைத்த ஒருவர் மீது ஏற்படும் (அடுத்த தெருவில்  இருக்கும் தொழிலதிபர் இரு கார்கள் வைத்திருப்பது). போட்டி என்பது எனக்குக் கிடைக்கும் சாத்தியம் இருக்கும்போது பிறருக்குக் கிடைப்பது   (நானும் சென்றிருந்த இண்டர்வியூவில் நண்பனுக்கு வேலை கிடைப்பது).

அடுத்த படிநிலை - இந்த உணர்வு எனக்குத் தேவைதானா? நான் பாதிக்கபட்டவனா? போன்ற கேள்விகள். இதனைத் தாண்டி எனக்கு கிடைக்கும் அடுத்த வெற்றி எது? அதற்கு என்ன செய்ய வேண்டும்?  எனக்குப் பொறாமை இல்லை எனக் காட்டிக்கொள்ள, ஒரு சிரிப்புடன், வெற்றிபெற்றவரை வாழ்த்துவது அவசியமா? விலகி நிற்பது நற்பழக்கமில்லையா?

இதனைக் குறித்து நான் எப்படி யோசிக்க வேண்டும்? பட்டியலிட்ட பிழைகளில் இது எங்கு வருகிறது?

அடுத்த செயல்நிலைப் படி என்ன? வல்லுநர்கள் சொல்வது போலத்தான் செயல்பட வேண்டுமா? எனக்கு இயல்பான இயக்கமென்ன? அதன் விளைவுகள் என்ன?

ஆவணப்படுத்தப்படுபவை பரம ரகசியமாக இருக்க வேண்டும் என்பதில்லை. புரிந்துகொள்பவர்களிடம் பகிர்தல் நல்லது. அடுத்த முறை, இதேபோன்ற நிகழ்வில், நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை நமது ஆவணமும், பகிர்ந்துகொண்டவர்களும் வழிநடத்தக்கூடும்.

ஒரு நேரம் – ஒரு படி நிலை – ஒரு பிழைத் திருத்தம். இது போதும். ஒரு வெற்றி உவகையை உண்டாக்கும். உவகையிலிருந்து உற்சாகமும், தன்னம்பிக்கையும் ஊற்றெடுக்கும். சில நாட்களில், சிந்தனையைக் கணநேர ஆய்வுக்குக் கொண்டுசெல்வது பழக்கமாகும். பழக்கமென்பது, மேலும் பிழைகளைத் தன்னம்பிக்கையுடன் எடுத்துத் திருத்த வழிகொடுக்கும்.  வாழ்க்கை முழுதும் இப்பிழைகளும் அதன் திருத்தங்களும் தொடர்ந்துகொண்டே இருக்கும். எந்த அளவு இந்த முயற்சியை ரசிக்கிறோம் என்பது, எந்த அளவு நல்வாழ்வை நாம் விழைகிறோம் என்பதன் அலகு.

வாழ்த்துகள். நன்றி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com