குவியத்தின் எதிரிகள் - 23. எல்லையற்ற நற்பண்புகள்

நாம் மட்டும் நற்சிந்தனையில் இருந்தால் போதாது. நம்மைச் சூழ்ந்திருப்பவர்கள், நமது சூழல் அத்தகையதாக இல்லாவிட்டால், மெல்ல விலகிச் செல்வதே சிறந்தது.

திருநெல்வேலி – திருச்செந்தூர் வழிச்சாலையிலிருந்து விலகி 5 கி.மீ. தொலைவில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர் சாலமன். படிப்படியாக முன்னேறி, வங்கிக் கிளை மேலாளராகச் சிறுநகரமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இறை நம்பிக்கையும், ஒழுக்க உணர்வும் மரபில் பெற்ற குடும்பம் அவரது.

மகள் பொறியியல் கல்லூரியில் படித்து, சென்னையில் ஹாஸ்டல் ஒன்றில் தங்கி வேலை பார்ப்பதைப் பெருமையும் நிறைவுமாகச் சொல்லிக்கொண்டிருந்தவருக்கு, அதிகாலையொன்றில் தொலைபேசி அழைப்பு வந்தது. “ரோஸலின் உங்க பொண்ணா? *** காவல் நிலையத்துலேர்ந்து பேசறோம்”.

அலறியடித்துக்கொண்டு அவர் சென்றபோது, மகள் இன்னும் சிலரோடு கைது செய்யப்பட்டிருப்பதை அறிந்தார். மது மற்றும் போதைப்பொருள் விநியோகிக்கப்பட்ட பார்ட்டி ஒன்றில் ரெய்டு செய்தபோது அவள் கைது செய்யப்பட்டதாகவும், ரத்தச் சோதனையில் அவள் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதாகவும் அறிக்கை சொன்னது.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சர்ச் செல்லும் பெண், இரவு பைபிள் வாசிக்கும் பெண், ஆண்களை ஏறெடுத்தும் பார்க்காத பெண், திடீரென எப்படி மாறினாள்?

மேலும் விசாரிக்க விசாரிக்கப் பல உண்மைகள் வெளிவந்தன. இரவு வெகுநேரம் கழித்து அறைக்கு வருவதை அறைத்தோழி ஒருமுறை சாலமனின் மனைவிக்குச் சொன்னதை அவர் சீரியஸாக எடுக்காதது, உடன் வேலை செய்யும் பெண்களோடு சேர்ந்து சிகரெட் பழக்கம் தொற்றியது, அது போதைப் பொருள் புகைப்பதாக மாறியது, யாரிடமும் சொல்லாமல் தேக்கடி சென்று இரு நாட்கள் தங்கி வந்தது...

சாலமைன் மலைத்துப்போனார். தன் மகளா இது? எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் சிபாரிஸில், பெங்களூரில் உளவியல் ஆலோசகராக இருக்கும் என் நண்பரைச் சந்தித்தார்கள். ஒரு மழைக்கால மாலையில், பெயர், இடம் மாற்றி, அந்த ஆலோசக நண்பர் பகிர்ந்துகொண்டதைத்தான் இங்கே வாசிக்கிறீர்கள்.

‘‘ரோசலின் மெல்ல மெல்லப் பேசத் தொடங்கினாள். சம்பாதிக்க ஆரம்பிச்சதும், திடீர்னு கை நிறையப் பணம். என்ன செய்யறதுன்னு தெரியாம திகைச்சுட்டேன்’’.

கவுன்ஸிலர் தொடர்ந்தார் “பொருளீட்டுவதற்குத் திறமை தேவை என்றால், அதைச் சேமிப்பதற்கும், செலவழிப்பதற்கும் அதிகத் திறமை தேவைப்படும். சேமிக்காமல் செலவு செய்வது வீண் என்பதுபோல், தேவைக்கேற்ப செலவு செய்யாமல், பயன் துய்க்காமல் சேமித்து வைப்பதும் வீணே. துரதிருஷ்டவசமாக நம்மில் பலருக்கு இதன் சமநிலை தெரிவதில்லை. வீண் செலவு செய்பவர்களும், கருமிகளுமாக எல்லைகளில் நிற்பவர்களே உதாரணமாகத் தெரிகிறார்கள்.

ரோஸலின், வேலை பார்க்கத் தொடங்குமுன் பத்தாயிரம் ரூபாய் மொத்தமாகத் தன் பையில் பார்த்ததில்லை. இதில் எதை வாங்கலாம்? எங்கு சேமிக்கலாம்? எதனை வாங்கக் கூடாது என்பதை சாலமனோ அவர் மனைவியோ சொல்லிக்கொடுக்கவில்லை. பயின்ற பள்ளி, கல்லூரி, நண்பர்கள் அனைவரும் படிப்பு, ஒழுக்கம், இறை என்று சொன்னார்களே தவிர, யதார்த்த வாழ்வு குறித்து ஒருவரும் பேசவில்லை”.

