குவியத்தின் எதிரிகள்: 9 சுய இரக்கம்

அனைவருக்குமே, குறைந்தது ஒரு கதை இருக்கிறது. பெரும்பாலும், அதில் சுயஇரக்கம் சார்ந்த, நம் கவலைகள், இடர்கள் சவால்கள் சார்ந்த பக்கங்கள் உண்டு. அவற்றைச் சொல்வதில் சில நுணுக்கங்கள் தேவைப்படுகின்றன.

“நல்லா நினைவிருக்கு. ஸ்கூல் படிக்கறப்போ, ஒரேயொரு தேய்ஞ்சுபோன செருப்பு மட்டும்தான் இருக்கும். அதுவும், அண்ணன் போட்டுப் போட்டு, குதிகால் பக்கம் ஓரமா ரொம்பத் தேஞ்சுபோன ரப்பர் செருப்பு. அப்பாகிட்ட, ஒரு புதுச் செருப்பு கேட்டேன்”. நண்பர் நிறுத்தினார். அவர் கண்கள் சற்றே இளகி இளகி ஈரமாக இருந்தன. பூனா போகும் வழியில் ஒரு ரெஸ்டாரன்ட்டில் காரை நிறுத்திவிட்டு, டீ குடிக்க அமர்ந்திருந்தோம்.

“கண்டபடி திட்டிட்டார். சே, ஒரு செருப்புக்கு இவ்வளவு திட்டு தேவையா?ன்னு அன்னிக்கு நினைச்சேன் சுதாகர். இன்னிக்கிவரை, எனக்குன்னு நான் ஒரு செருப்பு எடுக்கறதில்ல”.

அவர் கால்களைப் பார்த்தேன். ஷு பளபளத்தது.

“ஆபீஸுக்கு ஷூ போட்டுப் போறேன். அது என் பொண்டாட்டி வாங்கித் தந்தது. என் பணத்துல, எனக்குன்னு ஒரு செருப்பு வாங்கமாட்டேன்”.

மெல்ல எழுந்தபோது, அவருக்கு என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஐயோ பாவம் என்றா? அல்லது உங்க உறுதியை நினைச்சு பெருமையா இருக்கு என்றா? அல்லது இப்படித்தான் நானும் சின்ன வயசுல… என்று தொடங்கி, என் கதையைச் சொல்லி அழுவதா?

மனிதர் தொடர்ந்தார். “என்னவெல்லாம் கஷ்டப்பட்டிருப்பேன்னு இப்ப நினைச்சாலும் கண்ணீர் வந்துடும். தனியா சில நேரம் படுக்கையில படுத்திருக்கறச்சே, அப்படியே கண்ணீர் வழிஞ்சு தலையணையை நனைக்கும். என் பொண்டாட்டி, எதுக்கு இப்ப அழறீங்கன்னு கேப்பா. நான் ஒன்னும் இல்லேன்னுடுவேன். என் கஷ்டம் என்னோட போகட்டும்”

நிஜத்தில், அவர் கஷ்டம் பலரோடு போகிறது. என் நண்பர்கள் பலரும், “அந்த செருப்புக் கதையை சொல்லியிருப்பாரே?” என்று சொல்லிச் சிரித்திருக்கிறார்கள். அவர், தன் கதையைக் கேட்டு அனைவரும் ப்ச் ப்ச் என்று அனுதாபப்படுகிறார்கள் என்று நினைத்திருக்கிறார். ஆனால், நினைப்பு ஒன்று, நடைமுறை ஒன்று.

இது பலருக்கும் புரிவதில்லை. “நான் ஸ்கூல் படிக்கும்போது, ஒன்பது கிலோமீட்டர் நடந்தே போவேன். சைக்கிள் வாங்க காசு கிடையாது” என்பது, இக்காலத்து இளைஞர்களிடம் புரிதலையோ, empathy-யையோ ஏற்படுத்திவிடாது. ஏனெனில், ஒன்பது கிலோமீட்டர் நடப்பதன் வலியை அவர்கள் உணர்திருக்கும் சாத்தியம் குறைவு. ஏதோ அழுமூஞ்சி சினிமாவைப் பார்ப்பது போன்ற உணர்வுடன், நம்முன் கஷ்டப்பட்டு தங்கள் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

இளைஞர்களுக்கும் இந்த விபரீத பகிர்வுணர்வு உண்டு. தான் காதலிக்கும் பெண்ணிடம் நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கேன் தெரியுமா? என்பதாக, இதுபோன்ற கதைகளைச் சொல்லி, அவளை ஓடியே போகவைத்த பலரை எனக்குப் தனிப்பட்ட முறையில் தெரியும்!

ஏன் இதைச் சொல்கிறோம்? ‘நான் கடந்துவந்த பாதை கரடுமுரடானது’ என்று சொல்வது, ‘நான் வீரன். அவ்வளவு கஷ்டத்திலும் விடாமுயற்சியுடன் முன்னேறி வந்திருக்கிறேன்’ என்று சொல்வதைப் போன்றது என்ற தவறான நினைப்பு. ‘பாதை கடினம், நான் கஷ்டப்பட்டேன்’ என்பது யதார்த்தமான ஒன்று. அதில் ‘என் வெற்றிக்கு இப்படி வழி வகுத்தேன்’ என்பது, மறைதற்பெருமை. இது, சொல்பவரின் கவனத்திலிருந்து மறைந்து, கேட்பவரின் நினைவில் உதிக்கும்.

அதோடு, தன்னைப் பற்றிக் கேட்க, தானே சொல்லும் வாய்ப்பு இது என்கிறார்கள் உளவியலாளர்கள். என் கடந்த காலத்தை நான் மட்டுமே அறிவேன். அதை எவரும் பாராட்ட இல்லாததால், நானே சொல்லிக்கொள்கிறேன் என்பதை மறைபொருளாகக் கொண்டு வெளிவரும் பகிர்வுகள் இவை. எந்த அளவுக்கு இதனைத் தவிர்க்கிறோமோ, அந்த அளவுக்கு பிறர் நம்மை இயல்பாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

அனைவருக்குமே, குறைந்தது ஒரு கதை இருக்கிறது. பெரும்பாலும், அதில் சுயஇரக்கம் சார்ந்த, நம் கவலைகள், இடர்கள் சவால்கள் சார்ந்த பக்கங்கள் உண்டு. அவற்றைச் சொல்வதில் சில நுணுக்கங்கள் தேவைப்படுகின்றன. எப்படி, யாரிடம், எந்தச் சூழ்நிலையில், எந்த மனப்பக்குவத்தில் இருந்து சொல்கிறோம்? என்பதைப் பொறுத்து, நமது கதையின் தாக்கம் வளர்கிறது.

ஒரே வார்த்தையில், ஒரு செயலில் பலத்த தாக்கத்தை உருவாக்கிய பலர் உண்டு. நமக்குத் தாக்கம் உண்டாக்கிய கதைகளும் நிகழ்வுகளும் உண்டு. அப்படித் தாக்கம் உண்டாக்கும் அளவுக்கு நம் கதை முக்கியமானதா? என்ற ஒரு கேள்வி, வெகு நேராக யோசித்துக் கேட்டுக்கொண்ட பின், நம் கதையைச் சொல்லத் தொடங்குவது நல்லது. நம் கதைகளை மிக ரசிப்பவர் உண்டு. அவரிடம்கூட யோசித்தே சொல்ல வேண்டும். அந்த ரசிகர் - நாம்.

(தொடர்ந்து யோசிப்போம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com