‘‘உனக்கு வேணுங்கறதை வாங்கிக்கோ” என்று அம்மா போனில் சொன்னதும், தான் விழித்து நின்றதாக கவுன்ஸிலரிடம் ரோஸலின் சொன்னாள். “என்ன வாங்கறதுன்னு அம்மா சொல்லவே இல்லையே? ஜீன்ஸ் வாங்குன்னு ஃப்ரெண்டு சொன்னா. மூன்று தோழிகளாகப் போனோம்” என்றாள் ரோஸி.

“ஜீன்ஸ் பிடிக்குமா உனக்கு?”

“இல்ல”, தயங்கினாள் ரோஸி. “நமக்கு ஒருத்தர் உதவி செய்வது, கர்த்தரின் செயல்னுதானே சொல்றோம்? எப்படி மறுக்கமுடியும்?”

‘‘அதில் ஒரு தோழி, அடுத்த வாரம் Smoking is cool என்றதையும் ரோஸி மறுக்கவில்லை. இவர்கள்தானே ட்ரெஸ் எடுக்க உதவினார்கள்? இவங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். பயப்பட ஒன்றுமில்லை. மெல்ல மெல்லத் தனக்கு புகழும், அடையாளமும் சேருவதாக உணர்ந்தாள் அவள். மெல்ல மெல்ல ஞாயிறு காலை சர்ச் என்பது போய், சனி இரவு பார்ட்டி என்பதாயிற்று.

தனது புது ஹேர்ஸ்டைலும், ஜீன்ஸ், டீஷர்ட், சக ஆண் நண்பர்களுடன் சுற்றும்போது அவர்கள் சொல்லும் புகழ் வார்த்தைகள் நிஜமான வாழ்வென அவள் நினைத்திருக்கையில், வெளிநாடு சென்றால் இப்படித்தான் வாழ்வார்கள் என்று புத்தியில் தோன்றிய நிலையில்தான், போலீஸ் ரெய்டு”.

‘‘யாரைக் குறை சொல்வீர்கள்?” என்றேன். “சாலமன்? அவர் மனைவி? ரோஸலின்? அவள் தோழியர்? அல்லது சூழல்?”

‘‘ரோஸலினின் இறந்தகால சூழலை விட்டுவிட்டீர்கள்” என்றார் கவுன்ஸிலர். “அது மிக முக்கியம். சரியான வேளைகளில், உலகம் இத்தகையது என்பதை அச்சூழல் காட்டவில்லை. நல்லது இது எனக்காட்டிய சூழல், தீயதை உறுதியுடன் மறுத்துச் சொல்வதும் நற்பண்பே எனக் காட்டவில்லை. தவறு அங்கிருந்து தொடங்கியது”.

‘‘எப்படி ஒரு இறை நம்பிக்கை கொண்ட குடும்பத்தையோ, ஒழுக்கம் போதித்த கல்விக்கூடங்களையோ குறை சொல்லமுடியும்?’’ என்றேன். “அவர்கள் நல்லதை எடுத்துச் சொன்னார்கள். தீயதைத் தவிர்க்கவும் சொன்னார்கள்”.

“அங்குதான் பிரச்னையே” என்றார் கவுன்ஸிலர். “தீயது என்பது, நாம் நல்லவராக இருந்தால் நம்மை அணுகாது என்று நினைத்திருப்பது முட்டாள்தனம். தீயவை என்பது நம் குறிக்கோளை, நமக்கு நல்லது செய்யும் மரபுவழிப் பழக்கங்களை, சடங்குகளை முறிப்பவை என்பதாகப் புதிது புதிதாக அடையாளம் கண்டுகொள்ள பயிற்சி கொடுக்க வேண்டும். பிரார்த்தனை செய்தால் சாத்தான் ஓடிவிடும் என்பது மட்டும் போதாது. தோழியின் செயலில் வருவது எனக்குச் சாத்தான் என்பதைப் புரிந்துகொள்ள அவள் மூளைக்குப் பயிற்சி கொடுக்கப்படவில்லை”.

கூடா நட்பு என்பதாக திருக்குறளில் ஒரு அதிகாரமே இருக்கிறது. நாம் மட்டும் நற்சிந்தனையில் இருந்தால் போதாது. நம்மைச் சூழ்ந்திருப்பவர்கள், நமது சூழல் அத்தகையதாக இல்லாவிட்டால், மெல்ல விலகிச் செல்வதே சிறந்தது. எங்கு நம் சிந்தனைக்கு ஏற்ப மக்கள், சூழல் இருக்கிறார்களோ அங்கு கலப்பது ஒன்றே நம்மைக் காக்கும், முன்னேற்றும் சத் சங்கம் என்பார்களே அதுபோல்.

மனிதன் சமூக விலங்கு. அவனது சிந்தனை செறிவடைய சமூக அங்கீகாரமும், அவன் மீதான அதன் செல்வாக்கும் அவசியம். தனது சிந்தனைகளுக்கு ஏற்ற சமூகத்தை அவன் நாடாவிட்டால், அவன் சார்ந்த சமூகம் அவனைத் தன் சிந்தனைக்குக் கொண்டுவரும். மறுதலித்து எதிர்த்து நிற்பது அத்தனை சாத்தியமானதல்ல.

குழும இயக்கம் என்ற மாறி, மிக வலிமையானது. இரு நண்பர்களின் தனித்தனிச் சிந்தனைகளின் கூட்டுக்கும், அவர்கள் கூட்டாக இயங்கும்போதான சிந்தனை தொகுப்புக்கும் வேறுபாடு கணிசமானது. அதிகமான உறுப்பினர்கள் என்றால், தொகையமைப்பின் இயக்கம் வேறாக இருக்கும். இதனால்தான் குழுவினருக்குப் பொதுவாக சில வரையறைகளைக் குழுக்கள் விதிக்கின்றன. குழுவைவிட விதிகளை மேலாக மதிக்கச் சொல்கின்றன. இந்தக் குழும இயக்க விதிகளில் இரையாவது, ரோஸலின் போன்ற சிறந்த தனிமனித ஒழுங்கு மட்டும் கொண்டு, குழும ஒழுங்கு அறியாதவர்கள்.

மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங்குக்கு அழைப்பவர்கள், எங்க மீட்டிங் நாளைக்குக் காலைல இந்த ஓட்டல்ல நடக்குது, வாங்க என்று சொல்வதைப் பார்த்திருப்பீர்கள். குழும அளவில் கவர்ச்சியும், செல்வாக்கும், இழுப்பும் மிக அதிகம். “நீங்க இன்னுமா சேரல?” என்று நாலு பேர் கேட்டால், நாம் தானாகவே காசோலையில் கையெழுத்துப் போட்டுவிடுவோம். மறுப்பது என்பது நாகரிகமல்ல என்ற ஒரு கருத்து மேலோங்கும்.

ரோஸியால், தோழி சிகரெட்டை நீட்டும்போது மறுக்க முடியாததற்குக் காரணம், குழுமத் தாக்கம், தோழியுடனான கடைப்பாடு மட்டுமல்ல; மறுப்பது நற்பழக்கமல்ல என்ற போலி நாகரிகச் சிந்தையை, எப்பொதும் நல்லவளாகவே இரு என்பதாகப் போதிக்கப்பட்டதன் நீட்சி. இதனை எப்போது வேரறுக்க வேண்டுமென்ற மனமுதிர்ச்சியை சாலமன் குடும்பத்தினரோ, அவரது சமூகமோ செய்யவில்லை.

கவுன்ஸிலர் வாட்சை பார்த்து, “போலாமா? இருட்டிருச்சு” என்றவர், ஏஸியை அணைத்துவிட்டுக் கிளம்ப எத்தனித்து சற்றே நின்றார். “எல்லாருக்கும் நல்லவராக எப்போதும் இருப்பது என்பதைப் போதித்த பெற்றோரும், கல்வி நிலையங்களும் குற்றவாளிகள்தாம். நான் ரோஸிலின் கேஸ்ல இத்தனை ஆழமா போனதுக்குக் காரணம்…” என்றவர் சற்று நிதானித்தார்.

“பதினைஞ்சு வருசம் முந்தி, பெங்களூரில் ஒரு பதின்ம வயதுப் பெண் கர்ப்பவதியானாள். செய்தி கேட்டு அதிர்ந்துபோய் பெற்றோரிடம் ஸ்கூல் டீச்சர் சொன்ன வார்த்தை இது - “அவ ரொம்ப நல்ல பெண்ணாச்சே? எதிர்த்தே பேசமாட்டா. அவ யாரையும் எதுக்கும் மறுத்துச் சொன்னதே இல்லை. அவ்வளவு நல்லவ”.

கேட்டுக்கொண்டிருந்த எனக்கு அன்றுதான் புரிந்தது. ரொம்ப நல்லவளாக இருந்ததால்தான் அப்பெண் இரையானாள் என்பது. நல்லவளாக இருப்பதற்கும், ரொம்ப நல்லவளாக இருப்பதற்குமான வேறுபாடு மிக அதிகம். இன்று நான் கவுன்ஸிலிங் செய்வதற்குக் காரணம், அன்று எங்க குடும்பத்துல நடந்த அந்தக் கருச்சிதைவுதான்”.

(யோசிப்போம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com